தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்

தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்

(தமிழ் தேசியம் குறித்த தன் கருத்துக்களை அவர் குமுதம் 14.2.2007 இதழில் தெரிவித்துள்ளார். அதை இங்கே கீழே தந்துள்ளேன். தமிழ் தேசியம் குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதும் எண்ணம்இருக்கிறது. அப்போது இதிலிருந்தும் மேற்கோள் தர வேண்டியிருக்கும் என்பதாலும் அவர் கருத்துக்கள் இவ்வலைப்பதிவில் தரப்படுகின்றன.)
----------------------------------------------------------------------------------------

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குத் தரச் சொல்லி உத்தரவாகியுள்ளது. மகிழ்ச்சி! அதே நேரம் ஒரு கவலையும் மனதில் எட்டிப் பார்க்கிறது. அது, கர்நாடக அரசும், கன்னட வெறியர்களும் அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பார்களா என்பதுதான்!
தமிழகத்தின் மீது கன்னடர்களுக்கு அப்படி என்னதான் வெறுப்பு? தமிழர்கள் தங்கள் நீர் உரிமையை கர்நாடகாவிடமிருந்து பெற முடியாமல் போனதற்குக் காரணமென்ன? நீர் உரிமை, நில உரிமை, பண்பாட்டு உரிமை, மொழி உரிமை என்று பல்வேறு உரிமைகளை இழந்து தமிழன் தன் தனி அடையாளம் தொலைத்து நிற்பதற்கான பின்னணிகள் என்ன?
அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், கடந்த காலத் தமிழகத் தலைவர்கள் கைகொண்ட அரசியலை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
மொழிவாரி மாநிலங்கள் தோன்றி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதையட்டி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பொன்விழா நிகழ்வுகள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று தமிழகப் பொன்விழாவை தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றன. அதில் முழுமையான மகிழ்ச்சி இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம், நமது எல்லைகளை முழுமையாக நாம் வகுத்துக்கொள்ளவில்லை. தமிழர்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பல்வேறு தமிழ்ப் பகுதிகளை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிடம் பறிகொடுத்திருப்பதுதான் நமது பரிதாபமான வேதனை. அன்றைய அரசியல் கட்சிகள் தமிழ்மக்களின் எல்லைப் பகுதிகளை மீட்டெடுக்க போதிய அக்கறை செலுத்தவில்லை என்றே கூற வேண்டும்.
என்றாலும், தளபதி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக கன்னியாகுமரியையும், ம.பொ.சி. போராட்டத்தின் விளைவாக திருத்தணியையும் மீட்டெடுக்க முடிந்தது. சென்னையும் அத்தகைய போராட்டத்தின் விளைவாகத்தான் மீட்கப்பட்டது. இப்படி ஒரு சில பகுதிகளைப் போராடி மீட்டாலும் _ தமிழன் இழந்தவை ஏராளமான பகுதிகள்!
கேரளாவிடம் மூணாறு, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளும் கர்நாடகாவிடம் கோலார், பெங்களூர் போன்ற பகுதிகளையும் ஆந்திராவிடம் சித்தூர் மாவட்டம், திருப்பதி, நெல்லூர் பகுதிகளும் _ தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள். அவற்றை நாம் இழந்தோமே...
ஆக, தமிழன் தன் நிலத்தை மட்டுமல்ல, மொழியை, பண்பாட்டை இழந்து நிற்கிறான். வேற்றுமொழிகளின் ஊடுறுவலைத் தமிழில் அனுமதித்தான். பிற மேலாதிக்கப் பண்பாடுகளுக்கு, ஆக்கிரமிப்புகளுக்குத் தமிழன் தன் பண்பாட்டைப் பலிகொடுத்தான்.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம், தமிழன் நெஞ்சில் ஊறிக் கிடக்கிற நாடி, நரம்புகளில் ஊடுருவிக் கிடக்கிற தாழ்வு மனப்பான்மைதான். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம், கடந்த கால தமிழகத் தலைவர்கள் மேற்கொண்ட திராவிட அரசியல்தான்.
மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டபோது, கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரும் சென்னை மாகாணத்தோடு இணைந்து வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தாலும், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தென்னக மொழிகள் பேசக்கூடிய மக்கள் அனைவரையும் திராவிடர்கள் என்கிற பெயரில் அணிதிரட்ட வேண்டிய கட்டாயம். ஆகவேதான், திராவிடம், திராவிட தேசியம், திராவிட மொழிகள் என்கிற கருத்தியலை முன்வைத்து அன்றைக்குப் பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் களப்பணியாற்றினார்கள்.
அந்த நிலைப்பாடுதான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்குக் காரணம்.
இதனால்தான் தமிழ்த் தேசியம், மற்றும் ஜாதி ஒழிப்பு என்கிற இரட்டைக் கொள்கைகளை இணையான கொள்கைகளாக, நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். என்றாலும் அவர்களை அங்கீகரிப்பதில் இருக்கிற சிக்கல் ஒட்டு மொத்த தமிழ்த் தேசத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ் இனத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திண்ணியம் என்கிற இடத்திலே, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்து கொடுமைப்படுத்திய கேவலம்_தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடத்திலே கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும் கூட ஜாதிபார்த்துதான் அரசியல் செய்கிறார்கள்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘சாதி ஒழித்தல், தமிழ் வளர்த்தல் ஆகிய இரண்டும் சமகாலத்தில் செய்யப்பட வேண்டும்’ என்றார். அப்போதுதான் தமிழனும் தமிழ்நாடும் உருப்பட முடியும் என்றார். ஆனால், இங்கே மொழி வாழவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜாதியும் வாழ வேண்டும் என்று விரும்புவதுதான் சாபக்கேடு.
நமது ஒற்றுமையின்மையால் நிலம், மொழி, பண்பாடு தவிர, இன்று ஆற்றுநீர் உரிமைகளையும் நாம் இழந்து நிற்கிறோம். காவிரி நீர்_தமிழர்களுக்கு இல்லை என்கிற அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, கன்னட வெறியர்கள், ‘கர்நாடகாவுக்கு எதிராகத் தீர்ப்பு வருமேயானால் கலவரம் செய்வோம்’ என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார்கள்.
இப்பொழுது இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வலிமை மத்திய அரசுக்கு உள்ளதா என்கிற ஐயம் தமிழர்களுக்கு எழுந்துள்ளது.
கன்னடர்களுக்குத் தமிழர்கள் மீது ஏன் இப்படியரு வெறுப்பு? அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழை, தமிழ் இனத்தை தம் தோழமை மொழியாகவோ, தோழமை இனமாகவோ கருதவில்லை. இதற்கு என்ன அடிப்படைக் காரணம்? அவர்கள் திராவிட தேசியம் என்ற அரசியலை ஒருபோதும் உள் வாங்கியதில்லை. கன்னடர்கள் என்றல்ல, மலையாள மக்களும், தெலுங்கு பேசும் மக்களும் கூட இந்தத் திராவிட அரசியலை உள்வாங்கியதில்லை. ஏற்றுக் கொண்டதில்லை.
ஆக, கர்நாடக மக்களால் இந்திய அரசை தம் வழிக்குக் கொண்டுவர முடிவதற்கும், தமிழகத்தை அச்சுறுத்த முடிவதற்கும், திராவிட தேசிய அரசியலை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதுதான் தெளிவான முடிவு.
தெலுங்கர்களை கன்னடர்களை மலையாளிகளை நாம் திராவிட இனச் சகோதரர்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தோம். இங்கிருந்த திராவிட தேசிய அரசியலும், அந்தத் தோழமை உணர்வை பெருந்தன்மையை தமிழர்களின் இதயங்களில் விதைத்தது.
நமக்கு திராவிடச் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்கும் காரணத்தால், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பிற தேசிய இனங்களை எதிர்த்து, நம்மால் தீவிரமாகப் போராடி வெற்றிகாண இயலவில்லை. ஆக, காவிரி நீரை மட்டுமல்ல_இன்று பாலாற்றின் குறுக்கே ஆந்திரர்கள் அணைகட்டப் போகிறார்கள். தமிழர்களை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாகக் கருதியிருந்தால், கர்நாடகம் காவிரி பிரச்னையிலும், ஆந்திரம் பாலாற்றுப் பிரச்னையிலும், கேரளம் முல்லைப் பெரியாறு விஷயத்திலும் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள்? அந்தந்த மாநில அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், செயல்படவும் முடிகின்றதென்றால் அதற்குக் காரணம், அவர்கள் திராவிட அரசியலை ஏற்காததுதான்.
அவர்கள் தங்கள் மொழி, தங்கள் தேசம், தங்கள் மக்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் நடத்துவதால்தான் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கத் தயங்குவதேயில்லை. ஆக தமிழன் இழந்துவிட்ட அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டுமானால், தமிழ்த் தேசிய அரசியலை ஏற்றுக்கொள்வது மட்டுமே ஒரே வழி.
தமிழ்நாட்டில் தமிழர்களே நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியுமென்ற நிலையை உருவாக்குவோம். இன்று தமிழரல்லாதவர்களின் ஆக்கிரமிப்பில் பாதிக்கு மேற்பட்ட தமிழகம் சிக்கியிருப்பதை நாம் மறப்பதற்கில்லை. அதுபோல், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் சுரண்டலுக்கும் தமிழகம் இன்று மடிவிரித்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.
இந்த நிலையிலிருந்து தமிழனைப் பாதுகாத்திட, தமிழ் மண்ணைப் பாதுகாத்திட, தமிழ் மொழியைப் பாதுகாத்திட வேண்டும் என்ற குறிக்கோளில்தான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கிப் போராடினோம்.
ஆனால், இன்றுகாலம் கனிந்திருக்கிறது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தனது கோரிக்கைகளைப் போராடித்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலை இன்றில்லை. தமிழக முதல்வர் கலைஞர் பல்வேறு கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
ஆகவே, நம்பிக்கை இருக்கிறது நண்பர்களே! நாளை நமதே!’’

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு