க்ரீமி லேயரும்

க்ரீமி லேயரும்

க்ரீமி லேயர் குறித்து பூங்காவில் சில கருத்துக்கள் தொகுப்பாளரால் முன் வைக்கப்பட்டுள்ளன.க்ரீமி லேயரை உச்சநீதிமன்றம் இந்த்ரா ச்வ்கானி வழக்கில் முன் வைத்தது.9 நீதிபதிகளில் 8 பேர்அதை ஆதரித்து தீர்ப்பு வழங்கினர்.இதை ஏற்க மறுத்த நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்.

மண்டல்கமிஷன் பரிந்துரையின் பேரில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது பிற்பட்டோரில்முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிட்)ஆதரித்தது.நீதிபதிகள் க்ரீமி லேயரை ஏன் விலக்க வேண்டும் என்பதை தீர்ப்பில் விளக்கியுள்ளனர்.மத்திய அரசும்,மாநில அரசுகள் பலவும் அத்தீர்ப்பின் அடிப்படையில் க்ரீமி லேயரை வரையரைசெய்து இட ஒதுக்கீட்டினை அமுல் செய்துள்ளன.ஆனால் இது எளிதாக நடந்துவிடவில்லை.இந்த்ரா சவ்கானி 2 வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை விரிவாக அலசியது,இது குறித்தும் கேரளத்தில் இதை அமுல் செய்வதில் எழுந்த சர்ச்சை குறித்தும் இங்கு தகவல்கள்உள்ளன.
க்ரீமி லேயரை அமுல் செய்வது எளிதாக இல்லை.இருப்பினும் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகள் காரணமாக பல மாநிலங்கள் அதை விரும்பியோ விரும்பாமலோ அமுல் செய்தன. தமிழ் நாட்டில் அது அமுல் செய்யப்படவில்லை.

இங்குதான் சமூக நீதி என்ற பெயரில் ஆதிக்க சக்திகளை திருப்தி செய்வதை நியாயப்படுத்துவதை அனைத்து கட்சிகளும் ஆதரிக்குமே. இட ஒதுக்கீடு இங்கு ஒரு புனிதப் பசு. அதைக் கேள்வி கேட்பது, 69% இட ஒதுக்கீட்டினை விமர்சிப்பது போன்றவற்றைச் செய்ய உச்ச நீதி மன்றத்திற்கே அதிகாரம் கூடாது, கிடையாது என்று பேசும் 'பகுத்தறிவாளர்கள்'
இங்கு பலருண்டு, தமிழ் நாட்டிற்கு சாதகமாய் தீர்ப்பு தந்தால் சரி, இட ஒதுக்கீட்டினை கேள்வி கேட்டால் நீதிபதியின் சாதியைப் பேசுகின்ற கும்பலுக்குப் பெயர் பகுத்தறிவாளர்கள் என்றால்அதை விட அபத்தம் வேறில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், கருத்துக்கள் விமர்சிக்கப்ட்டுள்ளன. மிகவும் கடுமையானவிமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் கூறிய கருத்துக்களும்அலசி ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.அறிவார்ந்த விமர்சனத்திற்கும், வெற்று கூச்சலுக்கும்வேறுபாடு உண்டு.அரைகுறையாக புரிந்து கொண்டு அல்லது புரிந்து கொள்ளாமலே உச்சநீதிமன்றம்குறித்து கூச்சல் போடுவது அறிவார்ந்த விமர்சனமாகாது.அப்படிச் செய்வதும், அது போல் எழுதுவதும்எளிது.அதன் மூலம் சில அரிப்புகளை சொரிந்து கொடுக்கலாம்.

பூங்கா தொகுப்பாளர் சில அடிப்படை உண்மைகளையும், இட ஒதுக்கீடு குறித்த சட்டம், தீர்ப்புகளையும் புரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்பது என் கருத்து.

இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம்,நீதி மன்றங்கள்

இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்:

