பெரியார்-கீழ்வெண்மணி- 3

பெரியார்-கீழ்வெண்மணி- 3

கீழ்வெண்மணியில் 42 பேர் எரித்து கொல்லப்பட்டதை குறித்து பெரியார் விடுத்த அறிக்கையை முந்தைய இரண்டு பதிவுகளில் கீற்று தளத்திலிருந்து (தலித் முரசில் இவை மறுபிரசுரம் செய்யப்பட்டன) இட்டிருக்கிறேன். இப்பதிவில் அது தொடர்புடைய ஒரு கட்டுரை, கீற்று
தளத்திலிருந்து தரப்படுகிறது.

பெரியாரின் கருத்துக்கள் திண்ணையில் மலர்மன்னன் எழுதியவற்றுடன் ஒப்பிடப்பட வேண்டியவை. இருவரும் கம்யுனிஸ்ட் கட்சி/இயக்கங்களை விமர்சிக்கின்றனர்.பெரியார் இதை நோக்கும் விதம் எப்படியிருக்கிறது என்பதை படித்தால் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
மேலும் கூலி உயர்வு போராட்டம் இப்படி எதிர்கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், கூலி உயர்வு தர மறுத்த நிலச்சுவன் தார்களை விமர்சித்தும் அவர் பேச்சிலும், எழுத்திலும் ஒரு வாக்கியம் கூட
இல்லை.)

வெண்மணி: பெரியாரின் எதிர்வினைசெல்வம்

பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்தி ஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால் அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது. இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையை தவிர்க்கவியலாது என்பதிலும் பஞ்சமர்களின் விடுதலையின்றி சூத்திரர்களின் விடுதலையும் சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும்கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப்பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்கு கேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரையிலிருந்து (குடி அரசு 4-12-1932) சிறுபகுதியொன்றை கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்:"உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம்பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்''காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாக தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளாத நேர்மையை அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசியபொழுது ‘நீங்கள், உங்களுடைய' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால் ‘பறையர்' என்பதை விடவும் ‘சூத்திர'னென்பது இழிவானதென்றவர் ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே' (குடி அரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7' கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்' என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட'தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென'வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).பெரியாரின் சமகாலத்தியவர்களும் அவரால் மதிக்கப்பெற்ற தலைவர்களுமான முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம்மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, பார்ப்பனரல்லாதார் என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துகளல்லாதவர்களையும், இந்து மதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரென தள்ளி வைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது. இந்நிலையில் பெரியாரின்மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது.‘நிறப்பிரிகை'யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா. அ. மார்க்ஸ் அவர்களும் அது குறித்து தமக்கு தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் : நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம். 1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும் பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது. சோவியத் ரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார் இந்திய கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே பொறுக்கித் தின்பவர்களென்றே அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.' (குடி அரசு 14.6.1931)‘வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்...' (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.‘கம்யூனிஸ்ட்-எவன் காலை நக்கியாவது வயிறுவளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (திருச்சியில் 4.11.1973 அன்று பேசியது) என்ற கணிப்பும் இன்றையவரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும் சமீப காலமாக கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933-ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:"எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள்நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம்கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தக்கராறு என்பது, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்'' (குடிஅரசு, 1.10.1933)."நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்கு கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்'' என்ற பகுத்தறிவு கட்டுரையும் (2.12.1934) "முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்' என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும் "அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழமுடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின்மீது திரும்பவேண்டு'மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கது.பெரியாரின் செம்பனார்கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக்கொள்ள இயல்கிறது. அந்நம்பிக்கையும் சிதறுண்டுபோய் அவர் "ஓட்டுகளுக்காக கூட்டிக் கொடுக்கவும் செய்வார்கள்' என்று இறுதிக்காலத்தில் பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததை சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக்கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்கு காரணமாயிருந்தன.கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.

பெரியார்-கீழ்வெண்மணி-2

பெரியார் பேசுகிறார்

இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும் 2

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது. இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்."Patriotism is the last refuge of a scoundrel'' -"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்
(கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968)

பெரியார்-கீழ் வெண்மணி - 1

பெரியார் பேசுகிறார்
கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? - 1

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.-

(கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968)

12 நவம்பர் 2003 - 12 நவம்பர் 2006

12 நவம்பர் 2003 - 12 நவம்பர் 2006

12 நவம்பர் 2003லிருந்து ஒரளவு தொடர்ச்சியாக வலைப்பதிவிட்டு வருகிறேன். முதலில் அந்த வலைப்பதிவிலும் பின்னர் இந்த வலைப்பதிவில்.

அதற்கு முன் சில வலைப்பதிவுகளை துவங்கியதாகவும், ஒரிரு பதிவுகளுடன் நிறுத்திவிட்டதாகவும் நினைவு. இணையத்தின் ஏதோ ஒரு மூலையின் இடுக்குகளில் எங்கோ அவை இன்னும் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு
வகையில் மரணித்திருக்கலாம்.அல்லது எங்கோ அவற்றின் பிரதிகள் மட்டும், மூலம்/மூலங்கள் அழிந்த பின், ஏதோ ஒரு வடிவத்திலோ இருக்கலாம். அதை கூகுள் அறியுமோ, அறியாதோ, அந்த கூகுளாண்டவருக்கே வெளிச்சம் :).

இந்த மூன்றாண்டுகளில் என் பதிவுகளைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும், படிக்காமல் 'விமர்சித்த'வர்களுக்கும் நன்றிகள். தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டிகளான தமிழ் மணம், தேன் கூட்டிற்கு என் நன்றிகள்.சில பதிவுகளை கில்லியில் குறிப்பிட்டமைக்காக கில்லி
குழுவினருக்கு என் நன்றிகள்.

பதிவுகளில் எழுத நினைத்ததில் கால் பங்கினைக் கூட எழுதவில்லை, இதற்காக எனக்கு பதிவர்களும், பிறரும் நிச்சயம் நன்றி கூற வேண்டும் :). என்னுடைய வலைப்பதிவும், கருத்துக்களும் இன்னும் பலரால் படிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவற்றிற்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுத்த சில வலைப்பதிவாளர்களுக்கு என் நன்றிகள். வலைப்பதிவின் வடிவமைப்பு, எழுத்துரு குறித்து ஆலோசனை தந்த பி.கே.சிவகுமார், பாஸ்டன் பாலாஜி, காசி உட்பட பல வலைப்பதிவாளர்களுக்கு பல விதங்களில் செய்த உதவிகளுக்காக என் நன்றிகள்.

உள்ளடக்க, வடிவ, தொழில் நுட்ப ரீதியாக இவ்வலைப்பதிவினை மேம்படுத்துவது குறித்த கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவரும் மரண தண்டனையும்

குடியரசுத் தலைவரும் மரண தண்டனையும்

எஸ்.வி. ராஜதுரை
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20061103114116&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0
Dinamani Dated 4th Nov 2006- Edit page article

எளிமைக்கும், இனிமைக்கும் பெயர்போன நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஓர் அரசியல் வெகுளி என்றும், தன்னை அறியாமலேயே அரசியல்வாதிகள் உருவாக்கும் சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர் என்றும் சிலரால் கருதப்படுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக சென்ற ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அறிவுரையின் பேரில் பிகார் சட்டமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் அளித்தது; ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கான மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியது ஆகியவற்றை மட்டும் அவர்கள் சுட்டிக்காட்டவில்லை. மிக அண்மையில் அவர், மரண தண்டனை வழங்கப்பட்ட 50 கைதிகளுக்குக் கருணை வழங்கி அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்ததும்கூட, ஒரு வெகுளித்தனமான அரசியல் நடவடிக்கை என வேறு சிலர் கூறி வருகின்றனர்.

