விடுதலைச் சிறுத்தைகள்-தலித் அரசியல்

இந்த வார ஆனந்த விகடனில் சிங்கம்,புலி,சிறுத்தை என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் விடுதலை சிறுத்தைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழில் பத்திரிகைகள் அடிக்கடி திருமாவளவன் படத்தினை வெளியிடுகின்றன.அவரது பேட்டிகளும் வெளியாகின்றன.ஆனால் தலித் அரசியல் குறித்தோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தோற்றம்,வளர்ச்சி, கருத்தியல் குறித்தோ விரிவாக எழுதப்பட்ட அல்லது விவாதிக்கின்ற எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன ?. தலித் அரசியல் அதற்கு உரிய முக்கியத்துவத்தினை இந்தப் பத்திரிகைகளில் பெறுவதில்லை. பகுஜன் சமாஜ் பார்ட்டி என்கிற பி.எஸ்.பி உ.பி யில் பெரிய அரசியல் சக்தி.ஆனால் தமிழில் அதை விட மாயாவதி குறித்த செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன. இங்கு இருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் குறித்தே உருப்படியாக எழுதாதவர்கள் உ.பி அரசியல் குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

தமிழில் தலித் முரசு போன்ற பத்திரிகைகள் இருந்தாலும் அவை பரவலாகக் கிடைப்பதில்லை, படிக்கப்படுவதில்லை. இந்த பத்திரிகை இந்த குழு அல்லது கட்சியின் பத்திரிகை என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன என்று நண்பர்கள் கூறுகிறார்கள். நான் அவதானித்த அளவில் இது உண்மை என்றே கருதுகிறேன்.

அப்படியானால் விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கத்தினைப் பற்றி ஒரு விரிவான புரிதலைப்எப்படிப் பெற முடியும். அவர்கள் வெளியிடும் வெளியீடுகள் மட்டும் போதுமா, திருமாவளவன் எழுதியுள்ளதைப் படித்தால் போதுமா. தமிழக தலித் அரசியல் பிண்ணனியில் இவ்வியக்கத்தினைஎப்படிப் புரிந்து கொள்வது. இந்த கேள்விக்கு விடை இருக்கிறது. ஆனால் அது தமிழில் இல்லை.

பிரிட்டனில் உள்ள ஆய்வாளர் ஒருவர் தமிழ் நாட்டில் கள ஆய்வு செய்து, தமிழக தலித் அரசியலை ஆராய்ந்து, குறிப்பாக விடுதலை சிறுத்தை இயக்கத்தின் தோற்றம், செயல்பாடுகளை, பலம், பலவீனங்களை குறிப்பிட்டு ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

UNTOUCHABLE CITIZENS: Dalit Movement and Democratisation in Tamil Nadu by Hugo Gorringe. Sage, New Delhi, 2005.

இந்த மாத செமினார் இதழில் அதற்கு நூல் மதிப்புரை வெளியாகியுள்ளது. இந்த நூல் வெளியானதை நான் அறிவேன். இந்தியாவில் இருந்திருந்தால் குறைந்தபட்சம் அதை புரட்டிப் பார்த்து , முடிந்தால் சில பகுதிகளையாவது வாசித்திருப்பேன்.

இவர் எழுதியுள்ள கட்டுரை , அதுவும் தமிழக தலித் அரசியல் பற்றித்தான், அண்மையில் வெளியாகியுள்ளது.அதை படித்தேன். தலித் அரசியல் தலித் உள்ப் பிரிவுகள் ரீதியாகப்பிரிந்திருப்பதை குறிப்பிடும் இவர் அதை மீறி தலித் அரசியல் செயல்பட முடியுமா,செயல்படமுடியும் என்றால் எந்த அடிப்படையில் என்பதை விவாதிக்கிறார். அடையாள அரசியல்,அடையாளப்படுத்தும் அரசியலாக மாற்றம் பெறுவது குறித்த தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

‘You build your house, we’ll build ours’: The Attractions and Pitfalls of Dalit Identity Politics-
Hugo Gorringe-Social Identities-Vol. 11, No. 6, November 2005, pp. 653 -672

ஆனால் தமிழில் லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளும் சரி, 5000 அல்லது 6000 விற்கும்சிறு / இடைநிலைப் பத்திரிகைகளும் சரி இவற்றையெல்லாம் தமிழில் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த நூல் இந்தியாவில் கிடைத்தாலும் இத்தகைய நூல்கள் இருப்பது குறித்த பிரக்ஞை இவர்களுக்கு இல்லை. பெரும் பத்திரிகைகளுக்கு திருமாவின் பேட்டி, புகைப்படம், அரசியல் செய்திகள் போதும்.சிறு / இடைநிலைப் பத்திரிகைகளுக்கு (தலித் முரசு போன்றவை நீங்கலாக) தலித் இலக்கியத்தில் இருக்கும் அக்கறை தலித் அரசியலில் இல்லை. இதனால் தமிழில் தலித் அரசியல் குறித்த புரிதல் வாசகருக்கு கிட்டதட்ட கிடைப்பதே இல்லை. அவர்களாகத் தேடி ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்கள், கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தலித் டைரி என்ற நூல் குறித்தும், தலித் அரசியல் போக்குகள் குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். அகில இந்திய அளவில் தலித் இயக்கங்கள்,கட்சிகள் வலுவடைந்தால் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் அவை பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. கடந்த பதினைந்து அல்லது இருபதாண்டுகளில் தலித் அரசியல் குறித்து ஏராளமாக எழுதப்பட்டுள்ளது, விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறு பகுதி கூட தமிழில் அறிமுகம் செய்யப்படவில்லை. இவையெல்லாம் தமிழில் இல்லை என்ற உணர்வு கூட இங்கு இல்லை என்றே தோன்றுகிறது.

5 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test

5:30 PM  
Blogger PKS மொழிந்தது...

Ravi,

Why dont you please write about it. Or if time permits, translate this particular book about which you read the review?

Thanks and regards, PK Sivakumar

5:17 PM  
Blogger John Peter மொழிந்தது...

HOW I GET THE BOOK

7:18 AM  
Blogger John Peter மொழிந்தது...

thanks mr.ravi.
how i get the book...

7:19 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

That book should be available in flipkart, amazon on line while you can try at book shops like Higginbothams or with sage publication

11:26 AM  

Post a Comment

<< முகப்பு