கருணாநிதி,பிராமணர் - பிராமணர்ல்லாதோர்

சுகாசினி கூறிய கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் கருணாநிதி இது எங்கு போய் முடியும்என்றால் மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்க எங்களுக்கு பயன்படும் என்று கூறியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி இதை விமர்சித்திருக்கிறது.

கருணாநிதியின் கருத்து விஷமத்தனமானது. இந்த விவகாரத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம்,அ.மார்க்ஸ் போன்றவர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பெரியார் எழுதியதற்கு தன் விளக்கம் மட்டுமே சரி என்று கருணாநிதி வாதிட முடியாது. எவ்வளவு மோசமான கருத்து என்று ஒன்றை கருதினாலும் அதற்கு பதில் தரும் போது அநாகரிகமாக நடந்து கொள்வது சரியாகாது.

இதில் பிராமணர்- பிராமணரல்லாதோர் எங்கு வந்தது. சுகாசினி பிராமணர் அவர் தமிழர்களுக்கு விரோதி, தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதி என்று கருணாநிதி பிரச்சாரம் செய்யப்பபோகிறாரா. குஷ்பு கூறியதைப் போன்ற கருத்துக்களை கூறிய சுகிர்தராணியும் பிராமணரா என்பதை அவர் கூறட்டும்.

1950களில்,1940களில் செய்தது போல் இன்று பிராமணர் - பிராமணரல்லாதோர் இயக்கம் நடத்த முடியாது. காலம் மாறிவிட்டது. பிராமணர் மீது வெறுப்பினைத் தூண்ட முயற்சித்தால் சட்ட ரீதியாக அவரும் ,அவரது கட்சியும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பா.ஜ.க வுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட கருணாநிதி எப்படிப்பட்டவர் என்று தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியும். இனியும் பழைய பி பிராமணர்- பிராமணரல்லாதோர் பல்லவி எடுபடாது.

1970 களில் எம்.ஜி.ஆரை கழகத்திலிருந்து நீக்கிய பின் அவர் தனிக்கட்சி தொடங்கிய பின்அவரை மலையாளி என்று பிரச்சாரம் செய்து அவர் மீது வெறுப்பினை ஊட்ட முயற்சி செய்தீர்கள்.தமிழர் படை என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து
முண்டு கட்டி வந்தவன்
உண்டு கொழுத்து வாழ்கிறான்அவனை
வண்டி ஏற்றி அனுப்புவோம்
என்றெல்லாம் முழக்கமிட்டு செய்த முயற்சிகளை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர்.

மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு மாற்றாக சினிமாவில் கொண்டுவர செய்த முயற்சிகள், எம்,ஜி.ஆர்படங்களுக்கு எதிரான முயற்சிகள் படு தோல்வியில் முடிந்தன. எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்வரை உங்களால் மீண்டும் முதல்வர் ஆக முடியவில்லை. எம்.ஜி.ஆர் இறந்த பின்னும் அதிமுக்உடைந்தாலும் அது மீண்டும் ஆட்சிக்கு வந்தது, இரு முறை. எனவே தமிழ் நாட்டில் தி.மு.கஎதிர்ப்பு பலமாக இருக்கிறது.. தனித்து நின்று தி,மு.க வால் ஆட்சி அமைக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். வேறு வார்த்தைகளில் சொன்னால் தி.மு.க வால் 30 முதல் 33 சத ஒட்டுகளையே பெற முடியும். மீதி 70 முதல் 67 சத ஒட்டுகள் பிற கட்சிகளிடம். இதைஅறியாது 2001ல் நீங்கள் அமைத்த கூட்டணி படு தோல்வி கண்டது. 2004ல் உங்கள் கூட்டணிக்குவிழுந்த ஒட்டுகளில் பெரும்பான்மை அதிமுக ஆட்சிக்கு எதிரான ஒட்டுகளே தவிர, உங்கள்கூட்டணிக்கு முழு மனதுடன் அளிக்கப்பட்ட ஒட்டுகள் அல்ல. இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது தமிழ் நாட்டில் உங்கள் கட்சியின் பலமும், செல்வாக்கும். 1971 - 1976ல் நீங்கள்ஆடிய ஆட்டங்களுக்கும், பேசிய வார்த்தைகளுக்கும் 1977ல் பதில் கிடைத்தது - அதிமுகஆட்சி அமைந்தது. அவசர கால கொடுமைகளை தி,மு.க சந்தித்த போதும் திமுக அனுதாபஅலை உருவாகவில்லை.

இப்போது மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்ற இயக்கத்தை நீங்கள் முன்னிறுத்தினால்,தி.மு.க அதில் ஈடுபட்டால் அது தி.மு.க விற்கு நீங்கள் அடிக்கும் சாவுமணியாக இருக்கும். ஏனெனில் 1950களில் சொல்லப்பட்ட வாதங்கள் இன்று எடுபடாது. தலித்கள் உங்களுடன் சேரமாட்டார்கள். கீரிப்பட்டி-பாப்பாபட்டி தேர்தல் குறித்து உங்கள் நிலைப்பட்டினை அவர்கள்அறிவார்கள். தலித்-பிராமணர் - பிற ஜாதியினர் என்றுதான் அவர்கள் பார்ப்பார்கள். அன்று பெரியார்இருந்தார், அண்ணா இருந்தார். அவர்கள் மீது மக்களுக்கு இருந்த மரியாதையும், நம்பிக்கையும் முறையே வீரமணி, கருணாநிதி மீது கிடையாது. எனவே 21ம் நூற்றாண்டிலும் மீண்டும் பிராமணர் - பிராமணர்ல்லாதோர் என்று பாகுபாடு செய்து அரசியல் செய்ய முடியாது.

அப்படி செய்ய முயண்றால் அத்துடன் உங்கள் அரசியல் வாழ்வு மீள முடியாத படு குழியில் விழுந்து விடும். இனக்கலவரத்தினை தூண்டியதற்காக நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எதற்கும் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் இனக்கலவர தடுப்பு சட்ட முன்வடிவைப் படித்துப் பார்த்துவிட்டு இனிப் பேசுங்கள்.
சுதர்சனும், ஜுனியர் விகடனும்

சமீபத்திய ஜூனியர் விகடனில் ஆர்.எஸ்.எஸ் ஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்சுதர்சன் இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால்எதிர்காலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகி விடுவார்கள் என்று பேசியிருப்பதையொட்டிஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றுன் விஸ்வ இந்துப் பரிஷத் ஆதாரம்காட்டும் ஆய்வினை செய்திருப்பது சென்னையில் தலைமையகத்தையும், தில்லியில் கிளைஒன்றினையும் கொண்டுள்ள சென்டர் பார் பாலிசி ஸ்டடீஸ் என்ற அமைப்பு. இதன் இணையதளத்தினை பார்த்தாலே தெரியும் இது இந்த்துவ அமைப்புகளுடன் தொடர்புடையதுஎன்று. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நூலாக வெளிவந்தது 2003ல், இதை வெளியிட்டுமுன்னுரையும் எழுதியிருப்பவர் அப்போதைய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர்எல்.கே.அத்வானி. இந்த நூல் உருவாக்கத்திற்கு நிதி வழங்கியது இந்திய சமூக அறிவியல்ஆய்வுகளுக்கான கவுன்சில். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்ட்டணிஆட்சியில் இருந்த போது கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கானஅமைச்சராக இருந்தவர் முனைவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் இந்த அமைப்பிற்குநெருக்கமானவர் என்பதை இந்த அமைப்பில் இணைய தளத்திலிருந்தே அறிந்து கொள்ளமுடியும். ஆனால் பஜாஜ் இதையெல்லாம் கூறவில்லை, ஜுனியர் விகடன் நிருபரும் அறிந்துகொள்ளவில்லை.

இந்த ஆய்வின் முடிவுகள் ஒரு நூலாக வெளியான பின் அதை விமர்சித்து, அந்த முடிவுகளைசர்ச்சித்து எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானது,அதை ஏற்காமல் நூலாசிரியர்கள் ஒரு சிறு மறுப்புரையினை எழுதினர், அதுவும் பிரசுரமானது,இந்துவில் இந்த ஆய்வினை குறித்து ராம் மனோகர் ரெட்டி ஒரு கட்டுரை எழுதினார். ஜூனியர்விகடன் கட்டுரை இதையெல்லாம் குறிப்பிடவில்லை. எழுதியவருக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜூனீயர் விகடன் அ.மார்க்ஸிடம் கருத்துக் கேட்டிருக்கிறது. அதை விட மக்கள் தொகைகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அ.மார்க்ஸ்இந்த்துவ அமைப்புகளின் கருத்துக்களுடன் முரண்படுபவர் என்பது தெரிந்ததுதான். எனவேதுறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் வெளியாவது முக்கியம். ஆனால் ஜூனியர் விகடனுக்குஇது தெரியவில்லை. அதாவது பரவாயில்லை, குறைந்தபட்சம் இந்த ஆய்வின் முடிவுகள் சர்ச்சிக்கப்பட்டுள்ளன, இந்த அமைப்பு இந்த்துவ சக்திகளுடன் தொடர்புடையது, இதன்அறங்காவலர் குழுவில் கோவிந்த்சார்யா, பல்பீர் புஞ்ச், குருமூர்த்தி ஆகியோரும் இருக்கிறார்கள்என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். மாறாக பஜாஜ் கூறியிருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே தமிழில் இதழியலில் தொழில் நுட்ப வளர்ச்சி இருக்கிறது, உள்ளடக்க ரீதியாகவரவேற்கத்தக்க போக்குகள் இல்லை. தகவல் பிழைகள் மிகவும் சாதரணமாக இருக்கின்றன.சில சமயங்களில் முக்கியமான தகவல்கள் இடம் பெறுவதில்லை. கருத்துக் கூறும் பலர்ஒரு குறைந்த பட்ச ஆய்வினை,தகவல் சேகரிப்பினைக் கூட மேற்கொள்வதில்லை.

தமிழில் பத்திரிகைகளில் பரபரப்பான தலைப்பு கொடுத்து, இரண்டு பேரை சந்தித்து கருத்து வாங்கி வெளியிடுவதுதான் நிருபரின் அல்லது பத்திரிகையாளரின் வேலை என்ற போக்கு பரவலாக இருக்கிறது. இதன் விளைவாக வாசகர்களுக்கு போதுமான, தேவையான தகவல்கள், பாரபட்சமற்ற கருத்துரைகள் கிடைப்பதில்லை. இதானால் விபரம் தெரிந்தவர்கள் தமிழில் வெளியாகும் பத்திரிகைகளை பொருட்படுத்த தேவையில்லை என்று நினைத்தால் அதை தவறு என்றுகூற முடியாது.
சில நேரங்களில் சில மனிதர்கள்

கீற்று இணையதளத்தில் வெளியான என் கட்டுரை இங்கும் இடப்படுகிறது. இதனைஉடனே பிரசுரித்த கீற்று ஆசிரியருக்கு என் நன்றிகள் இத்துடன் திண்னையில் வெளியாகியிருக்கும் அ.பாரதியின் கடிதத்தினையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.உயிர்மையில் வெளியான அஞ்சலிக்கட்டுரைகளை நான் படிக்கவில்லை. நான் கடைசியாகப் படித்த இதழ் ஆகஸ்ட் 2005 இதழ்தான்).

சில நேரங்களில் சில மனிதர்கள்

கடந்த வாரத் திண்ணையில், அமரராகி விட்ட சுந்தர ராமசாமி(சு.ரா)யைப் பற்றி ஜெயமோகன் (ஜெமோ) எழுதி வெளியாகவுள்ள நூலிலிருந்து ஒரு பகுதியும், ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. சு.ரா இறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் இப்படி அவசர அவசரமாக ஒரு நூல் எழுதப்பட்டு வெளியிடப்படுவதற்கான நியாயம், காரணங்கள் என்ன? ஏன் பலர் பங்களிக்கும் ஒரு நினைவுமலர் முதலில் வராமல் ஒருவர் அவசர அவசரமாய் எழுதும் நூல் முதலில் வருகிறது? சு.ராவைப் பற்றி நூல் எழுதுபவர் எப்போதுமே ஒரு ஆதரவான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறாரா? அவரது பெயருக்கும், புகழுக்கும் பங்கம் விளைவிக்காத வகையில் எப்போழுதுமே நடந்து கொண்டிருக்கிறாரா?. இது போல் பல கேள்விகள் எழுவது நியாயமானதே!

சு.ராவை கடந்த சில ஆண்டுகளாக ஜெயமோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறு செய்திருக்கின்றனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணங்களாக ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
மருதம் இணைய இதழில் சூர்யா என்ற பெயரில் வெளியான கட்டுரை. இதில் மாயியைக் குறித்து சு.ரா. கூறியதாக பிரமீள் எழுதியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு சு.ரா.வின் ஆளுமையைக் கேவலமாக சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டது. இதற்கு துணையாக ஆர்.டி.லெய்ங் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. நாச்சார் மட விவாகாரங்கள் கதை வெளியானபின் ஜெமோ தந்த விளக்கம் சாதுர்யமாக பழியை வாசகர்கள் மீது போடுகிற உத்தியாக இருந்தது. வருத்தம் என்பது வெறும் கண்துடைப்புதான் என்பது வெளிப்படையானது. சு.ரா. மற்றும் அவர் குடும்பத்தினர், காலச்சுவடு குறித்து திண்ணையில் தன் தரப்பு விளக்கமாக எழுதிய கட்டுரையில் செய்யப்பட்ட மறைமுகமான அவதூறுகள், அசோகமித்திரன் கதைகள் குறித்து சு.ரா. ஆற்றிய உரையை விமர்சித்து ஜெமோ எழுதியதும், அதற்கு காலச்சுவட்டில் வெளியான பதில் குறித்து ஜெமோ உயிர்மையில் எழுதியதில் ஜெமோ, சு.ரா.வின் விமர்சன நேர்மை குறித்து வைத்திருந்த கருத்து மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

சு.ரா. தான் படித்த கதைகளின் அடிப்படையில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தும் கூட அவர் பேச்சைத் திரித்து பொருள் கூறி அவர் மீது அவதூறு பரப்பியது ஜெமோதான். நானறிந்த வரை அசோகமித்திரன் கூட சு.ரா.வின் பேச்சிற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இதுதவிர நான் அறியா உதாரணங்கள் பல இருக்கக்கூடும். சு.ரா. மிகக் கடுமையாக விமர்சித்த இடதுசாரிகள் கூட அவர் மீது வீண் அவதூறு பரப்பவில்லை. அவர் குடும்பத்தினை சர்ச்சைகுட்படுத்தவில்லை. அவர், அவர் குடும்பம பற்றி சிறுகதை என்ற பெயரில் கீழ்த்தரமாக எழுதவில்லை. இதை செய்தவர்கள் யார் என்பதை நாம் அறிவோம். ஒரு மனிதர் வாழும் போது அவர் மீது அவதூறு பரப்பி, விமர்சனம் என்ற பெயரில் தன் மனதில் இருக்கும் வன்மத்தினை வெளிப்படுத்தியவர், அவர் இறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஒரு நூல் எழுதி வெளியிடுகிறார் என்றால் அதற்கு என்ன பொருள்?

சு.ரா.வின் மரணத்திற்குப் பின் அவர் மீது அதிக கவனம் உருவாகியிருக்கிறது. அவர் பெயரை மட்டும் கேள்விப்பட்டவர்கள், அவரது ஒரு சில எழுத்துக்களைப் படித்தவர்கள் என்ற பலவகையான வாசகர்கள் அவர் எழுத்துக்களை தேடிப் படிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு வாசகர் கவனம் சு.ரா.வின் எழுத்துக்களில் குவிந்திருக்கும் போது, அவர் ஆளுமை குறித்த பிறர் எழுதியுள்ளவற்றிலிருந்து அறிந்து கொள்ள முயலும் போது இதை பயன்படுத்திக் கொண்டு தான் உருவாக்கியிருக்கும் பிம்பத்தினை அவர்கள் முன் வைத்து தன்னையும், தன் கருத்தினையும் முன்னிலைப்படுத்துகிற ஒரு முயற்சிதான் இது. இங்கு வெளிப்படுவது பச்சையான சுயநலன் தான்.
தன் நூல் மூலம் வாசகர் மனதில் சில கருத்துக்களை விதைக்கிற, பரப்புகிற முயற்சிதான் இது. இந்த நூல் சு.ரா. மறைந்த 2 மாதங்களுக்குள் வெளியாக வேண்டிய தேவைதான் என்ன? மக்களைப் பாதிக்கிற ஒரு திட்டம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் ஒரு சட்டம் இவை போன்றவை குறித்து பிரச்சாரம் செய்வதற்காக அவசர அவசரமாக நூல்கள் எழுதப்படுவதில் நியாயமும், தேவையும் இருக்கிறது. ஜெமோ நூல் வெளியாகித்தான் சுரா என்று ஒருவர் இருந்தார் என்ற நிலையா இருக்கிறது?

சு.ரா. குறித்து பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நினைவுமலருக்கும், ஜெமோவின் நூலிற்கும் வேறுபாடு உண்டு. முன்னதில் ஒரு ஆளுமையின் பன்முகத்தன்மையும், பலர் முன்வைக்கும் கருத்துக்களும் வெளிப்படும். இதன் மூலம் வாசகர் மனதில் ஒரு விமர்சகர் அல்லது எழுத்தாளர் கருத்து பிரதான இடம் பெறுவதும், ஒரு சில கருத்துக்களே முன்னிறுத்தப்படுவதும் தவிர்க்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால் ஒரு எழுத்தாளர் எழுதும் நூலில் அவரது கண்ணோட்டமே முதன்மை பெறத்தான் வாய்ப்புகள் அதிகம். காலச்சுவடு சார்பில் சு.ரா. குறித்த நூல் ஏதாவது வெளியாகும் முன்னர் சந்தையில் இடம் பிடிக்கிற உத்திதான் இது. சு.ரா.வின் மகத்தான ஆளுமையை அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக இந்த நூல் மூலம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதன் தேவை என்ன? அப்படி இல்லாவிட்டால் அந்த ஆளுமை இல்லை என்றாகிவிடுமா அல்லது இரண்டு மாதங்கள் கழிந்து போனால் வாசகர்கள் சு.ரா.வை மறந்து விடுவார்களா? அப்படியெல்லாம் ஏதுமில்லை. கிட்டதட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் செயல்பட்ட ஒருவரின் ஆளுமையை இரண்டு மாதங்களுக்குள் ஒருவர் நூல் எழுதித்தான் நிலை நிறுத்த வேண்டுமா? இங்கு சு.ரா. ஒரு விற்பனைக்கான குறியீடாக மாற்றப்பட்டு, பயன்படுத்தப்படுகிறார். அவ்வளவுதான். சுடச்சுட விற்பனையாகும் என்பதை மனதில் வைத்தே இந்நூல் எழுதப்பட்டதோ என்ற சந்தேகம்தான் அந்நூல் குறித்த குறிப்பினை படிக்கும் போது எழுகிறது.

அந்த மகத்தான ஆளுமையைப் பற்றி சு.ரா உயிருடன் இருக்கும் போது எத்தகைய கருத்துக்களை ஜெமோ முன் வைத்திருக்கிறார், வைக்க உதவியிருக்கிறார் என்பதற்கான சான்றுகளை நான் காட்டியிருக்கிறேன். ஒருவர் உயிருடனிருக்கும் போது வசைபாடுவது, அவதூறு செய்வது, இறந்து இரண்டு மாதம் கூட ஆகும் முன்னர் அவர் குறித்து அவசர அவசரமாக ஒரு நூல் எழுதி, அதை வெளியிடுவதைப் பார்க்கும் போது சு.ரா. இறந்த பின் அவரை பயன்படுத்திக் கொண்டு சில உன்னதமற்ற நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியாகத்தான் இந்நூலினை பார்க்க வேண்டியுள்ளது.
இந்நூலில் தான் செய்த அவதூறுகளுக்கு ஜெமோ மன்னிப்புப் கோரியிருக்கிறாரா அல்லது வருத்தம் தெரிவித்திருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சில உணர்ச்சிப் பூர்வமான நாடகக் காட்சிகள் வெளியீட்டு விழாவின் போது அரங்கேறினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை. எனவே நூல் வெளியீட்டு விழா கூட்டதிற்கு செல்பவர்கள் கூடுதலாக கைக்குட்டைகளையும், காதுகளை அடைத்துக் கொள்ள பஞ்சும் கொண்டு போகலாம். அரசியல்வாதிகள் கூட இந்த விஷயங்களில் ஜெமோ போன்றோரிடம் பிச்சை வாங்க வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது, இறந்த பின் உயிர் நண்பர் என்பது, கண்ணீர் உகுப்பது இந்த ரீதியில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கும். இறந்த உடன் அவசர அவசரமாக 200 பக்க நூல் எழுதுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் நேருவோ, அண்ணாத்துரை இறந்த போது கலைஞரோ 60 நாட்களுக்குள் நூல் எழுதவில்லை. அப்படி எழுதி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. உண்மையில் நெருக்கமாக இருப்பவர்களால், இருந்தவர்களால் இப்படி அவசர அவசரமாக நூல் எழுதி அதை வெளியிடவும் முடியுமா என்பது குறித்து யாருக்கேனும் சந்தேகம் எழுந்தால் அதில் நியாயம் இருக்கிறது.

சு.ரா உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற செய்தி அறிந்ததுமே ஜெமோ நூல் எழுதத் துவங்கி விட்டாரா என்ற ரீதியில் ஒரு வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் இருந்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். இங்கு சு.ரா. இறந்த பின் விற்பனைக்கான ஒரு குறியீடாக மாற்றப்பட்டிருக்கிறார். இனி சு.ரா நினைவுக்கூட்டங்களில் சு.ரா.வின் படம் போட்ட பனியன்கள், டிஷர்ட்கள் போன்றவையும் விலைக்கு கிடைக்கலாம். இப்படி அவசர அவசரமாக நூல் எழுதி விற்பதை விட அது மிகவும் நேர்மையான செயல்.
முதல் பனியே

இந்தப் பருவத்தின் முதல் பனி நேற்றிரவு பெய்தது. நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது பன்னீர்த்துளிகள் போல் விழுந்தது. காலையில் பார்த்தால் பனி படர்ந்திருந்தது பலஇடங்களில். மேகம் மூட்டத்துடன் இருக்க சூரியன் கராத்தே தியாகராஜன் போல் பதுங்கிவிட்டார் என்று நினைத்தேன். நண்பகலில் சூரியன் ஒளிர பனி படர்ந்த இடங்கள்வெண்பட்டுப் போல் தகதகவேன பிரகாசித்தன. இந்த ஆண்டு குளிர் கடுமையாக இருக்கும்என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ தொல்லைகள் இருந்தாலும் எனக்குப் பனிபிடிக்கும், பனி விழுவதை பார்க்கப் பிடிக்கும், பனியில் நனைவதும், நடக்கவும் பிடிக்கும்.பனி ஒர் அழகுதான்.

என் அலுவலகத்தின் பின்புறத்தின் சில பகுதிகளை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.இதைப் பார்த்துவிட்டு டி.ஜே , ரவி சீனிவாசெல்லாம் புகைப்படம் எடுத்துப் போட்டால்நான் மட்டும் ஏன் கவிதை எழுதக்கூடாது என்று நினைத்து வலைப்பதிவுகளில் கவிதைகளைகவி காளமேகம் போல் பொழியத்துவங்கினால் அதற்கு நான் பொறுப்பில்லை :).
சுந்தர ராமசாமி,ஜெயமோகன் குறித்து சாரு நிவேதிதா

கோணல் பக்கங்களில் சாரு எழுதியிருக்கும் கட்டுரை. சு.ரா வும்,பிரமீளும் நெருங்கி இருந்த காலமும் உண்டு. சு.ரா வின் கவிதையைப் புகழ்ந்து தருமு சிவராமு எழுதிய கட்டுரை வானமற்ற வெளி கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது. ஒரு காலத்தில் சு.ரா,பிரமீள்,வெங்கட் சாமிநாதன் மூவரும் பல விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தார்கள். பின்னர்பிரமீள் வெ.சா, சு.ரா இருவரையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினார். பிரமீளை நகுலன்பள்ளியைச் சேர்ந்தவராக கருதுவது சரியல்ல என்பது என் கருத்து. சு.ரா, பிரமீள்,வெ.சாமூவருக்கும் பொதுவான ஒன்று என்னவென்றால் மூவரும் தமிழில் எழுதிய முற்போக்கு, இடதுசாரிஇலக்கியவாதிகள் மீது கடும் விமர்சனம் வைத்ததுதான். ஆனால் மூவரும் மார்க்சியம் குறித்து ஆழ்ந்த புரிதல் பெற்றிருந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

இக்கட்டுரையில் ஜெயமோகனை கிண்டல் செய்து சாரு எழுதியிருப்பதை நான் ரசித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா. ஜெயமோகன் எழுதுவதை வார்த்தைகளின் வாந்திபேதி என்று ஒரு முறைஎழுதியிருக்கிறேன். சு.ரா பற்றி ஜெயமோகன் அவசர அவசரமாக புத்தகம் எழுதுவது சு.ரா வினைவிற்பனை சரக்காக மாற்றுவதற்கான முயற்சிதான், காலச்சுவடு நூல் வெளியிடும் முன் சந்தையில்இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் செயல் இது. சு.ரா இறந்த பின் அவருக்குகிடைத்திருக்கும் கவனத்தினை பயன்படுத்திக் கொண்டு வாசகர் மனதில் தன் கருத்துக்களைநிலை நிறுத்த ஜெயமோகன் செய்யும் இழிவான முயற்சி இது. உண்மையில் பலர் சு.ரா குறித்துஎழுதிய ஒரு நினைவு மலர் முதலில் வெளியானால் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகவாய்ப்புண்டு. ஜெயமோகன் இப்படி செய்வதும், அதற்கு சிலர் உடந்தையாக இருப்பதும்வெட்கக்கேடான செயல்கள்
இது மாலை நேரத்து மயக்கம்.....

கடந்த சில நாட்களாக பல முறை கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சூலமங்கலம் ராஜலஷ்மியின் இசைஅமைப்பில் டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி பாடியது.கேட்டுப்பாருங்கள் . என்னிடம் இருக்கும் குறுந்தகட்டில் இதுதவிர டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி சேர்ந்து பாடியுள்ள பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து மிக வித்தியாசமானபாடல் இது.
உயிரிய அறிவியல் துறைகளில் பெண்கள் மற்றும் ...

உயிரிய அறிவியல் துறைகளில் பெண்கள், மற்றும் இதுவரை போதுமான பிரதிநிதித்துவம்பெறாதோர் இத்துறையில் ஈடுபட செய்யப்படும் முயற்சிகள், சில அறிவியலாளர்களின் அனுபவங்கள் போன்றவற்றை தி சயன்டிஸ்ட் இதழில் படிக்கலாம்.
விசுவாசி(கள்)

ஜெயகாந்தன் 1992 ல் எழுதிய கட்டுரை ஒன்றினை அண்மையில் படித்தேன்.

ஜெயகாந்தன் அன்றும்,இன்றும் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சிலர் பாராட்டலாம்.ஆனால் அவர் எழுதிய கட்டுரையில் இந்திய அமைதிப்படையினர் நடந்து கொண்டது குறித்து ஒரு வாக்கியம் கூட இல்லை. ராஜீவ் காந்தி கொலையுண்ட போது தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியின் கீழ்இருந்தது.1991 ஜனவரியில் தி,மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.அப்போது அதற்கு அவர் ஆட்சேபம்தெரிவித்தாரா இல்லை வரவேற்றாரா என்பதை அவரது ரசிகர்கள் தெளிவுபடுத்தலாம். 1984ல்இந்திரா காந்தி கொலையுண்ட பின் தில்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும்,படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று மத்திய அமைச்சரவை ராஜினாமா செய்ததா. அது சட்ட ஒழுங்குகுலைவில்லை போலும். ராஜிவ் காந்தி அது குறித்து என்ன கூறினார் என்பதை உலகறியும்.

சீக்கிய தீவிரவாதத்தினை ஒடுக்குவது என்ற பெயரில் பஞ்சாபில் செய்யப்பட்ட மனித உரிமைமீறல்கள் குறித்து ஜெயகாந்தன் என்றாவது எதாவது எழுதியுள்ளாரா. ஒரு கலை இலக்கியவாதிஎல்லா விஷயங்கள் குறித்தும் கருத்து சொல்ல வேண்டாம்.ஆனால் ஜெயகாந்தன் கருத்துச் சொல்லும்போது அது ஏன் படு அயோக்கியத்தனாமாக இருக்கிறது. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை வரவேற்பார் ஆனால் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய அத்துமீற்ல்கள் குறித்தோ, சதாசிவா கமிஷன் குறித்தோ எதுவும் சொல்லமாட்டார். ஜெயேந்தரர் கைது ஆனால் அவருக்கு தனிக்கவலை வந்து விடும், நாவல எழுதி விடுவார். இப்படி பல சமயங்களில் அவர் நடந்து கொள்ளும் விதம் நேர்மையற்றதாக இருக்கிறது.

அவர் தேசாபிமானி அல்ல. நேரு குடும்பத்தின் விசுவாசி, இன்னும் சிலரின் மூடத்தனமான ஆதரவாளர். தேசாபிமானிக்கு மக்கள் மீதுதான் அக்கறை இருக்கும், தனிப்பட்ட குடும்பத்தின்மீது அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது கட்சி,ஆள்வோரின் சுய நலன்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்கும் அல்லது 356வது பிரிவினைப் பயன்படுத்தி மத்திய ஆட்சியை அமுல் செய்யும். அகாலி தளத்தினை வலுவிழக்கச் செய்ய பிந்தரன்வாலேயைஆதரிக்கும், அப்புறம் தீவிரவாதம் தலைதூக்குகிறது என்ற பெயரில் மனித உரிமை மீறல்களைஅரங்கேற்றும். இலங்கையில் இந்தியா காட்டிய ஈடுபாடு அதன் பிராந்திய மேலாண்மை குறித்தஒன்றேயன்றி ஈழத்தமிழர் மீதான முழு அக்கறை காரணமாக அல்ல.

எனவே ஜெயகாந்தன் பல சமயங்களில் எழுதியுள்ள கட்டுரைகள், நிலைப்பாடுகளின் பின்ணணியில்இருப்பது சத்திய ஆவேசமோ அல்லது அறநெறி சார்ந்த கண்ணோட்டமோ அல்ல. தேசபக்தி என்றபெயரில் வெளியாகும் விசுவாம்தான். அவர் நேரு குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஜெயேந்திரருக்கும் இன்ன பிறருக்கும் விசுவாகமாக இருப்பதை தேசபக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எனவே அவற்றை வைத்து அவரை இடதுசாரி என்று கூறுவதும், மார்க்சியர் என்று கூறுவதும் உண்மையான இடதுசாரிகளையும், மார்க்சியரையும் கேலி செய்வது போலாகும்.

ஜெயகாந்தன் எழுதியுள்ள இத்தகைய ஒருபக்க சார்புடைய புரட்டல்வாத நேர்மையற்ற கட்டுரைகளை படிப்பதை விட மஜா,சிவகாசி போன்ற் படங்களைப் பார்ப்பது நல்லது. கோடம்பாக்கம் தரும் ஒரு மூன்றாம்தர மசாலாப் படம் கூட ஜெயகாந்தன் எழுதியிருக்கும்இது போன்ற கட்டுரைகளை விட அறிவுபூர்வமானது, நேர்மையானது என்ற முடிவிற்குயாரேனும் வந்தால் அதில் வியப்படையத் தேவையில்லை.
கருத்து இணையதளமும், இந்தியாவின் வரைபடமும்

கருத்து என்ற அமைப்பு புதிதாகத் துவங்கப்பட்டுள்ளது. அவர்களது இணையதளத்தில் உள்ளஇந்தியாவின் வரைபடம் பிழையானது.

உதாரணமாக மத்திய பிரதேசம் , மத்திய பிரதேசம்,சட்டிஸ்கார் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வரைப்படத்தில் மத்திய பிரதேசம் ஒரே மாநிலமாக காட்டப்பட்டுள்ளது, வட கிழக்கில் உள்ள மாநிலங்கள்இவ்வரைப்படத்தில் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாக இல்லை,அந்தமான, நிக்கோபார்தீவுகள் வரைபடத்தில் இல்லை. புவியியல் ரீதியாகவும் இவ்வரைபடம் தவறான சித்திரத்தினைத்தருகிறது.கருத்து சுதந்திரம் என்பது தவறான வரைப்படத்தினை இணையதளத்தில் இடுவது என்பதையும் உள்ளடக்கியது என்று நினைத்து விட்டார்கள் போலும். மத்திய அமைச்சர் ஒருவரின் மகன்நிறுவனராக உள்ள ஒரு அமைப்பின் இணையதளத்தில் இப்படி ஒரு பிழையான வரைபடம்இடம் பெறுவது தவறான முன்னுதாரணமாக அமையும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகள், வெளியீடுகளில் இந்தியாவின் வரைபடம் தவறாக தரப்பட்டிருந்தால் மத்திய அரசு அதை ஆட்சேபிக்கும் அல்லது அதை பறிமுதல் செய்யும் அல்லது இந்தியாவில்பிழையான வரைபடத்துடன் விற்க அனுமதிக்காது. ஒரு முறை ஐ. நாவின் அமைப்பு ஒன்று வெளியிட்டஒரு அறிக்கையினை ஒட்டி ஒரு விவாத நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,அதில் கருத்துரைவழங்க அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் அந்த வெளியீட்டினைப் பார்க்கவில்லை. அது அன்றுதான் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அக்கூட்டத்தில் பேசியவர்கள் கூறியது குறித்து என் கருத்துக்களைக் கூறினேன். அக்கூட்டத்தில்இந்திய அரசின் உயர் அலுவலர்கள் சிலர் கலந்து கொள்வதாகக் இருந்தது.ஆனால் அவர்கள் வரவில்லை. கூட்டம் முடிந்த பின் ஏன் அவர்கள் வரவில்லை என்று கேட்ட போது அவ்வறிக்கையில்உள்ள இந்தியாவின் வரைபடம் பிழையாக இருந்ததால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க்கவில்லைஎன்று கூறினார்கள். அவ்வறிக்கையை நான் முன்னரே பார்த்திருந்தால் கூட்டத்தில் அதை தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பேன்.

எனவே ஒரு தேசத்தின் வரைபடத்தினை இணையதளத்திலோ அல்லது வெளியீடுகளிலோ இடும் போது மிகுந்த கவனம் தேவை. ஆனால் கருத்து இணையதளத்தில் இக்கவனம் வெளிப்படவில்லை.
இதனைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். சரியான வரைப்படத்தினை விரைவில் இடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
கடவுளின் தண்டனை(கள்)

இது அமெரிக்காவில் உள்ள கிறித்துவ மதப்பிரச்சாரகர் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு பாடதிட்டத்தில் பரிணாம வாதத்தினை மட்டும் போதித்தால் என்ன ஆகக்கூடும் என்று வானொலியில் கூறியிருப்பதைக் குறித்த செய்தி.

இது காத்ரினா குறித்து சமரசம் இதழில் வெளியான கேள்வி பதில்.

இப்போதெல்லாம் சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுத்திடும் என்றெல்லாம் பயமுறுத்துவதில்லை, பிரம்மாண்டமாகத்தான் பயமுறுத்துகிறார்கள்.

இவர்கள் பேசாமல்சங்கரிடம் உதவி இயக்குனர்களாக சேர்ந்து விடலாம் :).
உலக நாடுகளில் மத சுதந்திரம்

உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் முஸ்லீம்கள் அல்லாதோரின் மத சுதந்திரம் எப்படி இருக்கிறதுஎன்பதைக் காட்டியிருக்கிறது. இதையும் பார்க்கவும்

சவுதி அரேபியாவில் சிறுபான்மையினரான ஷியாக்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதையும், சுன்னி இஸ்லாம் தவிர பிற இஸ்லாமியப் பிரிவினர் மீது பாரபட்சம் காட்டப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது.பாகிஸ்தான் குறித்து இவ்வறிக்கை குறிப்பிடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். பாகிஸ்தானில் மத சுதந்திரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் இது குறிப்பிடுகிறது. இதற்காக முஷ்ரப் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்றெல்லாம்அமெரிக்க அரசு தடைவிதிக்காது. ஜியாவுல் கக் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்லாமியமயமாதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா அதை எதிர்க்கவில்லை. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் வளர்ச்சி கம்யுனிசஸ்திற்கும், அன்றைய சோவியத் யுனியனுக்கும் எதிராக இருக்கும் போது இனித்தது. இன்று கசக்கிறது. இஸ்லாமிய அரசுகள் இஸ்லாமிய பிரிவுகளுக்கிடையே பாரபட்சம் காண்பிப்பது, அரசு அங்கீகாரம் பெற்ற இஸ்லாமியசித்தாந்தம் ஒன்றை கற்பிப்பது போன்றவை இஸ்லாமிய சமூகங்களில் பாகுபாடுகள் இல்லை, அனைத்து முஸ்லீம்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது கட்டுக்கதை என்று காண்பிக்கிறது.ஆனால் அமெரிக்க அரசு உண்மையிலேயே மத சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டிருந்தால அது மத ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு, சீனாவிலிருந்து தப்பி ஒடிவந்தவருக்கு முறையான அடைக்கலம் கொடுத்திருக்க வேண்டும்.

இது போன்ற அறிக்கைகளினால் அரசுகளின் கொள்கைகள், கோட்பாடுகள் மாறிவிடும் என்றுஎதிர்பார்க்க முடியாது. அமெரிக்க அரசு, பிற அரசுகள், சர்வதேச அமைப்புகள் செய்யும்முயற்சிகளால் சிறிதளவாவது மாற்றங்கங்கள் ஏற்படுகின்றன. இவ்வறிக்கையை படிக்கும் போது இஸ்லாம் சகிப்புத்தன்மையினை வலியுறுத்தி, பிற மதங்களை ஏற்றுக்கொள்கிறது என்பதுஉண்மையானால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் பலவற்றிலும், இஸ்லாம்அதிகாரபூர்வ மதமாக உள்ள பல நாடுகளிலும் பிற மதத்தவர், இஸ்லாமின் சில பிரிவினர் மத உரிமைகள் ஏன் மதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.அப்படி மதிக்காத நாடுகளைஇஸ்லாமிய கோட்பாட்டின் படி ஆட்சி செய்யும் நாடுகள் என்று கூற முடியுமா?.
'காணாமல் போன' ஆறு கோடிக் குழந்தைகள்

இந்த ஆறு கோடிக் குழந்தைகள் காணாமல் போக ஒரே காரணம்- அவர்கள் பெண் குழந்தைகள்.மேல் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
பதினைந்து வருடங்களும், இரண்டரை லகரமும், ஒரு தற்கொலை முயற்சியும்

வளர்மதி எழுதியிருக்கும் இக்கட்டுரை மே 2004 கவிதாசரண் இதழில் வெளியாகியிருக்கிறது.அதை இன்றுதான் படித்தேன்.

வளர்மதியை நான் ஒரிரு முறைதான் சந்தித்து பேசியிருக்கிறேன்.அவர் தீவிர வாசகர் என்பதை அவர் எழுத்துக்கள் எனக்கு காட்டியுள்ளன.அவர் எழுதியுள்ளவை அனைத்தையும் நான் படித்ததில்லை. இக்கட்டுரை ஒரு தனி மனித அனுபவத்தின் அடிப்படையில்எழுதப்பட்டுள்ளது. சில கேள்விகளை நம்முன் வைக்கிறது.ஒரு விவாதத்தின் துவக்கப்புள்ளியாகக்இதைக் கொள்ளமுடியும்.இக்கட்டுரையைத் தொடர்ந்து இதில் எழுப்பபபட்டுள்ள கேள்விளை அவர்விரிவாக எங்காவது விவாதித்து எழுதியுள்ளாரா என்பதை நானறியேன். அறிந்தோர் அறியத் தரலாம்.

சமீபத்திய இதழ் உட்பட கவிதாசரண் இதழ்கள் பல கவிதாசரண் தளத்தில் கிடைக்கின்றன.
டார்வின்,பரிணாமம், மானுடம் பற்றி எட்வர்ட் வில்சன்

டார்வினின் நான்கு நூல்களை பதிப்பித்து, முன்னுரைகளுடன் தந்திருக்கும் எட்வர்ட் வில்சன் டார்வின், பரிணாமம் குறித்து எழுதியுள்ள அறிமுகக் கட்டுரை இணையத்தில் கிடைக்கிறது.மிகவும் சுவாரசியமான கட்டுரை.எளிய நடையில் வில்சன் எழுதியிருக்கிறார்.

கட்டுரையின் இறுதியில் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு விடை காண்பது எளிதன்று, ஆனால் தவிர்க்க முடியாத கேள்வி அது. அவர் மிகவும் முக்கியமான உயிரியலாளர். உயிரின பன்வகைத்தன்மை குறித்த விழிப்புணர்வினைஉருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

From amazon site

A gorgeous gift and a landmark work that is an essential addition to everyone's personal library.Never before have the four great works of Charles Darwin—Voyage of the H.M.S. Beagle (1845), The Origin of Species (1859), The Descent of Man (1871), and The Expression of Emotions in Man and Animals (1872)—been collected under one cover. Undertaking this challenging endeavor 123 years after Darwin's death, two-time Pulitzer Prize winner Edward O. Wilson has written an introductory essay for the occasion, while providing new, insightful introductions to each of the four volumes and an afterword that examines the fate of evolutionary theory in an era of religious resistance. In addition, Wilson has crafted a creative new index to accompany these four texts, which links the nineteenth-century, Darwinian evolutionary concepts to contemporary biological thought. Beautifully slipcased, and including restored versions of the original illustrations, From So Simple a Beginning turns our attention to the astounding power of the natural creative process and the magnificence of its products. Slipcased hardcover; 101 illustrations, map.

About the AuthorA Harvard professor for four decades, Edward O. Wilson has written twenty books and received numerous awards, including two Pulitzer Prizes and the 1976 National Medal of Science. He lives in Lexington, Massachusetts, with his wife, Irene.