அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை

அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை!: வருகைப் பதிவு குறைவுக்கு விதிகளை தளர்த்தியது அம்பலம்

சென்னை, ஏப். 23: அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு "செமஸ்டர் தேர்வு' எழுதுவதில் சலுகை காட்டியது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வருகைப் பதிவு விழுக்காட்டில் "சலுகை' காட்டியது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இதில், அவர்கள் கல்லூரி வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர்களின் வருகைப் பதிவு விழுக்காடு மற்றும் ஒட்டு மொத்த விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. தேர்வு எழுத எவ்வளவு விழுக்காடு தேவை? வருகைப்பதிவு விழுக்காடு 50 சதம் உள்பட மொத்தம் ஒட்டுமொத்த விழுக்காடு 75 சதவீதமாக இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் செமஸ்டர் தேர்வு எழுத தகுதி பெற முடியும்.

வருகைப் பதிவு விழுக்காடு குறைவாக இருந்தால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளில் சிலர் மிகவும் குறைவாகவே வருகைப் பதிவு விழுக்காடு வைத்திருந்தனர். இத்துடன் ஒட்டுமொத்த விழுக்காடும் குறைவாகவே பெற்றிருந்தனர். அரசியல் வாரிசுகள் எவ்வித பிரச்சினையின்றி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக விதிகள் தளர்த்தப்பட்டு, அனைத்து துறைகளுக்கு ஓர் அறிக்கை விடுக்கப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக 40 சதவீத விழுக்காடு வைத்திருக்கும் அனைவரும் தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் வாரிசுகளுக்கு வருகைப் பதிவு விழுக்காடில் சலுகை காட்டியிருப்பது கல்வித் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Labels: ,

பூங்காவின் திரித்தல், புரட்டல்வாதங்கள்

பூங்காவின் திரித்தல், புரட்டல்வாதங்கள் : இடைக்காலத் தடை, அறிவியல், இன்ன பிற

'He is a giant in his profession' என்று ஒருவரை அறிமுகம் செய்துவைத்தால் அவர் போன பின் அவர் ஒல்லிக்குச்சியாக த்ரிஷாவுக்கு ஆம்பளை வேஷம் போட்டமாதிரியிருக்கிறாரு, அவரை எப்படி ஜயண்ட் என்று சொல்கிறீர்கள்,அவர் பார்க்க ஆஜானுபாகுவாக ராட்சசன் மாதிரியில்லையே என்று கேட்டால் நான் எந்தச் சுவற்றில் முட்டிக் கொள்வது, எந்தப் பார்க்கில் எந்தப் புல்தரையில் இதை நினைத்து சிரித்து சிரித்து உருள்வது. சரி மேட்டருக்கு போவோமா.

இரண்டு நாட்களாக எனக்கு வந்த மின்னஞ்சல்களிலும், பின்னூட்டங்களிலும் பூங்காவில் இப்படி எழுதியிருக்கிறார்களே, உண்மையில் நீதிமன்றம் அப்படித்தான் தடை உத்தரவில் சொல்லியிருக்கிறதா என்று கேள்வி மேல் கேள்விகள். யார் என்ன எழுதியிருந்தால் என்ன என்று நான்பாட்டுக்கு சிவனே என்று இருந்தாலும் இது போல் மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் தொடர்கின்றன. சரி பூங்காவில் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த பின் அதற்கு பதில் தர வேண்டும் என்று தோன்றியது.

பூங்காவின் ஆசிரியர் குழு எழுதுவதாவது :
"இப்போது இந்தியாவின் உச்ச நீதிமன்றம் "intellectual pygmies" என்று ஒரு சாரரைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடிகளில் ஒன்றுதான் pygmy. ஆப்பிரிக்கர்களுக்கும், திராவிட இனத்தவருக்கும் மரபணுக்களினடிப்படையிலும், உடற்தோற்றம், கலாச்சார அடிப்படையிலும் ஒற்றுமைகளிருக்கின்றன என்று அறிவியல் தரவுகள் சொல்லிவரும் இவ்வேளையில், இடவொதுக்கீடு கேட்கும் திராவிட இனத்து BC, MBC, SC, STக்களை pygmies என்று குறிப்பது, அதுவும் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம், பல்லின மக்கள் வாழ்ந்துவரும் அந்நாட்டில், ஒரு சாரரை வெறும் பிறப்பின் அடிப்படையில் தொடர்ந்து ஒடுக்கி வரும் ஆதிக்க சாதியினரின் குரலைப் பிரதிபலிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது."

