வதந்தி = செய்தி

நியு இன்டியஸ் எக்ஸ்பிரஸின் 'புலனாய்வு' செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.தயாநிதி மாறன மான நட்ட வழக்குப் போடப்போவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியைப் படித்தால் அதில் ஒரு உருப்படியான தகவல் கூட இல்லை. டாட்டாகளுக்கு எப்போது DTH உரிமம்கிடைதத்து, டாட்டா தவிர வேறு யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, இதில் டாடா குழுமமும்,முர்டோக்கும் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், நிபந்தனைகள் என்ன என்று ஒரு விபரமும் கிடையாது. சரி தயாநிதி மாறன் எப்போது இதில் தலையிட்டார், மிரட்டினார், தேதி வேண்டாம்,மாதம் கூட கிடையாது. அதுதான் போகட்டும் சன் டி,வி தாங்கள் டாடா, முர்டோக்குடன் கூட்டுச்சேரப் போவதாக எப்போதாவது அறிவித்ததா, அதை டாடாவோ அல்லது முர்டோக் தரப்பு எப்போதாவது மறுத்ததா, சன் டி.வி யில் முதல் பொதுப்பங்கு விற்பனை குறித்த தகவல் அறிக்கையில் DTH குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா. இப்படி ஒரு தகவலும் இல்லாமல், சில பெயர்களையும், சிலவார்த்தைகளையும் வைத்துக் கொண்டு 'புலனாய்வு' செய்திருக்கிறார்கள். நக்கீரன், ஜூனியர் விகடன்பரவாயில்லை. மிஸ்டர் மியாவ் கிசுகிசு இதைவிட பல மடங்கு மேல். ஒரு மோசமான கிசுகிசுவைசெய்தியாக ஜோடித்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கேள்விகள் வேறு.

டாட்டாவைச் சந்தித்தபோது மாறன் நீலக்கலர் சட்டை போட்டிருந்தாரா, நோக்கியா செல்பேசி வைத்திருந்தாரா,முஷ்டியை உயர்த்தி, குரலை உயர்த்தி ஐ வில் பினிஷ் யூ என்று மிரட்டினாரா என்று கேட்டிருக்கலாம்.

ஆயிரம் அனுமானங்களுடன் கேட்க்கப்படும் கேள்விகளுகெல்லாம் எந்த நிறுவனமும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. காவல் துறை விசாரணையின் போதும் ஒருவர் கருத்து சொல்லவிரும்பவில்லை என்று கூறலாம் அல்லது மெளனம் சாதிக்கலாம். யாரையும் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அல்லது சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப் முடியாது.அதாவது ஒருவர் பதில் அளித்தால் அப்பதில் தனக்கு எதிரான சாட்சியமாக திருப்பப்படும் என்று கருதினால்மெளனம் சாதிக்கலாம் அல்லது பதில் அளிப்பதை தவிர்க்கலாம். இது ஒரு பொது விதி.

எனவே நீ கருத்துக் கூறவில்லை என்றால் நான் சொன்னதைப் நீ ஒப்புக் கொண்டாய் என்று அர்த்தமாகாது. அப்படி அரத்தப்படுத்திக் கொண்டால் அது சட்டப்படி செல்லாது. 'புலனாய்வு'செய்தவர்களுக்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை. பின்னூட்டங்களிட்டவர்கள் பலர் இந்த அடிப்படை விதியைக் கூட அறிந்திருக்கவில்லை என்றே கருத இடமுள்ளது.


ஆகையால் டாடா குழுமம் கருத்துசொல்ல விரும்பவில்லை என்றால் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என்றுதான் பொருள்.

பொதுவாக வணிக நிறுவனங்கள் ஊடகங்களில் வெளியாகும் அனைத்துசெய்திகளுக்கும் பதில் தருவதில்லை. 'இது குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை' என்று செவ்விகளில் கூறப்படும் பதில் நமக்குப் பரிச்சயமான ஒன்று. அதே போல் நீதிமன்ற தீர்ப்புகள்குறித்து கருத்து சொல்லாமல், முழுத் தீர்ப்பினையும் படித்த பின்னரே கருத்து சொல்ல முடியும்என்று சொல்வதும் உண்டு. ஏன் இப்படி சொல்கிறார்கள், யோசித்துப் பாருங்கள்.

டாடா குழுமம் சார்பில் சன் டிவி குழுமம் அல்லது அமைச்சர் தலையிடவில்லை என்று பதில்சொல்லியிருந்தால் அமைச்சர் மிரட்டல் காரணமாக டாடா குழுமம் அவ்வாறு கூறுகிறது என்றுஅடுத்த 'செய்தி' வெளியாகும். அல்லது அப்படியானால் அவர்கள் சார்பாக வேறு யாரேனும்மிரட்டினார்களா என்று இன்னும் பல கேள்விகள் வரும். இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கவேடாடா குழுமம் அவ்வாறு பதில் சொல்லியிருக்கக் கூடும். மேலும் வணிக நிறுவனங்கள் ஒரு திட்டம்குறித்து எப்போது என்ன சொல்ல வேண்டும், எங்கு சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை யோசிக்காது சகட்டு மேனிக்கு கேட்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதில்லை.

இப்போது டாடா குழுமம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தால் கூட ஊடகங்கள் அதிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு தங்கள் ஊகங்களையும், வதந்திகளையும் சேர்த்து செய்திகளைவெளியிட ஆரம்பித்துவிடும். இது இந்த கூட்டுத்திட்டம் குறித்த தேவையற்ற ஐயங்களையும்,சர்ச்சைகளையும் எழுப்பும். ஆகவே டாடா குழுமம் கூறியிருப்பது நியாயமானது, முறையானது.

இதே கேள்விகளை நீதிமன்றத்தில் கேட்டால் கூட நீதிபதி(கள்) அவற்றை அனுமதிக்க வேண்டும்என்ற கட்டாயம் இல்லை. குறுக்கு விசாரணை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கேட்கநீதிமன்றம்/ங்கள் அனுமதிப்பதில்லை.

மேலும் ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அதை நீருபிக்கவேண்டியது குற்றம் சாட்டுபவர் பொறுப்பு (இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு). குற்றம் நீருபணம்ஆகாத வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்படுவேண்டும் என்று கோர முடியும்.

இப்போது குற்றம் சாட்டும் வைகோ, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்களை முன் வைக்கட்டும்.குறைந்த பட்சம் எப்போது சன் டிவி சார்பில் டாடா குழுமத்திடம் பேசப்பட்டது, தயாநிதி மாறன் எந்த கட்டத்தில் தலையிட்டார், எப்போது இந்த தலையீடு மிரட்டலாம மாறியது என்பதையாவது, அதாவது எந்த ஆண்டு,எந்த மாதம் என்பதையாவது அவர்கள் தெரிவிக்கட்டும்.

வலைப்பதிவாளர்கள் இந்த 'செய்தி'யை பொதுப் புத்தி கொண்டு அணுகியிருந்தால் இதிலிருக்கும்ஒட்டைகள் எவை என்பது புரிந்திருக்கும். இங்கு பலருக்கு சன் டிவி, மாறன் சகோதர்கள் மீது இருக்கும் கோபம், எரிச்சலில் சிந்திக்க மறந்து கண்டிக்கவே தோன்றுகிறது. இதற்கு ஒரு காரணம்பலர் தினமணி நடுநிலை நாளிதழ், வதந்திகளைப் பரப்பாது என்று நினைப்பதே.

ஆனால் இந்த 'செய்தி'யை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தினமணி விஷயத்தை திரித்துவெளியிட்டிருக்கிறது. இது ஒன்றே அதற்கு இதில் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தினை எழுப்பும், யோசித்தால். இங்கு யோசிப்பதை விட உடனே ஒழிக என்று கோஷம் எழுப்பவே பலர் தயாராக இருக்கிறார்கள்.

இப்படி ஊடகங்களுக்கேற்ற நுகர்வோரும், நுகர்வோருக்கேற்ற ஊடகங்களும் இருப்பது நல்ல அறிகுறி அல்ல.
மேய்ச்சல்

இட ஒதுக்கீடு - ஜெயதி கோஷ், ஒரு தலையங்கம்

நீதிக் கட்சி- பாடம், சர்ச்சை

நேபாளம்- மக்கள் புரட்சியும், சவால்களும்

இந்திய முஸ்லீம்கள் - கடந்த, நிகழ்,எதிர் காலங்கள்

சிரீலங்கா ஒரு நாடும், ஒரு அரை மணி நேர மாற்றமும்

வரைபடம்- அறிந்ததும், அறியாததும்

காவ்யா என்ன செய்து விட்டார்(ள்)

காவ்யா விஸ்வநாதன் என்ற இளம் எழுத்தாளரின் நூலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்துக்களிலிருந்து உருவப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளதையொட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எழுத்தாளரின் நாவல்களை படித்திருப்பதாகவும், அவரது எழுத்துக்கள்தனக்கு மிகவும் பிடித்தவை என்று அவர் கூறியிருக்கிறார். அவர் அறியாமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் கூறினாலும் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் அவர் செய்தது முறையான பயன்பாடு (fair use)என்பதன் கீழ் வராது. அவர் எழுதியது அந்த நாவலை அல்லது நாவல்களை பகடி செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு, கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் ஆராய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று தள்ளிவிட முடியாது.ஒரே மாதிரியான கதைக்கருவினை இரு எழுத்தாளர்கள் எழுதலாம். ஒருவரையொருவர் அறியாமல் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நூல் வெளியாகும்முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, அவரும் அவற்றைப் படித்துள்ளார். பின் இதுஎப்படி நடந்திருக்கும்.

ஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் ஒரு நூறு பக்கமும், சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம்கையெழுத்தான பின்னர்தான் முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது. அதை செப்பனிட ஒரு நிறுவனம்உதவியிருக்கிறது. எழுத்தாளரின் படைப்பை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லதுநாவலை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும்நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.

அவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் யோசிக்காமல் சேர்த்திருக்கலாம்.

இது போன்ற பிரச்சினைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் மூலங்களை குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமாஎன்ற சந்தேகம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். நாவல் எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்றஉத்திகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திராது.

சட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது கருத்துக்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. வெளிப்பாடுகள்(expression) மீது தான் உரிமை கொண்டாட முடியும். யேல் பல்கலைகழகத்தில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது கருத்தென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் நாவல் எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது.அதை வைத்து நான் ஒரு நாவல் எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும்இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.

இதில் காவ்யாவின்பங்கைவிட நாவலை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபணமானாலும்காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் நாவலாசிரியர்என்று கூறிக்கொண்டவர்,அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான்இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற பிரச்சினைகள் எழுமானால அவற்றிற்கு நூலாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை,நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை இட்டிருப்பார்கள்.

இந்த சர்ச்சைக்குத் தீர்வாக பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து நாவலை வெளியிட வாய்ப்புள்ளது.

இப்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்து இவ்வளவே சொல்ல முடியும்.
இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும்

பேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப் படிப்பவர்கள் அவர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவாக கூறியுள்ளார் என்று கருதக்கூடும். ஆனால் இப்பிரச்சினையில் உள்ள சிக்கல்களை அவர் கூறவில்லை.

முன்னர் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தினைஉருவாக்கியவர்கள் மதரீதியான இட ஒதுக்கீட்டிற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் தரவில்லை.(1) இதற்கு ஒரு காரணம் அவ்வாறு செய்வது மத ரீதியாக பாகுபாடு காட்டுவது என்பதாகும். ஒரு மதச்சார்பற்ற அரசு தன் குடிமக்களில் சிலருக்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவர்கள் என்பதற்காக இட ஒதுக்கீடு செய்வது மதச்சார்பின்மை என்பதற்கு விரோதமாகும். அரசியல் சட்டத்தில் பிற்பட்ட சமூகங்கள் என்பதன் அடிப்படையிலே இட ஒதுக்கீடு செய்ய வழி உண்டு. மத ரீதியாக அல்ல.அதாவது பிற்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பார் எந்த மதத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு தர இடமுண்டு, ஆனால் ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒரு சமூகத்தினை பிற்பட்ட சமூகமாக ஏற்க இடமில்லை.எனவே வீரமணியின் வாதம் சரியல்ல. மேலும் அன்று இருந்தது, அதை இன்று கேட்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது. இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அரசியல் சட்டம் அமுல் செய்யப்பட்ட பின் அரசியல் சட்டமே வழிகாட்டும் நெறியே அன்றி ஆங்கிலேயர் ஆட்சி கடைப்பிடித்த கொள்கைகள் அல்ல.

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினைப் பற்றி ஆராய, ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். அதன் பரிந்துரையில் அடிப்படையில் அரசு முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் மத்திய அரசில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் இதுதான் நடைமுறை. அக்கமிஷன் சிறுபான்மையினர் நலக்கமிஷன் அல்ல, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த கமிஷன். அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீடு செய்ய முடியாது. மேலும் அரசுத்துறை மூலம் ஆய்வு செய்து ஒரு சமூகத்தினை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது, இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. ஆந்திர அரசு இது போன்ற ஒரு முயற்சியை செய்து இட ஒதுக்கீட்டினை இஸ்லாமியருக்கு அளித்தது அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே பிற்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின்னரே அரசு மீண்டும் இட ஒதுக்கீட்டினை அளித்தது. அதை ஆ.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பிறகு இடைக்காலத் தடை இல்லை.

கேராளாவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற வரம்பினை மீறாமல் 50% ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் இட ஒதுக்கீடு என்பது சில நிபந்தனைக்குட்பட்டது.பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்று வரையறை செய்யப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. எனவே கேரளத்தில் உள்ள நிலை வேறு , தமிழ்நாட்டில் உள்ள நிலை வேறு என்பதை கவனிக்க வேண்டும். பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை திராவிடர் கழகம் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த்க கோட்பாடு மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் அமுலில் இல்லை. எனவே கேரளாவைப் பார் என்பவர் அங்கு என்ன இருக்கிறது, இல்லை என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை.

இங்கு இன்னொரு அம்சத்தினையும் குறிப்பிட வேண்டும். தேசிய பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் கேரளத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. Other Muslims excluding (I) Bohra (ii) Cutchi Menmon (iii) Navayat (iv) Turukkan (v) Dakhani Muslim என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே போல் கர்நாடாகாவை பொறுத்த வரை இக்கமிஷன் முஸ்லீம்களில் சில பிரிவினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.Other Muslims excluding (i) Cutchi Memon (ii) Navayat (iii) Bohra or Bhora or Borah (iv) Sayyid (v) Sheik (vi) Pathan (vii) Mughal (viii) Mahdivia/Mahdavi (ix) Konkani or Jamayati Muslims

இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% உள்ள போது அது தவிர இஸ்லாமியருக்காக 5% கொடுத்தால் அது 74% ஆகிவிடும். இது உச்ச நீதிமன்றம் நிர்யணம் செய்த 50% என்பதை விட மிக அதிகம் . 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது தமிழக அரசு இன்னும் 5% அதிக ஒதுக்கீடு செய்வது இன்னொரு வழக்கிற்கே வழிவகுக்கும். அரசு இட ஒதுக்கீடு தரும் பட்சத்தில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டில் 5% இஸ்லாமியர்களுக்கு என்று உள் இட ஒதுக்கீடு செய்வது இயலும்.ஆனால் இது பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர் அல்லோதார் இட ஒதுக்கீட்டினை குறைக்கும் என்பதால் எதிர்ப்பு எழக்கூடும்.மேலும் இப்போது பிற்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவுகள் இருக்கின்றன. நாளை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பிற்பட்டோர் என்று அறிவித்தால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், இஸ்லாமியர் என்று மூன்று பிரிவுகளாக இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். அப்படியானால்,இட ஒதுக்கீடு 5% என்றால் அதை எதிலிருந்து பிரிப்பது என்ற கேள்வியும் எழும்.

ஆந்திராவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்த போது மொத்த இட ஒதுக்கீடு 51 % ஆனது, அதாவது 46%+5%. இதை உயர் நீதிமன்றம் ஏற்க வில்லை. 50% என்பதற்கு மேல் இட ஒதுக்கீடு தரக்கூடிய விசேஷ சூழல் அல்லது காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் 1% என்பது சிறியது என்று கருதி நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டாம் என்ற வாதத்தினையும் ஏற்கவில்லை. எனவே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அதை எங்கு வகைப்படுத்துவது என்பது பிரச்சினையாகும். இது 1% என்றாலும் கூட பிரச்சினையாகும்.

மத்திய அரசு அமைத்துள்ளவை குழுக்கள், கமிஷன்கள்.இவை தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன் செய்யும் பணியை செய்வதற்காக அமைக்கப்படவில்லை. இவை இட ஒதுக்கீடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இட ஒதுக்கீட்டினை இவை பரிந்துரைத்தாலும் அரசு அதை ஏற்றாலும், அப்போதும் கூட தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன்தான் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை இறுதி செய்யும்.இக்கமிஷன் ஏன் அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் ராஜிந்த்ர் சர்ச்சார் கமிட்டியின் பணி வேறு, இக்கமிஷனின் பணி வேறு என்பதை அறிய முடியும்.

ஒரு வேளை மத்திய அரசு மத ரீதியான சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அகில இந்திய அளவில் மாநில அரசுகள் அடிப்படையாகக் கொள்கின்ற பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்களை பயன்படுத்துவதா இல்லை கமிஷன் தயாரித்துள்ள பட்டியலை பயன்படுத்துவா இல்லை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதா என்ற கேள்வி எழும்.அதே போல் பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டா, கிடையாதா என்ற கேள்வியும் எழும். எனவே மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தாலும் சில கேள்விகள் இருக்கின்றன.இது போன்ற விஷயங்களை வீரமணியும் சுட்டிக்காட்டவில்லை, கேள்வி கேட்டவர்களும் அவற்றை எழுப்பவில்லை.

கருணாநிதி பரிந்துரைத்துள்ள தீர்வு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது, மாநிலங்கள் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமை பெறுவது. அப்படி ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டால் அதை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குட்டபடுத்த முடியும். மேலும் 50% என்பதை விட அதிகமாக இட ஒதுக்கீடு தரும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு தர முதலில் நாடாளுமன்றத்திக்கு அதிகாரம் உண்டா என்பதை கேள்விக்குட்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடு செல்லுமா என்பது குறித்த வழக்கே உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு சட்டத்திருத்தம் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், நினைத்த அளவு இட ஒதுக்கீடு பெற்றுத் தர முடியும் என்பது ஏமாற்று வேலை.

இப்போதுள்ள நிலையில் மாநில அரசு தன்னால் எதைச் செய்ய முடியுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.

சிறுபான்மையினருக்கான கமிஷன் வேறு, பிற்பட்டோருக்கான கமிஷன் வேறு. தேசிய அளவில் சிறுபான்மையினர் கமிஷனும் இருக்கிறது, பிற்பட்டோர் கமிஷனும் இருக்கிறது. மாநிலங்களில் இட ஒதுக்கீட்டினை குறித்து பரிந்துரைக்க பிற்பட்டோர் கமிஷனை அரசு ஏற்படுத்தலாம். அக்கமிஷனிடம் சிறுபான்மையினரும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரலாம். பிற்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும் தத்தம் வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கோரலாம். இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை பிற்பட்டோர் கமிஷனே பொருத்தமான, சரியான அமைப்பாகும். அக்கமிஷன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து இக்கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும் கமிஷன் கோரிக்கைகளை பரிசீலித்து,ஆய்வு செய்து பரிந்துரைத்தால்தான் அரசு இட ஒதுக்கீடு குறித்து ஆணைப் பிறப்பிக்க முடியும். கோரிக்கைகளைப் பரிசீலித்து ஆய்வு செய்யாமல் ஒரு வகுப்பு பிற்பட்ட வகுப்பு என்று அரசு கருதுகிற ஒரே காரணத்தினால்தன்னிச்சையாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

அக்கமிஷன் இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தாலும் அதை அரசு ஏற்றாலும் அவை நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு உட்பட்டவையே. அதாவது அவற்றை எதிர்த்து வழக்கு தொடர முடியும். கமிஷன் மேற்கொண்ட ஆய்வு முறை, அதன் பரிந்துரைகளை அடிப்படைகளை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். கமிஷன் கூறும் பரிந்துரையை நீதிமன்றம் நிராகரிக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்த அரசு ஆணையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம். ஆந்திராவில் நீதிமன்றம் இவை அனைத்தையும் பரிசீலித்து, வழக்கு விசாரணையில் தரப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள் அடிப்படையில் அரசு ஆணையை செல்லத்தக்கது அல்ல என்றது.

வீரமணி இந்த அடிப்படை விஷயங்களைப் பேசவில்லை. ஆந்திராவில் உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து என்ன கூறியது, என்ன காரணங்களை முன் வைத்தது இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லத்தக்கது அல்ல என்று கூறியதை விளக்கவில்லை.இதையெல்லாம் பேசினால் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள், அப்புறம் நாம் விடும் கட்டுக்கதையினை நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என்பது அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி சிலர்நினைப்பது போல் அரசு நினைத்த உடன் தருகிற ஒன்றல்ல. இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு குறித்த ஆணை குறித்த வழக்குகள் (குறிப்பாக Indra Sawhney v. Union of India) , 2006ல் ஆ.பி. உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் (B. Archana Reddy and Ors. Vs. State of A.P., rep. by its Secretary, Law (Legislative Affairs and Justice) Department and Ors.அளித்த தீர்ப்பு - இவைகளைப் படித்தால் இட ஒதுக்கீடு குறித்து சட்டம் என்ன சொல்கிறது,நீதிமன்றங்கள் இதை எப்படி அணுகியுள்ளன என்பது குறித்த ஒரு புரிதல் கிடைக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் சில அடிப்படைகளைத் தெளிவாக்கிவிடுவது நல்லது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவினருக்கு பிற்பட்டோர் பட்டியலில் இடம் உள்ளதால் இட ஒதுக்கீடு இருக்கிறது. அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இல்லை. பெரும்பான்மையினருக்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை என்று நினைக்கிறேன். அதாவது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட முடியாது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும். மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பரிந்துரைத்த ஜாதி/பிரிவுகளின் பட்டியலில் பல முஸ்லீம் பிரிவுகளுக்கு இடம் இருந்தது. மாநிலங்களில் முஸ்லீம்களில் பல பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.(2)

அ என்கிற மாநிலத்தில் ஆ என்ற ஜாதி/பிரிவு பிற்பட்டோர் பட்டியலில் இருந்து, இட ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், இ என்கிற மாநிலத்தில் அந்த ஜாதி பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அதே போல் அந்த ஜாதி அந்த மாநிலத்திற்கு உரிய மத்திய பிற்பட்டோர் கமிஷன் பயன்படுத்தும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஜாதி தமிழ்நாட்டில் உள்ள பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அதே ஜாதி கேரள அரசின் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1950களிலிருந்து இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகளைக் கூறியிருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரை அமுல் செய்யப்படும் வரை மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இடம் இல்லை. எனவே மத்திய அரசின் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்ற பெஞ்ச் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்த ஒரு மிக விரிவான தீர்ப்பினை அளித்தது. இன்று வரை அத்தீர்ப்பில் கூறப்பட்ட வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் வேறு வழக்கு/வழக்குகளில் நிராகரிக்கவில்லை. எனவே அத்தீர்ப்பு இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை வேதம் என்று கருதப்படுகிறது. சில மாநிலங்களில் சாத்தியமான சில பின்னர் வேறு மாநிலங்களில் சாத்தியமாகாமல் போகலாம். அதற்குக் ஒரு முக்கிய காரணம் இவ்வழக்கில்உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிகளைக் கொடுத்ததே. எனவே 1960 களில் 1970 களில்அந்த மாநிலத்தில் செய்ததை 2006ல் இங்கு ஏன் செய்யக்கூடாது என்று கேட்பது பொருத்தமானகேள்வி அல்ல.

போதுமான பிரதிநிதித்துவம் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்ல. உதாரணமாக ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% என்று இருந்தால் அம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 5% கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் அதை பிற்படுத்த ஜாதி என்று கூறிவிடலாம் என்பது சரியல்ல.

பிற்பட்ட என்பதை நிர்யணம் செய்ய பல அளவுகோல்கள் உள்ளன. எனவே ஒரு சில தகவல்களைஅல்லது புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு ஒரு ஜாதி அல்லது பிரிவு பிற்பட்டது என்ற முடிவிற்கு வர முடியாது.பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் இந்த விஷயத்தில் கவனமாக ஆய்வு செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். ஆந்திர உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்த அம்சத்தினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

சிலர் ஆந்திரா உயர்நீதி மன்றம் சில 'டெக்னிகல்' காரணங்களுக்காக இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது, எனவே இப்போதே இன்னொரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை அரசு கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். உண்மை வேறு. நீதிமன்றத்தின் தீர்ப்பில் இதற்கு முந்தைய முயற்சிகள், வழக்குகள் குறித்த மிக விரிவான அலசல் இருக்கிறது. அதைப்படித்தால் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை அறிய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் வீரமணி இப்பேட்டியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இஸ்லாமியரைத் திருப்திப்படுத்த, ஜெயலலிதா மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக கூறியிருக்கும் கருத்துக்கள். உண்மை இதிலிருந்து வேறானது. அதைத் தெரிந்து கொண்டால் வீரமணி இப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் உள்ள நிலையை எடுத்துக் கூறி எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை விளக்கியிருப்பார்.

(வீரமணி கூறியுள்ள வேறு பல கருத்துக்கள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அவற்றை இன்னொரு கட்டுரையில் எழுத உத்தேசம்)

(1) மேலும் அறிய Bajpai, Rochana (2000): ‘Constituent Assembly Debates and Minority Rights’, Economic and Political Weekly, May 27

(2) Reservation for Muslims- zoya hassan -Seminar-No.549-2005
இடஒதுக்கீடு விவகாரம்: கி.வீரமணி பேட்டி

இப்பேட்டியில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை விமர்சிக்கும் பதிவினை நாளை இடவிருக்கிறேன்.இப்பேட்டியினை இங்கு இடுவது அப்பதிவினை புரிந்து கொள்ள உதவும் என்பதால் முழுப் பேட்டியும்இங்கு தரப்பட்டுள்ளது

வியாழன், ஏப்ரல் 06, 2006


இடஒதுக்கீடு விவகாரம்: கி.வீரமணி பேட்டி

இடஒதுக்கீடு விவகாரம்:அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பைக் காட்டியுள்ளார்கள்...கி.வீரமணி பேட்டிமுதலமைச்சர் ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சில திடீர் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை தெளிந்த நீரோடையாக மக்கள் உரிமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த சிறப்பு பேட்டியில் விவரிக்கிறார்.

கேள்வி: மார்ச்1 அன்று தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு ஆணையத்தை புதுப்பித்திருக்கிறது. இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்துவிடும், முஸ்லிம்களின் நீண்டகால ஜீவாதாரக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பரப்பப் படுகிறது. உண்மையிலேயே தமிழக அரசு புதுப்பித்துள்ள இந்த ஆணையம் முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையை நிறைவேற்றுமா?கி. வீரமணி: இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நீதிபதி குமார ராஜரத்தினம் தலைமையில் இன்னும் சிலரை உறுப்பினர்களாகப் போட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வழங்கிய ஆணையைப் பார்த்தால், அதிலே சிறுபான்மை சமுதாய மக்களால் நீண்டகால இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லை, எங்கள் சமூகம் கீழாகச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்துகிற நேரத்தில், அழுத பிள்ளைக்கு நிலாவைக் காட்டுவது போல இதை அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்த ஆணையைப் பார்த்தேன். அதிலே, குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கோ, மற்ற சிறுபான்மையினருக்கோ இடஒதுக்கீடு செய்யப் படும் என்பதற்குரிய Terms of Reference அல்லது குறிப்புகளோ இல்லை.அடுத்தபடியாக, இந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாகத்தான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பொதுவாக இதை சொல்ல வேண்டுமானால், தனியே இதை செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டை சிறுபான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகக் கேட்பது புதிதல்ல. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சலுகை இடையிலே பறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, பறிக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள் என்கிற வரலாறு ஆளுங்கட்சி உட்பட பலருக்குத் தெரியாது.நீதிக்கட்சியினுடைய ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சியிலும் ஏற்பட்ட ஒன்று வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமைதான் இந்த அரசியல் சட்டத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட ஒன்றாகும். அந்த வகுப்புவாரி உரிமை என்பதிலேயே எல்லாருக்கும் எல்லாமும் என்பதைப் போல முன்னேறிய ஜாதியினர் என சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் உட்பட சிறுபான்மை சமுதாயமாக உள்ள முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு இருந்திருக்கிறது.மத்திய அரசுகளிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எனவே இழந்த ஒன்றை, அதுவும் இடையில் இழந்த ஒன்றை தங்களது வாழ்வுரிமைக்காக, நான் ஏன் இந்த சொல்லை திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், அவர்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய அளவிலே நாங்கள் ஆள வேண்டும், மற்றவர்களையெல்லாம் (பெரும்பான்மையினரை) கீழே தள்ளிவிட்டு என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆளட்டும், நாங்கள் வாழ வேண்டும் என்ற அளவிலேயே கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதிலே தவறொன்றும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்குமா? அப்படி இருந்திருக்குமேயானால் அது ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டு முடியப் போகிற நேரத்திலே, கடைசி மணியடித்த பிற்பாடு நாம் எல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடிய நிலையிலே இதைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன?1999லில் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா தெளிவாக இரு விஷயங்களைச் சொன்னார். ஒன்று: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். மற்றொன்று: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிச்சயமாக ஆவணம் செய்வேன் என்றார். இந்த இரண்டையும் அவர் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்தாரா? அல்லது மீறினாரா?ஆங்கிலத்திலே ஒன்றைச் சொல்வார்கள். More observed in bleech can in practice என்று சொல்வார்கள். அதுமாதிரி அதை நடைமுறையில் சிதைத்துதான் இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து பாடம் கற்றார்கள். இப்போது தங்களோடு யாரும் வரவில்லை என்ற உடனேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.எனவே சொல்லுகிறவர்கள் எந்த சூழ்நிலையிலே, எந்த மனநிலையிலே சொல்லு கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஏமாற்றுகிறவர்கள் முயற்சி செய்யலாம். அது அவர்களுக்குத் தேவையாகவும் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் ஏமாறலாமா? காலங்காலமாக தமிழக வரலாற்றிலே சிறுபான்மையாக சமுதாய மக்களாக இருக்கக்கூடிய சிறுபான்மையிலேயே பெரும்பான்மை உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா இல்லையா? எவ்வளவு காலம் இருந்தார்? இப்போது ஏன் இல்லை?ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கு இடஒதுக்கீடு முதலில் அமைச்சரவையிலேயே இல்லையே. இடையில் போட்டார்கள், பிறகு வெளியே அனுப்பி விட்டார்கள். ஏன் அமைச்சராவதற்குரிய தகுதி இஸ்லாமிய சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லையா? இதையெல்லாம் மறந்துவிட்டு உடனடியாக 'எல்லாம் செய்துவிட்டார்கள்' என்று தங்களைத் தாங்களே ஒருசிலர் ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு விளங்காத ஒன்றாக உள்ளது.

கேள்வி: தங்களுடைய கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்ட, தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்தியை நிறைவேற்றுவதற்கு ஐந்தாண்டு காலம் முடிந்து ஆட்சியினுடைய அந்திம காலத்திலே ஒரு ஆணை யத்தை புதுப்பித் திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அந்தக் காலத்திலேயே போடப்பட்டு, இப்போது புதுப்பிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் நிலை என்ன? சட்டம் பயின்றவர் என்ற முறையில் அதன் சட்டப்பூர்வமான நிலையை கூறுங்கள்?கி. வீரமணி: நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கும். அதிலே இரண்டு வகையான சர்ச்சை இருக்கிறது. இது தேர்தல் நேரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த ஆணையம் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப் பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு இது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதா? அதிலே சில வேறுபட்டவர்களும் இருக்கிறார்களா? எனவே இதுவே சிறுபான்மை நலக் கமிஷன் என்று இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை, அதனுடைய பங்கு பணியாக இது சுட்டிக்காட்டப்படவில்லை, அப்படி இருக்கையில் இதை மட்டும் எப்படி சொல் கிறீர்கள்? என்று இதையே ஒரு சட்டப்பிரச்சினையாக ஆக்கி வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அதில் (ஆணையத்தில்) ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, பசியில் அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவதைப் போல இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.பசியில் அழுகிற குழந்தைக்குத் தேவை பால்தானே தவிர, கிலுகிலுப்பை அல்ல. ஆகவே அதுதான் மிக முக்கியம். அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. ஏனோ அவர்களுக்கு மனமில்லை. ஏன் அவர்களுக்கு மனமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.கேள்வி: எந்த வகையான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?கி. வீரமணி: பாஜகவோடு அவர்கள் நேரடியாக கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவினுடைய சிந்தனையும், செயல்பாடுகளும் அதனை நோக்கி எழுதப்படாத ஒரு உடன்பாடு போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.இந்தியாவிலேயே மிகக் கொடுமையாக இந்துத்துவா என்று சொல்லக்கூடிய தத்துவத்தை ஒரு ஹிட்லரைப் போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது குஜராத் தான். குஜராத்திலே, மோடியுடைய ஆட்சியிலே பேக்கரி எரிப்பு வழக்கில் எப்படியெல்லாம் சாட்சிகள் கூட விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று இன்றைக்கு உலகம் முழுவதும் எள்ளி நகையாடுகிறது. நல்லவேளையாக உச்சநீதிமன்றத்திலே இருந்த நீதிபதிகள் தலையிட்டதற்குப் பிறகு அந்த வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்றி அங்கு வழக்கு நடந்த பொழுது அந்த வழக்கிலும் கூட சாட்சிகளைக் கலைத்து அவர்களை விலைக்கு வாங்குகிற வேலையெல்லாம் செய்தார்கள். பாவம் அப்பாவியாக இருந்த சாட்சிகள் சிறைச்சாலைக்குப் போயிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட மோடி தன்னுடைய அத்துனை தில்லு முல்லுகள், அச்சுறுத்தல்களை செய்து, குந்தகம் விளைவித்து, தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதற்காக இந்தியாவிலேயே பிஜேபி அல்லாத ஒரே முதல்வராக ஜெயலலிதா மோடியின் பதவியேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வேறு எந்த முதலமைச்சரும் மோடியை வாழ்த்தவில்லை. ஆகவே, இதிலேயே ஜெயலலிதா தான் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டார்.அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான்பால் வந்தார். போப்பை பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் கூட போப்பை சந்தித்தார்கள். எதற்காக வேண்டியென்றால், ஆசிர்வாதம் வாங்குவதற்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய உயர்பதவியிலே அவர் இருந்தார் என்பதற்காகத்தான் அண்ணா அவரை சந்தித்தார். ஆனால் இன்று போப்பை பற்றி பிஜேபி என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் ஜெயலலிதா எடுத்தார்.இன்னொரு விஷயம் போப் ஒரு மதத்தலைவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவர். அப்படிப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். அவர் சிறுபான்மை சமுதாயத்தின் மதகுரு என்பதை மறந்துவிடுங்கள். இது நாகரீகமா? இது ஜெயலலிதாவின் மனப்போக்கையே காட்டுகிறது.அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக இன்றைக்கு பானர்ஜி அறிக்கை வந்து அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா ரயில் எரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ''சிறுபான்மை மக்களைப் பற்றியே கவலைப்படும் தலைவர்கள் பெரும்பான்மை மக்களை மதிப்பதில்லை'' என்றார். உடனே சோ போன்றவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள். இப்படியாக ஜெயலலிதா, தான் யார் என்பதை தெளிவாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.அதேபோல், எங்களைப் போன்றவர்களெல்லாம் கடுமையாக எதிர்த்ததற்குப் பிறகும் 'மதமாற்ற தடைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் 40இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த பின்னரே அச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் வாபஸ் பெறவில்லை. அவசர சட்டம் நவம்பரில் காலாவதியாகி விட்டது. உடனே என்ன செய்திருக்க வேண்டும்? தெளிவாக சட்டமியற்றி இருக்க வேண்டும். சட்டமன்றத்திலே எத்தனை சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய தனி நபர்களுக்குத் தேவையான 'ஆயுள் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்' என்பன போன்ற சட்டங்களை சட்ட மன்றத்திலே இயற்றினார்கள். இது செல்லாது என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது வேறுவிஷயம்.

கேள்வி: இடைக்காலத்தில் மனமாற்றம் ஏற்படுவதற்கு தோல்வி தந்த பாடம் கூட உதவவில்லையா?

கி. வீரமணி: மனமாற்றம் கிடையாது. ஓட்டு எந்தளவு வந்துள்ளது என்பதில்தான் இந்த மாற்றம். ஒருவரைப் பற்றி அறிய அவருடைய செயல், சிந்தனையைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் சிந்தனை, செயல் எப்படிப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஜெயலலிதா ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் பழைய நிலைமைக்குப் போக மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?இன்னொரு விஷயம். காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது வரலாறு. இதை கோட்சேயே தனது மரண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளான். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேயும், தாங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாகப் பேட்டியளித்திருக்கிறார். அப்படியிருக்க, கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற பிஜேபியினரின் கூற்றை ஜெயலலிதா நியாயப்படுத்தி, அதை தமிழக அரசின் பாடத்திட்டத்திலேயே மாற்றி அமைப்பதற்கு உதவுகிறார்.அடுத்தபடியாக, பார்ப்பனர்களைப் பற்றி நீதிக் கட்சியின் வரலாறு பாடத்தில் சொல்லப்படுகிறது. வரலாறு சொல்லப்படுவதால் அந்த பாடத்திட்டதையே நீக்க வேண்டும் என பார்ப்பன சங்கம் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதுகிறது. அங்கேயும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்ப்பன சங்கத்தின் மாநாட்டிலேயே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். 'இந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட வேண்டும்' என்று தீர்மானம் போட்டு 'நாங்கள் உங்களை சங்கடப்படுத்தவில்லை' என்று தீர்மானம் போட்டார்கள்.இதன் பொருள்: 'நாங்கள் உங்களை வலியுறுத்தவில்லை, நீங்களே அதை செய்து விடுங்கள்' என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனர்கள், ஆர்எஸ்எஸ், இந்துத் துவா என இதிலே அத்தனையும் சேர்ந்திருக்கிறது.இன்னொரு விஷயம் சங்கராச்சாரியாரைக் கைது செய்ததன் மூலம் நாங்கள் எல்லோரையும் சமமாகத்தான் மதிப்போம் என்றார்கள். ஆனால் சங்கராச்சாரியார் கைது பற்றி எந்த பார்ப்பனரும் பேசுவதில்லை. அதில்தான் மர்மம் அடங்கி யிருக்கிறது. தேர்தலின்போது அது வெளிப்படும்.கடந்த முறை நாங்களும் சேர்ந்துதான் அந்த அம்மையாரை ஆட்சியில் அமர்த்தினோம். மதவெறி சக்திக்கு மாற்றாக நாம் அன்று எடுத்த முடிவு அது. இப்போதும் கூட நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறோம். குன்றக்குடி அடிகளார் அற்புதமாக சொல்லுவார்: ''தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது. அவன் நேற்று விழுந்த அதே இடத்தில்தான் மீண்டும் விழுவான்'' என்று. அதுபோலவே தற்போது ஜெயலலிதாவிடம் சேர்ந்தவர்களின் நிலையும் உள்ளது.

கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்தவித மதவாத சாதிய மோதல்கள் நடைபெறவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்த காரணத்திற்காக இதை ஆதரிக்கலாம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?கி. வீரமணி: மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுத்ததற்கு காரணம் நம்மைப் போன்ற இயக்கங்களே தவிர சட்டம் அல்ல. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய மண். மகாத்மா காந்தி இறந்தபோது கூட பல இடங்களிலே கலவரம் நடந்தது. இங்கேயும் சில விஷமிகளால் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, கலவரம் நடைபெறவில்லை.காந்தியை சுட்டுக் கொன்றவர் பார்ப்பனராக இருந்தாலும் இங்கே பார்ப்பனர்களுக்குக்கூட ஏதும் நடைபெறவில்லை. காரணம் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனையோ மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கேயெல்லாம் நாங்கள்தான் ஆளுகிறோம் என்று சொல்ல முடியுமா? எனவே, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மதங்களைப் பின்பற்றக்கூடிய மக்கள் காரணமே தவிர சட்டம் அல்ல.

கேள்வி: மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கி விடும் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. இது அறிவுக்கு ஏற்புடையது தானா?கி. வீரமணி: இங்கே மதத்திற்கு உள்ள உரிமை உண்டு. மதச்சிறுபான்மையினரை அங்கீகரித்திருக்கிறார்கள். எனவே மத உரிமை, மத சிறுபான்மையினர் என்று கூறும்போது அதை கலாச்சார ரீதியாகப் பார்க்க வேண்டும். ஆகவே வெறும் மதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்கக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார்களே தவிர வேறொன்று மில்லை.சிறுபான்மை மக்கள் மத்தியிலே அவர்களுக்கு மதம் என்பது ஒரு அடையாளமே தவிர அவர்கள் அந்த மதத்தில் பிறந்து விட்டதினால் இடஒதுக்கீடு கேட்க வில்லை. எங்கள் சமுதாயம் இவ்வளவு படிக்கவில்லை, கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளோம், எங்கள் சமுதாயத்திற்கு பசி இருக்கிறது, எனவே சோறு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு அடையாளமாகப் பயன்படுகிறதே தவிர, அந்த அடையாளத்தையே கொச்சைப்படுத்துவது தேவையற்ற ஒன்றாகும்.

கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்தவுடன் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலே ஆணையத்தைப் போட்டார்கள், அதேபோல் ராஜேந்திர சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலே அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா அமைத் துள்ள ஆணையத்தை விட வலிமை குறைந்தது என்று பிரச்சாரம் செய்யப் படுகிறதே?

கி. வீரமணி: இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பெயரென்ன? அதன் Terms & Conditions என்ன? சிறுபான்மை ஆணையம் என்றுதான் தேசிய அளவில் போட்டிருக்கிறார்கள். அதன் நடவடிக்கையும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆணையம் காய்த்து, கனிந்து, பழம் போல் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இப்போதுதான் விதை போடப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஜெயலலிதாவை நம்புகிறவர்களை எச்சரிக்கத்தான் முடியும். தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியுமே தவிர, தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஆகவே அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது? அதிலும் இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதற்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இன்னும் சொல்லப் போனால் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கே ஒரு ஆற்றலும் இல்லை, அதற்காக நாங்க ளெல்லாம் போராடிக் கிட்டிருக்கிறோம். இப்படியிருக்கையில், மாநில அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்?

கேள்வி: பலமுறை தமிழக அரசை சந்தித்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்கும்பொழுது 69 சதவீததிற்கான இடஒதுக்கீடு வழக்கு இப்போது நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் அதுபற்றி பரிசீலிக்கலாம் என்ற பதிலை முதல்வர் தந்துள்ளார். ஆனால் இஸ்லாமியர்கள் கேட்பது69 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பல்வேறு சாதியினரோடும் போட்டிவிட முடியாது என்பதால் அதனுள் உள் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சாத்தியமா?

கி. வீரமணி: மற்ற மாநிலங்களில் உள்ளபோது தமிழகத்தில் ஏன் கொடுக்கக் கூடாது? கேரளாவில் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஜெயலலிதா பார்வையிட வேண்டும். இந்த69 சதவீத இடஒதுக்கீடு தனி சட்டமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறது.9 அட்டவணை பாதுகாப்பிலே வைக்கப்பட்டு75வது இந்திய சட்ட திருத்தமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம்தான் இதற்கான ஏற்பாட்டை செய்தது. அதனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. ஆகவே இது சாக்குப் போக்கு ஆந்திராவில் கூட முறைப்படியாக இடஒதுக்கீடு கொடுக்கப் படவில்லை என்றுதான் சொல்ல முடிந்ததே தவிர, கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆகவே கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க முடியும். அவர்கள் கொடுக்க விரும்பவில்லை.

கேள்வி: இடஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது பற்றி உங்கள் கருத்து?கி. வீரமணி: இதை திராவிடர் கழகமும் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள69 சதவீதம் நாளைக்கு 72சதவீதமாக மாறலாம். மற்ற மாநிலங்களில் உள்ளது. ஏனென்றால் மண்டல் கமிஷன் தொடர்பாக 99 பேர் கொண்ட நீதிபதிகள் வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தபொழுது பீஹார் மற்ற மாநிலங்களுக்கு ராம்ஜெத் மலானி வழக்கறிஞராக வாதாடினார். அப்போது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். ''நீங்கள் சொல்கிறபடி பார்த்தால்100 சதவீதம் கேட்பீர்கள் போல் தெரிகிறதே'' என நீதிபதிகள் கேட்டனர். ''ஏன் கேட்கக்கூடாது?'' என ராம்ஜெத்மலானி கேட்டார். பல இடங்களில் வாழுகிற மக்கள் தொகை, கலாச்சாரம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, இடஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் இது ரொம்ப நாளைக்கு தேவைப்படுவதாக உள்ளது. இது சமூகநீதிக்கு ரொம்ப முக்கியம். சமூகநீதி சட்டங்களெல்லாம்5 அட்டவணையிலே வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ போதிய பிரதிநிதித்துவம் கிடையாது.மற்றவர்களாவது நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கூட நீதிபதியாக இல்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர் ரத்தினவேல் பாண்டியன். அவருக்குப் பின்னால் இதுவரையில் யாரும் நீதிபதியாக இல்லை. மாவட்ட அளவிலே நீதிபதியாக இருக்க அனுமதிக்கப்படக்கூடிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றப் பதவிகளிலே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இடஒதுக்கீடு என்பதே நீதிமன்ற வளாகத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.

கேள்வி: ராஜேந்திர சச்சார் தலைமையிலே உள்ள உயர்மட்டக்குழு ராணுவத்தில் முஸ்லிம்கள் கணக்கெடுப்பு நடத்துகிறது. விமானப்படை, கப்பற்படை கணக்கெடுப்பை கொடுத்துவிட்ட நிலையில் தரைப்படை அந்த எண்ணிக்கையைத் தர மறுக்கிறது. இதுபற்றி சர்ச்சை எழுந்துள்ளதே... இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

கி. வீரமணி: கணக்கெடுப்பு நடத்துவதால் எந்த விளைவும் வரப்போவதில்லை. இருப்பதைத்தான் கணக்கெடுக்கிறார்கள். இது பெரிய நிகழ்வே அல்ல. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த விதத்திலும் முன்னேறக் கூடாது என்பதால் பதறுகிறார்கள். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் தான் இதுபோன்ற பதற்றத்திலும், குழப்பத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்த கணக் கெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்ல. இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கூற்றை ஆதரிப்பவர்கள்தான் கொக்கரிக்கிறார்கள்.

கேள்வி: வரக்கூடிய தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் அந்த மக்களுக்கு விடுக்கக்கூடிய செய்தி என்ன?

கி. வீரமணி: வரக்கூடிய தேர்தலில் நண்பன் யார்? எதிரி யார்? என்று பிரித்துப் பார்த்து தெளிவாக செயல்பட வேண்டும். முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். உங்களை நினைக்காமல் உங்கள் சந்ததியரை நினைக்க வேண்டும்.சந்திப்பு: ஹாஜாகனி, தொகுப்பு : அனீஸ்
மேய்ச்சல்

தயாநிதி மாறனின் ஒன் இண்டியா திட்டம் - ஒரு விமர்சனம்

தலித் அரசியல்- அ.மார்க்ஸ்

நர்மதை - எதிர்ப்பும்,நியாயமும்

அணுசக்தி சரியான தீர்வா ?

இட ஒதுக்கீடு- ஒரு இடதுசாரி நிலைப்பாடு
இட ஒதுக்கீடு -பதிவுகள், பின்னூட்டங்கள்

இட ஒதுக்கீடு குறித்து என் கருத்துக்களை சில பதிவுகளில் பின்னூட்டங்களாக இட்டேன். இட ஒதுக்கீடு குறித்த விவாதம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது அதைச் சேர்ந்தவர்களை வசை பாடும் போக்கு வலைப்பதிவுகளில், பின்னூட்டங்களில் புலனாகிறது. ஐ.ஐ.டி களில் தலித்கள் ஒடுக்கப்படுவதாக கீற்று தளத்தில் வெளியான கட்டுரையை ஒருவர் வலைப்பதிவில் இட்டிருந்தார். அதில் ஐ.ஐ.டியில் ஆசிரியர்களாக இத்தனைப் பிராமணர்கள் பணியாற்றுவதாக ஒரு தகவல் இருந்தது. ஐ.ஐ.டியில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஐ.ஐ.டி தளத்தில் ஜாதி ரீதியாகஆசிரியர் எண்ணிக்கைத் தரப்படுவதில்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தகவல் தரப்படுகிறது என்று கேட்டிருந்தேன். இன்று தமிழ்நாட்டில் வியாபாரம், தொழிற்துறை ஆகியவற்றில் பிராமணர்கள் மேலாதிக்கம் இல்லை. ஊடகத்துறையினை எடுத்துக் கொண்டால் சன் டிவி குழுமம்தான் பெரியது, அது போல் தினசரிகளில் தினகரனும்,தினத்தந்தியும் முன்னிலையில் உள்ளன. இப்படி இருக்கும் போது ஏதோ எல்லாத் துறைகளில் பிராமணர்கள் மேலாதிக்கம் செய்கிறார்கள் என்று எழுதினால் அதைப் பொய் என்றுதான் சொல்ல வேண்டும். சந்திப்பு என்ற வலைப்பதிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது

'இவையெல்லாம் இருந்தாலும் கூட, இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை! '

இதற்கு என்ன அடிப்படை. தமிழ்நாட்டில் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97% உயர்ந்த நிலையில் இருக்கிறதா.இங்கு பிராமண வெறுப்பே போலிப் புள்ளிவிபரமாக வெளிப்படுகிறது.

மேலும் ஐ.ஐ.டி களில் நிர்வாகச் சீர்கேடு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் பாரபட்சம், ஒரு ஜாதியினர் ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது நான் ஐ.ஐ.டி களில் அப்படி இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது, அவை புனிதப்பசுக்கள் என்று வாதிட்டதில்லை. ஆனால் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதி வாதத்தினைதிசை திருப்பப் பார்க்கிறார் ஒருவர். நான் எழுதாத ஒன்றை நான் எழுதியதாகக் கூறி அதை வைத்து என்னைமடக்க முயல்வது முட்டாள்த்தனம்.

குழலியின் பதிவில் ஐ.ஐ.டி. யின் உள்வட்ட விளையாட்டுகள் என்ற பெயரில் ஒரு பதிவு இருக்கிறது.அது என்ன உள் வட்ட விளையாட்டுக்கள் என்று கேட்கக் கூடாது. நம்பப்படுகிறது, சொல்கிறார்கள்,பேசிகொள்கிறார்கள் என்று பத்திரிகைகளில் எழுதுவார்களே அதைவிட மோசமான தரத்தில் உள்ளது.1998ல் அவர் இரண்டு நாட்கள் அலைந்து சிலரை சந்தித்து பெற்ற தகவல்கள், சில ஊகங்கள் அடிப்படையில் எழுதியிருக்கிறார். அதற்கும் ஐ.ஐ.டியில் எத்தனை பிராமணர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தகவலை அவரும் தருகிறார். ஐ.ஐ.டியில் மாணவர் சேர்க்கை, திட்ட உதவியாளர்பணிக்கு ஆளெடுப்பதில் முறைகேடு இருந்தால் அவர் அதை எழுதியிருக்க வேண்டும். நானறிந்தவரை திட்டங்களின் இயக்குனர்கள் அல்லது ஆய்வுத்திட்ட மேற்பார்வையாளர்கள் தேவையானதிட்ட உதவியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் நிரந்தர ஊழியர்கள் அல்ல, இவர்களுக்கான ஊதியம் திட்டத்திற்கு தரப்படும் தொகையிலிருந்து கொடுக்கப்படும். பிற பல்கலைகழகங்களில் இப்படி இருக்கிறது, ஆனால் ஐ.ஐ.டியில் மட்டும் இப்படி இருக்கிறது,இது தவறு என்று அவர் எழுதவில்லை. அது போல் மாணவர் சேர்க்கை குறித்தும் ஐயம் எழுப்புகிறார்.ஆனால் அவர் கொடுத்துள்ள சுட்டியிலும், ஐ.ஐ.டி இணைய தளத்தில் முழுமையான விபரங்கள் இருக்கின்றன.திட்ட உதவியாளர்களை தேர்ந்தெடுக்க விளம்பரங்கள் வெளியாகும். ஆனால் அனைத்துதிட்டங்களிலும் அப்படி விளம்பரம் கொடுத்துத்தான் ஆளெடுக்கிறார்கள் என்பதில்லை. இதில்ஐ.ஐ.டி இப்படி செயல்படுகிறது, சென்னைப் பல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது, அண்ணாபல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது என்று அவர் கூறுவதில்லை. அப்படி ஒப்பிட்டு ஐ.ஐ.டியைவிட அண்ணா பல்கலைகழக விதிகள் சிறப்பாக உள்ளன, அனைத்து திட்ட உதவியாளர்பதவிகளும் நாளிதழ்களில் முறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று வாதிட்டு ஐ.ஐ.டியைகுறை கூறினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அப்படி எதையும் செய்யாமல் உள்வட்ட வேலைகள்என்று தலைப்பிற்கு பதிவிட்டு, சந்தேகத்தினை கிளப்புவது மஞ்சள் இதழியல்தான்.

வலைப்பதிவில் இட ஒதுக்கீடு குறித்து பின்னூட்டம் இடுவதை தவிர்த்துவிட நினைக்கிறேன். ஏனெனில் இங்கு அப்பட்டமான பார்ப்பன எதிர்ப்பு முன்வைக்கப்பட்டு விவாதம் திசை திருப்படுகிறது, பின்னூட்டம் இடுபவர் கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன.

இறுதியாக எனக்கு பிறர் என் மீது குத்தும் இடதுசாரி அல்லது வலதுசாரி முத்திரைகள் பொருட்டேஅல்ல.இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள் எல்லோரும் இடதுசாரிகள் என்றால் பா.ஜ.க இடதுசாரிகட்சி. இட ஒதுக்கீடு குறித்து நேருவுக்கு விமர்சனம் இருந்தது. அவரும் வலதுசாரி என்று இப்போதுசொல்லிவிடலாம்.அம்பேத்கர் இட ஒதுக்கீட்டினை ஒரு நிரந்தரத் தீர்வாக முன்வைக்கவில்லை.இட ஒதுக்கீட்டினை கேள்விக்குட்படுத்தினால் முத்திரைகுத்துபவர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்களா.

இட ஒதுக்கீடு குறித்து கட்டாயம் எழுதுவேன், அது சிலருக்கு உவப்பாக இருப்பது அல்லது இல்லாதிருப்பது குறித்து எனக்கு கவலையில்லை.
மேய்ச்சல்

தமிழகத் தேர்தல் அரங்கு-ஒரு கண்ணோட்டம்

இட ஒதுக்கீடு- ஒரு செய்தித் தொகுப்பு

மேதா பட்கர், இடதுசாரிகள் - ஆர்.எஸ்.எஸ் பார்வையில்

உலகமயமாதல் எங்கு இட்டுச் செல்கிறது

'சீசர்' இங்கே, அவர்கள் எங்கே

அமெரிக்காவும், குடியேற்றமும் - நேற்று,இன்று,நாளை

இணையம் - சுதந்திரமும், கட்டுப்பாடும்

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஐ.ஐ.டி களில் 27% இட ஒதுக்கீடு ?

ஐ.ஐ.டி உட்பட பல உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு தேவையற்றது, ஆபத்தானது, எதிர்க்கப்பட வேண்டியது. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கல்வியாளர்கள் உட்பட பலர் இந்த பரிந்துரையினை எதிர்த்துள்ளதாகவும், இன்போஸிஸ் நாராயணமூர்த்தி (ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர்) இதை எதிர்த்திருப்பதாகவும் அறிகிறேன். இந்த எதிர்ப்பு நியாயமானதே. ஜவகர்லால் பல்கலைகழகம், தில்லி பல்கலைகழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இப்போது தலித்,பழங்குடியினருக்குஇருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் 27% ஒதுக்கீடு செய்யும் போது இட ஒதுக்கீடு 49.5 % ஆகிவிடுகிறது. சில கல்வி நிலையங்களில் வேறு சில இட ஒதுக்கீடுகளையும் சேர்த்தால் இது 50%க்கும் மேலாகிவிடுகிறது.

ஐஐடிகளிலும், ஐஐம்களிலும் சேர்வதற்காக சில ஆண்டுகள் கடின உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐஐஎம்களும், ஐஐடிகளும் இன்று உலக அளவில் மதிக்கப்பட முக்கிய காரணம் இவை மிகக் கடினமான நுழைவுத்தேர்விற்குப் பின் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் சாதனைகளால். இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்பட்டோர் என்ற காரணத்தில் சிலருக்கு இட ஒதுக்கீடு செய்வது அவை பெற்றுள்ள மதிப்பினை குறைக்கவே உதவும். ஒருவரின் உழைப்பு,அறிவாற்றல் ஆகியவற்றை விட ஜாதியே முக்கியம் என்றாகிவிடும்.இன்று இடது சாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்த இட ஒதுக்கீட்டினைஎதிர்க்குமா என்பது சந்தேகமே. ஆனால் தொழிற் துறையினர், கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வலுப்படுத்தி, ஆதரவு திரட்டினால் இந்த தேவையற்ற, ஆபத்தான இட ஒதுக்கீட்டினை தடுக்க முடியும். தேவைப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரலாம்.
பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு தர அரசுமுயலாம். இந்த இரண்டையும் போலி மதச்சார்பின்மை வாதிகளும், போலி பகுத்தறிவாளர்களும்வரவேற்பார்கள். சமூக நீதி என்ற பெயரில் சில ஜாதிகளின் மேலாண்மையினை சமூகத்தில் உறுதிசெய்வதும், அந்த ஜாதிக்களில் உள்ள வசதி படைத்தோர், பணக்காரர்கள் நலனை பாதுக்காப்பதுமே அவர்களின் பிரதான நோக்கம். இந்த புதிய வருணாஸ்திர தர்மத்திற்கு சமூக நீதி என்று அவர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது சமூக அநீதியே அன்றி வேறில்லை.
ஏற்கனவே இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அநியாயங்கள் ஏராளம். இப்போது இதையும் சேர்த்தால் இந்தியாவில் அரசினைப் பொறுத்தவரை உன் ஜாதிதான் முக்கியம், உன் படிப்பு, திறமை,உழைப்பு ஆகியவை முக்கியமில்லை என்றாகிவிடும். இனி அரசினை நம்பிப் புண்ணியமில்லை என்றநிலையில் வஞ்சிக்கப்பட்ட ஜாதிகள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்று திரள்வதும்,போராடுவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். ஜாதிய அடிப்படையினை வலுப்படுத்தவே அரசின்கொள்கை உதவுவதால் இந்திய சமூகத்தில் ஜாதியின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நவீன மனுக்கள்பிற்பட்டோரும் சிறுபான்மையினரும் பிறரை விட அதிக சமமானவர்கள், ஜாதி,மத அடிப்படையில்அனைத்து சலுகைகளும் பெற உரிமை பெற்றவர்கள், அவர்களுக்கு கிட்டியது போக எஞ்சியிருப்பது(ஏதாவது இருந்தால்) பிறருக்கு கிடைத்தால் போதும் என்பதை எழுதா விதியாக ஆக்க முயல்கிறார்கள். சமத்துவம், அனைவருக்கும் வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்ய இந்த நவீன மனுவாதிகளின் திட்டங்களை எதிர்ப்பது அவசியம்.