தேர்தலும், அதற்கு அப்பாலும்-2

9, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் தலித் அரசியலை பிற தலித் அமைப்புகள், கட்சிகளுடன் சேர்ந்து பலப்படுத்த வேண்டும்.இப்போதுள்ள நிலை நீடித்தால் விடுதலை சிறுத்தைகள் அரசியலில் அதிக தூரம் பயணிக்க முடியாது. குடியரசுக் கட்சியின் கதி என்ன ஆனது என்பதை யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் மாயாவதியிடமிருந்து சிலவற்றைப் கற்றுக் கொள்ளலாம். பா.ம.கவிடான தமிழ் மொழிப் போராட்டம் போன்றவை தலித் அரசியலை வளர்க்க உதவாது. மேலும் இப்போதுள்ள நிலையில் தலித் அரசியல்சக்திகள் தமிழ்நாட்டில் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதும், அமைப்பு ரீதியாக வலுப்பெறுவதும் மிக அவசியம். அமைப்பு ரீதியாக வலுப்பெறுவது இல்லாத போது இயக்கங்கள் எழுச்சியினை முன்னெடுத்து செல்ல முடியாமல் தேங்கி விடுகின்றன அல்லது பிளவுபடுகின்றன. ஒரு காலத்தில் நாராயண சாமி நாயுடுவின் விவசாய இயக்கம் மிக பலமாக இருந்தது.ஆனால் அது பின்னர் வலுவற்று சிதறிப் போனது.விடுதலை சிறுத்தைகள், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏனைய தலித் அமைப்புகள் ஒரே அமைப்பாக சேராவிட்டாலும் ஒரு கூட்டமைப்பையாவது அமைத்து தலித் அரசியலை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் செல்லவேண்டும். குறைந்த பட்ச செயல்திட்டம், தமிழகமெங்கும் அமைப்பு ரீதியாக கிளைகளை உருவாக்குதல், இளைய தலைமுறையினருக்கு அரசியல் பயிற்சி அளித்தல் போன்று பல வழிகளில் அவர்கள் செயல்பட வேண்டும். இல்லையேல் 1990களில் ஏற்பட்ட எழுச்சி திரட்டப்பட்ட எழுச்சி சரியான திசையில் பயணிக்காததால் வலுவிழந்தும், நீர்த்தும் போய்விடும் சாத்தியக் கூறு உள்ளது. சிவில் சமூகத்தில் தலித் அமைப்புகள் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டும். தலித் ஒட்டுகள் தலித் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்கே என்ற நிலையை ஒரு பத்தாண்டுகளில் உருவாக்கினால் அதுவே பெரிய சாதனை. தேர்தல் கூட்டணிகள் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தலித் கட்சிகள் தயங்க வேண்டியதில்லை.அதே சமயம் அக்கூட்டணிகளும், தேர்தல் அரசியலும் தலித் அரசியலை நீர்த்துப் போகவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

10, திமுகவைப் பொறுத்தவரை தேர்தலின் முடிவுகள் எப்படியிருந்தாலும் கட்சி வலுவிழக்காது. ஆனால்தேர்தலில் தோற்றால் மத்தியில் திமுகவின் செல்வாக்கு மங்க ஆரம்பித்துவிடும். எதிர்காலத்தில் காங்கிரஸ்அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. மேலும் மத்திய அரசு கவிழ்ந்தால் புதிய அரசியல் கூட்டணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய முண்ணனி போன்ற முயற்சிகள், அல்லது மூன்றாம் அணி உருவாகலாம். தேர்தலின் தோல்வி திமுகவிற்கு பல வழிகளில் மோசமான பாதிப்பினைஏற்படுத்தும். தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் அதிமுகவின் முக்கியத்துவம் வெகுவாக குறையாது.1996 ல் தோற்ற அதிமுக 1998 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமாக வெற்றி கண்டதை இங்கு கருத்தில்கொள்ள வேண்டும். அதிமுகவின் ஒட்டு சதவீதம் கிட்டதட்ட நிலையாக உள்ளது. அது வெகுவாக குறைந்ததில்லை. ஒருவேளை இத்தேர்தலில் வெகுவாகக் குறைந்தால் அதை மீண்டும் பெறுவது கடினம். 2004 போல் 2006ல் அதிமுக பெருந் தோல்வியை எதிர் கொள்ளும் வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது.

11, குறிப்பிடத்தகுந்த நல்ல மாற்றம் தேவையெனில் தமிழக அரசியல் இரண்டு கழகங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது அவசியம். விஜயகாந்த்தின் கட்சி நிலைக்குமானால் அது காங்கிரஸின்,கழகங்களின் ஒட்டுவங்கியை பாதிக்கலாம். கிட்டதட்ட 60% முதல் 66% வாக்குகள் இரு கழகங்கள் வசம் இருக்கையில் இன்னொரு கட்சி அல்லது கூட்டணி அசுர வளர்ச்சி பெற்றால் ஒழிய இவற்றின் ஒட்டு சதவீதம் குறையாது. தேர்தலில் வாக்களிதோர் சதவீதம் கிட்டதட்ட 30% ஆக இருக்கும் போது இதில் கணிசமானவர்கள் ஒரு புதிய கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்தால் தமிழக அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும்.அவர்கள் நம்பிக்கையை பெறும் வகையில் இப்போது எந்தக் கட்சியும் இருப்பதாகத் தோன்றவில்லை. எனினும் எதிர்காலத்தில் இதற்கான சாத்தியக் கூறு இருக்கிறது.

12, இடதுசாரி கட்சிகள் தேர்தல் கூட்டணிகளுக்கு அப்பால் அரசியல் யுக்திகள் குறித்து யோசிக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் கதி மேற்கு வங்கத்திலும், கேரளத்தில் உள்ள கூட்டணிகளில் உள்ளசிறிய கட்சிகள் போலாகி விடும். தொழிற்சங்க அரசியலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்வது கடினமாக இருக்கும் போது, பல்வேறு காரணங்களால் தொழிற்சங்கள் முன்பு போல் பலத்துடன் செயல்பட முடியாத போது இடதுசாரிகளின் அடித்தளமான தொழிற்சங்கங்களை நம்பி கட்சியை முன்னெடுத்துச்செல்ல முடியாது. இடதுசாரிகள் தலித் அரசியல் சக்திகள் போன்றவற்றுடன் தோழமை கொள்வது போன்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்க வேண்டும்.

13,இந்தத் தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழகம் பொருளாதாரரீதியாக முன்னேறியாக வேண்டியது கட்டாயம்.வேலைவாய்ப்புகள் பெருகாவிட்டால் சமூகப் பிரச்சினைகள் கூர்மை அடையும். தமிழக விவசாயத்தினைப் பொறுத்த வரை நீர் பெரும் பிரச்சினையாக இருக்கும் என்பதால் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு முன்னுரிமை எந்த அளவிற்கு கொடுக்க முடியும், மாற்றுப் பயிர்கள் என்னென்ன என்பதை குறித்து விவாதிக்க வேண்டும். அரிசி மீது நமக்கு உணர்வு பூர்வமான பற்று இருக்கலாம். அது புத்திச்சாலித்தனமாக, யதார்த்தமாக சிந்தித்து முடிவெடுப்பதை தடுக்கக் கூடாது.

14,இந்த தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதை விட அதன் தாக்கங்கள் எவையெவை என்பதேஎனக்கு முக்கியமாகப்படுகிறது. கூட்டணி ஆட்சி ஏற்பட்டாலும் கேரளா, மே.வங்கம் போல் நிலைத்தகூட்டணிகள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். பா.ம.க தேர்தலுக்குப் பின் அணிமாறினாலும்வியப்படைய ஒன்றுமில்லை. ஒரு வேளை யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாமல் யாரும்அரசு அமைக்க முடியாமல் போகலாம். அதன் பின் இதே கூட்டணிகள் தொடருமா என்பதுசந்தேகமே.

15, ஜெயலலிதா அரசு அமைத்தாலோ அல்லது கருணாநிதி அரசு அமைத்தாலோ பெரும் வித்தியாசம்இராது. ஜெயலலிதா சர்வாதிகாரியாக செயல்படுவார் என்ற அச்சம் காரணமில்லாமல் இல்லை. ஆனால் அவர் 2004க்குப் பின் நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளலாம். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்மத்தியில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும், அது இங்கும் பிரதிபலிக்கும். ஏற்கனவே கருணாநிதியின்கடைக்கண் பார்வையின் குறிப்பறிந்து செயல்படும் காங்கிரஸ் காலடியில் விழுந்துவிடும். அதானல் அதுஇன்னும் பலவீனமடையும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஒரு கட்டத்திலேனும் தங்கள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து யோசித்தாக வேண்டும். இரண்டு கழகங்களின் தோள்களில் மாறி மாறிசவாரி செய்திருப்பதால் காங்கிரஸின் ஒட்டு வங்கி அப்படியே நீடிக்கும் என்று கூற முடியாது. அதுகுறையக்கூடும்.

16, ஒரு கட்சி தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளதென்பதலாயே அதுதான் எப்போதும் ஆட்சிசெய்யும் என்று கருத முடியாது. வீழ்ச்சி அடைய பத்தாண்டுகள் போதும், அதன் பின் அக்கட்சி ஆட்சிக்குவரவாய்பில்லை என்று கூட ஆகலாம்.1967 ல் தோற்ற காங்கிரஸ் தமிழ்நாட்டில் அதன் பின் ஆட்சியைப் பிடிக்க முடியவே இல்லை. இப்போது அதற்கு 10% - 12% ஒட்டுகள் கிடைக்கின்றன. அது பாராளுமன்றத்தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட கூட்டணியை விரும்புகிறது. எண்ணிகையை முக்கியமாகக் கருதினால் கூட்டணியே வழி என்று கருதுகிறது. ஆனால் காங்கிரஸ் இழந்த பலத்தினைப் பெற முடியவேயில்லை. அதன் பின் இரண்டு தலைமுறை காங்கிரஸ்காரர்கள் வந்தும் காங்கிரஸ் பலம் பெறவேயில்லை. உ.பி, பீகாரில் ஒரு காலத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆண்டது.ஆனால் 1980களிலிருந்து அது வலுவிழக்கத்துவங்கியது. இப்போது காங்கிரஸ் தனித்து நின்று ஆட்சிஅமைப்பது அங்கு சாத்தியமேயில்லை. குஜராத்திலும் இதே போல்தான். மேலும் காங்கிரஸ் கட்சியின்ஒட்டு வங்கியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அதால் இழந்த பலத்தில் பாதியைக் கூட பிடிக்க முடியாதநிலை உள்ளது. இது போன்ற ஒரு நிலை தமிழகத்தில் நிகழாது என்று கூற முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் மக்கள் காலாகாலத்திற்கும் இரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றையே தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்க வைப்பார்கள் என்று கருத முடியாது. கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்அது வேறு பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆட்சியில் பிற கட்சி(கள்) பங்கேற்றாலும், பங்கேற்காவிட்டாலும் ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதே அது பலவீனமடையத் துவங்கிவிட்டதுஎன்பதாகும். அது தொடர்ந்து பலவீனமடையும் என்பதில்லை. மாறாக ஒற்றைக் கட்சி ஆதிக்கம் சரியத்துவங்குகிறது என்றே பொருள். உ.பியில் காங்கிரஸின் பலம் குறைய ஒரு முக்கிய காரணம் ஒரு கட்டத்தில்அதன் தலித் வாக்குவங்கி பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதமாகவும், உயர்ஜாதியினர் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்ததுமாகும். குஜராத்தில் இதே போன்ற மாற்றம் வேறொருவிதத்தில் நடந்தது. காங்கிரஸ் காலங்காலமாக காத்த வாக்குவங்கிகள் நிலைக்கவில்லை. தமிழ்நாட்டிலும் இது போன்ற நிலை எழாது என்றுகூற இயலாது, அத்தகைய நிலை எழுந்தே தீரும் என்றும் கூற முடியாது. அதற்கான சாத்தியக் கூறுஇருக்கிறது என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

17, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் உள்ளது போன்ற கூட்டணிகள் இங்கும் உருவாகலாம். அதற்கு 2006 தேர்தல் ஒரு துவக்கமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணிக்குஎதிராக காங்கிரஸ் எவ்வளவோ முயன்றும் வெற்றி பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் அது போன்ற நிலைஉருவாக வாய்ப்புகள் குறைவு. எது எப்படியாயினும் கூட்டணி ஆட்சி என்பது இங்கு எப்படி செயல்படுகிறது என்பதைப் பொருத்தே கூட்டணி ஆட்சிகளை மக்கள் தெரிவு செய்வது இருக்கும். ஒரு தேர்தலில் கூட்டணி ஆட்சி, இன்னொரு தேர்தலில் ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை என்று மக்களின் தெரிவுஇருக்கலாம்.

18, விஜயகாந்த் கட்சியை ஒராண்டிற்கு முன்பு துவக்கியிருந்தால் கணிசமான தாக்கத்தினை தேர்தலில்ஏற்படுத்தியிருக்கலாம். மக்கள் ஆதரவை ஒட்டுகளாக மாற்ற உதவும் அமைப்பு ரீதியான பலம் அவருக்குஇல்லை. ஆனால் அமைப்பு ரீதியாக கட்சியை அவர் வலுப்படுத்தினால் 4 அல்லது 5 ஆண்டுகளில் அவர்கட்சி மூன்றாவது அல்லது நாலாவது பெரிய கட்சியாக மாறக்கூடும். ஆந்திராவில் ராமாராவ் சாதித்ததைஇங்கு சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதே சமயம் முயற்சி செய்தால், சரியான அணுகுமூஅரியை கடைப்பிடித்து கட்சியை வளர்த்தால் பாமக அல்லது மதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையாக அவர் கட்சி வளர்வதும் சாத்தியம். கழகங்களின் வாக்குவங்கியில் உடனடியாக அவர் கட்சியினால் பாதிப்புஏற்படுத்த முடியாது. நீண்ட காலப் போக்கில் அது சாத்தியமாகலாம், அதே போல் மதிமுக, பாமகவின்வாக்குவங்கியையும் அவர் கட்சி பாதிக்கலாம்.

19, இன்றைய உலகமயமாகும் சூழலில் கனிம வளங்கள், நீர் வளம் அதிகமற்ற தமிழகம் எத்தகைய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும், எத்தகைய துறைகள், தொழில்களில் தன்னை முதன்மையான இடத்தில் இருத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசிக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரவளர்ச்சி 8% என்றால் இங்கு 11% என்று செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். நம்முடைய மிகப் பெரிய பலம் நம் மானுட ஆற்றல்.இதை பிரதானப்படுத்தி, நம் அறிவாற்றலையும், அனைத்து வித உழைப்பையும் கொண்டு தமிழகம் இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாக, உலக அளவில் கவனமும், மரியாதையும் பெறும் மாநிலமாக மாற முடியுமா என்று கேட்டுக் கொண்டு, முடியும், அதை சாத்தியமாக்குவோம் என்று சிந்திக்கின்றன அரசியல், நிர்வாகத் தலைமை வேண்டும். இந்த கண்ணோட்டம் இங்கு எந்த அரசியல் கட்சிக்காவது இருக்கிறதா, இனி வரும் தலைமுறைகளின் உதவியுடன் வளமான, முன்னேறிய தமிழகத்தினை உருவாக்கத் தேவையான திட்டமும், தொலை நோக்கும் இங்கு எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா.துரதிருஷ்டவசமாக இது போன்ற சிந்தனை கட்சி அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கும் இருப்பதாகக்தெரியவில்லை.

மேலே உள்ள ஒவ்வொன்றையும் விரிவாக எழுதினால் கிட்டதட்ட 20 கட்டுரைகள் எழுதலாம். அப்படிஎழுதுவதற்கான நேரமோ , பொறுமையோ இல்லை. ஒரு விவாததிற்கான துவக்கப் புள்ளிகள் என இவற்றைக் கொள்க.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு