சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்

சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்

உயர் நீதிமன்றத்தில் தமிழினைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை தொடர்கிறது.மதுரையில் வழக்கறிஞர்கள் மக்களவை உறுப்பினர் மோகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆங்கிலம் போல் பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.தமிழில் சட்ட நூல்கள், மொழிபெயர்ப்புகள் உட்பட பல தேவையான வகையில், அளவில் இல்லை. ஆங்கிலத்தில் வழக்குகளுக்கான மனுக்களை தயாரிப்பது, வாதிடுவது, அதற்கான குறிப்புகளை தயாரிப்பது, தீர்ப்பெழுதுவது போன்றவை சாத்தியமாகியுள்ள அளவிற்கு அவை தமிழில் இன்று சாத்தியமில்லை. மேலும் தமிழினைப் பயன்படுத்துவது என்றால் கூட ஆங்கிலத்தில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பயன்படுத்த முடியும் என்ற நிலைதான் இன்று இருக்கிறது. எனவே தமிழில் இவற்றைச் செய்வதை விட ஆங்கிலத்தில் செய்வதே திறன்மிக்க செயலாக இருக்கும்.
சட்டத்துறை அறிவுப் பெருக்கம் உட்பட பல காரணங்களால் ஆங்கிலமே உகந்ததாக இருக்கிறது. தமிழ் குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் தமிழை எந்த அளவு பயன்படுத்த முடியும், அதனால் எத்தகைய சாதக,பாதகங்கள் ஏற்படும் என்பதை கண்டறிய வேண்டும். எல்லாத் துறைகளையும் போல் சட்டத்துறையிலும் அறிவுப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில் நுட்பம் பலவற்றை சாத்தியமாக்கியுள்ளது. தமிழில் இரண்டுமே அதாவது அறிவு பெருக்கம்/வளர்ச்சி, அதனை கையாள உதவும் தொழில் நுட்பம், இல்லை. இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ரயிலை மறிப்பது எளிது. அதை விட சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்பதும், சட்டத்தமிழை வளர்ப்பதும், சட்டம் குறித்த கலைச் சொற்களை உருவாக்குதல், தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்றவை கடினமானவை. இவை தொடர்ந்த உழைப்பினையும், கவனத்தினையும், அறிவாற்றலையும் கோருபவை. தமிழில் அரசியல் சட்டம் குறித்து எத்தனை நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள விரிவான அலசல்களையும். ஆய்வினையும் உள்ளடக்கியுள்ள நூல்கள் போல் சட்டங்கள் குறித்து தமிழில் எத்தனை இருக்கின்றன.

உதாரணமாக, இந்திய அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் உள்ளன.அறிமுக நூல்கள் என்ற அளவில் தொடங்கி ஒன்றிற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட தொகுதியாக உள்ள சீர்வை எழுதிய புகழ் பெற்ற நூல் உட்பட பல நூல்கள் அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்த வரை தமிழில் அறிமுகம் என்பதைத் தாண்டிய அளவில் நூல் ஏதும் இல்லை.

முன்பு ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றிற்கு ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இன்று மனுபத்ரா போன்ற தளங்கள் தரும் தீர்ப்புத் தொகுதிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. ஒரு வழக்கில் சுட்டப்படும் தீர்ப்புகள் பெரும்பான்மையானவற்றை இத்தளங்களிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நேரமும், உழைப்பும் மிச்சமாகும் நிலை இன்றுள்ளது. உதாரணமாக உச்ச நீதிமன்றம் 1956ல் கொடுத்த தீர்ப்பினைப் படிக்க இன்று ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றின் பழைய தொகுதிகளை புரட்ட வேண்டியதில்லை. தீர்ப்புகளை தரும் தகவல்தரவு தளங்கள், தொகுப்புகளிலிருந்தும், குறுந்தகடுகளிலிருந்து அந்த தீர்ப்பினைப் படிக்கவும், மேற்கோள் காட்டவும் முடியும். இத்துடன் பல்வேறு நாடுகளிலுள்ள லெக்ஸிஸ், வெஸ்ட்லா போன்றவைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு இன்று இருக்கிறது. செலவு அதிகம் என்று தோன்றினாலும் இவை மிகவும் பயன் தரும் வகையில் உள்ளன.உதாரணமாக லெக்ஸிஸ் மூலம் சட்டத்துறை ஜர்னல்கள்,ரிவ்யூக்களில் வரும் கட்டுரைகள், முக்கியமான நாளேடுகள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள், முழுமையான தீர்ப்புகள், வழக்கு விபரங்கள், ஸிஸமின் உரிமங்கள்(patents) குறித்த நூல் உட்பட பலவற்றைப் பெற முடியும், அச்சிட முடியும். லெக்ஸிஸ்,வெஸ்ட்லா போன்றவை இன்று சட்டத்துறையில் தவிர்க்க முடியாதவை என்று கூறலாம்.