முதலாவதாக, இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஓர் அரசியல்வாதியல்ல. முந்தைய குடியரசுத் தலைவர்கள் ஒரு சிலர் "அரசியல்வாதிகளாகாவே' செயல்பட்டு வந்தனர் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த நாட்டின் முதல் குடிமகன் என்னும் முறையில் இந்த நாட்டையும் அதிலுள்ள மக்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், சட்டப்பிரிவுகள் முதலியன பின்பற்றப்படுகின்றனவா என்பதை விழிப்புணர்வுடன் கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமன்றி, நமது பண்பாட்டு, நாகரிக மரபுகளில் சிறந்தவற்றை அளவுகோலாகக் கொண்டும் மக்களின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் நமக்கு வழிகாட்டும் கருத்துகளைக் கூறும் ஓர் அறவியல் கடமையைச் செய்வதும் அவரது பொறுப்புகளில் ஒன்றாகும். அதனால்தான், "இந்தியா உலகில் வலுவாய்ந்த நாடாக உருவாக வேண்டும்' என அவர் கூறுகையில் அதனுடைய ஆயுத பலத்தை மட்டும் அவர் கருத்தில் கொள்வதில்லை. அவர் மிக முக்கியத்துவம் தரும் இளந்தலைமுறையினரின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி ஆகியனவற்றையும் அறிவியல், தொழில்நுட்பம், பொருளுற்பத்தி ஆகியவற்றிலும் நமது நாடு மேற்கு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதை மட்டும் அவர் கருத்தில் கொள்வதில்லை. மேற்கு நாடுகளின் நவீனத்துவத்தை மட்டும் அவர் முக்கியப்படுத்துவதில்லை. அவற்றின் ஜனநாயக மரபுகள், தண்டனை முறைகள் ஆகியனவும் அவருக்கு முக்கியமாகப்படுவதாலேயே மரண தண்டனை பெற்ற 50 கைதிகளின் கருணை மனுவை அவர் காருண்யத்துடன் பரிசீலித்திருக்கிறார்.

சென்ற நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகள் உலகில் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டன. அவற்றிலொன்றுதான் பல நாடுகள் மரண தண்டனை முறையை 1. முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதையோ, 2. ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றாமல் நிறுத்தி வைப்பதையோ, 3. மரண தண்டனையைப் போர்க் குற்றங்களுக்கு மட்டும் கொடுப்பதையோ நோக்கிச் சென்றதாகும். ஆனால் 2001 செப்டம்பர் 11இல் உலக வர்த்தக மையக் கட்டங்கள் தகர்க்கப்பட்ட பின், அமெரிக்கா "உலக பயங்கரவாத'த்துக்கு எதிராகப் போர் தொடங்கத் தொடங்கி, அதன் பொருட்டு பல்வேறு நாடுகளைத் துணைக்கழைத்த பிறகு, மரண தண்டனை ஒழிப்புச் சற்றுத் தொய்வடைந்தது. ஆனால் கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளில் மீண்டும் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டு உலகில் நாகரிகமடைந்த நாடுகள் மரண தண்டனை விஷயத்தில் மேற்சொன்ன மூன்று நிலைப்பாடுகளில் ஒன்றைக் கடைப்பிடிக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. மரண தண்டனை முறையை இன்னும் தனது சட்டப் புத்தகத்தில் வைத்திருக்கும் 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ""இந்தியாவிலுள்ள நிலைமை வேறு, உள்நாட்டுப் பயங்கரவாதம், தீவிரவாதம், எல்லை கடந்த பயங்கரவாதம் ஆகியனவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது'' என மரண தண்டனை ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர். இதேபோன்ற "பயங்கரவாத' பிரச்சினைகளையும் தாக்குதல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும், தென் அமெரிக்க நாடுகள் பல, மரண தண்டனை முறையை ஒழித்துக் கட்டியுள்ளன. தென்னாப்பிரிக்காவின் காந்தி எனச் சொல்லப்படும் நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்த வேலை, மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கியதாகும். அந்த நாட்டைவிட வேறு எந்த ஆசிய, ஆப்பிரிக்க நாட்டிலும் வன்முறைக் கலாசாரம் அத்தனை ஆழமாகச் சமுதாயத்தில் வேரூன்றியிருந்ததாகச் சொல்ல முடியாது. நாகரிகம் என்பதை வெறும் ஆயுதபலம், தொழில் வளர்ச்சி என்பனவற்றோடு மட்டும் தொடர்புபடுத்தாமல் ஒரு நாட்டின் ஆன்மிக வளர்ச்சியாகவும் நமது குடியரசுத் தலைவர் பார்த்ததாலேயே மரண தண்டனைகளின் மூலம் மட்டுமே எந்தவொரு குற்றச் செயலையும் - குறிப்பாகப் பயங்கரவாதச் செயலையும் - தடுத்து நிறுத்துவிட முடியாது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார் எனக் கருத இடமிருக்கிறது. நீதி பரிபாலனமும் தண்டனைகளின் அளவும் வகுப்பவாதத்தன்மையாக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறவர்கள், சில குறிப்பிட்ட வகைக் குற்றங்களைச் செய்தவர்களைத் தூக்கில் போடுவது மட்டும் போதாது, சீனாவில் நடப்பது போல பொதுமக்களின் பார்வையில் படும்படி பகிரங்கமாகத் தூக்கில் போட வேண்டும் அல்லது அமெரிக்காவில் நடப்பதுபோல, குற்றம் செய்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கும்படி விடியோவில் காட்ட வேண்டும் எனக் கூறுமளவிற்குச் சென்றுள்ளனர். இதனால்தான் என்னவோ, மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பற்றிய விவரங்களை நமது குடியரசுத் தலைவரும் படித்திருப்பார் எனக் கருத வாய்ப்புண்டு. சீன, அமெரிக்க முன்மாதிரிகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்பவர்கள், தூக்குத் தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவுவது நமது கடமை.

""தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் மரண தண்டனை பெற்ற கைதியின் எடை எவ்வளவு என்பது சோதித்துப் பார்க்கப்படுகிறது. கழுத்து முறிவதற்கு, அவர் எத்தனையடி நீளத்துக்குத் தூக்கில் தொங்க வேண்டும் என்பது அளந்து பார்க்கப்படுகிறது. கழுத்தின் அளவு, உடலின் பல்வேறு பாகங்களின் அளவுகள் முதலியனவெல்லாம் அளந்து பார்க்கப்படுகின்றன. தூக்கு மேடையிலுள்ள அடிப்பலகை திடீரென்று விலகியதும் கயிற்றின் மற்றொரு முனையில் அவர் தொங்குவார். சில சமயம் கழுத்து முறிக்கப்படாமலிருந்து விடுமேயானால், அக் கைதி கழுத்து நெறிக்கப்பட்டு இறப்பார். அவரது கண்கள், தலையிலிருந்து கிட்டத்தட்ட வெளியே வந்துவிடுமளவுக்குப் பிதுங்கும். அவரது நாக்கு தடித்து வீங்கி அவரது வாயிலிருந்து வெளியே தொங்கும். கழுத்தில் சுற்றப்பட்டிருக்கும் தூக்குக் கயிறும் பல சமயங்களில் முகத்திலிருந்தும் கழுத்திலிருந்தும் பெருமளவுக்குத் தோலை உரித்து எடுத்துவிடும். தூக்கிலிடப்பட்டவர் சிறுநீரும் மலமும் கழிப்பார். தூக்கிலிடப்படுவதை சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, மலம் கீழே விழுந்து கொண்டிருக்கும். ஒரு மருத்துவர் தூக்குமேடையிலுள்ள சிறிய ஏணியில் ஏறி, அவருக்கு இதயத் துடிப்பு இன்னும் இருக்கிறதா என்பதை ஸ்டெதோஸ்கோப் மூலம் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துபோய் விட்டார் என்று அறிவிக்கும்வரை கைதி கயிற்றின் முனையில் 8 முதல் 14 நிமிடங்கள் வரை தொங்கிக் கொண்டிருப்பார். சிறைக் காவலொருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பவரின் பாதங்களருகில் நின்றுகொண்டு உடல் ஆடாமல், அசையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். ஏனெனில் முதல் சில நிமிடங்களில், வழக்கமாக மூச்சுவிடுவதற்கான முயற்சியில் உடல் போராடிக் கொண்டிருக்கும்.''

நமது அன்புக்குரிய குடியரசுத் தலைவர், அரசியல் வெகுளியோ என்னவோ, ஓர் அறவியல் பிரச்சினை குறித்த விவாதமொன்றை மீண்டும் நடத்துவதற்கு வழி கோலியுள்ளார்.

தடுப்பூசிகளும், பத்வாக்களும்

தடுப்பூசிகளும், பத்வாக்களும்

குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் தேவையான தடுப்பூசிகளைப் போடும் திட்டம் பத்வாக்களால் பாதிக்கப்பட்டது.நம்பமுடியவில்லையா.
உண்மை, இது ஊடகங்களின் சதி அல்லது புரளி அல்ல.உத்திர பிரதேசத்தில் நடந்த உண்மை இது.நைஜீரியாவில் இது போல் பத்வாக்கள் தரப்பட்டன என்கிறது இந்தக் கட்டுரை. இதற்கெல்லாம் யாரைக் குறை சொல்வது, அமெரிக்காவையா இல்லை இஸ்ரேலையா இல்லை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளையா?.