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம். தடையுத்தரவில் மனுதாரர்கள் சார்பில் கூறப்ப்படும் வாதம் என்ற வகையில் கீழே உள்ளது கூறப்பட்டுள்ளது. இது மனுதாரர்கள் கருத்து, நீதிமன்றத்தின் கருத்தல்ல என்பது தீர்ப்பினைப் படித்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

In this I.A. prayer has been made to grant interim protection pending final disposal of the writ petitions.2. In the writ petitions the policy of 27% reservation for the Other Backward Classes (in short the 'OBCs') contained in the Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006 (in short the 'Act') is the subject matter of challenge. The primary ground of challenge isthat the Union of India has failed in performing the constitutional and legal duties toward the citizenry and its resultant effect. Consequentially the Act shall have the effect and wide ramifications and ultimately it shall have the result in dividing the country on caste basis. It would lead to chaos, confusion, and anarchy which would have destructive impact on the peaceful atmosphere in the educational and other institutions and would seriously affect social and communal harmony. The constitutional guarantee of equality and equal opportunity shall be seriously prejudiced. It has been contended that a time has come to replace the "vote bank" scenario with "talent bank". The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only the products would be intellectual pigmies as compared to normal intellectual sound students presently passing out. It has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in thecountry the Act has been enacted.

(IN THE SUPREME COURT OF INDIAI.A. No. 13 in Writ Petition (Civil) No. 265 of 2006 and WP (Civil) Nos. 269 and 598/2006 and29 and 35/2007
Decided On: 29.03.2007
Appellants: Ashoka Kumar Thakur Vs. Respondent: Union of India (UOI) and Ors.Hon'ble Judges: Arijit Pasayat and Lokeshwar Singh Panta, JJ.)

மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு கூடாது என்றோ அல்லது தர அரசுக்கு அதிகாரம் இல்லையொன்றோ எங்கும் கூறவில்லை. அவர்கள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள், இடைக்கால தடை தந்திருக்கிறார்கள். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டினை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த இடங்களை பூர்த்தி செய்ய தடையேதும் இல்லை என்றும் தீர்ப்பில் தெளிவாக இருக்கிறது. இந்த இடைக்கால தடையுத்தரவு ஒரு சட்டத்தினை அமுல் செய்வது குறித்த வழக்கில் தரப்பட்டுள்ளது. இந்த சட்டம் 93வது அரசியல் சாசன சட்டத் திருத்ததின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அந்தத் திருத்தம் குறித்த வழக்கல்ல இது. சுருக்கமாகச் சொன்னால் இந்த வழக்கில் நீதிபதிகள் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை செல்லதக்கது அல்ல என்று நிராகரிக்கவில்லை. அது நிறைவேற்றப்படுவது குறித்து, அதற்கான தேவை குறித்து, அதற்கான அடிப்படை தரவுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த சட்டம் செல்லுமா, செல்லாதா என்ற கேள்வி இந்த தடையுத்தரவில் அவர்களால் விவாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட இந்த 'intellectual pygimies' என்ற வாதத்தின் அடிப்படையில் தடையுத்தரவு தரப்படவில்லை. மனுதாரர்கள் இட ஒதுக்கீட்டினை தேவையில்லை என்று நிராகரிக்கிறார்கள் என்று கொண்டாலும் கூட, நீதிமன்ற உத்தரவில் நீதிபதிகள் அத்தகைய வாதத்தினை முன் வைக்கவில்லை என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. தடையுத்தரவு தரப்பட கூறப்பட்டுள்ள காரணங்கள் வேறு. மேலும் நீதிபதிகள் மண்டல் கமிஷன் தீர்ப்பு உட்பட வேறு பல தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். எங்கும் இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்றோ அல்லது இட ஒதுக்கீடு குறித்த முந்தைய தீர்ப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றோ அவர்கள் கூறவில்லை.

(இட ஒதுக்கீட்டினைப் பொறுத்தவரை இந்த intellectual pigmies என்ற வாதத்தினையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம்/ பாலினம்/இனக்குழுவினைச் சேர்ந்தவர்கள்தான் புத்திசாலிகள் போன்ற வாதத்தினையோ அல்லது இட ஒதுக்கீடே கூடாது என்ற வாதத்தினையோ நான் ஏற்கவில்லை. இதை ஏற்கனவே எழுதியிருந்தாலும் இங்கு தெளிவுபடுத்திவிடுகிறேன். இல்லையேல் ஒரு கும்பல் intellectual pigmies என்ற கருத்தினை/வாதத்தினை நான் ஏற்கிறேன் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை துவக்கி அதில் மேலும் பொய்களை கலந்து மிதக்க விடும். )

நீதிமன்றம் மனுதாரர்கள் 'Not only the products would be intellectual pigmies as compared to normal intellectual sound students presently passing out' கருதுவதாக கூறுகிறது.
நீதிமன்றம் ஒரு தரப்பு இவ்வாறு கூறுவதாக குறிப்பிடுகிறது என்பதற்கும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் "intellectual pygmies" என்று ஒரு சாரரைக் குறிப்பிட்டிருக்கிறது என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாடு மிக வெளிப்படை. அதை விளக்கத் தேவையில்லை.

மேலும் இங்கு சர்ச்சைக்குரிய
அந்த இரு வார்த்தைகளும் யாரை குறித்து எந்தப் பொருளில், ஒப்பிட்டுக் கூறப்படுகின்றன என்பதும் மிகத் தெளிவாகவே இருக்கிறது. இங்கு மனுதாரர்கள் கேள்விக்குட்டப்டுத்துவது பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினைத்தான் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.அவர்கள்குறிப்பிடுவதும் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற மாணவர்களைத்தான் என்பதும் மிகத் தெளிவாக இருக்கிறது.

எனவே பூங்கா ஆசிரியர் குழு எழுதியிருப்பது புளுகு, பச்சைப் பொய். உச்ச நீதிமன்றம் தன் முன் மனுதாரர்கள் வைத்த கருத்தினைக் கூறியிருக்கிறது. அதை நீதிமன்றத்தின் கருத்தாக திரிப்பது இழிவான செயல். 12 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற உத்தரவில் ஒரு வாக்கியத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு அது யாருடைய கருத்தாக கூறப்பட்டுள்ளது என்பதை மறைத்து எழுதுவது எந்த விதத்திலும் அறிவார்ந்த நேர்மையுடையசெயலாகாது.

நீதிமன்ற உத்தரவு இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். யார் இதைப் படிக்கப் போகிறார்கள்,அல்லது யார் நம்மைக் கேள்வி கேட்கப்ப போகிறார்கள் என்ற தைரியத்தில் பூங்கா ஆசிரியர் குழு இதை எழுதியிருக்கிறது என்று தோன்றுகிறது. பூங்கா அமெரிக்காவிலிருந்து வெளிவருகிறது, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் குறித்து நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நம்மை எந்த சட்டமும் நெருங்க முடியாது என்ற 'தைரியமும்' இப்படி எழுத ஒரு காரணமாக இருக்கலாம்.

பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு அந்த இரண்டு வார்த்தைகள் எந்தப் பொருளில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. 'intellectual pigmies'என்பது இங்கு பிக்மிகள் என்ற ஒரு குழுவினரைக் குறிக்கவில்லை என்பது வெளிப்படை. intellectual pigmies என்பதை எப்படிப் பொருள் கொள்வது என்பது பூங்காவின் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.

