இட ஒதுக்கீடும், சமூக நீதியும்

இட ஒதுக்கீடும், சமூக நீதியும்

திசைகள் ஜூலை 2006

ஐஐடிகள், ஐஐஎம் களில் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை அரசு அறிவித்தது இடஒதுக்கீடு குறித்த விவாதத்தினையும், இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பினையும் ,ஆதரவினையும் கிளப்பியிருக்கிறது. இதில் பல்வேறு கருத்துக்கள், தீர்வுகள் முன் வைக்கப்படுள்ளன.இந்த இட ஒதுக்கீட்டினை கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் ஆதரிக்கின்றன. பிற்பட்டோரில் முன்னேறியவருக்கு இதிலிருந்து விலக்கு வேண்டும் என்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா) கோரினாலும் அரசுஅது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை.முற்பட்டோரில் ஏழைகள்/பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோர் இட ஒதுக்கீடு குறித்து சிலர் பேசியுள்ளனர்.ஆனால் இது குறித்து எந்தக் கட்சியும் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை.இந்த இட ஒதுக்கீடு நீட்டிப்பினை மாணவர்கள் இயக்கம் எதிர்க்கிறது, அத்துடன் இருக்கின்ற இட ஒதுக்கீட்டினை மறு பரீசலனைச் செய்யக் கோருகிறது. சமூக நீதி தேவை, ஆனால் அதற்கு இந்த இட ஒதுக்கீடு நீட்டிப்பு சரியான முடிவல்ல என்ற நிலைப்பாட்டினை சிலர் முன் வைத்துள்ளனர். இதில் தேசிய அறிவுக் கமிஷனின் தலைவர் சாம் பித்ரோதா, (முன்னாள் உறுப்பினர்கள்) பானு பிரதாப் மேத்தா, அன்ட்ரே பெத்த்யில் வெளியிட்டுள்ள அறிக்கைகள்,கடிதங்கள் குறிப்பிடதக்கவை. பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சோயா ஹசன் போன்றவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு மாணவர்/மாணவியையும் அவர்கள் குடும்ப நிலை, படித்த பள்ளி போன்றவற்றின் அடிப்படையில் சில அளவுகோல்கள் கொண்டு வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் அவர்கள் எந்த அளவுபிற்பட்டோர் என்பது தீர்மானித்து, அதைக் கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாம் என்ற திட்டத்தினை யோகேந்திர யாதவ், சதிஷ் தேஷ்பாண்டே முன் வைத்துள்ளனர். இது போன்ற ஒரு முறையை புருஷோத்தம் அகர்வால் முன் வைத்துள்ளார். இது தவிர அமெரிக்க மாதிரியான affirmative action போன்ற ஒன்றும் பரிந்துரைக்கப்படுகிறது. மாற்றுகளை முன் வைத்துள்ள யாதவ்,தேஷ்பாண்டே போன்றவர்கள்இட ஒதுக்கீட்டின் விரிவுபடுத்துதலை ஏற்கிறார்கள். தேசிய அறிவுக் கமிஷன் உறுப்பினர் புஷ்பா பார்கவாசில நிபந்தனைகள், திட்டங்களுடன் இதை ஏற்கிறார். இன்னொரு உறுப்பினர் ஜயாதி கோஷ் விரிவுபடுத்தலை ஆதரிக்கிறார்.மத்திய அரசின் வேலைகளில் (சில விதிவிலக்குகள் தவிர) 27% இட ஒதுக்கீடு பிற்பட்டோருக்கு1990களின் துவக்கத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையானமாநிலங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது, இது மாநிலத்திற்கு மாநிலம்மாறுபடுகிறது. இட ஒதுக்கீட்டிற்கு பிற்பட்டோர் ஜாதி பட்டியல்களை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன.மத்திய அரசு தேசிய பிற்பட்டோர் நலக் கமிஷன் தயாரித்த பட்டியலை பின்பற்றுகிறது. இந்தப்பட்டியல்களில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்பட்ட ஜாதியாக கருதப்படும் ஜாதி1, இன்னொரு மாநிலத்தில் உள்ள பட்டியலில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை,2, அதே மாநிலத்தின் உள்ள பிற்பட்ட ஜாதிகள் என்று மத்திய அரசு பின்பற்றும் பட்டியலில்இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மத்திய அரசு வேலைகளுக்கு பிற்பட்டோரில்முற்பட்டோர் (creamy layer) என்ற அடிப்படை பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்கள் தாங்கள்வகுத்துள்ள அளவுகோல்களின்படி யார் பிற்பட்டோரில் முற்பட்டோர் என்று கருதப்படுவர் என்பதைவரையறை செய்கின்றன. இங்கும் கருத்து ஒன்று அளவுகோல்கள் வேறு. வேறு வார்த்தைகளில்சொன்னால் ஒரு மாநிலத்தில் ஆண்டு தோறும் 4 லட்சம் வருமானம் பெறுபவர் பிற்பட்டோர்பட்டியலில் இடம் பெற முடியும், ஆனால் மத்திய அரசின் அளவுகோலின்படி அவர் பிற்பட்டோர்என்று கருதப்பட மாட்டார். தமிழ் நாட்டில் இந்த அளவுகோல் இல்லை. ஒருவர் ஆயிரம் கோடிவருமானம் பெற்றாலும் அவர் பிறந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி என்று பட்டியலிடப்பட்டிருந்தால் அவர்மற்றும் அவர் குழந்தைகள், பிற்பட்டோர் பிரிவில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும்.இதில் இன்னொரு குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால் கடந்த 50 ஆண்டுகளில் பிற்பட்டஜாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. ராஜஸ்தானில் 2002ல்ஜாட்கள் பிற்பட்டோர் என (இரு மாவட்டங்களில் தவிர) அறிவிக்கப்பட்டது. அப்போதுராஜஸ்தானில் சுமார் 15 ஜாதிகள் தவிர பிற அனைத்தும் பிற்பட்ட ஜாதிகள் பட்டியலில்இடம் பெற்றுவிட்டன. இது போல் பல் வேறு மாநிலங்களில் 1980களிலும், பின்னரும்மாநில அரசுகள் பல ஜாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டன. தமிழ் நாட்டில் கிட்டதட்ட 290 ஜாதிகள் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கின்றன. தமிழக அரசு தந்துள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் கணக்கீட்டால்தமிழக மக்கள் தொகையில் 88% இட ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது. இதில் தலித்கள்,பழங்குடியினரை (22.5) தவிர்த்து விட்டுப் பார்த்தால் கிட்ட 66% பிற்பட்ட ஜாதிகள்என்ற பிரிவில் வருகின்றனர். இதிலும் உள் ஒதுக்கீடு உள்ளது. அதன்படி பார்த்தால்மிகவும் பிற்பட்டோர் 20% இட ஒதுக்கீடும், பிற்பட்டோர் 30% இட ஒதுக்கீடும் பெறுகின்றனர்.இதில் இன்னொற்றையும் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டில் கிறித்துவர்களில் உள்ள பலபிரிவினர், முஸ்லீம்களில் உள்ள பல பிரிவினர் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறுகினறனர்.தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு நீதி கட்சியின் ஆட்சி காலத்திலிருந்தே (1920களிலிருந்தே)அமுலில் உள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டின் விகிதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கடைசியாக 1980ல் எம்.ஜி.ஆர் அரசு பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை 50% ஆக உயர்த்தியது.1980களில் வன்னியர் போராட்டம் காரணமாக மிகவும் பிற்பட்டோர் என்ற உள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. 1970ல் சட்டநாதன் கமிஷன் இட ஒதுக்கீட்டின் பயன் ஒரு சில ஜாதிகளுக்குமுழுதுமாக கிட்டியுள்ளது, அவை பெரிதும் முன்னேறியுள்ளன, பல ஜாதிகள் இன்னும் பின் தங்கியேஉள்ளன என்று கூறியது. மேலும் பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தேவையில்லைஎன்றதுடன் அதை நிர்யணிக்க ஒரு அளவுகோலினை முன் வைத்தது. அதன்படி (1970ல்),ஆண்டு வருமானம் 9000க்கு அதிமாக சம்பளம் பெறுவோர், 10 ஏக்கருக்கு மேல் நிலம்வைத்திருப்பவர்கள், வரி கட்ட வேண்டிய ஆண்டு வருமானம் 9000க்கு மேல் உள்ளவர்களுக்குஇட ஒதுக்கீடு தேவையில்லை என்றது. கருணாநிதி அரசு இதை ஏற்கவில்லை. மேலும் அதுபிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை 31% ஆக அதிகரித்தது. சட்டநாதன் கமிஷன் பிற்பட்டோருக்கு17%, மிகவும் பிற்பட்டோருக்கு 16% என்று பரிந்துரைத்தது.1982ல் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் கமிஷன் தொழில் நுட்ப படிப்புகளில் பிற்பட்ட ஜாதிகளில் சில ஜாதிகள் மிகப்பெரும்பான்மையான இடங்களை பெறுவதை சுட்டிக்காட்டியது. பட்டியலில் உள்ள 222 ஜாதிகளில் 34 ஜாதிகள் தொழில் நுட்ப படிப்புகளில் 75%த்திற்கு அதிகமான இடங்களைப் பிடித்தன.இவை பிற்பட்ட ஜாதிகளின் மக்கள் தொகையில் 40% ஆகும். அதாவது 60% உள்ள 188 ஜாதிகள் 25%இடங்களைக் கூடப் பெறவில்லை. இப்போது இதே நிலை உள்ளதா என்று தெரியவில்லை. மேலும்பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் என்ற பிரிவினை எந்தெந்த ஜாதிகளுக்கு சாதகமாக இருந்திருக்கிறது/இருக்கிறது என்பதையும் ஆராய வேண்டும். டாக்டர். கிருஷ்ணசாமி சில குறிப்பிட்ட தொழில்களை பரம்பரையாக செய்து வரும் ஜாதிகள் இட ஒதுக்கீட்டின் பயனை மிகக் குறைவாகவே பெறுவதாகவே அவர் கூறுகிறார். இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது கல்வியில், வேலைவாய்ப்பில், (ஒரு காலம் வரை) பதவி உயர்வில் என்று பல தளங்களில் இருக்கும் போது ஏற்கனவே பயன் பெற்றவர்களின் குடும்பங்கள் அதிக அளவில் பயன் பெறுவது எளிதாகிறது. உதாரணமாக 1920 லிருந்தே இட ஒதுக்கீடு இருப்பதால் அப்போதிலிருந்தே 4 தலை முறையாக பயன் பெறும் குடும்பங்கள், ஜாதிகள் இங்கு உள்ளன. மேலும் ஒரே குடும்பத்தில் ஒரே தலைமுறையில் பலர் பலன் பெறுவதாலும் இட ஒதுக்கீட்டின் முழுப் பலனும் தொடர்ந்து சிலருக்கு கிடைப்பதும், பலருக்கு ஒரளவு பலன் அல்லது பலன் கிடைக்காமல் போகிறது. ஒரு மருத்துவரின் வாரிசுகள் இட ஒதுக்கீடில் பலன் பெறுவது சாத்தியமாகிறது, ஒரு விவசாயக் கூலிஅல்லது கூலி வேலை செய்பவர்/ளின் மகன்(கள்)/மகள்(கள்) படிப்படை தொடர்வதேசாத்தியமற்றுப் போகையில் அவர்கள் உயர்கல்வியில், வேலையில் இட ஒதுக்கீட்டின்பலனை பெற முடியாமலே போகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளை நாம் கருத்தில் கொண்டால்இப்போதுள்ள இட ஒதுக்கீட்டின் மூலம் பலன் பெறுவோர் அனைவரும் உண்மையில்சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்பட்டோர்தானா என்ற கேள்வியை எழுப்புவதுஅவசியமாகிறது. ஒருபுறம் தமிழ் நாடு மிகவும் முன்னேறிய மாநிலம் என்கிறார்கள்.அப்படியானல் அதில்மக்கள் தொகையில் 88% இன்னும் சமூகரீதியாகவும்,கல்வி ரீதியாகவும் பின் தங்கிஇட ஒதுக்கீடு தேவைப்படும் நிலையிலா இருக்கிறார்கள். பொறியியல், மருத்துவநுழைவுத் தேர்வில் பொது இடங்களுக்கான cut-off மதிப்பெண்களும், பிற்பட்டோர்பெறும் இடங்களுக்கான cut-off மதிப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளிமிகக் குறைவு. பொது இடங்களிலும் கணிசமானவற்றை பிற்பட்டோர் பெறுகின்றனர்.1947க்குப் பின் கல்வி பரவாலாக்கப்பட்டது, பொருளாதார, சமூக முன்னேற்றம், நவீனமயமாக்கம்,பசுமைப் புரட்சி, நகர்மயமாதல்,இட ஒதுக்கீடு போன்ற பல காரணங்களில் இன்று சமூகத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 1920 களில், 1950 களில் இட ஒதுக்கீட்டிற்கு தேவைஇருந்தது. ஆனால் இன்று அன்று கூறப்பட்ட காரணங்களைக் கூறி அதை நியாயப்படுத்தமுடியாது.இன்று அதை உண்மையிலே பிற்பட்டோர் மட்டும் பயன் பெறும் வகையில் அதை மாற்ற வேண்டும். முதலில் இப்போது உள்ள ஜாதிகள் எல்லாம் ஒரே மாதிரியாக பின் தங்கியுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும். இருப்பதில் எந்தெந்த ஜாதிகள் இட ஒதுக்கீட்டினால் அதிகமாக பயன் பெற்றுள்ளன, எவை மிகக் குறைவாக பயன் பெற்றுள்ளன, எவை பயன் அடையவில்லை என்பதை ஆராய வேண்டும். ஒரு விரிவானகணக்கெடுப்பு, தகவல் சேர்க்கை, அதை அலசி ஆராய்ந்து இப்போதுள்ள பட்டியலுக்குப் பதிலாக உண்மையாக கல்வியிலும், சமூக ரீதியிலும் பின் தங்கியுள்ள ஜாதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். பிற்பட்டோரில் முற்பட்டோர் என்பதை அடிப்படையாகக் கொண்டுவிலக்கு அளிக்கப் பட வேண்டும். ஒட்டு மொத்த இட ஒதுக்கீடு 50% த்திற்கு மிகாதபடிஇருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம் பெறாத பிரிவுகளில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோர், பெண்கள் இவர்களுக்கும் இட ஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரு மட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். பட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது. பதவி உயர்வுகளிலும் கூடாது. மேலும் ஒருவர் இட ஒதுக்கீட்டின் பயனை அதிகபட்சம் இரண்டு முறைதான் அனுபவிக்கலாம் என்று வரம்பு கொண்டு வரப்பட வேண்டும். இவற்றை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது. இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினை குறித்து ஒருமுழு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதைக் கூட அவை ஏற்கா. தமிழ் நாட்டினைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுவாக இருக்கிறது. திராவிட இயக்கம் இட ஒதுக்கீடு குறித்துமூளைச் சலவை செய்வதில் வெற்றிப் பெற்றுள்ளது. இடதுசாரிகளும் இதை ஆதரிப்பதால் ஆதரவுப்பிரச்சாரம் மிகப் பலமாக உள்ளது. மேலும் இங்கு 12% இட ஒதுக்கீட்டிற்கு வெளியே இருப்பதாலும்,ஒட்டு வங்கி அரசியலில் அவர்களுக்கு செல்வாக்கு குறைவு என்பதாலும் அரசியல் கட்சிகள் அவர்களைபுறக்கணிக்கின்றன. இங்குள்ள பல 'அறிவு ஜீவிகள்', 'கல்வியாளர்கள்', பல பத்திரிகையாளர்களும், இட ஒதுக்கீட்டினை வெறித்தனமாக ஆதரிக்கின்றனர். இதன் விளைவாக இட ஒதுக்கீடு குறித்து ஒருஅறிவார்ந்த விவாதம் நடைபெறுவது சாத்தியமற்று உள்ளது.

ஐஐடி, ஐஐஎம் களில் ஏன் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் பானு மேத்தா, சாம் பித்ரோதா,அண்டேரே பெய்த்லி கூறியுள்ள காரணங்களை நான் ஆதரிக்கிறேன். எனவே அவற்றை இங்குவிளக்கப் போவதில்லை. இட ஒதுக்கீடு குறித்து பேரா. நீரா சண்டோகே அண்மையில் ஒருகட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள கருத்துக்களுடன் நான் மிகப் பெருமளவிற்குப் ஒத்துப்போவதால் அதை நீங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இட ஒதுக்கீட்டினை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் சமூக நீதியை மறுப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. சமத்துவம், பாரபட்சமின்மை ஆகியவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் இட ஒதுக்கீடுஇந்த இரண்டையும் பெருமளவிற்கு நிராகரிக்கும் வகையில் அளவிற்கதிகமாக இருப்பதைசுட்டிக் காட்டுகிறார்கள். மேலும் டாக்டர்.அம்பேத்கர் இட ஒதுக்கீடு இப்படி பெரும்பான்மையாகஇருப்பதை எற்கவில்லை என்பதையும், ஜவகர்லால் நேரு இட ஒதுக்கீடு குறித்து அவநம்பிக்கைகொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அண்ட்ரே பெய்த்த்ல், திபங்கர் குப்தா, ராதாகிருஷ்ணன், ஷிவ் விஸ்வநாதன் போன்ற சமூக அறிவியலாளர்கள் இப்போதுள்ள இட ஒதுக்கீடு குறித்து விமர்சனங்களை வைத்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அவரும் இந்த இட ஒதுக்கீட்டினால் சில ஜாதிகள்தான் பெரும் பயன் பெற்றன என்று கருதுகிறார். எனவே சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள்முன் வைக்கும் விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள், ஆலோசனைகள் பரீசிலிக்கப்பட வேண்டும்.இப்போதுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஆராயப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும். அதை விரிவாக்குதல்தவிர்க்கப்பட வேண்டும். இன்னும் 20 ஆண்டுகளில் இட ஒதுக்கீடே தேவையில்லை என்று பிரிவுகள்,ஜாதிகள் கருதும் வகையில் அரசு திட்டமிட வேண்டும். அது சாத்தியமே. அரசு செய்ய வேண்டியவை1, அனைவருக்கும் தரமான, இலவசமாக கல்வி- உயர் பள்ளிக்கூடக் கல்வி வரை அதாவது +2 வரைகிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.2, நகர்ப்புற,கிராமப்புற என்ற பாகுபாடு இன்றி தரமான கல்வி கிடைக்க வகை செய்யும் வண்ணம்பள்ளி வசதிகள், ஆசிரியர்கள், நூலகம், விளையாட்டு திடல்கள், சோதனைக் கூடங்கள் போன்றவற்றில்கவனம் செலுத்தப்பட வேண்டும்3, பெண் கல்விக்கு முக்கியத்துவம்4, உயர் கல்வியில் பெண்களின் விகிதம், எண்ணிக்கை அதிகரிக்க திட்டங்கள்5, பொருளாதாரம், குடும்பச் சூழல் காரணமாக படிப்பினை நிறுத்துவோருக்கு கல்வியை தொடர்ந்து தர திட்டங்கள், வசதிகள் செய்தல்6, கல்வியில் பின் தங்கியுள்ள மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத்திட்டங்கள்7, உயர்கல்வி கிடைக்க பொருளாதார வசதியின்மை தடையாக இல்லா வண்ணம் நிதிஉதவி, கடன்கள் கிடைக்க வழி செய்தல்இவ்வாறு செய்வது இட ஒதுக்கீடு என்பதையும் தாண்டி உண்மையான சமூக நீதி கிடைக்கவழி செய்யும். வெறும் இட ஒதுக்கீடு என்பது ஒரளவே உதவும். இட ஒதுக்கீடு ஒரு நிரந்தரத்தீர்வல்ல, அதுவே சமூக நீதியாகி விடாது.

3 மறுமொழிகள்:

Anonymous VIgnesh மொழிந்தது...

Nice article

It would be nice if you could give us the links for some articles you made reference

6:58 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

இதெல்லாம் படிக்க தேவையே இல்லை. எங்களுக்கு வேண்டியது அன்புமணி, ராமதாஸ் சொந்தக்காரங்களுக்கு அதிகாரம். அந்த குடும்பம் ஆட்டம்போடத்தான் நாங்க எல்லோரும் இப்படி ஒழச்சிக்கிட்டு இருக்கோம். சும்மா அதப்படி இதப்படின்னா செருப்படிதான்.
-வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை. வன்னியர் ஓட்டு ராமதாஸ் குடும்பத்தை வாழவைக்கவே... வாழ்க ராமதாஸ் குடும்பம். ஒழிக மற்ற குடும்பங்கள்..(வன்னியர் குடும்பங்களையும் சேர்த்துத்தான்).

10:07 AM  
Blogger CT மொழிந்தது...

Hi Ravi
Very good article, quite informative.I don't know whether some body has wriitten like this earlier with lot of numbers and time period.
I agree with most of your views.

--CT

6:57 AM  

Post a Comment

<< முகப்பு