ஒரு கேள்வி பதில்

1, கேள்வி: இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற யோசனை சரியா ?பதில் : சரியல்ல. இப்படி சேர்த்த சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும் நீதிமன்ற பரீசலனை என்பதை அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி சேர்ப்பதை குறித்த மனுக்களை ஏற்று, விசாரித்து, தீர்ப்பளிக்க உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்ற கருத்தினை உச்ச நீதி மன்றம் ஏற்று, பல வழக்குகளில் உறுதி செய்துள்ளது. எனவே ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது என்பது சரியான அணுகுமுறையல்ல. அவ்வாறு சேர்த்தாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும்
2, கேள்வி : பாராளுமன்றம் ஏகமனதாக அவ்வாறு சேர்க்க முடிவு செய்தாலும் கூடவா ?பதில் : ஆம், ஏனெனில் பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர உரிமை இருக்கிறது, சட்டம் இயற்ற உரிமை இருக்கிறது, ஆனால் இவையெல்லாம் உச்ச நீதி மன்றத்தினால் ஆய்வு செய்யப்படலாம் என்பதால் முழு முற்றான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே, அதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது என்ற வாதம் பிழையானது.
கேள்வி: அப்படியானால் உச்ச நீதி மன்றத்தின் அதிகாரம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தினை விட விரிவானதுதானே?பதில்: அரசியல் சட்டம் பாராளுமன்றம் உச்ச நீதி மன்றத்தினை விட அதிக அதிகாரம் கொண்டது என்றோ, பாராளுமன்றத்தினை விட உச்ச நீதி மன்றம் அதிக அதிகாரம் கொண்டது என்றோ கூறவில்லை. அதனதன் அதிகாரத்தினை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த போதுமான வரம்பினை அது அளிக்கிறது. சட்டங்கள் செல்லதக்கதன்மை குறித்த இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. இதை அரசியல் சட்டம் வழங்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாட்டின் சட்டங்கள் போன்றவை. எனவே இந்தக் கேள்வியின் அனுமானம் தவறு
3, கேள்வி: இட ஒதுக்கீடு கொள்கை முடிவல்லவா, இதில் நீதிமன்றங்கள் தலையிடலாமா, அது சரியா.?பதில் : கொள்கை முடிவு எப்படி நிறைவேற்றப்படுகிறது, இந்த கொள்கை முடிவினை எடுக்க அதிகாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, எந்த அரசியல் சட்டப் பிரிவுகள் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நீதி மன்றங்கள் தலையிடலாமா என்ற கேள்வியே அபத்தம் என்பது புரியும். கொள்கை முடிவு தனி நபர் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் போது பாதிக்கப்படுவர் நீதிமன்றத்தினை நாட முடியும். மேலும் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் அரசியல் சாசனப் பிரிவுகள் அடிப்படை உரிமைகள் குறித்த பிரிவுகளில் துணைப் பிரிவுகளாக இடம் பெற்றுள்ளன. எனவே இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய ஒன்று. ஆகையால் இதில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தவறு என்று சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் இட ஒதுக்கீடு தொடர்பானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை கட்டுப்படுத்த செய்யப்பட்டது.
4, கேள்வி: அப்படியானால் இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு செய்யலாம், பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்றவைகளைக் கூட நீதிமன்றங்கள் தீர்மானிப்பது சரியாகுமா?பதில்: ஆம், அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிகள் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்புகளை வழங்குகிறது. ஒருபுறம் தனி நபர் அடிப்படை உரிமைகள், இன்னொருபுறம் பிற்பட்டோருக்கு போதிய வாய்ப்புகள் - இந்த இரண்டிற்குமிடையே ஒரு சமச்சீரான நிலையை கொண்டுவர உச்ச நீதிமன்றம் விழைகிறது. இதில் ஒன்று இன்னொன்றினை புறந்தள்ளவோ,மறைக்கவோ கூடாது என்று அது கருதுகிறது. அந்த அடிப்படையில் அது இட ஒதுக்கீடு குறித்த சட்டங்கள், விதிகள், கொள்கைகளை பரிசீலிக்கிறது.
5,கேள்வி:பிற்பட்டோரில் முற்பட்டோர் என்ற கருத்து அரசியல் சட்டத்தில் இல்லாத போது அதை நீதிமன்றம் எப்படி வலியுறுத்த முடியும்பதில்: நீதிமன்றங்கள் சட்டப்பிரிவுகளை, குறிப்பாக அரசியல் சட்டப் பிரிவுகளை விளக்கும் போது அவற்றை எப்படி அர்த்தப்படுத்துகின்றன என்பது முக்கியம்.அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் எல்லைகளை தன் தீர்ப்புகள் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. மிக முக்கியமான உதாரணம் மேனகா காந்தி வழக்கு.அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு விளக்கம் தரும் போது அல்லது அவற்றை அர்த்தப்படுத்தும் போது உச்ச நீதிமன்றம் பல புதிய கருத்துக்களை முன் வைத்துள்ளது. உதாரணமாக தகவல் அறியும் உரிமை வெளிப்படையாக அரசியல் சட்டப் பிரிவுகளில் இல்லை.உச்ச நீதிமன்றம் அதை ஒரு உரிமையாக தன் தீர்ப்புகள் மூலம் அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தியுள்ளது. அதே போல் பெண்கள் உரிமைகளை பொருத்தவரை பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து விரிவான ஒரு சட்டம் இல்லாத போது விசாகா வழக்கின் மூலம் உச்சநீதி மன்றம் சில விதிகளை, கோட்பாடுகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கியது. இது போல் பல உதாரணங்கள் தரலாம்.எனவே அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தும் போது தேவையான கருத்துக்களை முன்வைத்து உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. அரசியல் சட்டப்பிரிவுகளை அர்த்தப்படுத்துவது அதன் பணிகளில் ஒன்று.அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரங்களைத் தந்துள்ளனர்.
6,கேள்வி: அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளதா?பதில் : இல்லை, உதாரணமாக அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்ற,குறைக்க, நீக்க அதிகாரம் இல்லை. எனவே பாராளுமன்றத்தின் அதிகார வரம்பினையும் அரசியல் சட்ட ரீதியாகவே புரிந்து கொள்ள வேண்டும். பேராசிரியர் உபேந்திர பாக்ஸி கூறியதை அடியொற்றிக் கூறினால் பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அதிகாரம் இருக்கிறது, அரசியல் சட்டத்தினையே மாற்ற அதிகாரம் இல்லை. பாராளுமன்றம் கொண்டு வரும் மாற்றம் சரியானதா என்பதை முடிவு செய்ய வேண்டியது உச்ச நீதி மன்றம்.
7,கேள்வி: இட ஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு என்பது தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளதே?பதில்:ஹிந்துவில் வெளியான செய்தி அவ்வாறுதான் கூறுகிறது.இந்த்ரா சஹானி வழக்கில் (Indra Sawhney v. Union of India, 1992 Supp (3) SCC 217) உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சில சந்தர்ப்பங்களில் 50%க்கு அதிகமாக இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. அது பொதுவிதியல்ல, விதி விலக்கே.ஆனால் அது தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது.அத்தீர்ப்பு சுட்டிக்காட்டும் நிலையும், தமிழ்நாட்டின் நிலையும் வேறானவை. முஸ்லீம்களுக்கு 5%இட ஒதுக்கீடு செய்வது குறித்த வழக்கில் அவ்வாறு வழங்கப்பட்ட போது மொத்த இட ஒதுக்கீடு (46%+5%) 51% என்றானது.ஆந்திர அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 50%க்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி 51% செல்லும் என்று வாதிடப்பட்டது. அதை ஆந்திர உயர்நீதி மன்றம் ஏற்கவில்லை. மேலும் 50%க்கு அதிகமாக இருப்பது ஒரு விதிவிலக்கு, அதுவும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய விதிவிலக்கு. தமிழ் நாட்டின் நிலை வேறு. தமிழ் நாட்டில்இட ஒதுக்கீடு பல பத்தாண்டுகளாக, 1920களிலிருந்து அமுலில் உள்ளது. அது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு பின்னர் 69% என்றானது. மேலும் தமிழ் நாட்டில் கிரீமி லேயர் கோட்பாடு நடைமுறையில் இல்லை. தமிழக அரசு கொடுத்துள்ள தகவல்களின் படி69% இட ஒதுக்கீடு தமிழக மக்கள் தொகையில் 88% உள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடி மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு தரப்படுகிறது. தமிழக மக்கள் தொகையில் 88% இன்னும் கல்வி மற்றும் சமூக ரீதியாக பின் தங்கி இருக்கிறார்களா, அதுவும் அரசு கிட்டதட்ட 80 ஆண்டுகள் இட ஒதுக்கீட்டினை அமுல் செய்த பிறகும் , இட ஒதுக்கீடு தேவைப்படும் அளவிற்கு கல்வி மற்றும் சமூக ரீதியாக பின் தங்கி இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.கல்வி மற்றும் சமூக வளர்ச்சி குறீயீடுகள்/அளவீடுகளின் படி கிடைக்கும் நிலை வேறு. இவற்றில் தமிழ் நாடுபல மாநிலங்களை விட வெகுவாக முன்னேறியுள்ளது.ஆனால் இன்னும் மக்கள் தொகையில் 88% பேர் கல்வி ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் பின் தங்கியுள்ளனர் என்பது இந்த குறியீடுகள்/ அளவீடுகள் அடிப்படையிலான நிலைக்கு முரணாக உள்ளது.
8,கேள்வி:50% உச்சவரம்பு என்பதை உச்ச நீதிமன்றம் அண்மைக் காலமாகத்தானே கூறி வருகிறது ?பதில் : இல்லை, 1963 ல் பாலாஜி வழக்கில் 50% உச்சவரம்பினை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.(M.R. Balaji v. State of Mysore, AIR 1963 SC 649).அதன் பின்னர் பல வழக்குகளில் இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பினைக் குறித்து கூறியிருக்கிறது. இந்த்ரா சகானி வழக்கில் 50% உச்சவரம்பினை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன் பின் தரப்பட்டுள்ள தீர்ப்புகளிலும் இது கூறப்பட்டுள்ளது.அதே சமயம் எல்லா நீதிபதிகளும் எல்லா தீர்ப்புகளிலும் இதை வலியுறுத்தவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக தாமஸ் வழக்கில் பதவி உயர்வில் 60% இட ஒதுக்கீடு சரியே என்று நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டார். மிகப் பெரும்பான்மையான தீர்ப்புகள் இட ஒதுக்கீட்டிற்கு ஒரு உச்சவரம்பு தேவை என்பதை ஏற்கின்றன.
9, கேள்வி: பதவி உயர்வில் தலித்,பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதி மன்றத் தீர்ப்பினை குறித்து உங்கள் கருத்து என்ன?பதில் : இது குறித்து விரிவாக பின்னர் எழுதக்கூடும். இட ஒதுக்கீட்டினை பதவி உயர்வில் உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. அது குறித்து சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கலாம்.வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுகிறது. எனவே பொத்தாம் பொதுவாக பதவி உயர்வில் தலித்,பழங்குடியினருக்கு 22.5% என்று எல்லா நிலைகளிலும்/பதவிகளிலும் தர முடியாது.போதுமான பிரதிநித்துவம் இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.இப்படி நிபந்தனைகள் இருப்பதால் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை ஒரு பொது விதியாக அமுல் செய்வது கடினம். இத்தீர்ப்பினை அரசு அமுல் செய்ய வேண்டுமானால்இப்போதுள்ள விதிகளில் பல மாறுதல்களை கொண்டு வரவேண்டியிருக்கும், இது குறித்து புதிய ஆணைகளை/வழிகாட்டும் விதிகளைஇட வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல.
10,கேள்வி:அரசு இத்தீர்ப்பினை ஏற்க மறுத்து அரசியல் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முடியுமா?பதில்: கொண்டு வரலாம். அவையும் நீதிமன்றத்தின் பரீசீலனைக்கு உட்படுத்தப்படலாம். இப்படி ஒரு விஷயத்திற்கு எத்தனை முறைதான் நீதிமன்றத்தினை அணுகுவது, எத்தனை முறைதான் அரசியல் சட்டத்தினை திருத்துவது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிட்டதட்ட 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டு வரலாம். அத்தகைய இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவோரின் கருத்துக்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு கருத்தொற்றுமை ஏற்படுத்த அரசு முயலலாம். அதன் அடிப்படையில் சுமுகத் தீர்வு காண முடியும். அரசியல் சட்டத் திருத்தம் என்பதற்கு வரையரையே இல்லாமல் ஒரு கேலிக் கூத்தாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை. எனவே 100 திருத்தங்களைக் கூட அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் செய்ய தயங்க மாட்டா. எனவே திருத்தங்கள், வழக்குகள்,தீர்ப்புகள் என்று சக்கரம் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பூங்காவும் அப்சல் தண்டனை குறித்த சர்ச்சையும்

பூங்காவும் அப்சல் தண்டனை குறித்த சர்ச்சையும்

இந்த வார பூங்காவில் மரண தண்டனைக்கு எதிரான கட்டுரை, அப்சல் தண்டனையில் அப்சலுக்கு ஆதரவாக மூன்று கட்டுரைகள், எதிராக ஒரு கட்டுரை என்று வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து இட்டிருக்கிறார்(கள்). தொகுப்பாளர் குறிப்பே அவர்(கள்) எந்த கருத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள்என்பதை காட்டுகிறது. அப்சலுக்கான தண்டனை குறித்து நான் பதிவுகள் இட்டிருக்கிறேன்.பிற வலைப்பதிவாளர்கள் தராத தகவல்களையும் கொடுத்திருக்கிறேன். திண்ணையில் எழுதிய கட்டுரையையும் வலைப்பதிவில்
இட்டிருக்கிறேன். பிரபு ராஜதுரை இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார்.
இது போல் வேறு சில பதிவுகளையும் என்னால் குறிப்பிட முடியும்.
பூங்காவில் இவற்றிலிருந்து ஒன்று கூட இடம் பெறவில்லை.

ஒரு பக்க சார்பாக மூன்று , இன்னொரு பக்க சார்பாக ஒன்று என்று கொடுத்திருப்பதன் மூலம்எதை அவர்(கள்) நிரூபிக்க முயல்கின்றார்(கள்). பூங்கா இந்த சர்ச்சையில் என் பதிவுகளிலிருந்து ஒன்றைக் கூட,தெரிவு செய்யாததன் மூலமும், ராஜதுரையின் ஒரு பதிவினைக் கூட தெரிவு செய்யாதன் மூலமும், வேறு சில பதிவுகளை தவிர்த்திருப்பதன் மூலமும் சில கருத்துக்களுக்கு பூங்காவில் இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. என் பதிவுகள் தவிர திண்ணையிலும் என் கருத்துக்கள் உள்ளன.

எனவே எப்படி பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாதோ அது போல் பூங்கா சில கருத்துக்கள் இல்லாதது போல் தொகுத்துக் கொடுத்தால் அவை இல்லாமல் போய்விடமாட்டா.

உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்

உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்

உச்ச நீதி மன்றம் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய நிர்ப்பந்ததில் மத்திய அரசுஇருக்கிறது (1). .கிரீமி லேயர் எனப்படும் பிற்பட்டோரில் முற்பட்டோர் குறித்து அரசு ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும்.பல மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்திவிட்டன, மேலும் மத்திய அரசுப் பணிகளுக்கும் இது பொருந்தும்.உச்ச நீதி மன்றம் மண்டல் கமிஷன் வழக்கில் இதை ஒரு நிபந்தனையாக நிர்யணத்திருந்தது. எனவே இப்போது க்ரீமி லேயர் என்பதை அரசு ஏற்கமாட்டோம் என்று கூறினால் அதை நீதிமன்றம் ஏற்குமா என்பது சந்தேகமே.

மேலும் சட்டம் நிறைவேறாவிட்டாலும் அரசு ஒரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை கொண்டுவரமுடியும். சட்டம் நிறைவேற தாமதமானால் அல்லது சிக்கல் எழுந்தால் அரசு ஒரு ஆணை மூலம்முதலில் இட ஒதுக்கீட்டினை நிறைவேற்றி விட்டு பின்னர் சட்டம் இயற்றலாம் அல்லது சட்டம்இயற்றாமலும் விட்டு விடலாம். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதிருந்த அரசு ஒரு ஆணையின் மூலம் நிறைவேற்றியது, சட்டம் கொண்டுவரவில்லை. பொதுவாக அரசு சட்டம் இயற்றித்தான் இதை செய்ய வேண்டும் என்பதில்லை. இப்போது சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைகுழுவின் பரீசலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். குழு மாற்றங்கள் தேவையில்லை என்றும் கூறலாம்.அக்குழுவின் அறிக்கையையும் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு கொண்டு வரவுள்ள இட ஒதுக்கீட்டினைப் பொறுத்தவரை சட்டத்தினை பாராளுமன்றம் ஏற்றாலும், அதுவும் உச்சநீதி மன்ற ஆய்விற்குட்பட்டதே.

இப்போது இட ஒதுக்கீட்டினைப் பொருத்தவரை மூன்று மிக முக்கியமான சட்டக் கேள்விகள் உள்ளன.

1, 93வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லதக்கதா, தனியார் கல்வி நிறுவனங்களிலும்இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வரமுடியுமா, இது உச்ச நீதிமன்றம் இனாம்தார் வழக்கில் தந்த தீர்ப்பிற்கு முரணானதா இல்லையா
2, இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு விதிவிலக்கு தந்ததுசெல்லுமா, செல்லாதா
3, அரசு கொண்டுவரவுள்ள (மத்திய அரசின் நிர்வாகத்தில்,நிதி உதவி பெறும் உயர்கல்விநிறுவனங்களில்) பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா

93வது சட்டத்திருத்தம் செல்லும் என்றாலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்குவிதிவிலக்கு தந்தது செல்லாது என்று நீதிமன்றம் கூறலாம். ஆனால் உச்சநீதி மன்றபெஞ்சின் தீர்ப்பினை நிராகரிக்கும் இத்திருத்தத்தினை இன்னொரு பெஞ்ச செல்லும்என்று கூறுமா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இத்திருத்தம் தனியார் கல்விநிறுவனங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதால் இதை எதிர்த்து வலுவானவாதங்கள் முன்வைக்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெறாவிட்டாலும்அவை இட ஒதுக்கீட்டிற்கு கட்டுப்பட வேண்டும் என்பதை ஏற்றால் நாளை இதே தர்க்கத்தினை அரசு தனியார் துறைக்கும் விரிவுபடுத்தலாம். அரசிற்கு அவ்வாறு தலையிடஉரிமை உண்டா, இது அடிப்படை உரிமைகளை பாதிக்காதா என்ற கேள்வியும்எழுகிறது. இந்த சட்டதிருத்தம் சரியானதல்ல என்பது என் கருத்து.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை, பிற்பட்ட ஜாதிகளின் பட்டியலில் புதிதாகஜாதிகளைச் சேர்க்கமாட்டோம், மண்டல் கமிஷன் வழக்கில் பின்பற்றபட்ட பட்டியலைத்தான் பயன்படுத்துவோம் என்றும் அரசு கூறியுள்ளது. மத்திய அரசு மத அடிப்படையில்இட ஒதுக்கீடு இல்லை என்று தெரிவித்த பின் மாநில அரசுகள் அத்தகைய ஒன்றைநிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரையில் முக்கியமான பரிந்துரை அமுல் செய்யப்பட்ட பின் பல ஜாதிகள் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.பல மாநிலங்களில் பிற்பட்ட ஜாதிகள் பட்டியல் இன்னும் விரிவாக்கப்பட்டது. இந்தப் பட்டியல் மத்திய அரசின் பட்டியலை விட விரிவானது. ஆனால் மத்திய அரசு தான் பின்பற்றும் பட்டியலைத்தான் இட ஒதுக்கீட்டிற்காக பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளது. இது மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆனால் மத்திய பட்டியலில் இடம் பெறாத ஜாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பயன் பெற முடியாது என்ற நிலையை உருவாக்குகிறது.இதை எதிர்த்து யாரேனும் வழக்குத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. மாநில அரசு பட்டியல் ஒன்று, மத்திய அரசு பட்டியல் ஒன்று என்று இரண்டு இருந்தால் பிற்பட்டோர் என்பதன் வரையரை என்ன, எந்த அடிப்படையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இது போல் பல கேள்விகள் இருக்கின்றன.

மேற்கூறியவை தவிர உச்சநீதிமன்றத்தின் முன் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இவற்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன.தீர்ப்புதான் வெளியாக வேண்டும்.

தமிழ் நாட்டினைப் பொறுத்தவரை சில வழக்குகள் நிலுவையில் (உ-ம் அண்மையில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய இட ஒதுக்கீட்டு சட்டம், 69% இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம்,இச்சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது) உள்ளன. இதில் 69% இட ஒதுக்கீட்டிற்குவகை செய்யும் சட்டம், 9 வது அட்டவணையில் அதை சேர்த்தது குறித்த வழக்குகள்விரைவில் விசாரணைக்கு வரவிருக்கின்றன. 2006-2008ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்து மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கும்என்று எதிர்பார்க்கலாம்.

(திண்ணையில், என் வலைப்பதிவில் நான் இட ஒதுக்கீடு குறித்து எழுதியுள்ள கட்டுரைகளையும்,குறிப்புகளையும் இத்துடன் சேர்த்துப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்).

(1) "You [Government] go on say that you will implement the quota policy. Have you collected the data before making such announcements?" Referring to the counter-affidavit, the Bench said: "You announce the policy without full data. You play the game and frame the rules later. You are saying that the quota for SC/ST and OBC are interchangeable. On what basis you are saying this? Further, you have not said anything about the `creamy layer'." http://www.hindu.com/2006/10/17/stories/2006101705061200.htm

அப்சல் வழக்கு: அம்பலமாகும் உண்மைகள்

அப்சல் வழக்கு: அம்பலமாகும் உண்மைகள்

அப்சல் சார்பாக முன் வைக்கப்படும் வாதம் அவருக்கு உரிய நீதி கிடைக்கவில்லை,உயர்நீதி மன்றத்தில் அவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் அவருக்கு ஊசி போட்டுமரண தண்டனை தர வேண்டும் என்றார். இந்தப் பொய்களை திரும்பக் திரும்பத்சொல்வதன் மூலம் அதை உண்மை என நிறுவ முயல்கிறது ஒரு தரப்பு. அதற்குதமிழ் வலைப்பதிவுகளிலும் ஆதரவு இருக்கிறது.

அப்சல் சார்பாக வாதிட்ட காலின் கன்சால்வேஸ் இதை மறுத்துள்ளார்.ஒரு கடிதம்மூலம் தன் எதிர்வினையைத் தந்துள்ளார். மேலும் தனக்கு ராம் ஜெத்மலானி எழுதியுள்ளகடிதத்தினையும் அதில் தந்துள்ளார். நந்திதா அக்சர் கூறுவது பச்சைப் பொய் என்றுஅதிலிருந்து புரிகிறது. வலைப்பதிவுகளில் ஒருவர் அப்சல் மனைவி எழுதியது என்றஒன்றை சில பதிவுகளில் இட்டார். அதில் இருக்கும் தகவல்களை காலின் மறுத்துள்ளார்.

"When I appeared for Afzal in the High Court, I found that there was nobody to help me in those days except for advocate Nitya who was more familiar with the case than I was since she had appeared in the Trial Court. Apart from her I found nobody interested in helping Afzal. I believe campaigns were conducted to help the other accused and also to raise money for them, but not one person met me during the six months of the day to day proceedings in the High Court. The expenses of the case came to about Rs. 40,000/- because volumes of materials had to be Xeroxed. About half that amount was reimbursed by Afzal's cousin. I am putting this on record to emphasize that all the current champions of Afzal coming on television were nowhere to be seen when they were needed most.

You must remember that in those days the High Court arguments were being covered by a battery of journalists on a day-to-day basis. Had I mentioned to the Court that I want Afzal to die by lethal injection that would have made sensational headlines. I met Afzal in jail thrice. On the second occasion he told me that someone had informed him that I was asking for him to be put to death by lethal injection. I told him that I would never argue such a position. He was satisfied on that explanation and the issue was not raised with me thereafter."

பொய்ப்பிரச்சாரம் செய்யும் போலி மனிதாபிமானிகள் இந்த உண்மையை ஏற்பார்கள்என்று நான் நம்பவில்லை.நாளை அவர்கள் வேறு புளுகுகளுடன் வேறு சில கோஷங்களை இதையே வேறு வார்த்தைகளில் முன் வைப்பார்கள்.இந்தக் கடிதம் இல்லாதது போல் எழுதுவார்கள்.

அப்சல் குறித்த சர்ச்சையும்...

அப்சல் குறித்த சர்ச்சையும்...

அப்சல் குருவிற்கு ஆதரவாக இன்று வைக்கப்படும் சில வாதங்களுக்கு உச்ச நீதி மன்ற தீர்ப்பில்பதிலிருக்கிறது. அவர் தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் இல்லை என்பதை ஏற்கும் நீதிபதிகள் அவர்அந்த சதித் திட்டத்திற்கு எப்படி உடந்தையாக இருந்தார் என்பதையும் விளக்குகிறார்கள். மேலும்அவருக்கு எதிராக உள்ள சாட்சியங்களையும் விரிவாக அலசியிருக்கிறார்கள்.அந்த சாட்சியங்கள்வெறும் தொலைபேசி உரையாடல்(கள்) மட்டுமல்ல.அதே போல் அவருக்கு நீதி மறுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் ஏற்கவில்லை.அதற்கான விளக்கமும் தீர்ப்பில் இருக்கிறது. ஆனால் சிலவலைப்பதிவாளர்கள் மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் நிராகரித்த வாதங்களையே முன்வைக்கிறார்கள். அது மட்டுமின்றி உச்ச நீதி மன்றம் சந்தேகத்தின் பலனை யாருக்குத் தந்தது,யாரை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி(கள்) என்று தீர்மானித்தது என்பதை அவர்கள் குறிப்பிடுவதேயில்லை.

இப்படி விவாதிப்பவர்கள், அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ள முயற்சிக்காமல்பிறரை குற்றம் சாட்ட முயல்பவர்களின் பொது புத்தி எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதுஅவர்களின் பதிவுகளையும், அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களையும் படித்தால் தெரிகிறது.

காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்பதில்லை என்ற மிக எளிய அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் ஒருவர் எழுதுகிறார்.சித்திரவதை போன்றவற்றிற்காக காவல் துறை மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றங்கள் நட்ட ஈடு வழங்கியுள்ளன (e.g.Saheli V. Commissioner of Police,Nilabati Behra V. State of Orissa) .காவல் துறை சித்திரவதை மாற்றும் கொடுமைகளைக் குறிப்பிடும் கிலானி இதை முன்னுதாரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

அரசியல் சட்ட டார்ட் (constitutional tort) என்பது இந்தியாவில் இருக்கிறது.அரசன்/அரசு தவறு செய்யாது என்ற கோட்பாடு இந்தியாவில் நிராகரிக்கப்பட்டு பலஆண்டுகள் ஆகி விட்டன. (தேவையானால் இது குறித்து பின்னர் எழுதுகிறேன், வழக்குகளைஉதாரணம் காட்டுகிறேன்). இதையெல்லாம் பல வலைப்பதிவர்கள் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. நான் கூறுவது தவறு, இந்தியாவில் constitutional tort இல்லை, அந்தக் கோட்பாடு இங்கு செல்லதக்கது அல்ல என்று கருதுபவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.விவாதிக்க நான் தயார்.

ஒரு வகையில் இதையெல்லாம் எழுதுவது கூட வீண் என்றே தோன்றுகிறது. பல பதிவுகளைப் படித்த பின் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியது. என் கருத்துக்களை ஏற்கனவே எழுதிவிட்டேன். மீண்டும் அடுத்த வாரம் என் கருத்துக்களை எழுதுகிறேன்.

மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

வலைப்பதிவர்கள் சிலர் மட்டையடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் பொருட்டு
சில மகா வாக்கியங்கள் கீழே.
1,இன்றைய சரி நாளை தவறாக இருக்கலாம்.நாளைய தவறு நேற்று சரியாகவும், இன்று சரியில்லாமலும் இருக்கலாம்.எது சரி என்று யார் சொல்ல முடியும்.எனவே அப்சலுக்குமரண தண்டனை கூடாது

.2, நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அற நோக்கில் அநீதியாக இருக்கலாம். எதையும் வெறும் சட்டக் கண்ணோட்டத்திற்கு அப்பால் புரிந்துகொள்ள வேண்டும். அறக்கணோட்டம் திராவிட அறக் கண்ணோட்டம் என்று பொருள் கொள்க.திராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.எனவே அப்சலை தூக்கில் போடுவது தவறு

.3,மரண தண்டனை சட்டத்தின் தீர்ப்புதான், சமூகத்தின் தீர்ப்பல்ல.சமூகம் சட்டத்தினை விடஉயர்ந்தது.சமூகத்திற்காக சட்டமே, அன்றி சட்டத்திற்காக சமூகம் இல்லை

4,வரலாறுதான் எது சரி, தவறு என்று தீர்மானிக்கும். எனவே அப்சல் குறித்து வரலாறு தீர்மானிக்கட்டும். சட்டமோ,நீதிமன்றமோ தீர்மானிக்க வேண்டாம்

5,தேசத்துரோகம் என்று கூறுவது தவறு, இந்தியா ஒரு தேசமாக உருவாகவே இல்லை,இது சாதிய சமூகமாக இருக்கிறது, அப்படி இருக்கும் போது தேசத்துரோகம் எப்படிசாத்தியமாகும்.

6,பாரளுமன்றம் ஒரு கட்டிடம்தான்.காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட காலனியத்தின்குறியீடான பாராளுமன்றத்தினை தகர்ப்பதா தவறு.

7,கொல்லாமையே திராவிடர் அறம், மரண தண்டனையை புகுத்தியது ஆர்ய வந்தேறிகள்.மரண தண்டனை திராவிட,தமிழர் நாகரித்திற்கு முரணானது.எனவே அப்சலை தூக்கிலடக்கூடாது.

தேவைப்பட்டால் இன்னும் வரும்....

திண்ணையில் வெளியான கட்டுரை

திண்ணையில் வெளியான கட்டுரை

திண்ணையில் வெளியான கட்டுரை கீழே.இதற்கும் வலைப்பதிவில் வெளியானதற்கும் வேறுபாடுகள் உள்ளன.அவுட்லுக்கில் வெளியாகியுள்ள நந்திதா அக்ஸர் கட்டுரை குறித்தும், வேறு சில கேள்விகள் குறித்தும் நாளை எழுதுகிறேன். கீலானி மீதான வழக்கு குறித்து வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன் அல்லது சுட்டியாவது கொடுத்திருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------

முகமது அப்சல் குருவின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரியும், அவருக்கு கருணை காண்பித்து தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும் சில கட்சிகள், தனி நபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அவரை தூக்கிலிட்டால் அது இந்திய-பாகிஸ்தான் அமைதி நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிட்)யின் மூத்த தலைவரும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் அவரது விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற வாதத்தினை முன் வைக்கின்றனர். அவர் தீவிரவாத இயக்கத்தினைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவருக்கு இந்த தண்டனை தரக்கூடாது என்பது இன்னொரு கருத்து.ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் படித்தால் மேற்க்கூறிய வாதங்கள் வலுவற்றவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்(1).
அன்று தீவிரவாதிகள் செய்ய நினைத்தது என்ன? பாராளுமன்றத்தினை தாக்கி பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்வது அதன் மூலம் நாட்டில் பதற்றத்தினையும், குழப்பத்தினையும் ஏற்படுத்துவது. பிரதமர் உட்பட பல அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பது எளிதல்ல. நிலவும் குழப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு தீவிரவாதிகள் வேறு பல தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும். அரசியல் குழப்பம் ஏற்பட்டு அது மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியிருக்ககூடும். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்களோ, எல்லைக்கு அப்பாலிருந்து எந்த விதங்களில் கட்டளைகள்,உதவிகள் வந்தனவோ- யாருக்குத் தெரியும். எனவே பாராளுமன்றத்தினை தாக்குவது என்பது சாதாரணமான செயலா இல்லை தேசத் துரோகமா என்பதை முடிவு செய்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை.
இச்செயல் இந்தியக்குடியரசிற்கும், அதன் குடிமக்களுக்கும் எதிரான வன் செயல். ஒரு தேசத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கொல்லும் முயற்சிக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அவரை எப்படி நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும். அன்று போராடி உயிர் நீத்த காவலர்கள் 11 பேர். அவர்களின் அளப்பரிய தியாகத்தினை நாம் மதிக்க வேண்டுமா இல்லை, அதை அர்த்தமற்றதாக்கும் வகையில் , ஒரு கொடுஞ்செயலுக்கு உதவியவருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா. பொது மன்னிப்பு வழங்கினால் எந்த முகத்துடன் தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுங்கள் என்று ராணுவத்தினரையும், காவலர்களையும ் நோக்கி ஆட்சியில் இருப்பவர்கள் கூற முடியும். இந்த வழக்கில் மரண தண்டனை ஏன் நியாயமானது என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுள்ளது. முறையான விசாரணை நடத்தப்பட்டு, மூன்று நீதிமன்றங்கள் விசாரித்த வழக்கு இது. அப்சல் சார்பிலும், குற்றம் சாட்டப்பட்ட பிறர் சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதாடினர். உச்ச நீதிமன்றமும், உயர் நீதி மன்றமும் தன்னிச்சையாக அளித்த தீர்ப்பல்ல.(2)
மனித உரிமைகள் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்பட்டு கொலைகள் செய்வோரை ஆதரிப்பது மனித உரிமைகள் தத்துவத்திற்கே விரோதமானது. ஏனெனில் மனித உரிமைகள் அனைவருக்கும் உண்டு. ஒரு சிலர் ஒரு பெரிய சதிதிட்டத்தினை தீட்டி, பாராளுமன்றத்தினை தாக்குவார்கள், அவர்களுக்கு மன்னிப்பு தர வேண்டும் என்றால் அது கேலிக்கூத்து. இந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு சராசரி இந்தியரின் மனித உரிமைகள், உயிர்களை விட தீவிரவாதிகளின் உரிமைகளும், உயிர்களும் அதிக முக்கியத்துவம், மதிப்பு வாய்ந்தவை என்றால் அதை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.(3)
அரிதினும், அரிதாக வழங்கப்படும் மரண தண்டனை இந்த வழக்கில் பொருத்தமான தண்டனைதான். இதை நிறைவேற்றுவதே சரியான முடிவு. மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள், இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்று தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம். மேலும் மன்னிப்பு வழங்குவது இந்தியா தீவிரவாதத்தினை ஒரு பெரிய பிரச்சினையாக கருதவில்லை என்றே பிற நாடுகளால் பொருள் கொள்ளப்படும். பாராளுமன்றத்தினை, அதுவும் பிரதமர் உட்பட உறுப்பினர்கள் அதில் அமர்ந்திருக்க, அவை தன் அலுவல்களை செய்யும் போது தாக்குவதை நாம் மன்னித்தால் உலகம் நம்மை எப்படி மதிக்கும்.
(1) முழுத் தீர்ப்பு (சுமார் 150 பக்கங்கள்) இணையத்தில் இந்த முகவரியில் கிடைக்கிறது.
http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=27092
(CASE NO.:Appeal (crl.) 373-375 of 2004
PETITIONER: STATE (N.C.T. OF DELHI)
RESPONDENT: NAVJOT SANDHU@ AFSAN GURU
DATE OF JUDGMENT: 04/08/2005
BENCH:P. VENKATARAMA REDDI & P.P. NAOLEKAR
JUDGMENT :WITH
CRIMINAL APPEAL Nos. 376-378 OF 2004
STATE (N.C.T. OF DELHI)  APPELLANT
VERSUS
SYED ABDUL REHMAN GILANI  RESPONDENT
CRIMINAL APPEAL Nos. 379-380 OF 2004
SHAUKAT HUSSAIN GURU  APPELLANT
VERSUS
STATE (N.C.T. OF DELHI)  RESPONDENT
CRIMINAL APPEAL NO. 381 OF 2004
MOHD. AFZAL  APPELLANT
VERSUS
STATE (N.C.T. OF DELHI)
"IN THE RESULT, we dismiss the appeal filed by Mohd. Afzal and the death sentence imposed upon him is hereby confirmed. The appeal of Shaukat is allowed partly. He stands convicted under Section 123 IPC and sentenced to undergo RI for 10 years and to pay a fine of Rs. 25,000/- and in default of payment of fine he shall suffer RI for a further period of one year. His conviction on other charges is hereby set aside. The appeals filed by the State against the acquittal of S.A.R. Gilani and Afsan Guru are hereby dismissed."
இத்தீர்ப்பில் தீவிரவாதம், தேசத்தின் மீது போர் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.மேலும் அப்சலுக்கும் இத்தாக்குதலுக்கும் இடையே உள்ள தொடர்பினையும் நீதிபதிகள் விரிவாக ஆராய்கிறார்கள். அவர் எப்படியெல்லாம் உதவினார் என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களையும் இத்தீர்ப்பினைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேம்போக்காக இத்தீர்ப்பினை விமர்சிப்பது எளிது. அவர் இதற்கு உடந்தையாகத்தான் இருந்தார், எனவே அவருக்கு மரண தண்டனைத் தந்திருக்கக் கூடாது என்றெல்லாம் வாதங்கள் எழுகின்றன.தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. ஏன் மரண தண்டனை தரப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.
(2) இதையெல்லாம் குறிப்பிட்ட காரணம் அருந்ததி ராய் என்கிற 'அதி மேதாவி' இவ்வழக்கு விசாரணையை குறை கூறி, பாராளுமன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் எதைச் சொன்னாலும் கை தட்டவும், அதை ஆதரித்து எழுதவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு இது வேத வாக்குப் போன்றது. எனவே இந்த வாதம் தமிழில் பலரால் முன் வைக்கப்பட்டு, ராய் மேற்கோள் காட்டப்பட்டால் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.
(3) இந்தியாவில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள்/ஆர்வலர்கள் மனித உரிமைகள் குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருந்தாலும் தவறான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். நந்திதா ஹக்ஸர் நாகாலாந்தில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடினார்.அதை நான் மதிக்கிறேன், அதே சமயம் அவரது அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்க முடியாது.சிவில் உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (பியுசில்) எடுக்கும் சில நிலைப்பாடுகளையும் நான் ஏற்கவில்லை.அதன் பணிகளை மதிக்கிறேன். சில அமைப்புகள் மத சார்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குகின்றன. இது தவறான முன்னுதாரணமாக முடியும். பொதுவாக ஹிந்த்துவ எதிர்ப்பில் தெளிவாக இருக்கும் அமைப்புகள், தனி நபர்கள் தீவிரவாதம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன். மேலும் மரண தண்டனை எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்திலும் அவர்கள் இதை நோக்குவதால் தவறான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்