ஏனெனில் இது புழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.கிண்டலாக, இழிவாகக் கூறப் பயன்படுத்தப்படுகிறது. கூகுளிட்டால் அல்லது ஒரு தரமான அகராதியினைப் புரட்டிப் பார்த்தால் இதன் பொருளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் பூங்கா ஆசிரியர் குழுவினருக்கோ பிக்மி, திராவிட இனம் என்று சிந்தனை வேறு திசையில் பிறழ்ந்து செல்கிறது.

இத்தடையுத்தரவில் பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து தடை ஏதும் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. அரசு அந்த இட ஒதுக்கீட்டினை நிறைவேற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐ.ஐ.டி,ஐஐஎம்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த வழக்கில் உள்ள கேள்வி பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்ததே. ஆனால் பூங்கா ஆசிரியர் குழு இங்கும் தன்னுடைய வழக்கமான புரட்டல்,திரித்தல் வேலைகளை அரங்கேற்றுகிறது. நீதிமன்ற தடையுத்தரவில் இல்லாத பொருளை வலிந்து கற்பிக்கிறது.

பூங்கா ஆசிரியர் குழுவினரின் திரித்தல்,புரட்டல் வேலைகள் நீதிமன்றம் கூறியிருப்பதை திரித்து கூறுவதுடன் நின்றுவிடவில்லை. பூங்கா ஆசிரியர் குழு அறிவியலையும் துணைக்கழைத்து தன் திரித்தல், புரட்டல், ஜல்லியடி வேலைகளை செய்துள்ளது.

பூங்கா ஆசிரியர் குழு "ஆப்பிரிக்கர்களுக்கும், திராவிட இனத்தவருக்கும் மரபணுக்களினடிப்படையிலும், உடற்தோற்றம், கலாச்சார அடிப்படையிலும் ஒற்றுமைகளிருக்கின்றன என்று அறிவியல் தரவுகள் சொல்லிவரும் இவ்வேளையில்" என்று எழுதியிருக்கிறது.

பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு என் கேள்விகள்

1, திராவிட இனம் என்று ஒன்று இருப்பதாக அறிவியல் இன்று கூறுகிறதா. ,திராவிட இனம் என்பதை எந்த அடிப்படையில் நீங்கள் வரையரைசெய்கிறீர்கள்
2, அப்படித் தரவுகள் இருந்தால் அவை திராவிட இனம் என்று குறிப்பிடுகின்றனவா, அப்படியாயின் அவற்றின் பட்டியலைத் தர முடியுமா
3, கலாச்சார அடிப்படையிலும் என்று அறிவியல் தரவுகள் சொல்கின்றனவா, அப்படியாயின் அது குறித்த விபரங்கள் என்ன.

அறிவியல் ஆரிய இனம், திராவிட இனம் போன்ற பாகுபாடுகளை, வகைப்படுத்தல்களை இன்று நிராகரித்து விட்டது.

1950ல் அ.மார்க்ஸ் 2005ல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்

"இன்று (1950க்குப்பின்) உடலடிப்படையிலான மானுடவியல் ‘இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மக்கள் தொகுப்பின் உயிரியல் ரீதியான பண்புகள் அனைத்தும் ஒன்றாக இருப்பதில்லை. அவை வேறுபடுகின்றன. ஒரு மக்கள் குலத்தின் இத்தகைய பல பண்புகள் மற்ற குழுமத்தின் பண்புகளுடன் பொருத்திப் போவதை மானுடவியல் நிரூபித்துள்ளது. எனவே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்கும் தனித்துவமான இனங்கள் கிடையாது என்பதே இன்றைய கருத்து. “இனங்கள் என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து வேறுபாடுகள் உடற்பண்புகள் மட்டுமே உண்டு’’ தோலின் நிறம் போன்றவை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இனங்களுக்கிடையே துல்லியமான எல்லைக் கோடுகளை இந்த அடிப்படைகளில் வகுத்துவிட இயலாது.

இதையே நான் எழுதினால் பூங்கா ஆசிரியர் குழு பார்பனியம், மனு நீதி என்று ஜல்லியடிக்கும் என்பதால் அ.மார்க்ஸ் எழுதியதை மேற்கோள்தருகிறேன். (அ.மார்க்ஸ் எழுதியுள்ள இந்த கருத்துடன் நான் உடன்படுகிறேன். அதே சமயம் அவர் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதுபற்றி பின் எப்போதாவது?). ஆரிய இனம், திராவிட இனம் போன்றவை அறிவியல் ஏற்றுக் கொண்ட வகைப்படுத்தல்கள் அல்ல.அவற்றிற்கு அறிவியல் ரீதியான அடிப்படை இல்லை. ஆனால் பூங்கா ஆசிரியர் குழு அறிவியல்,மானுடவியல் நிராகரித்த ஒன்றைப் பிடித்து திரித்தல் செய்கிறது.

"திராவிட இனத்து BC, MBC, SC, STக்களை pygmies" என்று எழுதுவதன் மூலம் மனுதாரர்கள் கூறாத, தடையுத்தரவில் இடம் பெறாத ஒன்றைப் புகுத்தி திரித்தல், புரட்டல் வேலையைச் செய்திருக்கிறது பூங்கா ஆசிரியர் குழு.

இந்தியாவில் உள்ள அனைத்து பிற்பட்ட சாதியினரையும் திராவிட இனத்தவர் என்று பூங்கா ஆசிரியர் குழு கருதுகிறதா. அப்படியாயின் அவர்கள்தாய்மொழி(கள்) திராவிட மொழிக்குடும்பத்து மொழிகள் இல்லையென்றாலும் அவர்கள் திராவிட இனத்தினைச் சேர்ந்தவர்களா. திராவிட இனம்= பிற்பட்டோர் என்ற சமன்பாட்டினை பூங்கா ஆசிரியர் குழு முன் வைக்கிறதா. அப்படியாயின் பிற்பட்டோரல்லாதவர்கள் அனைவரும் ஆரியர்களாஅல்லது ஆரியர்கள் உட்பட வேறு இனங்களைச் சேர்ந்தவர்களா, அப்படியாயின் எந்த இனங்கள் என்பதை விளக்குவார்களா.'பல்லின மக்கள்'என்பதை எந்த இனங்களை குறிக்கிறது என்பதை விளக்குவார்களா.

போலி அறிவியலை முன்னிறுத்தும் இவர்கள் தமிழில் அறிவியல் பற்றி எழுதுகிறார்கள். எத்தகைய நகைமுரண் இது.

பூங்கா அறிவியல், வரலாறு, சட்டம் என்று இனி 'மாற்று" அறிவியல், வரலாறு, சட்டம் குறித்து பூங்கா ஆசிரியர் குழு எழுதக் கூடும். அந்த வரலாற்றில் பெரியார் தேசவிடுதலைக்காக 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவக்கினார், அப்போது காந்தியடிகள் இட்லரை ஆதரித்து எழுதினார், வெள்ளையர்களுக்கு பதிலாக இட்லர் ஆள வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது என்று கூறப்பட்டால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

பூங்கா ஆசிரியர் குழு முழுத் தீர்ப்பினையும் படித்ததா அல்லது யாரோ சொன்னதை/எழுதியதை அடிப்படையாகக் கொண்டு இந்த தலையங்கத்தினை எழுதியதா?. எப்படிப் பார்த்தாலும் அதன் செய்கையில் நேர்மை இல்லை. இதழியல் அறத்தின் அடிப்படைகளை கூட இப்படி துணிந்து மீறுபவர்களை என்னவென்று சொல்வது.

Labels: , ,

தெரிவு

தெரிவு

1990களின் பிற்பகுதியில் ஒரு கட்டத்தில் தமிழில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். பின்னர் 2003ல் தான் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதத் துவங்கினேன். அதற்கு ஒரு காரணம் இணையம் என்ற ஊடகம் தந்த சில வசதிகள், இன்னொரு காரணம் சில நண்பர்களின் வற்புறுத்தல். இணையம் மூலம் புதிய வாசகர்களை, உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழர்களை என் எழுத்துக்கள் சென்றடையும் என்ற நம்பிக்கை.

கடந்த (கிட்டதட்ட) நான்கு ஆண்டுகளில் நான் ஒரளவேனும் எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன். போதுமான அளவிற்கு விவாதங்களில் ஈடுபட்டு கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். சரியோ,தவறோ என் கருத்து இதுதான் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். யார் ஏற்காவிட்டாலும், இதை சொல்லுகிற ஒரே நபர் நான் மட்டுமே என்றாலும் என் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்காதவன் நான். இட ஒதுக்கீடு உட்பட சிலவற்றில் என் கருத்துக்கள், பலருக்கு உவப்பாக இல்லை என்று தெரிந்திருந்தும், என் கருத்தினை வெளிப்படுத்த நான் தயங்கியதில்லை. பிறர் திருப்திக்காவோ அல்லது ஒப்புதலை எதிர்பார்த்தோ நான் கருத்து சொல்லுவதில்லை/எழுதுவதில்லை. தமிழில் இந்த நான்கு ஆண்டுகளில் எழுதியது மன நிறைவினைத் தருகிறது.வாசகர்களுக்கு சிலவற்றையேனும் புதிதாகக் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று என்னால் துணிந்து கூற முடியும்.

முன்பு தமிழில் எழுதுவதை நிறுத்தியதைப் பற்றி குறிப்பிட்டேன். இப்போது சில காரணங்களால் தமிழ்ச் சூழலிலிருந்து விலகி நிற்கும் மன நிலையில் இருக்கிறேன். கடுமையான நேரப் பற்றாக்குறை உட்பட சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கியமான காரணம் தமிழில் எழுதுவதிலும், விவாதிப்பதிலும் எனக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தமிழில் எழுதப்படும் எழுத்துக்களின் தரமும், அறிவார்ந்த நேர்மையின்மையும் தரும் எரிச்சல்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. தங்கள் தரப்பு வாதத்திற்காக தகவல்களை திரிப்பதில் துவங்கி, முழுப் பொய்களை கூச்சமின்றி எழுதுவது என்று பல விதங்களில் இது செய்யப்படுகிறது. பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது.

இவற்றிற்கு பதில்/மறுப்புகளை ஒருவர் எழுதிக் கொண்டேயிருக்க முடியாது. தமிழில் வெளியாகின்றவற்றை தொடர்ந்து படித்தால் 21ம் நூற்றாண்டு சீத்தலை சாத்தானாராகி விடுவேனோ என்ற 'அச்சம்' எழுகிறது -:).

எனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் இடுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன். தமிழில் நான் படிப்பது குறைவு, இப்போது அதை இன்னும் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே எழுதி அரைகுறையாக இருக்கும் சில கட்டுரைகள் முடிக்கப்பட்டு வெளியாகலாம் அல்லது கணினியில் உள்ள குப்பைத் தொட்டியில் உயிரிழக்கலாம். சில பிரச்சினைகளில் நான் கருத்துச் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதினால் எழுதக்கூடும்.

இப்படி விலகி நிற்பதை பின் வாங்கல் என்றோ, பதுங்கல் என்றோ, அல்லது ஒரு பாய்ச்சலுக்கான ஆயத்தம் என்றோ புரிந்து கொள்ள வேண்டாம். இப்படி விலகி இருப்பது என் தெரிவு, அவ்வளவுதான்.

நேற்று இரவு என் கனவில் வந்து என் முடிவுகளுக்கு முழு ஒப்புதல் அளித்து, தமிழில் எழுதுவதை நிறுத்துவது எனக்கும், தமிழுக்கும் நல்லது என்பதை உறுதி செய்த மிஸ்.தமிழ்த்தாய்க்கு என் நன்றிகள். :)

Labels: ,