அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'

அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'

அரசி தொடர் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சமூகத்தில் உள்ள தவறான கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பாத்திரங்களை சித்தரிக்க கூடாது என்று கோருவதில் உள்ள நியாயம் புரிகிறது.அவ்வாறு கோருவதற்கும், ஒரு தனி நபரை குறித்து அவதூறு பரப்புவதற்கும் வேறுபாடுஇருக்கிறது.ஒரு பெண் வெற்றி பெற்றால் தன் உடலை வைத்தே என்ற வக்கிரமான கருத்தினைஒருவர் முன் வைத்தால் அதை விளிம்பு நிலையில் உள்ளவர் அப்படித்தான் கூறுவார் என்றெல்லாம்நியாயப்படுத்த முடியாது. விளிம்பு நிலையில் இருப்பவர்கள் என்பதற்காக யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறு செய்ய உரிமை யாருக்கும் இல்லை. வித்யா எழுதியிருப்பது கேவலமாகஇருக்கிறது என்றால் அவர் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது ஏற்க இயலாத நிலைப்பாடு.அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதுதான் முறையானது.

எந்த ஒரு குழுவினரையும்,மதத்தவரையும் அல்லது பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக மோசமானவர்களாக சித்தரிக்கக் கூடாது என்று கோரலாம். ராதிகாவைக் குறை கூறும் பலர்வலைப்பதிவுகளில் பிராமணர்களையும், இந்து மதத்தினையும் ஒட்டு மொத்தமாக கேவலமானவர்கள்,கேவலமான மதம் என்று சித்தரிப்பதற்கு துணை போனவர்கள் அல்லது அப்படி சித்தரித்தவர்கள்.இவர்களுக்கு ராதிகாவை குறை கூற எந்த தார்மீக உரிமையோ அல்லது அருகதையோ கிடையாது. இப்படிப் பட்ட சித்தரிப்புக்களுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் இட்டவர்தான் வித்யா. இவர் ராதிகாவைப் பற்றி எப்படி குறை கூற முடியும். எங்களை மோசமாக சித்தரிக்காதே, பிறரைமோசமாக சித்தரி என்பதை எப்படி ஏற்க முடியும். இந்த சர்ச்சையை வைத்து குழலி அடிக்கும்ஜல்லியடியும், பின்னூட்டங்களில் உள்ள பல கருத்துக்களும் 'பொலிடிக்கலி கரீக்ட்' ஜல்லியடிகளாகஇருக்கலாம்.

பெண்ணுரிமை குறித்து போலிக் கண்ணீர் விடுத்த திருவாளர்கள் இந்த மோசமான தனி மனித தாக்குதல் குறித்தோ அல்லது வித்யாவின் எழுத்தில் உள்ள வக்கிரம் குறித்தோ ஒரு வார்த்தைக் கூடகண்டித்து எழுதவில்லையே, ஏன். இதுவும் 'பொலிடிக்க்லி கரீக்ட்' நிலைப்பாடா?, அதாவது வித்யா போன்றவர்கள் யாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அது நியாயமானது.ஆனால் இதே போன்ற கருத்தை ஒரு ஆண் முன் வைத்தால் அது ஆணாதிக்க மனோபாவம்.


தமிழ் வலைப்பதிவுகளில் 'பொலிடிக்கலி கரீக்ட்' நிலைப்பாடு எடுத்துவிட்டு விளிம்பு நிலைபோன்ற சொற்களைப் போட்டு ஜல்லியடிப்பது எளிது. தமிழில் ஒரு சொல் எத்தகையப்பொருட்களில் கையாளப்படுகிறது, என்னென்ன அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எப்படியாவது பார்பனீயம் என்ற சொல்லைக் கொண்டு வந்து'பொலிட்டிக்கலி க்ரீக்ட்' ஆக எதையாவது எழுதிவிட்டால் போதும். இதற்கு ஒரு உதாரணம் குழலியின் இந்த பதிவும், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும்.

இழிபிறவி என்ற சொல்லை வைத்து கூகுளித்தால் அதைப் பலரும் ஒன்றிற்கும் மேற்பட்டபொருட்களில் கூறியிருப்பதை அறிய முடியும். இழிபிறவியாகிய யான் என்று ஒருவர் சொல்லும்போது அவர் தன் பிறப்பினை முன்னிறுத்துவதில்லை. பிறவி, பிறப்பு என்ற இரு சொற்களும்வெவ்வேறு பொருட்களைக் கொண்டவை. தங்கமணியின் ரசவாதத்தில் பிறவியும், பிறப்பும்ஒரே பொருளைக் கொண்டதாக மாறிவிடுகிறது. பார்பனீயம் என்று சொல்லிவிட்டால் எதைவேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கூறமுடியுமே. இழிபிறவியாகிய யான்என்று ஒருவர் கூறும் போது அவர் தன்னைத் தான் இழிவான நிலையில் உள்ள பிறவி என்றுபொருள் கூற முடியும்.

இணையத்தில் தேடினால் ஒரு குற்றவாளியை, ஒரு பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்தி கொன்றவரைப் பற்றி எழுதும் போது இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லையை பிறரை குறிக்க பயன்படுத்தலாமா கூடாதா என்ற கேள்விக்கு விடை எந்தப்பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. என்னைப் பொருத்தவரைஇத்தகைய சொற்களை தவிர்த்துடலே நல்லது. டோண்டு இதை பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.வலைப்பதிவு/பின்னூட்டங்களில் இந்த்ச் சொல் அவரைக் குறித்தேபயன்படுத்தப்பட்டுள்ளது. என் பதிவில் இடப்பட்டு நான் அனுமதிக்க மறுத்த பின்னூட்டத்திலும்இது இருக்கிறது.

எனவே ஏதோ டோண்டுதான் இதைப் பயன்படுத்துகிறார் என்பது தவறு.இதைப் பயன்படுத்திய பிறர் யார் யாரெல்லாம் என்பதை கூகுள் மூலம் அறிந்து கொள்ளலாம். டோண்டுவின் வாதத்தினை நான் ஏற்கவில்லை. அத்தகைய சொற்களை தவிர்க்க வேண்டும். ஆனால் அதை ஏதோ அவர் மட்டும் பயன்படுத்தியதாக சித்தரிப்பது அயோக்கியத்தனம். அந்த சொல் எந்தெந்த பதிவுகளில் இடம் பெற்றுள்ளது, பின்னூட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை பாருங்கள். அப்போதுதான் குழலி அடித்திருக்கும் ஜல்லி எவ்வளவு அபத்தமானது என்பதுபுரியும்.

வலைப்பதிவுகளில் கருத்துக்கள் நாகரிகமாகவும், தனி நபர் தாக்குதலாக இல்லாத வகையிலும்,எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பண்பட்ட முறையில் வெளிப்படுத்தவேண்டும். இதுதான் என் கருத்து. இதில் விதிவிலக்குகளைக் கோரக் கூடாது. யாருக்கும் யாரையும் தனி நபர் அவதூறு செய்ய உரிமை இல்லை, அது முறையும் அல்ல. சட்ட ரீதியாகக் சொன்னால்வித்யாவின் எழுத்து சட்டத்தின் படி குற்றமாகும்.இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இது குற்றம். இதை வெறும் சட்டப் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. ராடான் நிறுவனமோ அல்லது ராதிகாவோ இதை சட்ட ரீதியாக சந்திக்க முயன்றால் , சட்ட ரீதியாக வெற்றி பெற முடியும் என்றே கருதுகிறேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இன்னொரு தரப்பின் கருத்துக்களை மதிக்க முன் வந்திருப்பது நல்ல அறிகுறி. அதற்குப் பின்னும் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது நியாயமல்ல.

இதில் விவாதிக்கப்பட வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. உதாரணமாக ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், அவை எப்படி புரிந்து கொள்ளப்படுகின்றன அல்லது பொருள் கொள்ளப்படுகின்றனஎன்பதையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் இன்னாரை இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என்று கோருவது எந்த அளவிற்கு சரியானது. இப்படிப்பட்ட கேள்விகளை ஆரோக்கியமாக விவாதிக்கும் சூழல் தமிழ் வலைப்பதிவுகளில் இருக்கிறதா.

Labels: , ,

2 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

ரவி:

இழிபிறவியை யார் யார் இணையத்தில் பயன்படுத்துகிறார்கள் என்ற கணக்கு என்னிடம் இல்லை. டோண்டு பயன்படுத்தியதை அவர் சொன்னபின் தான் அறிந்தேன். ஆனால் பிறப்பை முன்வைத்து மனிதனைப் உயர்த்துவதும், தாழ்த்துவதும் பார்பனீயக் கருத்துருவாக்கம் என்பது என் புரிதல். இதில் நீங்கள் எவ்வளவு தூரம் உடன்படுகிறீர்கள் என்பது என்னுடைய பிரச்சனை இல்லை. ஆனால் சண்டாளனும், பறையனும் உண்டானது பிறப்பினால் தான்; அவர்களது பிறப்பினாலேயே அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 'இழிபிறவி' இணையத்தில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வதல்ல என்னுடைய பின்னூட்டம்.யாரும் வசைச்சொற்களைப் பொருளுணர்ந்து திட்டுவதில்லை; தேவடியா மகன் என்று திட்டுவோர் ஒருவனது தாயை யோசித்து இந்த வார்த்தையைத் திட்டுவதில்லை; அதே நேரம் அந்தச் சொல் உருவான சிந்தனைத்தளம் ஆணாதிக்க மனநிலையில் தான் என்று புரிந்துகொள்கிறேன். அதே போல fuck you போன்ற வசைகள் அதே அர்த்தத்தை உணர்ந்து சொல்லப்படுவதில்லை; ஆனால் உடலை, கலவியின்பத்தை இழிவாகவும், கண்டனத்து உரியதாகவும் நினைக்கும் மதவழிப்பட்ட சிந்தனைத் தளத்தில் இருந்து பிறந்ததாகப் புரிந்துகொள்கிறேன். அப்படியே இழிபிறவி என்ற சொல்லைப் பலரும் பல அர்த்தங்களில் பயன்படுத்தி இருக்கலாம். நான் சொல்ல வந்தது அது எந்த சிந்தனைத் தளத்தில் இருந்து உருவானது என்பதைத் தான்.

இந்தச் சிந்தனைத்தளம் தமிழ்ச் சிந்தனை உலகில் அறிமுகமான போதோ, அல்லது வலுப்பெற்ற போதோ இது கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. அது திராவிடக் கருத்தாக்கத்தில் தொடங்கியது அல்ல; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று 2000 வருடத்துக்கு முன் எழுதப்பட்டது இந்த எதிர்ப்பின் குரலால் தான் என்பது என் புரிதல் அல்லது என் இரசவாதம். குடிமை என்ற அதிகாரத்தில் மேலோர் அல்லது நற்குடி என்பதற்கு வள்ளுவர் உயர்குணங்களை மட்டும் திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை வெறும் உபதேசமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை; அது பார்பனீயக் கருத்தாக்கத்துக்கு எதிராக அந்நாளில் வலுப்பெற்ற வேதமறுப்புத் தத்துவங்களின் அடிப்படையில் எழுந்த குரல் என்ற கட்சியை நானும் ஒத்துக்கொள்கிறேன்.

மற்றபடி எது பொலிட்டிகலி கரெக்ட் என்பதைப்பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை ஏனெனில் அவரவர்க்குத் தேவையானதை அவரவர் கண்டடைகிறார்கள் என்று நினைக்கிறேன்.

7:50 PM  
Anonymous பெங்களூர் American மொழிந்தது...

தங்கமணி சொல்லுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

ஒரு வார்த்தையானது அதைப் பிறப்பித்த சிந்தனைத்தளத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்படவேண்டும். உதாரணமாக, X என்கின்ற வார்த்தையானது தவறான வரலாற்று, சமூகக் கண்ணோட்டத்தால் விளைந்தது என்று வைத்துக்கொள்ளுவோம். இவற்றைப் பயன்படுத்துதலை எதிர்ப்பது சரிதான். நீங்களும் அதையேதான் சொல்லுகிறீர்கள்.

ஆனால், சில வார்த்தைகளை என்னைப்போன்ற, தங்கமணி போன்ற புரட்சிக்காரர்கள் வேண்டுமென்றே X போன்ற வார்த்தைகளோடு சேர்த்துவைத்துப் பேசி அந்த வார்த்தைகளுக்கு தவறான பொருள் உள்ளது என்று ஜல்லியடிப்போம். வசைச்சொற்களை அதன் பொருளுணர்ந்து பேச வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அந்தப் "பொருளுணர்ந்து" என்று நீங்கள் கூறுவதன் முழு அர்த்தம் அவ்வார்த்தையினை அதன் வரலாற்று, சமூகப் பிண்ணணியிலும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே. ஆனால், நாங்கள் புரட்சிக்காரர்கள். நீங்கள் சொன்ன வார்த்தையின் "பொருளுணர்ந்து" பேச ஆரம்பித்தால் மற்ற புரட்சிக்காரர்கள் மத்தியில் "பார்ப்பனீயத்திற்கு" மறைமுகமாகக்கொடி தூக்குபவள் என்று பெயர் வரும். என் சாதி என்ன என்று அலசி ஆராய்ந்து என்னை "பிறப்பினாலேயே அடுத்தவர்களை அடிமையாக நினைக்கும் குணத்தை ஜீன்களில் தேக்கியுள்ள பார்ப்பனீயவாதி" என்றோ, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களது சாதிகளின் தளத்தில் இருந்துவிட்டால் "பார்ப்பனீயத்திற்கு ஜால்ரா தட்டுபவள், பார்ப்பனீய அடிவருடி" என்றோ சொல்லிவிடுவார்கள். அப்புறம் எங்கள் மண்டையின் பின்னால் இருக்கும் "சிந்தனாவாதி", "புரட்சிக்காரி", "இன்டெலெக்சுவல்" என்பது போன்ற ஒளிவட்டங்களின் பேட்டரி அணைக்கப்பட்டுவிடுமே. அப்புறம் எங்களை யார் சீந்துவார்கள்?

எனவே, "இழிபிறவி" என்கின்ற வார்த்தையை மட்டுமல்ல. எந்த வார்த்தையையுமே எங்கள் இஷ்டத்திற்குப் புரிந்துகொண்டு எங்களின், எங்கள் தலைவர்களின் சிந்தனைகளின்படி எப்படிவேண்டுமானாலும் பொருள் சொல்லுவோம். அதை ஒத்துக்கொண்டால் உங்களையும் நாங்கள் ஒரு சிந்தனாவாதி, புரட்சிக்காரர் என்றெல்லாம் சொல்லுவோம். இல்லாவிட்டால் உங்கள் சாதி என்ன என்று ஆராய ஆரம்பித்து அதைத்தவிர உங்களுக்கு வேறு எந்த முகமும் இல்லை என்று நிறுவுவதே எங்கள் வேலையாகும்.

அப்புறம் இன்னொன்று. இந்த "இழிபிறவி" என்கின்ற வார்த்தையை மட்டுமல்ல, வேறு சில வாக்கியங்களையும் யாரும் உபயோகப்படுத்தக்கூடாது. உதாரணமாக, "நீ பூமிக்குப் பாரமாய் இருக்கிறாய்" என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், இது பூமியில் வாழும் மனிதர்களின் சிந்தனைத் தளத்திலிருந்து வந்தது. அதனால், எங்களைப்போன்ற செவ்வாய் கிரக வாசிகளை அவமதிக்கும் வாக்கியமாக இதை அறிவித்து நாங்கள் எல்லாம் அமெரிக்காவின் ப்ரெசிடென்டாக அர்னால்ட் ஸ்வார்ஷெனெகெர் ஆவதற்கு முன்பாக வந்து அட்டாக் செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதற்கு ஏதேனும் சப்பைக்கட்டு கேட்டால், இந்த வாக்கியத்தை வேறு ஏதேனும் சரியாகப் பொருளுணர்ந்து செய்யப்படும் வாக்கியத்தோடு சேர்த்துக் குழப்பி எங்களை நியாயவான்களாகக் காட்டிக்கொள்ளுவோம். உதாரணமாக, "நீ ஒரு மிருகம்" என்கின்ற வாக்கியத்தை எடுப்போம். எடுத்து, இது மனிதர்கள் தங்களை மிருகங்களைவிட உயர்வாக நினைக்கும் வக்கிரப்புத்திக்கு அடையாளமாய் பேசிவிட்டு, இதுவும் "பூமிக்குப் பாரமாய் இருப்பது" என்பது போன்ற வார்த்தைகளும் ஒரே தளத்தில்தான் தோன்றின என்று சொல்லிவிடுவோம். அப்புறம் உங்களால் எதாவது பேசமுடியுமா? முடியவே முடியாது. அப்படியே நீங்கள் ஏதாவது பேசினாலும் ஒவ்வொன்றுக்கும் இப்படி குதர்க்க வாதம் செய்து உங்களை எதுபற்றியும் பேசவிடாமல் செய்துவிடுவோம்.

எங்களுக்குத் தேவை மனிதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மனித வளம் இல்லை. எங்கள் கொள்கைகளுக்காக தங்களை வருத்திக்கொள்ளும் மாசோக்கிச தொண்டர் பலம்.

எங்களுக்குத் தேவை முற்றிலும் சுதந்திரமான உலகம் இல்லை. பார்ப்பனீயத்திலிருந்தும், அமெரிக்க முதலாளித்தனத்திலிருந்தும், இந்துத்துவத்திலிருந்து மட்டும் விடுபட்ட சுதந்திரம்.

பெங்களூர் American

8:52 AM  

Post a Comment

<< முகப்பு