காதல்-காதலர் தினம்- சாதி

காதல்-காதலர் தினம்- சாதி

தீம்தரிகிடவில் ஞாநி எழுதியிருப்பதை என்னால் ஏற்க இயலவில்லை.காதல் திருமணங்கள் சாதிய அமைப்பில் சிறி விரிசலைத்தான் ஏற்படுத்த முடியும். காதல் திருமணங்கள். சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு பரந்துபட்ட இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக அல்லது அதன் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால்தான் அவற்றால் ஒரு பரந்து பட்ட தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். அத்தாக்கம் சாதி அமைப்பினை சிறிதாவது அசைத்துப் பார்க்க, உடைக்க உதவும். மற்றப்படி சாதி மறுப்பு பிரக்ஞை இன்றி பிறக்கும்காதல் சாதி அமைப்பிற்கு ஒரு சிறிய எதிர்ப்பாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்க்கான எதிர்ப்பாகவே இருக்கும்.காதலர்கள் சாதி என்பது காதலுக்கும்,திருமணத்திற்கும் இடையூறாக இருப்பதால்தான் அதை எதிர்க்கிறார்கள்.

சாதி என்பது இடஒதுக்கீடு இருக்கும் வரை தொடரும். இன்று சாதி நவீனமயமாகிவிட்டது. இன்று சாதியைகாப்பதில் முக்கிய பங்கினை ஒட்டு வங்கி அரசியல், சாதிக்கட்சிகள், சாதி சங்கங்கள், இட ஒதுக்கீடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்று அம்பேத்கர், பெரியார் சொன்னதைஇன்று அப்படியே பொருந்தும் என்று கூறிவிட்டு பிற காரணிகள் குறித்து பேசாமல், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தருவது எனக்கு ஏற்புடையதல்ல. ஞாநி இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கிறார்,பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இதில் விலக்கு வேண்டும் என்பதை எதிர்க்கிறார். பெண்களுக்குஇட ஒதுக்கீடு,

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு என்பதையும் அவர்ஆதரித்து எழுதியதில்லை (நானறிந்த வரையில்). சாதி அடிப்படையில் வேலை, கல்வி என்பதைமுழுமையாக ஆதரித்துக் கொண்டு சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நகைமுரண். வெறும் கூலி உயர்விற்கும், சலுகைகளுக்கும் போராடும் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ அமைப்பினை தகர்த்தெறிந்து பாட்டாளி வரக்க அரசினை நிறுவும் என்று எதிர்பார்ப்பது வீண் கற்பனையோஅது போல்தான் ஞாநியின் கருத்தும்.

ஒரு பிராமணப் பெண் தலித் ஆணை திருமணம் செய்துகொண்டால் அவர் சட்டப்படி தலித் ஆவதில்லை, அவர்ர் இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறமுடியாது.சட்டம் மதமாற்றத்தினை ஏற்றுக் கொள்கிறது, சாதி மாற்றம் சாத்தியமில்லை, சட்டரீதியாக. சாதியை சட்டபூர்வமாக ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி அடிப்படையிலானஇட ஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டும். இதை ஞாநியும், ராமதாசும் கோர மாட்டார்கள்.

காதல் திருமணங்கள் ஜாதியை ஒழித்துவிடும் என்பது கற்பனாவாதம். மேற்கில் கூட இன பாகுபாடு இன்னும் இருக்கிறது. அங்கு ஜாதி இல்லை, காதல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.பின் ஏன் இன பாகுபாடு இருக்கிறது. இந்தியாவில் கூட இந்து மதம் தவிர்த்து பிற மதங்களைபின்பற்றுபவர்களிடம் சாதிப் பிரிவினைகள் அல்லது அதையொத்த பிரிவினைகள் இல்லையா?இருக்கின்றனவே. சாதித் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த தலைமுறையில் மணமகன்/ள்தேடிக் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே நமக்குத் தெரிகிறது கலப்புத் திருமணம் சாதியை ஒழித்து விடவில்லை என்று.

பலர் தங்கள் பெற்றோருடன் சமரசம் செய்து கொள்கிறார்கள், பெற்றோரும் பிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பிரச்சினைகள் இருந்தாலும் இவை காரணமாக சாதி அமைப்பில் ஏற்படும் சிறு விரிசல்கள் கூட 'சரி'யாகிவிடுகின்றன. உறவுகள்தொடர்கின்றன. இதுதானே பெரும்பாலும் நடமுறையாக இருக்கிறது. காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் யாரேனும் ஒருவர் மதம் மாறுவதும், அதையொட்டி பெயரை மாற்றிக் கொள்வதும்நடைமுறையில் உள்ளதே. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனை பேர் மதத்தினையும், சாதியையும் துறந்திருக்கிறார்கள்.

காதலர் தினத்தினை கொண்டாடுவதை ராமதாஸ் எதிர்க்கிறார். இதை நான் ஆதரிக்கவில்லை.காதலர் தினத்தினை கொண்டாடுவதை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.நானும் அதை கொண்டாடுபவன் தான். இது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் சரியல்ல என்பது நகைப்பிற்குரியது. அப்படி சொல்பவர்கள் மேற்கத்திய மருத்துவம், மேற்கத்திய உடைபோன்றவற்றை நிராகரிப்பார்களா. இன்றைய் உலகில் அனைத்தும் வணிக மயமாகிவிட்டன.இதை காரணம் காட்டி காதலர் தினத்தினை கொண்டாடுவதை நிராகரிக்க முடியாது.

அகமண முறை மட்டும் சாதியை காப்பாற்றிவிடாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு காரணிகளும்இருந்திருப்பதால்தான் சாதிய அமைப்பு இன்று வரை நீடிக்கிறது. அதில் நெகிழ்வு தன்மையே இல்லை என்று கூற முடியாது. அதை ஒரு பின் தங்கிய, நவீனகாலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகசித்தரிப்பதும், அதை தேங்கிய அமைப்பாக சித்தரிப்பதும் இன்று பொருத்தமாயிராது. சாதி குறித்து பெரியார், அம்பேத்கார் கூறியதுடன் இன்றைய சமூகவியல் ஆய்வுகள் கூறுவதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டிம் மூலம் சாதிப் பிரிவினையை, அமைப்பினை கடந்து செல்ல முடியாது. மாறாக இட ஒதுக்கீடினை (சாதிய அடிப்படையிலான) ஒழிப்பது சாதி அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தவும், சாதியின் முக்கியத்துவத்தினை குறைக்கவும் உதவும். இதை ஞாநியும்,ராமதாசும், வேறு பலரும் ஏற்க மாட்டார்கள். சாதி அரசியல் மோசமானது என்றால், வெறும் சாதிய அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடும் அதைப் போன்ற ஒரு மோசமான அரசியல்தான்.

எப்போது சாதி என்பதன் பெயரில் சலுகைகள் இல்லையோ, சாதி என்பதால் யாருக்கும் பயன் இல்லை என்ற நிலை ஏற்படுகிறதோ அப்போது சாதிய அமைப்பு தேவையற்றுப் போக வாய்ப்புள்ளது.

ஆனால் நாம் ஒரு புறம் சாதியைத் திட்டிக் கொண்டே இன்னொருபுறம் அதை நவீனமயமாக்கிவிட்டோம். பெரியாருக்கும் இதில் பங்குண்டு. பார்ப்பனல்லாதோர் என்ற பரந்தபெயரில் திரட்டும் போதே சாதிய அடிப்படையில் அதில் உள்ள சாதிகள் தங்கள் அடையாளத்தினைஇன்னும் வலுப்படுத்துவதற்க்கான காரணங்களும் தோன்றிவிட்டன. எனவே பெரியாரின் இலட்சியம்சாதி ஒழிப்பு என்று சொல்லப்பட்டாலும் அவர் செய்த செயல்கள் சாதிய அமைப்பு வேறு விதத்தில்வலுப் பெற உதவியுள்ளன. இந்த கசப்பான உண்மையை ஞாநிக்கள் ஏற்க மாட்டார்கள்.

Labels: , ,

இரண்டு தீர்ப்புகள்

இரண்டு தீர்ப்புகள்

மூன்று மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் மூவருக்கு மரண தண்டனை, சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 99 வார்டுகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்,மாநில தேர்தல் ஆணையர் மீது கண்டனம் - இந்த தீர்ப்புகள் நீதி என்பது இன்னும்இருக்கிறது என்பதற்கு அறிகுறிகள். அரிதினும் அரிதாக வழங்கப்பட வேண்டிய மரணதண்டனையை வழங்கியதற்கான காரணத்தினையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, பொது மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும்தீங்கு விளைவிப்பது, எதிர்ப்பினைத் தெரிவிப்பது என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது-இவை யாரால் செய்யப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டியகுற்றங்கள். இத்தீர்ப்பின் மூலம் இத்தகைய செயல்களை செய்வோர் மனதில் சிறிதேனும்அச்சம் தோன்றினால் கூட அது நல்லதுதான். இத்தகைய செயல்களை கண்டிக்காத,கண்டு கொள்ளாதாக அரசியல் கட்சிகளுக்கும் பயம் ஏற்படுமானால் அது மிக நல்லது.இந்த வழக்கில் முந்தைய அரசு செய்த முயற்சிகள், செய்யத் தவறியவற்றையும் மீறிநீதி கிடைத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமான, கொல்லப்பட்ட கோகிலவாணியின்தந்தை வீராசாமி பாரட்டப்பட வேண்டியவர். இந்தக் கொலைகள் ஏதோ உணர்ச்சி வேகத்தில்செய்யப்பட்டவை அல்லது இதற்கு இத்தகைய தண்டனை தேவையில்லை என்றோ சிலர்வாதிடக் கூடும். உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்டவை என்ற வாதம் பொருந்தாது. உணர்ச்சிவேகத்தில் ஏதோ துப்பாக்கியின் விசையை அழுத்தியது போலவோ அல்லது தன்னைக் காத்துக்கொள்ள செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அவர்கள் மூவரும் பேருந்தில் இருக்கிறார்கள் என்றுபிறர் சொல்லியும், பின்னர் கூட தயங்காமல் செய்யப்பட்ட கொலைகள் இவை. இந்த தண்டனைதேவையில்லை என்பதும் பொருத்தமல்ல.இத்தகைய கொடூரச் செயல்களை செய்தவர்களுக்குஇதுதான் பொருத்தமான தண்டனை.எதிர்காலத்தில் இப்படி செய்தால் மரணதண்டனை உறுதிஎன்ற நினைப்பே இத்தகைய குற்றங்களை தடுக்க உதவலாம்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் குறித்த வழக்கில் ஒரு நீதிபதியின் தீர்ப்பினை உறுதிபடுத்தும்வகையில் வெளியாகியுள்ள தீர்ப்பு , ஆட்சி தங்கள் வசம் இருக்கிறது என்பதற்காக வன்முறையைஅவிழ்த்து விட்டு, வெற்றி காணத்துடித்தவர்களுக்கு தக்க பாடமாக அமையட்டும். மாநில தேர்தல்ஆணையர் இனியும் அப்பதவில் இருப்பது சரியல்ல. அவர் பதவி விலகுவதே முறையாகும். மாநிலஅரசு அவரை பதவி விலக்க கோராது. எதிர்காலத்தில் மாநில தேர்தல் ஆணையர்கள்எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பார்.

உள்ளாட்சி, நகர்மன்ற,மாநகராட்சி தேர்தல்களை நடத்தும் முறை குறித்து ஒரு மறுபரீசலனை தேவை. இவற்றிற்கும் மேற்பார்வையாளர்கள், பாதுகாப்பிற்கு துணை ராணுவம், தேர்தல் ஆணையம் சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தலின் போது அமுல் செய்யும் கடுமையான விதிகள் போன்றவை தேவை என்று கருதும் நிலை இன்று உள்ளது. இந்த இரண்டு தீர்ப்புகளிலிருந்தும் அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டியவை பல. அவை அவற்றை கற்றுக் கொண்டனவா என்பதை எதிர்காலம் காட்டும்.

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், குறிப்பாக அப்சலுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கூட்டங்கள் நடத்தியவர்கள், பேசியவர்கள், எழுதியவர்கள் இந்த மூவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா. இல்லை பெயரளவிற்கு தூக்குதண்டனை விதித்தத்ற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிவிடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Labels: , ,

யூத இனப்படுகொலை மறுப்பும்

யூத இனப்படுகொலை மறுப்பும்

யூத இனப்படுகொலையை மறுப்பவர்கள் அதை எந்த நோக்கத்திற்க்காக செய்தாலும் அது ஏற்புடையதல்ல.பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றால் இஸ்ரேல்அழிய வேண்டும் அல்லது அழிக்கப் பட வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அத்தகைய பொறுப்பற்றகருத்துக்கள்,பேச்சுகளை நான் எதிர்க்கிறேன். ஈரானில் நடந்த, யூத இனப்படுகொலை குறித்த மாநாட்டின் நோக்கம் அந்த இனப்படுகொலையை மறுப்பதும், அதன் மூலம் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதும். இனப்படுகொலை மறுப்பு புதிதல்ல. ஒரு அநீதிக்கு மாற்றாக இன்னொரு அநீதியை தீர்வாக்க முடியாது. யூத இனப்படுகொலை மறுப்பு என்பது வரலாற்றை மறைப்பதாகும், மறுப்பதாகும். வரலாற்றை மறைக்கும், திரிக்கும் செயலை யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு, இந்த்துவ எதிர்ப்பு, இஸ்ரேல் எதிர்ப்பு என்ற பெயரில் ஈரான் நடத்திய மாநாட்டினையையும், இனப்படுகொலை குறித்து ஈரான் குடியரசுத் தலைவர் கூறியிருப்பதையும் சிலர் கண்டிக்காமல் இருக்கலாம். என்னைப் பொருத்தவரை அது சரியல்ல. அவ்வாறு கண்டிக்க மறுப்பது இட்லருக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகும். அதை நான் செய்ய மாட்டேன். நான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளன் கிடையாது, இந்த்துவத்தின் ஆதரவாளனும் அல்ல. ஆர்.எஸ்.எஸை விமர்சிப்பவர்கள் ஈரானை இந்த விவகாரத்தில் கண்டிக்க வேண்டும்.

இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், என்னைப் பொருத்தவரையூத இனப்படுகொலை உண்மை, இதை மறைக்க/மறுக்கக் கூடாது. இதை இல்லை என்பதும், மறுப்பதும் தவறு. ஈரானில் நடைபெற்ற மாநாடு, ஈரானின் குடியரசுத்தலைவர் கூறியிருக்கும்கருத்துக்களை நான் நிராகரிக்கிறேன். அவரது நிலைப்பாட்டினை கண்டிக்கிறேன்.

இந்த வலைப்பதிவில் நான் பின்னூட்டம் இட விரும்பவில்லை.பொய்க்கும் ஒர் அளவுண்டு. இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் சிலவற்றை தெரிவித்திருக்கிறேன். பிரட் காலிடேயின் இந்தக் கட்டுரையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அவர் எழுதுகிறார்:

"These three broad, even universal, lessons carry a particular charge when seen in the light of contemporary debates and events, particularly in the middle east. Two currents are immediately apparent and inescapable:

the selective and instrumental usage of the shoah by the Israeli state - to justify some of its actions and violations of international law, and to convey some prior moral entitlement (over land or sovereignty) on part of the Jewish people and at the expense of the Palestinians (an early indication of this was the trial in Jerusalem in 1962 of Adolf Eichmann for crimes not against humanity, but against the Jewish people)

a grotesque inversion of the same false linkage, whereby those (most recently Iran's president, Mahmoud Ahmadinejad) opposed to Israeli policies or to the very existence of an Israeli state, extend their argument to deny the very fact of the Jewish genocide itself."

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆதரவு தரும் அ.மார்க்ஸிடமிருந்தோ அல்லது சுப.வீரபாண்டியனிடமிருந்தோ அல்லது 'இடதுசாரி', 'மதச்சார்பற்ற' ஏடுகளிடமிருந்தோ இத்தகைய கருத்தினை எதிர்பார்க்க முடியுமா?.

Labels: ,

ஐயன் காளி-உங்கள் கவனத்திற்கு

ஐயன் காளி-உங்கள் கவனத்திற்கு

ஐயன் காளி குறித்து இப்போது வலைப்பதிவுகளில் எழுதப்படுகிறது.ஐயன் காளியின் வாழ்க்கை, அவர் நடத்திய போராட்டங்கள் குறித்த சிறு நூலை இங்கு படிக்கலாம் அல்லது தரவிறக்கிக் கொள்ளலாம்.

இந்த

Labels:

ஒரு வலைப்பதிவின் மரணமும்,இன்னொன்றின்...?

ஒரு வலைப்பதிவின் மரணமும்,இன்னொன்றின்...?

சிந்தனை என்ற பெயரில் ஒரு வலைப்பதிவில் நான் பதிவுகளை இட்டு வந்தது வலைப்பதிவர்களில் சிலருக்கு அல்லது சிலருக்காவது நினைவிருக்கலாம். நான் படித்த புத்தகங்கள், கட்டுரைகள் குறித்த வலைப்பதிவு அது.பின்னர் மேய்ச்சல் என்ற பெயரில் கண்ணோட்டம் பதிவில் கட்டுரைகளுக்கு சுட்டிகளை கொடுத்து வந்தேன்.சிந்தனை வலைப்பதிவினை தூசி தட்டி, புதுப்பித்து புதிதாக இடுகைகள் இட நினைத்தேன். அப்போது அடப்பலகையை மாற்ற நினைத்து நான் செய்த சில சொதப்பல்களால் வலைப்பதிவே போய்விட்டது.தவறு என்னுடையது, பிளாக்கரைச்சொல்லிக் குற்றமில்லை. இப்போது முடியாவிட்டாலும் சில வாரங்கள் கழித்தாவது மீண்டும் சிந்தனைஎன்ற பெயரில் அல்லது வேறொரு பெயரில் நான் பரிந்துரைக்கும்/படிக்கும்/படித்த கட்டுரைகள், நூல்கள் குறித்த குறிப்புகள்,சுட்டிகளை தரும் வலைப்பதிவினை துவங்க இருக்கிறேன்.

Labels:

காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்

காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்

காவிரி நதி நீர்பங்கீடு குறித்த பிரச்சினையை இரு தேசிய இனங்களுக்கிடையே உள்ள பிரச்சினையாக அல்லது முரண்பாடாக சித்தரிப்பது சரியல்ல.திருமாவளவன் (குமுதத்திலும்),பூங்காவின் இந்தவாரத் தொகுப்பிலும் தேசிய இனக் கண்ணோட்டத்தில் இப்பிரச்சினைவிவாதிக்கப்பட்டுள்ளது.

இதை இந்தியக் குடியரசில் உள்ள இரு மாநிலங்களுக்கிடையேயானநதி நீர்பங்கீடு குறித்த ஒரு பிரச்சினையாகக் காண்பதே தீர்வினை அடையவும், குழப்பங்களை குறைக்கவும் உதவும். இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே நதி நீரினைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன.ஆந்திராவிற்கும், கர்நாடாகாவிற்கும் கிருஷ்ணா நதி நீரினைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை இருக்கிறது. பல ஆறுகள் இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களின்வழியே ஒடிச்சென்று கடலில் கடக்கின்றன. உதாரணம் நர்மதா.ஆனால் இத்தகைய பல ஆறுகளின் நதி நீர்களைப் பகிர்ந்து கொள்வது பிரச்சினையாக இல்லை.

இந்தியாவில் தேசிய இனம் என்ற கோட்பாட்டினை பயன்படுத்துவதில் பல குழப்பங்கள் உள்ளன. கர்நாடகாவில் கன்னடம் தவிர பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் உள்ளனர்,இந்தி பேசுவோர், தாய் மொழியாகக் கொண்டவர்கள் பல மாநிலங்களில் உள்ளனர்.இந்தி பெருவாரியாகப் பேசப்படும்/புழக்கத்தில் உள்ள மாநிலங்களில் மைதிலி, போஜ்புரி போன்றமொழிகளும் பேசப்படுகின்றன.வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோர் மேற்கு வங்கத்திலும் உள்ளனர், வங்க தேசத்திலும் உள்ளனர். தேசிய இனம் என்று சொல்லும் போதுஇனம் என்ற ஒன்று தேசியத்துடன் ஒட்டிக் கொள்கிறது. ஒரே தேசத்தில் ஒரே இனத்தினைச் சேர்ந்தவர்கள் மொழி,பண்பாட்டு ரீதியாக வேறுபட்டாலும் தேசியம் என்ற அடையாளத்தில்,குடியுரிமை என்பதைக் கொண்டு ஒரே மைய அரசின் கீழ் பல்வேறு மாநிலங்களில் ஒரு அரசியல்சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வாழ முடியும். இந்தியாவில் இதுதான் நிலவுகிறது.

இந்த நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும், பிரச்சினை சிக்கலாக இருந்தாலும்கூட. தேசிய இனம் என்ற கண்ணோட்டம் தீர்வு தராது, தேவையற்ற குழப்பத்தினையும், பரஸ்பரபகைமையை வளர்க்க உதவும். இந்தியாவில் வளங்கள் இந்திய குடியரசிற்கு , இயற்கை வளங்கள்மீதான நிரந்தர இறையாண்மை என்ற கோட்பாட்டின் கீழ், இந்தியக் குடியரசின் கட்டுப்பாட்டில்இருப்பவை. எந்த மாநிலத்தில் ஒரு நதி உற்பத்தியாகிறதோ அல்லது எவற்றின் வழியே அது பாய்கிறதோ அம்மாநிலங்களுக்கு அந்த நதி நீர் முற்றிலும் சொந்தம் என்று சட்டப்படி இல்லை.

தேசிய இனங்களின் உரிமை என்று மூலவளங்கள் மீதான இறையாண்மையைப் புரிந்து கொண்டால் அது சரியல்ல. ஏனெனில் இந்திய அரசியல் சட்டம் எங்கும் தமிழ் தேசிய இனம், கன்னட தேசியஇனம், தெலுங்கு தேசிய இனம், மராட்டி(ய) தேசிய இனம் என்று எதையும் அங்கீகரிக்கவில்லை. இப்போதிருக்கிற அரசியல் அமைப்புச் சட்டம், சட்ட விதிகள், தாவாக்களை தீர்வு காணும்முறைக்ளைக் கொண்டு பல நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன, பல பெரியநதி நீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இந்தியாவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று கருத முடியாது. இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் தேசியஇனங்கள் குறித்த கோட்பாட்டின் மூலம் இதை தீர்க்க முடியும் என்பது வீண் கனவு.

தமிழ்த் தேசியம், தமிழ் தேசிய இனம் என்று பேசுபவர்கள் பதற்றத்தினை அதிகரிக்காமல்இருந்தால் போதும்.தேசிய இனம் என்பதை இங்கு புகுத்தி குட்டையை குழப்பாமல் இருந்தால்போதும்.

தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்

தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்

(தமிழ் தேசியம் குறித்த தன் கருத்துக்களை அவர் குமுதம் 14.2.2007 இதழில் தெரிவித்துள்ளார். அதை இங்கே கீழே தந்துள்ளேன். தமிழ் தேசியம் குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதும் எண்ணம்இருக்கிறது. அப்போது இதிலிருந்தும் மேற்கோள் தர வேண்டியிருக்கும் என்பதாலும் அவர் கருத்துக்கள் இவ்வலைப்பதிவில் தரப்படுகின்றன.)
----------------------------------------------------------------------------------------

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குத் தரச் சொல்லி உத்தரவாகியுள்ளது. மகிழ்ச்சி! அதே நேரம் ஒரு கவலையும் மனதில் எட்டிப் பார்க்கிறது. அது, கர்நாடக அரசும், கன்னட வெறியர்களும் அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பார்களா என்பதுதான்!
தமிழகத்தின் மீது கன்னடர்களுக்கு அப்படி என்னதான் வெறுப்பு? தமிழர்கள் தங்கள் நீர் உரிமையை கர்நாடகாவிடமிருந்து பெற முடியாமல் போனதற்குக் காரணமென்ன? நீர் உரிமை, நில உரிமை, பண்பாட்டு உரிமை, மொழி உரிமை என்று பல்வேறு உரிமைகளை இழந்து தமிழன் தன் தனி அடையாளம் தொலைத்து நிற்பதற்கான பின்னணிகள் என்ன?
அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், கடந்த காலத் தமிழகத் தலைவர்கள் கைகொண்ட அரசியலை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
மொழிவாரி மாநிலங்கள் தோன்றி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதையட்டி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பொன்விழா நிகழ்வுகள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று தமிழகப் பொன்விழாவை தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றன. அதில் முழுமையான மகிழ்ச்சி இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம், நமது எல்லைகளை முழுமையாக நாம் வகுத்துக்கொள்ளவில்லை. தமிழர்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பல்வேறு தமிழ்ப் பகுதிகளை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிடம் பறிகொடுத்திருப்பதுதான் நமது பரிதாபமான வேதனை. அன்றைய அரசியல் கட்சிகள் தமிழ்மக்களின் எல்லைப் பகுதிகளை மீட்டெடுக்க போதிய அக்கறை செலுத்தவில்லை என்றே கூற வேண்டும்.
என்றாலும், தளபதி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக கன்னியாகுமரியையும், ம.பொ.சி. போராட்டத்தின் விளைவாக திருத்தணியையும் மீட்டெடுக்க முடிந்தது. சென்னையும் அத்தகைய போராட்டத்தின் விளைவாகத்தான் மீட்கப்பட்டது. இப்படி ஒரு சில பகுதிகளைப் போராடி மீட்டாலும் _ தமிழன் இழந்தவை ஏராளமான பகுதிகள்!
கேரளாவிடம் மூணாறு, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளும் கர்நாடகாவிடம் கோலார், பெங்களூர் போன்ற பகுதிகளையும் ஆந்திராவிடம் சித்தூர் மாவட்டம், திருப்பதி, நெல்லூர் பகுதிகளும் _ தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள். அவற்றை நாம் இழந்தோமே...
ஆக, தமிழன் தன் நிலத்தை மட்டுமல்ல, மொழியை, பண்பாட்டை இழந்து நிற்கிறான். வேற்றுமொழிகளின் ஊடுறுவலைத் தமிழில் அனுமதித்தான். பிற மேலாதிக்கப் பண்பாடுகளுக்கு, ஆக்கிரமிப்புகளுக்குத் தமிழன் தன் பண்பாட்டைப் பலிகொடுத்தான்.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம், தமிழன் நெஞ்சில் ஊறிக் கிடக்கிற நாடி, நரம்புகளில் ஊடுருவிக் கிடக்கிற தாழ்வு மனப்பான்மைதான். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம், கடந்த கால தமிழகத் தலைவர்கள் மேற்கொண்ட திராவிட அரசியல்தான்.
மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டபோது, கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரும் சென்னை மாகாணத்தோடு இணைந்து வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தாலும், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தென்னக மொழிகள் பேசக்கூடிய மக்கள் அனைவரையும் திராவிடர்கள் என்கிற பெயரில் அணிதிரட்ட வேண்டிய கட்டாயம். ஆகவேதான், திராவிடம், திராவிட தேசியம், திராவிட மொழிகள் என்கிற கருத்தியலை முன்வைத்து அன்றைக்குப் பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் களப்பணியாற்றினார்கள்.
அந்த நிலைப்பாடுதான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்குக் காரணம்.
இதனால்தான் தமிழ்த் தேசியம், மற்றும் ஜாதி ஒழிப்பு என்கிற இரட்டைக் கொள்கைகளை இணையான கொள்கைகளாக, நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். என்றாலும் அவர்களை அங்கீகரிப்பதில் இருக்கிற சிக்கல் ஒட்டு மொத்த தமிழ்த் தேசத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ் இனத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திண்ணியம் என்கிற இடத்திலே, தலித் இனத்தைச் சார்ந்த ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்து கொடுமைப்படுத்திய கேவலம்_தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடத்திலே கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும் கூட ஜாதிபார்த்துதான் அரசியல் செய்கிறார்கள்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘சாதி ஒழித்தல், தமிழ் வளர்த்தல் ஆகிய இரண்டும் சமகாலத்தில் செய்யப்பட வேண்டும்’ என்றார். அப்போதுதான் தமிழனும் தமிழ்நாடும் உருப்பட முடியும் என்றார். ஆனால், இங்கே மொழி வாழவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜாதியும் வாழ வேண்டும் என்று விரும்புவதுதான் சாபக்கேடு.
