கோவை ஞானியின் 'தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்'

தினமணியில் வெளியான நூல் விமர்சனம்:
எடுத்தேன் படித்தேன்: தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்
ந. வேலுசாமி

தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் -
ஞானி; பக்.190; ரூ.50; வெளியீடு: காவ்யா,
16-17- வது குறுக்குத் தெரு, இந்திரா நகர்,
2-வது தளம், பெங்களூர்-560 038.

வானம்பாடி எழுத்தாளர்களில் ஒருவரான கி.பழனிசாமி என்கிற கோவை ஞானி படைப்பிலக்கியவாதியும், திறனாய்வாளரும், இதழாசிரியரும், மார்க்சியவாதியும் ஆவார்.

"தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்' என்ற இந்நூல் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாகும். இன்று சிறுகதையும் நாவலும் வளர்ந்து உள்ள நிலையில், ஒரு புதிய உத்தியாக நவீனத்துவம் பின் நவீனத்துவம் படைப்பாளரிடையே கையாளப்படுகிறது. இந்த உத்தியைப் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாகத் தோன்றக்கூடும். புரிந்து கொண்டு விட்டால் இதைக் கையாள்வதைப் போல, வேறு எந்த உத்தியையும் லாவகமாகக் கையாள முடியாது என்பதை உணரலாம். இத்தகைய புரிதலுக்கு இந்நூல் உதவுகிறது.
இத்தன்மைத்தான நவீனத்துவம் பின் நவீனத்துவம் என்பதை மிகத் தெளிவாக விளக்கி, அவற்றிற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளைத் தன் திறனாய்வுத் திறனால் ஞானி கூறியிருப்பதே அலாதிதான்.

தொலைந்துபோன நம்மைத் தேடிக் கண்டுபிடிக்க, நம்மைப் புரிந்து கொள்ள, நம்மை நேசிக்க நவீனத்துவ - பின் நவீனத்துவ இலக்கியங்கள் பயன்படும் என்பது இவர் கூற்று. மார்க்சியம், தமிழ் கலை இலக்கியம், தத்துவம், மனித வாழ்வின் மேன்மை, மகத்துவம் என்று வளரும் சிந்தனைக்குள்ளே இவர் தன்னைத் தொடர்ந்து கரைத்துக் கொண்டிருக்கும் தன்மையை இந்நூல் முழுவதும் பரக்கக் காணலாம்.

""நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற இலக்கிய, மெய்யியல் கோணங்களை மார்க்சியத்திற்கு எதிரானவை என என்னால் பார்க்க இயலவில்லை'' எனக்கூறும் ஞானியின் மார்க்சியத் திறனாய்வில் மார்க்சின் ஆளுமையைவிட மாவோவின் ஆளுமையே விஞ்சி நிற்கிறது.
புதுமைப்பித்தனுக்குள்ளும் நவீனத்துவம் செயல்பட்டது. தமிழை நவீனப்படுத்தியதில் மகாகவி பாரதியின் பங்கு அதிகம் என்றும் புலப்படுத்தியுள்ளார். பின் நவீனத்துவத்தின் ஒரு குரல் பார்ப்பனீயச் சார்பு என்றும், இன்னொரு குரல் தலித்தியச் சார்பு என்றும் வகைப்படுத்தியுள்ளார்.
பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வாசகனுக்கு எல்லையற்ற கற்பனை வளம், பழமொழிகள், புராணக் கதைகள், பழம் மரபுகள் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். தமிழவனின்(கார்லோஸ்)" ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்', சுந்தரராமசாமியின் "ஜே.ஜே.சில குறிப்புகள் ' ஆகிய நாவல்களை அடையாளம் காட்டுகிறார்.

தமிழில் கதை கூறும் முறையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கதையே கூடத் தவிர்க்கப்படுதலும் இப்போது நடைபெறுகிறது என்கிறார். யதார்த்தவாதம் இருந்தால்தான் பின் நவீனத்துவத்திற்கு அர்த்தம் ஏற்படுகிறது என்பதும் ஞானியின் முடிவாகும்.

""புத்தகம் படிக்கும் வழக்கமும், சமூகம் பற்றிய பிரக்ஞையும் உள்ள வாசகன் இந்நூலின் பக்கங்களின் ஊடே சர்வ சுதந்திரமாகப் பறந்து திரிய முடியும். புதிது புதிதாக ஏராளமாகப் பார்க்க முடியும்'' என்ற பொன்னீலன் அணிந்துரை வரிகளை அப்படியே ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------

இந்த நூலை நான் படிக்கவில்லை. இருப்பினும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1, ஜே.ஜே சில குறிப்புகள் நவீனத்துவ நாவல் என்பதே இன்னும் பொருத்தமாயிருக்கும். ஜேஜே யினைகிண்டல் செய்து ஒரு பின் நவீனத்துவ நாவல் சாத்தியம். தமிழவன் எழுதிய நாவலை நான் படிக்கவில்லை.
2,பார்பனிய சார்பு, தலித்திய சார்பு என்று வகைப்படுத்துவதை நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் பின் நவீனத்துவ கண்ணோட்டம் அடையாளங்களை, இறுகிவிட்ட கருத்தியல்சார் புரிதல்களை கேள்விக்குட்படுத்துவது. அது பார்ப்பனீயமும்,தலித்தியமும் இணையும் புள்ளிகள் என்று கூட சிலவற்றைக் காட்டலாம்.
3,பின் நவீனத்துவத்திற்கு யதார்த்தவாதம் தேவையில்லை, மேலும் பின் நவீனத்துவம் ஒற்றைப் பரிமாண யதார்த்தவாத்தினை கேள்விகுட்படுத்துகிறது. மொழியினால் கட்டப்படும் யதார்த்தவாத பிரதியை அது கட்டுடைக்க முயல்கிறது. யதார்த்த வாதத்தின் எல்லைகளை நமக்குக் காட்டுகிறது. மேலும் பின் நவீனத்துவம் யதார்த்தவாதம் தரும் மயக்கங்களைத் தாண்டி பிரதியை வாசிக்கத்தூண்டுகிறது.
4, ஒரு பின் நவீனத்துவப் பிரதி ஆழ் பொருளைக் கொண்டிருக்க வேண்டும் என்றோ, வாழ்வின் மீது ஒளி காட்டும் என்றோ எதிர்பார்க்கத் தேவையில்லை. அது கலைஞன், உன்னதம், சிருஷ்டி, படைப்பு வாழ்வின் மீது காட்டும் ஒளி போன்ற சிறு பத்திரிகை சொல்லாடல்களை கிண்டல் செய்வதாக இருக்கும். காப்பிய வடிவங்களை அது பகடி செய்யலாம்.

இந்த நூலினை நான் தப்பித்தவறி படித்து விட்டால் பின்னர் எழுதக்கூடும். அவ்வாறு நிகழாதிற்ககொற்றவைக்கு 1008 பால் குடம் எடுப்பதாக வேண்டிக்கொள்ளலாம் அல்லது கண்ணகி கோயிலிற்குபாத யாத்திரை வருவதாக வேண்டிக் கொள்ளலாம் :). அல்லது ஆதி பட்த்தினை 108 முறை பார்ப்பதாக வேண்டிக் கொள்ளலாம் :).

2 மறுமொழிகள்:

Blogger Boston Bala மொழிந்தது...

It was refreshing to read something other than the 'Comment Moderation' topic ;-)

எம்.ஜி.சுரேஷ் எழுதிய 'பின் நவீனத்துவம் என்றால் என்ன' படித்திருக்கிறீர்களா...

உங்களுக்காக ஒரு கவிதை :
அலைஞனின் அலைகள்: கணம் -- க.த., கா.தே., அ. பா.


----ஆதி பட்த்தினை 108 முறை பார்ப்பதாக வேண்டிக் கொள்ளலாம் ---

விஜய்க்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை பாஸ்டன் ரசிகர் மன்றம் சார்பாக எனது ஆட்சேபங்களை பதிவு செய்து வைக்கிறேன். (எதற்கு 108; ஒன்று போதுமே?)

4:22 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

பின் நவீனத்துவத்தில் பெரிதாக ஊறவில்லையாயினும்,
/பார்பனிய சார்பு, தலித்திய சார்பு என்று வகைப்படுத்துவதை நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் பின் நவீனத்துவ கண்ணோட்டம் அடையாளங்களை, இறுகிவிட்ட கருத்தியல்சார் புரிதல்களை கேள்விக்குட்படுத்துவது./
இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் படுகிறது.

//It was refreshing to read something other than the 'Comment Moderation' topic.//
Me too

5:28 PM  

Post a Comment

<< முகப்பு