ஒரு பயணத்தின் கதை - 1

கடந்த ஆண்டு ஜுன் இறுதியில் ஒரு சுபயோக சுபதினத்தில் விமானப்பயணத்திற்கு உகந்த நாள் என்று தினத்தந்தி முதல் குமுதம் ஜோதிடம் வரை அனைவரும் பரிந்துரைத்த நாளில் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் யான் ஜெனிவா நோக்கி பயணித்தேன். பயணச்சீட்டு உட்பட சான்றுகளை சோதித்த பின் விமான நுழைவுச்சீட்டுகள் தரப்பட்டன. இண்டியானாபோலிஸிலிருந்து சின்சினாட்டி, சின்சினாடிலிருந்து பாரீஸ், பாரீஸ்லிருந்து ஜெனிவா என்பது திட்டம். முந்தைய தினம் மதியம் கிளம்பி அடுத்த நாள் காலையில் ஜெனிவாவில் இருந்திருக்க வேண்டும்.

சக அதர்மிணி இண்டியானாபோலிஸ் விமான நிலையத்தில் வந்து வழி அனுப்ப, ஸ்டார்பக்ஸில் காபி சாப்பிட்ட படி கண்ணே கலங்காதே என்று வார்த்தைகள் கூறிய படி, இன்னும் பல ஆறுதல் வார்த்தைகள் கூறிய படி பாதுகாப்பு பரிசோதனைக்கான இடத்திற்கு வந்து அங்கு இருவரும் சேர்ந்திருப்பதை ஒருவரை புகைப்படமெடுக்கும்படி கேட்டுக்கொள்ள அவரும் அவ்வாறே செய்ய பின் யான் பாதுகாப்பு பரிசோதனைப் பகுதியில் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இருந்தாலும் அதிக நேரம் ஆகவில்லை. விமானமும் குறித்த நேரத்தில் கிளம்பி சின்சினாட்டி வந்தது. சின்சினாட்டியில் மீண்டும் பாதுகாப்பு பரிசோதனை இல்லை, நிறைய நேரம் இருந்தது. விமான நிலையத்தில் நான் செல்ல வேண்டிய விமானம் கிளம்பும் பகுதிக்கு வேகமாக நடந்தே வந்துவிட்டேன். அங்கு காபி குடித்து விட்டு, மப்பின் சாப்பிட்டு விட்டு மனைவியிடம் 20 நிமிடங்கள் நேரம் பேசிய பின்னும் விமானம் கிளம்ப 45 நிமிடங்கள் இருந்தது.

