மோடியின் வருகை குறித்து

மோடியின் வருகை குறித்து

இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று. மோடி குற்றவாளி, அவருக்கு இன்ன தண்டணை என்று எந்த நீதிமன்றமும் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. அப்படியே வழங்கினாலும் கூட அவருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். குற்றவாளிகளுக்கும் கூட பரோல் உண்டு. நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் வெளியே வரலாம், நிகழ்ச்சிகளில் பங்கேற்க்கலாம். அப்படி இருக்கும் போது மோடிக்கு எதற்காக அந்த உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.நான் அவருக்கு பூச்செண்டும் கொடுக்க மாட்டேன், கருப்புக் கொடியும் காட்டமாட்டேன். மோடியின் செயல்கள், நிலைப்பாடுகளை நான் விமர்சிப்பேன். அவர் இங்கு செல்லக்கூடாது, அங்கு பேசக் கூடாது என்று கூற மாட்டேன். ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர் இன்னொரு மாநிலத்திற்கு வரக்கூடாது என்று கோருவது பொருத்தமானது அல்ல.மாறாக தனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள மாநிலத்திற்கும் அவர் வந்து செல்வதும்,
அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதும் நல்ல அறிகுறிகள். ஒரு ஜனநாயக நாட்டில் அதுதான் நடைமுறையாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ‘பெரியார் பிறந்த மண்ணிற்கு' மோடி வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.உண்மையில் 'பெரியார் பிறந்த மண்ணில்' பெரியாரியத்திற்கு மாற்றான நிலைப்பாடுகள் கொண்டவர்கள் வந்து செல்வதும், கருத்துக்களை வெளிப்படுத்துவதும், அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாமல் இருப்பதும், அம்மண்ணிற்கு பெருமை சேர்ப்பதாகும்.

அவரது வருகையை எதிர்ப்பவர்களுக்கு கருத்துரிமை உண்டு. அவர்கள் எதிர்ப்பினை அமைதியாக வெளிக்காட்டலாம்.ஒரு கூட்டம் நடக்கின்ற இடத்தில்,அந்த அரங்கினை கருப்புக் கொடிகளுடன் முற்றுகையிடுவோம் என்பது கூட்டம் நடத்துவதற்கு இடையூறு செய்வதாகும. கூட்டத்திற்கு வருவோரை தடுக்கவும், அச்சுறுத்தவும் செய்யப்படும் ஒன்றாகும்.அமைதியான எதிர்ப்பு என்பது வேறு, முற்றுகை என்பது வேறு.முற்றுகையின் நோக்கம் நிகழ்ச்சியை தடுப்பதே.இதை வரவேற்க முடியாது. இவர்கள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தட்டும்,உண்ணாவிரதம் இருக்கட்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் கருப்புக் கொடிகளுடன் முற்றுகை இடுவோம் என்பது சரியான அனுகுமுறையல்ல.

தஸ்லீம நஸ்ரின் இந்தியாவில் இருக்கக் கூடாது, தமிழ் நாட்டிற்கு வரக்கூடாது என்று கூறிய தமுமுக மோடியையும் வரக்கூடாது என்கிறது.தஸ்லீம நஸ்ரினின் கருத்துரிமையை, இந்தியாவில் இருக்கும் உரிமையை ஏற்க மறுப்பவர்கள் தாங்கள் பாசிசத்தினை எதிர்ப்பதாக கூறுவது கேலிக் கூத்து.இவர்களுடன் சேர்ந்து சில அமைப்புகள் ஏற்படுத்தியுள்ள பாசிச எதிர்ப்பு முண்ணனி, தமிழ்ச் சூழலில் மிகவும் நைந்து போன ஒரு சொல்லைக் பயன்படுத்தி சொல்ல வேண்டுமானால், அது பாசிச முண்ணனிதான்.போலி மதச்சார்பின்மை
போல் இது ஒரு போலி பாசிச எதிர்ப்பு.ஸ்டாலின்ஸ்ட்கள், இந்து மதம், இந்தியாவை சிதைக்க விரும்புவர்கள்,மத அடிப்படைவாதிகள்,வன்முறை மூலம் அரசு அதிகாரத்தினை கைப்பற்ற விரும்பும் இயக்கங்களை ஆதரிப்பவர்கள் கூட்டுச் சேர்ந்து அமைத்துள்ள ஒரு முண்ணணிதான் இது. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவரை எதிர்ப்பவர்களையெல்லாம், அவர்கள் யாராக, என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தாலும்,இப்போது எடுத்தாலும் அவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்பதால் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. அப்படி ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தினை ஆதரிப்பது போலாகும். அவர்கள் முன்னிறுத்தும் விழுமியங்களை,கொள்கைகளை,செயல்பாடுகளை,நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டே அந்த எதிர்ப்பினை மதிப்பிட முடியும்.அப்படி மதிப்பிடும் போது இந்த பாசிச எதிர்ப்பு முண்ணனியை ஆதரிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். தேவை ஏற்படின் விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.