அமெரிக்காவில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு க்ஸிஸ்,வெஸ்ட்லாவை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பயிற்சி அளிக்கிறார்கள். ஏனெனில் இன்றைய தகவல்,கணினி யுகத்தில் வழக்கறிஞர், சட்டத்துறை ஆய்வாளர்கள் இதைத் தெரிந்து கொள்ளாமல் தொழில் செய்வது கடினம். இந்தியாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உட்பட பல குறுந்தகடுகளிலும், இணையத்திலும், தகவுத் தொகுப்பாகவும் கிடைக்கின்றன. இந்தியாவில், சர்வதேச, இந்திய சட்டங்கள் குறித்த ஆய்வுகள், நூல்கள், ஜர்னல்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன என்றால அது மிகையில்லை. இந்தியாவில் உள்ள சட்டப் பல்கலைகழகங்களில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக உள்ளது. சட்ட முன் வடிவுகள், சட்டங்களின் பிரதிகள், செபி(SEBI),கம்பெனி சட்ட போர்டு வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தின் தான்
உள்ளன அல்லது முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியாகின்றன.

இவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழில் என்ன உள்ளது. இவற்றை உருவாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், அதற்குள் பெருகிவரும் அறிவினை தமிழில் எப்படித் தருவது, தமிழுக்கு இவற்றை எப்படிக் கொண்டு வருவது, இதற்கு கணினி, இணையத் தொழில் நுட்பங்களை எப்படிப் பயன்படுத்த முடியும்- இப்படி பல கேள்விகள் உள்ளன. இவற்றையெல்லாம் யோசிக்காமல் வெறும் உணர்ச்சி ரீதியாக முழங்குவது எந்த பயனையும் தராது. நாம் செய்ய வேண்டியவை என்னென்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தின் இடத்தினைப் பெறுவதோ அல்லது அதற்கு மாற்றாக இருப்பதோ சட்டம் உட்பட பல துறைகளில் சாத்தியமேயில்லை என்பது என் கருத்து. தமிழினை ஒரளவு பயன்படுத்த முடியும். ஆனால் அதுவும் உடனடியாக சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

இருப்பினும் நாம் வாளவிருக்கலாகாது. எதுவுமே செய்ய முடியாது என்று முயற்சிக்காமல் இருந்து விடக்கூடாது. இந்தி பயன்படுத்தப்படும் உயர் நீதிமன்றங்களில் இந்தி எந்த வகைகளில், எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியில் சட்டத்துறை அறிவு எந்த அளவில் உள்ளது போன்றவற்றை நாம் ஆராய வேண்டும்.இதன் அடிப்படையில் தமிழில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நோக்கோடு நாம் செயல்பட வேண்டும்.இப்படிச் செய்தால் தமிழை உயர்நீதி மன்றத்தில் சட்ட,
வழக்காடு மொழியாக ஒரளவேனும் பயன்படுத்துவது சாத்தியமாகக் கூடும். ஆனால் அதற்கே நாம் கடக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.

சட்டம் உட்பட பல துறைகளில் தமிழ் இன்னும் பிறக்காத குழந்தை நிலையில்தான் உள்ளது. அந்தக் குழந்தை மீது பாசம் இருக்கலாம், அதற்காக அது ஒலிம்பிக் பந்தயத்தில் நாளை கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பது சரிதான் என்றால் ஒரு ஆணையை பிறப்பிபதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் முழுமையான சட்ட, நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திவிடலாம் என்று நினைப்பதும் சரிதான்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703292&format=print

Labels:

பூங்கா

பூங்கா

இந்த வாரப் பூங்காவில் நந்திகிராமில் பூனூல் திருவிழா நடத்தி சாதித் திமிரைக் காட்டும் காம்ரேட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திகிராமில் நடந்தது அரசு வன்முறை இதைபூனூலுடன் தொடர்பு படுத்துவானேன். மாஞ்சோலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து ஊர்வலம் சென்றவர்களில் 19ம் பேர் காவல் துறையின் தாக்குதலில் கொலைச் செய்யப்பட்ட்து என்ன பெரியாரிய திராவிட திருவிழா என்று எழுதலாமா. பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு கீழ்வெண்மணி படுகொலைகள்குறித்து பெரியார் விட்ட அறிக்கையைப் பற்றி ஏதாவது தெரியுமா. அவர் அந்தப் படுகொலைகளைகண்டித்து ஒரு வார்த்தை கூட அதில் எழுதவில்லை. நிலப்பிரபுக்களை கண்டித்து அதில் ஏதாவது எழுதினாரா. ஏன் இல்லை.

