உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம்

உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் - ஒரு கேள்வி-பதில்

1,உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளதே? அத்தகைய அரிசி தேவைதானா ?
இந்த சர்ச்சைகள் புதிததல்ல.இந்த ஒரு பயிருடன் நின்றுவிடப் போவதில்லை.இதை ஒரு தொழில் நுட்பம் குறித்த சர்ச்சையாகப் பார்க்கக் கூடாது.பி.டி.பருத்தி குறித்து மாறுபட்ட கருத்துக்களும்,முரணான முடிவுகளை காட்டும்ஆய்வுகளும் உள்ளன.எவை பொருத்தமான/தேவையான கேள்விகள் என்பதைகருத்தில் கொள்ளாமல் ஊகங்கள்,அச்சங்கள்,மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்பார்ப்புகளைமுன்னிறுத்தி விவாதித்தால் தெளிவு கிடைக்காது.அத்தகைய அரிசி குறித்த ஆய்வுகளில்சீனாவும், ஈரானும் ஈடுப்பட்டுள்ளன.இங்கு இயற்கை விவசாயம் vs நவீன விஞ்ஞானம்என்ற ரீதியில் விவாதிப்பாது பொருத்தமாக இராது. பி.டி. பருத்தி உட்பட இப்படிமரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதில் சில நன்மைகளும் இருக்கின்றன,சில பிரச்சினைகளும் இருக்கின்றன. தொழில் நுட்பமே அனைத்தையும் தீர்மானிப்பதில்லை,தொழில் நுட்பம் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது/முறைப்படுத்தப்படுகிறது, அதில் உள்ளஅரசியல் என்ன என்பவற்றையும் சேர்த்து ஆராய வேண்டும். எனவே வேண்டும் அல்லதுவேண்டாம் என்ற ரீதியில் பதில்களை எதிர்பார்ப்பது சரியல்ல. இந்தியாவை எடுத்துக்கொண்டால் குஜராத்தில் பி.டி.பருத்தி பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளது.வேறு சிலபகுதிகளில் அது எதிர்ப்பார்த்த பலனைத் தரவில்லை. ஆந்திராவில் ஒரு பகுதியில்அது தோல்வி என்று கூறப்பட்டாலும் வேறு பகுதிகளில் அவ்வாறில்லை என்று தெரிய வருகிறது. எனவே ஒரு தரப்பு தரவுகளை மட்டும் கொண்டு இதை விவாதிக்கமுடியாது. சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள சிக்கலான கேள்விகளைஎழுப்ப வேண்டும். உதாரணமாக இத்தொழில் நுட்பத்தினை சிறு விவசாயிகளுக்குபெருமளவு பலன் தரும் வகையில், செலவுகளை குறைக்கும் வகையில் தர இயலுமா, அப்படியாயின் அதன் சாதக/பாதகங்கள் என்ன? இத்தொழில் நுட்பத்தினையும் இயற்கை வேளாண்மையிலிருந்து சில செய்முறைகளையும் சேர்த்து பயன்படுத்த முடியுமா.
ஆனால் தமிழில் (நானறிந்த வரையில்) விவாதம் இப்படியெல்லாம் இல்லை. வேளாண்மையில்உயிரியல் தொழில் நுட்பம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள், விவாதங்களை கருத்தில் கொள்ளாமல்விவாதம் நடக்கிறது. தினமணி, ஆனந்த விகடனில் நான் பார்த்தளவில் மிக மேலோட்டமாக இதைஅணுகும் போக்கே இருக்கிறது.

2,பி.டி பருத்தி பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள், பி.டி. பருத்திவிவசாயிகளுக்கு பலன் தரவில்லை என்றெல்லாம் கூறப்படுகிறதே?

ஏற்கனவே கூறியது போல் பி.டி.பருத்தி குறித்த சில ஆய்வுகள் அதால் பெரிய பலன் இல்லை,என்று கூறினாலும் குஜராத்தில் பி.டி.பருத்தி பயிரப்படும் பரப்பு அதிகரித்துள்ளது.இந்தியஅளவில் பி.டி.பருத்தி பயிரப்படும் பரப்பு அதிகரித்துள்ளது. மேலும் தற்கொலை செய்துகொண்ட அனைத்து விவசாயிகளும் பி.டி. பருத்தியை பயிரிட்டவர்கள் அல்ல.எனவே இதைஅப்படியே ஏற்க இயலாது. சில இடங்களில் பி.டி. பருத்தி எதிர்பார்த்த பலனைத் தரவில்லைஎன்பதும், அதன் விதை விலை அதிகம் என்பதும் உண்மை. ஒரே மாநிலத்தில் இரு வேறுவிதமான விளைச்சல்கள் பெறப்பட்டுள்ளன. பி.டி. பருத்தி குறித்து விளைச்சல் அதிகம்/குறைவு என்ற கோணம் தவிர வேறு கோணங்களிலும் (உ-ம். இது எப்படிப்பட்ட விவசாயிகளுக்குஅதாவது குறைவாக நிலம் உடையவர்கள், அதிக நிலம் உள்ளவர்கள் உகந்ததாக இருக்கிறது)ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

3, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பெரும் எதிர்ப்பு இருக்கிறது, பல ஐரோப்பிய நாடுகளில் இவை பயிரிடப்படாத போது இந்தியாவிற்கு இவை தேவையா?

ஐரோப்பாவில் விவசாயம்,விவசாயிகளின் நிலை வேறு.அங்கு உற்பத்தியைப் பெருக்கித்தான்உணவுப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலை இல்லை.தேவைக்கு அதிகமான,அபரிதமான உணவு உற்பத்தி இருக்கும் போது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை.இந்தியாவில்அப்படி இல்லை. இங்கு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில்சில நாடுகள் இதை ஏற்றுள்ளன, சில ஏற்கவில்லை. சீனா, அர்ஜெண்டினா உட்பட வேறு சில வளர்முகநாடுகளில் இப்பயிர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே நம்முடைய தேவைகளுக்கு இந்த தொழில்நுட்பம்பொருந்துமா என்பதை ஆராய வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தினை சோதிக்காமல் நிராகரிக்கத்தேவையில்லை.

4, நம்மாழ்வார், வந்தனா சிவா போன்றவர்களும், பல அமைப்புகளும், சுற்றுச்சூழல் இயக்கங்களும்இதை எதிர்க்கின்றனவே?

நம்மாழ்வாரின் பணிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.வந்தனா சிவாவின் சில செயல்பாடுகளையும்மதிக்கிறேன்.அதற்காக இவர்களின் அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்கவில்லை. அதே போல் கிரீன்பீஸ் போன்ற அமைப்புகளின் பணி, குறிக்கோள் குறித்து எனக்கு மரியாதையும், பலவற்றில் கருத்தொற்றுமைஇருந்தாலும் கிரீன் பீஸோ அல்லது வேறு அமைப்போ எடுக்கும் எல்லா நிலைப்பாடுகளையும் நான் ஆதரிக்கஇயலாது, தேவையுமில்லை. ஒரே நோக்கம் உடையவர்கள் எப்போதும் ஒத்த கருத்துடையவர்களாகஇருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தினை எதிர்ப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் இதை மதிப்பீடு செய்யாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதில்எனக்கு உடன்பாடு இல்லை. இயற்கை வேளாண்மை அல்லது அதைப் போன்றவைதான் ஒரே தீர்வு என்றகோணம் எனக்கு ஏற்புடையதில்லை. மேலும் இயற்கை வேளாண்மை அல்லது உயிரியல் தொழில்நுட்பம்அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடும் என்றும் நான் கருதவில்லை. இதை ஆதரிப்பவர்கள்இயற்கை வேளாண்மைக்கு எதிரானவர்கள் என்றும் கருதத் தேவையில்லை.

5, பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்னும் இருக்கும் போது, இன்னொரு புதியதொழில் நுட்பம் எப்படி தீர்வாக இருக்க முடியும்?

பசுமைப் புரட்சியின் சாதக,பாதகங்களை ஆராய்ந்தால் பல பிரச்சினைகள் இருந்தாலும், அதுசில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவியது என்பதுஉண்மை. அதன் குறைபாடுகளைப் புரிந்து கொண்டு அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது அதிலிருந்து கற்ற பாடங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்று பசுமைப்புரட்சியைவெறுமனே விமர்சிப்பது போதாது. ஒரு தொழில் நுட்பம் என்ற அளவில் பசுமைப்புரட்சியில்பிரச்சினைகள் இருக்கின்றன. அவை உயிரியல் தொழில் நுட்பத்தினை விவசாயத்தில் பயன்படுத்தும்போது எழுமா, எழாதா, என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையெல்லாம் அறிய தொழில்நுட்பத்தினைமதிப்பீடு செய்ய வேண்டும். தொழில் நுட்பத்தினைப் பரிசோதனைக் கூடச் செய்யாமல் இதை பசுமைப்புரட்சியின் நீட்சியாக மட்டும் கருதுவதோ அல்லது இரண்டையும் ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதுசரியல்ல.

6, விவசாயிகளின் தற்கொலைகள் உட்பட இன்று இந்திய விவசாயமும்,விவசாயிகள் சந்திக்கும்பிரச்சினைகளுக்கு பசுமைப் புரட்சிதானே காரணம், அப்படியிருக்கும் போது இந்தத் தொழில்நுட்பம் எப்படி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்ப முடியும்?

இந்திய விவசாயிகள்,விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகள் சிலவற்றிற்கு பசுமைப் புரட்சி காரணம். வேறு பல காரணிகளும் உள்ளன. எனவே பசுமைப்புரட்சி காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டது என்பது சரியல்ல. விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது,விவசாயத்தில் குறைந்து வரும் அரசின் முதலீடு, இடு பொருள் விலையேற்றம் போன்ற பலகாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக போதுமான நிதி உதவி கிடைக்காதது. ஏ.வைத்தியநாதன்இந்திய விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பசுமைப் புரட்சிதான்காரணம் என்ற தொழில் நுட்ப நிர்யணவாதத்தினை ஏற்பது இயலாது. தொழில் நுட்பம் என்பது அதனளவில் சிலவற்றை சாதிக்கும், சிலவற்றை சாதிக்காது. அது எப்படிசெயல்படுத்தப்படுகிறது, ஒழுங்குபடுத்தப்படுகிறது, யாருடைய தேவைகளை கருத்தில் கொண்டுஉருவாக்கப்படுகிறது போன்றவற்றையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். Social Constructionof Technology போன்ற அணுகுமுறைகள் தொழில் நுட்ப நிர்யணவாதத்தினை விட சிறப்பான புரிதலைத்தரக்கூடியவை. எனவே இந்தத் தொழில் நுட்பத்தினை விவசாயம்,விவசாயிகளுக்கான சர்வ ரோகநிவாரணியாக கருத வேண்டாம். இது சிலவிதங்களில் உதவும், சில பிரச்சினைகளை திறம்படதீர்க்க உதவும். இதைப் புரிந்து கொண்டால் கண் மூடித்தனமான எதிர்ப்பு/ஆதரவு என்ற நிலைப்பாடுகளுக்குஅப்பால் இதை அணுக வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.

7, இதற்கு மாற்றுகளே இல்லையா, இயற்கை வேளாண்மை மட்டும் போதாதா?

