ஒரு கட்டுரை, ஒரு பதிவு, ஒரு எதிர்வினை

பத்மா தன் பதிவில் பா.ராகவன் எழுதியுள்ள சமீபத்திய கட்டுரையை எடுத்து இட்டிருக்கிறார்.

பரபரப்பான செய்திகள், பரபரப்பான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய உண்மை அல்ல என்று விகடன் இயங்கும் போது இப்படிப்பட்ட கட்டுரைகள்தான் வெளியாகும். அமெரிக்காவில் புயல்கள் ஆண்டுதோறும் பல வரும்., பாதிப்பு ஏற்படுத்தும் ஆனால் உயிரிழப்பு வெகு சொற்பமே. அத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவில் ஏற்படும் புயல்கள் குறைவு, உயிரிழப்பு அதிகம். மேலும் நியு ஒர்லியான்ஸ்ஸின் பிரத்தியேக அம்சங்களை அவர் குறிப்பிடுவதேயில்லை.

ஏதோ அமெரிக்காவில் ஒன்றுமே செய்யாமல் வேடிக்கைப் பார்த்தார்கள்,யாருக்கும் மனித நேயமே இல்லை என்ற தொனிதான் கட்டுரையில் இருக்கிறது. அரசு செய்யத்தவறியவை அனேகம். ஆனால் அதை மட்டுமே பேசுவோமென்றால் மும்பையில் அரசுஇயந்திரம் வெகு சிறப்பாக செயல்படவில்லை, மின் விநியோகம் உட்பட பலவ்ற்றில் குளறுபடிகள்இருந்தன, இது போன்ற ஒரு பெரு மழையினை, விளைவுகளைச் சமாளிக்க முடியாமல் அரசு இயந்திரம் திணறியது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பா.ராகவன் இப்படி எழுதுவது புதிதல்ல.சில் வாரங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் பஞ்சம் குறித்துஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது இதைப் போன்ற ஒன்றுதான். பல ல்ட்சம்மக்கள் படிக்கும் இதழில் எழுதும் போது உண்மைகளை அறிந்து, சரியான தகவல்களின் அடிப்படையில்எழுத வேண்டும் என்ற் பொறுப்புணர்ச்சி எழுதுபவர்களுக்கு இல்லையென்றால், எழுதியுள்ளது சரியா தவறா என்பதைக் கூடப் பார்க்காமல் வெளியிடுகிறது விகடன். இவர்கள்தான் ஊருக்கு கடமைக் குறித்து உபதேசம் செய்வார்கள்

70 களில் இருக்கும் சுஜாதாவும் 30களில் இருக்கும் பா.ராகவனும் இன்னும் பலரும் இப்படி எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் படிப்பவர்கள் முட்டாள்கள்என்று நினைத்துக் கொண்டுதான் எழுத ஆரம்பிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------------------
28 .8. 05 ஆனந்த விகடன்

பா.ராகவன்

நாலு இட்லி, பொங்கல், வடை, தொட்டுக்க மணக்க மணக்க சாம்பார், சட்னி, கமகம மசாலா கிழங்குடன் பூரி, ஒரு ஸ்டிராங் காபி... இது காலை டிபன். மதியம் ஒரு மணிக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், கூட்டு, பொரியல் வகையறாவுடன் திருப்தியான சாப்பாடு. மாலை லேசாகப் பசித்தால், இரண்டு சமோசா ப்ளஸ் ஒரு கப் ஸ்டிராங் டீ! இரவானால் மூன்று ரொட்டி, பருப்புக் கூட்டு, ஒரு டம்ளர் பால். உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்துவிட்டு, அக்கடாவென்று படுத்து எழுந்து, மறுநாள் பொழுதை மறுபடியும் நாலு இட்லி, பொங்கல், வடையுடன் தொடங்குபவர்கள் அத்தனை பேரும் கொஞ்சம் கவனிக்கவும்...
ஒரு முழு நாளைக்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு மக்காச்சோள மாவை மட்டுமே தின்றுவிட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் தேடி, குறைந்தபட்சம் இருபது கிலோமீட்டர் நெடும்பயணம் மேற்கொள்ளும் மக்கள் கூட்டம் ஒன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறது. கூட்டம் என்றால் ஏதோ ஆயிரம், பத்தாயிரம் அல்ல! இருபது மில்லியன் பேர் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) இப்படி அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில், உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்னை, சந்தேகமில்லாமல் இதுதான் என்று அடித்துச் சொல்கின்றன உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும். குறைந்தபட்சம் முப்பத்து இரண்டா யிரம் குழந்தைகள் போதிய உணவின்றி இந்த வருஷம் இறக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருக்கிறது ஐ.நா. என்னதான் நடக்கிறது ஆப்பிரிக்காவில்?
அங்கே உள்ள எல்லா நாடுகளிலும் இவ்வளவு மோசமான நிலைமை இல்லை. நைஜர், எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், ஜிம்பாப்வே, எரித்ரியா மற்றும் சாத் ஆகிய ஏழு நாடுகளில்தான் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. இதை அங்குள்ள அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
ஒரு பக்கம், விவசாயம் செய்ய முடியாதபடிக்குப் பேய் மழை. நைல் மற்றும் நைஜர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட, மக்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. தவிர, ஆப்பிரிக்காவில் உள்ள எந்த தேசமும் நவீன வேளாண்மை உத்திகள் எதையும் கடைப்பிடிப்பது இல்லை. விவசாயத்தில் அறிவியல் புகுத்தப் படவே இல்லை. ஆகவே, பிரச்னை என்று வரும்போது, அதைச் சமாளிப் பதற்கான வழிகள் அவர்களுக்குத் தெரிய வில்லை. உலகின் மிக நீண்ட நைல் நதியை வைத்துக்கொண்டு, எத் தனையோ அணைகள் கட்டி, என்னென் னவோ சாதித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் வெள்ளம் வரும்போது மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே!
கேட்டால், பணம் இல்லை. பணம் எங்கிருந்து வரும்? செய்வதற்குத் தொழில் இல்லை, முதலீடுகள் இல்லை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், அடிப்படைக் காரணம், ஆப்பிரிக்க நாடு களின் சிக்கல் மிக்க அரசியல் சூழல் தான்.
சூடானை எடுத்துக்கொள்ளுங்கள். நேற்று வரை உள்நாட்டுச் சண்டை. அரசாங்க கஜானாவைக் கழுவித் துடைத்துக் கவிழ்த்துவிட்டார்கள். வரி கட்டுவதற்குச் சில ஆயிரம் பேர்கூட அந்தத் தேசத்தில் கிடையாது. காரணம், வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். போதாக்குறைக்கு அல்&கொய்தா உள்பட, எத்தனையோ தீவிரவாத இயக்கங்களுக்கு சூடான்ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது. அரசுக்கும் இத்தகைய இயக்கங்களுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் எழுதப்படாத ஒப்பந்தங்களால், மக்க ளுக்குப் போகவேண்டிய பணமெல்லாம் இத் தகைய இயக்கங்களை வளர்க்கவே செல விடப்பட்டு வந்திருக் கின்றன. பிரதியுபகார மாக அந்நாட்டின் அதிபர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவரவரின் தராதரத்துக்கேற்ப ஏதோ கிடைக்கிறது என்பதால்... மக்கள் பணமாவது, மண்ணாங்கட்டிப் பணமாவது!
இதையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?
இந்தப் பசிக் கொடுமையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தேசம் எத்தியோப்பியா. தங்கம், பிளாட்டினம், செம்பு, பொட்டாஷ், இயற்கை எரிவாயு எனச் சில முக்கிய சமாசாரங்களில் ஏதோ கொஞ்சம் இங்கே கிடைக்கிறது என்பதால்தான், அது இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், இந்த வருட இறுதிக்குள் குறைந்தது இருபதாயிரம் பேராவது இங்கே பசியால் இறந்துவிடக்கூடும் என்று வேலை மெனக்கெட்டுக் கணக் கெடுத்துச் சொல்லி இருக்கிறது எத்தியோப்பிய அரசு.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் மிதிறிஸிமி (மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ திஷீஷீபீ றிஷீறீவீநீஹ் ஸிமீமீணீக்ஷீநீலீ மிஸீவீமீ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிரிக்கப் பஞ்சத்தை அடியோடு தீர்ப்பதற்குக் குறைந்தபட்சம் 303 பில்லியன் டாலர்கள் தேவை. இது மிக மிகப் பெரிய தொகை. ஒரு தேசமோ, ஒரு குறிப்பிட்ட அமைப்போ இந்தச் சுமையை ஏற்க இயலாது. எனவே, இதைப் பல நாடுகளும் பகிர்ந்துகொண்டு, மேற்படி தொகையைக் கொஞ்சம்கொஞ்சமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து, முதலில் அங்குள்ள விளைநிலங்களைச் சீராக்க வேண்டும். அடுத்ததாக, நீர் ஆதாரங்களை உருப்படியாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
அதெல்லாம் அடுத்த கட்டம். இப்போதைய பஞ்சத்துக்கு என்னதான் தீர்வு? உணவுப் பொட்டலங்கள் போடு வதுதான் ஒரே வழி! ஆனால், அங்கே இங்கே ஓரிருவர் என்றால் சரி; ஒட்டு மொத்த தேசமே பஞ்சத்தில் அடிபட் டால் என்னதான் செய்வது?
இத்தனைக்கும் இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத கண்டம் அது. கனிமங்கள், தாதுக்கள், நீர், பெட்ரோலியம் என எல்லாமே அங்கே தரைக்கடியில் சௌகரியமாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. படிப்பறிவோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத காரணத்தால், எதையும் எடுத்து அனுபவிக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள்.

இப்போது அந்த ஏழு தேசங்களிலிருந்தும் கொத்துக்கொத்தாக மக்கள் இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அகதிகளாக வரும் அண்டை தேசத்துச் சொந்தச் சகோதரர்களை எங்கே தங்கவைத்து, என்ன செய்வதென்று புரியாமல் பிற ஆப்பிரிக்க தேசங்கள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, தேச முன்னேற்றம், புண்ணாக்கு, புடலங்காய் என்றெல்லாம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களுக்கு வேண்டியது சோறு. அவ்வளவுதான்!
என்ன செய்யப்போகிறார்கள்?
------------------------------------------------------------------------------------------------

இக்கட்டுரையில் உள்ள தவறான தகவல்களும், இன்ன பல பிழைகளும் ஏராளம். ஆப்பிரிக்கா குறித்து தனக்குத் தோன்றியதையெல்லாம் கட்டுரையாசிரியர் எழுதிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. இதைப் படிக்கும் போது கட்டுரையாசிரியர் மனம் போன போக்கில் எதையும் சரி பார்க்காமல் எழுதியிருக்கிறார் என்பதற்கு உதாரணங்கள்:

"தவிர, ஆப்பிரிக்காவில் உள்ள எந்த தேசமும் நவீன வேளாண்மை உத்திகள் எதையும் கடைப்பிடிப்பது இல்லை. விவசாயத்தில் அறிவியல் புகுத்தப் படவே இல்லை.

உலகின் மிக நீண்ட நைல் நதியை வைத்துக்கொண்டு, எத் தனையோ அணைகள் கட்டி, என்னென் னவோ சாதித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் வெள்ளம் வரும்போது மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

இத்தனைக்கும் இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத கண்டம் அது. கனிமங்கள், தாதுக்கள், நீர், பெட்ரோலியம் என எல்லாமே அங்கே தரைக்கடியில் சௌகரியமாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. படிப்பறிவோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத காரணத்தால், எதையும் எடுத்து அனுபவிக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள். "

அஸ்வான் அணையை பற்றி அவர் கேள்விப்பட்டதே இல்லை போலும். ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் விவசாயம் பசுமைப் புரட்சிக்கு அடுத்த கட்டத்தில் இருக்கிறது. அதில் உயிரியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நாடுகளும் அங்கு இருக்கின்றன. கட்டுரையாசிரியர் நினைப்பது போல் ஆப்பிரிக்கர்கள் தங்கள் கனிம வளங்களை பயன்படுத்தத் தெரியாத முட்டாள்கள்இல்லை பெட்ரோலியம் உட்பட பல ஆப்பிரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகின்றன.

வெள்ளம் வரும் போது மரத்தில் ஏறி வேடிக்கைப் பார்க்கிறார்களாம். பா.ரா ஒரு வேளை அப்படிப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் அடி முட்டாள்கள் என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டினை கட்டுரையில் நாம் காணலாம். நான் தினசரி ஆப்பிரிக்காவில் பிறந்து, வளர்ந்த, கல்வி கற்ற பலருடன் பழகுகிறேன். அவர்களில் யாரும் பா.ரா போல் உளறுவதில்லை.
இந்தியா என்றால் பாம்புகளும், சாமியார்களும் நிறைந்த நாடு என்று கருதுவதில்லை.

நான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் சொல்லிப்பயனில்லை.ஏனெனில் ஆனந்த விகடனுக்கு இப்படி கட்டுரைகள் வெளியாவது பிரச்சினையே இல்லை. இது போன்ற கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள், எழுதும் எழுத்தாளர்கள் இப்படி இருக்கக் காரணம் என்ன - நம்மை யார் கேட்பது என்ற மனோபாவமதான்.

இதையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?

14 மறுமொழிகள்:

Anonymous padma மொழிந்தது...

Thanks Ravi. I thought the general attitude in that article is to critize US. Feds can not impose on the State unless requested. If people remember, even in NY, only after the Mayor's request US Federal aid came in. I had been dealing with issues after Katrina and reading such an article in magazine like Vikatan irritated me

2:00 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy) மொழிந்தது...

//இதையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?//

உண்மை ரவி! யாரும் இதைப்பற்றிப் பேசத் தயாராக இல்லை. இப்படிப்பட்ட கட்டுரைகளையும் பத்திகளையும் படித்து சிலாகிக்கத்தான் பலர் இருக்கிறார்கள். எழுதும் விதயங்களை உண்மையா என்று சரிபார்த்து எழுதுவது அறவே இல்லையென்பது நன்றாகத் தெரியும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது. ஏதாவது சொல்ல வெளிக்கிட்டால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்று சொல்வதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுவதற்கு இன்னுங்கொஞ்சம் சினிமாப் படங்காட்டிவிட்டுப்போகலாம் என்றே நினைக்கிறேன்.

2:06 PM  
Blogger Thangamani மொழிந்தது...

ரவி நல்ல கட்டுரை!

2:33 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

பா.ரா, சுஜாதா இத்தியாதி பத்திரிகையாலர்கள் பற்றி எழுதி ஒரு காசுக்கும் பிரயோசனமில்லை. உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்க, நாங்க நாலு புது விஷயம் தெரிஞ்சுக்கலாம்

2:43 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

தமிழ்ப்பத்திரிகையுலகத்திலே பெரும்பாலும்இப்படியான கட்டுரைகள்/பத்திகள் வருவதற்கான காரணங்கள்:

1. முழுநேரப்பத்திரிகையாளர்களாக இருப்பவர்கள் கட்டுரை/பத்தி எழுதுவதற்கான உசாத்துணைகளைப் பெற்றாலுங்கூட, அவற்றினை ஒத்துப்பார்த்து அலசி சரியானதாக இருக்கக்கூடியவை எவை / அல்லாதன எவை என்றவற்றினைத் தீர்மானித்துக்கொண்டு கட்டுரை/பத்தி எழுதுவதில்லை.

2. "ஜனரஞ்சக ஈர்ப்பான எழுத்து; மக்களுக்குப் புரியும்படி எழுதுகின்றோம்" என்ற மாதிரியாக எழுதுகின்றபோது, புனைவுக்கு வரலாற்றிலே நிறைய இடம் கொடுத்துவிடுகின்றனர். அப்படியான கட்டுரைகளைச் சுட்டிக்காட்டும்போது, மதி கந்தசாமி சொல்வதுபோன்ற குற்றசாட்டுகளை இலகுவாகச் சுட்டிக்காட்டுகின்றவர்கள் மீது முன்வைத்துவிட்டுப்போகின்றனர்

3. நிகழ்வுகளை, வரலாற்றினை இயன்றைவரை ஆய்ந்து எழுதக்கூடியவர்கள் என்று தம்மைக் கருதிக்கொண்டு குற்றம் சுமத்துகின்றவர்களிலும் தவறிருக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் இந்நிகழ்வுகளைக் கட்டுரைகளாகவோ பத்திகளாகவோ எழுத முயல்வதில்லை. இப்படி எழுதாததற்கு, -நேரம், முயற்சியின்மை உட்பட- பல காரணங்கள் இருக்கலாம். மேலும், இவர்கள் எழுதினாலும் அது இன்னோரன்ன பதிப்புலகத்தடைகளை மீறி அச்சேறினால், அது பெரியவிடயம்

பத்மா அரவிந்த் உங்கள் விளக்கத்துக்கும் நன்றி (உங்கள் பதிவிலே நானிட்ட பின்னூட்டத்துக்கு இது விளக்கமாகவும் இருக்கின்றது). ஆனால், வாசன் சொன்ன இது இடதுசாரிகளின் குற்றச்சாட்டு என்பதிலே எனக்கு முழுதாக ஒப்புதலில்லை. இடதுசாரிகள், புஷ் மீதும் கறுப்பினத்தவர்கள் பாதிக்கப்பட்டது குறித்தும் என்ன கருத்தினைக் கொண்டிருந்தாலுங்கூட, மற்றைய மாநிலங்களை உதவி செய்யவில்லையென எந்நேரத்திலும் குற்றம் சாட்டியதாக நான் வாசித்து, செய்திகளிலே கேட்டளவிலே அறியவில்லை. இம்முடிவுக்கு பா. ராகவன் எங்கிருந்து வந்தாரென்பது புதிர்.

பா. ராகவனின் செப் 11 குறித்து, "அமெரிக்க அரசின் சதி" கட்டுரை ஆனந்தவிகடனிலே வந்திருந்தபோது, ஆனந்தவிகடனுக்கு இணையமூடு வாசிக்கச் சந்தா கட்டியிருந்த என் நண்பரொருவர், ஆனந்தவிகடனிலே மிகவும் தெளிவான கட்டுரை 'அமெரிக்க அரசின் செப். 11 குறித்த சதி' குறித்து வந்திருக்கின்றதென்றார். இது பத்ரி சேஷாத்ரியின் பதிவு அந்த விடயம் குறித்து வரமுதல் நிகழ்ந்தது. உடனடியாக, நான் நண்பரிடம் கேட்ட கேள்வி, "எழுதியவர் பெயர் பா. ராகவன் என்பதா?" ஏன் எனக்கு அப்படியாகத் தோன்றியதென்று தெரியவில்லை. ஆனால், அப்படியாகத்தான் கேட்கத் தோன்றியது. நண்பர் எழுதியவர் யாரெனக் கவனிக்கவில்லை. இத்தனைக்கும் நண்பர் தனது துறையிலே அதியுச்சமான படிப்பினையும் அனுபவத்தினையும் பெற்றவர். கொஞ்சம் விண்டு யோசித்துப் பார்த்திருந்தாரென்றால், அட்டைக்கோட்டையின் அத்திவாரம் குறித்த அபத்தம் புரிந்திருக்கும். ஆனால், அவரோ இயன்றவரை என்னை அக்கட்டுரையின் மெய்மை குறித்து நம்ப முயற்சித்துக்கொண்டேயிருந்தார். பின்னால், பத்ரி சேஷாத்ரியின் பதிவு வந்தபின்னால், நண்பருக்கு அப்பதிவின் இணைப்பினை அனுப்பியிருந்தேன். நண்பர் அப்பதிவினையும் அப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைக் கண்டும் வழக்கமாக அமெரிக்காவின் வெளிவிவகாரநிலைப்பாடு குறித்த என் கருத்துவெறுப்புத்தன்மைக்கு மாறாக அமெரிக்க அரசின் சார்பாக செப். 11 குற்றச்சாட்டுக்கு எதிரான பேச்சைக் கண்டும் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக இன்னொன்றும் செய்தேன்; பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப்பதிப்பகத்திலே பா. ராகவன் பதிப்பாசிரியராகவும் படைப்பாசிரியராகவுமிருந்து எழுதின செப். 11 விசாரணைக்குழுவின் அறிக்கை குறித்த புத்தகத்தினையும் கொடுத்து, பத்ரி சேஷாத்ரி - பாராகவனின் பதிவு ஆனந்தவிகடன் கட்டுரை சரியா அல்லது கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட பா. ராகவன் எழுதிய (மொழிபெயர்த்த?) செப் 11 அறிக்கை குறித்த புத்தகம் சரியா என்று தீர்மானிக்கும்படி சொல்லியிருக்கின்றேன்.

பா. ராகவன் மிகவும் விடாமுயற்சி கொண்ட முழுநேரப்பத்திரிகையாளரும் தொலைக்காட்சியாளரும். பதிவிலே அவரின் படைப்புகளை/ பத்திகளைக் குற்றம் சொல்கின்றவர்களுக்கு அவரின் கட்டுரைகளைப் போல முழுநேரமாக இருந்து எழுத முடியாது; முயற்சியும் செய்வார்களென்று கூறுவதற்கில்லை. ஆனால், அதுமட்டுமே இப்படியான கட்டுரைகளை நியாயப்படுத்துவதாகிவிடாது.

சிரிப்பு வருது

2:58 PM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

பல லட்சம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய பத்திரிக்கையாளர்கள் இப்படி பொறுப்பில்லாமல், பெரிதாக மெனக்கெடாமல் எழுதுவது வருத்தமளிக்கிறது. இப்பொழுது தான் இணையம் மூலம் சுலபமாக என்ன நடக்கிறது என்று குறைந்த நேரத்தில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதே? அப்படியுமா இப்படிபட்ட தகவல் வறட்சி?

12:49 AM  
Blogger தாணு மொழிந்தது...

நன்றி ரவி,

பத்மாவின் பதிவில் விளக்கம் கேட்டு இதன் உண்மை நிலை அறிய விழைந்தேன். தீர்க்கமாக சொல்லியுள்ளீர்கள். ஒரு சாதாரண விஷயம் பற்றி எழுதும்போது கூட தவறுகள் வந்துவிடக்கூடாதென்று முயற்சி எடுத்து எழுதுகிறோம். பொறுப்பான எழுத்தாளர்கள் அதைக் காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்களே! ஒரு நிலைமைக்கு மேல் எழுதவேண்டும் என்பது மட்டுமே முக்கியமாவதால் வரும் தவறு இது.

3:01 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

9:55 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

test 1 2 3

10:29 AM  
Blogger Aruna Srinivasan மொழிந்தது...

// இக்கட்டுரையில் உள்ள தவறான தகவல்களும், இன்ன பல பிழைகளும் ஏராளம்......வெள்ளம் வரும் போது மரத்தில் ஏறி வேடிக்கைப் பார்க்கிறார்களாம்.......// !!!

ரவி, நீங்கள் சொல்வதுபோல்தான் எனக்கும் தோன்றுகிறது.

ஆப்பிரிக்கா பற்றி நிறையப் பேருக்கு இன்னும் கூட - இந்த அளவு தகவல் தொடர்புகள் அதிகமானபின்பும் - சரிவரத் தெரியவில்லை என்பது மிகப்பரிதாபமானதுதான். ஒரு காலத்தில் Black Continent என்று அழைக்கபட்ட நாடுகள் இன்று அரசியலிலும், தொழில் நுட்பத்திலும் எவ்வளவு தன்னிறைவு உடையனவாக இருக்கின்றன என்று நிதானமாக ஒரு நாள் எழுத வேண்டும்.

11:03 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

/ஒரு காலத்தில் Black Continent என்று அழைக்கபட்ட நாடுகள் இன்று அரசியலிலும், தொழில் நுட்பத்திலும் எவ்வளவு தன்னிறைவு உடையனவாக இருக்கின்றன/

this is stretching in the other direction.

1:40 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

நல்ல பதிவு! இது போன்ற பதிவுகள் constructive criticism-ஆக எடுத்துக் கொள்ளப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

4:47 PM  
Anonymous Ramamurthy மொழிந்தது...

I have been in USA for over 30 years.I am really amazed by half baked analysis by people like Raghavan who I am sure is a dyed in the wool leftist with pseudointellectual aspirations.
No country is more self critical than USA as you will know when you read various op-ed pages.These US haters take every word of Chomsky and Michael Moore as gospel truth.
You dont have to agree with Bush and his policies but he sincerely believes what he is doing is right for USA.

7:03 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//You dont have to agree with Bush and his policies but he sincerely believes what he is doing is right for USA.//

இது ஒரு முக்கியமான கருத்து.

இது புஸ்ஸுக்கு மட்டுமல்லாது இதை ஒரு மேற்கத்திய பன்பு என்றே கூறலாம். பெரும்பாலான அமெரிக்கர்கள் ஜனநாயகம், உரிமை, விடுதலை, கல்வி என்று தாங்கள் கருதுவதை, நம்புவதை அடுத்தவர்களுக்கு தருவதில் தயங்குவதில்லை. ஆனால் இந்தியாவில் தாங்கள் மேலானது என்று கருதும் விசயங்களை (அப்படி கண்டுகொள்ளக்கூடிய வசதியும், வாய்பையும், சாதியால், அதிகாரத்தால் பெற்றவர்கள்) தங்கள் நாட்டு மக்களுக்கே மறுப்பதையும், அதில் இருந்து விலக்கிவைப்பதையும் காணமுடியும்.

9:41 PM  

Post a Comment

<< முகப்பு