ஒரு உரையாடலும், சில குறிப்புகளும்

சுந்தர ராமசாமியுடன் (சு.ரா) நடந்த ஒரு உரையாடலை பி.கே.சிவக்குமார் திண்ணையில் இருபகுதிகளாகப் பதிவு செய்திருக்கிறார், தன் வலைப்பதிவிலும் இட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்.

இந்த உரையாடலின் பதிவான சில கருத்துக்கள் குறித்த என் எண்ணங்களை இங்கு தருகிறேன். அங்கு விவாதிக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தினையும் நான் இங்கு அலசப் போவதில்லை. ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதுகிறேன்.

மேற்கில் மகாபாரதமோ அல்லது திருக்குறளோ உரிய கவனம் பெறவில்லை என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அவர்களும் அவ்வாறே கருத வேண்டும் நாம் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கத் தேவையுமில்லை. மேற்கு தன் அறிவு உலகின் மூலமாக கிரேக்க சிந்தனையும், நாகரித்தினையும் கருதுகிறது.இந்தியா அல்லது சீனத்தை அல்ல. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்களுக்கு வியாசரை விட ஹோமர் மிக முக்கியமானவராக, திருவள்ளுவரை விட அரிஸ்டாட்டிலும், பிளோட்டாவும் முக்கியமானவர்களாக இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. மேலும் மேற்கின் அங்கீகாரமே உலகின் அங்கீகாரம் என்று நாம் ஏன் கருத வேண்டும். சிலப்பதிகாரமோ அல்லது மகாபாரதமோ அல்லது திருக்குறளோ அவர்களைப் பொருத்த வரை கிழக்கத்திய நாகரித்தின் பங்களிப்புகள் என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படலாம். மகாபாரதம் இதிகாசம் அல்லது காவியம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்படலாம்.

மேற்கு கிழக்கினை பல்வேறு விதங்களில் பார்க்கிறது, கையாள்கிறது, புரிந்து
கொள்ள முயல்கிறது. அதில் ஒன்று கிழக்கினை, அதன் பண்பாட்டினை exotic, mysterious ஆகப் பார்ப்பது. இன்னொன்று கிழக்கினை வெறும் கடந்த காலமாக அருங்காட்சியகப்படுத்துவது. மேற்கு கிழக்கினை ஒரு பிறவாக (the other) கருதுவதும் உண்டு. இப்படி மேற்கு கிழக்கினை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறது, புரிந்து கொண்டது, புரிந்து கொள்ள முயல்கிறது என்பது பற்றி விரிவான நூல்கள் இருக்கின்றன. பல விமர்சனங்கள், குறைகள் இருந்தாலும் Edward Said எழுதிய Orientalism இந்த விதத்தில் முக்கியமான நூல். சு.ரா இதைப் படித்திருந்தால் மேற்கு குறித்த அவரது புரிதல் மாறியிருக்கலாம்.

உலகப் பொது மறை என்று நாம் கருதினாலும், அப்படி ஒரு பொது மறை இருக்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறதே. இதை நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும். அரிஸ்டாட்டில் அறம் குறித்து கூறியவை அவர்களுக்கு முக்கியமாக இருப்பதால் அறம்,அறநெறி குறித்த பாடத்திட்டங்களில் அரிஸ்டாட்டில் எழுதியவை இடம் பெறுவதில் வியப்பில்லை. அது போல் ரோமானிய சட்டங்கள், கிரேக்க நீதி குறித்தும் அவர்கள் அதீத அக்கறை காட்டுவதில் ஆச்சரியமில்லை. எனவே திருக்குறளோ அல்லது மனுஸ்மிருதியோ அவர்களைப் பொருத்தவரை ஆதி காலத்து நீதி நூல்கள் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டியவை. அவற்றின் விழுமியங்கள், நீதிக் கோட்பாடுகள் அந்த நாகரித்தின் நீதிக் கோட்பாடுகள், விழுமியங்களின் துவக்கப் புள்ளிகள் அல்ல. இதை நாம் மறந்து விடக்கூடாது. தப்பித்தவறி யாராவது சிலர் பண்டைய நீதி நூல்கள் குறித்த ஒப்பிட்டாய்வில் ஈடுபடும் போது திருக்குறளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, புரிந்து கொண்டு எழுதக் கூடும். ஒரு சில பாடத்திட்டங்களில் திருக்குறள் குறித்த கட்டுரை அல்லது அதன் பகுதிகள், வேறு சிலவற்றுடன் இடம் பெறக்கூடும். எனவே திருக்குறளை பல்வேறு தளங்களில் பல்வேறு முறைகளில் அறிமுகம் செய்ய நாம் முயலலாம்.

வெகுஜன வாசகர்களுக்கு திருக்குறள் முன்னிறுத்தும் நீதி, அறம் குறித்து எளிமையான நடையில் விளக்கும் வகையில் நூல்கள், மொழிபெயர்ப்புகள் இருக்கலாம். ஆனால் திருக்குறள் முன்னிறுத்தும் பல விழுமியங்கங்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அந்நியமானவை என்பதால் திருக்குறள் எழுதப்பட்ட காலம், பண்டைத் தமிழர் பண்பாடு குறித்த ஒரு அறிமுகமும் தேவை. இல்லையென்றால் திருக்குறளை ஒரு நிலப்புரபுத்துவ அறவியல் நூல் அல்லது ஆணாதிக்க அறவியல் நூல் என்ற புரிதலை அடிப்படையாகக் கொண்டு இன்றைய வாசகர் அதை முற்றுமாக ஒதுக்கிவிடும் அல்லது நிராகரித்துவிடும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. மேலும் இன்றைய வாசகரிடம் உலகப் பொதுமறை நூல் என்று ஒன்றை அறிமுகம் செய்வது சரியாகவும் இருக்காது. உலகப் பொது மறையாக அதை விளம்பரப்படுத்துவது ஒரு எதிர் மறையான கண்ணோட்டத்தினையே உருவாக்கும்.

ஒரு படைப்பாளி உலகின் பிறக் கலாச்சாரங்களின் உன்னத படைப்புகள் குறித்து ஏதும் அறியாமலேயே சிறந்த ஆக்கங்ளைத் தரமுடியும். மகாபாரதமோ, சிலப்பதிகாரமோ படிக்காத ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளர் அல்லது கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர் தன் சூழலில் இருந்து கொண்டு உலகம் குறித்த தன் கண்ணோட்டம் கொண்டு சிறந்த படைப்பினைத் தர முடியும். மேலும் ஒரு பிரதியைப் படித்தாலும் அப்பிரதிக்குரிய கலாச்சார விழுமியங்களை, குறியீடுகளை, மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வது எளிதல்ல.

உதாரணமாக கீகர்கார்டினை நான் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் அவரது கேள்விகள், பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக 100% பார்க்க முடியாது. அவரது சூழல், கிறித்துவ அறம், விழுமியங்கள் போன்றவை எனக்கு எழுத்து மூலமே பரிச்சயம் என்பதால் கீகர்கார்டினை நான் முழுதுமாக ஒரு ஐரோப்பியர் போல் உள்வாங்குவது எளிதல்ல, அது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியும் இருக்கிறது. இது போல்தான் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் ஒரு ஐரோப்பியரால் அல்லது ஆப்பிரிக்கரால் எந்த அளவு உள்வாங்கப்படும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

காம்யு புரோமிதயஸ் குறித்து எழுதும் போது கிரேக்க புராணக்கதையிலிருந்து ஒரு முன்மாதிரியினை எடுத்துக் கொள்கிறார். அவர் திரிசங்கு என்ற பாத்திரத்தை எங்காவது குறிப்பிட்டால் அல்லது பயன்படுத்தினால்தான் ஆச்சரியப்பட வேண்டும். எனக்கு புரோமிதியசை விட திரிசங்கு கலாச்சார ரீதியாக நெருக்கமான பாத்திரம். புரோமிதியஸ் போன்ற பாத்திரம் என் தேசத்து இதிகாசங்களில் இல்லை என்பதால் நான் காம்யுவைப் படித்து ஏதாவது எழுதினால் அது புலியைப் போல் சூடு போட்டுக் கொண்ட பூனை போல் கதையாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியரும், ஆங்கிலம் மூலமாக கிரேக்க நாடகங்களும் நம் நாடகச் சூழலில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஸ்பானிஷ் மொழி, பிரெஞ்சு மொழி நாடகங்கள், காவியங்கள் நமக்கு அறிமுகம் அதிகம் ஆகவில்லை என்பதால் அவற்றின் தாக்கம் மிகக்குறைவாகவே உள்ளது. இதற்குக் ஒரு முக்கிய காரணம் காலனியாக்கப் போட்டியில் இந்தப் பகுதியில் ஆங்கிலேயர் கை மேலோங்கியது.

சு.ரா கேட்ட கேள்வி,

சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் - இங்லீஸ் ஸ்காலர்ஸ் - அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்

இன்று ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில், உபதுறையில் பாண்டித்தியம் பெருவது, ஆழமாகப் பயில்வது, எழுதுவது போன்றவற்றைச் செய்வதே பெரும் உழைப்பையும், நேரத்தையும், திறனையும் கோருவதாக உள்ள நிலையில் வேறு துறையில் உள்ள வெளியீடுகள், ஆய்வுகள் குறித்து அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க இயலாது.அறிவுத் துறைகள் பல உபதுறைகளாக அல்லது பிரிவுகளாக உள்ளன.

இலக்கியம் என்று என்னதான் பொதுவாகப் பேசினாலும் ஆய்வாளர்கள் பெரும்பான்மையோர் குறிப்பிட்டவற்றிலேதான் தனிக் கவனம் செலுத்துகிறார்கள். உதாரணமாக காமன்வெல்த் இலக்கியம், லத்தின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம், பின் நவீனத்துவமும் இலக்கியமும். எனவே ஒரளவிற்கு பொதுவான இலக்கியம் குறித்த புரிதல் இருந்தாலும் ஒரு இலக்கியப் பிரதி எல்லோருக்கும் ஆர்வம் ஊட்டக்கூடியதாக அல்லது முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.

உதாரணமாக சால்மன் ருஷ்டியின் எழுத்துக்கள் காமன்வெல்த் இலக்கியம், post-colonial studies போன்றவற்றில் உள்ள ஆய்வாளர்களிடம் பெறும் கவனத்தினை லத்தின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களிடமும் பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.இதன் பொருள் அவர்கள் ருஷ்டியை நிராகரிக்கிறார்கள் என்பதல்ல. அதே சமயம் தெற்காசியாவின் சமகால வரலாற்றில் ஆய்வு செய்யும் ஒருவருக்கு ருஷ்டியின் எழுத்துக்கள் மீது ஆர்வம் இருக்கலாம்.

சிலப்பதிகாரம் நவீன இலக்கியம் அல்ல. குரோசவா மாக்பெத்தையை கையாண்டது போல் யாராவது சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் இயக்கினால் அது ஒரளவு கவனிப்பைப் பெறக்கூடும். பீட்டர் புருக்ஸ் மகாபாரதத்தினை உலக அரங்கிற்கு இட்டுச் சென்றது போல் யாராவது செய்தால் சிலப்பதிக்காரம் என்ற மூல நூல் ஒரளவாவது கவனிக்கப்படும் அல்லது அதன் மொழிபெயர்ப்பு பல வாசகர்களை எட்டும். சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு நவீன புதினம் எழுதினால் சிலப்பதிகாரப் பிரதி கவனம் பெறும். அல்லது சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு மேடை நிகழ்வு, தொலைக்காட்சித் தொடர் உருவாக்கப்பட்டால் மூலப்பிரதி பலரால் கவனிக்கப்படும். வெறும் மொழிபெயர்ப்பு எத்தனை பேரை சென்றடையும், எத்தனை பேர் அதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பல்கலைகழகங்களில் இலக்கியத்துறையில் உள்ளவர்கள் பலர் குறிப்பிட்டவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக, நிபுணர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சிலப்பதிகாரம் என்பது epic in a classical language என்றளவிலே தெரியவரும். அதற்கு மேல் அது குறித்து அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் classical literaure of India என்பதில் அக்கறை உள்ளவர்கள் அல்லது உலக இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அல்லது பண்டைய தெற்காசியாவின் வரலாறு, பண்பாட்டில் ஆய்வு செய்பவர்கள் அல்லது தமிழ்நாடு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அல்லது பண்டைய இலக்கியங்களில், நாகரிங்களில் ஒப்பீட்டு ஆய்வுகள் புரிபவர்களுக்கு அந்த மொழிபெயர்ப்பு ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். ஒரு பல்கலைகழகத்தில் humanities என்ற பிரிவின் கீழ் ஆய்வு செய்பவர்கள், மாணவர்கள், பாடம் கற்பிப்பவர்களில் 5% - 10% பேர் சிலப்பதிகார மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டினால் அதுவே அதிகம். அதில் எத்தனைபேர் அதை ஊன்றிப் படிப்பார்கள் என்பது கேள்விக்குறி.

சு.ரா நினைப்பது போல் முக்கியமான ஸ்காலர்ஸ் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை, ஆங்கிலத்தில் வெளியாகின்றவை அனைத்தையும் படிப்பதில்லை. பிரெஞ்ச், ஸ்பானிஷ்,ஜெர்மன் போன்ற மொழிகளில் எழுதும் பல சிந்தனையாளர்களின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால் அவர்களில் பலர் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. ஐரோப்பாவின் பல பல்கலைகழகங்களில் செய்யப்படும் ஆய்வுகள் முதலில் ஆங்கிலத்தில் வெளியாயவதில்லை. இதில் ஆசியாவைப் பற்றிச் செய்யப்படும் ஆய்வுகளும் அடக்கம். எனவே சிலப்பதிகாரத்தினை ஆங்கிலம் வழியாகப் படிக்காமல் ஒரு ஜெர்மானியர் தன் தாய் மொழி, தமிழ் மூலம் அறிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

சு.ராவின் அனுமானங்கள் பலவீனமானவை, எனவே கேள்வியும் பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. சு.ரா குறிப்பிடும் ஸ்காலர்ஸ், இங்லீஸ் ஸ்காலர்ஸ் யார் என்பதை அவர் தெளிவாக்கவில்லை.

இந்திய அளவிலும், உலக அளவிலும் குறிப்பிடத் தக்க சமூக அறிவியல் அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி ஆங்கிலத்திலும்,வங்க மொழியிலும் எழுதுகிறார். ஆனால் தமிழ் நாட்டில் சிறு பத்திரிகை உலகில் எத்தனை பேருக்கு இந்தியாவின் மிகச் சிறந்த சமூகவியல் அறிஞர்கள் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியும்.பார்த்தாவின் கட்டுரைகள் அல்லது உரைகள் உலகின் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், தமிழில் இல்லை (நானறிந்த வரை). இதை எப்படிப் புரிந்து கொள்வது.

என்னைக் கேட்டால் 'ஸ்காலர்ஸ், இங்லீஸ் ஸ்காலர்ஸ்' சிலப்பதிகார மொழிபெயர்ப்பினை படிப்பார்களா என்ற கேள்வியை விட தமிழில் பிற இந்திய மொழியில் உள்ள எல்லாக் காவியங்களின் மொழிபெயர்ப்பும் கிடைக்கின்றனவா என்ற கேள்வி முக்கியம்.சமகால இந்திய சிந்தனை தமிழில் தரப்ப்டுகிறதா, அதன் மீது விவாதம் இருக்கிறதா என்பது முக்கியம்.

சு.ரா வின் உலகம் என்பது ஆங்கிலம் சார்ந்த உலகமாக இருக்கிறது. இது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதின் விளைவு. பிரெஞ்ச்காரர்கள் ஆங்கில்லேயரைத் தோற்கடித்து இந்தியாவை ஒரு பிரெஞ்சு காலனியாக மாற்றியிருந்தால் மேற்கையும், உலகையும் நாம் பிரெஞ்ச் மூலம் பார்த்திருப்போம், புரிந்து கொள்ள முயற்சி செய்திருப்போம். ஆனால் 1947க்குப் பின்னரும் நாம் ஆங்கிலமே உலகம் என்று கருதிக் கொண்டிருந்தால் எப்படி. சு.ரா வின் பல கேள்விகளில், கருத்துக்களில் ஆங்கிலமே உலகம் என்ற அனுமானம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

(கிழக்கும் மேற்கும் சந்திக்கவே முடியாது அல்லது ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவே முடியாது என்று நான் வாதிடவில்லை. மேலும் கிழக்கு, மேற்கு என்று குறிப்பிடுவதே ஒரு வசதிக்காகத்தான்).

தொடரும்
பண்பாடு கெட்டது யாரால் - ஒரு கட்டுரையும், சில கேள்விகளும்

பண்பாடு கெட்டது யாரால் என்ற கட்டுரையில் ஆனாரூனா குஷ்பு சர்ச்சையில் சில விமர்சனப் பார்வைகளை முன் வைத்துள்ளார். இவை விவாதிக்கப்பட வேண்டியவை. கட்டுரையின் இறுதியில்இவ்வாறு எழுதுகிறார்.

'நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமும் மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள் சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள். தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர ‘அழகி’ அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்பு மயமான தோழி!’

இது எளிமைப்படுத்தப்பட்ட புரிதல். ஏனெனில் சோசலிச நாடுகளான சோவியத் யூனியனிலும்,கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பெண்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவிதம் சர்ச்சைக்குரியது.புரட்சிக்கும் பிந்திய நிகாராகுவாவில் தீர்வு காண செய்யப்பட்ட முயற்சிகள் முக்கியமானவை.சிக்கல் என்னவென்றால் பல பிரச்சினைகள் சோசலிச, பெரியாரிய லட்சிய உலகில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை மட்டும் போதாது.

இன்றைய சூழலில் நாம் எப்படி அவற்றை அணுகுகிறோம்,எத்தகைய தீர்வுகளை முன் வைக்கிறோம் என்பது முக்கியம். பெரியாரியவாதிகளின் பெண்ணியபுரிதல் குறித்தும், இடதுசாரிகள் பெண்ணிய பிரச்சினைகளை அணுகும் விதம் குறித்தும் விவாதிக்கவேண்டும். இடதுசாரி என்று சொல்லும் போது ஒரு பரந்த பொருளில் சொல்கிறேன்.

நவீன பெண்ணியத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் உள்ளன. இவை பல பிரச்சினைகளில் ஒரேகருத்தினை அல்லது தீர்வினை முன் வைப்பதில்லை. பொதுவாக இடதுசாரி கட்சி சார் பெண்கள் அமைப்புகளும், கட்சிசார் தன்னார்வ அல்லது சுதந்திரமான பெண்கள் இயக்கங்களும் ஒத்த குறிக்கோள் இருந்தாலும் ஒரே நிலைப்பாடு எடுப்பதில்லை. முன்னுரிமைகள் வேறுபடுகின்றன,யுக்திகளும், செயல்திட்டங்களும் வெவ்வேறு அனுமானங்கள் அடிப்படையில் வகுக்கப்படுகின்றன.எனவே நமது புரிதலும், உரையாடலும் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பெரியாரியபெண்ணியத்தின் அரசியல் பொருளாதாரப் புரிதல் எத்தகையது என்பதையும் கவனிக்க வேண்டும்.பெரியாரியவாதிகள் கவனம் செலுத்தாத பலவற்றில் அரசியல் பொருளாதாரமும் ஒன்று. அரசுகுறித்த பெண்ணியவாதிகளின் விமர்சனங்கள் முக்கியமானவை.

சில புள்ளிகளில் கருத்தொற்றுமை சாத்தியமாகலாம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் பெரியாரியப் பெண்ணியமும், மார்க்சியப் பெண்ணியமும், சோசலிச பென்ணியமும் ஒரே நிலைப்பாட்டிற்கே இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. சட்டமன்றம்,நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பெரியாரிய இயக்கங்களும்,இடதுசாரி கட்சிகள் / பெண்ணிய அமைப்புகளும் இட ஒதுக்கீடு ஏற்றாலும், ஒத்த கருத்தினை அதை நடைமுறைப்படுத்துவதில் கொண்டிருக்க வில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனாரூனா என்கிற அருணாச்சலம் மாணவர் நகலகத்தின் நிறுவனர், நந்தன் வழி என்ற இதழின் வெளியீட்டாளர், சென்னையில் தமிழ் இசை விழாவினை நடத்தியவர். பெரியாரியஇயக்கங்கள், ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாளர். தன் கொள்கைகள் காரணமாக பல நெருக்கடிகளைச் சந்தித்தவர், நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னும் கொள்கையில் உறுதியாகநின்றவர். இந்த விதத்தில் நான் அவரை மதிக்கிறேன்.
கேள்வி-பதில் -1

கேள்வி : ஆனந்த விகடன் குழு பத்திரிகைகள் புதிய இடத்திற்க்கு மாறியுள்ளனவே ?

பதில்: நானும் கவனித்தேன். இப்போது வெளிவருகிற பத்திரிகைகளில் ஆசிரியர் குழு என்ற ஒன்றிற்கு தேவை இருக்கிறதா. ஆனந்த விகடனைப் பொறுத்த வரை பேட்டி எடுக்க ஒருவர்அதுவும் பகுதி நேரமாகப் போதும். நடிகர், நடிகைகளைப் பற்றி அவர்களது மக்கள் தொடர்பாளர்கள்தருவதை போட்டுவிடலாம், பத்தி எழுதுபவர்கள் அனுப்பியதை அப்படியே போடுவதால் அதற்கென்றுதனி ஆள் தேவையில்லை. ஒரு உருப்படாத வழவழ கொளகொள தலையங்கம் எழுத பகுதி நேரநிருபரே அதிக பட்சம், ஆசிரியர் தேவையில்லை. ஆக இப்போதிருக்கும் ஆனந்த விகடனை வெளியிட பத்தி எழுதுபவர்கள், பிறர் தருவதை சேகரிக்க, சேர்ப்பிக்க ஏற்பாடு செய்ய ஒருவரும், ஒரு பகுதி நேர நிருபரும் போதும். இதற்கு தனி அலுவலகம் தேவையில்லை, அச்சகத்தில் ஒரு மூலையில் ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள் போதும். குமுதமும் இது போல்தான். பேசாமல் பத்திரிகை நடத்துவதை அவுட் சோர்ஸ் செய்து விடலாம்.தரம் ஒரளவாவது உயரக்கூடும்.

கேள்வி : 2010 குறித்து சுஜாதா ஆருடம் கூறியிருக்கிறாரே, பத்திரிகைகள் குறித்தும் கூறியிருக்கிறாரே ?

பதில்: மறைமுகமாவேனும் கற்றதும், பெற்றதும் 2010 வரை தொடராது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 2010ல் பெண்கள் புகைப்படங்களுக்குக் கீழ் வெறும் குறிப்பெழுதுகிற வேலையை அவர் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்று நம்புவோம். இப்போதிருக்கும் ஆனந்த விகடனுக்கு அசினும், ஷ்ரேயாவும்,விஜயும், சூர்யாவும்,நமீதாவும் போதும், சுஜாதா ரொம்பவே அதிகம். அதைத் தெரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் தொடர்கதை யுகம் முடிந்தது, பத்திகளின் யுகமும் விரைவில் முடிவடைந்து விடும், பத்திரிகைகளில் நம் எழுத்திற்கு தேவை இருக்காது என்ற அச்சம் அவருக்கு எழுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.கணேஷ்-வசந்த் வேண்டாம், விஜய்-சூர்யா வைத்து தொடர்கதை எழுதுங்கள் என்று அவரிடம் எந்தப் பத்திரிகையும் சொல்லாத வரை நல்லதுதான். இப்போதுள்ள நிலையில் சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கேள்வி : சாரு நிவேதிதாவின் பேட்டி படித்தீர்களா ?

பதில் : சிறிய அளவில் குற்றம் செய்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைவாங்கித் தருவதும், சிறையில் அவர்களை பராமரிப்பதும் செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதால் அத்தகைய குற்றங்களைச் செய்வோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருந்தால் அவர்களுக்கு மாதாமாதம் ஒரு தொகை கொடுத்துவிடலாம் என்று ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது. இதைக் கூறியதது எட்வர்ட் டி போனோ என்று நினைக்கிறேன். சாரு தமிழில் எழுத மாட்டேன், பேட்டிக் கொடுக்க மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்து, அதன்படி நடந்தால் அவருக்கு மாதாமாதம் ஒரு உதவித் தொகை கொடுத்துவிடலாம். என்னைக் கேட்டால் அவர் பிரெஞ்ச் கற்றுக் கொண்டு பிரெஞ்சில் இலக்கியம் படைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க முயலலாம். தாய்லாந்து அல்லது பிரான்சில் குடியேறப் போகிறேன், தமிழில் எழுத மாட்டேன் அல்லது பேட்டி தரமாட்டேன் என்று உறுதி அளித்தால் சாகித்ய அகாதமி விருது ஒன்று கொடுத்து போய்விடுங்கள், திரும்பி வர வேண்டாம் என்று வழியனுப்பி விழா ஏற்பாடு செய்து அனுப்பிவிடலாம். இப்ப்டியெல்லாம் செய்வது அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது, தமிழுக்கும் நல்லது

தொடரும்

பிற்குறிப்பு : இது 175வது பதிவு என்கிறது பிளாக்கர். உங்கள் ஆதரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
சிறுபான்மையினரும் இட ஒதுக்கீடும், நவீன வர்ணாஸ்ரமவாதிகளும்

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ் நாட்டில் இது போன்றகோரிக்கைகள் முன்பே எழுந்திருந்தாலும் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தி.மு.க தலைவர் மு.கருணாநிதிகூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளன பா.ஜ.க இந்த இட ஒதுக்கீடு யோசனையைஎதிர்த்துள்ளது. ஆந்திராவிலும் எதிர்த்திருக்கிறது.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தேவைதானா, இட ஒதுக்கீடு எந்த அளவு அவர்கள் முன்னேற உதவும், இருக்கின்ற இட ஒதுக்கீடு தவிர புதிய இட ஒதுக்கீடு தேவையா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தமிழ் நாட்டில் முஸ்லீம்கள் வணிகம், தொழில் போன்றவற்றில் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். முஸ்லீம்அறக்கட்டளைகள், அமைப்புகள் சார்பாக பொறியல் கல்லூரிகள் உட்பட பல கல்வி நிறுவனங்கள்நடத்தப்படுகின்றன. மேலும் அரசியல் சட்டம் தரும் அனைத்து உரிமைகள், சிறுபான்மையினருக்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கு எதிரான பாரபட்சம் இல்லை. அப்படியிருக்கும் போது இட ஒதுக்கீட்டிற்கு தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. முஸ்லீம் சமூகம் பின் தங்கியுள்ளதாகக் கூறலாம்.

ஆனால் அதற்கு இடஒதுக்கீடு எந்த அளவு பொருத்தமான தீர்வாக இருக்க முடியும். இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் அமுல்செய்யப்படும் போது உச்ச நீதி மன்றம் முன் வைத்த creamy layer அணுகுமுறை பின்பற்றப்ப்டுவதில்லை. வருமானம், சொத்து போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை, பெற்றோரின் க்லவி, தொழில் போன்றவறையும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதே அணுகுமுறை முஸ்லீம்களுக்கும் கடைப்பிடிக்கப்படும். முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் க்லவி,வருமான ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். அது போல் ஒரு மத்திய தர வர்க்கமும் உருவாக்கியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டால் பெருமளவு பயன்படப் போகிறவர்கள் இவர்கள்தான். இவர்கள் இட ஒதுக்கீடு இன்றி அடைந்த முன்னேற்றம் அதிகரிக்க இது உதவும். எனவே மிகவும் பின் தங்கியுள்ள, வறுமையில் வாடும் முஸ்லீம்கள் இந்த இட ஒதுக்கீட்டால் எந்த அளவு பயனடைவார்கள் என்பதையோசிக்க வேண்டும். முறையாக செய்யப்படும் சமூக அறிவியல் ஆய்வுகள் மூலம் முஸ்லீம்களில் எந்தப்பகுதியினர் இட ஒதுக்கீட்டால் அதிகம் ப்யனடைவர் என்பதை ஊகிக்க முடியும். முஸ்லீம்கள், குறிப்பாக பெண்கள் கல்வி ரீதியாக பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு கல்வி பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்காக அரசு செலவு செய்ய வேண்டி வரும் - இடங்களைஅதிகரித்தல், புதிய பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது, ஆசிரியர் நியமனம் என்று. ஆனால் அரசியல்வாதிகள் இதை முன்னிறுத்துவதில்லை. இட ஒதுக்கீடு என்ற செலவு பிடிக்காத தீர்வினைமுன் வைக்கிறார்கள்.

உச்சநீதி மன்றத்தில் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. முஸ்லீம்களுக்கு5% இட ஒதுக்கீடு என்றால் மொத்த ஒதுக்கீடு 74% அதாவது கிட்டதட்ட நான்கில் மூன்று பங்குஎன்று ஆகிவிடும். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் இட ஒதுக்கீடு செய்தால் அதை அமுல் செய்யஇடைக்காலத்தடை பெறுவது எளிது. மேலும் இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50% என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் நியாயமான கண்ணோட்டம். இட ஒதுக்கீடு என்பது சம வாய்ப்பு, சம உரிமை என்பதற்கு அப்பாற்பட்டது அல்ல. அது ஒரு தீர்வு, அதன் பெயரில் அரசியல் சட்டம் தரும் சம உரிமைகளை, சம வாய்ப்புகளை பறிப்பது சரியல்ல. ஆனால் இட ஒதுக்கீடு குறித்து அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கிகளை மட்டும் குறி வைத்து செயல்படுவதால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன் வைக்கின்றன. இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையில் பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை. ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடேஉள்ளது.இத்துடன் மத ரீதியிலான இட ஒதுக்கீடு என்று தொடர்ந்தால் அதற்கு என்னதான் முடிவு-100% இட ஒதுக்கீடா, மத ரீதியாக இட ஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறதா, அதற்கு இடம் கொடுத்தால் கிறித்துவர், பெளத்தர், சமணர், பார்ஸிகள் என பலருக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமா - இப்படி கேள்விகள் எழும்.

இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினுள் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அது பிற்பட்டோர்,மிகவும் பிற்பட்டோர் ஒதுக்கீட்டினை பாதிக்கும். தனியாக 5% ஒதுக்கினால் இட ஒதுக்கீட்டின் அளவு74% ஆகி விடும். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் இது குறித்து முடிவெடுப்பதே சரியானமுடிவாகும்.

என்னுடைய கருத்து என்னவெனில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பதற்குபதிலாக பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று கொண்டு வரலாம். அல்லதுபொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோரும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினால் பயனடையும் விதம் மாற்றம் கொண்டு வரலாம். மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற அளவில் இருக்க வேண்டும். இப்போதுள்ள இட ஒதுக்கீடு உண்மையிலேயே அதன் நோக்கங்களைநிறைவேற்ற உதவுகிறதா என்பதும் ஆராயப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தேவையானமாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால் இட ஒதுக்கீட்டின் மூலம் இருக்கின்ற ஜாதி, மத அமைப்பினை பாதுகாக்க நினைக்கிறார்கள் சிலர். கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் "மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் சமூக சம நீதிக்கான ஒரே வழியாகும் " என்று குறிப்பிட்டுள்ளார். இதை பெரியாரும் கூறியிருப்பதால் வீரமணி பெரியார் சொன்னதை வழி மொழிகிறார்

அதாவது ஜாதி அமைப்பு அப்படியே நீடிக்க வேண்டும், அந்தந்த ஜாதிகளின் சதவீதம் மக்கள் தொகையில் எவ்வளவோ அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடுஅமையும். இதை விட சமூக நீதி குறித்த முட்டாளத்தனமான கருத்து வேறேதுவும் இருக்க முடியாது. ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% இருக்கிறதென்றால் அதே விகிதம் நீடிக்க வேண்டும், அப்போதுதான் அதே விகிதத்தில் இட ஒதுக்கீடு கிடைக்கும்.மொத்த மக்கள் தொகை 1.2% ஆண்டுதோறும் கூடும் போது அந்த ஜாதியில் மக்கள் தொகை 1% மட்டும் அதிகரித்தால் நீண்ட காலப் போக்கில் அதன் சதவீதம் குறையும், எனவே இட ஒதுக்கீட்டில் அதன் அளவும் குறையும். விரும்புகிறார்களோ இல்லையோ அந்த ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஜாதியின் சதவீதம் குறையா வண்ணம் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில், ஜாதி மக்கள் தொகையில் உள்ளசதவீத அடிப்படையில் என்றால் ஜாதி எப்போது மறையும். அதுவாக மறைந்தாலும் கூட இவர்கள் கூறும் யோசனை அதை நீடிக்க, வலுப்படுத்தவே உதவும். இதே போல்தான் மதமும். (இந்த யோசனையில் உள்ள குறைகளை இங்கு நான் விரிவாக அலசவில்லை. ஒரளவு சிந்திக்கத்தெரிந்த எவருக்கும் இதன் அபத்தம் புலப்படும். பெரியார் கூறியது எந்த விதத்திலும் தீர்வாகாது).

பகுத்தறிவின் பின்னோக்கிய பரிணாம வளர்ச்சி வீரமணி கூறியிருப்பது. இவரை நவீன வர்ணாஸ்ரமவாதி என்று அழைக்கலாம். என்ன இந்த வர்ணாஸ்ரமம் பார்ப்பனரை முதல் தட்டில்நிறுத்தாமல் பிற்பட்டோரை முதல் தட்டில் வைக்கிறது. அதுதான் முக்கியமான வேறுபாடு.
சுந்தர ராமசாமி : சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி (சு.ரா) வின் எந்தக் கதையை முதலில் படித்தேன் என்று நினைவில்லை. ஆனால்ஏதோ ஒரு புத்தகத்தில் அவர் கதைகளைப் படித்தது கல்லூரியில் ஒரு புளியமரத்தின் கதையைப்படித்த போது நினைவிற்கு வந்தது. பசுவய்யா கவிதைகள் (நடுநிசி நாய்கள் ?), வெ.சாவின் கட்டுரை தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரை போன்றவற்றையும் படித்தேன். பின்னர்அவரை நேரில் சந்தித்தேன். அவர் வீட்டிற்கு ஒரிரு முறை சென்றிருக்கிறேன். ஒரு காலத்தில் சு.ராவிற்கு மிகவும் பரிச்சயமான சி.மோகன், மணா என்று அறியப்படும் எஸ்.டி.லட்சுமணன்போன்றோருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. மோகன் மூலம் பல சிறு பத்திரிகைகள்,நூல்கள் அறிமுகமாகியிருந்தன. இன்னொரு புறம் சுமாக்கர், பிராம், ஜித்து கிருஷ்ணமூர்த்தி,இலிக், ரமணர் என்று படித்துக் கொண்டிருந்தேன். ஜே.ஜே சில குறிப்புகள் முதலில் படித்தபோது மிகவும் கவர்ந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மீதான என் மதிப்புதேயத்துவங்கியது. இப்போது படித்தால் நிறைகளை விட குறைகளே அதிகம் தோன்றும் என்றுநினைக்கிறேன். அவரது மூன்றாவது நாவலை நான் படிக்கவில்லை. அதையும் கள்ளிக்காட்டுஇதிகாசத்தையும் ஒப்பிட்டால் சு.ராவிற்கே சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்க வேண்டும்என்று கோவை ஞானி நேர் பேச்சில் தெரிவித்தார். அவர் இரண்டையும் படித்தவர், நவீனதமிழ் இலக்கியம் குறித்த ஆழ்ந்த புலமையும், பரந்த அறிவும் கொண்டவர் என்பதால் அவர்கருத்தினை நான் ஏற்க முடியும்.

ஒரு குறுகிய காலத்திற்கு எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்தது. சமூக அறிவியல்கட்டுரைகள், நூல்களை அவருக்கு பரிந்துரைத்திருக்கிறேன். அவருக்கு சில கட்டுரைகளைஅனுப்பியிருக்கிறேன். இப்போது எழுதும் பலர் ஏன் ரஸ்ஸல் போல் புரியும் வண்ணம் எழுதமாட்டேன் என்கிறார்கள், ஏன் சுற்றி வளைத்து எழுதுகிறார்கள் என்று சில கட்டுரைகளைப்படித்து விட்டு எனக்கு எழுதினார். அவ்வப்போது கூட்டங்களில் அவரை சந்திப்பதுண்டு,பரஸ்பர நலம் விசாரிப்பது தவிர வேறு எதையும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும்பொதுவான நண்பர்கள் இருந்தார்கள்.

நான் அவரது க்ட்டுரைகளை ஆங்காங்கே படித்திருக்கிறேன்.பின்னர் திண்ணையில் வெளியான கட்டுரைகள், உரைகளைப் படித்திருக்கிறேன். அவரது புனைவற்றஎழுத்துக்கள், நான் படித்த அளவில், எனக்குப் பெரிதாகக் தோன்றவில்லை. கவிதை, சிறுகதையில்அவர் சாதித்தது அதிகம் என்பது என் கணிப்பு. ஒரு வேளை அவரது கட்டுரை தொகுப்புகளைப்படித்தால் என் கருத்தில் மாற்றம் ஏற்படக் கூடும். அவரது கட்டுரைகள் மிகவும் பொதுமைப்படுத்திப்பேசுகின்றன, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கருத்துக்கள் என்று அவரிடம் அதிகம் இல்லை, சிறுபத்திரிகைக் கண்ணோட்டமே அவற்றில் வெளிப்படுகிறது என்பதுடன் தர்க்க ரீதியாக அவர் முன்வைக்கும் வாதங்கள் வலுவற்றவை என்பது என் கருத்து. ஜெயேந்திரர் கைது குறித்த அவர் கட்டுரையைஇதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

எனக்கு அவருடன் கடிதத் தொடர்பு இருந்த போது பிரமிளுடனும் தொடர்பு இருந்தது. இது இருவருக்கும் தெரியும் என்றாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் என்னிடம் குறை கூறியதில்லை. எழுத்தில் பிரமீள் சு.ராவை மிகக் கடுமையாக விமர்சித்தாலும் நேரிலும், கடிதங்களிலும் அவரைப் பற்றி என்னிடம் குறை கூறியதில்லை, இழிவாகப் பேசியதில்லை. ஆனால் பாரிசிற்கு தான் செல்ல வேண்டிய வாய்ப்பு சு.ராவிற்கு போனது குறித்த கோபம் பிரமீளுக்கு இருந்தது. பிரமீள் பெயர்தான் முதலில் பரிந்துரைக்கப்பட்டதாகவும், பின்னர் சு.ராவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்பது பிரமீள் தரப்பு வாதம். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

நூல்கள் மீது அவருக்குப் அபாரமான கவனம் இருந்தது. புதிய நூல்கள், ஆசிரியர்கள் குறித்துஆர்வத்துடன் கேட்பார், கடிதங்களில் குறிப்பிட்டால் தான் அதை கவனத்தில் கொள்வதாகவும்கிடைத்தால் வாங்கிப் படிக்க முயல்வதாகவும் எழுதுவார். தமிழில் ஏராளமான மொழிபெயர்ப்புகள்வெளிவர வேண்டும் என்ற விருப்பத்தினை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் எனக்கு அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்தது. பின்னர் அமெரிக்காவிற்கு வந்த போது, சில ஆண்டுகள் முன், மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. சாந்தா குருஸ் வாருங்கள், மனைவியையும்க் கூட்டிக் கொண்டு வருவாங்கள் என்று தொலைபேசியில் பேசும் போது குறிப்பிட்டார். நூல்கள் பற்றி தொலை பேசியில் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறோம். அவருக்கு நான் கட்டுரைகள் அனுப்பி வைத்திருக்கிறேன். கென் வில்பரின் மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பினையும் அனுப்பி வைத்தேன், வேறு பல நூல்களை பரிந்துரைத்தேன். என் பிரதான கவனம் இலக்கியத்தில் இல்லை என்பதால் அவருக்கு ஆர்வமுட்டக் கூடிய இலக்கியம் சாரா நூல்களை மட்டுமே பரிந்துரைத்தேன். என் கட்டுரைகளை (கிட்டதட்ட தமிழில் நான் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும்) அவர் படித்திருக்கிறார் என்பது அமெரிக்காவில் அவருடன் தொலைபேசும் போது தெரிந்தது. தொடர்ந்து எழுதுங்கள், தமிழில் பலர் தொடாத விஷயங்களை எழுதுவது நல்லது என்று கூறினார்.

அவர் துவங்கிய காலச்சுவட்டின் ஆரம்ப இதழ்கள் இப்போதைய காலச்சுவட்டுடன் ஒப்பிடுகையில் தரத்தில் சிறந்தவை என்றே சொல்ல வேண்டும். பல புதிய எழுத்தாளர்கள் எழுத அவர் இடமளித்தார்.காம்யு குறித்த வ.கீதாவின் கட்டுரை உட்பட பல புதிய விஷயங்கள் அதில் வெளியானது.

தமிழ் சிறுபத்திரிகை உலகிலும், வெளியிலும் சு.ரா அபிமானிகள், ஆதரவாளர்கள் என்று கூறத்தக்க ஒரு குழுஎப்போதும் உண்டு. சமயங்களில் அவர்களின் பிரச்சாரம் சகித்த முடியாதபடி இருக்கும். 1999 அல்லது 2000 என்று நினைக்கிறேன், சு.ரா வை பாரதி, புதுமைப்பித்தனுக்கு அடுத்த படி சித்தரித்து ஒரு கட்டுரை வெளியாகியிருப்பதாக ஒரு விமர்சகர் என்னிடம் தெரிவித்தார். இது எனக்கு வியப்பூட்டவில்லை. பல்லக்குத் தூக்கி கதை எழுதியவர் சிலையை அல்லது படத்தை பல்லக்கில் வைத்து தூக்க ஒரு குழு தயாராக இருந்தது என்பது ஒரு நகை முரண். பீடங்கள், மடங்கள் தமிழ் இலக்கிய உலகில் புதிதல்ல. நேற்றைய குருவின் பிரதான சீடன் இன்று தன்னைக் குருவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு புதிய மடத்தினை துவங்குவது நமக்குப் புதிதல்லவே. சு.ரா விஷயத்திலும் இதுதான் நடந்தது.

அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பு. வெற்று புகழரைகளாக முன் வைக்கப்படும், அவர் குறித்த இன்றைய மதிப்பீடுகளை காலம் ஏற்காது என்பது என் கணிப்பு. இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதையும் தாண்டி அவரை பெரும் சிந்தனையாளராக, இலக்கிய விமர்சகராக நிறுவ முயல்வது போன்றவற்றை காலம் நிராகரித்துவிடும் என்றே கருதுகிறேன்.
ஒரு செவ்வி

அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் தலைவராக இருந்த, நியூயார்க் பல்கலைகழகப் பேராசிரியர் டிராய் டஸ்டருடன் ஒரு செவ்வி.
பெரியாரும், சில அற்பர்களும்

பெரியார் குறித்து நான் இரண்டாண்டுகளுக்கு முன் எழுதி வெளியானதை வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். நான் பெரியார் உட்பட யாருக்கும் பல்லக்குத் தூக்கியாக இல்லை. பெரியார்ஒன்றைச் சொன்னார் என்பதற்காக அதை அப்படியே ஏற்பதுமில்லை. நான் என்றும் பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்றோ அல்லது அவர் கூறியவை எல்லாக் காலத்திற்கும்பொருந்தும், நாம் அதை அப்படியே பின்பற்றினால் போதும் என்றோ எழுதியிருக்கவில்லை. பெரியார் குறித்த எனது கருத்துக்களை பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். பெரியார், அவர் வாழ்வு, பணி, கருத்துக்கள் குறித்து கடந்த 20 - 15 ஆண்டுகளில் வெளியான ஆய்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருக்கிறேன். பெரியார் எனக்கு குருவுமல்ல, நான் அவரின் சீடனும் அல்ல. அது போல் அவர் யேசு நாதரும் அல்ல, நான் காட்டிக் கொடுத்த யூதாஸும் அல்ல. நான் பெரியாரைப் போட்டு உடைத்துவிட்டதாக கற்பனை செய்து கொண்டு எழுதுவது நல்ல வேடிக்கை.2003ல் நான் பெரியாரின் பகுத்தறிவு குறித்து எழுதிய போது பெரியாரை போட்டு உடைத்துவிட்டதாக அல்லது நிராகரித்துவிட்டதாக இன்று எழுதுகின்ற இவர்கள் இதே குற்றச்சாட்டுக்களை எழுதியதாக நினைவில்லை.பெண்ணியம் குறித்து ஜெயகாந்தன் கூறியிருப்பதையும் நான் விமர்சித்திருக்கிறேன். என்னுடைய கட்டுரையில் விமர்சனம் பெரியார் மீது மட்டுமல்ல என்பதையும் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.குஷ்பு சர்ச்சையில் நான் எங்கும் ராமதாஸ், திருமாவளவன் செய்ததை நியாயப்படுத்தி எழுதவில்லை. அவர்கள் செய்தது சரி என்ற பொருள் தரும் வகையில் எழுதவில்லை. குஷ்புவிற்கு எதிராக இவர்கள் செயல்படுவதில் உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாக நான் எழுதவும் இல்லை, இவ்ர்களை ஆதரித்தும் எழுதவில்லை.என்னுடய கருத்தை இந்தப் பிரச்சினையை முன் வைத்து திருமாவளவனும், ராமதாசும் அரசியல் செய்கிறார்கள். அவர்களது நோக்கங்களை நிறைவேற்ற இதைப் பயனப்டுத்துகிறார்கள். குஷ்புவும், நடிகர் சங்கமும் தங்கள் அதிகாரத்தினை காண்பித்ததின் எதிர்வினை என்று கூட இதைக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறேன்.எங்கும் நான் திருமாவளவன், ராமதாஸ் குஷ்புவிற்கு செய்ததை ஆதரித்து எழுதியிருக்காத போது ரோசா வசந்தும், சிவக்குமாரும் பொய்களை அவிழ்த்துவிடுகிறார்கள். ராமதாஸை விமர்சித்து நான் எழுதியிருக்கிறேன். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து எழுதியிருக்கிறேன், இட ஒதுக்கீடு குறித்து எழுதியிருக்கிறேன். சில விஷயங்களில் என் கருத்துக்கள் பெரியாரிய நிலைப்பாடுகளுக்கு எதிரானவை என்பதை நான் எழுதியிருப்பதை படிப்பவர்களுக்குத் தெரியும்.பெரியார் குறித்த விஷம பிரச்சாரங்களை நான் எதிர்ப்பதும், அவரது கருத்துக்களை விமர்சிப்பதும் ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை அல்ல. திண்ணையில் நான் கோவை ஞானியின் கருத்துக்களை அரவிந்தன் நீலகண்டன் திரித்து எழுதியதை எதிர்த்தது, கால்டேன் குறித்து அவர் எழுதிய பொய்யை மறுத்தது, மார்க்ஸ் எழுதாத கடிதத்தினை மார்க்ஸ் எழுதியதாக எழுதி அதை முன்வைத்து மார்க்ஸியம் குறித்து விஷமப்பிரச்சாரம் செய்தது, ஆனந்த விகடனில் சார்த், இருத்தலியம் குறித்து சுஜாதா எழுதியதை எதிர்த்து எழுதியது என்று பல் வேறு சந்தர்ப்பங்களில் பிறர் கருத்துக்கள் திரிக்கப்படுவதை, தவறான தகவல்கள் தரப்படுவதை எதிர்த்து எழுதியிருக்கிறேன். ஏனெனில் ஒருவர் கருத்துக்களை நேர்மையாக விமர்சிக்க வேண்டும், அவற்றை திரிக்கக் கூடாது என்பதில்நான் காட்டும் அக்கறை. படைப்பாளியின் தார்மீக உரிமைகள் குறித்த அக்கறை எனக்கு உண்டு.பெரியாரின் சீடரான அண்ணா நிறுவிய தி.மு.க வின் கொள்கைகள் தி.க வின் கொள்கைகளிலிருந்து சிலவற்றில் துவக்கம் முதலே வேறுபடுவதையும், ஒரு காலகட்டத்தில் தி.மு.க தேர்தல் அரசியலில் பங்கேற்க்கத் துவங்கியதையும், பின்னர் தனி நாடு கோரிக்கையை கைவிட்டதையும் நாம் மறக்க முடியுமா. இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று வர்ணிக்கப்பட்ட தி.க வும், தி.மு.வும் வேறுபட்ட நிலைப்பாடுகள் எடுக்கும் போது பா.ம,கவும், விடுதலைச் சிறுத்தைகளும் பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்க வேண்டும் அல்லது பெரியார் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினால் அதை எப்படி ராமதாஸ், திருமாவளவன் செய்ததை, செய்வதை நியாயப்படுத்துவதாக கருத முடியும். இங்கு கேள்விகளுக்கு பதில் தராமால் கட்டுக்கதைகளைஇந்த இருவரும் பரப்பி வருகிறார்கள். இது எனக்குப் புதிதல்ல. இப்படி செய்த ஜெயமோகனுடன்கூட்டணி அமைத்து இவர்கள் தொடர்ந்து பொய்களை எழுதி வந்தாலும் நான் என் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து பின் வாங்க மாட்டேன்.ரோசா வசந்த், பி.கே.சிவக்குமார் போன்ற அற்பர்கள் பெரியார் குறித்து பேசும் முன் அடுத்தவர்கள் கருத்துக்களை திரிக்காமல், பொய் கலக்காமல் எழுத கற்றுக்கொள்ளட்டும். இந்த அற்பர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதம் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.
அறிவுத்திறனும் ...

யூதர்கள் பிறரை விட அதிக அறிவுத்திறன் கொண்டிருப்பதற்க்குக் காரணம் ஜீன்கள் என்ற ஒரு கருதுகோளை வைக்கும் சர்ச்சைக்குரிக்க கட்டுரையைப் பற்றிய கட்டுரை இது. ஆனால் இதில் அலசப்படும் விஷயங்கள் அக்கட்டுரை விவாதிக்கும் பொருளுடன் நின்று விடுவதில்லை.
பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
1
மூடநம்பிக்கைக்கள் குறித்த மூடநம்பிக்கைகள் என்று அஷிஸ் நந்தி ஒரு முறை எழுதினார்.பகுத்தறிவு குறித்தும் மூட நம்பிக்கை இருக்கலாம்.ஞாநி பெரியார் மீதும், அவர் முன்வைத்த பகுத்தறிவு மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார். பெரியாரின் பகுத்தறிவு குறைபாடு உடையது.பெரியாரின் கருத்துகளும்,அவர் முன்வைத்த பகுத்தறிவும் வளம் சேர்க்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.தனித்துவமான சிந்தனையாளர்கள் என்று சொல்லத்தக்க சிலர் கூட திராவிட இயக்கத்திலிருந்து தோன்றவில்லை. இட ஒதுக்கீடு என்பதற்கு அப்பால் சிந்திக்க தவறியது பெரியாரின் குறைபாடு என்றால் அதையே வெவ்வேறு வடிவங்களில் வலியுறுத்திக் கொண்டிருப்பது இன்றைய அரசியல் தலைவர்களின் கோட்பாட்டு சிந்தனை வரட்சியையே காட்டுகிறது. பெரியார் அறிவியல் தொழில்நுட்பம் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நிகழ்த்திய கடைசிப் பேருரை இதற்கு சான்று. ஆனால் இன்று அறிவியல் தொழில்நுட்பம் குறித்த விமர்சனம் தவிர்க்கவியாலாத ஒன்று. பெரியாரின் பகுத்தறிவில் இதற்கு இடமிருக்கிறதா? அறிவியல்-தொழில்நுட்பம்-சமூகம் குறித்த பெரியாரியப் புரிதல் என்ன? கருத்தடை உரிமையை ஆதரித்தவர் பெரியார்.அது போல் பெண்கள் கருக்கலைப்பு செய்வதையும் அவர் ஆதரித்தார். ஆனால் கருத்தடை சாதனங்கள்-மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கை குறித்த பெரியாரியக் கண்ணோட்டம் என்ன? திராவிட இயக்கங்கள் அல்லது பெரியாரை முன்னிறுத்தும் சிந்தனையாளர்கள் இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை அடிப்படையாக் கொண்டு இவற்றை விவாதித்துள்ளனரா?. பெரியார் முன்வைத்த பகுத்தறிவும், அவரது கருத்துக்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துபவை அல்ல. உலகமயமாக்கல் குறித்து பெரியாரியம் என்ன சொல்கிறது. அதன் நுட்பமான அம்சங்களை விளக்க/புரிந்து கொள்ள பெரியாரின் கருத்துக்கள் போதுமா? இது போல் பல கேள்விகளை எழுப்புவது கட்டாயமாகிறது. பெரியாரிய அழகியலின் பலவீனங்களை நான் விளக்க வேண்டியதில்ல. ஊடகங்கள் குறித்து பெரியாரியப் புரிதல் எத்தகையது?

பகுத்தறிவு (rationality) குறித்தும் அதன் போதாமை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் உள்ளன.

நவீனத்துவம்,பகுத்தறிவு குறித்த பின் நவீனத்துவ வாதிகளின் விமர்சனமும், இந்தியச் சூழலில் இது குறித்தும், வளர்ச்சி, சூழல் குறித்த விவாதங்களும் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளன. பெரியாரிய
பகுத்தறிவு பழங்குடி மக்களின் அறிவை, பாரம்பரிய கலைகளை, விவசாயத்தினை எப்படி மதிப்பீடு செய்யும். அறிவியலின் த்ததுவம் குறித்த விவாதங்களின் தாக்கம் பெரியாரிய பகுத்தறிவில் உள்ளதா? பெரியாரும்,
அவரை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோரும் அக்கறை செலுத்த்தாத ஆனால் தேவையான விஷயங்கள் பல.பெரியாரிய பகுத்தறிவு இங்கர்சால் போன்றோரின் சிந்தனைகளை அடிப்படையாக் கொண்டது. ஆனல்
அது ஒரு கட்டத்தில் தேங்கிப் போய்விட்டது, அதில் சுய விமர்சனமும் இல்லை, புதிய சிந்தனைப் போக்குகளுடன் ஒரு உரையாடலும் இல்லை.
எனவே ஞாநி முன்வைக்கும் புரிதலும், பகுப்பும் சர்ச்சைக்குரியன. இந்து ஆதரித்தால் அதை நாம் எதிர்க்க வேண்டும் என்பது எத்தகைய பகுத்தறிவுச் சிந்தனை.இப்படிப்பட்ட எளிமைப்படுத்த்ப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் செயல்படுவதே பகுத்தறிவிற்க்கு புறம்பானது.இது போல்தான் அயோக்கியர்கள், மூடர்கள் என்று வகைப்படுத்துவதும். உச்சநீதி மன்ற நீதிபதி ராமசாமி விவகாரத்தில் அவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்ற வாதம் அவர் குறித்த தீர்மானத்தை விமர்சிக்க பயன்படுத்தப்பட்டது.திராவிட கழகமும், திராவிட கட்சிகளும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தன. இங்கு ஜாதியவாதமும், 'பகுத்தறிவு' க் கண்ணோட்டமும் கைகோர்க்கின்றன.இதற்கு காரணம் பெரியாரிய பகுத்தறிவு ஊழல், நிர்வாகச் சீர்கேடு போன்றவை குறித்த ஒரு விமர்சனப் பார்வையை முன்னெடுத்துச் செல்லாதது. அயோக்கியர்கள் யார்? ஊழல் செய்வோர் அயோக்கியர்கள் என்றால் திமுக ஆட்சி மீது எம்.ஜி.ஆர் முன்வைத்த ஊழல் புகார்கள் குறித்து பெரியார்/தி.க என்ன கூறினார், அதில் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதை ஞாநி விளக்குவாரா?. 1973ல் பெரியார் இறக்கிறார். 1971ல் திமுக ஆட்சிக்கு வருகிறது. திமுக ஆட்சி மீது அதிமுக மட்டும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.பெரியார் அன்று என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதன் அடிப்படையில் நாம் ஊழல் குறித்த அவரது கண்ணோட்டம் என்ன என்று முடிவு செய்யலாமா?

1977 ல் அவசர நிலை முடிவுற்ற பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் சிவில் சமூகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.அவசர நிலை ஒரு கசப்பான அனுபவமாக, ஒரு பாடமாக அமைந்த்து. இதனால் நாடெங்கும்
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பல இயக்கங்கள். குழுக்கள் தோன்றின. பெண்கள் அமைப்புகள் புதிய உத்வேகத்துடன் எழுந்தன. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் சிவில் உரிமைகள் குறித்தும், அரசின் அதிகாரம் குறித்தும் புதிய விளக்கங்களை அளித்தன. 1984ல் இந்திரா கொலை செய்யப்பட்தை அடுத்த
நடந்த இனப்படுகொலை, போபால் விபத்து போன்ற பல நிகழ்வுகள் சிவில் சமூகத்தில் பல புதிய இயக்கங்கள்/குழுக்கள் தோன்ற காரணமாயின. இது போன்ற பல காரணங்களின் விளைவுதான் இந்து வில் வெளியாகும் கட்டுரைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். ஞாநி இதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.இதுதான் அவர் முன்வைப்பதை விட முக்கியமான காரணம்.
2
வழிபாட்டுத் தலங்களில் மிருகங்களை பலி கொடுப்பது வழிபாட்டின் ஒரு பகுதி, அது தடை செய்யப்படுகிறது. ஆனால் பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளின் போது ஆடுகள் வெட்டப்படுவது அனுமதிக்கப்படுவது சரியா?
ஜீவகாருண்யம் அரசின் கொள்கையா? அப்படியெனில் கோழி வளர்ப்பு, இறைச்சி கூடங்களில், அறிவியல் சோதனைக்காக மிருகங்களை துன்புறுத்துவது ஏற்புடையதா? பலி கொடுப்பது மூட நம்பிக்கை என்றால் யாகங்கள், பூசைகள், ஏன் வழிபாடு கூட் மூட நம்பபிக்கைதான். அரசின் அதிகாரம் எல்லையற்றதல்ல. அரசு தலையிடக் கூடாத விஷயங்கள் உண்டு.புழுக்களைக் கொன்றுதான் பட்டுக் கிடைக்கிறது என்பதால் பட்டுத் தொழிலை தடை செய்யலாமா? ஒரே சமயத்தில் ஒரே கோயிலில் பல நூற்றுக்கணக்கான கோழிகள்/ஆடுகள்/மாடுகள் வெட்டப்படுவதால் பிரச்சினைகள் ஏற்படுமெனில் அதை ஒழுங்கு செய்யலாம்.உணவிற்காக
வெட்டலாம், வழிபாட்டிற்காக வெட்டக்கூடாது என்பது முரண். மேலும் சதி, குழந்தைத்திருமணம் போன்றவை தடுக்கப்பட்டதன் அடிப்படை வேறு.இத்தடையின் அடிப்படை வேறு. ஜீவகாருண்யம் அரசின் கொள்கை என்று அறிவித்தாலும் கூட அது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தாத வகையில்தான் இருக்க வேண்டும். பலி கொடுப்பது வழிபாட்டின் ஒரு அம்சம், வழிபாட்டு உரிமையை அரசு கட்டுப்படுத்த முடியாது, அதில் பொது நன்மைக்கு இடையூறு இருந்தால் ஒழிய. திருமாவளவன் சொல்லும் காரணம் பொருத்தமானதல்ல. அதே சமயம் ஞாநியின் வாதம் வலுவற்றது. அரசின் அதிகாரம் குறித்த கேள்வியை அவர் எழுப்பவில்லை. சமூக மாற்றம்/சீர்திருத்தம் என்பது அரசின் எல்லையற்ற அதிகாரத்தினால் மட்டும் சாத்தியமாவதில்லை. சட்டங்களின் மூலம்தான் மாற்றங்கள் ஏற்பட்டன என்றில்லை. பல புறக்காரணிகளும் அதை சாத்தியமாக்கின. அரசு எல்லாப் பிரச்சினகளையும் ஒரே மாதிரியாகவாக பார்க்கிறது. கருவிலே ஆணா/பெண்ணா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகின்றது. அது தவறாக, பெண்ணினத்திற்கு எதிராக பயன்படுத்துவது தமிழ் நாட்டில் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டதா? அது குறித்த சட்டம் மிகச் சரியாக அமுல் செய்யப் படுகிறதா? இதை விட கோயில்களில் பலி கொடுப்பது மிக முக்கியமான பிரச்சினையா? அது பிரச்சினையே அல்ல.
3
ஞாநி பெரியாரை, பகுத்தறிவை டார்ச் என்கிறார். ஆனால் டார்சின் போதாமைகள் குறித்து தெரிந்து கொள்வதும் தேவை. தேவைப்படும்போது அதைவிட அதிக சக்தி வாய்ந்த டார்ச்சை அல்லது வேறு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். என் அப்பா காலத்தில் பெரியாரிய டார்ச் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கலாம்,அதற்காக என் காலத்தில் குன்றிய போதும் அதையேதான் பயன்படுத்துவேன் என்பது பகுத்தறிவல்ல.அந்த டார்ச்சின் சில பகுதிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கலாம், அதை பயன்படுத்த முடியுமா,
எப்படி பயன்படுத்த முடியும் என்றுதான் யோசிக்க வேண்டும். பாட்டரி செல் வலுவிழந்த நிலையில் அதற்கு பதிலாக வேறு செல்கள் போட்டுத்தான் டார்ச்சினைப்பயன்படுத்த முடியும்.தேவையானல் புது டார்ச் வாங்க வேண்டும். பெரியாரிய டார்ச் இன்று ஒரளவே பயன்படும்.பல நேரங்களில் மார்க்சிய டார்ச் அதைவிட பொருத்தமாக உள்ளது.

Thinnai 17th October 2003
சில கேள்விகள்

மாற்றுக் குரல்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தினை ஒரு வலைப்பதிவாளர் தன் பதிவில் இட்டுள்ளார்.குஷ்பு சொன்ன கருத்துக்கள் குறித்த சர்ச்சையில் பெரியார் கூறியசில கருத்துக்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

குஷ்புவுக்கு ஆதரவாக பெரியார் கூறியவற்றைமுன் மொழியும் மேதாவிகளுக்கு குஷ்பு கூறியிருப்பவை எந்த அளவு பெரியார் சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகக்கூடியவை என்பது கூடப் புரியவில்லை. பெரியார் அப்படிகருத்துக்களை முன் வைத்ததும், தீர்மானங்கள் போட்டதும் உண்மைதான். ஆனால் பின்னர்அவரே அவற்றை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை, அவர் மறைவிற்குப் பின்திராவிட கழகமும் இதை முன்னிறுத்தி சட்டத்திருத்தம் உட்பட மாற்றங்களைக் கோரவில்லை. வாசுகி சார்ந்திருக்கும் அகில இந்தியஜனநாயக மாதர் சங்கமும் இது போன்ற கோரிக்கையை முன் வைத்ததில்லை.பெரியார் தாம்கூறிய எல்லாக் கருத்துக்களையும் ஒரே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதில்லை.நான் கூறியதில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுக.குஷ்பு விவகாரத்தில் இதை கையில் எடுத்திருக்கும் இவர்களுக்கு இக்கருத்துக்கள் இருப்பது இப்போதுதான் தெரியுமா. இதற்கு முன் இக்கருத்துக்களுக்கு ஆதரவாக இவர்கள் எத்தனை முறை எழுதியிருக்கிறார்கள்.

அன்று பெரியார் செய்யத தவறியதை இவர்கள் இன்று செய்ய முயற்சிக்கலாமே. இன்று பெரியார் அன்று கூறியதைப் பிடித்து தொங்கிக் கொண்டு குஷ்புவிற்கு ஆதரவாகக்குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகள் இக்கருத்துக்களை முன்னிறுத்தி சட்ட மாற்றம் உட்படமாற்றங்களுக்குப் போராடத் தயாரா. இக்கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்தத் தயாரா.

இன்னும் வெளிப்படையாகவே கேட்கிறேன்: பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஏற்று, பாலியல் சுதந்திரம் என்பதில் கட்டுப்பாடுகள் கூடாது என்ற நிலைப்பாட்டினை எடுத்தால் முதலில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் உள்ள adultery குறித்த பிரிவினை நீக்கி,அது குற்றமல்ல, தனிப்பட்ட நபர்களுக்கிடையே உள்ள ஒரு தனிப் பிரச்சினை என்று ஆக்க வேண்டும்.அப்போது அதில் காவல் துறை, அரசு, நீதிமன்றங்கள் தலையிட்டு அதை ஒரு கிரிமினல் குற்றமாக அணுக முடியாது, தண்டிக்க முடியாது.

இந்த மாற்றத்தினைக் கோர இவர்களும், இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் வலைப்பதிவாளர்களும் தயாரா.
இன்னொரு ..

மீம்கள் , மீமடிக்ஸ் குறித்து ஒரு நூல் மதிப்புரை. மதிப்புரை செய்தவர விரிவாக மீமடிக்ஸின் தோற்றம்,கருத்துக்கள், அவற்றின் பலவீனங்கள் அல்லது போதமைகள் குறித்து விளக்குகிறார். சின்னக்கருப்பன் கட்டுரையைப் படித்தவர்கள் இதையும் படித்தால் சின்னக் கருப்பனின் வாதங்கள் எவ்வளவு வலுவற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சின்னக் கருப்பன் கட்டுரை குறித்து - 1

சின்ன கருப்பன் கட்டுரை குறித்து நான் திண்ணைக்கு அனுப்பிய கடிதம் கீழே. திண்ணையில் வெளியானது இது.

திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,

சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு புதினம் எழுதலாமே.

அதில் அரிஸ்டாட்டில், யாக்ஞவல்கியர், நியுட்டன், டார்வின், மெண்டல், வாலேஸ் துவங்கி இன்றைய டாகின்ஸ், லெவொண்டின், மறைந்த ஜே கோல்ட், எர்னஸ்ட் மேயர் உட்பட பலரை கதாபாத்திரங்களாக்கி, ஏசு, முகமது நபி, பெரியார். ஐன்ஸ்டீன், டி.எஸ்- எலியட், காந்தி (மோகன் தாஸ் கரம்சந்த), பாப்பர், காப்ரா, சூப்பர் ஸ்டாரின் குருவான பாபா போன்றோரும் தோன்றும் வண்ணம் கதையை எழுதிவிட்டால் ஒரு புதினம் தயார். ஈ.வெ.ராவின் பிராமணீய எதிர்ப்பு, லைசென்கோ விவகாரம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜீன் சொல்றான் இந்த ஜீவன் செய்யறான் என்பதை பன்ச் டயலாக் ஆக நாவலில் பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் பெளத்தம், இந்தியத் தத்துவஞானம், சிற்பம், இசை, கட்டிடக் கலை குறித்த குறிப்புகளை ஆங்காங்கே தூவி கதாபாத்திரங்கள் மூலம் சம்வாதம் நடப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கலாம். இதில் முக்கியம் மறந்தும் சமணரைக் கழுவேற்றியது, ராமானுஜர் சோழநாட்டை விட்டு ஒடியது போன்றவை கதையில் எங்கும் வந்துவிடக்கூடாது.

ஒரு யுக முடிவில் டி.என்.ஏ தன் அமைப்பினை மாற்றிக் கொள்கிறது, ஜீன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, புதிய மானுடம் பிறக்கிறது, பெரியார் இருந்தார் என்பதற்கான தடயங்கள் அழிகின்றன,ஒரு மீம் அவர் குறித்த நினைவுகளை மனங்களிலிருந்து அழித்துவிடுகிறது, புதிய மனு தோன்றுகிறார், சம்ஸ்கிருதம் தழைக்கிறது, உலக மொழியாகிறது என்று எழுதி தளையசிங்கம், டெகல் டி கார்டின் போன்ற பெயர்களைப் போட்டு, கருத்தியல் குறைபாடுகளைக் களைய அன்பைச் சேர்த்து அறைக்கவும் அல்லது கருணையைச் சேர்த்து கலக்கவும் என்று அறிவுரை கொடுத்து, ஜீன்புரம் அல்லது மீம்களின் யுகம் என்று தலைப்பும் வைத்துவிடலாம்.

தமிழில் இது போன்ற நாவல் வந்ததில்லை என்று நிச்சயம் பாராட்டு கிடைக்கும். இதை அறிவியல் புதினம் என்றும் சொல்லிக் கொள்ளலாம் அதாவது அப்படியும் விற்கலாம். இப்போது அறிவியல் என்ற முத்திரையுடன்எதையும் விற்பது எளிது. புதினத்தில் அறிவியல் இருக்கிறதோ இல்லையோ அறிவியல் என்ற பெயரை குறிப்பிட்டதற்கே நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும் என்று மதிப்புரைகளில் எழுதப்படுவது உறுதி. டார்வினுக்கு அடுத்தபடி பரிணாம வாதத்தினை வளர்த்தெடுக்கும் அறிஞர் பெருமான், நம்முன் நடமாடும் 21ம் நூற்றாண்டின் டார்வின் அணிந்துரை தரக்கூடும். சம்ஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் அதை மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அன்று இந்திய மெய்ஞானிகள் உருவகமாக கூறியதை, தங்கள் ஞான திருஷ்டி கொண்டு கணித்து அறிவித்ததை, இன்று இவர் அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கிறார், நிரூபித்துக் காட்டியுள்ளார் என்ற பாராட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி பொன்னான வாய்ப்புகள் பெற்றுத்தரக்கூடிய அரிய கருத்துக்களை வைத்துக் கொண்டு வெறும் கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வருத்தமாயிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு புதினத்தினை எழுதி தமிழையும், உலக சிந்தனையையும், மானுடத்தையும் வளப்படுத்துங்கள் என்று அவரைக் கேட்டுகொள்கிறேன்.

சாமன்யர்களன நமக்கு ஒரு சுட்டியை பரிந்துரைக்கிறேன். http://www.nybooks.com/articles/18363
ஒரு மாதிரிக்காக கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறேன்

The ghosts in the meme machine-GUSTAV JAHODA-HISTORY OF THE HUMAN SCIENCES Vol. 15 No. 2-pp. 55–68- 2002

A response to Gustav Jahoda -SUSAN BLACKMORE-pp. 69–71

A reply to Susan Blackmore-GUSTAV JAHODA-pp. 73–74

Genetic Fundamentalism or the Cult of the Gene-DAVID LE BRETON Body & Society Vol. 10(4): 1–20 (2004)

தமிழ் வலைப்பதிவுகளில் சின்னக் கருப்பனின் கட்டுரை குறித்த விவாதங்களை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில்காணலாம்.
http://karthikraamas.net/pathivu/?p=95
http://arvindneela.blogspot.com/2005/10/blog-post.html

K. ரவி ஸ்ரீநிவாஸ்
பரிணாம வாதமும்.....

இரண்டு நூல்களின் மதிப்புரைக் கட்டுரை, ரிச்சர்ட் லெவான்டின் எழுதியது. திண்ணையில் சின்னக் கருப்பன் கட்டுரையைப் படித்தவர்களுக்கு இதை சிபாரிசு செய்கிறேன்.