நமது ஒற்றுமையின்மையால் நிலம், மொழி, பண்பாடு தவிர, இன்று ஆற்றுநீர் உரிமைகளையும் நாம் இழந்து நிற்கிறோம். காவிரி நீர்_தமிழர்களுக்கு இல்லை என்கிற அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, கன்னட வெறியர்கள், ‘கர்நாடகாவுக்கு எதிராகத் தீர்ப்பு வருமேயானால் கலவரம் செய்வோம்’ என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார்கள்.
இப்பொழுது இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வலிமை மத்திய அரசுக்கு உள்ளதா என்கிற ஐயம் தமிழர்களுக்கு எழுந்துள்ளது.
கன்னடர்களுக்குத் தமிழர்கள் மீது ஏன் இப்படியரு வெறுப்பு? அவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழை, தமிழ் இனத்தை தம் தோழமை மொழியாகவோ, தோழமை இனமாகவோ கருதவில்லை. இதற்கு என்ன அடிப்படைக் காரணம்? அவர்கள் திராவிட தேசியம் என்ற அரசியலை ஒருபோதும் உள் வாங்கியதில்லை. கன்னடர்கள் என்றல்ல, மலையாள மக்களும், தெலுங்கு பேசும் மக்களும் கூட இந்தத் திராவிட அரசியலை உள்வாங்கியதில்லை. ஏற்றுக் கொண்டதில்லை.
ஆக, கர்நாடக மக்களால் இந்திய அரசை தம் வழிக்குக் கொண்டுவர முடிவதற்கும், தமிழகத்தை அச்சுறுத்த முடிவதற்கும், திராவிட தேசிய அரசியலை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதுதான் தெளிவான முடிவு.
தெலுங்கர்களை கன்னடர்களை மலையாளிகளை நாம் திராவிட இனச் சகோதரர்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தோம். இங்கிருந்த திராவிட தேசிய அரசியலும், அந்தத் தோழமை உணர்வை பெருந்தன்மையை தமிழர்களின் இதயங்களில் விதைத்தது.
நமக்கு திராவிடச் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்கும் காரணத்தால், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பிற தேசிய இனங்களை எதிர்த்து, நம்மால் தீவிரமாகப் போராடி வெற்றிகாண இயலவில்லை. ஆக, காவிரி நீரை மட்டுமல்ல_இன்று பாலாற்றின் குறுக்கே ஆந்திரர்கள் அணைகட்டப் போகிறார்கள். தமிழர்களை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாகக் கருதியிருந்தால், கர்நாடகம் காவிரி பிரச்னையிலும், ஆந்திரம் பாலாற்றுப் பிரச்னையிலும், கேரளம் முல்லைப் பெரியாறு விஷயத்திலும் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள்? அந்தந்த மாநில அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், செயல்படவும் முடிகின்றதென்றால் அதற்குக் காரணம், அவர்கள் திராவிட அரசியலை ஏற்காததுதான்.
அவர்கள் தங்கள் மொழி, தங்கள் தேசம், தங்கள் மக்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் நடத்துவதால்தான் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கத் தயங்குவதேயில்லை. ஆக தமிழன் இழந்துவிட்ட அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டுமானால், தமிழ்த் தேசிய அரசியலை ஏற்றுக்கொள்வது மட்டுமே ஒரே வழி.
தமிழ்நாட்டில் தமிழர்களே நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியுமென்ற நிலையை உருவாக்குவோம். இன்று தமிழரல்லாதவர்களின் ஆக்கிரமிப்பில் பாதிக்கு மேற்பட்ட தமிழகம் சிக்கியிருப்பதை நாம் மறப்பதற்கில்லை. அதுபோல், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் சுரண்டலுக்கும் தமிழகம் இன்று மடிவிரித்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.
இந்த நிலையிலிருந்து தமிழனைப் பாதுகாத்திட, தமிழ் மண்ணைப் பாதுகாத்திட, தமிழ் மொழியைப் பாதுகாத்திட வேண்டும் என்ற குறிக்கோளில்தான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கிப் போராடினோம்.
ஆனால், இன்றுகாலம் கனிந்திருக்கிறது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தனது கோரிக்கைகளைப் போராடித்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலை இன்றில்லை. தமிழக முதல்வர் கலைஞர் பல்வேறு கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
ஆகவே, நம்பிக்கை இருக்கிறது நண்பர்களே! நாளை நமதே!’’