டெல்டா - ஏர் பிரான்ஸ் விமானங்களில் பயணம். ஏர் பிரான்ஸ் விமானத்தில் நல்ல கவனிப்பு. சைவச் சாப்பாடு என்று குறிப்பிட்டிருந்ததால் சாப்பாட்டில் பிரச்சினை இல்லை. நான் சிடி வாக்மேனில் பாட்டுக்களை கேட்டுக் கொண்டு, கொண்டு வந்த கட்டுரைகள் சிலவற்றை படித்து விட்டு, சிறு தூக்கமும் போட்டு விட்டு பாரீஸில் இறங்கி ஜெனிவாவிற்கான விமானத்தைப் பிடிக்க தயாரகியிருந்தேன். பாரீஸ¤க்கு விமானம் பத்து நிமிடம் முன்னரே வந்துவிட்டது. அப்புறம்தான் ஆரம்பித்தது சோதனை. விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கே 35 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணத்திட்டப்படி இந்த விமானம் வந்து சேர்வதற்கும், அடுத்த விமானம் ஜெனிவாவிற்கு கிளம்பவும் 1 மணி நேரம் 10 நிமிடம் இடைவெளி இருந்தது. பொதுவாக இது போதும். டிகால் விமான நிலையத்தில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள்.விமானத்திலிருந்து இறங்கி நீங்கள் போக வேண்டிய பகுதிக்கு நடந்து செல்வது சாத்தியமில்லை, நான் அறிந்த வரையில்.விமானம் டெர்மினல் 2 Eல் போய் சேரும் என்று போட்டிருப்பார்கள். அதனால் அங்கிருந்து இன்னொரு பகுதிக்கு நாமாக சென்றுவிடலாம் என்று நினைத்துவிட முடியாது. விமானத்திலிருந்து இறங்கிய உடன் பேருந்துகள் மூலம் பல் வேறு பகுதிகளுக்கு (டெர்மினல் 2 B,D போன்றவை) அனுப்புகிறார்கள். சில சமயங்களில் ஜீப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் செல்ல வேண்டிய பிரிவிற்கே அப்பேருந்து செல்லும் அல்லது பொதுவான இடத்தில் விட்டுவிடுவார்கள். அங்கு பாஸ்போர்ட்டி¨னைப்,பயணச்சீட்டினை பரிசோதிப்பார்கள். பின்னரே எந்த டெர்மினலோ அதற்கு செல்ல வேண்டும். (டிகால் விமான நிலையம் பரப்பளவில் விரிந்த விமான நிலையம். கான்கீரிட் வனம் என்ற பெயருக்கு ஏற்றது, அதன் சில பகுதிகளில் இன்னும் புதர்கள் இருக்கின்றன. முதன்முதலாக விமானப்பயணம் செய்பவர்களை பயமுறுத்த வேண்டுமெனில் டிகாலில் ஒரு டெர்மினலில் இறங்கி இன்னொரு டெர்மினலிற்கு சென்று விமானத்தில் ஏறும் வண்ணம் பயணத்தினைத் திட்டமிட்டால் போதும் ). கொஞ்சம் கவனமாக இல்லாவிடில் வேறொரு டெர்மினலிற்கு சென்றுவிடுவீர்கள். டிகால் விமான நிலையத்தில் என் அனுபவங்கள் குறித்து தனிப்பதிவே போடலாம்.

நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப இன்னும் 40 நிமிடங்களே இருக்கும் நிலையில் நான் போகவேண்டிய பகுதிக்கு செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை. கேட்டதற்கு அடுத்து வரும் பேருந்து அங்கு செல்லும் என்றார்கள். ஒரு வழியாக அது வந்தது. அது நேராக நான் போக வேண்டிய பகுதிக்குப் போகவில்லை, பிற பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட்டபின் நான் போக வேண்டிய பகுதிக்கு கடைசியாகச் சென்றது. அது அங்கு சென்ற போது விமானம் கிளம்ப 12 நிமிடமே இருந்தது. நான் அவசரமாக ஒடினேன், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் இன்னும் 10 நிமிடங்கள் இருக்கிறது. பாதுகாப்பு சோதனையை முடித்த உடன் நான் விமானத்தில் ஏற முடியும், என்னை அனுமதியுங்கள், விமானத்தில் நான் ஏற நேரம் சரியாக இருக்கும் என்றேன். அவர் யாருடனே உடனே கையில் இருந்த வாக்கி டாக்கி மூலம் பேசினார், பின் நீங்கள் பத்து நிமிடம் முன்னதாக வந்திருந்தால் அனுமதித்திருப்பேன், இப்போது விமானத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்ட்டன என்றார்.

உடனே ஏர் பிரான்ஸ் கவுண்டருக்கு சென்று என் நிலையை விளக்கினேன்.அங்கிருந்தவர் உடனே அடுத்த விமானம் 30 நிமிடங்களில் கிளம்புகிறது, உங்களுக்கான நுழைவுச் சீட்டு என்று விமான இருக்கை எண்ணைக் கொண்ட சீட்டினை கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு சோதனைக்கு விரைந்தேன்.

அங்கு என் பாஸ்போர்ட்டினை முதலில் பரிசோதித்தவர் ஷென்சென் விசா இல்லை, எனவே நீங்கள் ஜெனிவாவிற்கு நேரடியாக செல்ல முடியாது என்றார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை. அவரே சொன்னார் ஏர் பிரான்ஸில் மாற்று ஏற்பாடு செய்வார்கள் என்று . மீண்டும் ஏர் பிரான்ஸ் கவுண்டருக்கு வந்தேன், எனக்கு நுழைவுச்சீட்டுக் கொடுத்தவரிடம் என்னை அனுமதிக்கவில்லை என்றும் விசா இல்லை என்கிறார்கள் என்பதையும் கூறினேன். அவர் என்னை இன்னொருவரிடம் கூட்டிச் சென்றார். அவர் என் பாஸ்போர்ட், பயணச்சீட்டுகளை பரிசோதித்தார். பின்னர் ஷென்சென் விசா இல்லை, உங்களுக்கு பயணச்சீட்டு கொடுத்த டெல்டா தவறு செய்துவிட்டார்கள் என்றார்.

எனக்குக் கோபம் வந்தது. என் வசம் சுவிஸ் விசா உள்ளது, முறையான பயணச்சீட்டும் இருக்கிறது, சின்சினாட்டியில் ஏர் பிரான்சை சேர்ந்தவர்கள் என் பாஸ்போர்ட், பயணச்சீட்டு உட்பட அனைத்தையும் பரிசோதித்த பின்னரே பாரிஸ் செல்லும் விமானத்தில் அனுமதித்தனர், இப்போது ஷென்சென் விசா கேட்பது என்ன நியாயம் என்று கேட்டேன்.

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது, பிழை என்னுடையதல்ல, ஏர் பிரான்ஸ், டெல்டா செய்யும் பிழைகளை சரிசெய்ய வேண்டியது என்னுடைய வேலை அல்ல. விசா தேவைஎன்று ஏர் பிரான்சோ, டெல்டாவோ சொல்லியிருந்தால் முறைப்படி பெற்றிருப்பேன் என்று வாதிட்டேன். வாக்குவாதத்திற்குப் பின் ஜுரிச் வழியாக உங்களை ஜெனிவாவிற்கு அனுப்புகிறோம், ஆனால் இதை டெல்டா அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

நீங்கள் காத்திருங்கள், டெல்டாவின் ஒப்புதல் கிடைத்த உடன் பாரீஸ் ஜூரிச் பயணச்சீட்டு, ஜூரிச் ஜெனிவா பயணச்சீட்டு தருகிறேன், ஜூரிச்சில் ஏர்பிரான்ஸின் டிரான்ஸிட் கவுண்டரில் அதைக் காட்டி ஜெனிவா செல்ல விமான நுழைவுச்சட்£டு பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்து, நான் காலிங் கார்ட் வாங்க வேண்டும், ஜெனிவாவில் என்னை அழைத்திருந்த அமைப்பு, தங்கவிருந்த விடுதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், நான் கடைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல அனுமதி வேண்டும் என்றேன். அவரோ உங்கள் வசம் பயணச்சீட்டு இல்லாத போது நீங்கள் பாதுகாப்பு சோதனையைத் தாண்டிச் செல்ல முடியாது, எனவே கடைகளுக்குச் நீங்கள் செல்ல முடியாது என்றார். உடனே அப்படியானால் ஜெனிவா ஏர் பிரான்ஸ் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு என்னை அழைத்திருந்த அமைப்பிற்கு என் பயணம் தாமதமாகிறது, இதை விடுதிக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும், இது சாத்தியமா என்றேன். இதைச் செய்ய முடியும் என்று என்னிடமிருந்து தகவல்களைப் பெற்று உடனே ஜெனிவா விமான நிலையத்தில் உள்ள ஏர்பிரான்ஸ் அலுவலகத்திற்கு தெரிவித்தார். பின்னர் நீங்கள் காத்திருங்கள், டெல்டாவிடமிருந்து ஒப்புதல் வந்தவுடன் நுழைவுச்சீட்டு தருகிறேன் என்றார். நான் காத்திருந்தேன் கிட்டதட்ட 90 நிமிடங்கள்.

பின்னர் டெல்ட்டா ஒப்புதல் தந்துவிட்டது, அடுத்து ஜூரிச் கிளம்பும் விமானம் இன்னும் 40 நிமிடத்தில் கிளம்புகிறது, உடனே பாதுகாப்பு சோதனைக்கு விரையுங்கள் என்றார். அவருக்கு மிக்க நன்றி தெரிவித்துவிட்டு பாதுகாப்பு சோதனைக்கு விரைந்தேன். சோதனையை முடித்த பின் விமானம் கிளம்பும் கேட் எங்கே என்று தேடினேன். அது கீழ்த்தளத்தில் இருந்தது, விமானம் இங்கிருந்து கிளம்பாது, பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் இருக்கும் இடத்தில் விடுவார்கள் என்று ஊகித்தேன். அது சரியாக இருந்தது. அங்கு ஒரு இந்தியர், பெண், பொது தொலைபேசியை பயன்படுத்த முயன்று கொண்டிருந்தார். அவரிடம் காலிங் கார்ட் எங்கே வாங்கினீர்கள் என்றேன். அவரோ மேலே உள்ளகடை ஒன்றில் வாங்கினேன், அது வேலை செய்யவில்லை என்றார். பேருந்து இப்போதே வந்துவிடுமா, காலிங் கார்ட் வாங்கிவர நேரமிருக்குமா என்று அங்கு கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவரோ பேருந்து இப்போது வந்து உடனே கிளம்பிவிடும் எங்கும் செல்லாதீர்கள் என்றார். ஐந்து நிமிடத்தில் பேருந்து வந்தது.

எங்களை ஏற்றி அது விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குச் சென்றது, அங்கு நான் கண்ட காட்சி....

தொடரும்

6 மறுமொழிகள்:

Blogger பரி (Pari) மொழிந்தது...

History repeats itself? :-)

4:13 PM  
Blogger தாணு மொழிந்தது...

தமிழ்நாடு தாண்டினாலே மூச்சு முட்டிவிடும் வர்க்கம் நான். ஐரோப்பா டூர் கூட்டிப் போகப்போவதாக கணவர் சொன்னதும், ஜாலி என்று யோசித்திருந்தேன். உங்கள் அனுபவங்கள் பயமுறுத்துகின்றனவே! இன்னும் என்ன பூதம் ஒளிந்திருக்கிறதோ உங்கள் தொடரில்?!!

2:49 AM  
Blogger Ramya Nageswaran மொழிந்தது...

பரபரப்பான ஆரம்பம் ரவி..என் முதல் வெளிநாட்டு பயணத்தின் பொழுது Heathrow airportல் தண்ணீர் dispenserஐ உபயோகிக்க தெரியாமல் 'திரு திரு' என்று முழித்திருக்கிறேன்.

3:50 AM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) மொழிந்தது...

ரவி, முன்னரே நீங்கள் இதுபற்றிப் பின்னூட்டமிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. ஆமாம், ஜூரிக், ஜெனிவா எல்லாமே ஸ்விஸ்க்குள்ளே தானே. அப்புறம் ஜூரிக்குக்கு அனுப்புபவர்கள் ஏன் ஜெனிவாவுக்குப் போக அனுமதி மறுக்க வேண்டும்?

6:05 AM  
Blogger Thangamani மொழிந்தது...

நல்லாருக்கு, பட்டது நீங்கள் அல்லவா!

3:52 PM  
Blogger ரவியா மொழிந்தது...

//ஆமாம், ஜூரிக், ஜெனிவா எல்லாமே ஸ்விஸ்க்குள்ளே தானே. அப்புறம் ஜூரிக்குக்கு அனுப்புபவர்கள் ஏன் ஜெனிவாவுக்குப் போக அனுமதி மறுக்க வேண்டும்?

//
அதானே ! ஏன்?

3:55 AM  

Post a Comment

<< முகப்பு