தமிழ் சினிமா, சாரு நிவேதிதா, தியோடர் பாஸ்கரன்

தியோடர் பாஸ்கரன் பல காலமாகச் சொல்லி வருவதை சாரு நிவேதிதா தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலந்து இரண்டு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். பாஸ்கரனின் கருத்துக்கள் சிலவற்றை குறிப்பாக சினிமாவில் பாடல்களின் பங்கு குறித்தவற்றை 1991ல் அவர் ஆங்கிலத்தில் இதை மும் வைத்த போது சர்சித்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய வெகுஜன சினிமா குறித்த புரிதலும், விவாதமும் வேறு பல திசைகளில் நகர்ந்துள்ளன. பாஸ்கரனுக்குத்தான் இதில் சொல்ல ஒன்றுமில்லையென்றால் சாருவின் நிலை அதை விட பரிதாபகரமாக இருக்கிறது. வழக்கம் போல் பெயர் உதிர்ப்புகளை செய்யும் சாரு தன் கட்டுரையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியதிலிருந்து ஒரு பகுதியை தன் தரப்பிற்கு வலுக்கூட்ட முன் வைக்கிறார். ஆனால் சாருவுக்குரோஜா திரைப்படம் குறித்து நடந்த முழு விவாதமோ அல்லது காதலன் , பம்பாய் குறித்து நடந்த விவாதமோ குறித்து எந்தப் புரிதலும் இல்லை. அப்படி விவாதங்கள் நடந்ததே சாருவுக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் இந்திய வெகுஜன சினிமா என்றாலா அது குப்பை, எந்தவிதமான அலசலுக்கும் லாயக்கற்றது, அது வெறும் கேளிக்கை என்ற கருத்து அறிவுஜீவிகளிடம் இருந்தது. பிலிம் சொசைட்டி இயக்கம் வலுவாக இருந்த காலத்தில் வெளி நாட்டுப்படங்கள், உள்நாட்டுக் 'கலை'ப் படங்கள் -இவற்றைப் பார்ப்பதும், இவை குறித்து விவாதிப்பதுமே சினிமா குறித்த அறிவுஜீவி செயல்பாடுகளில் முக்கியனமானதாக் கருதப்பட்டது. ரே, அடூர், மிருணாள் சென், ரித்விக் கடக் என்று ஒரு பத்து நபர்கள் எடுப்பவையே திரைப்படம் என்றுக் கருதத்தக்கவை என்ற கருத்தும் நிலவியது. சிறுபத்திரிகை உலகிலும் வெகுகாலம் பிரபலமாக இருந்த கருத்தும் இதுதான். பின்னர் மூன்றாம் சினிமா, இணை(parallel) சினிமா குறித்து பேசப்பட்டது. என்றாலும் வெகுஜன சினிமா குறித்த கருத்தில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. அது தமிழாக இருந்தாலும் சரி ஹிந்தியாக இருந்தாலும் சரி வெகுஜன சினிமா வெறும் கேளிக்கைதான் என்ற கருத்துடன், தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கம் திரைப்படத்தினை பயன்படுத்தியதால் அதன் மீதான வெறுப்பு அறிவுஜீவிகள் பலரிடம் மிக அதிகமாகவே இருந்தது.

ஆனால் சமூக அறிவியலில் வெகுஜனக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள், பின் நவீனத்துவ சிந்தனைகள் போன்றவை காரணமாக வெகுஜன சினிமாவையும் கலாச்சாரத்தையும் மொத்தமாக கேளிக்கை அல்லது குப்பை என்று ஒதுக்கும் போக்கிற்குப் பதிலாகஅவற்றைப் பொருட்படுத்தி ஆராயும் போக்கு வலுப்பெற்றது. வெகுஜனக்கலாச்சாரம் என்பதை ஒற்றைப்பரிமாணமாகப் பார்க்காமல் வெகுஜனக் கலச்சாரத்தில் நுகர்வோர் பங்கு, popular culture, mass culture, பிரதிகளின் வாசிப்பு, நுகர்வு போன்றவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வெகுஜன சினிமாவை பார்வையாளர்கள் எப்படி அர்த்தப்படுக்கிறார்கள், ரசிகர் மனோபாவம், fandom குறித்தெல்லாம் கோட்பாடு ரீதியாகவும், கள ஆய்வுகள் துணைக் கொண்டும் பல ஆய்வுகள் செய்யப்பட்டன. பின் நவீனத்துவம் உயர் கலாச்சாரம் - தாழ்ந்த கலாச்சரம் என்ற பிரிவினையைக் கேள்விக்குட்படுத்தியது. இந்த ஆய்வுகள் விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறிப்பாகதொலைக்காட்சித் தொடர்கள் குறித்தும் செய்யப்பட்டன. இதன் விளைவாக பல்கலைகழகங்களில் கலாச்சாரம் குறித்த ஆய்வுகளில் மடோனா குறித்து ஆராயவதோ அல்லது இந்தியாவில் தொலைக்காட்சித் தொடர்களான மகாபாரதம், ராமாயணம் குறித்து ஆராய்வதோ சாத்தியமாயிற்று. ஒரு பிரதியினை வெறும் கருத்தியல் ரீதியில் மட்டுமே ஆராய்ந்து முற்போக்கானது அல்லது நல்லது, பிற்போக்கானது அல்லது கெட்டது என்று முத்திரைக் குத்தும் பாணி கேள்விக்குட்படுத்தப்பட்டது. இதன் பொருள் வெகுஜனக் கலாச்சாரத்தினை விமர்சனமின்றி கொண்டாடுவது அல்லது தூக்கிப்பிடிப்பதல்ல. மாறாக ஆய்விக்குட்படுத்தி அது குறித்த புதிய கருத்துக்களை, கண்ணோட்டங்களை முன் வைப்பது. ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் பார்க்கபட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களில் பல்வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்படுவது, ஒரே திரைப்படம் எப்படி பல்வேறு விதமாக ரசிக்கப்படுகிறது அல்லது பொருள்கொள்ளப்படுகிறது, சோப் ஒபராக்கள் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் - இப்படி பல்வேறுவிதமான கோணங்களிலிருந்து செய்யப்பட்ட ஆய்வுகள் காரணமாக வெகுஜன கலாச்சாரம் குறித்த அறிவுஜீவிகளின் சொல்லாடல்கள் மாறுதலடையத் துவங்கின. இந்தியாவில் 1980 களில் ஏற்பட்ட தொலைக்காட்சியின் விரிவாக்கம் முதன்முறையாக திரைப்படம் அல்லாத ஒரு சக்திவாய்ந்த வெகுஜன ஊடகத்தினை உருவாக்கியது. பின்னர் 1990 களில் ஏற்ப்பட்ட தாரளமயமாக்கம், ஹிந்த்துவத்தின் வளர்ச்சி, அதி வேகம் பெற்ற உலகமயமாகும் போக்கு - கலாச்சாரத்தில் இவற்றின் தாக்கம் என்று கலாச்சாரம் குறித்த ஆய்வுகளின் பரப்பு விரிவடைந்தது.

1970களின் இறுதியில்,1980களில் வெகுஜன சினிமா குறித்த இந்திய அறிவுஜீவிகளின் புரிதலி ல் மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம. யேசு சபையைச் சேர்ந்த காஸ்டன் ரோபர்ஜ (Gaston Roberge) கல்காத்தாவில் 1970களில் சித்ரபாணி என்ற அமைப்பினை நிறுவினார். காஸ்டன் உலகத்திரைப்படங்களின் ரசிகர் என்றாலும் வெகுஜன சினிமாவைக் கருத்தில் கொள்வது குறித்தும் எழுதினார். தன்னுடைய நூல்களில் சினிமா என்னும் தொழில்நுட்பம், கலைவடிவம் குறித்து விரிவாக எழுதிய காஸ்டன் வெகுஜன சினிமாவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் காண வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். அதாவது திரைப்படம் வெறும் கேளிக்கை என்று நிராகரிப்பதற்குப் பதிலாக திரைப்படத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு ஆராயப்பட வேண்டும். வெகுஜன சினிமா முன்வைக்கும் சித்தரிப்புகள்,அது முன் வைக்கும் யதார்த்தம், சமூக யதார்த்தம் இவை ஆராயப்பட வேண்டும். வெறுமனே வெகுஜன சினிமாவை ஒரு மாயை அல்லது மோசமான பொழுதுப்போக்கு ஊடகம் அல்லதுமக்களை சீரழிக்கும் ஊடகம் என்று நிராகரிக்கக் கூடாது, நிராகரிக்க முடியாது. இன்று இந்தக் கருத்து மிகச்சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் சாரு போன்றவர்கள் இதைக் கூடஇன்னும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. காஸ்டன் இந்திய சினிமாவை ரே, சென், அரவிந்தன் என்று குறுக்கவில்லை. 1974ல் சத்யஜித் ரேயின் முன்னுரையுடன் திரைப்படத்தினைபுரிந்துகொள்ள உதவும் பொருட்டு Chitra Bani: A Book on Film Appreciation என்ற நூலை அவர் எழுதினார்.

இன்னொரு முக்கியமான நபர் புது தில்லியில் உள்ள CSDS (Centre For Stduy of Developing Societies) ன் இயக்குனராக இருந்த சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியமான சமூக அறிவியல் அறிஞர்களின் ஒருவராக கருதப்படும் அஷிஸ் நந்தி. நந்தி வெகுஜன சினிமா குறித்து எழுதிய ஒரு கட்டுரை "An Intelligent Critic's Guide to Indian Cinema." மிகவும் முக்கியமானது. 1987ல் இது வெளியானது. 1980ல் ஹிந்தித் திரைப்படம் குறித்து நந்தி எழுதியிருக்கிறார். சமூக உளவியலளாரான நந்தி சத்யஜித் ரேயின் ஷத்ரன்கே கிலாரி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்தியப் திரைப்படங்களில்காணப்படும் இரட்டை வேட பாத்திரங்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்தும் முக்கியமானது. நந்தி வெகுஜன சினிமா குறித்து எழுதும் போது அது எப்படி சமூகத்தின் ஆழ்கவலைகளை,பிரச்சினைகளை சித்தரிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

1980களில் வெகுஜன சினிமா -கலைப்படங்கள் இரண்டிலிருந்தும் வேறுபடும் பல படங்கள் வெகுஜன பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டன. அர்த் சத்யா போன்ற படங்களை எடுத்த கோவிந்த் நிகாலனி, கேட்டன் மேத்தா, சாய் பராஞ்ச்பே போன்ற இயக்குனரின் முயற்சிகள் முக்கியமானவை.அது போல் தமிழில் பாரதிராஜா, மகேந்திரன் இயக்கிய படங்கள் புதிய போக்குகள் இருப்பதைக் காட்டின. 1980களில் இக்பால் மசூட், மைதிலி ராவ் உட்பட பலர் வெகுஜனப் பத்திரிகைகளில் ஹிந்தித் திரைப்படங்கள் குறித்து எழுதினர். தமிழில் எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து சிறிது காலம் வெளிவந்த இனியில் பாரதிராஜா குறித்து ஒரு விவாதம் நடந்தது. எம்.டி.முத்துகுமாரசுவாமி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அதில் எழுதினர். இவற்றின் காரணமாக வெகுஜன சினிமா குறித்த ஆய்வுகளில் 1990களில் ஒருப் புதுப்பாய்ச்சல் ஏற்பட்டது.

1991ல் EPW ல் பராசக்தி குறித்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஒரு கட்டுரை எழுதினார். அது காலச்சுவட்டில் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அக்கட்டுரையில் அவர் பராசக்திபடம் வெளியான போது எழுந்த சர்ச்சைகள், திராவிட இயக்கத்தின் சினிமா குறித்து எழுதினார். 1990 களில் இந்திய வெகுஜன சினிமா குறித்து பல முக்கியமான ஆய்வுகளும், நூல்களும் வெளியாயின. 1980களில் துவங்கப்பட்ட DEEP FOCUS சினிமா குறித்து பல முக்கியமான கட்டுரைகளை வெளியிட்டது. EPW, Seminarல் வெகுஜனத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும், விவாதங்களும் இடம் பெற்றன, பெறுகின்றன. பெங்களுரில் உள்ள Centre For Study of Culture and Society வெகுஜனத் திரைப்படம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. திரைப்படங்கள் குறித்து கலைக்களஞ்சியங்கள் வெளியாயின. ஹேராம், லகான் போன்ற படங்கள், மணி ரத்தினத்தின் படங்கள், தமிழில் 1970களில் துவங்கிய கிராமியச்சூழல் அடிப்படையிலான neo-nativity genre படங்கள் உட்பட பல்வேறு பொருட்களில் ஆய்வுகள் நடைபெற்றன. தேஜஸ்வினி நிரன்ஜனா, ரவி வாசுதேவன், சுந்தர் காளி, எஸ்.வி.ஸ்ரீநிவாஸ், வெங்கடேஷ் சக்ரவர்த்த்தி, ஜே.கீதா, அஷிஸ் ராஜ்யதக்ஷா, மாதவ் பிரசாத், லலிதா கோபாலன் என்று ஒரு ஒரு புதிய தலை முறை ஆய்வாளர்கள் இன்று திரைப்படம் குறித்த காத்திரமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் சிறுப்பத்திரிகை உலகத்திற்கு இதெல்லாம் தெரியாது என்றே தோன்றுகிறது, நிழல் ஒரு விதிவிலக்கு.

இவற்றின் விளைவாக இன்று வெகுஜன சினிமா குறித்து எழுதும் யாரும் அதை நாடகத்தின் நீட்சி, அது திரைப்பட வடிவமில்லை, அதில் பேச்சு அதிகம், பாடல்கள், இசை காரணமாகஅது பின் தங்கியுள்ளது அல்லது அவை திரைப்படத்திற்குத் தேவையற்றவை என்றெல்லாம் எழுதுவதில்லை. இன்று காத்திரமான ஆய்வுகள் செய்யும் யாரும் வெகுஜன சினிமா சினிமாவே அல்ல என்று எழுதுவதில்லை. இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்கள் போல் இல்லை என்பதை குறையாகச் சொல்வதில்லை. மாறாக இன்று ஹாலிவுட்டின் வெகுஜன சினிமாவிற்கு சவால் விடக்கூடிய அளவில் உலகில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களிலிருந்து வேறுப்பட்டு இருப்பதே அவற்றின் பலம். மேலும் பாட்டும், இசையும், காமெடியும் அவற்றின் தனித்துவத்தினை உறுதி செய்கின்றன.

ஆனால் சாரு நிவேதிதா தியோடர் பாஸ்கரன் சொன்னதை வைத்துக் கொண்டு கொஞ்சமும் யோசிக்காமல் அதே பழைய பல்லவியைப் பாடுகிறார். ஒரு கட்டுரை எழுத ஒரு லாரி புத்தகங்கள் தேவைப்படுகிறது என்று எழுதும் இவர் இந்திய வெகுஜன சினிமா குறித்து அறிவு ஜீவிகள் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் இடம் பெறாததைக் குறித்து எழுதுவது ஒரு நகை முரண். சாருவின் கட்டுரை ஏதாவது ஒரு சிறு பத்திரிகையில் வெளியாகி அதைப் பாராட்டி சில வாசகர் கடிதங்கள் வந்தால் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனெனில் சிறு பத்திரிகைக் சூழலில் காணப்படும் அறிவு வறட்சி அத்தகையது.

ஒரு புறம் ஆனந்த விகடன்,குமுதம் போன்ற அபத்தங்கள், இன்னொரு புறம் சாரு, ஜெயமோகன், அ.ராமசாமி போன்றவர்களின் அபத்த எழுத்துக்கள். தமிழில் எதையும் படிக்காமல் இருப்பதே நல்லது என்றே பல சமயங்களில் தோன்றுகிறது.

(இக்கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கள்,தகவல்களை என் ஞாபகசக்தியை அடிப்படையாக் கொண்டு எழுதுகிறேன். இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை அல்ல. தியோடர்பாஸ்கரன் கட்டுரைக்கு நான் எழுதிய பதிலை நாளை இட முயல்கிறேன்)

12 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

2:27 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

2:27 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

-------------------
>>>
1980களில் இக்பால் மசூட், மைதிலி ராவ் உட்பட பலர் வெகுஜனப் பத்திரிகைகளில் ஹிந்தித் திரைப்படங்கள் குறித்து எழுதினர்.
தமிழில் எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து சிறிது காலம் வெளிவந்த இனியில் பாரதிராஜா குறித்து ஒரு விவாதம் நடந்தது.
மேலும் பாட்டும், இசையும், காமெடியும் அவற்றின் தனித்துவத்தினை உறுதி செய்கின்றன.
--------------------
நல்ல பதிவு ரவி. இதனை பல காலம் எழுதவேண்டுமென்று நினைத்து விட்டு விட்டேன். நீங்கள் குறிப்பிடும் இனி இதழ்கள் என்னிடம் இருந்தன. தேடிப் பிடிக்கவேண்டும். அந்த பாரதிராஜா கட்டுரை நன்றாக நினைவிருக்கிறது. நாம் காட்சி அழகியலில் வெள்ளைக்காரனை இன்னும் பிரதி செய்துகொண்டிருப்பது பரிதாபகரமானது. நம் இலக்கிய வாதிகளுக்கு (அன்றைய சினிமா உலகின் உள்ஆளாக இருந்த அமி யிலிருந்து இன்றைய ஜெமோ, சாரு வரை) சொந்தமான அழகியல் நோக்கெல்லாம் கறாராகக் கிடையாது. அவர்கள் எழுதும் விமரிசனங்களைப் பார்த்தாலே தெரியும். தமிழில் செவ்வியல் இலக்கியங்களை ரசிப்பார்களாம். தெருக்கூத்து, கதகளி, யக்ஷகானா வியப்பார்களாம். சிவாஜியோ பாலையாவோ நடித்தால் ஓவர் ஆக்டிங்காம். நம் இலக்கியப் பிதாமகர்களின் இத்தகைய aesthetic disjunction பற்றி நிறையச் சொல்லலாம்.
வேண்டாம்.
அருள்

3:05 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

3:29 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

An unbiased, informative view Ravi. Please write more in detail about the Ini article and other critics.
Thanks

3:46 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

நல்ல பதிவு ரவி. வெகு சன சினிமாக்கள் பற்றி உங்கள் கருத்துக்களோடு நான் முழுமையாக உடன் படுகிறேன்.

ஆரம்பகாலங்களில், நாடகங்களுக்கு இருந்த மவுஸ¤ சினிமாக்களுக்கு இல்லை. சினிமா என்பதே கீழ்த்தட்டு மக்களுக்கான கலைவடிவம் என்று கருதப்பட்டது. சினிமாவா சீச்சீ..என்று ஒதுக்கும்/ஒதுங்கும் மனோபாவம் இருந்தது. ( இந்த orthodox மனோபாவவத்தை, சமீபத்திலே அண்ணா பல்கலை துணைவேந்தர், கல்லூரி விழாக்களில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" அறிவுரை வழங்கியிருப்பது வரை நீட்டி பார்த்துக் கொள்ளலாம்.) இதே மனோபாவத்தைத்தான் வெகுசன சினிமா பற்றி எழுதும் அறிவுஜீவிகளிடம் பார்க்க்கிறேன். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஏனெனில், நம்மிடையே சினிமா பற்றி எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களையும் இரு வகையாகப் பிரித்து விடலாம். " காதல் படம் பெரியாரின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தும் சிற்றிதழ் அறிவு ஜீவிகள் ஒரு புறம் மட்டும் என்றால், ப்ரிவ்யூ ஷோவுக்குப் போய்விட்டு அவசர அவசரமாக்க் கிறுக்கிக் கொடுத்துவிட்டுப் போகும் பத்திரிக்கை விமர்சகர்கள் ஒருபுறம். இந்த இருவருக்கும் நடுவில் யாருமே இல்லை என்பதுதான் பிரச்சனை

// நீங்கள் குறிப்பிடும் இனி இதழ்கள் என்னிடம் இருந்தன. தேடிப் பிடிக்கவேண்டும். //

அருள் : இதழ் கிடைத்தது என்றால், நேரில் பார்க்கும் போது எனக்கு ஒரு ·போட்டோஸ்டட் பிரதி.

9:40 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

>>அருள் : இதழ் கிடைத்தது என்றால், நேரில் பார்க்கும் போது எனக்கு ஒரு ·போட்டோஸ்டட் பிரதி.
--
நிச்சயம். பெங்களூரில் இருக்கிறது. மாசக்கடைசியில் பிடிக்கிறேன்
அருள்

11:13 PM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

திரைப்படங்களை வரையறுப்பதில் உள்ள bias குறித்த கருத்து உண்மை. ஆயின் ஒரு கருத்தை நாம் கவனிக்கவேண்டும்.
வெகுஜன சினிமா என்பதை எப்படி கலைசார்ந்த திரைப்படங்களிலிருந்து பிரிப்பதில் சுயமான வெறுப்பு விருப்பு வருகிறதோ, அதுபோலவே, வெகுஜன சினிமாவை மீண்டும் பகுத்தால் ( b,c segment) அச்சுயம் சார்ந்த நிறப்பிரிகை காணக்கிடைக்கிறது. எது தரமான சினிமா சார்ந்த காமெடி? என்னும் கேள்வியை உதாரணமாகக் கொள்வோம். "கலைவாணர், பாலையா வரை நல்ல காமெடி இருந்தது. கவுண்டமணி, செந்தில் எல்லாம் "பன்ற"஢, அவனே, இவனே " என கெட்டவார்த்தை போட்டுத் திட்டுவதெல்லாம் காமெடியா?" என்று சொல்வ¾¢ø சமுதாய வரம்பு மீறுவது என்னும் குற்றச்சாட்டு மட்டும் சொன்னால் ஆமோதிக்க முடியும். அதில் சொந்த விருப்பு வெறுப்பு கலப்பது சமூக கலாச்சார conditioning என்னுமளவில் காணுமானால் கலைசினிமா, வெகுஜன சினிமா எனப் பிரிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

திரைப்பட ரசனைக்குழுக்களின் பங்கு மகத்தானது. எனது சொந்த அனுபவம் கேரளாவில். ( திருநெல்வேலியில் அப்படியொரு குழு இருந்திருந்தும் எனக்கு அதன் தொடர்பு கிட்டாத துரதிருஷ்டம்).
நல்ல பதிவு . நன்றி

12:53 AM  
Blogger Voice on Wings மொழிந்தது...

எனக்கு அறிவுஜீவிகள் இது குறித்து என்ன ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. சிற்றிதழ்களும் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால் ஒரு சாமானியனான எனக்கு, "இந்திய வெகுஜன சினிமாவில் நாடகத்தன்மை மேலோங்கியிருக்கிறது, அவற்றின் பாடல் மற்றும் காமெடி காட்சிகள் திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வையே ஏற்படுத்துகின்றன" என்றக் கருத்தில் உண்மையிருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கு வலு சேர்க்க நான் யாரையும் துணைக்கு அழைக்கப் போவதில்லை (யாரையும் தெரியாது என்பது வேறு விஷயம்). ஆனால் சொந்த அனுபவத்தில் நான் உணர்ந்தது, இந்திய வெகுஜனப் படங்களைப் பார்ப்பதை விட, புரியாத மொழிகளின் படங்களை sub-titlesஉடன் பார்ப்பது அதிக நிறைவைத் தரக்கூடும் என்பதே. நிச்சயமாக ஹாலிவுட் படங்கள் ஒரு தீவிரப் பார்வை அனுபவத்தை அளிக்கின்றன. பட்ஜட் மட்டுமே இதற்குக் காரணமென்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியச் சூழலில் அரைத்த மாவையே அரைப்பதிலுள்ள சுகம் (படைப்பாளிகளுக்கு, மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட), ஒருக் காரணமாக இருக்கலாம்.

5:06 AM  
Blogger -/சுடலை மாடன்/- மொழிந்தது...

நல்ல பதிவு இரவி. 1991 ஆம் ஆண்டு EPWவில் வந்த ஸ்ரீவத்ஸன், தியடோர் பாஸ்கரன், எம். எஸ். எஸ். பாண்டியன் கட்டுரைகள், உங்கள் விமர்சனம், அதைத் தொடர்ந்து ஸ்ரீவத்ஸன் எழுதிய கட்டுரை உள்ளிட்ட விவாதங்களைப் படித்திருக்கிறேன். முடிந்தால் எல்லாக் கட்டுரைகளின் சாராம்சத்தையும் நீங்கள் சுருக்கமாக எழுதினால் நன்றாகயிருக்கும். எனக்கு நிறைய மறந்து விட்டன. மீண்டும் படிப்பதென்றால் எந்த இதழ்கள் என்றும் நினைவில்லை. குறைந்த பட்சம் இதழ் எண்களையாவது கொடுங்கள். இந்தியாவில் வெகுஜன கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய நல்ல விவாதமாகப் பட்டது. எனக்கு நிறைய கருத்துக்கள் அச்சமயம் புதிதாக அறிமுகமானவை. அன்று முதல் உங்கள் எழுத்துக்களைக் கண்காணிக்கத் தொடங்கினேன் எனலாம்:-)

இது பற்றி சில கேள்விகளும் கருத்துக்களும் உள்ளன, தற்பொழுது எழுத நேரமில்லை.

மேலும் வெகுஜன சினிமா பற்றி நீங்களும், ரோசா வசந்தும் கலந்து கொண்ட விவாதம் பற்றி வசந்த் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார், முடிந்தால் நீங்களோ, வசந்தோ தொகுத்து மறுபதிப்பு செய்தால் நல்லது.

பாரதிராஜா சினிமா பற்றி எஸ். வி. இராஜதுரையின் 1986 அக்டோபர் 'இனி' பத்திரிகையில் வந்த கட்டுரை என்னிடம் கைவசம் உள்ளது. வேண்டுமானால் எனக்கு மின்னஞ்சல் (sudalaimadan at yahoo dot com) செய்யவும், Scan செய்து அனுப்பி வைக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

6:22 PM  
Blogger rajkumar மொழிந்தது...

Good post

1:57 AM  
Anonymous சித்தார்த் மொழிந்தது...

வெகுஜன திரைப்படத்தை அப்படியே நிராகரிப்பது அறிவின்மையின் வெளிப்பாடே. அதே சமயம் அதன் குறைகளையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என படுகிறது. இன்றும் கிளைமாக்ஸில் சண்டை வைத்து படத்தை முடிக்கும் "தைரியத்தை" யார் தந்தது இவர்களுக்கு?

சாருவையும் ஜெயமோகனையும் ஒரே தரத்தில் வைத்தது இடரியது. ஜெயமோகன் யோசிக்காமல் எதையும் கூறுவதில்லை, சாருவை போல.

12:14 AM  

Post a Comment

<< முகப்பு