ஒரு பயணத்தின் கதை - 2

அங்கு நான் கண்ட காசி இந்தியாவில் பல முறை பேருந்துகள் வழியாக பயணித்தப் போதுகண்ட காட்சிகளை நினைவுபடுத்தியது. விமானத்தின் முன் சக்கரத்தினை இருவர் பழுதுபார்த்திருக்க்கொண்டிருக்க, பிற பகுதிகளை வேறு சிலர் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.ஒருவேளை பயணிகளே இறங்குங்கள், விமானத்தினை பழுதுபார்க்க, துப்புரவு செய்ய உதவுங்கள்என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தேன். விமானம் பழுதுபார்க்கப்படுவதால் கிளம்பதாமதமாகும் என்று அறிவித்தார்கள், அது கிளம்ப தயார் நிலையை எட்டும் வரை அனைவரும்பேருந்தில் இருந்தோம். என் மனதில் வேறொரு சிந்தனை ஒடிக்கொண்டிருந்தது.

பாரீஸ் விமானநிலையத்தில் பாரீஸ் ஜூரிச், ஜூரிச் ஜெனிவா பயணச்சீட்டுக் கொடுத்தவர்நான் ஜூரிச் விமானநிலையத்தில் ஏர்பிரான்ஸில் டிரான்ஸிட் பயணிகளுக்கான கவுண்டரைஅணுகி பயணச்சீட்டில் அவர்கள் ஒப்புதல் பெற வேண்டும், அவர்கள் ஜூரிச் ஜெனிவா விமானத்தில்இடமில்லையெனில் அடுத்து ஜெனிவா செல்லும் விமானத்தில் இடம் தருவார்கள் என்று வேறு கூறியிருந்தார். இந்த விமானம் ஜூரிச் போய் சேருவதற்கும் ஜெனிவாவிற்கு செல்ல வேண்டியவிமானம் கிளம்புவதற்கும் இடையயே 90 நிமிட இடைவெளி இருந்தது. ஆனால் இந்த விமானமேகிளம்ப தாமதாகிறதே, இது கிளம்பி அங்கு சென்று, பின் நான் ஏர் பிரான்ஸ் கவுண்டரில் சென்றுஒப்புதல் பெற்று அடுத்த விமானத்தினைப் பிடிக்க நேரம் சரியாக இருக்கும் அல்லது நான் ஒரே நாளில் இரண்டு விமானங்களைத் தவற விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றியது. சரி நடப்பது நடக்கட்டும் என்று பேருந்தில் காத்திருந்தேன். ஒரு வழியாக 35 நிமிடங்களுக்குப் பிறது அந்த விமானம் கிளம்பியது. அது ஒரு சிறிய விமானம். விமானம் தாமதமாக கிளம்பியதற்கு மன்னிப்புக் கேட்டார்கள், பயண நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவாக ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.

ஜூரிச்சில் விமானம் தரையிறங்கியது. முதலில் பாஸ்போர்ட் சோதனை. பின்னர் பயணிகளை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள். ஜூரிச் சர்வதேச விமான நிலையம் பெரியது. கொஞ்சம் கவனப்பிசகாக நடந்து கொண்டால் வெளிப்பகுதிக்கு வந்து விடுவோமோ, பின்னர் பாதுகாப்பு சோதனைகளை முடித்தப் பின் தான் உள்ளே செல்ல முடியுமோ என்ற சந்தேகம் இருந்ததால் என்பதால் மிக கவனமாக இருந்தேன். வேகமாக நடந்தேன், ஒடினேன். ஒரு வழியாக ஏர் பிரான்ஸின்டிரான்ஸிட் பயணிகளுக்கான கவுண்டரை கண்டுபிடித்து ஒப்புதலும் பெற்றேன். அவர்கள் விமானம் எங்கிருந்து கிளம்பும் என்பதை தெரிவித்தார்கள். மீண்டும் ஒட்டமும் நடையுமாய் அந்த கேட்டிற்கு வந்தேன். அங்கு யாருமில்லை. விமானம் கிளம்ப இன்னும் 45 நிமிடங்கள் இருந்தன. விசாரித்ததில் விமானம் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் முன்புதான் அங்கு பயணச்சீட்டினை சரிபார்ப்பவர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். அருகில் பல கடைகள் இருந்தன, பொதுத்தொலை பேசிகள் இருந்தன.

ஒரு கடையில் 10 டாலருக்கு காலிங் கார்ட் வாங்கினேன். ஜெனிவாவில் என்னை அழைத்திருந்த அமைப்பிற்கு தொலைபேசினேன். எனக்கு விடுதியில் தங்க ஏற்பாடு செய்தவர் அப்போது அங்கில்லை, இருந்தாலும் என்னிடம் பேசியவர் அவர் விடுதிக்கு தகவல் கொடுத்துவிட்டார் என்றும், ஏர் பிரான்ஸிலிருந்து என் வருகை தாமதமாகிறது என்று தகவல் வந்தது என்றார். பின் அவ்வமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர், நான் சேரவிருக்கும் ஆய்வுதிட்டத்தின் இயக்குனர் இருவரிடத்தும் நிலைமையை விளக்கி நாளைதான் வர முடியும் என்று கூறினேன். மனைவிக்கு தகவல் சொல்ல முயற்சித்தேன். அவர் ஆய்வுக்கூடத்தில் இருந்ததால் இன்னொரு ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்குமாறு கூறினேன். அந்த கேட்டில் பயணச்சீட்டு பரிசோதிப்பவர்கள் வந்து சேர்ந்தவுடன் என் பயண்ச்சீட்டுகளைக் காண்பித்தேன். விமானத்தில் ஒரு காலி இடம் இருக்கிறது, கடைசி வரிசையில் கடைசி இருக்கை என்றார்கள். அதைக் கொடுங்கள்என்றேன். இப்படியாக ஜெனிவா செல்லும் விமானத்தில் இடம் கிடைத்து ஏறினேன்.

ஜூரிச் எனக்கு முக்கியமான ஊர். ஒரு காலத்தில் என் காதலி இங்கு ETH எனப்படும் Federal Institute of Technology ல் ஆராய்ச்சியாளாராக இருந்தார். சுவிஸ் அரசின் செல்லப்பிள்ளை ETH. இந்தியாவில் ஐ.ஐ.டிகள் எப்படியோ அது போல் சுவிஸ்ஸில் ETH. அப்போது நான் உலகின் இன்னொரு பகுதியிலிருந்து தினசரி காலை 7.30 முதல் இரவு 10.30 வரை அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பவது, இணையம் மூலம் வாழ்த்தட்டைகள் அனுப்பவது, காதல் கவிதைகள் எழுதி அனுப்புவது, இவற்றை செய்ய இயலாத போது அலுவலக வேலைகளைச் செய்வது, மற்றும் என் அன்றாட வேலைகளைச் செய்வது என்றபடி வாழ்ந்திருந்தேன் :). அது நீண்ட நாள் நீடிக்கவில்லை, ஹ¥ம் , அது ஒரு கனாக் காலம் :). ஆக அவள் பாதங்கள் பட்ட ஜூரிச் 'மண்ணை' நானும் மிதித்தபின் தான் நான் ஜெனிவா சென்றேன்.

ஆகக் கடைசியில் வெற்றிகரமாக ஜெனிவா வந்து சேர்ந்தேன். பாரீஸ் ஜெனிவா பயண நேரம் ஒரு மணி நேரம்தான். ஆனால் நான் ஜூரிச் வழியாக வந்து சேர்ந்த போது கிட்டதட்ட ஏழு மணி நேரம் தாமதம். மாலை ஆறு மணிக்கு ஜெனிவா வந்து சேர்ந்தேன். சோதனைகள் இத்துடன் முடிந்தன, சுபம் என்று கூறலாம் என்றால் அப்படி நடக்கவில்லை.

இண்டியானாபோலிஸில் நான் இரண்டு பெரிய பெட்டிகளை (checked in baggage) ஜெனிவாவிற்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பியிருந்தேன். எனவே அவை இங்கு வந்திருக்க வேண்டும், நான் தாமதமாக வந்ததால் பெட்டிகள் முன்னரே வந்திருக்கும் என்று தேடினேன். அவை வந்திருக்கவில்லை. நானும் சலிக்காமல் 40 நிமிடங்கள் தேடினேன். வந்த பெட்டிகளை ஒரு புறம் வைத்திருந்தார்கள், அதிலும் அவை இல்லை. நான் வந்த விமானத்திலும் வரவில்லை. எனவே இது குறித்து ஒரு புகார் கொடுப்பதற்காக அதற்குரிய அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு எனக்கு முன்பு இருவர் புகார் கொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்தவரிடம் என் நிலையைச் சொன்னேன், ஜூரிச் வழியே வந்தேன் என்றேன். இது சகஜம் என்று கூறியவர் தினமும் இப்படித்தான் நடக்கிறது. பலர் உங்களைப் போல் மாற்றிவிடப்படுகிறார்கள் என்றார். உங்கள் பெட்டிகள் பாரீஸில் இருக்கக்கூடும் அல்லது வந்துக்கொண்டிருக்கும் விமானத்தில் இருக்கலாம் என்றார். ஒரு படிவத்தைக் கொடுத்தார். அதைப் பூர்த்தி செய்து, தங்கியிருந்த விடுதி அறை, அலுவலக தொடர்புஎண்கள் ஆகியவற்றைக் கொடுத்தேன்.

நாங்களே பெட்டிகள் வந்த உடன் அனுப்பிவிடுவோம், இணையத்திலும் அவை எங்கிருக்கின்றன, இங்கு வந்துவிட்டனவா என்பதை அறியலாம் என்று கூறி அது குறித்த விபரங்களைக் கொடுத்தார். இது போன்று நடக்கக்கூடும் என்று ஊகித்து 3 அல்லது 4 நாட்களுக்குத் தேவையான உடைகள், உள்ளாடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்போன்றவற்றை இழுவைப்பெட்டியில் வைத்திருந்தேன். எனவே அவை தாமதமாக வந்தாலும் பெரிய பாதிப்பில்லை.
அடுத்து மனைவியிடம் தொலைபேசினேன், விபரங்களைக் கூறி கவலைப்பட வேண்டாம், விடுதிக்குச் செல்கிறேன், அங்கே தொடர்பு கொள்ளலாம் என்று கூறினேன். பின்னர் மின்னஞ்சல் அனுப்ப அங்கிருந்த கணினிகளை பயன்படுத்த முயன்றேன். அவற்றில் இருந்த விசைப்பலைகளுடனான அனுபவத்தினை குறித்து ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.

[ புதன், ஜூலை 14, 2004 QWERTY QWERTZ
வழக்கமாக பயன்படுத்தும் விசைப்பலகையில் QWERTY என்று தான் இருக்கும். நான் இருப்பது ஜெனிவாவில். இங்கு அலுவலகத்திலும், வீட்டிலும் உள்ள கணினியில் விசைப்பலகை வேறு மாதிரி உள்ளது. இப்படி இருக்கும் என்று முன்பே தெரியும். ஒய் Y யும், Z இசட் டும் இடம் மாறியிருக்கும். அது தவிர வேறு பல மாற்றங்களும் உண்டு.ஆல்ட்ஜிர் (Alt Gr) என்று ஒரு கூடுதல் விசையும் உண்டு. கடந்த பத்து நாட்களாக இதனுடன் நான் புழ்ங்குவதால் ஒரளவிற்கு பரிச்சமாகி விட்டது.

ஜெனிவாவில் வந்து இறங்கிய உடன் விமான நிலையத்தில் ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்ப 15 நிமிடமாகிவிட்டது இந்த விசைப்பலகை எனக்கு புதிதென்பதால். @ என்பதை ஷிப்ட் கீயைப் பயன்படுத்தி இட முடியாது. ஆல்ட்ஜிர் என்ற கீயைப் பயன்படுத்தினால்தான் அதை இட முடியும்.இது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அருகில் இன்னொரு கணினியைப் பயன்படுத்தி கொண்டிருப்பவருக்கும் தெரியவில்லை. பின் இன்னொருவர் அவர் வேறொரு கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் உதவிக்கு வந்து விளக்கினார். ஒரு வ்ழியாக ஒரு மின்ஞ்சலை தட்டுத்தடுமாறி அனுப்பினேன்.

