நம்பிக்கைகள்,விழுமியங்கள்,முரண்பாடுகள்


ஐரோப்பாவில் சில கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டதன் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்ப்பு குறித்து வலைப்பதிவுகளில் விவாதம் எழுந்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தில் ஐரோப்பிய அரசுகள் தலையிடாது. கருத்து சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்றவற்றில் அரசுகள் எந்த அளவு தலையிட முடியும் ?. அப்பத்திரிகைகள் செய்தது சட்ட விரோதம் என்றால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.அல்லது பொய் செய்தி வெளியிட்டன, வதந்திகளைப் பரப்பின என்றால் நடவடிக்கை எடுக்கலாம்.அவ்வாறு இல்லாத போது அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்திரிகைகள் மதிக்க வேண்டும் என்று கோருவது நியாயமென்றால் பத்திரிகைகளின்கருத்து சுதந்திரத்தினை இஸ்லாமியரும் மதிக்க வேண்டும். இருதரப்பாரும் பேச்சு வார்த்தை மூலம் ஒரு புரிதலை எட்ட முடியும். ஆனால் பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது. இஸ்லாமியர் நார்வே,டென்மார்க் நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வாங்க மறுக்கலாம். அதற்கு பதிலடியாக அரசுகள் இதை ஊக்குவித்தால் அந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை ஐரோப்பாவில் உள்ள நுகர்வோர் வாங்க மறுக்கலாம்.

சிக்கலின் மூலம் ஐரோப்பிய சமூகங்களில் உள்ள விழுமியங்களுக்கும், இஸ்லாமியர் தங்கள் விழுமியங்கள் என்று கருதுவதற்கும் உள்ள முரண்பாட்டில் இருக்கிறது. ஐரோப்பிய அரசுகள்வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்யும் அதே சமயத்தில் கருத்து சுதந்திரம், தனி நபர் உரிமைகளையும் உறுதி செய்தாக வேண்டும். ஒரு பிரிவினரின் கோரிக்கைகளை ஏற்று தனி நபர் உரிமைகள், கருத்து சுதந்திரம், மனித உரிமைகளை அரசுகள் நிராகரிக்க அல்லது மறுதலிக்கமுடியாது. ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகள்தனி நபர் உரிமைக்கும், கருத்து சுதந்திரத்தினையும் பெரிதும் மதிப்பவை. ஏசு நாதரை கிண்டல் செய்து எழுதுவதை, படம் வரைவதையும் தடை செய்யாதவை.

ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் கருத்து சுதந்திரமும், மத வழிபாட்டு சுதந்திரமும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையானவற்றில் நாத்திகம் பேசலாம்,கடவுள் இருக்கிறாரா என்று கேட்கலாம், மத நம்பிக்கைகளை விமர்சிக்கலாம். இஸ்லாமிய நாடுகளில் இறை நிந்தனை என்பது மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய 'குற்றமாக' இருக்கிறது.

இஸ்லாத்தின் விழுமியங்கள் என்று முன் வைக்கபடும் சில, இத்தகைய தாராளவாத விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களின் அடிப்படை நம்பிக்கைகளுக்கும், சட்டம் உறுதி செய்யும் உரிமைகளுக்கும் முரணாக இருப்பதே பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

இது இரண்டு தளங்களில் வெளிப்படுகிறது. ஒன்று இஸ்லாமிய சமூகங்களில் உள்ள சீர்திருத்தவாதிகள், தாராளவாதிகள் முன் வைக்கும் இஸ்லாம் குறித்த கருத்துக்கள், விழுமியங்கள், மாற்றங்களுக்கும் , பழைமைவாதக் கண்னோட்டங்கள் கொண்டோர் முன் வைக்கும்இஸ்லாம் குறித்த கருத்துக்கள், விழுமியங்களுக்கும் இடையே உள்ள முரணாக.இத்தகையமுரண் ஏற்படும் போது பழைமைவாதிகள் சீர்திருத்தவாதிகளை பலவிதங்களில் அச்சுறுத்துகிறார்கள்,அவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.கொலை மிரட்டல்கள், சமூக பகிஷ்கரிப்புகள் என்று இந்த அச்சுறுத்தல் செய்யப்படுகிறது.

இன்னொருதளம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனி மனித உரிமைகள், கருத்து சுதந்திரம்,ஜனநாயக உரிமைகளுக்கும், இஸ்லாமிய விழுமியங்கள் என்று முன் வைக்கப்படுபவற்றுக்கும்உள்ள முரணாக.ஐரோப்பிய சமூகம் இந்த உரிமைகள், சுதந்திரங்களை நெடிய போராட்டத்திற்குப் பின் பெற்றுள்ளது.அவற்றை உறுதி செய்வதில். நடைமுறைப்படுத்துவதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இஸ்லாமிய விழுமியங்கள் என்று முன் வைக்கப்படுபவை இவற்றிற்கு எதிராகஇருக்கும் போது முரண்பாடுகள் எழுகின்றன.உதாரணமாக இந்த நாடுகளில் மதம் என்பதுவிமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. தற்பால் உறவுகளை அங்கீகரிக்கிற, பெண்கள் பொதுவாழ்விலும், அரசியலிலும் பெருமளவில் பங்கேற்கிற ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய பழமைவாதிகள்,(இவர்கள் ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள், உலகின் பிறபகுதிகளிலும் இருக்கிறார்கள்)கண்ணோட்டத்தில் ஒழுக்கம் கெட்ட (ஒழுக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு வாழும் ஐரோப்பிய வாழ்க்கைக்கு நாம் செல்லப் போகிறோமா?) சீரழிந்த சமூகங்களாகத
சித்தரிக்கப்படுகின்றன.

இப்போதுள்ள போக்கு தொடருமானால் இந்த முரண்பாடுகள் இன்னும் கூர்மையடைந்து சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

16 மறுமொழிகள்:

Blogger ravi srinivas மொழிந்தது...

test

10:43 AM  
Blogger சிறில் அலெக்ஸ் மொழிந்தது...

ரவி,
நல்லா சொல்லியிருக்கீங்க. ஒருவர் மேரி பிச்சை கேட்பது போல கவிதை எழுதியிருக்கிறார் அது நல்ல கருத்த சொல்ரதுக்குன்னு வாதாடுறார், கவிஞனின் கற்பனை அதை தடுக்கக் கூடாதுன்னு சொல்றார் ஆனா நபியை படம் போடக்கூடாதுன்றார்?

எப்படி கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை சிலருக்கு முக்கியமோ அதெபோல கடவுள் இல்லை என்ற நம்பிக்கை சிலருக்கு முக்கியம்.

கருத்து சுதந்திரம் பறிபோறதுன்னா என்னனு அதை அனுபவிக்கும்போதுதான் தெரியவரும்.

உங்கள்பக்க நியாயங்கலை எடுத்துச்சொல்லமுடியாதபோது

உங்கள் மேலதிகாரியை கேள்விகேட்கமுடியாதபோது

இதுதான் நல்லது என உங்களுக்கு நிச்சயமாய் தெரிகிறது ஆனால் அதை சொல்லமுடியாமல் போனால்?

11:21 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

Elegantly putforth. பார்த்து எழுதுங்க ரவி... உங்களையும் பகிஷ்கரித்து விடப் போகிறார்கள்.

இது குறித்து என்னுடைய கேள்விகள், மனதுக்குள் குடையும் எண்ணங்கள் :-)

1. பனிரெண்டு கார்ட்டூன்களில் ஓன்றிரண்டு படங்கள் இஸ்லாமியரின் மனம் புண்படுமாறு இருந்தது. தலையில் வெடிகுண்டுடன் உடைய சித்திரத்தையும், நாஜி ஸ்வஸ்திக்கையும் இஸ்லாமின் பிறையையும் ஒப்பிடும் படத்தையும் நீக்கி விட்டால் மற்றவை துவேஷத்தை வளர்க்குமாறு இல்லை.

2. உற்றார் உறவினரை (அக்கா தங்கச்சியோடு பிறக்கலை ;-) என்பது போல்) இவ்வாறு சித்தரித்தால் மனம் புண்படும். மானநஷ்ட வழக்கு தொடுக்கலாம். அதே போல் டென்மார்க்கின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏன் வழக்கு போடக் கூடாது?

3.ஃப்ரான்ஸ் போன்ற பிற நாடுகளில் குறிப்பிட்ட கார்ட்டூன்களை நேற்று மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள்.

* வெந்த புண்ணில் வேல்.

* அல்லது இஸ்லாமியர்கள் தடுக்கிறார்களே என்னும் கோபத்தினால், 'உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள்' என்னும் சவடால்.

* அல்லது கிறித்துவ பழமைவாதிகளின் வெறுப்பின் வெளிபாடு.

12:18 PM  
Anonymous kavi மொழிந்தது...

ஒரே ஒரு வார்த்தையை out of context ஆகப் பிடித்துக் கொண்டு தொங்குபவர் தான் நீங்கள் என்பது இந்தப் பதிவில் நீங்கள் கொடுத்த சுட்டியைப் படித்தால் தெரிகிறது. இது முதல் முறை இல்லை என்பதும் பலமுறை உங்கள் பதிவைப் படித்த எனக்குத் தெரியும்.

1:33 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரவி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். dogmatic ஆக எதையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு. ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டில் குடியேறியவர்கள் அந்நாட்டில் நிலவும் மதம், பேச்சு சுதந்திரங்களை ஏற்கும் அதே சமயத்தில் தம் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துகளையும் ஏற்கத்தான் வேண்டும். டென்மார்க் அதிபர் சொன்னது சரியே. பத்திரிகைகளில் என்ன எழுதவேண்டுமென்று சொல்வது அவர் வேலையில்லை.

டென்மார்க்கிற்கு எதிராக சவூதி அரேபியாவில் மக்கள் புரட்சி என்றெல்லாம் சொல்வது இன்றைய globalised உலகில் எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை. எண்ணெய் வளமொன்றை மட்டுமே வைத்து இனி பேரம் பேச முடியாது. வெனிஸுவேலா இருக்கிறது. ரஷ்யா இருக்கிறது. இன்னும் பல நாடுகள். மேலும் இதுபோல சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அரேபிய அரசுகள் அலட்டிக்கொள்ளுமாயின் அது அவர்களுக்கே தீமையாய் முடியும். ஐரோப்பியர்களுக்கல்ல.

Alternative Energy வேண்டும் என்று புஷ் கூட சொல்லிவிட்டார் (எப்போது என்பது இறைவனுக்கே வெளிச்சம்!). சவூதி மேல் அமெரிக்கா அளவிற்குக் கூட ஐரோப்பாவிற்கு பற்றுதல் கிடையாது. Alternative Energy பாலிஸி உருப்பெருமாயின் இழப்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கே! மேலும், சவுதி போன்ற நாடுகள் தங்களின் இறக்குமதிகளுக்கு வெளிநாடுகளையே பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை. சும்மா ஆர்வப்பட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டிவிட்டு அள்ள முடியாத நிலைக்கு அந்த சர்வாதிகார அரசுகள் தள்ளப்படும்.

இப்பிரச்சனைக்கு வேண்டுமானால் பத்திரிகைகள் மன்னிப்பு கேட்கலாம். அதுவும் இவ்வளவு நிகழ்ந்த பின் எவ்வாறு சாத்தியம் என்று தெரியவில்லை.


பாஸ்டன் பாலா,
பிரான்ஸ் மட்டுமல்ல. ஐரோப்பா முழுவதும் பல்வேறு பத்திரிகைகள் பிரசுரித்திற்கின்றன. ஐரோப்பிய பத்திரிகைகள் செய்வதை நான் வரவேற்கிறேன். மதம் என்ற பெயரில் பத்திரிகைகளை மட்டுறுத்த முடியுமாயின், நாளை என்னைப் பற்றித் தப்பாக எழுதினார்கள் என்றுக்கூட அவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கமுடியும். இந்த சுதந்திரத்தை பல போராட்டங்களுக்கு பிறகு பெற்றுள்ளனர். இழக்க அவ்வளவு எளிதில் சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை.

1:46 PM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

பாஸ்டன் பாலா,

நன்கு சொல்லியுள்ளீர்கள். நானும் பல தளங்களில் இது பற்றிய செய்தியைப் படித்து வருகிறேன்.

கார்டூனுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என்று தான் நானும் முதலில் நினைத்திருந்தேன். நபிகளை படமாக வரையக் கூடாது எனும் முஸ்லீம்களின் நம்பிக்கையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கலாம் என்றுதான் நானும் மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன்.

பிறகுதான் புரிந்தது காரணம்

அவைகள் நபிகளை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வரையப்பட்டுள்ளது என்று.

தாங்கள் கூறியுள்ள அந்த இரு கார்டூன்களுக்கும் விவேகத்தின் அடிப்படையில் வெளியீட்டாளர்களால் காரணம் கூற இயலாது என்று நான் நினைக்கிறேன். அதிகபட்சமாக அவர்களால் 'அது என் நாட்டிலிருக்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு உட்பட்ட செயல்' என்று தான் கூற முடியுமே தவிர அந்த கார்டூன்களின் நோக்கம் யாது என்று அவர்களால் கூற இயலாது. அவைகள் கருத்துப்-படம் என்றால் ஏதாவது உண்மைக் கருத்தினைத் தாங்கியதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்கு காழ்புணர்வே காரணம் என்று நான் கருதுகிறேன்.

நான் இந்த இடத்தில் ரவியிடம் கூற விரும்புவதும் இதுதான்.

'ஏசுவைப் பற்றியும் அவ்வாறு எங்களால் வரையமுடியும்' என்று பத்திரிக்கையாளர்கள் கூறுவது இச் செயலுக்கான பதிலாகாது.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களுக்கான உரிமை மறுக்கப் படுகிறது என ரவி கூறுவதை நான் ஆமோதித்தாலும் அவர்கூறும் பிரச்சனை இந்த கார்டூன் விவகாரம் பற்றிய அவரது முதல் பத்தியிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அச்சுதந்திரமின்மை அந்த இரு கார்டூன்களையும் வரைந்த செயல்களை அங்கீரிக்கக் கூடியதல்ல. மேலும் அச்சுதந்திரங்களை மறுக்கும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமல்லாத மற்ற நம்பிக்கையுடையவர்களின் மனம் புண்படும்படியான, காழ்புணர்வினைத்தவிர எந்தவித கருத்து/காரணம் தங்கியிராத கார்டூன்களை அனுமதிக்காமல் உள்ளதையும் எண்ணுகிறேன். மற்ற மதங்களை பகிரங்கமாக வழிபடும் உரிமையை மறுக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளும் நான், மேற்கத்திய நாடுகளிலும் உரிமை அவ்வளவாக இல்லை என்றே நினைக்கின்றேன். உதாரணத்திற்கு இந்த பிபிசி தொடுப்பினைப் பார்வையிடவும். ஆனால் அரசாங்கமே இத்தகைய உரிமைமீறல்களில் ஈடுபடுவதை (பள்ளிவாசல் கட்ட உரிமை மறுத்தல் போன்ற செயல்கள்) ஆஸ்டிரேலியா போன்ற நாடுகளில் நடப்பதாக அவ்வபோது பிபிசி போன்ற இஸ்லாமல்லாத இணையதளங்களில் அவ்வப் போது படித்துள்ளேன்.

அடுத்து தலைத்-துணிப் (head scarf) பற்றிய பிரச்சனையும் உண்டு. இது பிரிட்டன், ப்ரான்சு, போன்ற நாடுகளில் சகஜம். இதை வழிபாட்டு உரிமை மறுப்பு என்று கொள்வதைவிட மாற்றுp பண்பாடு மறுப்பு (clash of civilization) எனக் கொள்ளலாம். இதனால் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்கள்மீது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப் படுகிறது.

ஆனால் ஒட்டு மொத்ததில் கார்டூன் பிரச்சனையைப் பற்றிபேசும் இந்த இடத்தில் வழிபாட்டு-உரிமையையும் கருத்துச் சுதந்திர உரிமையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது.

இது போன்ற கருத்துச்-சுதந்திரம் ஒத்த மற்ற சம்பவங்களைப் பற்றியும் பேச ரவி என்னை அனுமதிப்பாராக.

இவ்வாறே விவேகத்தினால் புரிந்துக் கொள்ள முடியாதவாறு நபிகளின் மனைவியரைப் பற்றி விரசமாக சல்மான் ருஷ்டி எழுதினார். அதற்காக அவர் மீது விதிக்கப் பட்டுள்ள ஃபத்வா மீது மாற்று கருத்து பலருக்கும் உண்டென்றாலும் அவரது அந்த செயல் கண்டிக்கத்தக்கது, ஏனெனில் அது நியாயத்துடன் புரிந்து கொள்ள முடியாத ஒரு செயல்.

இது போல மற்றொரு செய்தி, அனைவரும் அறிந்த வான்-காஃப் அவர்களின் கொலை. அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளி தண்டனைக் குறியவன் என்பதில் எனக்கு கருத்து வேற்றுமைக் கிடையாது. ஆனால் இந்த கொலையைத் தன் காழ்புணர்வினால் தூண்டியது அவரும் அவரது பெண் நண்பியான் அயான் ஹிர்சி அலியும் தான் என கொள்ள முடிகிறது. அவர்கள் எடுத்த திரைப் படத்தில் வரும் காட்சியான ஒரு நிர்வாணப் பெண் தன் உடலில் குர்ஆன் வாசகங்களை எழுதிக் கொண்டு வருவது விவேகத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளமுடியாத செயல். இதற்கு நெதர்லாந்து அரசு அவர்களைக் கண்டித்திருக்குமானால் இந்த கொலைக் குற்றத்திற்கு தூண்டப்படும் வெறித்தன்மைக்கு அந்த மொராக்கோ நாட்டு மனிதன் ஆளாகியிருக்க மாட்டான் எனக் கருதுகிறேன். அவர்கள் எடுத்த திரைப்படத்தின் நோக்கம் இஸ்லாத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமையைப் படம் பிடிப்பதற்காக. ஆனால் அந்த நோக்கம் தவறி காழ்புணர்வில் அவர்கள் நுழைந்துவிட்டனர். வான்-காஃப் அவர்கள் இறந்தாலும் அயான் ஹிர்சி அலி காழ்புணர்வினைத் தொடர்வார் என்றே தோன்றுகிறது. இங்கே பார்கவும்.


கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடந்த மற்றொரு செய்தியையும் நான் பகிர்ந்துக் கொள்ள நான் விழைகிறேன்.

இத்தாலிய நாட்டு பெண் எழுத்தாளரின் நிறவெறிப் புத்தகத்தினைத் தடுக்க முஸ்லீம்கள் வழக்குத் தொடர்ந்த பின்னும், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, புத்தகத்தினை அனுமதித்து விட்டனர். அந்த புத்தகத்தில் அவர், "முஸ்லீம்கள் எலியைப் போல புளுத்துவிட்டனர்; தினமும் ஐந்து வேளைத் தொழுது தன் ஆசனவாயை அந்தரத்தில் மிதக்கவிடுகின்றனர்" என்று கூறியிருந்தார். இருப்பினும் கருத்துச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி அந்த புத்தகம் அனுமதிக்கப் பட்டுவிட்டது. இங்கே பார்க்கவும்.

ஆகவே கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், கூறப்படும் கருத்துக்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று வரைமுறையும் விதிக்க வேண்டும்.

மனிதர்களுக்கும் சுதந்திரம், உரிமை, கண்ணியம் ஆகியவைகள் அனைத்தும் தேவை. உரிமை மற்றும் கண்ணியத்தைக் குலைக்கும் சுதந்திரத்தையும், சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமைகளையும் ஒருவரோ ஒரு அமைப்போ கோரக்கூடாது.

3:52 PM  
Blogger நல்லடியார் மொழிந்தது...

மேற்கத்திய நாடுகளின் கருத்துச் சுதந்திரம் என்பது இரட்டை வேடமே. தெய்வ நிந்தனை செய்வதையும் பிறரின் தனி மனித நம்பிகையில் அனாவசியமாக தலையிடுவது கருத்துச் சுதந்திரம் என்பது முட்டாள்தனம்!

இயேசுவை கேலியாக வரைவதற்கு அவர்களின் தலைமைப் பீடம் வேண்டுமானால் அனுமதிக்கலாம். அதை பார்த்துக்கொண்டு கிறிஸ்தவர்களும் சும்மா இருக்கலாம். ஏனென்றால் ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டச் சொல்லும் அன்பு மார்க்கம் அது. ஆனால் இதே அளவுகோலை முஸ்லிம்களிடமும் எதிர்ப்பார்ப்பது அறியாமை.

ஒரு பக்கம் கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்க் கொள்ளும் இவர்கள்தான் சாக்ரடீஸீன் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து விஷம் கொடுத்தார்கள். உலகம் உருண்டை என்ற கருத்தை சொன்னவரையும் சிறையிலடைத்த அன்பே கடவுளானவர்கள் தான் இந்த போலி சுதந்திரவாதிகள்.

தெய்வ நிந்தனை செய்பவனை கொல்ல வேண்டும் என்பது பைபிளில் சொல்லப் பட்டிருக்கிறது. இங்கு நன்றாகக் கவனித்தால் அது கிறிஸ்தவ தெய்வ நிந்தனை என்றுதான் அர்த்தம். மற்ற தெய்வ நிந்தனைகளுக்கு மறுபெயர் கருத்துச் சுதந்திரம்.

4:03 PM  
Blogger aathirai மொழிந்தது...

கன்னி மேரியின் உடலில் காண்டம் சுற்றிய சிலைகள்
கூட இருக்கிறது. இங்கு 'daily show' வில் பாரபட்சமில்லாமல்
உலகில் உள்ள அத்தனை மதங்களும் கிண்டலடிக்கப்படுகிறது.

4:22 PM  
Blogger நிலா மொழிந்தது...

ரவி,

நல்ல நடுநிலையான கட்டுரை. இப்படி எழுதும் தைரியம் பலருக்கு வருவதில்லை.

6:34 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks for the comments.I will try to respond later.

10:08 AM  
Blogger Samudra மொழிந்தது...

ஷியா பிரிவு முஸ்லிம்களிடம் இப்படி ஓவிய கட்டுபாடு எதுவும் இல்லை என்பதே உன்மை.

வஹாப்பி பிரிவு அரபு influenced இஸ்லாமில் மட்டுமே இந்த கூத்து!

10:10 AM  
Blogger Samudra மொழிந்தது...

Denmark is a net exporter of oil.

So, the usual Arabic Oil threatening wont work.

Thank heavens.

10:11 AM  
Blogger மு மாலிக் மொழிந்தது...

நான் எழுதிய பின்னுட்டம் சற்று நீண்டுவிட்டதால், அதனையே சற்று மாற்றி ஒரு தனிபதிவாக இட்டேன். எனவே, தாங்களுக்கு அந்த பின்னூட்டம் மிகப் பெரியதாக தோன்றினால் அழித்து விடலாம். ஒரே செய்தி பல இடங்களில் காணப்படுவதில் படிப்பவர்களுக்கு வெறுப்பு நேர வாய்ப்பு உள்ளது.

10:44 AM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

ரவி, தெளிவான நல்ல பதிவு.

4:10 AM  
Blogger AATHAVAN மொழிந்தது...

சில கேள்விகள் எனக்குண்டு:
1). கருத்துச்சுதந்திரத்தின் அளவு/எல்லை எது? என்ன...?
2). டென்மார்க்/ஐரோப்பியர்களிடம் தற்போது காணப்படுவது வீம்பா...../கருத்துச்சுதந்திரத்தை காக்க வேண்டியொரு கடமையுணர்வா...?
3). முசுலிம்கள் (ஒரு அமைப்பாக) இதுபோல பிறரிடம் நடந்துள்ளனரா...? பரஸ்பரம் இதுபோல ஒவ்வொரு மதத்தாரும் இனத்தாரும் நடந்து கொள்ள நினைத்தால் அது முறையா.....?
4). கருத்து சுதந்திரத்திற்காக மனித நேயத்தை காவு கொடுப்பதாக அது ஆகிவிடாதா?
தனிமனிதனுக்கோ அல்லது ஒரு மனித திரளுக்கோ மனக்காயம் ஏற்படுத்துவதும் அதை மென்மேலும் கிளறுவதும் நம்முடைய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறதா...../ கருத்து சுதந்திரத்தின் மீதுள்ள பிரேமையையா......?
மூன்றாம் கேள்விக்கு "ஏனில்லாமல்..? என்று ஆவேசமாக கேட்டு முசுலிம் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதையையோ, ஒரு ஓவியர் வரைந்த ஓவியத்தையோ காட்டுவது அறிவுடமையாகாது.
(அக்கவிதையில் 'இலக்கிய புரிதல்' பிரச்னை உள்ளவர்களே குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.)
ஓவியத்தை பொறுத்தவரை, அதை முசுலிம்களே எதிர்த்துள்ளார்கள்.(பார்க்க: அபூமுஹை என்பரின் பதிவு)
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வீம்புகளை வக்கிரங்களை அரங்கேற்றுவதை எப்போது நிறுத்திக்கொள்ளப்போகிறோம். ஆக்கப்பூர்வமான விவாதங்களை விட்டுவிட்டு 'நான் சொல்வது தான் சரி' என்று 'ஈகோ'வில் ஏன் சிக்கி சுழல்கிறோம்? ஏன்? ஏன்?

3:56 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

http://news.yahoo.com/s/ap/20060205/ap_on_re_mi_ea/prophet_drawings

1:30 PM  

Post a Comment

<< முகப்பு