உயர்கல்வியில் சமூக நீதி- பா. கல்யாணி


(கடந்த வாரம் தினமணியில் வெளியான பா.கல்யாணியின் கட்டுரையை இங்கு இட்டுள்ளேன். கல்யாணி அரசுக்கல்லூரிகளில் பேராசிரியராக இருந்தவர்.மக்கள் கல்வி, பழங்குடியினர் உரிமைகள் உட்பட பல்வேறு பொதுப் பிரச்சினைகளில் அக்கறையுடன் செயல்படுபவர். அவரது கட்டுரை நுழைவுத் தேர்வு ரத்து உண்மையிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுமா என்ற கேள்வியைஎழுப்புகிறது. காலச்சுவட்டில் ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரையும் சில கேள்விகளை எழுப்புகிறது.

அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தல்,கிராமப்புற, புற நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வசதிகளை ஏற்பாடு செய்தல்,அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம்,மற்றும் பள்ளிகள் செயல்படும் விதத்தினை மேம்படுத்துதல்போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படாத போது நுழைவுத்தேர்வு ரத்தினால் மட்டும் கிராமப்புறமாணவர்கள் பயன் பெற முடியாது என்பதை தெளிவாக்க வேண்டிய நிலை இன்று இருக்கிறது.

நுழைவுத்தேர்வு ரத்தினை முன்ன்றுத்தி அரசியல் செய்த பா.ம.க இது போன்ற அம்சங்களைகருத்தில் கொண்டதா என்பதை விவரமறிந்தவர்கள் விளக்கலாம். மேலும் இது தொடர்புடையபுள்ளி விபரங்கள், தகவல்கள் தேவை. உதாரணமாக பள்ளிகளின் எண்ணிக்கை பெருக்கம் கல்வியை கிடைக்கச் செய்திருக்கிறது, ஆனால் அதில் அரசு செலவிடும் தொகை என்ன,பெற்றோர் செலவிடும் தொகை என்ன, ஒரு குடும்பத்தின் செலவில் கல்விக்காக செலவிடுவது எத்தனை சதவீதம், போன்ற புள்ளிவிபரங்கள் தேவை. இது குறித்து யாரேனும் ஆராய்ந்திருக்கக்கூடும், ஆனால் அத்தகைய ஆய்வுகளின் முடிபுகள், அறிக்கைகள் பரவலாகக் கிடைப்பதில்லை.இந்த இரு கட்டுரைகளையும் பத்திரிகை செய்திகள், ஜெயப்பிரகாஷ் காந்தி கொடுத்த தகவல்களை முன்னிலைப்படுத்துகின்றன. ஒரு தெளிவான புரிதலுக்கு இவை மட்டும் போதாது.)


Saturday February 25 2006

உயர்கல்வியில் சமூக நீதி -பா. கல்யாணி

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்திற்கும் (80%) மேற்பட்டோர் தமிழ் வழியில் பயில்பவர்கள். பெரும்பாலும் ஏழை எளிய பிள்ளைகளான இவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் (20%) குறைவானவர்களே ஆங்கில வழியில் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ மற்றும் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். சில பத்தாயிரங்களைச் செலவழிப்போர் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சில லட்சங்களைச் செலவழிப்போர் உண்டு-உறைவிடப் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கின்றனர்.

கல்வி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தியின் அறிக்கையின்படி, புதுச்சேரி உள்ளிட்டு தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 993 பேர், மருத்துவத்திற்காகக் கணக்கிடப்படும் விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மேலே கூறப்பட்ட உண்டு-உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் அதிகம் உள்ள நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 179 பேரும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் 97 பேரும், நான்கு கல்வி மாவட்டங்களைக் கொண்ட சென்னையில் 140 பேரும், 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் கூடலூர், அறந்தாங்கி, அரியலூர், முசிறி, லால்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 8 கல்வி மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளியில்கூட, 200க்கு 199 மதிப்பெண் எவரும் பெறவில்லை. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களில் இருந்து, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், கிராமப்புற பள்ளிகளிலோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலோ, தமிழில் பயின்று வரும் பெரும்பான்மையான மாணவர்க்கு, மருத்துவக் கல்லூரியிலோ அல்லது போட்டியில் முதலிடம் வகித்து வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கப் போவதில்லை.
இந்நிலையில் விகிதாசார ஒதுக்கீடுபடி தமிழ்வழியில் பயில்வோருக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து, அதில் 25% கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால்தான் உயர்கல்வியில் உண்மையான சமூக நீதி கிட்டும்.

மேல்நிலைக் கல்வி - பிளஸ் டூ என்பது இரண்டாண்டு தொடர் படிப்பாகும் ( Two Year Course ). இப்பாடத்திட்டத்தின்படி முதல் ஆண்டு ஒரு பொதுத்தேர்வும், 2-வது ஆண்டு ஒரு பொதுத்தேர்வும் நடத்தப்பட வேண்டும். அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இரண்டாண்டுகளும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகளில் முதல் ஆண்டில் (11-வது வகுப்பில்) இருந்தே இரண்டாவது ஆண்டுக்கான பாடத்தை நடத்தி வருகிறார்கள். அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் ஓர் ஆண்டு பயின்று எழுதும் பொதுத்தேர்வை, மெட்ரிகுலேசன் மற்றும் உண்டு-உறைவிடப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இதனால் இப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. இவ்வாறு 11-வது வகுப்பில் அந்த வகுப்பிற்குரிய பாடத்தை நடத்தாததால் மேற்படி மாணவர்கள் உயர்கல்விக்குப் போகும்போது பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு தேர்ச்சி 50 விழுக்காட்டுக்கும் குறைந்து விடுகிறது.

புறக்கணிக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்: தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி, ஏன் கல்லூரி வரையிலும் ஆசிரியர் பற்றாக்குறையால் இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஒன்றையே முதன்மையாகக் கருதும் ஆளும் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, கல்வி நலன் பற்றி சிந்திப்பதில்லை. பேருந்துகளில் இலவசக் கட்டணச் சலுகை உள்ள நிலையிலும், அனைத்து பிளஸ் டூ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு செலவாவதோ ரூ. 112 கோடி. இதைக் கொண்டு ரூ. 5,000 சம்பளத்தில் சுமார் 20,000 ஆசிரியர்களை நியமிக்க முடியும்.

மேல்நிலைக் கல்வியில் இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தாததால், எஸ்.சி., எஸ்.டி மாணவர்களின் உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பினை பல மாணவர்கள் இழக்கிறார்கள். இது தொடர்பாக 1993-ஆம் ஆண்டு அப்போதைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் பரிந்துரை அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை ஓர் அரசாணை வெளியிட்டது. அரசு ஆணை எண் 42, நாள் 12-01-1994. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஒவ்வொரு பிரிவிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். இது அனைத்து நிர்வாகங்களுக்கும் (சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்டு) பொருந்தும்.

2 மறுமொழிகள்:

Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

Ravi,
Thanks for posting Kalyani's article. Here is a news on seminar calling for examination reform. I don't know whether the papers presented in this kind of seminars are published. Few months back there was a news that PMK organized a seminar on alternative education policy. I contacted a friend in vain to get proceedings of this conference if they were published.

11:15 AM  
Blogger sivagnanamji(#16342789) மொழிந்தது...

Prof.kalyani should be congratulated for having initiated a worthy discussion
i am afraid a day will come when there will not be any govt school or aided school
what is the use in giving free books, noonmeals, toothpowder,uniforms,cycles etc without giving them good teachers?
govt is more interested in the expansion of TASMARKS than the growth of education

1:40 PM  

Post a Comment

<< முகப்பு