வனப்பிரஸ்தம் - குந்தியின் தனிமையும், தேடலும்

பாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் வென்ற பின் குந்தி தனியே வாழக் காட்டிற்கு செல்கிறாள்.அத்தனிமையில் தன் வாழ்வின் தருணங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உறவுகளை, பிரிவுகளை அவர் மீள்பார்வை செய்வதை ஒரு நபர் நிகழ்வாக நிகழ்த்தினார் அனிதா சந்தானம். பரசுராம் ராமமூர்த்தியின் பிரதிக்கு அனிதா உயிரூட்டினார் என்பது மிகையல்ல.

குந்தி பாண்டவர்களின் தாய், மகாராணி, வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கண்டவள். ஒரு ராஜகுமாரியாக பிறந்து மகாராணியாக, பின் பாண்டவர்களுடன் வனவாசம் சென்றவள். அவள் தன் வாழ்வை ஒரு பெண்ணாக மீள்பார்வை செய்யும் போது எழும்பும் கேள்விகளையும், அவளின் புரிதல்களையும் நம்முன் வைக்கிறது இப்பிரதி. குந்தியின் வாழ்வில் அசாதாரணமான துயர்களும், எதிர்பாரா திருப்பங்களும் உண்டு. பல வருடங்கள் கழித்து தன் முதல் குழந்தையை கர்ணனைக் காண்பது, அவன் தம்பியினால் கொல்லப்படுவது, பாண்டுவும், அவன் மனைவி மாதுரியும் ஒருவர் பின் ஒருவராக மரிப்பது, உடலுறவு கொள்ள முடியாத கணவனுக்கு வாரிசுகளைத் தருவது என்று பல நிகழ்ச்சிகள். இவற்றில் ஒரு பெண் என்ற விதத்தில் குந்தி பெற்ற அனுபவங்கள், அவை அவளுள் எழுப்பும் கேள்விகள், மானுட உறவுகள் குறித்த விசாரணை எனப் பலவற்றைத் தொட்டுப் பேசுகிறது பிரதி. ஒரு கட்டத்தில் குருஷேத்திரப் போரினை கண்ணனோ அல்லது திருதிராஷ்டிரனோ ஏன் தடுக்கவில்லை என்று கேட்கும் குந்தி இன்னொரு சந்தர்ப்பத்தில் தானும் அதை தடுக்கவில்லையே என்று கூறுகிறாள். ஒரு ராஜகுமாரியாக அவள் கண்ட கனவுகள் பாண்டுவுடனான திருமணத்தினால் பொய்த்துப் போகின்றன.ஆனால் விசுவாமித்திரர் தந்த மந்திரமோ அவளை இந்திரனின் அம்சமாக, சூரியனின் அம்சமாக என குழந்தைகள் பெற, வம்ச விருத்திக்கு உதவுகிறது. எது இயற்கையாக நடக்க வேண்டுமோ அது நடக்க வில்லை. பாண்டுவுக்கு கிடைத்த சாபத்தின் விளைவு அது. கூடினால் மரணம் என்ற சாபம் பாண்டுவையும், மாதுரியையும் காவு கொள்கிறது. குந்தி தனி மரமாகிறாள். மாதுரி எத்தகைய பேரழகி என்று வியக்கும் மாதுரி அவளுக்கு மந்திரத்தினைச் சொல்லித் தருகிறாள். அவளும் தன் பங்கிற்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். ஆண்கள் நடத்தும் ஆட்டத்தில் பெண்கள் பகடைக்காய்களா, இதில் பெண் ராணியாக இருந்தாலும் அவளும் பகடைக்காயாகவே பயன்படுகிறாள், அவளுக்கென்று தெரிவுகள், விருப்பங்கள் இல்லையா, ஒரு சுயம் இல்லையா, தனித்துவமான ஆளுமை இல்லையா - இப்படி பல கேள்விகள் அவளின் அந்திம காலத்தில் மனதில் நிழலாடுகின்றன. தனிமையில் தன் வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தினை, அது இறுதியில் எங்கு செல்கிறது என்பது குறித்த கேள்விகளை தனக்குள் எழுப்புக் கொள்ளும் குந்தி தனிமையில் சுதந்திரமான தனிமையில், ஒரு நீண்ட பயணம் வாழ்க்கை என்பதை கண்டறிவதாக, தன் சுயத்தினை அறிய விழையும் தேடலாக பிரதி அமைந்துள்ளது.


