இட ஒதுக்கீட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி

நீரஜா செளெத்ரி (From www.dinamani.com)

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடானது, படிப்படியாக செயல்படுத்தப்படும்; அதே நேரத்தில், போராடிக்கொண்டு இருக்கும் மாணவர்களை சமாதானப்படுத்தும் வகையில், அந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரணப் முகர்ஜி யோசனை கூறியிருக்கிறார். அதன் மூலம், இட ஒதுக்கீட்டுச் சர்ச்சை முடிவுக்கு வரக்கூடிய அறிகுறி தெரிகிறது.
நேர்மையாகக் கூறுவதென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மீதுள்ள பாசத்தினாலோ அல்லது இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்களுக்கு நல்வாழ்வை வழங்கிவிட வேண்டும் என்ற அக்கறையினாலோ எழுந்ததல்ல இந்தச் சர்ச்சை. அது உண்மையான நோக்கமாக இருந்திருந்தால், அரசு வேறு மாதிரியாக அதைக் கையாண்டிருக்கும்.
பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதிப்பதில் இருந்து அது தொடங்கி இருக்கும்; அர்ஜுன் சிங் அதை முதலில் அறிவித்து, அதனால் பெரும் மோதல் வெடித்துவிட்ட பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதம், இடதுசாரிக் கட்சிகளுடன் விவாதம் என்றெல்லாம் நடத்துவதற்குப் பதிலாக, முதலிலேயே அக் கட்சிகளுடன் அரசு இப் பிரச்சினை குறித்து விவாதித்திருக்கும். ஆனால், அர்ஜுன் சிங்கின் கைங்கர்யத்தால் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.
மன்மோகன் சிங்கை வீழ்த்துவதற்கு அர்ஜுன் சிங் மேற்கொண்ட நடவடிக்கைதான், "மண்டல்~2'-ன் கதை. மிகத் திறமையான அரசியல் சூழ்ச்சி என்றும் அதைக் கூறலாம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைப்பது உறுதியானதும் காய்களை நகர்த்தினார் அர்ஜுன். சில கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தாராம் சோனியா காந்தி. எனவே அதைக் காரணமாகக் கொண்டு, அமைச்சரவையில் இருந்து அவரை நீக்குவது அல்லது அவரது இலாகாவைப் பறிப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் மன்மோகன் எடுப்பதற்குமுன், முந்திக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டார் அர்ஜுன். இனிமேல், அத்தகைய நடவடிக்கை எதையும் பிரதமர் எடுத்தால், "பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரானவர்' என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரால் தப்ப முடியாது. கடந்த இரு ஆண்டுகளாகவே, தனிக்காட்டு ராஜாவாக தனது இலாகாவை நடத்திவந்துள்ளார் அர்ஜுன் சிங்.
கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 93-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் நீட்சிதான், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் இப்போதைய நடவடிக்கை என்று அர்ஜுன் சிங் கூறுகிறார். அந்தச் சட்டத்துக்கு பிரதமர் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறுவது சரிதான். ஆனால், அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு அளவானது 50 சதவீதத்தை மிகக் கூடாது என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செல்லாதது ஆக்குவதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் அச் சட்டத் திருத்தம் என்று மற்றொரு வாதத்தை முன்வைக்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் எல்லாம், அரசு விரும்பினால், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அதிகாரம் அதற்கு ஏற்கெனவே இருக்கத்தான் செய்கிறது. அதை நியாயப்படுத்துவதற்கு 93-வது திருத்தச் சட்டம் தேவையில்லை. ஆனால், அதை எப்போது செயல்படுத்துவது, எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் விவாதிப்பதுடன், இடதுசாரிக் கட்சிகளுடனும் கலந்து பேசி செயல்படுத்துவதுதான் முறையாக இருந்திருக்கும்; அதுதான் வழக்கமான நடைமுறையுமாகும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பினார் அர்ஜுன் சிங். பிறகு அதைப் பகிரங்கமாகத் தெரிவித்தும் விட்டார். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிவிட்ட பிறகு அந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக தனது எதிர்ப்பைத் தெரிவித்தது தேர்தல் ஆணையம். உடனே அமைச்சரவைச் செயலகம் அந்தச் சட்டமுன்வடிவை மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சருக்குத் திருப்பி அனுப்பியது. அதை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சூசகமாக அவருக்குப் பல முறை தெரிவிக்கப்பட்ட பிறகும், தேர்தல் முடிந்தவுடன், ஓர் எழுத்துகூட மாறாமல் அதே சட்ட முன்வடிவை மீண்டும் அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பினார் அர்ஜுன் சிங்.
அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை மீண்டும் ஒருமுறை அனுமானிக்கத் தவறியிருக்கிறார் பிரதமர். அமைச்சரவைச் செயலகம் அந்தச் சட்ட முன்வடிவை சிறிது காலத்துக்குக் கிடப்பில் போட்டு இருந்திருக்கலாம்.... அல்லது, நிலைமை தன் கையை மீறிச் சென்று, அர்ஜுன் சிங் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகும் வரை காத்திருந்திருக்காமல், தொடக்கத்திலேயே இதில் சோனியா காந்தி தலையிடுமாறு மன்மோகன் சிங் கோரியிருக்கலாம்.
தற்போது வில்லில் இருந்து அம்பு புறப்பட்டுச் சென்றுவிட்டது. மக்கள்தொகையில் கணிசமானவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். போட்டி மிகுந்த நமது ஜனநாய முறையில், சாதிக் கணக்குகள் மிக முக்கியமானவை ஆகும். எனவே, இப்போது தொடங்கப்பட்டுவிட்ட இட ஒதுக்கீட்டு நடவடிக்கையை சோனியாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, எதிர்க்கத் துணிய மாட்டார்கள். கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசும்போதுகூட இப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டார் சோனியா காந்தி. இட ஒதுக்கீடு எந்த அரசியல்வாதியும் கொள்கையை எதிர்க்கவில்லை.
இதில் சிக்கல் என்னவென்றால், அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரதமருக்கு உதவியாளர் யாருமில்லை. அவர் பெருமளவில் அதிகாரிகளையே சார்ந்திருக்கிறார்; அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றுவதைவிட, அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது அவருக்கு செüகரியமாக இருக்கிறது. பிரச்சினைகள் வரும் பொழுதெல்லாம், தொலைபேசியில் நேரடியாக சோனியாவுடன் தொடர்பு கொண்டு பேசுவதும் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. அரசியல் பிரச்சினைகளையெல்லாம் கவனிப்பதற்கு, சமாளிப்பதற்கு சோனியா இருக்கிறார் என்ற உணர்வு அவருக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவருக்குப் பதிலாக வேறு யாரையும் கொண்டுவருவது தொடர்பான அறிகுறி எதையும் சோனியா வெளிப்படுத்தவில்லை; அவ்வாறு அவர் விரும்பினாலும்கூட மாற்று ஏற்பாட்டுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
இட ஒதுக்கீட்டு விவகாரமானது மன்மோகன் சிங்குக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருப்பதோடல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிதாகப் பலனளிக்கப் போவதில்லை. அர்ஜுன் சிங்கின் சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தை மட்டும் வேண்டுமானால் விதிவிலக்காகக் கூறலாம். ஏனென்றால், அங்குள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அர்ஜுன் சிங்கின் நடவடிக்கையால் பயன் பெறவிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரோ லாலு பிரசாத், நிதீஷ் குமார், முலாயம் சிங், மாயாவதி, தேவெ கெüட, திமுக போன்றவர்களையே ஆதரிப்பவர்கள். காங்கிரûஸ அவர்கள் ஆதரிக்கப் போவதில்லை. உண்மையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளமான நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் அல்லது மேல்சாதியினர் ஆகியோரை விரோதித்துக் கொள்வதற்குத்தான் அது வழிவகுக்கும். 2004-ல் பெருநகரங்களில் அக் கட்சி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
"மண்டல்~2' கொள்கையை நியாயப்படுத்தி என்னதான் பேசினாலும் சரி; நடந்திருப்பது என்னவோ, நமது கல்வி முறைக்கும் மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், அரசியல் அதிகாரக் களத்தில் அரங்கேற்றப்பட்ட அவநம்பிக்கை நாடகம்தான். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தமது சுய ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்தான் நமது அரசியல்வாதிகள் என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளே இப்படித்தான் இருப்பார்கள் என்னும் அவர்கள் மீதான மக்களின் அவநம்பிக்கையை அது மீண்டும் உறுதி செய்துள்ளது; இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதும்கூட.
தமிழில்: லியோ ரொட்ரிகோ

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு