சுந்தர ராமசாமி : சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி (சு.ரா) வின் எந்தக் கதையை முதலில் படித்தேன் என்று நினைவில்லை. ஆனால்ஏதோ ஒரு புத்தகத்தில் அவர் கதைகளைப் படித்தது கல்லூரியில் ஒரு புளியமரத்தின் கதையைப்படித்த போது நினைவிற்கு வந்தது. பசுவய்யா கவிதைகள் (நடுநிசி நாய்கள் ?), வெ.சாவின் கட்டுரை தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை போன்றவற்றையும் படித்தேன். பின்னர்அவரை நேரில் சந்தித்தேன். அவர் வீட்டிற்கு ஒரிரு முறை சென்றிருக்கிறேன். ஒரு காலத்தில் சு.ராவிற்கு மிகவும் பரிச்சயமான சி.மோகன், மணா என்று அறியப்படும் எஸ்.டி.லட்சுமணன்போன்றோருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. மோகன் மூலம் பல சிறு பத்திரிகைகள்,நூல்கள் அறிமுகமாகியிருந்தன. இன்னொரு புறம் சுமாக்கர், பிராம், ஜித்து கிருஷ்ணமூர்த்தி,இலிக், ரமணர் என்று படித்துக் கொண்டிருந்தேன். ஜே.ஜே சில குறிப்புகள் முதலில் படித்தபோது மிகவும் கவர்ந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மீதான என் மதிப்புதேயத்துவங்கியது. இப்போது படித்தால் நிறைகளை விட குறைகளே அதிகம் தோன்றும் என்றுநினைக்கிறேன். அவரது மூன்றாவது நாவலை நான் படிக்கவில்லை. அதையும் கள்ளிக்காட்டுஇதிகாசத்தையும் ஒப்பிட்டால் சு.ராவிற்கே சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்க வேண்டும்என்று கோவை ஞானி நேர் பேச்சில் தெரிவித்தார். அவர் இரண்டையும் படித்தவர், நவீனதமிழ் இலக்கியம் குறித்த ஆழ்ந்த புலமையும், பரந்த அறிவும் கொண்டவர் என்பதால் அவர்கருத்தினை நான் ஏற்க முடியும்.

ஒரு குறுகிய காலத்திற்கு எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்தது. சமூக அறிவியல்கட்டுரைகள், நூல்களை அவருக்கு பரிந்துரைத்திருக்கிறேன். அவருக்கு சில கட்டுரைகளைஅனுப்பியிருக்கிறேன். இப்போது எழுதும் பலர் ஏன் ரஸ்ஸல் போல் புரியும் வண்ணம் எழுதமாட்டேன் என்கிறார்கள், ஏன் சுற்றி வளைத்து எழுதுகிறார்கள் என்று சில கட்டுரைகளைப்படித்து விட்டு எனக்கு எழுதினார். அவ்வப்போது கூட்டங்களில் அவரை சந்திப்பதுண்டு,பரஸ்பர நலம் விசாரிப்பது தவிர வேறு எதையும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும்பொதுவான நண்பர்கள் இருந்தார்கள்.

நான் அவரது க்ட்டுரைகளை ஆங்காங்கே படித்திருக்கிறேன்.பின்னர் திண்ணையில் வெளியான கட்டுரைகள், உரைகளைப் படித்திருக்கிறேன். அவரது புனைவற்றஎழுத்துக்கள், நான் படித்த அளவில், எனக்குப் பெரிதாகக் தோன்றவில்லை. கவிதை, சிறுகதையில்அவர் சாதித்தது அதிகம் என்பது என் கணிப்பு. ஒரு வேளை அவரது கட்டுரை தொகுப்புகளைப்படித்தால் என் கருத்தில் மாற்றம் ஏற்படக் கூடும். அவரது கட்டுரைகள் மிகவும் பொதுமைப்படுத்திப்பேசுகின்றன, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கருத்துக்கள் என்று அவரிடம் அதிகம் இல்லை, சிறுபத்திரிகைக் கண்ணோட்டமே அவற்றில் வெளிப்படுகிறது என்பதுடன் தர்க்க ரீதியாக அவர் முன்வைக்கும் வாதங்கள் வலுவற்றவை என்பது என் கருத்து. ஜெயேந்திரர் கைது குறித்த அவர் கட்டுரையைஇதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

எனக்கு அவருடன் கடிதத் தொடர்பு இருந்த போது பிரமிளுடனும் தொடர்பு இருந்தது. இது இருவருக்கும் தெரியும் என்றாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் என்னிடம் குறை கூறியதில்லை. எழுத்தில் பிரமீள் சு.ராவை மிகக் கடுமையாக விமர்சித்தாலும் நேரிலும், கடிதங்களிலும் அவரைப் பற்றி என்னிடம் குறை கூறியதில்லை, இழிவாகப் பேசியதில்லை. ஆனால் பாரிசிற்கு தான் செல்ல வேண்டிய வாய்ப்பு சு.ராவிற்கு போனது குறித்த கோபம் பிரமீளுக்கு இருந்தது. பிரமீள் பெயர்தான் முதலில் பரிந்துரைக்கப்பட்டதாகவும், பின்னர் சு.ராவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்பது பிரமீள் தரப்பு வாதம். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

நூல்கள் மீது அவருக்குப் அபாரமான கவனம் இருந்தது. புதிய நூல்கள், ஆசிரியர்கள் குறித்துஆர்வத்துடன் கேட்பார், கடிதங்களில் குறிப்பிட்டால் தான் அதை கவனத்தில் கொள்வதாகவும்கிடைத்தால் வாங்கிப் படிக்க முயல்வதாகவும் எழுதுவார். தமிழில் ஏராளமான மொழிபெயர்ப்புகள்வெளிவர வேண்டும் என்ற விருப்பத்தினை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் எனக்கு அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்தது. பின்னர் அமெரிக்காவிற்கு வந்த போது, சில ஆண்டுகள் முன், மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. சாந்தா குருஸ் வாருங்கள், மனைவியையும்க் கூட்டிக் கொண்டு வருவாங்கள் என்று தொலைபேசியில் பேசும் போது குறிப்பிட்டார். நூல்கள் பற்றி தொலை பேசியில் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறோம். அவருக்கு நான் கட்டுரைகள் அனுப்பி வைத்திருக்கிறேன். கென் வில்பரின் மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பினையும் அனுப்பி வைத்தேன், வேறு பல நூல்களை பரிந்துரைத்தேன். என் பிரதான கவனம் இலக்கியத்தில் இல்லை என்பதால் அவருக்கு ஆர்வமுட்டக் கூடிய இலக்கியம் சாரா நூல்களை மட்டுமே பரிந்துரைத்தேன். என் கட்டுரைகளை (கிட்டதட்ட தமிழில் நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும்) அவர் படித்திருக்கிறார் என்பது அமெரிக்காவில் அவருடன் தொலைபேசும் போது தெரிந்தது. தொடர்ந்து எழுதுங்கள், தமிழில் பலர் தொடாத விஷயங்களை எழுதுவது நல்லது என்று கூறினார்.

அவர் துவங்கிய காலச்சுவட்டின் ஆரம்ப இதழ்கள் இப்போதைய காலச்சுவட்டுடன் ஒப்பிடுகையில் தரத்தில் சிறந்தவை என்றே சொல்ல வேண்டும். பல புதிய எழுத்தாளர்கள் எழுத அவர் இடமளித்தார்.காம்யு குறித்த வ.கீதாவின் கட்டுரை உட்பட பல புதிய விஷயங்கள் அதில் வெளியானது.

தமிழ் சிறுபத்திரிகை உலகிலும், வெளியிலும் சு.ரா அபிமானிகள், ஆதரவாளர்கள் என்று கூறத்தக்க ஒரு குழுஎப்போதும் உண்டு. சமயங்களில் அவர்களின் பிரச்சாரம் சகித்த முடியாதபடி இருக்கும். 1999 அல்லது 2000 என்று நினைக்கிறேன், சு.ரா வை பாரதி, புதுமைப்பித்தனுக்கு அடுத்த படி சித்தரித்து ஒரு கட்டுரை வெளியாகியிருப்பதாக ஒரு விமர்சகர் என்னிடம் தெரிவித்தார். இது எனக்கு வியப்பூட்டவில்லை. பல்லக்குத் தூக்கி கதை எழுதியவர் சிலையை அல்லது படத்தை பல்லக்கில் வைத்து தூக்க ஒரு குழு தயாராக இருந்தது என்பது ஒரு நகை முரண். பீடங்கள், மடங்கள் தமிழ் இலக்கிய உலகில் புதிதல்ல. நேற்றைய குருவின் பிரதான சீடன் இன்று தன்னைக் குருவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு புதிய மடத்தினை துவங்குவது நமக்குப் புதிதல்லவே. சு.ரா விஷயத்திலும் இதுதான் நடந்தது.

அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பு. வெற்று புகழரைகளாக முன் வைக்கப்படும், அவர் குறித்த இன்றைய மதிப்பீடுகளை காலம் ஏற்காது என்பது என் கணிப்பு. இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதையும் தாண்டி அவரை பெரும் சிந்தனையாளராக, இலக்கிய விமர்சகராக நிறுவ முயல்வது போன்றவற்றை காலம் நிராகரித்துவிடும் என்றே கருதுகிறேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு