அக், யாத்ரா

தீராநதியில் அக் பரந்தாமன் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அக் தொகுப்பு நூல்வெளியாவது மகிழ்சசி தருகிறது. எனக்கு சிறு பத்திரிகைகள் அறிமுகமான போது அக் இதழ்களைபார்க்க, படிக்க விரும்பினேன். நண்பர் ஒருவர் வசம் சில் இதழ்கள் இருந்தன. வேறொரு நண்பரிடம்வேறு சில இதழ்களை கண்டேன். தருமு சிவராமுவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு சிறு வெளியீடாக அக் பரந்தாமன் கொண்டு வந்தார். அதையும் பார்த்திருக்கிறேன். சிவராமு கொடுத்தபிரதி யாருக்கோ படிக்க கொடுத்தது திரும்பி வரவேயில்லை. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பினை அக் வெளியீடாக பரந்தாமன் கொண்டுவந்தார். அதுவும்எனக்கு கைக்கு கிடைக்கவில்லை.மிக அற்புதமான வடிவமைப்பு, செய்நேர்த்தி கொண்ட நூல் எனபலரும் சொல்லிக் கேட்டிருந்தேன்.ஆனால் அதைப் பார்த்தவர்களை விட அதைப் பற்றிப் பேசியவர்களே அதிகம் :). தற்செயலாக ஒரு நாள் ஒரு நடைபாதைக் கடையில் அதைப் பார்த்தேன்,பேரம் பேசாமல் உடனே வாங்கிவிட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மைதான்.கெட்டி அட்டை,அற்புதமான வடிவமைப்பு, எழுத்துருக்கள், தமிழ் நூல்களில் காணக்கிடைக்காத தரமான காகிதம். இப்போது அந்தப் பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நூலின்இறுதியில் அந்த நூல் வெளியீடு குறித்து வண்ணதாசனுக்கும், பரந்தமானுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து பதிவாயிருந்தது என் மனதில் இப்போது நிழலாடுகிறது. ஈரம் கசியும் வார்த்தைகளுடன் ஒரு நூலினை சிறப்பாக கொண்டுவர அவர் பட்ட சிரமங்களை பரந்தாமன்எழுதியிருப்பார். தன் அச்சகத்தினை விற்றே அவர் அதைக் கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.லினோகட் போன்றவற்றை சிறு பத்திரிகைகளில் முதன் முதலில் பயன்படுத்தியவர்அவர்தான் என்று நினைக்கிறேன், தேசிய அளவில் அச்சுத் தொழிலுக்கான பரிசினை அவர் பெற்றிருக்கிறார்.

பல சிறுபத்திரிகைகள் போல் அக் தொடர்ந்து வெளிவரவில்லை.இப்போது அக்கை அடிப்படையாக ஒரு தொகுப்பு நூல் வருவது காலத்தின் தேவையும் கூட.அப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நூலை யார் நடைபாதைக் கடையில் கிடைக்கும்வண்ணம்விற்றிருப்பார்கள். எனக்கு கிடைத்த பிரதி அந் நூல் ஒரு பரிசிற்கு தேர்வுக் குழுவிற்கு அனுப்பட்டபிரதி.

வெ.சாவின் கட்டுரை தொகுப்புகளை படிக்கும் போதுதான் யாத்ரா என்று ஒரு சிற்றிதழ் வந்ததையும்அறிந்தேன். அதன் சில இதழ்களைப் பார்த்திருக்கிறேன். யாத்ராவும் ஒரு முக்கியமான சிறு பத்திரிகைதான்.அது பெரும்பாலும் கலை, இலக்கியம் சார்ந்தவற்றையே வெளியிட்டது. அதில் சுஜாதாவின் பல நூல்களின் மூலம் எவையெவை என்று சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரையைப் படித்ததாக நினைவு. இத்தொகுப்பில் அதுவும் இடம் பெற்றிருக்கிறதா.

இப்படி பழைய சிறு பத்திரிகைகளிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவருவது இன்றைக்குத்தேவை.70 களிலும் 80 களிலும் பல சிரமங்களுக்கிடையே வெளியான சிறுபத்திரிகைகளில்அன்று இலக்கியம் பிரதான கவனம் பெற்றாலும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட துறைகளைப்பற்றியும் கட்டுரைகள், விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. இவை மீண்டும் பார்வைக்கு வரும்போது சிறு பத்திரிகை என்றால் அதில் இல்க்கியம், கலை சார்ந்தவையே இடம் பெற்றன என்றஎண்ணம் வலுவற்றுப் போகும். மேலும் இன்றைக்கு ஜெயமோகன் போன்றவர்கள் எழுதுபவை எத்தகையகுப்பைகள் என்பதை அன்று வெளியான, சான்றுகளுடன் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். .
------------------------------------------------------------------------------------------------
தீராநதியில் பரந்தாமன்

எனக்குத் தொழில் கவிதை. தாமரை, தீபம், கண்ணதாசன் கவிதை, வானம்பாடி, ஞானரதம் ஆகிய சிறுபத்திரிகைகளில் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், அப்பத்திரிகைகளில் படைப்புகளை வெறும் எழுத்துக்களாக மட்டுமே அச்சிட்டு வந்தார்கள். வடிவமைப்பைக் கோட்டை விட்டுவிட்டார்கள். சாதாரண வியாபார பத்திரிகைகளிடமே வடிவமைப்பில் அவைகள் தோற்றுப்போனது. இது எனக்கு அவமானமாக இருந்தது. எனக்குத் தெரிந்த சில சிறு பத்திரிகையாளர்களிடம் சொல்லிப் பார்த்தேன். யாருமே பொருட்படுத்தவில்லை. தரத்தோடு, வடிவமைப்போடு, ‘நானே பத்திரிகை செய்து காட்டுகிறேன்’ என்றுதான் ‘அஃக்’ சிறுபத்திரிகையைத் தொடங்கினேன்.
‘அஃக்’, பதிப்புக்கும் அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்றது. அதற்குப் பிறகு வெளிவந்த சிறுபத்திரிகைகளும், இன்றைய சிறுபத்திரிகைகளும் இதுவரைக்குமே விருதுகள் எதுவும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ் நெடுங்கணக்கின் மூலக்கூறுகளான உயிரும் மெய்யும், உயிர்மெய்யாகி ஆய்த எழுத்தை மையமாக வைத்து உச்சரிக்கும்போது ‘அஃக்’ என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. தமிழே ‘அஃக்’ பத்திரிகையின் பெயராக ஆகியிருக்கிறது. ‘அஃக்’கை முதலில் வெளியார் அச்சகங்களில் அச்சிடப் போனேன். கல்யாணப் பத்திரிகைகளை இரவு பகலாக அச்சிட்டுக்கொண்டு, ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்டுத் தர காலதாமதம் செய்தார்கள். சரியான தேதிக்கு ‘அஃக்’கைக் கொண்டுவர முடியவில்லை. எனவே, சரியான தேதிக்கு ‘அஃக்’ பத்திரிகையைக் கொண்டு வர ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’ என்ற பெயரில் என் வீட்டிலேயே ஓர் அச்சகத்தை ‘அஃக்’குக்காகவே நிறுவினேன். பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த என் அம்மா தான் வட்டிக்கு வாங்கிய பணத்தை, அச்சகம் வைக்கவும் ‘அஃக்’ பத்திரிகையை நடத்த ‘பிராவிடண்ட் ஃபண்டு’ பணத்தையும் தந்தார்கள். ‘அஃக்’குக்காகத்தான் ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’. கல்யாணப் பத்திரிகையும் பில் புக்கும் நோட்டீசும் அடித்து, வியாபாரம் செய்ய அல்ல. ஆள்வைத்துக் கூலி கொடுக்க முடியாததால் நானே அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சத்திய பாமாவுக்கும் கற்றுக் கொடுத்தேன். கையால் அச்சுக்கோர்த்து, காலால் ட்ரெடிலை மிதித்து ‘அஃக்’ பத்திரிகையையும், ‘கூட்டுப் புழுக்கள்’, ‘பால் வீதி’, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ஆகிய புத்தகங்களையும் அச்சிட்டேன். தொடர்ந்து நடத்த பணம் இல்லாததால் ‘அஃக்’ பத்திரிகையை நிறுத்திவிட்டேன். அச்சகத்தை விற்றுவிட்டேன்.
கொஞ்சமும் மனம் தளர்ந்து போகாமல் பிடிவாதமாக ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்ட சரித்திரம், புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தெரியவேண்டும். பசி, பட்டினி, தீராத தாகம், பொருள் இழப்புகளோடு இரவு பகலாகத் தூக்கமின்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னால் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே அச்சிட முடிந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை அச்சிட அக்கறை காட்டிய வைராக்கியத்தைச் சொல்லத்தான் வேண்டும்.
‘அஃக்’ பதிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகையாக, மாத இதழாக மலர்ந்தது. தரமான எழுத்துக்களை வியாபாரப் பத்திரிகைகள் போட மறுத்த காலத்தில்தான், எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத ‘அஃக்’ இடம் கொடுத்தது. வித்தியாசமான எழுத்துக்களுக்கு வாய்ப்பளித்து கௌரவித்தது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வாசகர்களையும் கவர்ந்து இழுக்கிற காந்தசக்தி ஒரு பத்திரிகையின் எழுத்தின் தரத்திலும் வடிவமைப்பின் நேர்த்தியிலும்தான் இருக்கிறது. அட்டை ஓவியம், வடிவமைப்பு, எழுத்து என்று சிறுபத்திரிகையின் சகல அம்சங்களிலும் ஒரு தரமும் தகுதியும் தனித்தன்மையும் இருக்கவேண்டும். இந்த சிறப்புகள் அனைத்தும் ‘அஃக்’இல் இருந்ததால்தான் இன்றும் வாசகர்களால், எழுத்தாளர்களால், ஓவியர்களால் அது பேசப்படுகிறது.
சுந்தர ராமசாமியை அவருடைய மௌனத்திற்குப் பின் மீண்டும் எழுத உற்சாகப்படுத்தியது ‘அஃக்’ பத்திரிகைதான். இதை ‘அஃக்’குக்கு எழுதிய கடிதத்தில் அவரே சொல்லியிருக்கிறார். அதைப்போலவே, ‘நான் ‘அஃக்’இல் எழுத விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதி தெரிவித்துவிட்டுத்தான் அரூப் சீவராம், தன்னிச்சையாக ‘அஃக்’இல் எழுத வந்தார். அரூப் சீவராமின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் முப்பத்தெட்டை தனியரு சிறப்பிதழாகவே ‘அஃக்’ வெளியிட்டதன் மூலம், அரூப்சீவராம் இலக்கிய உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தார். ‘அஃக்’கைப் பிடிக்காதவர்களும்கூட ‘அஃக்’இல் எழுத விரும்பினார்கள். அந்த அளவுக்கு கலை இலக்கியத் தரத்தோடும் வடிவமைப்போடும் எழுத்தாளர்களைக் காந்த சக்தியாய் கவர்ந்து இழுத்தது ‘அஃக்’. தாமாகவே முன்வந்து இயல்பாக எழுதுகிற உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியதாக, ‘அஃக்’, கலை இலக்கியத் தரமும் வடிவமைப்பும் வித்தியாசமான கலைப்பார்வையும் கொண்டு முதல் இடத்தைக் குறிவைத்து பயணித்தது. எனக்கு முன்பின் பழக்கமில்லாத நல்ல எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் நேரிலும் கடிதம் மூலமும் அறிமுகம் செய்து வைத்தார்கள் வெங்கட் சாமிநாதனும், ‘கூத்துப்பட்டறை’ ந. முத்துசாமியும். இவ்வாறுதான் இன்னும் சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் ‘அஃக்’இல் எழுதினார்கள்.
அலியான்ஸ் பிரான்சைஸில், முக்கியமான இலக்கியவாதிகளும், ஓவியர்களும், கலைஞர்களும் கூடியிருந்த கூட்டத்தில், ‘‘பரந்தாமன் மாதிரி கலாபூர்வமாக பத்திரிகை நடத்த மற்றவர்களால் முடியாது’’ என்று ஆத்மாநாம் பகிரங்கமாகச் சொன்னார். அப்போது ‘கசடதபற’ பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர்.
கலை இலக்கிய வரலாற்றைப் புனர்ஜென்மம் எடுத்துவந்து புனருத்தாரணம் செய்யப்போகிற ‘அஃக்’ நிரந்தரத்தின் அமிர்தம். கூர்ந்த பார்வையும், மறுபரிசீலனையும் கலை இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கான ஜீவ தாதுக்கள். புதுமையையும் படைப்பையும் இலட்சியமாக, அளவுகோலாக, தொலைநோக்காக, தூரத்துப் பார்வையாக வைத்துக் கொண்டு யுக சந்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கால மாற்றங்கள், கலை இலக்கியப் போக்குகள் தடையாக இருக்க முடியாது. அவன் நேற்றிலிருந்து இன்றைக்கும் இன்றிலிருந்து நாளைக்கும் ஊடுருவிச் சென்றுவிடுவான். அப்படியே ‘அஃக்’ பத்திரிகை இதழ்களை ஃபோட்டோ காப்பி எடுத்து அச்சிட்டுத் தொகுத்துக் கொடுக்கவே நான் விரும்பினேன். ஆனால் என்னிடம் பணவசதி இல்லாததால் அப்படித் தொகுத்துத்தர முடியவில்லை. ஒரு புத்தக வடிவத்துக்குள் பத்திரிகையின் வடிவமைப்பைப் பறிகொடுக்க நேர்ந்துவிட்டது. புத்தகச் சந்தையின் வியாபார நடைமுறைகள் தடைப்படுத்திவிட்டன. அன்று தொடங்கிய அந்த யாகத்தின் தீ நாக்குகள் சடசடவென்ற சப்தத்தோடு இன்றும் எனக்குள் பொறி பறக்க, அதே கதியில் எரிந்து கொண்டிருக்கின்றன. எனக்குள் அணையாமல் எரிகின்ற அந்த நீறுபூக்காத நெருப்பின் ஜுவாலைகள் தகிப்பதை இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போது நீங்களும் உணர்வீர்கள்.
ஒரு சாதாரண ‘ட்ரெடில்’ மிஷின் மூலமே தேசிய விருதுகள் பெற முடிந்தது; என்றால், உலகத்தின் வேகத்துக்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமைப்படுத்தப்பட்ட கணினியின் துணைகொண்டு, இந்த உலகையே விருதாகப் பெறமுடியும். இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும் இந்தக் கணினி யுகத்தில் இருந்தும்கூட, கலை இலக்கிய உலகம் தழுவிய ஒரு சிறுபத்திரிகையை, தமிழில் உலக சாதனையாக நாம் படைக்க முன்வராவிட்டால் வேறு எந்த யுகத்தில் முன்வரப் போகிறோம்?
(சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவுள்ள, தேசிய விருதுபெற்ற கலை இலக்கிய சிற்றிதழான ‘அஃக்’ இதழ் தொகுப்புக்கு எழுதப்பட்ட தொகுப்புரை. சுருக்கப்பட்டது)

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு