வலைப்பதிவுகள் - புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் - 2

ஹிந்துவில் உதவி ஆசிரியராக இருக்கும் சித்தார்த் வரதராஜன் தன்னுடைய கட்டுரைகள், செவ்விகளை தன் வலைப்பதிவில் இடுகிறார். ராம்வாச்சர் நமக்கு பரிச்சயமான ஒன்றுதான், ஆனால் இது போன்ற ஒன்று ? . இண்டியன் எக்ஸ்பிரஸ் குறித்து ஒரு விமர்சன வலைப்பதிவு ஒன்றிருந்தது.இப்போதும் இருக்கிறதா என்பது தெரியாது. இப்படி ஊடகங்கள் குறித்த வலைப்பதிவுகளுக்குத் தேவையிருக்கிறது. ஏனெனில் ஊடகங்களில் மாற்று விமர்சனக் கருத்துக்களுக்கு இடம் அளிப்பது குறைவாக இருக்கிறது அல்லது இல்லவே இல்லை. ஹிந்துவின் ஈழப்பிரச்சினைகள் குறித்து விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் ஆசிரியருக்கு கடிதங்கள் எத்தனையை ஹிந்துவில் படித்திருக்கிறீர்கள். காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட பின் அவருக்கு ஆதரவாக சில வலைப்பதிவுகள் துவங்கப்பட்டன. அதில் ஒன்றில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு பல கட்டுரைகளும், செய்திக்குறிப்புகளும் வெளியாயின.

பல பேராசிரியர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தாங்கள் படிக்கும் கட்டுரைகள், நூல்கள் குறித்து எழுதுவதுடன் வழக்குகள், பாடத்திட்டங்கள் குறித்தும் எழுதுகிறார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக பாடத்திட்டம் இணையத்தில் அனைவருக்கும் கிடைக்கும் போது அக்கல்லூரி அல்லது பல்கலைகழக மாணவர்கள் மட்டுமின்றி பிறரும் பயனடைய முடிகிறது. ஒரு பேராசிரியர் தன்னுடைய வலைப்பதிவு, இணையதளம் ஆகியவற்றை ஒருங்கே அமைக்கும் போது அவரது எழுத்துக்களையும் பிறர் இறக்கிக் கொள்ள அனுமதிப்பார் என்றால் அதன் மூலம் அவரது எழுத்துக்கள் இன்னும் பலரைச் சென்றடையும். இப்போது இப்படி ஒரே இணையதளத்தில் தங்களது வலைப்பதிவையும், இணையப்பக்கத்தினையும் அளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு இரண்டு உதாரணங்கள்.

லெசிக் இன்று அறிவுசார் சொத்துரிமைத் துறையில் உலக அளவில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிபுணர்களில் ஒருவர். ஆனால் அவரது வலைப்பதிவில் அவர் தன்னுடைய கருத்துக்களை மட்டும் இடுவதில்லை. பிறர் விருந்தினர்களாக கருத்துக்களை பதிவு செய்யவும், அவற்றை விவாதிக்கவும் இடமளிக்கிறார். இன்னும் சிலர் கூட்டு வலைப்பதிவில் தத்தம் கருத்துக்களை இடுகின்றனர். இதன் மூலம் ஒரே வலைப்பதிவில் பலருடைய கருத்துக்களை நாம் அறிய முடிகிறது. இதற்கு ஒரு உதாரணம். சிலர் தங்கள் வலைப்பதிவில் பிறருடைய கட்டுரைகளையும் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், அது வெளியாகியிருக்கிறதுஎன்பதை பலருக்கும் தெரிவிக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால் தினசரி சில நூறு பேர், நான் கட்டுரை எழுதிய துறை சார்ந்தவர்கள், படிக்கும் வலைப்பதிவில் அது பற்றி குறிப்பும், சுட்டியும் இருக்குமானால் அந்த சில நூறு பேரின் கவனம் என் கட்டுரைக்கு கிடைக்கும். இதில் ஒரு சிலராவது கட்டுரையை கோரிப் பெறவோ அல்லது இறக்கிப் படிக்கவோ வாய்ப்பிருக்கிறது. இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன் தரும் ஒன்று.

இதை கொஞ்சம் வேறு விதமாக யோசித்தால் தமிழில் இணையத்தில் மட்டும் எழுதும் படைப்பாளிகளின் படைப்புகளைக் கவனப்படுத்த ஒரு வலைப்பதிவினை உருவாக்கலாம.அதற்கான தேவை இருக்கிறது. உதாரணமாக புதிதாக எழுதப்பட்ட சிறுகதைகளைக் கவனப்படுத்த ஒரு வலைப்பதிவு துவங்கலாம். இதில் சிறுகதை குறித்த தகவல்கள், ஆசிரியர் மின்னஞ்சல் முகவரி போன்றவைத் தரப்படலாம். இதன் மூலம் வெளியாகும், வெளியாகயுள்ள கதைகள் இன்னும் பலரின் கவனத்திற்கு வரும்.

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் தெரிவு செய்து படிக்கத்தான் முடியும். நமக்கு எதில் ஆர்வம் அதிகமோ அல்லது எதுமுக்கியம் என்று தோன்றுகிறதோ அதில் கவனம் அதிகம் செலுத்துவதில் போல்தான் வலைப்பதிவுகளையும் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு பிரச்சினைதான்.ஏனெனில் பல வலைப்பதிவாளர்கள் பல பதிவுகளுக்கு சுட்டிகள் கொடுத்தாலும் அவை அவர்களுடைய தெரிவினை பிரதிபலிக்கிறது. என்னுடைய ஈடுபாடுகளும் அவர்களதுஈடுபாடும் ஒன்றாக இருக்கத்தேவையில்லை. மேலும் ஈடுபாடு ஒன்றாக இருந்தாலும் இன்றுள்ள நிலையில் ஒருவருக்குத் பல வலைப்பதிவுகள் இருப்பதே தெரியாமல்போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

வேறு வார்த்தைகளில் சொன்னால் வலைப்பதிவுகளுக்கான தகவல் தொகுப்புகள் அல்லது தரவுதளங்கள் நானறிந்த வரையில் திருப்தியாக இல்லை. இங்கு ஒவ்வொருவரும் தத்தம் அறிவினையும், ஊகத்தினைக் கொண்டே தேட வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிரச்சினை என்னவெனில் பல வலைப்பதிவுகள் சுவாரசியாமாக இருந்தாலும் நமக்கு அவற்றால் பெரும் பயன் இராது. உதாரணமாக அமெரிக்காவில் உள்ள முற்போக்கு , பசுமைசிந்தனை கொண்ட வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவினைப் படித்தால் பல செய்திகள், அலசல்கள் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் புலிகளின் பாதுக்காப்பும், காட்டில் வாழும் சமூகங்களின் உரிமைகள் குறித்த சர்ச்சைக் குறித்து அவற்றிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியது மிக சொற்பமே. அதற்கு நான் இந்தியாவில் இது குறித்து யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால்தான் முடியும். இதற்கு செமினார், டவுண்ட் டு எர்த் போன்றவைதான் உதவும். வெறுமனே அறிந்து கொள்வதற்காக பலவற்றைப் படிக்கலாம், ஆனால் குறிப்பிட்ட விஷயம் அல்லது சர்ச்சை குறித்து படிக்கும் போது நாம் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. இல்லையெனில் தகவல் வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடவே முடியாது.

என்னைப் பொறுத்தவரை 50 அல்லது 60 வலைப்பதிவுகளை (ஆங்கில வலைப்பதிவுகளை) முக்கியமானவை என்று கருதி படிக்கிறேன். என் தெரிவு நான் ஆராய்ச்சி செய்யும் துறைகள் அல்லது விஷயங்கள் சார்ந்தது. இன்னும் பல அவ்வப்போது கவனத்திற்கு வந்தாலும் அவற்றை எப்போதாவதுதான் பார்க்கமுடிகிறது. எனக்குத் தேவையான செய்திகளுக்கு வலைப்பதிவுகளை ஒரு முதன்மையான ஆதாரமாகப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை, அலசல்களுக்கே பயன்படுத்துகிறேன். அதிலும் தொடர்ந்து படித்து வருவதால் எத்தகைய கருத்துக்கள் இடம் பெறும் என்பதை ஒரளவுக்கு ஊகிக்க முடியும், எத்தகைய நிலைப்படுகள் எடுக்கப்படும் என்பதையும் ஒரளவிற்கு ஊகிக்க முடியும். இவற்றை ஒரு முதல்கட்டமாக வேகமாக படித்துவிட்டு தேவை என்றால்தான் பின்னர் மீண்டும் படிப்பேன். மின்னஞ்சல் மூலமும், இணையதளங்கள் மூலமும் கிடைக்கும் செய்திகள், அலசல்கள் இருப்பதாலும், தேவையானால் இன்னும் தகவல்கள் பெற முடியுமென்பதாலும் வலைப்பதிகளில் தரப்படுவதில் எது முக்கியமோ அதை மட்டும் கருத்தில் கொள்வேன்.

உதாரணமாக ஒரு வழக்கினைப் பற்றிய அலசல்களுக்கு வலைப்பதிவுகளை நான் பயன்படுத்தினாலும், பிற தளங்களில் உள்ள அலசல்களையும் கருத்தில் கொள்வேன். பலவற்றை அச்சுப்பிரதியெடுத்துவிட்டு பின்னர் படித்து விடுவேன் அல்லது தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வேன்.

வலைப்பதிவுகள் தனி நபர் பதிவுகள் என்பதைத் தாண்டி இன்று ஒரு கூட்டுசெயல்பாட்டின் ஒரு பகுதி என்ற நிலையை எட்டி விட்டன. இங்கு குழுமம் அல்லது சமூகம் (community) என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்று community of progressive bloggers , community of green bloggers என்று வகைப்படுத்தி வலைப்பதிவுகளைச் சுட்ட முடியும். இது தவிர தனிப்பட்ட வலைப்பதிவுகள் மூலம் கூட்டுச் செயல்பாடுகளுக்கு உதவுவதும், வலைப்பதிவுகளையே கூட்டுச்செயல்பாட்டிற்க்கான ஒரு களமாக பயன்படுத்திக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இது 2004ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மிகத் தெளிவாகத் தெரிந்தது. எனவேவலைப்பதிவுகளைப் பயன்படுத்தி ஒரு இயக்கம் அல்லது ஒரு பொதுக்காரியத்திற்க்காக ஆதரவு திரட்டுவது இனி ஒரு வாடிக்கையான ஒன்றாக மாறிவிடும்.

இதைப் படிக்கும் உங்களில் என்னை விட அதிக தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களுக்கு வலைப்பதிவுகளின் வேறு பல பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் தெரிந்திருக்கும்.அவற்றைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வலைப்பதிவுகளில் புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் பற்றி விரிவாக எழுத திட்டமிட்டு தகவல்கள், கட்டுரைகள் திரட்டத் துவங்கினேன். சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை. இருப்பினும் இந்த இரு குறிப்புகளையும் ஒரு அறிமுகமாக எழுதியிருக்கிறேன். இன்னும் விரிவான அலசல்களுக்கும், ஆய்விற்க்கும் இடமிருக்கிறது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு