'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'

'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'

வலைப்பதிவுகளில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (M) , அதாவது சி.பி.எம் ஆதரவாகவும்,அதற்கு எதிராக/விமர்சித்து ம.க.இ.க ஆதரவாளர்களாலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ம.க.இ.க ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு என்பது என் புரிதல். அந்த அமைப்பின் பெயர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), மாநில சீரமைப்பு குழு என்று நினைக்கிறேன். மா.லெ குழு/அமைப்புகளின் பெயர்கள் பல (e.g. செங்கொடி, மாவோயிஸ்ட், மக்கள் யுத்தம்), இதில் எந்தக் குழு எந்தக் குழுவுடன் நட்பு பாராட்டும், எதை வசை பாடும் என்பதைப் புரிந்து கொள்வது சிறிது கடினம்தான், ஏனெனில் ஏகப்பட்ட குழுக்கள் மா.லெ என்று தங்களைக் கூறிக்கொள்கின்றன, மாலெ என்பதற்கு முன்னரும், பின்னரும் உள்ளவற்றை வைத்து இது இந்தக் குழு என்று ஊகிக்கலாம்.

கேரள காங்கிரஸ் பிளவு படும் போது இந்தக் குழப்பத்தினைத் தவிர்க்ககேரளக் காங்கிரஸ் (மணி), கேரள காங்கிரஸ்(ஜோஸப்) என்று அடையாளப்படுத்திக் கொள்வார்கள். மா.லெ. குழுக்கள் இவ்வாறு செய்வதில்லை என்பதால் குழப்பம் ஏற்படுவது இயற்கை. மேலும் பரஸ்பர தோழமை உறவு எந்தெந்த குழுக்களிடையே நிலவுகிறது என்பதைக் கண்டறிய அவர்களின் வெளியீடுகளைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த 'மார்ஸிய' தமிழ் அல்லது 'மா.லெ' தமிழ் சிறிது வித்தியாசமானது. 'மா.லெ' ஆங்கிலமும் அப்படித்தான். அந்தச் சொல்லாடல்களுடன் பரிச்சயமுடையவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இன்னாரைத் திட்டுகிறார்கள் என்ற அளவில் சிரமப்பட்டுப் படித்தால் புரிந்து கொள்ளலாம். பத்திரிகைகள் துவங்கப்படும், அப்புறம் வெளிவரா. பின்னர் அதே பத்திரிகை வேறொரு குழவின் பத்திரிகையாக வெளிவரும். ஆசிரியர்/வெளியீட்டாளர் குழு மாறியிருப்பார். இதைத் தெரிந்து கொள்ளாமல் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். அமீபாக்களே வெட்கப்படும் விதத்தில் இங்கு பிளவும், குழுக்கள் உதயமாவதும் நடப்பதால் இதெல்லாம் எளிதில் பிடிபடாது.