இயற்கை வேளாண்மை மட்டும் போதும் வேறு தொழில் நுட்பங்கள் தேவையில்லை என்ற முடிவிற்குவர இயலாது. இன்று இந்தியாவில் இயற்கை வேளாண்மையும் இருக்கிறது, நவீன வேளாண்மை பசுமைப் புரட்சி என்ற வடிவில் இருக்கிறது. ஒரு தொழில் நுட்பம் மட்டும் போதும், அதுவே எல்லாப் பிரச்சினைகளையும் இந்த துறையில் தீர்த்து விடும் என்று நான் கருதவில்லை. இயற்கை வேளாண்மைக்கும் உரிய இடம் தர வேண்டும்.அதே சமயம் பிற தொழில்நுட்பங்களை பரிசீலீத்து, மதிப்பீடு செய்து நமக்கு தேவை என்றால் பயன்படுத்த தயங்கக் கூடாது. இரண்டிற்கும் இடம் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

8, ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படும் தொழில் நுட்பங்கள் அல்லவா?அடிப்படைக்கண்ணோட்டமே இரண்டிலும் வேறல்லவா?

இது சிலர் கருத்து. நவீன மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும் எதிரானவை, முரணானவை என்றுகருதலாம். ஆனால் சிலவற்றில் நவீன மருத்துவம் சரியான தெரிவு என்றால், வேறு சிலவற்றில்பாரம்பரிய மருத்துவம் சரியான தெரிவு.மாவோ சீனத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் நிராகரிக்கவில்லை. அதையும் பயன்படுத்துவோம் என்றார், அவ்வாறே செய்தார். இரண்டும் தொழில்நுட்பங்கள்என்ற அளவில் தமக்கேயுரிய பலங்களையும், பலவீனங்களையும் கொண்டுள்ளன. ஒரு புதிய ரகத்தினை விரைவாக (ஒப்பீட்டளவில்) உயிரியல் தொழில் நுட்பம் மூலம் உருவாக்க முடியும். குறிப்பிட்ட தன்மைகொண்ட பயிர்வகைகளை உருவாக்க உயிரியல் தொழில் நுட்பம் பொருத்தமானது. எல்லாமே இயற்கைவேளாண்மையில் இருக்கிறது, வேறு எதுவும் தேவையில்லை என்று கருத முடியாது. பாரம்பரிய விதைகளைஉயிரியல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி புதிய வகைப் பயிர்களை உருவாக்க முடியும். நடைமுறையில் பாரம்பரிய பயிர்களை பயிர் செய்வதற்கு அருகில் மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடும் போது சில பிரச்சினைகள் ஏற்படலாம். இதை எப்படி சமாளிப்பது என்பதை கண்டறிய வேண்டும். தேவையானால் பாரம்பரிய பயிர்கள் பயிரிடப்படும் இடங்கள், இயற்கை வேளாண்மை முறைஅமுலில் உள்ள இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளியே மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்களைபயிரிட வேண்டும் என்று விதிகளை வகுக்கலாம். சில பகுதிகளை மூலக்கூறு மாற்றப்பட்ட பயிர்கள்பயிரிடக்கூடாத பகுதிகள் என்று அறிவிக்கலாம்.

தொடரும் (அடுத்த பகுதி ஜனவரி 2007ல்)

சாந்தி, பாலினம், பால்

சாந்தி, பாலினம், பால்,அறிவியல்

சாந்தி வென்ற வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்படும் என்று செய்திகள் வந்துள்ளன.அவர் முந்தைய போட்டிகளில் எப்படி பெண்களில் பிரிவில் பங்கேற்று ஒடினார், அப்போது இந்தப் பிரச்சினை எழவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.1988 ஒலிம்பிக் போட்டியிலும் இது போன்ற பிரச்சினைஎழுந்தது, பதக்கம் வென்ற மரியா பட்டினோ பெண் அல்ல என்று முடிவு செய்யப்பட்டு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாயிற்று.அவர் தளரவில்லை. மீண்டும் தான் பெண் என்று நிரூபிக்க விரும்பினார்.பின்னர் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அவர் பெண்கள் பிரிவில் பங்கேற்க்க அனுமதிக்கப்பட்டார். இது போன்ற சர்ச்சைகளை விரிவாக அலசியிருக்கிறார் ஆனி பாஸ்டோ ஸ்டெர்லிங் என்ற அறிவியலாளர், பெண்ணியவாதி. பெண் என்று எந்த அடிப்படையில், எந்தச் சோதனைகளைக் கொண்டு முடிவு செய்வது. அறிவியலால் 100% பெண் இவர் என்று கூறப்படும் போது அதன் பொருள் என்ன. இது போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அவர்.

இதையெல்லாம் அறிந்தவர்களுக்கு, பெண்ணிய அறிவியலுடன் பரிச்சயம் உடையவர்களுக்குஇந்த சர்ச்சையைப் புரிந்து கொள்ள முடியும். பால், பாலினம் குறித்த வேறுபாட்டினையும் இங்குகுறிப்பிட வேண்டும்.சாந்தியோ அல்லது அவர் சார்பிலோ இந்தச் சோதனைகள் குறித்து கேள்வி எழுப்பபட வேண்டும். அவை ஒன்றேதான் ஆணா அல்லது பெண்ணா என்பதை முடிவு செய்யஒரே வழியா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். சாந்தி விஷயத்தில் பத்திரிகைகள் கிடைத்த தகவல்களை வெளியிடுகின்றன.ஆனால் மருத்துவ, அறிவியல் ரீதியாகவும், இது போன்ற முந்தைய சர்ச்சைகளின் அடிப்படையிலும், பால் குறித்த பெண்ணிய கருத்துக்களையும், ஆனி போன்றவர்கள்செய்துள்ள ஆய்வுகளையும் தொகுத்து அலசினால் ஒரு புரிதல் கிட்டலாம். தமிழில் இதைச் செய்யப்போவது யார்.

ஒரு காலத்தில் எனக்கு பெண்ணியம்,அறிவியல் குறித்து மிகுந்த ஆர்வம் இருந்தது.அப்போது பலவற்றை தேடிப் பிடித்துப் படித்தேன். சில நண்பர்கள் அதற்கு உதவி புரிந்தனர். ஒரு அறிமுக கட்டுரையாக பெண்ணியம்,அறிவியல் குறித்து புறப்பாட்டில் எழுதினேன். சில க்ட்டுரைகளின் பிரதிகளைக் கோரி அவருக்கு எழுதினேன். ஆனி பாஸ்ட் ஸ்டெர்லிங்கின் கட்டுரைகளகளும், நூலும் அவரிடமிருந்து எனக்கு கிடைத்தன. அவை ஒரு புதிய வெளிச்சத்தினைத் தந்தன. இது போல் பலருடைய எழுத்துக்களை அப்போதுபடித்தேன். இந்த செய்தியைப் படித்த உடன் என் நினைவிற்கு வந்த பெயர் அவருடையதுதான். இன்று பெண்ணியம் அறிவியல் குறித்து ஆர்வம் இருந்தாலும் என் முன்னுரிமை அதற்கு இல்லை. மேலும் இதில் தேடிப் பிடித்து,படித்து எழுதுவதில் இப்போது ஆர்வமும் இல்லை. எனவே நான் இந்த சர்ச்சை குறித்து எதையாவது விரிவாக எழுதிவிடுவேன் என்று பயப்பட வேண்டாம் :)

பெரியார் சிலையும்,வன்முறையும்

பெரியார் சிலையும்,வன்முறையும்

பெரியார் சிலையை உடைத்தது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நீதிமன்றம் இடைக்காலத் தடை தராத போது தங்கள் எதிர்ப்பினை அவர்கள் அமைதியான வழியில் காட்டியிருக்க வேண்டும். சிலையை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபவர்களை சட்டப்படி தண்டிப்பதே முறையானதாகும். சட்டம் தன் கடமையைச்செய்யட்டும்.

ஆனால் சிலை உடைப்பிற்கான எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன. சேலத்தில்சங்கர மடத்தில் ஒரு கும்பல் நுழைந்து வன்முறையில் ஈடுபடுகிறது.(2)

விடுதலையில் சிலை உடைப்பினை கண்டித்து அறிக்கை விடும் வீரமணி இதை ஒரு காரணமாகவைத்துக் கொண்டு பிராமணர்கள் மீது வெறுப்பினைத் தூண்டுகிறார்(1) . இந்தச் செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டியதுதான். அதை அனைத்து பிராமணர்களுடன் எதற்கு தொடர்புபடுத்த வேண்டும். தன் மன வக்கிரத்தினைக் காட்டிக் கொள்ள வீரமணிக்குஇது இன்னொரு வாய்ப்பு. பார்ப்பனர்களின் இத்தகைய செயல்பாடுகள் என்று கூறும் வீரமணிபார்பனர்களுக்கு எதிரான உணர்வுகளை இதன் மூலம் தூண்டி விடுகிறார். இந்தக் குற்றத்தினை செய்தவர்கள் யார்,தூண்டியவர்கள் யார் என்பது சரியாகத் தெரியாத நிலையில், இன்னும் காவல்துறையினர் இன்னார்தான் இதைத் தூண்டினார்கள், இன்னார் இதைச் செய்தார்கள் என்பது உட்பட விபரங்களை வெளியிடாத நிலையில் வீரமணி ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது இப்படி அவதூறு செய்வது எந்தவிதத்தில் நியாயம். இதற்காக அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா.

வலைப்பதிவுகளில் தன்னை இடதுசாரி என்றுக் கூறிக்கொள்ளும் ஒருவர் சிலையை உடைத்தவர்கள் கையை உடைக்க வேண்டும் என்று எழுதினால், பின்னூட்டம் இடும் இன்னொருவர் மண்டையை உடைப்பது, சூறையாடுவது குறித்து எழுதுகிறார்.(3).

இந்த சிலை உடைப்பினை ஒரு காரணமாகக் கொண்டு வன்முறையை ஏவி விடவும் அதை நியாயபட்டுத்தவும் ஒரு கும்பல் அலைகிறது என்று கருத இடம் உள்ளது.அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த்துவத்தினை எதிர்ப்பதாக சொல்வார்கள்.

ஆனால் இவர்கள் மனதில் இருப்பது இந்த்துவாதிகள் முன்வைக்கும் வெறுப்பும், அந்த வெறுப்பில் பிறக்கும் வன்முறையும்தான். யார் மீது வெறுப்பு, யார் மீது வன்முறையை ஏவுவது என்பதில்தான் வேறுபாடு.
----------------------------------------------------------------------------------------
(1) தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்தி விடுவதாலேயே அவர்களின் கொள்கையைச் சேதப்படுத்தியதாக அர்த்தமாகி விடாது. இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனர்களின் இத்தகைய செயல்பாடுகள் தமிழர்கள் மத்தியிலே பார்ப்பன எதிர்ப்பு உணர்வையும், தமிழின உணர்வையும் தூண்டுவதற்குத்தான் இது பயன்படும். பார்ப்பனர்களுக்கு முன்புத்தியும் இல்லை - வழி நடத்த சரியான தலைமையும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படுத்தப் பட்டுவிட்டது.

(2) சேலம், டிச. 8: சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தில் புதன்கிழமை ஒரு கும்பல் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது. அங்கிருந்த சாமி படங்கள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீரங்கத்தில் திறக்கப்படவிருந்த பெரியார் சிலையை சிலர் வியாழக்கிழமை அதிகாலை சேதப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து சேலம் மரவனேரி சங்கர மடத்தில் உள்ள காஞ்சி காமகோடி ஆஸ்ரமத்தில் ஒரு கும்பல் வியாழக்கிழமை பிற்பகல் புகுந்து, கலவரத்தில் ஈடுபட்டது.
இங்கிருந்த காமாட்சியம்மன் உள்ளிட்ட சாமி படங்கள் உடைக்கப்பட்டன. பூஜை பொருள்கள் தூக்கி வீசப்பட்டன. காஞ்சி சங்கராச்சாரியார் படம் சேதப்படுத்தப்பட்டது. அங்கிருந்த சிவாச்சாரியார்கள் பயந்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸôர், மடத்தை சூறையாடிய பாலு, சிவப்பிரியன், தமிழ்ச்செல்வன், டேவிட் (எ) ராஜா, இனியன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தனர். சங்கர மடத்தில் தாக்குதல் நடந்தது தொடர்பாக தகவல் கிடைந்தவுடன், இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் அங்கு திரண்டனர்.
கலவரத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்துவிட்டோம்; போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் எனக்கூறி போலீஸôர் அவர்களைச் சமாதானப்படுத்தின

(3) பெரியார் சிலையும்! பாசிச சிந்தனையும்!!

"அதன் விளைவுதான் தமிழகத்தில் சுயமரியாதை சுடரொளியாக திகழ்ந்த பெரியாரின் சிலை இருக்கக்கூடாது என்று உடைத்துள்ள கயவர்களின் கைகள் உடைக்கப்பட வேண்டியதே!"

"அடே பன்றிகளே!!! தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம் என்ற புரட்சிகர அமைப்புகளின் முழக்கம் வெற்றி பெறும் என்பதைத்தான் இந்த சிலை உடைப்பு காட்டுகிறது.உங்களது மண்டை உடையும் காலம் இது. ஆகவே ஜாக்கிரதை!!!"

"அதை விட இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங்களையும் வாய்ப்பிருந்தால் அவர்களின் மண்டைகளையும் உடைத்தெறிய கோரிக்கை வைப்பதே சாலச் சிறந்தது"

"சிலையை உடைத்ததை நான் தவறு என்றூ சொல்லவே இல்லை. இன்னும் சொன்னால் அவர்கள் இழி பிறவிகள் கோழைகள். தவறு சரி என்று பகுத்துப் பார்க்கும் தேவையற்ற சம்பவம் இது. விசயம் ஆளும் வர்க்க பார்ப்பினியத்தின் திமிர்த்தனம்தான். அதை மண்டையை உடைத்து அனுப்பாமல், சீவி சிங்காரித்து, பூவும் பொட்டும் வைத்து அனுப்பச் சொல்கிறீர்களா?"

என் தேவனே உம்மிடம்

என் தேவனே உம்மிடம்

என் தேவனே உம்மிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீரல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீர் காட்டினால் போகிறேன் அந்தப் பாதை

என்று துவங்கும் இப்பாடல் இது இவர்களின் கதை என்ற படத்தில் ஏ.எம்.ராஜா பாடியது.இது அநேகமாக 70களின் இறுதி அல்லது 80களின் துவக்கத்தில் வெளிவந்த(?) படமாகஇருக்கலாம். இசை ஏ.எம்.ராஜாவா அல்லது சங்கர்-கணேஷா என்று நினைவில்லை.இது தவிர நேற்று என்னைப் பார்த்த நிலா என்று துவங்கும் பாடல் (ஏ.எம்.ராஜா பாடியது)உட்பட வேறு சில பாடல்களும் இப்படத்தில் உண்டு என்பதாக ஞாபகம்.

1960 களின் துவக்கத்தில் தமிழில் பாடுவதை, இசை அமைப்பதை நிறுத்திய ஏ.எம்.ராஜா மீண்டும் 70களின் துவக்கத்தில் பாடத் துவங்கினார். ரங்க ராட்டினம் படத்தில் இடம் பெற்ற முத்தாரமே உன் ஊடல் என்னவோ (எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சங்கர்-கணேஷ் இசை அமைப்பில்)அப்படிப் பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அவர் பாடினாலும் அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவுதான். அதிகபட்சம் முப்பது இருக்கும்என்று நினைக்கிறேன்.

இணையத்தில் இப்பாடல்கள் கேட்க/தரவிறக்க உள்ளனவா. தெரிந்தவர்கள் தகவல் தரலாம். நன்றி