இட ஒதுக்கீடு - 2

எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளில் இரண்டாவது இது. முதலில் எழுதியதை வெட்டி, ஒட்டி,ஒருங்குறிக்கு மாற்றுவதில் உள்ள பிரச்சினைகளால் அதை இங்கு இப்போது இடமுடியவில்லை. பின்னர் இட முயற்சிக்கிறேன்.

1,அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதி உதவி பெறும் பல உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டங்களில் இருக்கிறது. இப்போது அவசரச் சட்டம் கொண்டு வந்தால் குழப்பம் மிஞ்சும்.மாணவர்கள் நீதிமன்றங்களை நாடுவர், இடைக்காலத் தடை பெறுவர்.தமிழ் நாட்டில் பாமக தேர்தலில் பெரும் வெற்றி பெறவில்லை. அதை மறைக்க இட ஒதுக்கீடுப் பிரச்சினை முன்னிறுத்தி தன்னை பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் இது.
2,அவசர சட்டமோ அல்லது சட்டமோ கொண்டு வந்தாலும் வேறு சில அம்சங்கள் இருக்கின்றன.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்ற கொள்கையின் படி இட ஒதுக்கீடு பெற யார் யார் தகுதியுடையவர்கள் என்பதை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் பிற்பட்ட ஜாதிகளின் பட்டியலும், மாநில அரசின் பட்டியல்களும் ஒன்றல்ல. இதில் எதை எடுத்துக்கொள்வது, இல்லை இரண்டையும் சேர்த்து ஒரு பட்டியலாகவா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை கண்டாக வேண்டும்.ஒரு ஜாதி ஒரு மாநிலத்தில் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கிறது, இன்னொரு மாநிலத்தில் இல்லை என்பது போன்றவற்றை எப்படி கையாள்வது என்பதையும் அரசு முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் முடிவு செய்ய அவகாசம் தேவை. எனவே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசு செயல்பட முடியாது.
3, இப்போது மத ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. இதை தரப்போவதாக கட்சிகள் கூறியுள்ளன.அது உறுதியாகத போது இருக்கிற ஜாதிகள் பட்டியலின்படி இட ஒதுக்கீடு என்றால், மத ரீதியானசிறுபான்மையோர் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்த பின்இந்த இட ஒதுக்கீட்டினை அமுல் செய்ய வேண்டும் என்று கோரலாம். அவர்கள் கோரிக்கையை ஏற்றால் உடனே இட ஒதுக்கீடு செய்ய முடியாது. குறைந்தது அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்க வேண்டும்.
4, பேராசிரியர் ஏ.வைத்தியநாதன் சில யோசனைகளைக் கூறியிருக்கிறார்.(ஹிந்து 18.5.2006). அவைகவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை. இது போல் வேறு சில யோசனைகளும் கூறப்பட்டுள்ளன.அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
5, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (CPI(M) ) திடீரென creamy layer, முற்பட்ட ஜாதியில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு என்றெல்லாம் கூறியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு முரட்டுத்தனமாக ஆதரவு தெரிவித்த போது இதெல்லாம் தோன்றவில்லையா. எப்படியாயினும் இட ஒதுக்கீடு 50%க்கு மேல் போக முடியாது. அதற்குள் இப்படி பிற்பட்டோருக்கு தனியாக, முற்பட்டோரில் ஒரு பிரிவினருக்காக தனியாக எப்படி எந்த விகிதத்தில் ஒதுக்குவது என்பதயும் அவர்கள் சொல்லியிருக்கலாம். சிக்கல் என்னவென்றால் பிற்பட்டோருக்கு 27% என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு இப்போது குறைக்கிறோம் என்றால் பிற்பட்டோர் அதை எதிர்ப்பர். அதிக பட்சம் 27.5% தான் ஒதுக்க முடியும்.
6, ஸ்வாமி அக்னிவேஷ்,வல்சன் தம்பு கட்டுரை இட ஒதுக்கீட்டினை முழுமையாகவரவேற்று எதிர்க்கு மருத்துவர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கிறது. இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது.மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனுக்காகப் போராடுகிறார்கள், உரிமைகளுக்காக, சம வாய்ப்பிற்காக போராடுகிறார்கள். அதனால் பொது மக்கள் சிரமப்படுவது உண்மை. அதற்கு பொறுப்பு அரசுதான். இட ஒதுக்கீடு கொண்டு வர எண்ணியுள்ளோம், உங்கள் நலன்களை பாதிக்க விரும்பவில்லை, எனவே உங்கள் ஆலோசனைகளைக் கோருகிறோம் என்று மாணவர்களிடம் கூறி, அறிவிப்பு வெளியிடும் முன்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கலாமே.மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், தொழிற் துறை. கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் ஒரு அறிவிப்பினை வெளியிட அவசியம் என்ன. இத்தகைய ஒரு மாற்றம் ஒரு பெரும் மாற்றம் என்பதால் அதற்கு தேவையான கால அவகாசத்தினை யோசித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு தர நினைக்கிறோம், அதே சமயம் தகுதி,திறமை உடையவர்கள் நலனும் பாதிக்கக்கூடாது என்று விரும்புகிறோம். எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும்.
7, மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியில் இருவர் வெளிப்படையாக இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள்.எனவே அந்த கமிட்டி எத்தகைய முடிபுகளை எடுக்கும் என்பது வெளிப்படை.மாணவர்கள் கூறிவது போல் ஒரு கமிஷம் அமைக்க வேண்டும். இந்த கமிட்டி என்ற கண்துடைப்பினை மாணவர்கள் நமப்த்தயாரில்லை என்பது நியாயமானதே.
8. இடங்களை அதிகரிப்பது என்பதை உடனே செய்ய முடியாது. ஆய்வுக்கூடங்கள், கட்டிடங்கள், விடுதிகள் கட்ட குறைந்தது ஒராண்டாகும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காலம் தேவை. மேலும் கூட்டப்படும் இடங்களுக்கு தக்காற்போல் அடிப்படை வசதிகளை கூட்ட வேண்டும். இப்போது ஐஐடி, ஐஐஎம் களில் ஆசிரியர் எண்ணிக்கை இருக்க வேண்டியதை விட குறைவாக இருக்கிறது. தகுதியான, திறமையான பலர் தனியார் துறைக்கு சென்றுவிடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் .ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் அவகாசம் தேவை. அமெரிக்காவில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் பணியில் சேர 9 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஆகிறது. இந்தியாவிலும் கிட்டதட்ட இதே நிலைதான். எனவே இடங்களை கூட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.இடங்களைக்கூட்டுவதால் தரம் பாதிக்கபடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் வசதிகளை பெருக்குவது, ஆசிரியர் எண்ணிக்கையை கூட்டுவது என்பதை அவசரக் கோலமாக செய்ய முடியாது.

9, அரசு உயர்கல்வியில் எந்த அளவு, எதில் தலையிட வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும். இந்த 93ம் சட்டத் திருத்தம் அரசுக்கு மட்டற்ற அதிகாரத்தினைத் தருகிறது. இது சரியல்ல. அரசு இந்த அளவுதான், இதுவரைதான் தலையிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு என்பதை பயன்படுத்திக் கொண்டு அரசு எப்படி வேண்டுமானாலும் தலையிடலாம், கட்டளை இடலாம் என்பதை முதலில் மாற்ற வேண்டும்.
10, ஐஐடி, ஐஐஎம். ஐஐஎஸ்ஸி போன்றவற்றை அரசின் தலையீடு இல்லாத தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும். அமெரிக்காவில் ஹார்வார்ட், ஸ்டான்போர்ட்., கொலம்பியா பல்கலைகழகங்கள் இயங்குவது போல் இவையும் மாற்றப்பட வேண்டும். அரசு நிதி உதவி தருகிறது என்பதற்காக சகட்டு மேனிக்கு தலையிட அனுமதிக்கக் கூடாது.
11, மேல்நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வளாகங்கள் துவங்க, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். அரசு அவை லாப நோக்கில் மட்டும் செயல்படாவண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மற்றப்படி மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் தலையிடக் கூடாது. அவை அதிக கட்டணம் வசூலிக்கும் என்பது உண்மை. ஏழைகளுக்கு கல்விக்கடன்கள், உபகாரச் சம்பளங்கள், மான்யங்கள் தந்து ஏழைகளும் அவற்றில் படிக்க வகை செய்யமுடியும். அமெரிக்கா, ஐரோப்பாவில் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையை எப்படி கையாள்கின்றன என்பதை ஆராய்ந்து சில தீர்வுகளைக் காணலாம். மேல் நாட்டுப் பல்கலைகழகங்கள் இங்கு வருவது இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளை குறைக்க உதவும். எனவே அவற்றின் தேவை இங்கு இப்போது மிகவும் அவசியமாகிறது.
12, இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
13, இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
14, தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது ஜெயலலிதா அரசு அவர்களை பணி நீக்கம் செய்தது. இப்போது மத்திய அரசும் போராடும் மருத்துவர்களை அவ்வாறு செய்யப் போவதாகக் கூறியுள்ளது. ஜெயலலிதா செய்தது தவறென்றால் இது மட்டும் சரியா. இல்லை இட ஒதுக்கீட்டினை எதிர்த்து போராடுவது பணி நீக்கம் என்ற தண்டனையை ஒரு தலை பட்சமாக, விசாரணையின்றி தரும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா. அன்புமணி ராமதாஸின் கண்ணோட்டத்திற்கும், ஜெயலலிதாவின் கண்ணோட்டத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு.ஒரு வேளை இப்படி பணி நீக்கம் செய்வதும் சமூக நீதியின் ஒரு பகுதியோ. வீரமணியைக் கேட்டால் ஆம் என்று சொன்னாலும் சொல்லுவார்.
15, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு இட ஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது கல்விரீதியாக, சமூகரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளுக்கு என்றே அரசியல் சட்டம் கூறுகிறது.நரசிம்ம ராவ் அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு தரும் ஆணையைப் பிறப்பித்தது. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் அந்த ஆணை செல்லத்தக்கது அல்ல என்று நிராகரித்துவிட்டது. ஏனெனில் அரசியல் சட்டத்தில் அப்படி இட ஒதுக்கீடு தர இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது வறியவர்களை முன்னேற்றும் திட்டம் அல்ல. பின் தங்கிய வகுப்புகள் சமூக ரீதியாக,கல்வி ரீதியாக முன்னேறவும், அந்த முன்னேற்றம் காரணமாக அரசு வேலைகள் போன்றவற்றில் உரிய இடங்களைப் பெற உதவும் ஒரு கருவி. பொருளாதார முன்னேற்றம் அதன் மூலம் ஏற்பட்டாலும் இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. எனவே அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யாமல் அத்தகைய இட ஒதுக்கீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த விஷயத்தினை விலாவாரியாக அலசுகிறது. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

16, இறுதியாக, இன்றைய பிஸினஸ் லைனில் பேராசிரியர் வைத்தியனாதன், ஐஐஎம், பெங்களூர் ஒருசிறப்பான

6 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

16, இறுதியாக, இன்றைய பிஸினஸ் லைனில் பேராசிரியர் வைத்தியனாதன், ஐஐஎம், பெங்களூர் ஒரு
சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார்.
http://www.thehindubusinessline.com/2006/05/18/stories/2006051800251000.htm
இட ஒதுக்கீடு குறித்த சில மயக்கங்களை இது தெளிவாக்கும். எப்படி அடிப்படை தகவல்கள் இல்லாமல் இட ஒதுக்கீடிற்கு ஆதரவளார்கள் வெறும் கைகளால் முழம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக எடுத்துரைத்திருக்கிறார்.

12:37 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:38 PM  
Blogger Vajra மொழிந்தது...

சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க...இந்த ஹிண்டு பத்திரிக்கை மிகக் கேவலமான "மார்க்ஸ்வாத" பத்திரிக்கை. ஒரு காலத்தில் நல்ல பத்திருக்கை தான். அவர்கள் எழுதும் Editorial எல்லாம் படித்தீர்கள் என்றால், உலகில் எல்லா பிரச்சனைக்கும், IBM, Infosys ல் வேலை பார்த்துக் கொண்டும், ஐந்து இலக்கு சம்பளம் வாங்கும் நடுத்தரவர்கத்தினர் (bourgeoise! ) தான் என்று முடியும், இல்லை நாம் எல்லாம் நடுத்தர வர்கத்தினர் தானே அதனால், நமக்கு "குற்ற உணர்வு" மேலோங்கி தற்கொலைக்குக் கூட தூண்டலாம்.

அக்னிவேஷ் சரியான போலி ஆசாமி, அவரை ஆரிய சமாஜைவிட்டு துரத்தியும் விட்டார்கள்.
இது என் கருத்து தான், இதை விவாதத்திற்காக வைக்கவில்லை.

அரசுத்தலையீட்டினால் எக்கச்செக்க பிரச்சனை, அதை அவர்கள் உணர்வது சுலபமாக நடக்கது.

//
இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
//

முழுவதும் அமேதிக்கிறேன்...மாறுபட்ட கருத்துக்கள் எனக்கில்லை.

வஜ்ரா ஷங்கர்.

1:49 PM  
Blogger Boston Bala மொழிந்தது...

இரண்டு பகுதிக்கும் நன்றி. Affirmative action குறித்து விரிவான அலசல்களைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவுக்கு பொருத்தமான வகையில் கொடுத்திருக்கிறீர்கள்.

4:18 PM  
Blogger arunagiri மொழிந்தது...

இந்த விஷயத்தில் வெளி வரும் ஒரு சில அறிவார்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

"இட ஒதுக்கீடு என்பது வறியவர்களை முன்னேற்றும் திட்டம் அல்ல".

இது தவறான அடிப்படை- (அரசியல் சட்டத்தில் இப்படிச்சொல்லப்பட்டு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி).

நூற்றாண்டுகால வரலாறுகள் காட்டுவது சாதி அமைப்பு என்பது தேங்கி நிற்கும் ஒரு அமைப்பு அல்ல, மாறாக தொடர்ந்து இயங்கிய, இயங்கிக்கொண்டுள்ள ஒரு உயிரோட்டம் மிகுந்த அமைப்பு என்பதையே. சமூக அதிகாரத்தில் கீழ்த்தட்டில் இருந்தவர் மேலே வந்தததும் மேலே இருந்தவர் கீழே சென்றதும், ஒரே காலத்திலேயே ஒரே சாதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமூக அதிகார நிலைகளைக் கொண்டிருந்ததும், பழைய சாதிகள் மறைந்து புது சாதிகள் தோன்றியதும், பழைய சாதிகளில் இருந்தே புதிய பிரிவுகள் கிளைத்ததும், அவை வெவ்வேறான சமூக அதிகாரங்கள் என்ற நிலையில் வளர்ந்ததும் இந்த இயக்கத்தினால் விளைந்த வரலாற்று உண்மைகள். இவற்றை மறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக நிலை யதார்த்தங்களை காலத்தால் மாறா நேரடுக்கு அமைப்பாக நீட்டித்துக் கற்பனை செய்வதும் அதன் அடிப்படையிலேயே சமூக நீதி என சட்டம் கொணருவதும் அறிவார்ந்த நாணயமின்மையே.

"பொருளாதார முன்னேற்றம் அதன் மூலம் ஏற்பட்டாலும் இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல".

அதுதான் இதில் உள்ள அடிப்படைக் குற்றமே. அடிப்படை வசதியும் நாளை குறித்த நம்பிக்கையும் இன்றி வாழும் மக்கள் அதிகம் இருக்கும் நம் நாட்டில், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டுவது அன்புமணிகளுக்கும், தயாநிதிகளுக்கும் அல்ல.
பொருளாதார மாற்றம் சமூக அதிகார நிலகளைப் புரட்டிபோட வல்லது. பார்ப்பன வாலி கருணாநிதி முன்னால் கைகட்டி நிற்பதும், பன்னீர்தாஸ் கடையில் செட்டியார் வேலை செய்வதும் பொருளாதார அடிப்படையில் நிகழ்ந்த அதிகார மாற்றங்கள்தாம்.

மற்றபடி creamy layer என்றும் பொருளாதாரத்தில் பின்னுள்ள முற்பட்ட சாதிக்கு உதவுவது என்பதும் CPM பல காலமாகச் சொல்லி வருவதுதான். என்ன, மற்றவற்றை மேடை போட்டு நீட்டு முழக்கி பிரசாரம் செய்பவர்கள் இவ்விஷயத்தில் வாய்க்குள்ளேயே முனகிக் கொள்வார்கள். ஓட்டுப்பொறுக்கி அரசியலில் இதெல்லாம் சகஜம்தான். "அரசுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது" என்ற உங்கள் கருத்தையே இதற்கு ஆதரவாகக் காட்டுவேன்.

5:39 PM  
Anonymous Ninaithathai sonnane மொழிந்தது...

Vanakkam Thalaiva

It is really surprising to see a post like this.What a Master piece .

Don't be scared( By all this sundakai pasanga, who are subjective rather than objective) to write what you feel. After all blog is meant for that, not to get follow up threads.

This is theunder current
"அரசுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது"

I don't think any of the Morons who write against you in other persons blog are going to understand the above .......

I appreciate your thoughts on non caste base.......

10:54 PM  

Post a Comment

<< முகப்பு