பண்பாடு கெட்டது யாரால் - ஒரு கட்டுரையும், சில கேள்விகளும்

பண்பாடு கெட்டது யாரால் என்ற கட்டுரையில் ஆனாரூனா குஷ்பு சர்ச்சையில் சில விமர்சனப் பார்வைகளை முன் வைத்துள்ளார். இவை விவாதிக்கப்பட வேண்டியவை. கட்டுரையின் இறுதியில்இவ்வாறு எழுதுகிறார்.

'நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமும் மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள் சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள். தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர ‘அழகி’ அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்பு மயமான தோழி!’

இது எளிமைப்படுத்தப்பட்ட புரிதல். ஏனெனில் சோசலிச நாடுகளான சோவியத் யூனியனிலும்,கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பெண்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவிதம் சர்ச்சைக்குரியது.புரட்சிக்கும் பிந்திய நிகாராகுவாவில் தீர்வு காண செய்யப்பட்ட முயற்சிகள் முக்கியமானவை.சிக்கல் என்னவென்றால் பல பிரச்சினைகள் சோசலிச, பெரியாரிய லட்சிய உலகில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை மட்டும் போதாது.

இன்றைய சூழலில் நாம் எப்படி அவற்றை அணுகுகிறோம்,எத்தகைய தீர்வுகளை முன் வைக்கிறோம் என்பது முக்கியம். பெரியாரியவாதிகளின் பெண்ணியபுரிதல் குறித்தும், இடதுசாரிகள் பெண்ணிய பிரச்சினைகளை அணுகும் விதம் குறித்தும் விவாதிக்கவேண்டும். இடதுசாரி என்று சொல்லும் போது ஒரு பரந்த பொருளில் சொல்கிறேன்.

நவீன பெண்ணியத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் உள்ளன. இவை பல பிரச்சினைகளில் ஒரேகருத்தினை அல்லது தீர்வினை முன் வைப்பதில்லை. பொதுவாக இடதுசாரி கட்சி சார் பெண்கள் அமைப்புகளும், கட்சிசார் தன்னார்வ அல்லது சுதந்திரமான பெண்கள் இயக்கங்களும் ஒத்த குறிக்கோள் இருந்தாலும் ஒரே நிலைப்பாடு எடுப்பதில்லை. முன்னுரிமைகள் வேறுபடுகின்றன,யுக்திகளும், செயல்திட்டங்களும் வெவ்வேறு அனுமானங்கள் அடிப்படையில் வகுக்கப்படுகின்றன.எனவே நமது புரிதலும், உரையாடலும் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பெரியாரியபெண்ணியத்தின் அரசியல் பொருளாதாரப் புரிதல் எத்தகையது என்பதையும் கவனிக்க வேண்டும்.பெரியாரியவாதிகள் கவனம் செலுத்தாத பலவற்றில் அரசியல் பொருளாதாரமும் ஒன்று. அரசுகுறித்த பெண்ணியவாதிகளின் விமர்சனங்கள் முக்கியமானவை.

சில புள்ளிகளில் கருத்தொற்றுமை சாத்தியமாகலாம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் பெரியாரியப் பெண்ணியமும், மார்க்சியப் பெண்ணியமும், சோசலிச பென்ணியமும் ஒரே நிலைப்பாட்டிற்கே இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. சட்டமன்றம்,நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பெரியாரிய இயக்கங்களும்,இடதுசாரி கட்சிகள் / பெண்ணிய அமைப்புகளும் இட ஒதுக்கீடு ஏற்றாலும், ஒத்த கருத்தினை அதை நடைமுறைப்படுத்துவதில் கொண்டிருக்க வில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனாரூனா என்கிற அருணாச்சலம் மாணவர் நகலகத்தின் நிறுவனர், நந்தன் வழி என்ற இதழின் வெளியீட்டாளர், சென்னையில் தமிழ் இசை விழாவினை நடத்தியவர். பெரியாரியஇயக்கங்கள், ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாளர். தன் கொள்கைகள் காரணமாக பல நெருக்கடிகளைச் சந்தித்தவர், நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னும் கொள்கையில் உறுதியாகநின்றவர். இந்த விதத்தில் நான் அவரை மதிக்கிறேன்.

6 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

இதில் இருந்து விலகி:

நந்தன் பத்திரிக்கையும், அதன் ஆசிரியரும் (ஆனாரூனா) அரசு மற்றும் ஆதிக்க சக்திகளின் கடுமையான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானார்கள். வெளியில் ஜனநாயகமாகத் தோற்றமளிக்கும் சக்திகள், அரசுகள் எந்த எல்லைகளுக்குச் செல்லமுடியும் என்பதை இந்த நந்தன் பத்திரிக்கை விசயத்தை கவனிப்பவர்கள் புரிந்துகொள்ளாமுடியும். தமிழ்ச்சான்றோர் பேரவையின் நிறுவனரான அருணாசலம் தலைமையில் தமிழ்ச்சான்றோர் பேரவை அப்போது தாய்மொழி வழிக்கல்விக்கான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்தல், தமிழ்நாட்டின் இருக்கும் நூற்றுக்கும் மேலான தங்களுக்குள் முரண்பட்ட தமிழியக்கங்களை ஒன்றிணைத்து போராட்ட ஒழுங்குகளைச் செய்தல், இவைகளில் கணிசமான வெற்றிகளைப் பெற்றது. இதைக்கண்டு அச்சமுற்ற கழக அரசுகளே பேரவைக்கும், பத்திரிக்கைக்கும், அருணாசலத்துக்கும் எதிரான போக்கை கைக்கொண்டன. அதில் தமிழின எதிரிகளாக கருதப்படுகிறவர்களும் கைகோர்த்துக்கொண்டது விந்தை.

கட்டுரைக்கு:

தங்களது செயல்திட்டங்கள், வழிமுறைகள் இவைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியச்சூழலிலும், பொதுவிலும் இந்த கருத்தியல் கொண்ட அமைப்புகளிடமிருந்தும் இந்தக் கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்துமே பெண் விடுதலைக்கான மாற்றத்தை எதிர்பார்க்கமுடியுமே அல்லாமல் எந்த வலதுசாரி அமைப்புகளிடமும் இருந்து அல்ல என்று நான் நினைக்கிறேன்.

பதிவுக்கு நன்றி!

4:45 PM  
Blogger pozudhu மொழிந்தது...

முதலில் பெரியாரிய பெண்ணீயம் என்பது என்ன? பெரியாரியம் என்பதுதான் என்ன?
பெரியார் பல ௾டங்களில் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார்.
மதமே ௾ல்லை, கடவுள் ௾ல்லை என்று சொன்ன மனிதர் சில நேரம் சாதிகள்
இல்லாத, கடவுள் இருக்கும் ௾ இஸ்லாத்துக்கு மாறச்சொல்கிறார்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை லிபரல் மற்றும் மார்க்சீய பெண்ணீயத்தோடு
எப்படி ஒத்து பொகிறது?

அவருடைய சமூகச் சேவையை, மனித விடுதலை என்ற நோக்கத்தை என்னால்
பாராட்ட முடிகிறது. ஆனால் பெரியாரியம் என்ற கொள்கைதான் என்னவென்று
கேட்டால் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

வெவ்வேறு காலகட்டத்தில் அவர் சொன்னவற்றை என்ன ௾யம் என்று உருவகப்படுத்தவது
என்று புரியாத நிலையில் பெரியாரிய பெண்ணீயம் என்று புதிதாக ஒன்றை
அறிமுகப்படுத்துகிறீர்கள்.

பெரியாரியமும், மார்க்சீயமும் இன்று உண்மையிலேயே இந்தியாவில் நடைமுறையில்
உள்ளதா?

5:04 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இணைப்புக்கு நன்றி இரவி.
....
'கற்பு', 'அழகி', 'தென்றல்' போன்றவற்றை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிற்து ஆனாரூனாவின் கட்டுரை.
....
//ஆண்கள் யோக்கியர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் ‘கறை’படாதவர்களாக இருக்க முடியாது என்கிற எதார்த்தம் எதிர்கொள்ளும்போது, அந்தோ, தனக்குள்ள ‘சுதந்திரமே’ அச்சுறுத்தலாகவும் மாறிக் கலங்கித் தவித்து ஒவ்வொரு நிமிடமும் தனது மனைவியைக் கண்காணித்து, இத்தனை கட்டுப்பாட்டுக்குள்ளும் எப்படி இவளால் சிரித்து சிங்காரித்து வாழ முடிகிறது என்று சந்தேகித்து, அவள் அழகாய் இருப்பது வேறொருத்தனுக்காகத் தானோ என்று குமுறிக் குமைந்து நிம்மதியற்று நித்தம் நித்தம் வெந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

இம்மாதிரியான கலக்கத்திலும் குழப்பத்திலும் தவிப்பிலும் தகிப்பிலும் ஆண்கள் நிம்மதியற்றுப் போனதால்தான் கற்பு ஒழுக்கம், பண்பாடு என்கிற கூப்பாடு வெகுகாலமாய்க் காதைக் கிழிக்கிறது. தன்னைப் பற்றிய குற்ற உணர்வும் பெண்ணைப் பற்றிய சந்தேக உணர்வும் ஒன்று திரண்டு ஒவ்வொரு ஆணையும் மிரட்டுகிறது. இந்த அச்சத்திலிருந்து தப்பும் மார்க்கமாக அவன் பத்தினித் தெய்வங்களையும் கற்புக்கரசிகளையும் தேடித் திரிந்து புனைந்துருவாக்கி ஆறுதலடைகிறான்.//
தெளிவாகச் சொல்லப்ப்ட்டதாக நினைக்கின்றேன்.
.....
இரவி, தங்கமணி நீங்கள் குறிப்பிட்ட மாதிரி 'நந்தன் வழி' மூலமே நான் ஆனாரூனாவை முதன்முதலில் அறிந்துகொண்டேன். பிறகு தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழிசை நிகழ்வுகள் என்று அவரும் அவரைச் சார்ந்தோரும் நடத்தியபோது மிகவும் மகிழ்வாயிருந்தது. தனது பத்திரிகையில் எழுதியவருக்கு எல்லாம் சன்மானம் கொடுத்து கெளரவித்தது இன்னும் பிடித்திருந்தது.
எனக்குத் தெரிந்த ஒருவரின் (கன்டாவிலிருந்து சென்று தமிழநாட்டில்) தமிழ்முறைப்படி செய்த திருமணத்தையும் அவர் முன்னின்று நடத்தியிருக்கின்றார். இன்று செயற்பாடுகள் இல்லாது ஓரிடத்தில் அவர் முடக்கப்பட்டிருந்தாலும், இப்படி எழுத்துக்களின் மூலமாவது அவரைக் காணமுடிவது மகிழ்ச்சியளிக்கிறது.

6:19 PM  
Blogger கொழுவி மொழிந்தது...

பத்தியை எடுத்தாண்டதுக்கு நன்றி.
நந்தன் இப்போதும் வெளிவருகிறதா?

10:21 PM  
Blogger முத்து(தமிழினி) மொழிந்தது...

ஒரு பொதுவாக நிலைப்பாட்டை கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பொது புள்ளி என்பது ஒரு பரந்த வெளியில் அடையப்படும். அதுவே முதல் வெற்றி என்று கட்டுரையாளர் அர்த்தப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சனையையும் அவர் கூறாத வரை அவர் கூறியது சரிதானே.அப்படி தனிப்பட்ட ஒரு பிரச்சனையை அவர் எடுத்தாண்டு இருந்தால் அந்த பிரச்சனையில் இவர்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதையும் நீங்கள் கூறி இருக்கலாம்.

12:15 AM  
Blogger ramachandranusha மொழிந்தது...

//பெரியாரியமும், மார்க்சீயமும் இன்று உண்மையிலேயே இந்தியாவில் நடைமுறையில்
உள்ளதா?//

ரவி, "பொழுது" கேட்ட கேள்வியை நானும் பலமுறை சிந்தித்துள்ளேன். எந்தளவு இவர்களின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள்
நடைமுறையில் நடத்திக் காட்டியுள்ளார்கள்? இயக்கமாய் இவ்விரண்டும் இருக்கிறதா?

2:04 AM  

Post a Comment

<< முகப்பு