காதல்-காதலர் தினம்- சாதி

காதல்-காதலர் தினம்- சாதி

தீம்தரிகிடவில் ஞாநி எழுதியிருப்பதை என்னால் ஏற்க இயலவில்லை.காதல் திருமணங்கள் சாதிய அமைப்பில் சிறி விரிசலைத்தான் ஏற்படுத்த முடியும். காதல் திருமணங்கள். சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு பரந்துபட்ட இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக அல்லது அதன் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால்தான் அவற்றால் ஒரு பரந்து பட்ட தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். அத்தாக்கம் சாதி அமைப்பினை சிறிதாவது அசைத்துப் பார்க்க, உடைக்க உதவும். மற்றப்படி சாதி மறுப்பு பிரக்ஞை இன்றி பிறக்கும்காதல் சாதி அமைப்பிற்கு ஒரு சிறிய எதிர்ப்பாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்க்கான எதிர்ப்பாகவே இருக்கும்.காதலர்கள் சாதி என்பது காதலுக்கும்,திருமணத்திற்கும் இடையூறாக இருப்பதால்தான் அதை எதிர்க்கிறார்கள்.

சாதி என்பது இடஒதுக்கீடு இருக்கும் வரை தொடரும். இன்று சாதி நவீனமயமாகிவிட்டது. இன்று சாதியைகாப்பதில் முக்கிய பங்கினை ஒட்டு வங்கி அரசியல், சாதிக்கட்சிகள், சாதி சங்கங்கள், இட ஒதுக்கீடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்று அம்பேத்கர், பெரியார் சொன்னதைஇன்று அப்படியே பொருந்தும் என்று கூறிவிட்டு பிற காரணிகள் குறித்து பேசாமல், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தருவது எனக்கு ஏற்புடையதல்ல. ஞாநி இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கிறார்,பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இதில் விலக்கு வேண்டும் என்பதை எதிர்க்கிறார். பெண்களுக்குஇட ஒதுக்கீடு,

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு என்பதையும் அவர்ஆதரித்து எழுதியதில்லை (நானறிந்த வரையில்). சாதி அடிப்படையில் வேலை, கல்வி என்பதைமுழுமையாக ஆதரித்துக் கொண்டு சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நகைமுரண். வெறும் கூலி உயர்விற்கும், சலுகைகளுக்கும் போராடும் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ அமைப்பினை தகர்த்தெறிந்து பாட்டாளி வரக்க அரசினை நிறுவும் என்று எதிர்பார்ப்பது வீண் கற்பனையோஅது போல்தான் ஞாநியின் கருத்தும்.

ஒரு பிராமணப் பெண் தலித் ஆணை திருமணம் செய்துகொண்டால் அவர் சட்டப்படி தலித் ஆவதில்லை, அவர்ர் இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறமுடியாது.சட்டம் மதமாற்றத்தினை ஏற்றுக் கொள்கிறது, சாதி மாற்றம் சாத்தியமில்லை, சட்டரீதியாக. சாதியை சட்டபூர்வமாக ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி அடிப்படையிலானஇட ஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டும். இதை ஞாநியும், ராமதாசும் கோர மாட்டார்கள்.

காதல் திருமணங்கள் ஜாதியை ஒழித்துவிடும் என்பது கற்பனாவாதம். மேற்கில் கூட இன பாகுபாடு இன்னும் இருக்கிறது. அங்கு ஜாதி இல்லை, காதல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.பின் ஏன் இன பாகுபாடு இருக்கிறது. இந்தியாவில் கூட இந்து மதம் தவிர்த்து பிற மதங்களைபின்பற்றுபவர்களிடம் சாதிப் பிரிவினைகள் அல்லது அதையொத்த பிரிவினைகள் இல்லையா?இருக்கின்றனவே. சாதித் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த தலைமுறையில் மணமகன்/ள்தேடிக் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே நமக்குத் தெரிகிறது கலப்புத் திருமணம் சாதியை ஒழித்து விடவில்லை என்று.

பலர் தங்கள் பெற்றோருடன் சமரசம் செய்து கொள்கிறார்கள், பெற்றோரும் பிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பிரச்சினைகள் இருந்தாலும் இவை காரணமாக சாதி அமைப்பில் ஏற்படும் சிறு விரிசல்கள் கூட 'சரி'யாகிவிடுகின்றன. உறவுகள்தொடர்கின்றன. இதுதானே பெரும்பாலும் நடமுறையாக இருக்கிறது. காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் யாரேனும் ஒருவர் மதம் மாறுவதும், அதையொட்டி பெயரை மாற்றிக் கொள்வதும்நடைமுறையில் உள்ளதே. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனை பேர் மதத்தினையும், சாதியையும் துறந்திருக்கிறார்கள்.

காதலர் தினத்தினை கொண்டாடுவதை ராமதாஸ் எதிர்க்கிறார். இதை நான் ஆதரிக்கவில்லை.காதலர் தினத்தினை கொண்டாடுவதை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.நானும் அதை கொண்டாடுபவன் தான். இது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் சரியல்ல என்பது நகைப்பிற்குரியது. அப்படி சொல்பவர்கள் மேற்கத்திய மருத்துவம், மேற்கத்திய உடைபோன்றவற்றை நிராகரிப்பார்களா. இன்றைய் உலகில் அனைத்தும் வணிக மயமாகிவிட்டன.இதை காரணம் காட்டி காதலர் தினத்தினை கொண்டாடுவதை நிராகரிக்க முடியாது.

அகமண முறை மட்டும் சாதியை காப்பாற்றிவிடாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு காரணிகளும்இருந்திருப்பதால்தான் சாதிய அமைப்பு இன்று வரை நீடிக்கிறது. அதில் நெகிழ்வு தன்மையே இல்லை என்று கூற முடியாது. அதை ஒரு பின் தங்கிய, நவீனகாலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகசித்தரிப்பதும், அதை தேங்கிய அமைப்பாக சித்தரிப்பதும் இன்று பொருத்தமாயிராது. சாதி குறித்து பெரியார், அம்பேத்கார் கூறியதுடன் இன்றைய சமூகவியல் ஆய்வுகள் கூறுவதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டிம் மூலம் சாதிப் பிரிவினையை, அமைப்பினை கடந்து செல்ல முடியாது. மாறாக இட ஒதுக்கீடினை (சாதிய அடிப்படையிலான) ஒழிப்பது சாதி அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தவும், சாதியின் முக்கியத்துவத்தினை குறைக்கவும் உதவும். இதை ஞாநியும்,ராமதாசும், வேறு பலரும் ஏற்க மாட்டார்கள். சாதி அரசியல் மோசமானது என்றால், வெறும் சாதிய அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடும் அதைப் போன்ற ஒரு மோசமான அரசியல்தான்.

எப்போது சாதி என்பதன் பெயரில் சலுகைகள் இல்லையோ, சாதி என்பதால் யாருக்கும் பயன் இல்லை என்ற நிலை ஏற்படுகிறதோ அப்போது சாதிய அமைப்பு தேவையற்றுப் போக வாய்ப்புள்ளது.

ஆனால் நாம் ஒரு புறம் சாதியைத் திட்டிக் கொண்டே இன்னொருபுறம் அதை நவீனமயமாக்கிவிட்டோம். பெரியாருக்கும் இதில் பங்குண்டு. பார்ப்பனல்லாதோர் என்ற பரந்தபெயரில் திரட்டும் போதே சாதிய அடிப்படையில் அதில் உள்ள சாதிகள் தங்கள் அடையாளத்தினைஇன்னும் வலுப்படுத்துவதற்க்கான காரணங்களும் தோன்றிவிட்டன. எனவே பெரியாரின் இலட்சியம்சாதி ஒழிப்பு என்று சொல்லப்பட்டாலும் அவர் செய்த செயல்கள் சாதிய அமைப்பு வேறு விதத்தில்வலுப் பெற உதவியுள்ளன. இந்த கசப்பான உண்மையை ஞாநிக்கள் ஏற்க மாட்டார்கள்.

Labels: , ,

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Excellent post. Exposes the contradictions of the pro-reservation crowd very well!

3:58 PM  

Post a Comment

<< முகப்பு