சின்னா என்ற கிளிக்கு தன் கதையை தனிமையில் காட்டில் வாழும் குந்தி கூறுவதாக நிகழ்வு தொடங்குகிறது. குந்தியின் வாழ்க்கையின் பல கட்டங்கள் , அனுபவங்கள் குந்தியால் விவரிக்கப்படுகின்றன, அச்சமற்ற இளம் பெண் குந்தி, சுதந்திரமாய் திரியும் சிறுமி, ராஜகுமாரியாகதனியே தோழியின் சொல் கேட்டு ஒரு குன்றில் ஏறும் குந்தி, சூர்யன் தான் அழைத்ததும் வந்ததை எண்ணி வியப்புறு அறியாப் பருவப் பெண், பெற்ற குழந்தையைப் போரில் இழந்து பாசத்தில் துடிக்கும் தாய், திரெளபதியும் சூதாட்டத்தில் பணயம் வைக்க்படும் ஒரு பொருளா எனப் பதறும் மாமியார், தன் கணவனின் இரண்டாவது மனைவியிடம் நேசம் காட்டும் தோழி, சூர்யனுடான உறவினை எண்ணி உரிமையுடன் சூரியனை அழைக்கும் பெண் என்று குந்தி என்ற ஆளுமையின் பல பரிமாணங்களை நம்முன் நிறுத்துகிறது இந்த நிகழவு. குந்தியின் மனத்திற்கும், உடலுக்கும் இங்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டது. சூர்யன் குந்திக்கும் வெறும் ஆதவன் மட்டுமல்ல, ஒரு குழந்தையைத் தந்தவன் மட்டுமல்ல. சூரியனிடம் அவள் பெற்ற இன்பம், சூரியனை அவள் தனக்கு நெருங்கியவனாகக் காண்பது, கர்ணன் குறித்து நம் குழந்தை என்று சூரியனிடம் அவள் கூறுவது, வாயுவைப் பற்றி அவள் கூறுவது - இவற்றை நிகழ்த்திக் காட்டும் போது உடல் என்பதற்கு தேவையான முக்கியத்துவம் தரப்பட்டது. அனிதா பல பாவங்களை உடல்மூலம் மிக அழகாக வெளிப்படுத்தினார். அரங்க வெளியினை சிறப்பாக பயன்படுத்தினார்,உடலின் அசைவுகளும், குரலும் ஒத்திருந்ததால் எழுத்துப் பிரதி வேறொரு பரிமாணத்திற்குஎடுத்துச் செல்லப்பட்டது. அனிதா தன் உடலை மிக நளினமாக பயன்படுத்தினார் அங்கு போலி வெட்கம், நாணம் இல்லை. உடலின்பம் எழுப்பும் பரவசங்களைக் காண்போர் முன் கொண்டு வந்தார் அனிதா. உடலின் வலிகளும், சுகங்களையும் அனிதா நன்றாக வெளிப்படுத்தினார்.

குந்திக்கு திரெளபதி குறித்து பெருமிதம் இருக்கிறது. ஐவருக்கு மனைவியாக இருந்த அவள்பத்தினிதான் என்று கூறும் குந்தி, தன் நிலையையும் அங்கு நினைவு கூறுகிறாள். தனக்கென்றுபெற்றுக் கொண்ட குழந்தை எப்படிப்பட்டவன் என்று பூரிப்படைகிறாள். அதே சமயம் அண்ணன்போரில் தம்பியால் கொல்லப்படும் துயர சம்பவமும், பெரும் போரும் அவள் மனதில் ஆறாதப் புண்களுக்கு காரணமாகின்றன. நம் மகன் கர்ணன் இல்லையே என்று சூர்யனிடம் புலம்புகிறாள். இப்போர்கள் யாருக்காக எதற்காக கேவலம் மண்ணிற்காகவா என்று பொரும்புகிறாள். வேறொரு சமயம் காட்டெருமையை புலி கொல்வது இயற்கை நியதி அதற்கு பயப்படலாமா என்று கேட்கிறாள். தான் வெறும் பகடைக்காயல்ல, யுத்தத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பதைஒப்புக்கொள்கிறாள், ஆனால் வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கும் போது தானும் சூழ்நிலையின் கைதியோ என்று எண்ணுகிறாள். அனைத்தும் முடிந்துவிட்டன, தான் அனைத்தையும் பார்த்துவிட்டேன் என்று வாழ்வின் அந்திம காலத்தில் கூறும் குந்திக்கு துணை தனிமை, சுதந்திரமானதனிமை. அவள் அவளாக இருக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தனிமை. அவள் உறவுகளிலிருந்து விலகி தன்னும் மேற்கொள்ளும் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உறவுகள் முன் நிறுத்தும் தெரிவுகள், வினைகள் எதிர் வினைகள், வெற்றிகள், தோல்விகள் மூலம் தன்னைக் கண்டடைய முயல்கிறாள்.

இத்தேடலில் தன் சுயத்தினை கண்டறிய முயலும் குந்தி, விழிப்புணர்வு கொண்டவளாக தேடலே பயணம், தேவை புதிய பார்வையும், புரிதலும், தெளிதலும், புதிய கண்ணோட்டத்தில் இருத்தலுமே என்று உணர்கிறாள். அப்போது தனிமை சுமையில்லை, சுதந்திரமான தனிமை ஒரு சரியான தெரிவு, இப்போது தேவை அனைததையும் நிராகரிப்பதல்ல, கடந்து செல்லுதல் என்பதை அறிகிறாள். அந்த புரிதலில் விரக்தி இல்லை, வெற்றி இல்லை, தோல்வி இல்லை. அவள் இப்போது ராணியல்ல, தாயல்ல, குந்தி, ஆம் அந்த உறவுகளைக் கடந்து விட்ட ஒரு ஆளுமை குந்தி எனும் தனித்துவமான் ஆளுமை. சென்றதினி மீளாது என்பதறிந்து இன்று புதிதாய் பிறந்த குந்தி அவள்.

இது குந்தியின் கதை மட்டுமல்ல, ஒரு விதத்தில் உறவுகளின் நிர்பந்தங்களில், பகடைகாயாகபயன்படுத்தப்படும், பிரிவினையும், துயரையும் தவிர்க்க முடியாத நிலையில் உள்ள, சூழ்நிலைக் கைதியாகவும், பல சமயங்களில் விழுமியங்களை, விதிகளை மீற முடியாமலும், சில சமயங்களில்அவை போலி என்று தெரிந்து அவற்றினை நிலை நாட்ட விரும்பும் பெண்களின் கதையும் கூட.


அனிதா இப்பிரதியினை சிறப்பாக கையாண்டார். தெளிவான உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கங்கள் மூலம் பாவங்களை வெளிப்படுத்தியது, தெளிவான உச்சரிப்பு, உடல் பாவங்கள் மூலம் உணர்வுகளை வெளிக்கொணர்ந்தது என்று அவர் நிகழ்த்திய விதத்தில் பாராட்டதக்க அம்சங்கள் பல இருந்தன. பொருத்தமான உடை அலங்காரமும், ஒப்பனையும் நிகழ்விற்கு உறுதுணயாக இருந்தன. வயதான குந்தியாகத் தோன்றும் போது ஒப்பனை இன்னும் கொஞ்சம்பொருத்தமாக இருந்திருக்கலாம்,.


ஒரே நபர் இது போன்ற பிரதியை நிகழ்த்திக்காட்டுவது என்பது எளிதல்ல. இப்பிரதியினைஎழுதி இயக்கிய பரசுராம் ராமமூர்த்தி, தொழில்நுட்ப நெறியாள்கை செய்த சுந்தர், இசைஅமைத்த டேவிட், ஒளியமைத்த ராஜ்குமார் , அனிதாவுடன் இணைந்து ஒரு சிறப்பானநிகழ்வினை சாத்தியமாக்கினர். இது வரை இரு முறை அரங்கேற்றப்பட்டுள்ள இப்பிரதிஇவ்வாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் சில கலை விழாக்களில் இடம் பெறவுள்ளது.

வனப்பிரஸ்தம்

குந்தி பாத்திரமேற்றவர் - அனிதா சந்தானம், நடிகை, நடனக்கலைஞர், நடன ஆசிரியர்மற்றும் நிகழ்கலை விமர்சகர் (பெங்களூர்)பிரதியாக்கம்-இயக்கம் பேரா.பரசுராம் ராமமூர்த்தி மதுரை காமராஜர் பல்கலைகழகம்தொழில் நுட்ப இயக்கம் - முனைவர் சுந்தர் காளி (நடிகர், இயக்குனர், நாட்டுப்புறவியலாளர்,விரிவுரையாளர் காந்தி கிராமநிகர் நிலைப்பல்கலைக்கழகம் )அரங்கமைப்பு, ஒளியமைப்பு - ராஜ்குமார் (டி.வி,எஸ் லக்ஷ்மி மெறிக் மேல்நிலைப்பள்ளியில் நாடக ஆசிரியர்)இசை- டேவிட் (இசை அமைப்பாளர், ஆசிரியர் மதுரை) நேரம் - 70 நிமிடங்கள்

Thinnai Link - http://www.thinnai.com/ar0331062.html

சவால்- சுந்தர ராமசாமி-பிரமீள்

பி.கே.சிவக்குமார் தன் வலைப்பதிவில் சவால் என்ற தலைப்பில் சுந்தர ராமசாமி (பசுவய்யா) எழுதிய கவிதையைப் பற்றி எழுதியிருக்கிறார்.

சவால் என்ற தலைப்பில் வெளியான கவிதையை வெகுவாகப் புகழந்து பிரமீள் சதங்கையில் ஒரு கட்டுரை எழுதினார். வானமற்ற வெளி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை சதங்கை தீபாவளி மலர் 1973ல் வெளியானது. வானமற்ற வெளி என்ற தொகுப்பில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.(1) இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு பிரமீள் பசுவய்யாவின் இக்கவிதையை அளவுக்கு மீறி புகழ்கிறார் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். அந்தக் அளவிற்கு கவிதையையும், அதை எழுதியவரையும்சிலாகித்து பிரமீள் எழுதியிருக்கிறார்.அப்போது பசுவய்யாவின் கவிதைகள் தொகுதியாக வரவில்லை. இதையும் பிரமீள் குறிப்பிடுகிறார்.இக்கவிதை 1972ல் அக்கின் நவம்பர்-டிசம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.

'இக்கவிதையைப் படித்த போது. அதன் உக்கிரமே என்னுள் புகுந்து அறைகூவல் என்ற கவிதையை எழுத வைத்தது.அப்படியும் தீரவில்லை.பசுவய்யாவிற்கு, " உன் 'சவால்' என் மனசில் உராய்ந்து உராய்ந்து பொறியெழுப்பியபடியே இருக்கிறது" என்ற பொருள்பட கடிதம் எழுதியிருந்தேன்' என்று பிரமிள் எழுதியிருக்கிறார். (மேற்படி நூல் பக்கம் 117).

இதிலிருந்து பசுவய்யாவின் கவிதை பிரமிள் ஒரு கவிதை எழுத தூண்டு கோலாகியிருக்கிறது என்று தெரிகிறது. ஒரு வேளை முத்துசாமிதான் இதை மாற்றிச் சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. கவிதையைப் படிக்கும் எவருக்கும்இது பிரமிளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கும் அல்லது தாக்கும் கவிதை அல்ல என்பது புரியும். இக்கட்டுரை சுந்தர ராமசாமிக்குப் பிடிக்கவில்லை என்று பிரமிள் தெரிவித்ததாக மேற்படி நூலில் பக்கம் 235ல் உள்ள குறிப்பு தெரிவிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை சவால் ஒரு சாதாரணமான கவிதை.

பி.கே.சிவக்குமார் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டது என்பதையாவது அவர் யோசித்திருக்க வேண்டும். ந.முத்துசாமி இரங்கல் குறிப்பில் என்ன எழுதினார், ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. சு.ராவிற்கும், பிரமிளுக்கும் நட்பு இருந்த காலமும் உண்டு, நட்பில்லாமல் இருந்த காலமும் உண்டு. பி.கே.சிவக்குமார் இந்த மிக அடிப்படையான ஒன்றைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஜெயமோகன் எழுதிய நூலில் சு.ரா-பிரமீள் நட்புடன் இருந்தது குறித்து எதுவும் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சு.ராவும் பிரமீளும் எப்போதுமே விரோதிகளாக இருந்ததில்லை என்பது தமிழ் சிற்றிதழ் இலக்கிய வரலாற்றையும், சு.ரா எழுதியவற்றை வாசித்தவர்களுக்கும் தெரியும்.

எனக்குத் தெரிந்த வரை 1970களின் பிற்பகுதி வரை இருவருக்குமிடையில் நட்பும், பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருந்திருக்கிறது. சு.ரா, பிரமீள்,வெங்கட் சாமிநாதன் இந்த மூவரும் பல விஷயங்களில் ஒத்த கருத்துக் கொண்டிருந்தனர், வரட்டுமார்க்சிய இலக்கியவாதிகளை விமர்சித்தும் வந்தனர். பின்னர் சு.ராவிற்கும், பிரமீளிற்கும் இருந்த நட்பு முறிந்து போனது.ஜே ஜே சில குறிப்புகளை மிகக்டுமையாக பிரமீள் விமர்சித்தார். அது போல்வெ.சாவின் எழுத்துக்களையும் கடுமையாகச் சாடினார். அவர் இந்த விமர்சனங்களை கட்டுரைகள்,கவிதைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்தார். இலக்கிய ஊழல்கள் என்ற சிறு நூலும் வெளியானது

உலகிற்கு சில மகா உண்மைகளை உபதேசிக்கும் அவசரத்திலும், உதாரணம் காட்ட வேண்டிய தேவைக்காகவும் அவராக சிலவற்றை அனுமானித்துக் கொண்டு கவிதையில் அதற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோதும் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். நிரலி மூலம் சிலவற்றை பிடித்து அட்டைக்கத்தி சண்டை போடுவது போன்றததுதான் இலக்கிய வாசிப்பும், விமர்சனமும் என்று அவர் நினைத்திருக்கலாம். இல்லை ஒருவேளை இது உண்மை(கள்) குறித்த மாபெரும் மறுபரீசலனை,விவாதத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

(1) வானமற்ற வெளி-கவிதை பற்றிய கட்டுரைகள்-பிரமிள் - தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம்- அடையாளம்- 2004
தலித் இலக்கியம்-அழகிய பெரியவன் - சுஜாதா

கீற்று தளத்தில் இதைப் படித்தேன்.

சுஜாதா என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது.அவர் தன்னை தலித் எழுத்தாளர் என்று எந்தப் பொருளில் கூறுகிறார் என்பதும் எனக்குத் தெரியாது.சுஜாதா விரும்பினால் தலித்கள் குறித்து எழுதலாம். அவர் எழுதுவது இலக்கியமா, தலித் இலக்கியமா என்ற கேள்வியை அவர் படைப்புகளைவைத்துதான் மதிப்பிட வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து அவர்ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். அதை வைத்துக் கொண்டு அவரால் தலித்கள் குறித்து எழுத முடியாது, எழுதக் கூடாது என்ற முடிவிற்கு வரமுடியாது.இலக்கியம் குறித்த மயக்கங்கள் இருப்பவர்களுக்கு அப்படித் தோன்றலாம். இலக்கிய பிரதியை யாரும் உருவாக்கலாம். அப்பிரதி எப்படி உள்ளது என்பதைத் தான் மதிப்பிட வேண்டும். இலக்கியம் என்பதை எழுதுபவரின் ஆளுமையின் பிரதிபலிப்பு என்று கொள்ளத் தேவையில்லை.

தலித் என்பதை எப்படி சுய வரையறை செய்து கொள்வது, தலித் என்றால் இப்படித்தான் என்று கருதிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது.என்னை முட்டாள் என்று பிறர் கூறினால் அல்லது வரையறை செய்தால் நான் அதை ஏற்க வேண்டுமா என்ன.தலித்கள் இன்று உயர்பதவிகளில்இருக்கிறார்கள், பேராசிரியர்களாவும், அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். ஜாதிய அமைப்பில் சில வேலைகள் தலித்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றிருப்பதை எதிர்த்து நிராகரிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

தலித் இலக்கியம் என்பது வெறும் வலி, வேதனைகளைத்தான் பேச வேண்டுமென்பதில்லை.போராட்டங்களை, வெற்றிகளை, சவால்களையும் பேச வேண்டும். தலித்களின் அனுபவத்தினை தலித் அல்லாதோர் எழுதினால் அது எத்தகைய இலக்கியமாக உருவாகியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். எழுத்தாளரின் பணி ஒரு பிரதியை உருவாக்குவதே. பிறர் அனுபவத்தினை உள்வாங்கி அதை ஒரு பிரதி மூலம் வெளிப்படுத்துவதுஎன்பது இலக்கியம் மூலம்தான் சாத்தியம் என்பதில்லை.

எழுத்து என்பதில் உள்ள நுட்பங்களை அறிந்த,மொழித்திறனும் பயிற்சியும் உள்ள எழுத்தாளர் அந்த அனுபவங்களை இலக்கியப் பிரதியாகத்தர முயலும் போது அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும், ஒருவர் வெறுமனே வாயால்சொல்லும் போது அந்த அனுபவங்கள் புரிந்து கொள்ளப்படுவதற்கும் வேறுபாடுகள் இருக்கும்.என் தரப்பினை என்னை விட ஒரு வழக்கறிஞர் சிறப்பாக எடுத்துரைக்க முடியும். அவருக்குஅதே அனுபவங்கள் இருக்க வேண்டியதில்லை. அது போல் ஒரு எழுத்தாளரும் செய்ய முடியும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் சுஜாதா தன்னை ஒரு பார்ப்பனர் என்று சொன்னாலும்கூட அது அவர் ஒரு இலக்கியப் பிரதியினை உருவாக்க தடையாக இருக்க வேண்டியதில்லை. அப்பிரதி தலித்கள் குறித்து எதை எப்படிக் கூறுகிறது என்பதையே கவனிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் படைப்பு என்பது படைப்பாளி உருவாக்குவது, அது படைப்பாளியின் கருத்துக்களின், வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டியதில்லை. தனக்கு நம்பிக்கையில்லாத விஷயங்களைக் கூட இன்னொருத்தர் நம்பும்படி சொல்ல முடியும், திறனும்,மொழி அறிவும் இருந்தால். பிரதியையும், யதார்த்ததினையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாவிட்டால்இது தெளிவாகப் புரியும்.

அழகிய பெரியவன் தலித் என்பதை சாரம்சப்படுத்துகிறார்.அவர் சராம்சப்படுத்தும் தலித் என்பதுஜாதிய அமைப்பு கூறுவதைத்தான் பிரதிபலிக்கிறது. சுஜாதாவிற்கு அவர் சொல்லியிருக்க வேண்டியது வேறு.

தலித்களுக்கு உங்களுடைய பச்சாதபமும், தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு காட்டும்அனுதாபமும்,ஆதரவும் தேவையில்லை. தலித் இலக்கியம் சுஜாதாக்களின் வருகை, அங்கீகாரம், ஆதரவிற்காகக் காத்திருக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் இல்லை.சுஜாதா எழுதித்தான் உய்வடைய வேண்டும்,கவனம் பெற வேண்டும் என்ற நிலையில் தலித்களோ , தலித் இலக்கியமோ இல்லை.

பிற்குறிப்பு
1, சராம்சப்படுத்தல் என்பதை நான் நிராகரிக்கவில்லை.அதை எங்கு எப்போது எப்படி பயன்படுத்துவது என்பதுதான் கேள்வி.2,பிப்ரவரி 2006 செமினார் இதழில் ஆனந்த் எழுதியுள்ள கட்டுரையையும் படிக்கவும்.அக்கட்டுரையுடன் நான் முரண்படும் புள்ளிகள் பல.
சம்ஸ்கிருதமும், சில ஆய்வுகளும்

இது ஆர்.எஸ்.எஸ் வலைத்தளத்தில் உள்ள செய்தி. இச்செய்தி குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரை 2001ல் வெளியானது. இவர் இந்த ஆய்வு குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஆய்வு வெளியான இன்டரநேஷனல் ஜர்னல் ஆப் நியுரோசைன்ஸ் குறித்து அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கீழே.

The Institute of Scientific Information Journal Citations Report for 2003 ranks The International Journal of Neuroscience 175th out of 198 journals in Neurosciences (Science),
with an impact factor of 0.579.

இந்த ஆய்வினை செய்தவர் மகரிஷி வேத அறிவியலில் இணைப்பேராசிரியராக பணிபுரிபவர்.இந்தப் பல்கலைகழகத்தில் உள்ள ஆசிரியர்களும்,மாணவர்களும் ஆழ்நிலைத் தியானம்பயிற்சி செய்பவர்கள். ஆர்.எஸ்.எஸ் வலைத்தளத்தில் பல்கலைகழகத்தின் பெயரும், கட்டுரை வெளியான ஆண்டும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கட்டுரையை வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்பொது குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

இதன் அடிப்படையில் தினமலர் முதல் திண்ணை வரை சம்ஸ்கிருதம் பயில்வது உடல்நலத்திற்கு நல்லது என்று செய்திகள், கட்டுரைகள் வெளியாகலாம். ஆனால் எனக்கென்னவோ இப்படி ஆய்வுகள் செய்வதற்கு பதிலாக சம்ஸ்கிருதம் பயில்வதற்கும் அல்லது பகவத்கீதை படிப்பதற்கும் பாலுறவுசெயல்பாட்டிற்கும் இருக்கும் தொடர்பினை ஆராயலாம். அது போல் சம்ஸ்கிருதம் பயில்வதற்கும்அல்லது பகவத் கீதை படிப்பதற்கும் பங்குச்சந்தைக் குறியீட்டிற்கும் உள்ள தொடர்பினைஆராயலாம். அப்புறம் கீழ்கண்ட முடிவுகளை அறிவிக்கலாம்

சம்ஸ்கிருத உச்சரிப்பு பாலுறவு செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. அர்த்தம் புரிந்து படிக்கவேண்டும் என்பதில்லை. சம்ஸ்கிருத நூல்களை வாய்விட்டு படித்தாலே பாலுறவில் விரும்பத்தக்கமாற்றம் ஏற்படுகிறது, உச்ச இன்பம் எளிதாக கிடைக்கிறது, நீண்ட நேரம் நீடிக்கிறது, முக்கியமாக சம்ஸ்கிருதம் நூல்களைப் படிப்பதும், வாய்விட்டு படிப்பதும் கருத்தரித்தலை எளிதாக்குகின்றன,பிரசவ காலத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களைக் கேட்டால் கூட பிரசவம் சுகப்பிரசவமாக அமைகிறது.

இந்துக்கள் அதிகமாக குழந்தைகள் பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புவதால் இந்த முடிவு சம்ஸ்கிருதத்தினைப் பரப்பவும், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவும்.

சம்ஸ்கிருதம் பயில்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அல்லது தினமும் சம்ஸ்கிருதநூல்களை வாய்விட்டுப் படிப்போர் எண்ணிக்கை கூடினால் அதற்கேற்றார்ப் போல் பங்குச்சந்தைகுறியீட்டு எண்ணும் அதிகரிக்கிறது. (இதற்கு எகனாமிக் டைம்ஸ் எப்படி தலைப்பிடும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்).

இப்படி ஆய்வுகள் செய்தால் நிஜமாகவே வீட்டிற்கும் நாட்டிற்கும், ஏன் உலகிற்கே நல்லது. அதை விடுத்து யாருக்கும் எளிதில் விளங்காத ஆய்வுகளை செய்ய வேண்டாம் என்று மகரிஷி பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
புஷ் வருகையும், சில கேலிக்கூத்துக்களும்

புஷ் வருகையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வி.பி.சிங்கும், பர்தனும் பேசியிருக்கிறார்கள். பர்தன் கருத்து சரி என்றால் மதத்தினை விமர்சிப்பது குற்றம் என்று பொருள் கொள்ள வேண்டும். இதை ஒரு கம்யுனிஸ்ட் கட்சியின் முக்கியப்பொறுப்பில் இருப்பவர் கூறுகிறார் என்றால் அது கேலிக்கூத்துதான். இப்படிபேசுவதற்கு பேசாமல் ஏதாவது ஒரு முஸ்லீம் அமைப்பில் சேர்ந்து விடலாம்.மார்க்ஸ் ஒழிக, இஸ்லாமிய மார்க்கம் வாழ்க என்று கூறிவிடலாம். வி.பி.சிங்பேசியிருப்பது அதை விட அபத்தமாக உள்ளது. இந்தியா இந்த விஷயத்தில்எந்த அளவு தலையிட வேண்டுமோ அதற்கு அதிகமாகவே அக்கறை காட்டியிருக்கிறது.எந்த அடிப்படையில் இந்திய அரசு இப்பிரச்சினை குறித்து ஒரு சிறப்பு தூதரை அனுப்பமுடியும்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பலர் இந்த கேலிச்சித்திரங்களை எதிர்க்கிறார்கள்என்பதற்காக அரசு இன்னொரு நாட்டினாட உறவை கெடுத்துக் கொள்ள வேண்டுமா.

1980களில் ஷாபானு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்செய்தனர்.ராஜீவ் காந்தி அரசு அத்தீர்ப்பினை நிராகரிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தம்கொண்டு வந்தது. அதை வி.பி.சிங் ஆதரித்தார். இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன, காங்கிரஸில் இருந்தாலும் அரசின் முடிவை எதிர்த்து ஒட்டளித்தார் ஆரிப் முகமது கான். இந்திய அரசு சல்மான் ருஷ்டி எழுதிய நூலையும் தடை செய்தது. இப்படி 1980களில் முஸ்லீம்களைதிருப்திப்படுத்த செய்த முயற்சிகள் பா.ஜ.க இந்த்துவத்தினை முன்னிறுத்தி பலம் பெற உதவின.

இடதுசாரிகள் எந்த அடிப்படையில் முஸ்லீம்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். இஸ்லாமியநாடுகள் இடதுசாரிகளையும், கம்யுனிஸ்ட்களையும் எப்படி நடத்தின என்பதும், ஆப்கன் பிரச்சினையில் அமெரிக்காவின் உதவி பெற்று ஒரு சோசலிச அரசை ஒழித்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் என்னதான் முஸ்லீம்களை ஆதரித்தாலும், முஸ்லீம்கள் இவ்ர்களைஆதரிக்கப்ப போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம் அமைப்புகளுடன் சேர்வதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் முஸ்லீம் அமைப்புகள் இன்று அமெரிக்காவினை எதிர்ப்பது,ஏகாதிபத்தியத்தினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக இன்று அவர்கள் அமெரிக்கஅரசின் செயல்பாடுகளை,நிலைபாடுகளை பல விஷயங்களில் எதிர்க்கிறார்கள், அவ்வளவுதான்.நாளைக்கே அவர்கள் ஏகாதிபத்தியத்துடன் தேவை ஏற்பட்டால் கை கோர்த்துக் கொண்டு இடதுசாரிகளை ஒழிக்கத் தயங்க மாட்டார்கள். என்றுமே நாத்திகமும், கம்யுனிஸ்ட்களும், இறைமறுப்பும், மதங்களை கேள்விக்குள்ளாக்குவதும் இஸ்லாத்தின் பெயரில் அரசியல் நடத்தும் அமைப்புகளுக்கு உவப்பானதாக இருக்க முடியாது. மேலும் மத அடிப்படையில் ஏகாதிபத்தியஎதிர்ப்பினை கட்ட முடியாது.எனவே பர்தன் போன்றவர்கள் முட்டாள்த்தனமாக முஸ்லீம்களை ஆதரிப்பதையும், அவர்களை திருப்திப்படுத்த கருத்து சுதந்திரத்தினை நிராகரிப்பதையும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால அவர்களின் நம்பகத்தன்மை மதிப்பிழந்து விடும். வி.பி.சிங் போன்ற போலி மதச்சார்பின்மை வாதிகளைப் பற்றி எழுதத்தேவையில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான்.சிறுபான்மையினரை திருப்திப்படுத்த அவர்கள் எதை வேண்டுமானாலும் ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள்.