சில நாட்களுக்கும் முன் சட்டப் புலத்தின் டீன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தான் ஒரு பிரெஞ்ச் விசைபலகையை பயன்படுத்தி அனுப்பியதால் ஏற்பட்ட பிரச்சினையை குறிப்பிட்டிருந்தார்.நான் ஜெனிவாவில் இருப்பதையும், புதிய முகவரியையும் ஒரு அமெரிக்க பேரசாரியருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அவர் ஸ்வீடனிலிருந்து பதில் அனுப்பினார். தான் மாக் கணினியை பயன்படுத்தி பழக்கமில்லாத விசைப்பலகை கொண்டு பதில் அனுப்புவதாகவும் எனவே பிழைகள் இருந்தால் பொருட்படுத்த வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். நான் வீட்டில் பயன்படுத்தும் விசைப்பலகையில் Yம் Zம் வழக்கமான இடங்களில் இருக்கும். ஆனால் வேறு மாற்றங்கள் உண்டு.

அலுவலக்த்தில் பயன்படுத்தும் விசைப்பலகையுடன் அது வேறு படுவதால் உள்ளீடு செய்யும் போது சிறிது சிரமம் ஏற்படுகிறது. விசைப்பலகையை வேறு விதமாக இயங்க வைக்கலாம். ஆனால் அப்போது விசைப்பலகையில் உள்ள எழுத்திற்கும், உள்ளீடு செய்யும் போது தோன்றும் எழுத்திற்கும் வேறுபாடு இருக்கும். அது இன்னும் குழப்பம்தரும் என்பதால் இருப்பதை வைத்து சமாளிக்கிறேன்.

QWERTY விசைப்பலகைக்கு ஒரு வரலாறு உண்டு. இதை பாத் டிபென்டஸிக்கு (path dependency) உதாரணமாக குறிப்பிடுவார்கள். ஒன்றிற்கு பழக்கப்பட்டுவிட்டால் புதிதாக வேறொன்றை பயன்படுத்த கற்பது எளிதல்ல.

இது போல் பழையது தொழில் நுட்ப ரீதியாக பின் தங்கி இருந்தாலும் உடனே வழக்கிலிருந்து போவதில்லை என்பதற்கு பாத் டிபென்டஸியும் ஒரு காரணம். விண்டோஸை விட லினக்ஸ் மேம்பட்டிருந்தாலும் அது பலரை ஈர்க்காததை இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம் ]


விமான நிலையத்தில் உணவு உட்கொண்டு ஒரு டாக்சியைப் பிடித்து விடுதிக்குச் சென்றேன். நான் தாமதமாகத்தான் வருவேன் என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்திருந்ததால் அறையை வேறு யாருக்கும் ஒதுக்கவில்லை. விடுதியில் இருந்த வரவேற்பாளரிடம் எனக்கு இரண்டு பெட்டிகள் வரக்கூடும் வந்தால் என்னை எழுப்பித்தகவல் தாருங்கள் என்று தெரிவித்திருந்தேன். பின்னர் சாப்பிட்டுவிட்டு அலுப்பில் உறங்கிப் போனேன்.

இரவு மணி 11 இருக்கும், விடுதி வரவேற்பாளர் அறைக் கதவைத் தட்டினார், இரண்டு பெட்டிகளைக் காண்பித்து இவை உங்களுடையதா என்றார். நான் நன்றாகப் பார்த்துவிட்டு இல்லை, திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறி விட்டேன். ஆகஅன்று இரவு வரை பாரீஸிலிருந்து என் பெட்டிகள் ஜெனிவாவிற்கு வரவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

இவ்வளவு குழப்பங்களுக்கிடையே ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இணையம் மூலம் ஜிடி சுவடி என்ற இணையதளத்தினை ஜெனிவா வாழ் தமிழர்களுக்காவும், ஜெனிவாவிற்கு வரும் தமிழர்களுக்கு உதவவும் நடத்தி வந்த சுபாஸ் என்ற ஈழத்தமிழரிடம் தொடர்பு கொண்டு என் வருகையைப் பற்றிக் கூறியிருந்தேன். ஊருக்குப் புதுசு என்பதால் அவரும் உதவுவேன் என்று கூறிஅவர் நண்பர் ஒருவரை என்னை விமான நிலையத்தில் வரவேற்று விடுதியில் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். நான் நீலச்சட்டை அணிந்திருப்பேன், இந்த விமானத்தில் இத்தனை மணிக்கு வந்து சேர்வேன் என்பதையும் அவருடைய நண்பருக்கு தெரிவித்திருந்தார். சுபாஸிஸ்ற்கு அன்று மதியம் வேலை இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. நான் பாரீஸில் இப்படி மாட்டிக்கொண்டது அவருக்குத் தெரியாது. சொன்னபடி அவர் நண்பர் வந்து காத்திருந்து, நீலச்சட்டைப் போட்ட, பார்க்க இந்தியர் போல் தோன்றும் பயணிகளிடம் நீங்கள் ரவி ஸ்ரீநிவாஸா என்று கேட்டு நான் வரவில்லை என்று தெரிந்து கொண்டு சென்றுவிட்டார், சுபாஸிடமும் தகவல் தெரிவித்து விட்டார். பின்னர் சுபாஸ் விடுதியை தொடர்பு கொண்டார். என்னைச் சந்தித்தார். நடந்ததைச் சொன்னேன் அவரும் நண்பர் காத்திருந்த கதையைச் சொன்னார்.

தூங்கி எழுந்து காலையில் அலுவலகம் சென்றேன். வாசலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பிரபு ராம், நான் ரவி ஸ்ரீநிவாஸ் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தான் முன் பின் பார்த்திராத ஒருவர் எப்படி தன்னை சரியாக அடையாளம் கண்டு கொண்டு அறிமுகம் செய்து கொள்கிறார் என்பது அவருக்கு புதிராக இருந்தது. நான் அங்கு வரவிருப்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு வலைப்பதிவாளர். தன் பதிவில் புகைப்படத்தினைப் போட்டிருந்தார். அதை வைத்து அவரை அடையாளம் கண்டு கொண்டேன் என்று விளக்கினேன். பின்னர் அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவரை சந்தித்தேன். ஆய்வுத்திட்டதில் எனக்கு முன்னர் சேர்ந்திருந்தஆய்வாளர்கள் மற்றும் பிறருடன் பரஸ்பர அறிமுகம் நடந்தது. எனக்கான இடமும், கணினியும் தயார் நிலையில் இருந்தன. மாலை கிளம்பும் போது இணையத்தில் பெட்டிகளின் கதி என்ன என்று பார்த்தேன். அவை மாலை வந்து விடுதியில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இப்படியாக நான் ஜெனிவாவிற்கு மிக பத்திரமாக வந்து சேர்ந்தேன். இந்தப் பயணத்தில் சோதனைகள் ஏற்பட்டாலும் எனக்கு கலக்கம் ஏற்படவில்லை. இவற்றை சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, பல பயணங்களின் அனுபவங்கள் இருந்ததால் கவலை ஏற்படவில்லை.

அது சரி ஏன் ஷென்சென் விசா கேட்கிறார்கள். நானும் இதைக் கேட்ட போது கிடைத்த பதில் ஜெனிவா விமான நிலையத்தில் ஒரு பகுதி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஏர் பிரான்ஸ் மூலம் பாரீஸிலிருந்து வரும் போது விசா தேவையாகிறது. இப்போதும் இந்தவிதி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் கவலையில்லை, என்னிடம் ஷென்சென் விசா இருக்கிறது :).

ஆனால் இப்போதெல்லாம் டிரான்ஸிட் விசா என்ற பெயரில் தொந்தரவு செய்கிறார்கள். நீங்கள் விமானத்தை விட்டு கீழே இறங்காவிட்டால் கூட சில விமான நிலையங்கள்வழியே சென்றால் டிரான்ஸிட் விசா தேவை என்று அதற்கென்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.

17 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அது நீண்ட நாள் நீடிக்கவில்லை, ஹ¥ம் , அது ஒரு கனாக் காலம் :).

ஓ தேவதாஸ் ?

3:28 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//தினசரி காலை 7.30 முதல் இரவு 10.30 வரை அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பவது, இணையம் மூலம் வாழ்த்தட்டைகள் அனுப்பவது, காதல் கவிதைகள் எழுதி அனுப்புவது, இவற்றை செய்ய இயலாத போது அலுவலக வேலைகளைச் செய்வது, மற்றும் என் அன்றாட வேலைகளைச் செய்வது என்றபடி வாழ்ந்திருந்தேன் //

இதெல்லாம் வேற நடந்துச்சா! ம்ம்..

4:00 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

அய்யா! ஜெனீவா மண்ணுக்கும், உங்க ராசிக்கும் ஒரு சல்யூட்டு :-) இரண்டு சண்டை காட்சிகள் சேர்த்திருக்கலாம். அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கு.

/ETH எனப்படும் Federal Institute of Technology /
ஆகா என்ன அப்பிரிவியேசன்! :-)

4:09 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

/இதெல்லாம் வேற நடந்துச்சா! ம்ம்.. /
தங்கமணி, இதெல்லாம் சரியாக நடந்திருக்கும் போல தெரியுது, இல்லைன்னா குறைந்தது இரண்டு சண்டைகாட்சிகளாவது எழுதியிருப்பாரே ;-)

4:10 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

ரவி(தொலைபேசியில்): அன்பே , நான் இப்போ சென்சென் விசா இல்லாமல், ஜெனிவாவுக்கும் போக முடியாது, திரும்பியும் வரமுடியாது.

போன் மறுமுனையில்: ..................

ரவி: என்ன ? எதுவும் பேச மாட்டேங்குற? கவலைப்படாத எல்லம் சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

போன் மறுமுனையில்: இல்லை, திடீர்னு இவ்வளவு சந்தோஷமான விஷயத்தைக் கேட்டதால திக்கு முக்காடிட்டேன் :-)

4:14 PM  
Anonymous Balaji-paari மொழிந்தது...

Phone kaathal background-la oru kaathal paattu...ithai vituteengalae..

karthikramas-kku neram sariyillai..
Mrs. Ravi, katrinaava maari ungala thaakka poranga..:)

4:36 PM  
Blogger துளசி கோபால் மொழிந்தது...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

ஆனா கொஞ்சம் ச்சின்னது:-)

நல்ல பயணப்பதிவு.

ரசித்தேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

6:28 PM  
Blogger Jsri மொழிந்தது...

ரவி, ரசிச்சு படிச்சேன். அடுத்தவங்களுக்கு இடுக்கண் வருங்கால் நகுகன்னு இதைத்தான் சொன்னாரு போல இருக்கு வள்ளுவர்.

ஆனா இவ்ளோ பிரச்சனைகள் இல்லைன்னா பயணக்கட்டுரைன்னு எழுதவே எதுவும் இருந்திருக்காதே.

பாரிஸிலிருந்து ஜெனிவாவுக்கு ரயில்லயே 4 மணிநேரம்தான். :)) பயணமும் அருமையா இருந்திருக்கும். ஆனா துணை இருக்கணும். தனியா ஸ்விஸ் போறது கொடுமை. செம வேஸ்ட்.

அந்த கீபோர்ட் மேட்டர்.. ஐயோ சொல்லாதீங்க. வாழ்வே வெறுக்கும்.

ஜெனிவா தாண்டி எங்க போனீங்க? புகைப்படங்கள் போடுவீங்களா? முடிவுல தொடரும்னு போடுவீங்கன்னு நினைச்சேன். கட்டுரை முடிஞ்சுடுத்தா? :(

10:29 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//எங்களை ஏற்றி அது விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குச் சென்றது, அங்கு நான் கண்ட காட்சி.... //

And what followed in part 2 was disappointing. Do you write for Tamil mega serials? :)

10:37 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

//தினசரி காலை 7.30 முதல் இரவு 10.30 வரை அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பவது, இணையம் மூலம் வாழ்த்தட்டைகள் அனுப்பவது, காதல் கவிதைகள் எழுதி அனுப்புவது, இவற்றை செய்ய இயலாத போது அலுவலக வேலைகளைச் செய்வது, மற்றும் என் அன்றாட வேலைகளைச் செய்வது என்றபடி வாழ்ந்திருந்தேன் //

ஆனானப்பட்ட அந்த ராமசந்ரமூர்த்தியையே விடல்லையே.... விதி வலியது

5:02 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

செர்ரிமாஸ் : ஷென்விசாவும் இல்லை, இருக்கும் நாட்டிலும் இருக்க உரிமையில்லை, அமெரிக்க விசாவும் இல்லையென்றால் மரியாதையாக இந்தியாவிற்கு போய்விட வேண்டியதுதான் :).
ஐரோப்பாவில் உரக்கப் பேசுவதே நாகரிகமற்ற செயல் என்று கருதுகிறார்கள், இதில் நான்
சண்டை வேறு போட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான் :).

ஜயச்ரி : எனக்கும் ரயிலில் போகலாம் என்று தெரியும் ,ஆனால் மீண்டும் பெட்டிகள் வருவது தாமதமாகும், குழப்பம் ஏற்படும் என்ற அச்சம்.புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன், அவற்றை
இங்கு போட்டால் பெயரிலி, தங்கமணி , டி.ஜே, கார்த்திக்ராமாஸ் தேடி வந்து தர்ம அடி
கொடுப்பார்கள், உனக்கெல்லாம் காமிரா ஒரு கேடா என்று கேட்டபடி :) நீங்களும் விசைப்பலகைகளுடன் போராடியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்போது இது பழகிப்போய்
இந்தியா போனால் சாதாரண விசைப்பலைகளை கையாள்வது சிறிது சிரமமாக இருக்கிறது :)

துளசி: வீடு இருக்கிறதோ இல்லையோ வாசற்படி இருக்கிறது :).

பெயரிலி விதி வலியதுதான், உங்களுக்குத் தெரியாததா :)

அனானி 1 : தேவதாஸ் கதையில்லை, காதலித்து திருமணம் செய்து கொண்ட சோகதாஸ் கதை இது :)

அனானி 2: மெகா சீரியல்களை நான் பார்ப்பதேயில்லை

தங்கமணி சொன்னது கொஞ்சம் சொல்லாதது அதிகம்

5:45 AM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

ரவி..நான் வலைபதிய ஆரம்பிச்சத்துக்கு அப்புறம் படிச்ச உங்களோட பதிவுகளை வைச்சு நீங்க கொஞ்சம் serious intellectualன்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது நீங்க ஒரு serious romanticன்னு!!!:-)))

5:59 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

serious romantic
:(

7:15 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

இப்பத்தான் தெரியுது நீங்க ஒரு serious romanticன்னு!!!:-)))

ரம்யா,ரகசியங்களை இப்படியா போட்டு உடைப்பது :)

8:51 AM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

5:49 AM  
Blogger Srimangai(K.Sudhakar) மொழிந்தது...

ரவி,
அப்போ அந்த பெங்களூர் சோகக் கதை,மதுரை, எர்ணாகுளம் கதைகளெல்லாம் எப்ப வரும்?
( அய்யய்யோ, உண்மையை உளறிட்டேனா? ). திருமதி. ரவி இந்த கமெண்டைப் படிக்கமாட்டாங்கல்ல? இல்லேன்னா, சத்தமே போடாம, ஒரு உண்மை விளம்பியா, ஒரு சின்ன மின்னஞ்சல் அவங்களுக்கு அனுப்பிடலாம். ஏதோ என்னால முடிஞ்ச நாரதர் வேலை!!!

5:59 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

ஐயா நீங்கள் மின்னஞசல் அனுப்பிப்பாருங்கள், அவர் படித்து பதில் போட்டால் உங்கள் அதிர்ஷ்டம் :)
எல்லாச் சோகக்கதைகளையும் சொன்னால் அப்புறம் தமிழ்மணம் பட்டியலில் என் பெயர் இருக்காது :)

8:22 AM  

Post a Comment

<< முகப்பு