தலித் இலக்கியம்-அழகிய பெரியவன் - சுஜாதா

கீற்று தளத்தில் இதைப் படித்தேன்.

சுஜாதா என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது.அவர் தன்னை தலித் எழுத்தாளர் என்று எந்தப் பொருளில் கூறுகிறார் என்பதும் எனக்குத் தெரியாது.சுஜாதா விரும்பினால் தலித்கள் குறித்து எழுதலாம். அவர் எழுதுவது இலக்கியமா, தலித் இலக்கியமா என்ற கேள்வியை அவர் படைப்புகளைவைத்துதான் மதிப்பிட வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து அவர்ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். அதை வைத்துக் கொண்டு அவரால் தலித்கள் குறித்து எழுத முடியாது, எழுதக் கூடாது என்ற முடிவிற்கு வரமுடியாது.இலக்கியம் குறித்த மயக்கங்கள் இருப்பவர்களுக்கு அப்படித் தோன்றலாம். இலக்கிய பிரதியை யாரும் உருவாக்கலாம். அப்பிரதி எப்படி உள்ளது என்பதைத் தான் மதிப்பிட வேண்டும். இலக்கியம் என்பதை எழுதுபவரின் ஆளுமையின் பிரதிபலிப்பு என்று கொள்ளத் தேவையில்லை.

தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.தலித்கள் இன்று உயர்பதவிகளில்இருக்கிறார்கள், பேராசிரியர்களாவும், அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் சில வேலைகள் தலித்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றிருப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

தலித் இலக்கியம் என்பது வெறும் வலி, வேதனைகளைத்தான் பேச வேண்டுமென்பதில்லை.போராட்டங்களை, வெற்றிகளை, சவால்களையும் பேச வேண்டும். தலித்களின் அனுபவத்தினை தலித் அல்லாதோர் எழுதினால் அது எத்தகைய இலக்கியமாக உருவாகியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். எழுத்தாளரின் பணி ஒரு பிரதியை உருவாக்குவதே. பிறர் அனுபவத்தினை உள்வாங்கி அதை ஒரு பிரதி மூலம் வெளிப்படுத்துவதுஎன்பது இலக்கியம் மூலம்தான் சாத்தியம் என்பதில்லை.

எழுத்து என்பதில் உள்ள நுட்பங்களை அறிந்த,மொழித்திறனும் பயிற்சியும் உள்ள எழுத்தாளர் அந்த அனுபவங்களை இலக்கியப் பிரதியாகத்தர முயலும் போது அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும், ஒருவர் வெறுமனே வாயால்சொல்லும் போது அந்த அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும் வேறுபாடுகள் இருக்கும்.என் தரப்பினை என்னை விட ஒரு வழக்கறிஞர் சிறப்பாக எடுத்துரைக்க முடியும். அவருக்குஅதே அனுபவங்கள் இருக்க வேண்டியதில்லை. அது போல் ஒரு எழுத்தாளரும் செய்ய முடியும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் சுஜாதா தன்னை ஒரு பார்ப்பனர் என்று சொன்னாலும்கூட அது அவர் ஒரு இலக்கியப் பிரதியினை உருவாக்க தடையாக இருக்க வேண்டியதில்லை. அப்பிரதி தலித்கள் குறித்து எதை எப்படிக் கூறுகிறது என்பதையே கவனிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் படைப்பு என்பது படைப்பாளி உருவாக்குவது, அது படைப்பாளியின் கருத்துக்களின், வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டியதில்லை. தனக்கு நம்பிக்கையில்லாத விஷயங்களைக் கூட இன்னொருத்தர் நம்பும்படி சொல்ல முடியும், திறனும்,மொழி அறிவும் இருந்தால். பிரதியையும், யதார்த்ததினையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாவிட்டால்இது தெளிவாகப் புரியும்.

அழகிய பெரியவன் தலித் என்பதை சாரம்சப்படுத்துகிறார்.அவர் சராம்சப்படுத்தும் தலித் என்பதுஜாதிய அமைப்பு கூறுவதைத்தான் பிரதிபலிக்கிறது. சுஜாதாவிற்கு அவர் சொல்லியிருக்க வேண்டியது வேறு.

தலித்களுக்கு உங்களுடைய பச்சாதபமும், தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு காட்டும்அனுதாபமும்,ஆதரவும் தேவையில்லை. தலித் இலக்கியம் சுஜாதாக்களின் வருகை, அங்கீகாரம், ஆதரவிற்காகக் காத்திருக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் இல்லை.சுஜாதா எழுதித்தான் உய்வடைய வேண்டும்,கவனம் பெற வேண்டும் என்ற நிலையில் தலித்களோ , தலித் இலக்கியமோ இல்லை.

பிற்குறிப்பு
1, சராம்சப்படுத்தல் என்பதை நான் நிராகரிக்கவில்லை.அதை எங்கு எப்போது எப்படி பயன்படுத்துவது என்பதுதான் கேள்வி.2,பிப்ரவரி 2006 செமினார் இதழில் ஆனந்த் எழுதியுள்ள கட்டுரையையும் படிக்கவும்.அக்கட்டுரையுடன் நான் முரண்படும் புள்ளிகள் பல.

5 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

நீங்க சொல்கிற விஷயம் குறித்து எனக்கு நிறைய கேள்விகள் உண்டு. கேட்டால், என் அறியாமை வெளியானால் கூட பரவாயில்லை, ஆனால் தர்ம அடி விழுந்தால் சமாளிக்கத் தெரியாது என்பதால் சும்மா படித்துக் கொண்டிருக்கிறேன்.

அசோகமித்திரன், சென்ற வருடம், பார்ப்பனர்கள் பற்றி சொன்ன, ஒரு 'கேள்விக்குரிய' கருத்து, பலரையும், அவருடைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த புதினங்களையும், மறுவாசிப்பு செய்ய வைத்து, அதிலே ஏதேனும் hidden agenda இருக்கிறதா என்று துப்பு துலக்க வைத்தது. அதே போல, சுஜாதா, சமீப காலமாகச் சொல்லி வரும், பார்ப்பன ஆதரவுக் கருத்துக்களும் அதே வேலையைத்தான் செய்கின்றன.

//எழுத்து என்பதில் உள்ள நுட்பங்களை அறிந்த,மொழித்திறனும் பயிற்சியும் உள்ள எழுத்தாளர் அந்த அனுபவங்களை இலக்கியப் பிரதியாகத்தர முயலும் போது அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும், ஒருவர் வெறுமனே வாயால்சொல்லும் போது அந்த அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும் வேறுபாடுகள் இருக்கும்.என் தரப்பினை என்னை விட ஒரு வழக்கறிஞர் சிறப்பாக எடுத்துரைக்க முடியும். அவருக்குஅதே அனுபவங்கள் இருக்க வேண்டியதில்லை. அது போல் ஒரு எழுத்தாளரும் செய்ய முடியும்//

என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்.

தலித் தினுடைய வலிகளையும் வேதனைகளையும் , ஒரு தலித் எழுத்தாளரால் நேர்மையாக எடுத்துச் சொல்லமுடியும் என்கிற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பிற உயர்வகுப்பைச் சார்ந்த எழுத்தாளர்கள், எதை எழுதினாலும், அதிலே தலித் சமூகத்தை சிறுமைப் படுத்தும் கருத்துக்கள் இருந்தே ஆகும் என்றும், அவர்கள், தங்களது முது வயதில், social security, புகழ், பணம், அங்கீகாரம், மரண பயம், போன்ற காரணங்களுக்காகச் சொல்லும் கருத்துக்களுடன், இளமைக்காலத்தில் ஏதோ ஒரு சித்தாந்ததினால் உந்தப்பட்டு எழுதிய படைப்புக்களுக்கும் கள்ள உறவு இருக்கும் என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தலித் பிரச்சனைகள் குறித்து எழுதியவர் தலித் எழுத்தாளன் என்ற ஒரு விளக்கம் இருக்குமானால், சுஜாதா நிச்சயமாக ஒரு தலித் எழுத்தாளர். தலித்தாகப் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தான் தலித் எழுத்தாளராக முடியும் என்று சொன்னால், சுஜாதா அந்த வட்டத்துக்குள் வரமாட்டார்.
.

12:10 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ஒரே இடத்தில் எத்தனை எச்சமய்யா? கொஞ்சம் மரத்துக்கு மரம் தாவி தாவி போடப்பிடாதா?

தன்னை 'தலித் எழுத்தாளனாக கருத வேண்டும்' என்று சுஜாதா சொன்னதற்கு எதிர்வினையாய் அழகிய பெரியவன் எழுதியிருக்கிறார். அவர் எங்கேயும் 'தலித் அல்லாதவர்கள் தலித் பற்றி எதுவும் எழுதக் கூடாது' என்று சொன்னதாகவும் தெரியவில்லை. தலித் வாழ்வை எழுத தேவையான தீவிரத்தை கோடிட்டு காட்டுவதாக மட்டுமே அவர் எழுதியது உள்ளது. அழகிய பெரியவன் சொன்னதை(சாரம்சவாதம் என்பதாக) முற்றிலும் திரித்து, தனக்கும் புரியாமல் யாருக்கும் புரியாமல் ஒட்டுமொத்தமாய் காக்காய் எச்சங்களை இங்கே போட்டு, இதனால் யாருக்கு என்ன அய்யா பயன்? Breathless உளறல் என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் இதோ

"தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.தலித்கள் இன்று உயர்பதவிகளில்இருக்கிறார்கள், பேராசிரியர்களாவும், அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் சில வேலைகள் தலித்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றிருப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். அதுதான் முக்கியம்."

மீண்டும் இவர் எழுதுவதை எல்லாம் சீரியஸாய் எடுத்துகொண்டு, இவரை இடதுசாரி என்று சொல்லி மதிப்பளிப்பவர்ளின் கேனத்தனம்தாம் வேடிக்கையாய் இருக்கிறது.

4:08 AM  
Blogger இளந்திரையன் மொழிந்தது...

ஒருவரை முட்டாள் என்பதும் தலித் என்பதும் உள்ளத்திற்கும் உடலுக்கும் உள்ள வித்தியாசம் தான். தலித் என்பதற்கு உள்ள வரையறை அவர்களுடைய வாழ்க்கைமுறை சமுகத்தால் விதிக்கப் பட்ட வாழ்க்கை முறை. அவர்களுடைய வாழ்க்கையை அறிவது தலித் என்றால் என்ன என்பதை அறிய முடியும்.அதிலுள்ள வலியும் வேதனையும் புரியும்.

வலியையும் வேதனையையும் அனுபவித்தவர்கள் கேட்டுத்தெரிந்து கொண்டவர்களைவிட ஒரு மாற்று உயர்வாகவே வெளிப்படுத்துவார்கள் என்பது என் எண்ணம்.

ஒரு கருத்தை எதிர்ப்பது என்பது ஒரு நபரைப் பழிப்பது என்பதல்ல. இன்று பலரும் அதனைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

9:58 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://blog.360.yahoo.com/blog-r7rBHjAib7TfthJ7_AAQOg1.?p=52

11:50 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

The comment I wrote in Muthu's post.
/தலித் எழுத்தாலர்களெல்லாம் இப்படி நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ன?/
சிறிலின் கேள்வி எதிர்மறையாய் இருந்தாலும் அவருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.

சிறில், பிரச்சினை தலித் எழுத்தளர் பீ அள்ளுகிறார்களா என்று கேட்பது மிகவும் சரியான வாதமாக இருந்தா, 'ஏன் தலித் எழுத்தாளர்கள் என்றாலே பீதான் அள்ளவேண்டுமா? ' என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வீர்கள். இன்னும் ஒரு படு மேலே போய், "யாரெல்லாம் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்" என்றுகூட என்னால் சொல்லமுடியும்.

அழகிய பெரியவனின் கட்டுரையின் உட்பொருள், தலித் எழுத்தாளர்களௌக்கிடையே பொதுவாக இருக்கும் ஒரு நோக்கமாவது சுஜாதாவுக்கு கடுகளவாவது இருக்குமா? என்பதுதான். "தாம்பிராஸ் கூட்டத்தில்" ஒரு விதமாகப் பேசியவருக்கு, "தலித் " எழுத்தாளராக காட்டிக்கொள்ளத் தேவை வந்திருப்பது உண்மையிலேயே வியப்பானது. அவரது செயல்பாடுகள் எந்த அளவுக்கு அதற்கு இடம் கொடுப்பவை என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

1:44 PM  

Post a Comment

<< முகப்பு