இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும்

பேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப் படிப்பவர்கள் அவர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவாக கூறியுள்ளார் என்று கருதக்கூடும். ஆனால் இப்பிரச்சினையில் உள்ள சிக்கல்களை அவர் கூறவில்லை.

முன்னர் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தினைஉருவாக்கியவர்கள் மதரீதியான இட ஒதுக்கீட்டிற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் தரவில்லை.(1) இதற்கு ஒரு காரணம் அவ்வாறு செய்வது மத ரீதியாக பாகுபாடு காட்டுவது என்பதாகும். ஒரு மதச்சார்பற்ற அரசு தன் குடிமக்களில் சிலருக்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவர்கள் என்பதற்காக இட ஒதுக்கீடு செய்வது மதச்சார்பின்மை என்பதற்கு விரோதமாகும். அரசியல் சட்டத்தில் பிற்பட்ட சமூகங்கள் என்பதன் அடிப்படையிலே இட ஒதுக்கீடு செய்ய வழி உண்டு. மத ரீதியாக அல்ல.அதாவது பிற்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பார் எந்த மதத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு தர இடமுண்டு, ஆனால் ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒரு சமூகத்தினை பிற்பட்ட சமூகமாக ஏற்க இடமில்லை.எனவே வீரமணியின் வாதம் சரியல்ல. மேலும் அன்று இருந்தது, அதை இன்று கேட்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது. இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அரசியல் சட்டம் அமுல் செய்யப்பட்ட பின் அரசியல் சட்டமே வழிகாட்டும் நெறியே அன்றி ஆங்கிலேயர் ஆட்சி கடைப்பிடித்த கொள்கைகள் அல்ல.

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினைப் பற்றி ஆராய, ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். அதன் பரிந்துரையில் அடிப்படையில் அரசு முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் மத்திய அரசில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் இதுதான் நடைமுறை. அக்கமிஷன் சிறுபான்மையினர் நலக்கமிஷன் அல்ல, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த கமிஷன். அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீடு செய்ய முடியாது. மேலும் அரசுத்துறை மூலம் ஆய்வு செய்து ஒரு சமூகத்தினை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது, இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. ஆந்திர அரசு இது போன்ற ஒரு முயற்சியை செய்து இட ஒதுக்கீட்டினை இஸ்லாமியருக்கு அளித்தது அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே பிற்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின்னரே அரசு மீண்டும் இட ஒதுக்கீட்டினை அளித்தது. அதை ஆ.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பிறகு இடைக்காலத் தடை இல்லை.

கேராளாவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற வரம்பினை மீறாமல் 50% ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் இட ஒதுக்கீடு என்பது சில நிபந்தனைக்குட்பட்டது.பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்று வரையறை செய்யப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. எனவே கேரளத்தில் உள்ள நிலை வேறு , தமிழ்நாட்டில் உள்ள நிலை வேறு என்பதை கவனிக்க வேண்டும். பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை திராவிடர் கழகம் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த்க கோட்பாடு மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் அமுலில் இல்லை. எனவே கேரளாவைப் பார் என்பவர் அங்கு என்ன இருக்கிறது, இல்லை என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை.

இங்கு இன்னொரு அம்சத்தினையும் குறிப்பிட வேண்டும். தேசிய பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் கேரளத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. Other Muslims excluding (I) Bohra (ii) Cutchi Menmon (iii) Navayat (iv) Turukkan (v) Dakhani Muslim என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே போல் கர்நாடாகாவை பொறுத்த வரை இக்கமிஷன் முஸ்லீம்களில் சில பிரிவினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.Other Muslims excluding (i) Cutchi Memon (ii) Navayat (iii) Bohra or Bhora or Borah (iv) Sayyid (v) Sheik (vi) Pathan (vii) Mughal (viii) Mahdivia/Mahdavi (ix) Konkani or Jamayati Muslims

இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% உள்ள போது அது தவிர இஸ்லாமியருக்காக 5% கொடுத்தால் அது 74% ஆகிவிடும். இது உச்ச நீதிமன்றம் நிர்யணம் செய்த 50% என்பதை விட மிக அதிகம் . 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது தமிழக அரசு இன்னும் 5% அதிக ஒதுக்கீடு செய்வது இன்னொரு வழக்கிற்கே வழிவகுக்கும். அரசு இட ஒதுக்கீடு தரும் பட்சத்தில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டில் 5% இஸ்லாமியர்களுக்கு என்று உள் இட ஒதுக்கீடு செய்வது இயலும்.ஆனால் இது பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர் அல்லோதார் இட ஒதுக்கீட்டினை குறைக்கும் என்பதால் எதிர்ப்பு எழக்கூடும்.மேலும் இப்போது பிற்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவுகள் இருக்கின்றன. நாளை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பிற்பட்டோர் என்று அறிவித்தால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், இஸ்லாமியர் என்று மூன்று பிரிவுகளாக இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். அப்படியானால்,இட ஒதுக்கீடு 5% என்றால் அதை எதிலிருந்து பிரிப்பது என்ற கேள்வியும் எழும்.

ஆந்திராவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்த போது மொத்த இட ஒதுக்கீடு 51 % ஆனது, அதாவது 46%+5%. இதை உயர் நீதிமன்றம் ஏற்க வில்லை. 50% என்பதற்கு மேல் இட ஒதுக்கீடு தரக்கூடிய விசேஷ சூழல் அல்லது காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் 1% என்பது சிறியது என்று கருதி நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டாம் என்ற வாதத்தினையும் ஏற்கவில்லை. எனவே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அதை எங்கு வகைப்படுத்துவது என்பது பிரச்சினையாகும். இது 1% என்றாலும் கூட பிரச்சினையாகும்.

மத்திய அரசு அமைத்துள்ளவை குழுக்கள், கமிஷன்கள்.இவை தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன் செய்யும் பணியை செய்வதற்காக அமைக்கப்படவில்லை. இவை இட ஒதுக்கீடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இட ஒதுக்கீட்டினை இவை பரிந்துரைத்தாலும் அரசு அதை ஏற்றாலும், அப்போதும் கூட தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன்தான் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை இறுதி செய்யும்.இக்கமிஷன் ஏன் அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் ராஜிந்த்ர் சர்ச்சார் கமிட்டியின் பணி வேறு, இக்கமிஷனின் பணி வேறு என்பதை அறிய முடியும்.

ஒரு வேளை மத்திய அரசு மத ரீதியான சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அகில இந்திய அளவில் மாநில அரசுகள் அடிப்படையாகக் கொள்கின்ற பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்களை பயன்படுத்துவதா இல்லை கமிஷன் தயாரித்துள்ள பட்டியலை பயன்படுத்துவா இல்லை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதா என்ற கேள்வி எழும்.அதே போல் பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டா, கிடையாதா என்ற கேள்வியும் எழும். எனவே மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தாலும் சில கேள்விகள் இருக்கின்றன.இது போன்ற விஷயங்களை வீரமணியும் சுட்டிக்காட்டவில்லை, கேள்வி கேட்டவர்களும் அவற்றை எழுப்பவில்லை.

கருணாநிதி பரிந்துரைத்துள்ள தீர்வு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது, மாநிலங்கள் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமை பெறுவது. அப்படி ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டால் அதை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குட்டபடுத்த முடியும். மேலும் 50% என்பதை விட அதிகமாக இட ஒதுக்கீடு தரும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு தர முதலில் நாடாளுமன்றத்திக்கு அதிகாரம் உண்டா என்பதை கேள்விக்குட்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடு செல்லுமா என்பது குறித்த வழக்கே உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு சட்டத்திருத்தம் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், நினைத்த அளவு இட ஒதுக்கீடு பெற்றுத் தர முடியும் என்பது ஏமாற்று வேலை.

இப்போதுள்ள நிலையில் மாநில அரசு தன்னால் எதைச் செய்ய முடியுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.

சிறுபான்மையினருக்கான கமிஷன் வேறு, பிற்பட்டோருக்கான கமிஷன் வேறு. தேசிய அளவில் சிறுபான்மையினர் கமிஷனும் இருக்கிறது, பிற்பட்டோர் கமிஷனும் இருக்கிறது. மாநிலங்களில் இட ஒதுக்கீட்டினை குறித்து பரிந்துரைக்க பிற்பட்டோர் கமிஷனை அரசு ஏற்படுத்தலாம். அக்கமிஷனிடம் சிறுபான்மையினரும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரலாம். பிற்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும் தத்தம் வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கோரலாம். இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை பிற்பட்டோர் கமிஷனே பொருத்தமான, சரியான அமைப்பாகும். அக்கமிஷன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து இக்கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும் கமிஷன் கோரிக்கைகளை பரிசீலித்து,ஆய்வு செய்து பரிந்துரைத்தால்தான் அரசு இட ஒதுக்கீடு குறித்து ஆணைப் பிறப்பிக்க முடியும். கோரிக்கைகளைப் பரிசீலித்து ஆய்வு செய்யாமல் ஒரு வகுப்பு பிற்பட்ட வகுப்பு என்று அரசு கருதுகிற ஒரே காரணத்தினால்தன்னிச்சையாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

அக்கமிஷன் இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தாலும் அதை அரசு ஏற்றாலும் அவை நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு உட்பட்டவையே. அதாவது அவற்றை எதிர்த்து வழக்கு தொடர முடியும். கமிஷன் மேற்கொண்ட ஆய்வு முறை, அதன் பரிந்துரைகளை அடிப்படைகளை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். கமிஷன் கூறும் பரிந்துரையை நீதிமன்றம் நிராகரிக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்த அரசு ஆணையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம். ஆந்திராவில் நீதிமன்றம் இவை அனைத்தையும் பரிசீலித்து, வழக்கு விசாரணையில் தரப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள் அடிப்படையில் அரசு ஆணையை செல்லத்தக்கது அல்ல என்றது.

வீரமணி இந்த அடிப்படை விஷயங்களைப் பேசவில்லை. ஆந்திராவில் உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து என்ன கூறியது, என்ன காரணங்களை முன் வைத்தது இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லத்தக்கது அல்ல என்று கூறியதை விளக்கவில்லை.இதையெல்லாம் பேசினால் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள், அப்புறம் நாம் விடும் கட்டுக்கதையினை நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என்பது அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி சிலர்நினைப்பது போல் அரசு நினைத்த உடன் தருகிற ஒன்றல்ல. இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு குறித்த ஆணை குறித்த வழக்குகள் (குறிப்பாக Indra Sawhney v. Union of India) , 2006ல் ஆ.பி. உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் (B. Archana Reddy and Ors. Vs. State of A.P., rep. by its Secretary, Law (Legislative Affairs and Justice) Department and Ors.அளித்த தீர்ப்பு - இவைகளைப் படித்தால் இட ஒதுக்கீடு குறித்து சட்டம் என்ன சொல்கிறது,நீதிமன்றங்கள் இதை எப்படி அணுகியுள்ளன என்பது குறித்த ஒரு புரிதல் கிடைக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் சில அடிப்படைகளைத் தெளிவாக்கிவிடுவது நல்லது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவினருக்கு பிற்பட்டோர் பட்டியலில் இடம் உள்ளதால் இட ஒதுக்கீடு இருக்கிறது. அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இல்லை. பெரும்பான்மையினருக்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை என்று நினைக்கிறேன். அதாவது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட முடியாது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும். மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பரிந்துரைத்த ஜாதி/பிரிவுகளின் பட்டியலில் பல முஸ்லீம் பிரிவுகளுக்கு இடம் இருந்தது. மாநிலங்களில் முஸ்லீம்களில் பல பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.(2)

அ என்கிற மாநிலத்தில் ஆ என்ற ஜாதி/பிரிவு பிற்பட்டோர் பட்டியலில் இருந்து, இட ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், இ என்கிற மாநிலத்தில் அந்த ஜாதி பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அதே போல் அந்த ஜாதி அந்த மாநிலத்திற்கு உரிய மத்திய பிற்பட்டோர் கமிஷன் பயன்படுத்தும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஜாதி தமிழ்நாட்டில் உள்ள பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அதே ஜாதி கேரள அரசின் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1950களிலிருந்து இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகளைக் கூறியிருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரை அமுல் செய்யப்படும் வரை மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இடம் இல்லை. எனவே மத்திய அரசின் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்ற பெஞ்ச் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்த ஒரு மிக விரிவான தீர்ப்பினை அளித்தது. இன்று வரை அத்தீர்ப்பில் கூறப்பட்ட வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் வேறு வழக்கு/வழக்குகளில் நிராகரிக்கவில்லை. எனவே அத்தீர்ப்பு இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை வேதம் என்று கருதப்படுகிறது. சில மாநிலங்களில் சாத்தியமான சில பின்னர் வேறு மாநிலங்களில் சாத்தியமாகாமல் போகலாம். அதற்குக் ஒரு முக்கிய காரணம் இவ்வழக்கில்உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிகளைக் கொடுத்ததே. எனவே 1960 களில் 1970 களில்அந்த மாநிலத்தில் செய்ததை 2006ல் இங்கு ஏன் செய்யக்கூடாது என்று கேட்பது பொருத்தமானகேள்வி அல்ல.

போதுமான பிரதிநிதித்துவம் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்ல. உதாரணமாக ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% என்று இருந்தால் அம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 5% கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் அதை பிற்படுத்த ஜாதி என்று கூறிவிடலாம் என்பது சரியல்ல.

பிற்பட்ட என்பதை நிர்யணம் செய்ய பல அளவுகோல்கள் உள்ளன. எனவே ஒரு சில தகவல்களைஅல்லது புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு ஒரு ஜாதி அல்லது பிரிவு பிற்பட்டது என்ற முடிவிற்கு வர முடியாது.பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் இந்த விஷயத்தில் கவனமாக ஆய்வு செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். ஆந்திர உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்த அம்சத்தினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

சிலர் ஆந்திரா உயர்நீதி மன்றம் சில 'டெக்னிகல்' காரணங்களுக்காக இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது, எனவே இப்போதே இன்னொரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை அரசு கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். உண்மை வேறு. நீதிமன்றத்தின் தீர்ப்பில் இதற்கு முந்தைய முயற்சிகள், வழக்குகள் குறித்த மிக விரிவான அலசல் இருக்கிறது. அதைப்படித்தால் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை அறிய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் வீரமணி இப்பேட்டியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இஸ்லாமியரைத் திருப்திப்படுத்த, ஜெயலலிதா மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக கூறியிருக்கும் கருத்துக்கள். உண்மை இதிலிருந்து வேறானது. அதைத் தெரிந்து கொண்டால் வீரமணி இப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் உள்ள நிலையை எடுத்துக் கூறி எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை விளக்கியிருப்பார்.

(வீரமணி கூறியுள்ள வேறு பல கருத்துக்கள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அவற்றை இன்னொரு கட்டுரையில் எழுத உத்தேசம்)

(1) மேலும் அறிய Bajpai, Rochana (2000): ‘Constituent Assembly Debates and Minority Rights’, Economic and Political Weekly, May 27

(2) Reservation for Muslims- zoya hassan -Seminar-No.549-2005

6 மறுமொழிகள்:

Blogger மாயவரத்தான்... மொழிந்தது...

//இதையெல்லாம் பேசினால் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள், அப்புறம் நாம் விடும் கட்டுக்கதையினை நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.//
ஹும்.. இல்லைன்னா மட்டும் வீரமணி சொல்றதையெல்லாம் எல்லாரும் நம்பி விடுறாங்களாக்கும்! அவரே ஈ.வே.ரா.வை சொல்லி காலம் தள்ளிட்டிருக்காரு!

10:31 AM  
Blogger நேச குமார் மொழிந்தது...

நல்ல பதிவு.தகவல்களுக்கு நன்றி.

11:41 AM  
Blogger ஜயராமன் மொழிந்தது...

மிக சிறப்பான இடுக்கை.

பல புது விழயங்களை தெரிந்து கொண்டேன். விழயத்தின் ஆழம் அகலம் பெருக்கி விவரித்துள்ளீர்கள். பல விழயங்கள் தெரியாமலேயே அவ்விழயங்களைப்பற்றி கருத்து ஏற்படுத்திக்கொள்கிறோம் என்பதை தெரிந்துகொண்டேன்.

தங்கள் சிறந்த பதிவுக்கு நன்றி

12:19 PM  
Blogger Voice on Wings மொழிந்தது...

//போதுமான பிரதிநிதித்துவம் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்ல. உதாரணமாக ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% என்று இருந்தால் அம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 5% கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் அதை பிற்படுத்த ஜாதி என்று கூறிவிடலாம் என்பது சரியல்ல.//

தேசிய பிற்பட்டோர் ஆணையத்தின் வலைத்தளத்திலுள்ள இந்த சுட்டியில், C.Economic clause 3ஐ, கிழே அளித்திருக்கிறேன்:
"3. Castes and communities, the share of whose members in State Government posts and services of Groups A & B/Classes I & II, is not equal to the population-equivalent proportion of the caste/community."

'population-equivalent proportion' என்பது என்ன என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறது இந்த வழிகாட்டி. இதன்படி, நீங்கள் மேலே கூறியுள்ளதைப் பிழையாகக் கருத வாய்ப்பிருக்கிறது.

12:20 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ரவி, உங்கள் வாதங்கள் ஏற்றுகொள்ள கூடியவையா என்பதெல்லாம் இருக்கட்டும். முதன் முதலாக ஒரளவு விரிவாக, பொறுமையோடு, கொஞ்சம் அர்த்தமுள்ளதாகவும் எழுதியுள்ளீர்கள். குறைந்த பட்சம் வாசிக்கும் போது எந்த எரிச்சலும் ஏற்படவில்லை. நிதானமாய் எதிர்கொள்ளவும் தோன்றுகிறது. எவ்வளவு பெரிய விஷயம்! அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

3:39 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

VoW
I have given that as an example to show that some examples and data will not be sufficient. FYKI
i reproduce a para from the relevant portion from the judgment of A.P.High Court.
-----------------------------------
While interpreting the statistical figures, one should not forget that the total
number of Government jobs in Gazetted, non-Gazetted and Class IV are very few when
compared with the total population of the State and total population of the Muslim community.
The employment statistics are relevant not for the purpose of identifying social backwardness
but to assess whether a given community is adequately represented or not in public services. If
a community is not adequately represented in public employment, the same itself cannot be
lone factor determinative of social backwardness. A class of citizens, which is socially backward
and which is not adequately represented in the services under the State, is alone entitled for
special treatment under Article 16(4). It would be constitutionally incorrect to assume that a
class of citizens becomes socially backward because such class of citizens is not adequately
represented in the services. The inadequate representation of socially backward class of
citizens, may be a ground, in addition to other reasons for identifying a class as a backward
class. Be that as it is when compared with the total Muslim population, the number of Muslims
in Gazetted and non-Gazetted Service is in no way below State average. For instance, for the
entire population of Andhra Pradesh of 7,62,10,007, there are 68,783 persons in Gazetted posts
whereas for a total Muslim population of 69,86,856, there are 4,809 Muslims in Gazetted posts.
The average for total population is 0.09 per cent whereas it is 0.068 per cent for Muslim
community. The other figures also suggest that Muslim community cannot be said to be
inadequately represented in the services under the State when compared with the total Muslim
population. One should not ignore that adequate representation is not proportional representation.
-----------------------------------

I think my contention holds good in light of this observation by the
High Court.The High Court did not
accept the argument that Muslims in A.P are educationally and socially backward.
You read the judgment and you will
know that proponents of reservation do not have a strong case.

9:08 AM  

Post a Comment

<< முகப்பு