அந்தப் பெரியார் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியை, பூங்கா ஆசிரியர் குழவினர் சொற்களில் கூற வேண்டுமென்றால்பார்ப்பனியத்தின் கங்கிரஸ் தேசிய முகத்தினை ஏன்ஆதரித்தார். தேசியவாதியான, இறுதிவரை காங்கிரஸ்காராக இருந்த காமராஜின் பச்சைத் தமிழர் ஆட்சியை ஏன் ஆதரித்தார். பெரியார்தமிழ் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது இந்திக்கு ஆதரவு அளித்தார். 1967 தேர்தலில்காங்கிரஸைத்தான் ஆதரித்தார். எனவே பிறரை நோக்கி விரல் நீட்டும் முன் பெரியாரை நோக்கியல்லவா அவர்கள் விரல்கள் நீள வேண்டும். பார்பனியத்திற்கும் , நந்திகிராமில் நடந்ததெற்கும் என்ன தொடர்பு. திமுக ஆட்சிகளில் துப்பாக்கி சூடுகளே நடந்ததில்லையா,அவையெல்லாம் திராவிட பாசிசத்தின் வெளிப்பாடுகள், தமிழ் நாட்டில் பெரியார் ஆட்சியிலிருக்கும்பாசிஸ்ட்களை ஆதரித்தார் என்று எழுத யாராலும் முடியும். கூலி உயர்வு கேட்ட அத்தான்,குண்டடிபட்டுச் செத்தான் என்று திமுகவினர் 1960களில் விமர்சித்தனர் - பெரியாரின் ஆதரவினைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியை.

பூங்கா பார்பனியம், பூனூல் என்பதை வைத்து ஜல்லியடிக்கிறது. பார்பனீய விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் விஷமத்தனம் இது. ஏனெனில் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடும், வன்முறைக்கும், பார்பனியத்திற்கும், பூனூலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் நில சீர்த்திருத்தம்நிறைவேற்றப்பட்ட அளவிற்கு தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படவில்லை. இதெல்லாம் ஒருவர் நெஞ்சில் முள்ளாக உறுத்தியதில்லை. தலித் கண்ணோட்டத்தில் இடதுசாரிகளின் நிலச்சீர்த்திருத்தம் மீதும்,தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நிலசீர்திருத்தம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.பெரியார் நிலச் சீர்த்திருத்தம் குறித்து ஒரளவே அக்கறைக் காட்டினார். அது அவரது செயல்திட்டங்களில் முன்னுரிமை பெறவில்லை. ஏனெனில் நில உடைமையாளர்களில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர் அல்லாத, தலித் அல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகஇருந்ததே காரணம் என்று ஒரு கருதுகோளினை முன் வைக்கலாம். எனவே பூங்கா ஆசிரியர்குழு யாருக்காகவும் போலிக் கண்ணீர் விட வேண்டாம்.

பூங்கா தன் நம்பத்தன்மையை இழந்துவிட்டது. சமஸ்கிருத வெறுப்பு, இந்திய தேசியம் மீதான வெறுப்பு போன்றவற்றை பரப்பும் இதழாக அது உள்ளது. உண்மையில் ஏற்கனவே வெளியானகட்டுரைகளை மீள் பிரசுரம் செய்யும். ஆனால் ஏற்கனவே வெளியானவற்றை வெளியிடமாட்டோம் என்று விதி இருப்பதாகக் கூறிக் கொள்ளும். மக்கள் கலைவிழா குறித்து ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை தரும், ஆனால் வேறு சில விஷயங்களில் சில பதிவுகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும்.வித்யாவின் பதிவினை, அதையொட்டி நடந்த விவாதங்களுக்கு இடம் தராது, தருமியின் பதிவினை மட்டும் வெளியிடும். மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கு குறித்த பதிவிற்கு இடம் தரும்,அந்த வழக்கினையும், சென்னை மாநகராட்சித் தேர்தல் குறித்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பினையும் சேர்த்து குறிப்பிட்டு எழுதியுள்ள பதிவினை பிரசுரிக்காது. ம.க.இ.க விற்கு ஆதரவாகபதிவுகளை வெளியிடும், ம.க.இ.கவையும், இந்திய கம்யுன்ஸிட் கட்சி (மா) இரண்டையும் விமர்சிக்கும் பதிவினை வெளியிடாது. இது போல் பல உதாரணங்கள் தரலாம். மேலும் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கருத்துத் சார்நிலை உடையவர்களின் கருத்துக்களையே முன்னிறுத்தும். சுருக்கமாகச் சொன்னால் பூங்காவின் தலையங்கங்கள், உள்ளடக்கம் ஒரு பக்கசார்பை, குறிப்பிட்ட கருத்துக்களையே முன்னிறுத்துகின்றன. இதை மறுக்க பூங்கா ஆசிரியர்குழ பாருங்கள், நாங்கள் வேறு பல வலைப்பதிவுகளிலிருந்து பல்வேறு தரப்பட்ட கருத்துக்களைதொகுத்து தருகிறோம் என்று கூறலாம். ஆனால் பூங்கா இதை ஒரு உத்தியாகக் கையாள்கிறதுஎன்றே கருதுகிறேன். இதன் மூலம் பிரச்சாரம் மட்டுமே செய்கிறோம் என்ற உணர்வு உருவாகவண்ணம் வேறு சிலவற்றிற்கும் இடம் தரும் உத்திதான் இது.

பூங்கா குறித்து அதிருப்தி கொண்டிருப்போர் ஒரு மாற்று வலைப்பூவிதழ் குறித்து யோசிக்க வேண்டும்.ஒன்றிற்கு மேற்பட்ட திரட்டிகள் இருக்கும் போது ஏன் இன்னொரு வலைப்பூவிதழ் இருக்கக் கூடாது. இனி என் வலைப்பதிவில் இடம் பெற்றவற்றை பூங்காவில் வெளியிட நான்அனுமதித் தரப்போவதில்லை. நான் அனுமதி தந்தாலும் அவை பூங்காவில் இடம் பெறும் சாத்தியக்கூறு குறைவுதான் என்பது என் அனுபவம். காவிரிப் பிரச்சினையில் பூங்காவில் இடம் பெற்ற ஆசிரியர்குழு குறிப்பினை நான் விமர்சித்திருக்கிறேன். பூங்காவின் இடதுசாரி சார்பு என்பது உண்மையிலேயே இடதுசாரி சார்பு அல்ல. அது குறுகிய திராவிட தேசிய பெரியாரிய நிலைப்பாடு குறித்த சார்பு. இந்த திராவிட தேசியம் குறித்து வெறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்

சுருக்கமாக்ச் சொன்னால் பூங்காவின் நம்பத்தன்மை போய்விட்டது. அதற்கான மாற்றினை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆயிரம் பூக்கள் மலரட்டும், பல பூங்காக்கள் உருவாகக்கட்டும்.

Labels: ,

இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும்

இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும்

ஐஐடி,ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அரசின் சட்டத்தினை அமுலாக்க உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 1931ல் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்பட்ட ஜாதிகளை அடையாளம் காண முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு இந்த ஆண்டிற்குப் பொருந்தும். மத்திய அரசு இந்த முடிவினை நியாயப்படுத்த போதுமான தகவல்களை, தரவுகளைத் தரவில்லை என்று உச்ச நீதி மன்றம் கருதுகிறது. இதில் நியாயம் இருக்கிறது. மேலும் க்ரீமி லேயரினை விலக்கவும் மத்திய அரசு முயலவில்லை. இட ஒதுக்கீடு குறித்த 93வது அரசியல் சட்டத்திருத்தம் குறித்தும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினையில் தீர்ப்பு வர ஒரிரு ஆண்டுகளாகும்.

உச்ச நீதிமன்ற ஆணையை முழுமையாக படித்தபின்னரே மேல் விபரங்கள் தெரிய வரும். இந்த இடைக் காலத் தடையின் அடிப்படையில் நீதிமன்றம் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை நிராகரிக்கும் என்று சொல்ல முடியாது. சில அடிப்படைக் கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. பிற்பட்டோர் என்றால் யார், அவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதுஉள்ளிட்ட பல கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

Labels: , ,

தமிழக அரசும், கிரீமி லேயரும்

தமிழக அரசும், கிரீமி லேயரும்

உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிற்பட்டோரில் முற்பட்டோரைகண்டறிந்து விலக்குவது குறித்த வ்ழக்கொன்றினை விசாரித்து வருகிறது.உச்ச நீதிமன்றம்அண்மையில் கேராளவில் இட ஒதுக்கீடு குறித்த வ்ழக்கொன்றில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் கேள்வியை, அதாவது தமிழக அரசு கிரீமி லேயர் கோட்பாட்டினை அமுல் செய்ய மறுப்பதை அணுகும் என்று தெரிகிறது. தமிழக அரசு பிடிவாதமாக இந்தக் கோட்ப்பாட்டினை ஏற்க மறுக்கிறது. பிற மாநிலங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தரப்படும் முன்னரே தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை ராஜதானியில்) இது அமுலுக்கு வந்தது. மேலும் இட ஒதுக்கீட்டில் ஒரு சில சாதிகள் அதிக பயன் பெறுவதையும், பல சாதிகள் மிக் குறைவாக பயன்பெறுவதையும் சட்டநாதன் கமிஷன் 1970ல் சுட்டிக் காட்டியது. அப்போதே இட ஒதுக்கீட்டினை பெற ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்றும், பிற்பட்டோரில் முன்னேறியோரை விலக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.அதை திமுக அரசு ஏற்கவில்லை. பின்னர் 1980களில் அம்பாசங்கர் கமிஷனும் அது போன்றே கருத்து தெரிவித்தது, அதாவது பிற்பட்டோரில் முற்பட்டோரினை விலக்க வேண்டும். இந்த இரண்டு கமிஷன்களின் இந்தப் பரிந்துரைகளை அரசுகள் ஏற்கவில்லை, ஆனால் இட ஒதுக்கீட்டின் அளவு மட்டும் கூட்டப்பட்டது.

1979ல் எம்.ஜி,ஆர் வருமான வரம்பினைகொண்டு வந்தார்.பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைத் தழுவியது. 1980 ஜனவ்ரியில் எம்,ஜி,ஆர் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை 50% ஆக உயர்த்தினார்,வருமான விலக்குக் குறித்த ஆணையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்தியாவின் பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள க்ரீமி லேயர் கோட்பாட்டினை தமிழக அரசு ஏற்க மறுப்பது சரியல்ல. இன்று இட ஒதுக்கீட்டினை 50% ஆக குறைப்பதும், க்ரீமி லேயர் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்துவதுமே நியாயமான முடிவுகளாக இருக்கும்.

தமிழ்நாட்டினைப் பொருத்தவரை இட ஒதுக்கீடு என்பது புனிதப் பசு. தங்களை சாதி மறுப்பாளர்களாக, முற்போக்காளர்களாககாட்டிக் கொள்பவர்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள். அரசியல் கட்சிகளைப் பற்றி கேட்க வேண்டாம்.

இட ஒதுக்கீட்டினால்பாதிக்கப்படும் சாதியினர் அமைப்பு ரீதியாகத் திரளவில்லை. தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நினைக்கிறார்கள் போலும்.. எனவே இந்த அநீதியான இட ஒதுக்கீடு தொடர்ந்து அமுலில் உள்ளது.உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும். மண்டல் கமிஷன் வழக்கில் தரப்பட்டதீர்ப்பு தமிழ் நாட்டிலும் அமுல் செய்யப்பட வேண்டும். அது இட ஒதுக்கீட்டினால் அநியாயமாகபாதிக்கப்பட்டோர் நீதி பெற ஒரளவேனும் உதவும். ஆனால் நிரந்தரத் தீர்வு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினை மறுபரீசலனை செய்து சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குப் பதிலாக பிற அளவு கோல்களை உள்ளடக்கிய,பெண்களும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோரும் பயன் பெறும் வகையில் ஒர்இட ஒதுக்கீட்டினை கொண்டு வர வேண்டும். இங்கு சாதி என்பது ஒரு அம்சமாக இருக்கும்,தீர்மானிக்கும் ஒரே அம்சமாக இருக்காது

Labels: ,

அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'

அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'

அரசி தொடர் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சமூகத்தில் உள்ள தவறான கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பாத்திரங்களை சித்தரிக்க கூடாது என்று கோருவதில் உள்ள நியாயம் புரிகிறது.அவ்வாறு கோருவதற்கும், ஒரு தனி நபரை குறித்து அவதூறு பரப்புவதற்கும் வேறுபாடுஇருக்கிறது.ஒரு பெண் வெற்றி பெற்றால் தன் உடலை வைத்தே என்ற வக்கிரமான கருத்தினைஒருவர் முன் வைத்தால் அதை விளிம்பு நிலையில் உள்ளவர் அப்படித்தான் கூறுவார் என்றெல்லாம்நியாயப்படுத்த முடியாது. விளிம்பு நிலையில் இருப்பவர்கள் என்பதற்காக யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறு செய்ய உரிமை யாருக்கும் இல்லை. வித்யா எழுதியிருப்பது கேவலமாகஇருக்கிறது என்றால் அவர் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது ஏற்க இயலாத நிலைப்பாடு.அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதுதான் முறையானது.

எந்த ஒரு குழுவினரையும்,மதத்தவரையும் அல்லது பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக மோசமானவர்களாக சித்தரிக்கக் கூடாது என்று கோரலாம். ராதிகாவைக் குறை கூறும் பலர்வலைப்பதிவுகளில் பிராமணர்களையும், இந்து மதத்தினையும் ஒட்டு மொத்தமாக கேவலமானவர்கள்,கேவலமான மதம் என்று சித்தரிப்பதற்கு துணை போனவர்கள் அல்லது அப்படி சித்தரித்தவர்கள்.இவர்களுக்கு ராதிகாவை குறை கூற எந்த தார்மீக உரிமையோ அல்லது அருகதையோ கிடையாது. இப்படிப் பட்ட சித்தரிப்புக்களுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் இட்டவர்தான் வித்யா. இவர் ராதிகாவைப் பற்றி எப்படி குறை கூற முடியும். எங்களை மோசமாக சித்தரிக்காதே, பிறரைமோசமாக சித்தரி என்பதை எப்படி ஏற்க முடியும். இந்த சர்ச்சையை வைத்து குழலி அடிக்கும்ஜல்லியடியும், பின்னூட்டங்களில் உள்ள பல கருத்துக்களும் 'பொலிடிக்கலி கரீக்ட்' ஜல்லியடிகளாகஇருக்கலாம்.

பெண்ணுரிமை குறித்து போலிக் கண்ணீர் விடுத்த திருவாளர்கள் இந்த மோசமான தனி மனித தாக்குதல் குறித்தோ அல்லது வித்யாவின் எழுத்தில் உள்ள வக்கிரம் குறித்தோ ஒரு வார்த்தைக் கூடகண்டித்து எழுதவில்லையே, ஏன். இதுவும் 'பொலிடிக்க்லி கரீக்ட்' நிலைப்பாடா?, அதாவது வித்யா போன்றவர்கள் யாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அது நியாயமானது.ஆனால் இதே போன்ற கருத்தை ஒரு ஆண் முன் வைத்தால் அது ஆணாதிக்க மனோபாவம்.


தமிழ் வலைப்பதிவுகளில் 'பொலிடிக்கலி கரீக்ட்' நிலைப்பாடு எடுத்துவிட்டு விளிம்பு நிலைபோன்ற சொற்களைப் போட்டு ஜல்லியடிப்பது எளிது. தமிழில் ஒரு சொல் எத்தகையப்பொருட்களில் கையாளப்படுகிறது, என்னென்ன அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எப்படியாவது பார்பனீயம் என்ற சொல்லைக் கொண்டு வந்து'பொலிட்டிக்கலி க்ரீக்ட்' ஆக எதையாவது எழுதிவிட்டால் போதும். இதற்கு ஒரு உதாரணம் குழலியின் இந்த பதிவும், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும்.

இழிபிறவி என்ற சொல்லை வைத்து கூகுளித்தால் அதைப் பலரும் ஒன்றிற்கும் மேற்பட்டபொருட்களில் கூறியிருப்பதை அறிய முடியும். இழிபிறவியாகிய யான் என்று ஒருவர் சொல்லும்போது அவர் தன் பிறப்பினை முன்னிறுத்துவதில்லை. பிறவி, பிறப்பு என்ற இரு சொற்களும்வெவ்வேறு பொருட்களைக் கொண்டவை. தங்கமணியின் ரசவாதத்தில் பிறவியும், பிறப்பும்ஒரே பொருளைக் கொண்டதாக மாறிவிடுகிறது. பார்பனீயம் என்று சொல்லிவிட்டால் எதைவேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கூறமுடியுமே. இழிபிறவியாகிய யான்என்று ஒருவர் கூறும் போது அவர் தன்னைத் தான் இழிவான நிலையில் உள்ள பிறவி என்றுபொருள் கூற முடியும்.

இணையத்தில் தேடினால் ஒரு குற்றவாளியை, ஒரு பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்தி கொன்றவரைப் பற்றி எழுதும் போது இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லையை பிறரை குறிக்க பயன்படுத்தலாமா கூடாதா என்ற கேள்விக்கு விடை எந்தப்பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. என்னைப் பொருத்தவரைஇத்தகைய சொற்களை தவிர்த்துடலே நல்லது. டோண்டு இதை பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.வலைப்பதிவு/பின்னூட்டங்களில் இந்த்ச் சொல் அவரைக் குறித்தேபயன்படுத்தப்பட்டுள்ளது. என் பதிவில் இடப்பட்டு நான் அனுமதிக்க மறுத்த பின்னூட்டத்திலும்இது இருக்கிறது.

எனவே ஏதோ டோண்டுதான் இதைப் பயன்படுத்துகிறார் என்பது தவறு.இதைப் பயன்படுத்திய பிறர் யார் யாரெல்லாம் என்பதை கூகுள் மூலம் அறிந்து கொள்ளலாம். டோண்டுவின் வாதத்தினை நான் ஏற்கவில்லை. அத்தகைய சொற்களை தவிர்க்க வேண்டும். ஆனால் அதை ஏதோ அவர் மட்டும் பயன்படுத்தியதாக சித்தரிப்பது அயோக்கியத்தனம். அந்த சொல் எந்தெந்த பதிவுகளில் இடம் பெற்றுள்ளது, பின்னூட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை பாருங்கள். அப்போதுதான் குழலி அடித்திருக்கும் ஜல்லி எவ்வளவு அபத்தமானது என்பதுபுரியும்.

வலைப்பதிவுகளில் கருத்துக்கள் நாகரிகமாகவும், தனி நபர் தாக்குதலாக இல்லாத வகையிலும்,எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பண்பட்ட முறையில் வெளிப்படுத்தவேண்டும். இதுதான் என் கருத்து. இதில் விதிவிலக்குகளைக் கோரக் கூடாது. யாருக்கும் யாரையும் தனி நபர் அவதூறு செய்ய உரிமை இல்லை, அது முறையும் அல்ல. சட்ட ரீதியாகக் சொன்னால்வித்யாவின் எழுத்து சட்டத்தின் படி குற்றமாகும்.இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இது குற்றம். இதை வெறும் சட்டப் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. ராடான் நிறுவனமோ அல்லது ராதிகாவோ இதை சட்ட ரீதியாக சந்திக்க முயன்றால் , சட்ட ரீதியாக வெற்றி பெற முடியும் என்றே கருதுகிறேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இன்னொரு தரப்பின் கருத்துக்களை மதிக்க முன் வந்திருப்பது நல்ல அறிகுறி. அதற்குப் பின்னும் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது நியாயமல்ல.

இதில் விவாதிக்கப்பட வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. உதாரணமாக ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், அவை எப்படி புரிந்து கொள்ளப்படுகின்றன அல்லது பொருள் கொள்ளப்படுகின்றனஎன்பதையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் இன்னாரை இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என்று கோருவது எந்த அளவிற்கு சரியானது. இப்படிப்பட்ட கேள்விகளை ஆரோக்கியமாக விவாதிக்கும் சூழல் தமிழ் வலைப்பதிவுகளில் இருக்கிறதா.

Labels: , ,

'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'

'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'

வலைப்பதிவுகளில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (M) , அதாவது சி.பி.எம் ஆதரவாகவும்,அதற்கு எதிராக/விமர்சித்து ம.க.இ.க ஆதரவாளர்களாலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ம.க.இ.க ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு என்பது என் புரிதல். அந்த அமைப்பின் பெயர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), மாநில சீரமைப்பு குழு என்று நினைக்கிறேன். மா.லெ குழு/அமைப்புகளின் பெயர்கள் பல (e.g. செங்கொடி, மாவோயிஸ்ட், மக்கள் யுத்தம்), இதில் எந்தக் குழு எந்தக் குழுவுடன் நட்பு பாராட்டும், எதை வசை பாடும் என்பதைப் புரிந்து கொள்வது சிறிது கடினம்தான், ஏனெனில் ஏகப்பட்ட குழுக்கள் மா.லெ என்று தங்களைக் கூறிக்கொள்கின்றன, மாலெ என்பதற்கு முன்னரும், பின்னரும் உள்ளவற்றை வைத்து இது இந்தக் குழு என்று ஊகிக்கலாம்.

கேரள காங்கிரஸ் பிளவு படும் போது இந்தக் குழப்பத்தினைத் தவிர்க்ககேரளக் காங்கிரஸ் (மணி), கேரள காங்கிரஸ்(ஜோஸப்) என்று அடையாளப்படுத்திக் கொள்வார்கள். மா.லெ. குழுக்கள் இவ்வாறு செய்வதில்லை என்பதால் குழப்பம் ஏற்படுவது இயற்கை. மேலும் பரஸ்பர தோழமை உறவு எந்தெந்த குழுக்களிடையே நிலவுகிறது என்பதைக் கண்டறிய அவர்களின் வெளியீடுகளைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த 'மார்ஸிய' தமிழ் அல்லது 'மா.லெ' தமிழ் சிறிது வித்தியாசமானது. 'மா.லெ' ஆங்கிலமும் அப்படித்தான். அந்தச் சொல்லாடல்களுடன் பரிச்சயமுடையவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இன்னாரைத் திட்டுகிறார்கள் என்ற அளவில் சிரமப்பட்டுப் படித்தால் புரிந்து கொள்ளலாம். பத்திரிகைகள் துவங்கப்படும், அப்புறம் வெளிவரா. பின்னர் அதே பத்திரிகை வேறொரு குழவின் பத்திரிகையாக வெளிவரும். ஆசிரியர்/வெளியீட்டாளர் குழு மாறியிருப்பார். இதைத் தெரிந்து கொள்ளாமல் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். அமீபாக்களே வெட்கப்படும் விதத்தில் இங்கு பிளவும், குழுக்கள் உதயமாவதும் நடப்பதால் இதெல்லாம் எளிதில் பிடிபடாது.

முன்பு கேடயம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அதைக் வெளியிட்டது ஒரு மா.லெ அமைப்பு/குழு.அது மன ஒசை என்ற பத்திரிகையையும் வெளியிட்டது. கேடயம், புதிய ஜனநாயகம்இரண்டும் ஒரே மாதிரி தாளில், கிட்டதட்ட ஒரே நடையில், ஒரே மாதிரியான வசவு வார்த்தைகளை, ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டு வெளியான போது, அட்டையைக் கிழித்து விட்டால் எதுகேடயம் எது பு.ஜ என்று தெரியாது என்று கிண்டலாகச் சொல்வதுண்டு. கேடயம் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), தமிழ்நாடு அமைப்புக் குழு சார்பில் வந்தது என்று நினைக்கிறேன். இருப்பினும் இரண்டையும் வேறுபடுத்த ஒரு எளிய வழி இருந்தது. எந்த மாலெ அமைப்பினை திட்டுகிறார்கள் என்பதை வைத்து, இரண்டிலும் கிட்டதட்ட ஒவ்வொரு இதழிலும் இன்னொரு தரப்பினை விமர்சித்து ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்பதால், யாரைத் திட்டுகிறார்கள் என்பதை இது கேடயமா இல்லை பு.ஜாவா என்று கண்டு பிடிக்கலாம். இதில் வேடிக்கை என்றால் ஒன்று லெனின் இந்த நூலில் இந்தப் பக்கம் இந்த பாரா என்று மேற்கோள் காட்டினால்,இன்னொன்று லெனினின் இந்த நூல் இந்தப் பக்கம் இந்தப் பாரா என்று இன்னொன்றைக் காட்டிஅதை மறுக்கும். இப்படி எழுதுவது மிகவும் கடினமல்ல. லெனினின் நூல்களிலிருந்து பாராளுமன்ற அரசியலுக்கு ஆதரவாகவும் மேற்கோள் தரலாம், எதிராகவும் தரலாம். இது போல் வார்த்தை விளையாட்டுகளில் இடதுசாரிகள் கை தேர்ந்தவர்கள். முப்பது வார்த்தைகளைத் தெரிந்து கொண்டுயாரை வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதை விமர்சிக்க பாராளுமனறம் பன்றித் தொழுவம் என்ற ஒரு கோஷம் போதும். அப்போது எப்போது யாரால்எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டது, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். பாராளுமன்ற தேர்தலில் நிற்பவர்கள் லெனின் பயன்படுத்திய சில வார்த்தைகளை (left adventurism, Left infantilism) வைத்து பதிலுக்கு விளையாடலாம். இந்த இடதுசாரி சொல்லாடல் விளையாட்டுகளுக்கு அப்பால் கவனிக்க வேண்டிய ஒன்று, ம.க.இ.க விற்கும், இ.க.க(மா) (i.e. சி.பி.எம் ) விற்கும் உள்ள ஒற்றுமைகள்/பொதுவான அம்சங்கள்.

இருவரும் ஸ்டாலியினத்தினை இன்றும் ஏற்பவர்கள், இருவரும் பாட்டளி வரக்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டினை நம்புபவர்கள்.இருவரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், தண்டனைகள் தரப்படுவதை, கொலைகளை நியாயப்படுத்துபவர்கள், அவ்வாறு செய்வது எக்காலத்திலும் சரி என்பவர்கள். மேலும் விமர்சனம்எங்கிருந்து வந்தாலும் அதை முத்திரை குத்தி நிராகரிக்க துணிபவர்கள். தமிழ்ச் சூழலில் ஸ்டாலினியத்தினை விமர்சிக்கும், விமர்சித்த எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன்போன்றவர்கள் இருவர் கண்ணோட்டத்தின் படி மார்க்ஸியர்களே அல்ல. இப்படி பல ஒற்றுமைகள்இருக்கின்றன. இரு தரப்புமே கொச்சையான,வறண்ட மார்க்ஸியத்தினை முன் வைக்கின்றன என்பதுமிகையாகாது. கருத்தியல் ரீதியாக பலவற்றில் இவர்கள் ஒத்த கருத்து உடையவர்கள். என்னைப் பொருத்த வரை இவர்கள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். அந்த 'மார்க்ஸிய' நாணயம் இன்று மதிப்பிழந்த நாணயம். ஒரு பழைய நாணயம் என்ற வகையிலும் மதிப்பினை பெற முடியாத நாணயம்.

எனவே இந்த 'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி' வார்த்தைப் போர்களினால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. இடதுசாரி வசைச் சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இவை சுவாரஸ்யமாக இருக்கலாம்.

Labels: ,