மரண தண்டனையா, மன்னிப்பா ?

மரண தண்டனையா, மன்னிப்பா ?

முகமது அப்சல் குருவின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரியும், அவருக்கு கருணைகாண்பித்து தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும் சில கட்சிகள்,தனி நபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அவரைதூக்கிலிட்டால் அது இந்திய-பாகிஸ்தான் அமைதி நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும்கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிட்)யின் மூத்ததலைவரும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். இன்னும்சிலர் அவரது விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற வாதத்தினை முன் வைக்கின்றனர்.அவர் தீவிரவாத இயக்கத்தினைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவருக்கு இந்த தண்டனைதரக்கூடாது என்பது இன்னொரு கருத்து.

ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் படித்தால் மேற்க்கூறிய வாதங்கள் வலுவற்றவைஎன்பதைப் புரிந்துகொள்ளலாம். அன்று தீவிரவாதிகள் செய்ய நினைத்தது என்ன? பாராளுமன்றத்தினை தாக்கி பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்வது அதன் மூலம் நாட்டில் பதற்றத்தினையும், குழப்பத்தினையும் ஏற்படுத்துவது. இது சாதாரணமான செயலா இல்லை தேசத் துரோகமா என்பதை முடிவு செய்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. இச்செயல் இந்தியக் குடியரசிற்கும், அதன் குடிமக்களுக்கும் எதிரான வன் செயல். ஒரு தேசத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கொல்லும் முயற்சிக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அவரை எப்படி நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும். அன்று போராடி உயிர் நீத்த காவலர்கள் 11 பேர். அவர்களின் அளப்பரிய தியாகத்தினை நாம் மதிக்க வேண்டுமா இல்லை அதை அர்த்தமற்றதாக்கும் வகையில் , ஒரு கொடுஞ்செயலுக்கு உதவியவருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா. பொது மன்னிப்பு வழங்கினால் எந்த முகத்துடன் தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுங்கள் என்று ராணுவத்தினரையும், காவலர்களையும் நோக்கி ஆட்சியில் இருப்பவர்கள் கூற முடியும். இந்த வழக்கில் மரண தண்டனை ஏன் நியாயமானது என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுள்ளது. முறையான விசாரணை நடத்தப்பட்டு, மூன்று நீதிமன்றங்கள் விசாரித்த வழக்கு இது.

மனித உரிமைகள் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும், நாட்டின்ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்பட்டு கொலைகள் செய்வோரைஆதரிப்பது மனித உரிமைகள் தத்துவத்திற்கே விரோதமானது. ஏனெனில் மனித உரிமைகள்அனைவருக்கும் உண்டு. ஒரு சிலர் ஒரு பெரிய சதிதிட்டத்தினை தீட்டி, பாராளுமன்றத்தினைதாக்குவார்கள், அவர்களுக்கு மன்னிப்பு தர வேண்டும் என்றால் அது கேலிக்கூத்து. இந்தமனித உரிமை ஆர்வலர்களுக்கு சராசரி இந்தியரின் மனித உரிமைகள், உயிர்களை விடதீவிரவாதிகளின் உரிமைகளும், உயிர்களும் அதிக முக்கியத்துவம், மதிப்பு வாய்ந்தவைஎன்றால் அதை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.

அரிதினும், அரிதாக வழங்கப்படும் மரண தண்டனை இந்த வழக்கில் பொருத்தமான தண்டனைதான்.இதை நிறைவேற்றுவதே சரியான முடிவு. மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.