முன்பு கேடயம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அதைக் வெளியிட்டது ஒரு மா.லெ அமைப்பு/குழு.அது மன ஒசை என்ற பத்திரிகையையும் வெளியிட்டது. கேடயம், புதிய ஜனநாயகம்இரண்டும் ஒரே மாதிரி தாளில், கிட்டதட்ட ஒரே நடையில், ஒரே மாதிரியான வசவு வார்த்தைகளை, ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டு வெளியான போது, அட்டையைக் கிழித்து விட்டால் எதுகேடயம் எது பு.ஜ என்று தெரியாது என்று கிண்டலாகச் சொல்வதுண்டு. கேடயம் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), தமிழ்நாடு அமைப்புக் குழு சார்பில் வந்தது என்று நினைக்கிறேன். இருப்பினும் இரண்டையும் வேறுபடுத்த ஒரு எளிய வழி இருந்தது. எந்த மாலெ அமைப்பினை திட்டுகிறார்கள் என்பதை வைத்து, இரண்டிலும் கிட்டதட்ட ஒவ்வொரு இதழிலும் இன்னொரு தரப்பினை விமர்சித்து ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்பதால், யாரைத் திட்டுகிறார்கள் என்பதை இது கேடயமா இல்லை பு.ஜாவா என்று கண்டு பிடிக்கலாம். இதில் வேடிக்கை என்றால் ஒன்று லெனின் இந்த நூலில் இந்தப் பக்கம் இந்த பாரா என்று மேற்கோள் காட்டினால்,இன்னொன்று லெனினின் இந்த நூல் இந்தப் பக்கம் இந்தப் பாரா என்று இன்னொன்றைக் காட்டிஅதை மறுக்கும். இப்படி எழுதுவது மிகவும் கடினமல்ல. லெனினின் நூல்களிலிருந்து பாராளுமன்ற அரசியலுக்கு ஆதரவாகவும் மேற்கோள் தரலாம், எதிராகவும் தரலாம். இது போல் வார்த்தை விளையாட்டுகளில் இடதுசாரிகள் கை தேர்ந்தவர்கள். முப்பது வார்த்தைகளைத் தெரிந்து கொண்டுயாரை வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதை விமர்சிக்க பாராளுமனறம் பன்றித் தொழுவம் என்ற ஒரு கோஷம் போதும். அப்போது எப்போது யாரால்எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டது, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். பாராளுமன்ற தேர்தலில் நிற்பவர்கள் லெனின் பயன்படுத்திய சில வார்த்தைகளை (left adventurism, Left infantilism) வைத்து பதிலுக்கு விளையாடலாம். இந்த இடதுசாரி சொல்லாடல் விளையாட்டுகளுக்கு அப்பால் கவனிக்க வேண்டிய ஒன்று, ம.க.இ.க விற்கும், இ.க.க(மா) (i.e. சி.பி.எம் ) விற்கும் உள்ள ஒற்றுமைகள்/பொதுவான அம்சங்கள்.

இருவரும் ஸ்டாலியினத்தினை இன்றும் ஏற்பவர்கள், இருவரும் பாட்டளி வரக்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டினை நம்புபவர்கள்.இருவரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், தண்டனைகள் தரப்படுவதை, கொலைகளை நியாயப்படுத்துபவர்கள், அவ்வாறு செய்வது எக்காலத்திலும் சரி என்பவர்கள். மேலும் விமர்சனம்எங்கிருந்து வந்தாலும் அதை முத்திரை குத்தி நிராகரிக்க துணிபவர்கள். தமிழ்ச் சூழலில் ஸ்டாலினியத்தினை விமர்சிக்கும், விமர்சித்த எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன்போன்றவர்கள் இருவர் கண்ணோட்டத்தின் படி மார்க்ஸியர்களே அல்ல. இப்படி பல ஒற்றுமைகள்இருக்கின்றன. இரு தரப்புமே கொச்சையான,வறண்ட மார்க்ஸியத்தினை முன் வைக்கின்றன என்பதுமிகையாகாது. கருத்தியல் ரீதியாக பலவற்றில் இவர்கள் ஒத்த கருத்து உடையவர்கள். என்னைப் பொருத்த வரை இவர்கள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். அந்த 'மார்க்ஸிய' நாணயம் இன்று மதிப்பிழந்த நாணயம். ஒரு பழைய நாணயம் என்ற வகையிலும் மதிப்பினை பெற முடியாத நாணயம்.

எனவே இந்த 'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி' வார்த்தைப் போர்களினால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. இடதுசாரி வசைச் சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இவை சுவாரஸ்யமாக இருக்கலாம்.

Labels: ,

4 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

enjoyed :))

2:29 PM  
Anonymous பி.எஸ்.வீரப்பா மொழிந்தது...

சபாஷ், சரியான போட்டி

2:57 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

நடுவிலே வந்து நில்லடி, நடையிலே சொல்லடி :)

1:33 AM  
Blogger ஐயன் காளி மொழிந்தது...

மயங்கிய மதியால் உண்மைக்கு வெளியே மிதப்பவரின் பேயாட்டத்திற்கு உறுமியும், சாட்டையும் சேர்ந்தளிக்கும் சத்தம் தவிர்த்து நுண்ணிய சலங்கையின் சவால் கேட்காது.

"Payback" கிற்காக பேயாட்டம் போடுபவர்க்கு உண்மை எதுவென விளக்கும் அவசியம் இல்லாது போகிறது. அதுவும் இவரே பூசாரியாகும்போது மலத்தை மணமென்பார் மட்டுமே மார்க்கச்சியத்தின் பக்தர்கள்.

1:45 AM  

Post a Comment

<< முகப்பு