தீர்ப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படும்!


கீழே விடுதலையில் வெளியான தலையங்கம். இதை எழுதியவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து எதுவும் தெரியாதா, நீதித்துறை என்பது அரசின் அங்கமல்ல, நீதிபதிகள் வெறும் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் என்று அரசியல் சட்டம் கருதவில்லை என்பதெல்லாம் தெரியாதா இல்லை தெரிந்து கொண்டும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. விடுதலையைப்பொறுத்த வரை இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அறிவார்ந்த நேர்மை என்பது கொஞ்சம் கூடக் கிடையாது. 1973ம் ஆண்டுதான் கேசவானந்தா பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே தான் அந்தத் தேதி முக்கியமாகிறது. அதற்கு முன்,பின் என்று பிரித்து பார்க்க வேண்டியதிற்கு. இது மிகவும் அடிப்படையான ஒன்று. இதை விடுதலை எப்படித் திரிக்கிறது என்பதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல் சட்டம் இட ஒதுக்கீடு குறித்து வரம்பு விதிக்கவில்லையாம்.ஆனால் அது இட ஒதுக்கீட்டினை எந்தப் பிரிவின் கீழ் வைத்திருக்கிறது, அது குறித்து என்ன கூறியிருக்கிறது என்பதை முழுமையாக வெளியிடும் தைரியமும், நாணயமும் விடுதலைக்கு உண்டா.இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது அதன் வரம்பு குறித்து அம்பேத்கர் கூறியது என்ன என்பதை விடுதலைவெளியிடுமா. இந்த தீர்ப்பினை விமர்சிக்கட்டும். தீர்ப்பினைப் புரிந்து கொண்டு விமர்சிக்கட்டும். தீர்ப்பினை, அது பதிலளித்துள்ள கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டாலும் இது போல் எழுதும் விடுதலைக்கு சாதியை மீறி சிந்திக்கத் தெரியாது என்பது இன்னொரு முறைநிரூபணமாகியுள்ளது. ஒய்வு பெறும் முன் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பினை வழங்கிவிட்டு ஒய்வு பெறுவது மரபு. இவ்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடந்த வாத-பிரதிவாதங்களுக்குப் பின் ஜனவரியில் தீர்ப்பு வந்துள்ளது. இதைக் கூட திரிக்கும் விடுதலையின்கேவலமான புத்தியை என்னவென்று சொல்வது. சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பகுத்தறிவாதிகளுக்கும் பகுத்தறிவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இவர்களை பகுத்தறிவாதிகள் என்பது பகுத்தறிவிற்கு அவமானம் செய்வதாகும்.
விடுதலையின் ஆத்திரத்திற்கு 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாகும் ஒரு முக்கிய காரணமென்று தோன்றுகிறது. அந்த தீர்ப்பினை சட்ட அறிவினையும், அரசியல் சட்டம் குறித்த புரிதலையும் கொண்டு எதிர்கொள்ளாமல் சாதி சாதி என்று புலம்பும் விடுதலை உண்மையில் தைரியம் இருந்தால் அம்பேதகர் தலைமையில் உருவான அரசியல் சட்டத்தில் தவறு இருக்கிறது, அது உச்ச நீதிமன்றத்திற்கு அளவற்ற அதிகாரங்களை தந்துள்ளது என்று கருத்து சொல்லுமா.

தீர்ப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படும்!

(Viduthalai Editorial 12th Jan 2007)

ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று வெகுமக்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பப் போகிறது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணை என்பது 1951 இல் உருவாக்கப்பட்டது.நாடாளுமன்றம் மக்கள் நலன் கருதி நிறைவேற்றும் சில சட்டங்களைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும் நிலையில், நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாப்புச் செய்யும் ஏற்பாடுதான் இந்த ஒன்பதாவது அட்டவணையாகும்.நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து, நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடைமை என்று தொடங்கி, தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பு உள்பட இந்த ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துத்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.எந்த நோக்கத்துக்காக அரசமைப்புச் சட்டத்தில் இந்த ஒன்பதாவது அட்டவணை கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தின் ஆணி வேரையே வெட்டும் வேலையைத் தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளவர்கள் மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கவேண்டிய நிலையில் உள்ளவர்களும் அவர்கள்தான். நீதிபதிகள் என்பவர்கள் அரசின் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான். இந்த நிலையில் மக்களுக்குத் தேவையானவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றும்போது, அதில் குறுக்கிடும் அதிகாரம் இன்னொன்றுக்கு இருக்கவே முடியாது - கூடாது!தம் எல்லையை மீறி உச்சநீதிமன்றம் நடந்துகொண்டதன்மூலம் நாடாளுமன்றமா, நீதிமன்றமா - எது அதிக அதிகாரம் படைத்தது என்கிற கேள்வி மக்கள் மன்றம்முன் இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் அதிகாரம், சக்தி படைத்தது மக்கள் மன்றம்தான்!அடிப்படை உரிமைகள் என்பதெல்லாம் கூட காலத்திற்கேற்ப மாறக் கூடியவைதான்; விபச்சாரத் தடுப்புச் சட்டம் வந்தபோதுகூட, தங்கள் ஜீவாதார உரிமை பாதிக்கப்படுகிறது என்று அந்தத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் கூறவில்லையா?தீண்டாமை என்பது கூட தங்களின் ஜாதி உரிமை என்று வாதாடலாமே! வரையறையின்றி சொத்துகளைக் குவிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று பணத் திமிங்கலங்கள் திமிர் முறிக்கலாமே!உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, தங்களுக்கு முன் வரும் வழக்குப்பற்றி மட்டும் தீர்ப்புக் கூறலாமே தவிர, உலகத்தில் நடக்கும் சகலத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பாளி என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.1973 ஏப்ரலுக்குப் பிறகு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டவை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம்! அது என்ன 1973 ஆம் ஆண்டு எல்லைக்கோடு! ஆம், அதற்குப் பிறகுதான் சமூக ரீதியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன! தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் 76 ஆவது திருத்தமும் இதில் அடங்கும்.இட ஒதுக்கீடு, சமூகநீதி என்று வருகிறபோதெல்லாம் நீதித்துறை கூர்மையாக வாளினைத் தீட்டிக் கொண்டு பாய்வதை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே!50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த மூலையிலாவது முணுக்கென் றாவது காணப்படுகிறதா? பொருளாதார அளவுகோல்பற்றி (கிரீமி லேயர்) எங்காவது அரசமைப்புச் சட்டம் சிணுங்கியுள்ளதா? இவற்றை யெல்லாம் எல்லை மீறித் திணித்தது உச்சநீதிமன்றம்தானே? இல்லை என்று மறுக்க முடியுமா?மத்தியில் சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரும் ஒரு பார்ப்பனர். உச்சநீதிமன்றமோ உச்சிக்குடுமி மன்றமாக இருக்கிறது. மக்கள் தொகையில் 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் இடம்கூட அங்கு கிடையாது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் தானே வரும்?இந்தத் தீர்ப்பின் மூலம் பெறப்படுவது என்ன? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதுதானே? ஏற்கெனவே அதற்கான குரலை, திராவிடர் கழகம் கொடுத்து வந்திருக்கிறது. அதில் உள்ள நியாயத்தின் அருமையை இந்தியா முழுவதும் உள்ள 90 சதவிகிதத்திற்கு மேலான ஒடுக்கப்பட்ட மக்கள் உணரக் கூடிய ஒரு நிலையை உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.இந்த சமூகநீதிப் போரில் திராவிடர் கழகம் தலைமை தாங்கும் - போராடும் - வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு