உயர்கல்வியில் சமூக நீதி- பா. கல்யாணி


(கடந்த வாரம் தினமணியில் வெளியான பா.கல்யாணியின் கட்டுரையை இங்கு இட்டுள்ளேன். கல்யாணி அரசுக்கல்லூரிகளில் பேராசிரியராக இருந்தவர்.மக்கள் கல்வி, பழங்குடியினர் உரிமைகள் உட்பட பல்வேறு பொதுப் பிரச்சினைகளில் அக்கறையுடன் செயல்படுபவர். அவரது கட்டுரை நுழைவுத் தேர்வு ரத்து உண்மையிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுமா என்ற கேள்வியைஎழுப்புகிறது. காலச்சுவட்டில் ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரையும் சில கேள்விகளை எழுப்புகிறது.

அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தல்,கிராமப்புற, புற நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வசதிகளை ஏற்பாடு செய்தல்,அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம்,மற்றும் பள்ளிகள் செயல்படும் விதத்தினை மேம்படுத்துதல்போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படாத போது நுழைவுத்தேர்வு ரத்தினால் மட்டும் கிராமப்புறமாணவர்கள் பயன் பெற முடியாது என்பதை தெளிவாக்க வேண்டிய நிலை இன்று இருக்கிறது.

நுழைவுத்தேர்வு ரத்தினை முன்ன்றுத்தி அரசியல் செய்த பா.ம.க இது போன்ற அம்சங்களைகருத்தில் கொண்டதா என்பதை விவரமறிந்தவர்கள் விளக்கலாம். மேலும் இது தொடர்புடையபுள்ளி விபரங்கள், தகவல்கள் தேவை. உதாரணமாக பள்ளிகளின் எண்ணிக்கை பெருக்கம் கல்வியை கிடைக்கச் செய்திருக்கிறது, ஆனால் அதில் அரசு செலவிடும் தொகை என்ன,பெற்றோர் செலவிடும் தொகை என்ன, ஒரு குடும்பத்தின் செலவில் கல்விக்காக செலவிடுவது எத்தனை சதவீதம், போன்ற புள்ளிவிபரங்கள் தேவை. இது குறித்து யாரேனும் ஆராய்ந்திருக்கக்கூடும், ஆனால் அத்தகைய ஆய்வுகளின் முடிபுகள், அறிக்கைகள் பரவலாகக் கிடைப்பதில்லை.இந்த இரு கட்டுரைகளையும் பத்திரிகை செய்திகள், ஜெயப்பிரகாஷ் காந்தி கொடுத்த தகவல்களை முன்னிலைப்படுத்துகின்றன. ஒரு தெளிவான புரிதலுக்கு இவை மட்டும் போதாது.)


Saturday February 25 2006

உயர்கல்வியில் சமூக நீதி -பா. கல்யாணி

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்திற்கும் (80%) மேற்பட்டோர் தமிழ் வழியில் பயில்பவர்கள். பெரும்பாலும் ஏழை எளிய பிள்ளைகளான இவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் (20%) குறைவானவர்களே ஆங்கில வழியில் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ மற்றும் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். சில பத்தாயிரங்களைச் செலவழிப்போர் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சில லட்சங்களைச் செலவழிப்போர் உண்டு-உறைவிடப் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கின்றனர்.

கல்வி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தியின் அறிக்கையின்படி, புதுச்சேரி உள்ளிட்டு தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 993 பேர், மருத்துவத்திற்காகக் கணக்கிடப்படும் விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மேலே கூறப்பட்ட உண்டு-உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் அதிகம் உள்ள நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 179 பேரும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் 97 பேரும், நான்கு கல்வி மாவட்டங்களைக் கொண்ட சென்னையில் 140 பேரும், 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் கூடலூர், அறந்தாங்கி, அரியலூர், முசிறி, லால்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 8 கல்வி மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளியில்கூட, 200க்கு 199 மதிப்பெண் எவரும் பெறவில்லை. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களில் இருந்து, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், கிராமப்புற பள்ளிகளிலோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலோ, தமிழில் பயின்று வரும் பெரும்பான்மையான மாணவர்க்கு, மருத்துவக் கல்லூரியிலோ அல்லது போட்டியில் முதலிடம் வகித்து வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கப் போவதில்லை.
இந்நிலையில் விகிதாசார ஒதுக்கீடுபடி தமிழ்வழியில் பயில்வோருக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து, அதில் 25% கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால்தான் உயர்கல்வியில் உண்மையான சமூக நீதி கிட்டும்.

மேல்நிலைக் கல்வி - பிளஸ் டூ என்பது இரண்டாண்டு தொடர் படிப்பாகும் ( Two Year Course ). இப்பாடத்திட்டத்தின்படி முதல் ஆண்டு ஒரு பொதுத்தேர்வும், 2-வது ஆண்டு ஒரு பொதுத்தேர்வும் நடத்தப்பட வேண்டும். அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இரண்டாண்டுகளும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகளில் முதல் ஆண்டில் (11-வது வகுப்பில்) இருந்தே இரண்டாவது ஆண்டுக்கான பாடத்தை நடத்தி வருகிறார்கள். அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் ஓர் ஆண்டு பயின்று எழுதும் பொதுத்தேர்வை, மெட்ரிகுலேசன் மற்றும் உண்டு-உறைவிடப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இதனால் இப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. இவ்வாறு 11-வது வகுப்பில் அந்த வகுப்பிற்குரிய பாடத்தை நடத்தாததால் மேற்படி மாணவர்கள் உயர்கல்விக்குப் போகும்போது பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு தேர்ச்சி 50 விழுக்காட்டுக்கும் குறைந்து விடுகிறது.

புறக்கணிக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்: தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி, ஏன் கல்லூரி வரையிலும் ஆசிரியர் பற்றாக்குறையால் இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஒன்றையே முதன்மையாகக் கருதும் ஆளும் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, கல்வி நலன் பற்றி சிந்திப்பதில்லை. பேருந்துகளில் இலவசக் கட்டணச் சலுகை உள்ள நிலையிலும், அனைத்து பிளஸ் டூ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு செலவாவதோ ரூ. 112 கோடி. இதைக் கொண்டு ரூ. 5,000 சம்பளத்தில் சுமார் 20,000 ஆசிரியர்களை நியமிக்க முடியும்.

மேல்நிலைக் கல்வியில் இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தாததால், எஸ்.சி., எஸ்.டி மாணவர்களின் உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பினை பல மாணவர்கள் இழக்கிறார்கள். இது தொடர்பாக 1993-ஆம் ஆண்டு அப்போதைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் பரிந்துரை அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை ஓர் அரசாணை வெளியிட்டது. அரசு ஆணை எண் 42, நாள் 12-01-1994. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஒவ்வொரு பிரிவிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். இது அனைத்து நிர்வாகங்களுக்கும் (சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்டு) பொருந்தும்.
யார் அர்ச்சகர் ஆக முடியும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா என்று சென்னை ஆன்லைன் ஒரு கருத்துக் கணிப்புநடத்துவதாக உள்ளல் வலைப்பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். இது தேவையில்லாத ஒன்று.ஏனெனில் 2002ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பயிற்சி பெற்ற எந்த இந்துவும் அர்ச்சகர்ஆக முடியும்.இது அரசின் நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கு பொருந்தும்.
1970களில் கருணாநிதி கொண்டுவந்த சட்டம், அது குறித்த தீர்ப்பு, தமிழக அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த நிலைப்பாடுகள்,முயற்சிகள் குறித்து விரிவாக எஸ்.வி.ராஜதுரை ஒருநூலே எழுதியிருக்கிறார்.அதன் தலைப்பு இப்போது நினைவில் இல்லை. அதையும் இத்தீர்ப்பினையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தீர்ப்பினை முழுவதுமாக வாசித்தால் இப்பிரச்சினை குறித்த தொடர்புடைய வழக்குகள், தீர்ப்புகள் குறித்த ஒரு புரிதல் கிடைக்கும். இத்தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது, தீர்ப்பின் கடைசிப் பகுதியில் சில விளக்கங்கள் தரப்படுகின்றன.மரபா, அரசியல் சட்டமா என்ற கேள்வி எழும் போது அரசியல் சட்டமே நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் எது சரி என்பதை தீர்மானிக்க மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மரபு என்ற பெயரில் அரசியல் சட்டத்தின் விதிகள், நெறிகளுக்கு முரணான உரிமைகளை கோர முடியாது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

எனவே கருணாநிதி எழுப்பிய கேள்வியும், இந்தக் கருத்துக்கணிப்பும் தேவையில்லாத ஒன்று. இது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நானறியேன்.ஆனால் சட்ட ரீதியாகதடை இல்லை. இன்றுள்ள நிலையில் எத்தனை பேர் கோயில் அர்ச்சகர் ஆக விரும்புவார்கள் என்பது வேறு விஷயம்.
விடுதலைப் புலிகள் குறித்து சந்தியா ஜெயின்

சந்தியா ஜெயின் இந்த்துவ இயக்கங்களால் புகழப்படும் 'அறிவி ஜீவி' .
பயனீற் நாளேட்டில் பத்தி எழுதுபவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரிலும் அடிக்கடி எழுதுபவர். இவர் அண்மையில் ஆர்கனைசரில் விடுதலைப் புலிகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஆர்.எஸ்.எஸ் எப்படி உலகைப் புரிந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
காதலர் தினம் - சிறப்பு புகைப்படத்துடன்

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த தினத்தினை மனமுவந்து, மகிழ்ச்சியுடன் நேசத்துடன் கொண்டாடுங்கள்.வணிகமயமாக்கப்பட்டாலும் இது போன்ற தினங்கள் தனி நபர் சுதந்திரம், தெரிவின் வெளிப்பாடுகள், ஆகவே முக்கியமானவை. சிலர் அர்த்தமற்று இதை எதிர்பார்ப்பார்கள்.மதம், பண்பாடு என்ற பெயரில் புலம்புவார்கள். அவற்றைப் புறந்தள்ளி இத்தினத்தினை கொண்டாடுங்கள்.


இப்புகைப்படம் சுவிஸ் ரயில்வே அனுப்பிய ஒரு உறையில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் டெபு என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி முத்தமிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது.இங்கு ரயிலில் பயணம் செய்கையில் இருவர் முத்தமிட்டுக் கொண்டாலும் பிறர் முகம் சுளிப்பதில்லை, அதை கண்டிப்பதில்லை. பேருந்துகளிலும், பொது இடங்களிலும் இதே நிலைதான். ஏரிக்கரைகளிலும் இப்படி ஜோடி
ஜோடியாக காதலர்களை, தம்பதிகளைப் பார்க்க முடியும்.

அது மட்டுமல்ல, நள்ளிரவிலும் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியும்.உடை இப்படித்தான்இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. ஆணும், பெண்ணும் தழுவிக் கொள்வதும் மிகஇயல்பாக கருதப்படுகிறது.

இங்கு வாருங்கள், பயணியுங்கள், வாழ்வை, காதலைக் கொண்டாடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இப்படம்.

காதல் செய்வீர், காதலை கொண்டாடுவீர்,வாழ்வினைக் கொண்டாடுவீர், இன்றும், என்றும்.
கட்டாயப்படுத்தும் அடையாளங்கள்

முகமது நபியைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் குறித்த சர்ச்சைகளும்,போராட்டங்களும் தொடர்கின்ற இவ்வேளையில் ஒரு கட்டுரையினை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

மானுட வளர்ச்சி அறிக்கை 2004 ற்காக எழுதப்பட்ட இக்கட்டுரை கட்டாயப்படுத்தும் அடையாளங்கள்,அடிப்படைவாதங்கள்,மதங்களும், அடையாளங்களும் குறித்து விரிவாக அலசுகிறது. இக்கட்டுரையாளரின் இன்னொரு கட்டுரையைப் படித்திருக்கிறேன். அது ஒரு ஜர்னலில்வந்தது, இணையத்தில் இருந்தாலும் இலவசமாகக் படிக்க அல்லது இறக்கிக்கொள்ளமுடியாது. எனவே இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்.

கட்டுரையின் நீளம் குறித்து அஞ்ச வேண்டாம். சில கட்டுரைகளை முதல் வாசிப்பில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். தொடர்ந்து படித்துவந்தால் அவற்றை புரிந்து கொள்ளமுடியும்.இதுவும் அத்தகையதே
மேய்ச்சல்

ஞானபீட விருது பெற்ற மராத்திய மொழி கவிஞர் விந்தா பற்றி ஒரு கட்டுரை

மகாஸ்வேதா தேவியும், அருந்ததி ராயும்

ப்ரேஸிய நாவல் ஒன்று குறித்த கட்டுரை

பல்கலைகழகங்களும், தலித் ஆய்வுகளும்

Read At Your Own Risk :)
விடுதலைச் சிறுத்தைகள்-தலித் அரசியல்

இந்த வார ஆனந்த விகடனில் சிங்கம்,புலி,சிறுத்தை என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் விடுதலை சிறுத்தைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழில் பத்திரிகைகள் அடிக்கடி திருமாவளவன் படத்தினை வெளியிடுகின்றன.அவரது பேட்டிகளும் வெளியாகின்றன.ஆனால் தலித் அரசியல் குறித்தோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தோற்றம்,வளர்ச்சி, கருத்தியல் குறித்தோ விரிவாக எழுதப்பட்ட அல்லது விவாதிக்கின்ற எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன ?. தலித் அரசியல் அதற்கு உரிய முக்கியத்துவத்தினை இந்தப் பத்திரிகைகளில் பெறுவதில்லை. பகுஜன் சமாஜ் பார்ட்டி என்கிற பி.எஸ்.பி உ.பி யில் பெரிய அரசியல் சக்தி.ஆனால் தமிழில் அதை விட மாயாவதி குறித்த செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன. இங்கு இருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் குறித்தே உருப்படியாக எழுதாதவர்கள் உ.பி அரசியல் குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

தமிழில் தலித் முரசு போன்ற பத்திரிகைகள் இருந்தாலும் அவை பரவலாகக் கிடைப்பதில்லை, படிக்கப்படுவதில்லை. இந்த பத்திரிகை இந்த குழு அல்லது கட்சியின் பத்திரிகை என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன என்று நண்பர்கள் கூறுகிறார்கள். நான் அவதானித்த அளவில் இது உண்மை என்றே கருதுகிறேன்.

அப்படியானால் விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கத்தினைப் பற்றி ஒரு விரிவான புரிதலைப்எப்படிப் பெற முடியும். அவர்கள் வெளியிடும் வெளியீடுகள் மட்டும் போதுமா, திருமாவளவன் எழுதியுள்ளதைப் படித்தால் போதுமா. தமிழக தலித் அரசியல் பிண்ணனியில் இவ்வியக்கத்தினைஎப்படிப் புரிந்து கொள்வது. இந்த கேள்விக்கு விடை இருக்கிறது. ஆனால் அது தமிழில் இல்லை.

பிரிட்டனில் உள்ள ஆய்வாளர் ஒருவர் தமிழ் நாட்டில் கள ஆய்வு செய்து, தமிழக தலித் அரசியலை ஆராய்ந்து, குறிப்பாக விடுதலை சிறுத்தை இயக்கத்தின் தோற்றம், செயல்பாடுகளை, பலம், பலவீனங்களை குறிப்பிட்டு ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

UNTOUCHABLE CITIZENS: Dalit Movement and Democratisation in Tamil Nadu by Hugo Gorringe. Sage, New Delhi, 2005.

இந்த மாத செமினார் இதழில் அதற்கு நூல் மதிப்புரை வெளியாகியுள்ளது. இந்த நூல் வெளியானதை நான் அறிவேன். இந்தியாவில் இருந்திருந்தால் குறைந்தபட்சம் அதை புரட்டிப் பார்த்து , முடிந்தால் சில பகுதிகளையாவது வாசித்திருப்பேன்.

இவர் எழுதியுள்ள கட்டுரை , அதுவும் தமிழக தலித் அரசியல் பற்றித்தான், அண்மையில் வெளியாகியுள்ளது.அதை படித்தேன். தலித் அரசியல் தலித் உள்ப் பிரிவுகள் ரீதியாகப்பிரிந்திருப்பதை குறிப்பிடும் இவர் அதை மீறி தலித் அரசியல் செயல்பட முடியுமா,செயல்படமுடியும் என்றால் எந்த அடிப்படையில் என்பதை விவாதிக்கிறார். அடையாள அரசியல்,அடையாளப்படுத்தும் அரசியலாக மாற்றம் பெறுவது குறித்த தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

‘You build your house, we’ll build ours’: The Attractions and Pitfalls of Dalit Identity Politics-
Hugo Gorringe-Social Identities-Vol. 11, No. 6, November 2005, pp. 653 -672

ஆனால் தமிழில் லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளும் சரி, 5000 அல்லது 6000 விற்கும்சிறு / இடைநிலைப் பத்திரிகைகளும் சரி இவற்றையெல்லாம் தமிழில் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த நூல் இந்தியாவில் கிடைத்தாலும் இத்தகைய நூல்கள் இருப்பது குறித்த பிரக்ஞை இவர்களுக்கு இல்லை. பெரும் பத்திரிகைகளுக்கு திருமாவின் பேட்டி, புகைப்படம், அரசியல் செய்திகள் போதும்.சிறு / இடைநிலைப் பத்திரிகைகளுக்கு (தலித் முரசு போன்றவை நீங்கலாக) தலித் இலக்கியத்தில் இருக்கும் அக்கறை தலித் அரசியலில் இல்லை. இதனால் தமிழில் தலித் அரசியல் குறித்த புரிதல் வாசகருக்கு கிட்டதட்ட கிடைப்பதே இல்லை. அவர்களாகத் தேடி ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்கள், கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தலித் டைரி என்ற நூல் குறித்தும், தலித் அரசியல் போக்குகள் குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். அகில இந்திய அளவில் தலித் இயக்கங்கள்,கட்சிகள் வலுவடைந்தால் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் அவை பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. கடந்த பதினைந்து அல்லது இருபதாண்டுகளில் தலித் அரசியல் குறித்து ஏராளமாக எழுதப்பட்டுள்ளது, விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறு பகுதி கூட தமிழில் அறிமுகம் செய்யப்படவில்லை. இவையெல்லாம் தமிழில் இல்லை என்ற உணர்வு கூட இங்கு இல்லை என்றே தோன்றுகிறது.
நம்பிக்கைகள்,விழுமியங்கள்,முரண்பாடுகள்


ஐரோப்பாவில் சில கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டதன் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்ப்பு குறித்து வலைப்பதிவுகளில் விவாதம் எழுந்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தில் ஐரோப்பிய அரசுகள் தலையிடாது. கருத்து சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்றவற்றில் அரசுகள் எந்த அளவு தலையிட முடியும் ?. அப்பத்திரிகைகள் செய்தது சட்ட விரோதம் என்றால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.அல்லது பொய் செய்தி வெளியிட்டன, வதந்திகளைப் பரப்பின என்றால் நடவடிக்கை எடுக்கலாம்.அவ்வாறு இல்லாத போது அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்திரிகைகள் மதிக்க வேண்டும் என்று கோருவது நியாயமென்றால் பத்திரிகைகளின்கருத்து சுதந்திரத்தினை இஸ்லாமியரும் மதிக்க வேண்டும். இருதரப்பாரும் பேச்சு வார்த்தை மூலம் ஒரு புரிதலை எட்ட முடியும். ஆனால் பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது. இஸ்லாமியர் நார்வே,டென்மார்க் நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வாங்க மறுக்கலாம். அதற்கு பதிலடியாக அரசுகள் இதை ஊக்குவித்தால் அந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை ஐரோப்பாவில் உள்ள நுகர்வோர் வாங்க மறுக்கலாம்.

சிக்கலின் மூலம் ஐரோப்பிய சமூகங்களில் உள்ள விழுமியங்களுக்கும், இஸ்லாமியர் தங்கள் விழுமியங்கள் என்று கருதுவதற்கும் உள்ள முரண்பாட்டில் இருக்கிறது. ஐரோப்பிய அரசுகள்வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்யும் அதே சமயத்தில் கருத்து சுதந்திரம், தனி நபர் உரிமைகளையும் உறுதி செய்தாக வேண்டும். ஒரு பிரிவினரின் கோரிக்கைகளை ஏற்று தனி நபர் உரிமைகள், கருத்து சுதந்திரம், மனித உரிமைகளை அரசுகள் நிராகரிக்க அல்லது மறுதலிக்கமுடியாது. ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகள்தனி நபர் உரிமைக்கும், கருத்து சுதந்திரத்தினையும் பெரிதும் மதிப்பவை. ஏசு நாதரை கிண்டல் செய்து எழுதுவதை, படம் வரைவதையும் தடை செய்யாதவை.

ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் கருத்து சுதந்திரமும், மத வழிபாட்டு சுதந்திரமும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையானவற்றில் நாத்திகம் பேசலாம்,கடவுள் இருக்கிறாரா என்று கேட்கலாம், மத நம்பிக்கைகளை விமர்சிக்கலாம். இஸ்லாமிய நாடுகளில் இறை நிந்தனை என்பது மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய 'குற்றமாக' இருக்கிறது.

இஸ்லாத்தின் விழுமியங்கள் என்று முன் வைக்கபடும் சில, இத்தகைய தாராளவாத விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களின் அடிப்படை நம்பிக்கைகளுக்கும், சட்டம் உறுதி செய்யும் உரிமைகளுக்கும் முரணாக இருப்பதே பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

இது இரண்டு தளங்களில் வெளிப்படுகிறது. ஒன்று இஸ்லாமிய சமூகங்களில் உள்ள சீர்திருத்தவாதிகள், தாராளவாதிகள் முன் வைக்கும் இஸ்லாம் குறித்த கருத்துக்கள், விழுமியங்கள், மாற்றங்களுக்கும் , பழைமைவாதக் கண்னோட்டங்கள் கொண்டோர் முன் வைக்கும்இஸ்லாம் குறித்த கருத்துக்கள், விழுமியங்களுக்கும் இடையே உள்ள முரணாக.இத்தகையமுரண் ஏற்படும் போது பழைமைவாதிகள் சீர்திருத்தவாதிகளை பலவிதங்களில் அச்சுறுத்துகிறார்கள்,அவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.கொலை மிரட்டல்கள், சமூக பகிஷ்கரிப்புகள் என்று இந்த அச்சுறுத்தல் செய்யப்படுகிறது.

இன்னொருதளம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனி மனித உரிமைகள், கருத்து சுதந்திரம்,ஜனநாயக உரிமைகளுக்கும், இஸ்லாமிய விழுமியங்கள் என்று முன் வைக்கப்படுபவற்றுக்கும்உள்ள முரணாக.ஐரோப்பிய சமூகம் இந்த உரிமைகள், சுதந்திரங்களை நெடிய போராட்டத்திற்குப் பின் பெற்றுள்ளது.அவற்றை உறுதி செய்வதில். நடைமுறைப்படுத்துவதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இஸ்லாமிய விழுமியங்கள் என்று முன் வைக்கப்படுபவை இவற்றிற்கு எதிராகஇருக்கும் போது முரண்பாடுகள் எழுகின்றன.உதாரணமாக இந்த நாடுகளில் மதம் என்பதுவிமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. தற்பால் உறவுகளை அங்கீகரிக்கிற, பெண்கள் பொதுவாழ்விலும், அரசியலிலும் பெருமளவில் பங்கேற்கிற ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய பழமைவாதிகள்,(இவர்கள் ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள், உலகின் பிறபகுதிகளிலும் இருக்கிறார்கள்)கண்ணோட்டத்தில் ஒழுக்கம் கெட்ட (ஒழுக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு வாழும் ஐரோப்பிய வாழ்க்கைக்கு நாம் செல்லப் போகிறோமா?) சீரழிந்த சமூகங்களாகத
சித்தரிக்கப்படுகின்றன.

இப்போதுள்ள போக்கு தொடருமானால் இந்த முரண்பாடுகள் இன்னும் கூர்மையடைந்து சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.