ராசி நல்ல ராசி

அதென்னவோ தெரியவில்லை, நான் ஒரு பத்து நாள் இணையத்தில் அதிகம் மேயாமல் இருந்தால். தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்காமல் இருந்தால் அல்லது ஊர் சுற்றப் போய்விட்டால் முக்கியமானநிகழ்வுகள், சர்ச்சைகள் ஏற்பட்டு பரபரப்பு ஏற்படுகிறது. என்னால் உடனுக்குடன் பதிவுகளை, செய்திகளை முழுமையாகப் படிக்க முடியாத போது அவை குறித்து வலைப்பதிவதில்லை என்பதால் என் கருத்துக்களை வெறொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தலாம் என்று ஒத்திவைத்து விடுகிறேன்.அதற்குள் வேறு சில பரபரப்பான நிகழ்வுகள், சர்ச்சைகள் என்று இன்னொரு அலை எழுகிறது. இது தொடர்ந்து நடைபெறுவதால் என் ராசி அப்படி என்று எடுத்துக் கொள்கிறேன்.

குஷ்பு கூறியது குறித்து நான் எழுதும் முன் அந்தப் பேட்டியை படிக்க வேண்டும். யாரேனும் அதைவலைப்பதிவுகளில் இட்டால் பயனுள்ளதாக இருக்கும். குஷ்புவின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி இல்லை, அவர் தாராளமாக கூறலாம். அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். ஏதோ குஷ்பு முற்போக்கானவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் பிற்போக்கனாவர்கள் என்று இதை குறுக்க முடியாது. அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பிறர் சொற்களை தங்களுடைய அரசியல் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். திரைப்படத்துறையும் கற்பு, தாலி சென்டிமென்ட் உட்பட பலவற்றை வைத்து வணிகம் செய்யும் ஒன்றுதான். இன்றைக்கு பக்தி படத்தில் இறை அடியாராக நடிப்பதும், நாளைக்கு நாத்திகராகப் நடிப்பதும் நடிப்புத் தொழிலில் சகஜம். குஷ்பு என்ன நான் நடிக்கும் படங்களில் முற்போக்கான கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்தி நடிப்பேன் என்று லட்சியம் கொண்ட நடிகையா, இல்லையே. இப்போது ஏதோ சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். இவை விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள்தானெ. இப்படி இருக்கும் போது குஷ்புவை விமர்சன பூர்வமாக அணுகுவதே சரியானதாக இருக்க முடியும், இதே அணுகு முறையைத்தான் திருமாவளவன், ராமதாஸ் கூறும் கருத்துக்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். திருமாவளவன், ராமதாஸ் - இவர்களைப் பிடிக்காதவர்களுக்கு குஷ்பு கூறியது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதை வைத்து சில முறை அவர்களை திட்டலாம்.அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு மேல்...

குஷ்பு கூறிய கருத்து சில நம்பிக்கைகளை, விழுமியங்களை கேள்விக்குள்ளாகுவது போல் தோன்றினாலும் பலருக்கு அதிர்ச்சி தருபவை என்பதைத் தவிர அவற்றில் வேறு என்ன இருக்கிறது. குஷ்பு தனக்குத் தோன்றியதைக் கூறியிருக்கிறார். எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்டுகொண்டார். இவை என் கருத்துக்கள், நம்பிக்கைகள் இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கருத்து மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறவில்லையே. சமூகத்தின் எத்தனையோ நம்பிக்கைகளை கேள்விகுட்படுத்திய பெரியாரும், அம்பேதகரும் தம் கருத்தில் உறுதியாக நின்றவர்கள். நீதிமன்ற அவமதிப்பு வருமானால் அதைச் சந்திக்க்த் தயார் என்று கூறி அதில் உறுதியாக நின்றவர் அருந்ததி ராய். ஆனால் சிறு எதிர்ப்பு எழுந்த உடன் மன்னிப்புக் கேட்ட குஷ்பு வேறொரு சந்தர்ப்பத்தில் கற்பு நெறியே தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரம் என்று கூறினால் வியப்படைய ஒன்றுமில்லை. இப்போதும் கூட அவர் தாலி, வகிட்டில் குங்குமம் போன்றவற்றை நிராகரிப்பவர் அல்லவே. அப்ப்டி இருக்கும் போது பாலியல் உறவுகள் குறித்த சில வாக்கியங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரை ஒரு பெண்ணிய புரட்சிவாதியாக சித்தரிக்க முடியுமா என்ன.
வலைப்ப்திவாளர்கள் இதையெல்லாம் யோசித்திருந்தால் இந்த சர்ச்சையை வேறு பல கோணங்களில் அணுகியிருக்க முடியும். என்னுடைய கருத்துக்களை சில வாரங்கள் கழிந்த பின்எழுதுகிறேன். இந்த சர்ச்சையில் குஷ்புவின் கருத்துக்கள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு.
பார்பிக்கு மாற்று ?

பார்பிக்கு மாற்றாக மத்திய கிழக்கில் இப்போது பரபரப்பான விற்பனையில் உள்ள பொம்மையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகிறது. பார்பியின் மீதான விமர்சனங்கள் பல, ஆனால் பார்பி ஒரு குறிப்பிட்ட மதத்தின் உடை குறித்த கட்டுப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது. ஆனால் மாற்றாக காட்டப்படும் பூலா அப்படியல்ல. அது மட்டுமல்ல பெண்கள் செய்யும் எல்லா வேலைகள் தொடர்புடைய பூலா பொம்மைகளைப் உருவாக்குவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இப்படி கட்டுப்பாடுகளை கட்டுப்பாடுகள் என்று இல்லாமல் இயற்கையானதாக பொம்மை மூலம் செய்வது எத்தகைய நுண்ணிய பிரச்சாரம். ? எனக்கு பார்பி மீது விமர்சனம் இருந்தாலும் பூலாவிற்கு பார்பி பரவாயில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் பார்பியில் மேற்கின் அழகு குறித்த மதிப்பீடுகள் இருந்தாலும் மத ரீதியான கட்டுப்பாட்டினை அது முளையிலேயே புகுத்தி, நியாயப்படுத்துவதில்லை.
சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது


பெயரிலி அல்ல நான், இந்தப் பாடலுக்கு சுட்டிக் கொடுப்பதற்கு. :) கொஞ்சம் அப்படியே இங்கே போனால் ஏன் இந்த தலைப்பில் வலைப்பதிந்தேன் என்பது புரியும். சிரித்து சிரித்து உங்களுக்கு ஏதாவதானால் பொறுப்பு நானல்ல :)
அரசும் உயர்கல்வியும்

அரசும் உயர்கல்வியும் குறித்து J.B.G. திலக்
எழுதியுள்ள கட்டுரை.
நியுரான்களும், நிதர்சனமும்

டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரனுடன் ஒரு செவ்வி.
உங்கள் பார்வைக்கு

சீனா, கருத்து சுதந்திரம்,இணையம் குறித்த ஒரு கட்டுரை

சதாசிவா கமிஷன் அறிக்கை குறித்த ஒரு கூட்டம்
பற்றிய ஒரு பதிவு
ஒரு கட்டுரை, ஒரு பதிவு, ஒரு எதிர்வினை

பத்மா தன் பதிவில் பா.ராகவன் எழுதியுள்ள சமீபத்திய கட்டுரையை எடுத்து இட்டிருக்கிறார்.

பரபரப்பான செய்திகள், பரபரப்பான கட்டுரைகள்தான் தேவையே ஒழிய உண்மை அல்ல என்று விகடன் இயங்கும் போது இப்படிப்பட்ட கட்டுரைகள்தான் வெளியாகும். அமெரிக்காவில் புயல்கள் ஆண்டுதோறும் பல வரும்., பாதிப்பு ஏற்படுத்தும் ஆனால் உயிரிழப்பு வெகு சொற்பமே. அத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவில் ஏற்படும் புயல்கள் குறைவு, உயிரிழப்பு அதிகம். மேலும் நியு ஒர்லியான்ஸ்ஸின் பிரத்தியேக அம்சங்களை அவர் குறிப்பிடுவதேயில்லை.

ஏதோ அமெரிக்காவில் ஒன்றுமே செய்யாமல் வேடிக்கைப் பார்த்தார்கள்,யாருக்கும் மனித நேயமே இல்லை என்ற தொனிதான் கட்டுரையில் இருக்கிறது. அரசு செய்யத்தவறியவை அனேகம். ஆனால் அதை மட்டுமே பேசுவோமென்றால் மும்பையில் அரசுஇயந்திரம் வெகு சிறப்பாக செயல்படவில்லை, மின் விநியோகம் உட்பட பலவ்ற்றில் குளறுபடிகள்இருந்தன, இது போன்ற ஒரு பெரு மழையினை, விளைவுகளைச் சமாளிக்க முடியாமல் அரசு இயந்திரம் திணறியது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பா.ராகவன் இப்படி எழுதுவது புதிதல்ல.சில் வாரங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் பஞ்சம் குறித்துஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது இதைப் போன்ற ஒன்றுதான். பல ல்ட்சம்மக்கள் படிக்கும் இதழில் எழுதும் போது உண்மைகளை அறிந்து, சரியான தகவல்களின் அடிப்படையில்எழுத வேண்டும் என்ற் பொறுப்புணர்ச்சி எழுதுபவர்களுக்கு இல்லையென்றால், எழுதியுள்ளது சரியா தவறா என்பதைக் கூடப் பார்க்காமல் வெளியிடுகிறது விகடன். இவர்கள்தான் ஊருக்கு கடமைக் குறித்து உபதேசம் செய்வார்கள்

70 களில் இருக்கும் சுஜாதாவும் 30களில் இருக்கும் பா.ராகவனும் இன்னும் பலரும் இப்படி எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் படிப்பவர்கள் முட்டாள்கள்என்று நினைத்துக் கொண்டுதான் எழுத ஆரம்பிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------------------
28 .8. 05 ஆனந்த விகடன்

பா.ராகவன்

நாலு இட்லி, பொங்கல், வடை, தொட்டுக்க மணக்க மணக்க சாம்பார், சட்னி, கமகம மசாலா கிழங்குடன் பூரி, ஒரு ஸ்டிராங் காபி... இது காலை டிபன். மதியம் ஒரு மணிக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், கூட்டு, பொரியல் வகையறாவுடன் திருப்தியான சாப்பாடு. மாலை லேசாகப் பசித்தால், இரண்டு சமோசா ப்ளஸ் ஒரு கப் ஸ்டிராங் டீ! இரவானால் மூன்று ரொட்டி, பருப்புக் கூட்டு, ஒரு டம்ளர் பால். உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்துவிட்டு, அக்கடாவென்று படுத்து எழுந்து, மறுநாள் பொழுதை மறுபடியும் நாலு இட்லி, பொங்கல், வடையுடன் தொடங்குபவர்கள் அத்தனை பேரும் கொஞ்சம் கவனிக்கவும்...
ஒரு முழு நாளைக்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு மக்காச்சோள மாவை மட்டுமே தின்றுவிட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் தேடி, குறைந்தபட்சம் இருபது கிலோமீட்டர் நெடும்பயணம் மேற்கொள்ளும் மக்கள் கூட்டம் ஒன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறது. கூட்டம் என்றால் ஏதோ ஆயிரம், பத்தாயிரம் அல்ல! இருபது மில்லியன் பேர் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) இப்படி அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில், உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்னை, சந்தேகமில்லாமல் இதுதான் என்று அடித்துச் சொல்கின்றன உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும். குறைந்தபட்சம் முப்பத்து இரண்டா யிரம் குழந்தைகள் போதிய உணவின்றி இந்த வருஷம் இறக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருக்கிறது ஐ.நா. என்னதான் நடக்கிறது ஆப்பிரிக்காவில்?
அங்கே உள்ள எல்லா நாடுகளிலும் இவ்வளவு மோசமான நிலைமை இல்லை. நைஜர், எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், ஜிம்பாப்வே, எரித்ரியா மற்றும் சாத் ஆகிய ஏழு நாடுகளில்தான் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. இதை அங்குள்ள அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
ஒரு பக்கம், விவசாயம் செய்ய முடியாதபடிக்குப் பேய் மழை. நைல் மற்றும் நைஜர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட, மக்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. தவிர, ஆப்பிரிக்காவில் உள்ள எந்த தேசமும் நவீன வேளாண்மை உத்திகள் எதையும் கடைப்பிடிப்பது இல்லை. விவசாயத்தில் அறிவியல் புகுத்தப் படவே இல்லை. ஆகவே, பிரச்னை என்று வரும்போது, அதைச் சமாளிப் பதற்கான வழிகள் அவர்களுக்குத் தெரிய வில்லை. உலகின் மிக நீண்ட நைல் நதியை வைத்துக்கொண்டு, எத் தனையோ அணைகள் கட்டி, என்னென் னவோ சாதித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் வெள்ளம் வரும்போது மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே!
கேட்டால், பணம் இல்லை. பணம் எங்கிருந்து வரும்? செய்வதற்குத் தொழில் இல்லை, முதலீடுகள் இல்லை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், அடிப்படைக் காரணம், ஆப்பிரிக்க நாடு களின் சிக்கல் மிக்க அரசியல் சூழல் தான்.
சூடானை எடுத்துக்கொள்ளுங்கள். நேற்று வரை உள்நாட்டுச் சண்டை. அரசாங்க கஜானாவைக் கழுவித் துடைத்துக் கவிழ்த்துவிட்டார்கள். வரி கட்டுவதற்குச் சில ஆயிரம் பேர்கூட அந்தத் தேசத்தில் கிடையாது. காரணம், வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். போதாக்குறைக்கு அல்&கொய்தா உள்பட, எத்தனையோ தீவிரவாத இயக்கங்களுக்கு சூடான்ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது. அரசுக்கும் இத்தகைய இயக்கங்களுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் எழுதப்படாத ஒப்பந்தங்களால், மக்க ளுக்குப் போகவேண்டிய பணமெல்லாம் இத் தகைய இயக்கங்களை வளர்க்கவே செல விடப்பட்டு வந்திருக் கின்றன. பிரதியுபகார மாக அந்நாட்டின் அதிபர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவரவரின் தராதரத்துக்கேற்ப ஏதோ கிடைக்கிறது என்பதால்... மக்கள் பணமாவது, மண்ணாங்கட்டிப் பணமாவது!
இதையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?
இந்தப் பசிக் கொடுமையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தேசம் எத்தியோப்பியா. தங்கம், பிளாட்டினம், செம்பு, பொட்டாஷ், இயற்கை எரிவாயு எனச் சில முக்கிய சமாசாரங்களில் ஏதோ கொஞ்சம் இங்கே கிடைக்கிறது என்பதால்தான், அது இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், இந்த வருட இறுதிக்குள் குறைந்தது இருபதாயிரம் பேராவது இங்கே பசியால் இறந்துவிடக்கூடும் என்று வேலை மெனக்கெட்டுக் கணக் கெடுத்துச் சொல்லி இருக்கிறது எத்தியோப்பிய அரசு.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் மிதிறிஸிமி (மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ திஷீஷீபீ றிஷீறீவீநீஹ் ஸிமீமீணீக்ஷீநீலீ மிஸீவீமீ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிரிக்கப் பஞ்சத்தை அடியோடு தீர்ப்பதற்குக் குறைந்தபட்சம் 303 பில்லியன் டாலர்கள் தேவை. இது மிக மிகப் பெரிய தொகை. ஒரு தேசமோ, ஒரு குறிப்பிட்ட அமைப்போ இந்தச் சுமையை ஏற்க இயலாது. எனவே, இதைப் பல நாடுகளும் பகிர்ந்துகொண்டு, மேற்படி தொகையைக் கொஞ்சம்கொஞ்சமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து, முதலில் அங்குள்ள விளைநிலங்களைச் சீராக்க வேண்டும். அடுத்ததாக, நீர் ஆதாரங்களை உருப்படியாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
அதெல்லாம் அடுத்த கட்டம். இப்போதைய பஞ்சத்துக்கு என்னதான் தீர்வு? உணவுப் பொட்டலங்கள் போடு வதுதான் ஒரே வழி! ஆனால், அங்கே இங்கே ஓரிருவர் என்றால் சரி; ஒட்டு மொத்த தேசமே பஞ்சத்தில் அடிபட் டால் என்னதான் செய்வது?
இத்தனைக்கும் இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத கண்டம் அது. கனிமங்கள், தாதுக்கள், நீர், பெட்ரோலியம் என எல்லாமே அங்கே தரைக்கடியில் சௌகரியமாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. படிப்பறிவோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத காரணத்தால், எதையும் எடுத்து அனுபவிக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள்.

இப்போது அந்த ஏழு தேசங்களிலிருந்தும் கொத்துக்கொத்தாக மக்கள் இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அகதிகளாக வரும் அண்டை தேசத்துச் சொந்தச் சகோதரர்களை எங்கே தங்கவைத்து, என்ன செய்வதென்று புரியாமல் பிற ஆப்பிரிக்க தேசங்கள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, தேச முன்னேற்றம், புண்ணாக்கு, புடலங்காய் என்றெல்லாம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களுக்கு வேண்டியது சோறு. அவ்வளவுதான்!
என்ன செய்யப்போகிறார்கள்?
------------------------------------------------------------------------------------------------

இக்கட்டுரையில் உள்ள தவறான தகவல்களும், இன்ன பல பிழைகளும் ஏராளம். ஆப்பிரிக்கா குறித்து தனக்குத் தோன்றியதையெல்லாம் கட்டுரையாசிரியர் எழுதிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. இதைப் படிக்கும் போது கட்டுரையாசிரியர் மனம் போன போக்கில் எதையும் சரி பார்க்காமல் எழுதியிருக்கிறார் என்பதற்கு உதாரணங்கள்:

"தவிர, ஆப்பிரிக்காவில் உள்ள எந்த தேசமும் நவீன வேளாண்மை உத்திகள் எதையும் கடைப்பிடிப்பது இல்லை. விவசாயத்தில் அறிவியல் புகுத்தப் படவே இல்லை.

உலகின் மிக நீண்ட நைல் நதியை வைத்துக்கொண்டு, எத் தனையோ அணைகள் கட்டி, என்னென் னவோ சாதித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் வெள்ளம் வரும்போது மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

இத்தனைக்கும் இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத கண்டம் அது. கனிமங்கள், தாதுக்கள், நீர், பெட்ரோலியம் என எல்லாமே அங்கே தரைக்கடியில் சௌகரியமாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. படிப்பறிவோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத காரணத்தால், எதையும் எடுத்து அனுபவிக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள். "

அஸ்வான் அணையை பற்றி அவர் கேள்விப்பட்டதே இல்லை போலும். ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் விவசாயம் பசுமைப் புரட்சிக்கு அடுத்த கட்டத்தில் இருக்கிறது. அதில் உயிரியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நாடுகளும் அங்கு இருக்கின்றன. கட்டுரையாசிரியர் நினைப்பது போல் ஆப்பிரிக்கர்கள் தங்கள் கனிம வளங்களை பயன்படுத்தத் தெரியாத முட்டாள்கள்இல்லை பெட்ரோலியம் உட்பட பல ஆப்பிரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகின்றன.

வெள்ளம் வரும் போது மரத்தில் ஏறி வேடிக்கைப் பார்க்கிறார்களாம். பா.ரா ஒரு வேளை அப்படிப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் அடி முட்டாள்கள் என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டினை கட்டுரையில் நாம் காணலாம். நான் தினசரி ஆப்பிரிக்காவில் பிறந்து, வளர்ந்த, கல்வி கற்ற பலருடன் பழகுகிறேன். அவர்களில் யாரும் பா.ரா போல் உளறுவதில்லை.
இந்தியா என்றால் பாம்புகளும், சாமியார்களும் நிறைந்த நாடு என்று கருதுவதில்லை.

நான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் சொல்லிப்பயனில்லை.ஏனெனில் ஆனந்த விகடனுக்கு இப்படி கட்டுரைகள் வெளியாவது பிரச்சினையே இல்லை. இது போன்ற கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள், எழுதும் எழுத்தாளர்கள் இப்படி இருக்கக் காரணம் என்ன - நம்மை யார் கேட்பது என்ற மனோபாவமதான்.

இதையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?
சானியா மிர்ஸாவை முன்வைத்து

சானியா மிர்ஸா விளையாடும் போது அணியும் ஆடை குறித்து ஒரு தேவையற்ற சர்ச்சை உருவாகியிருக்கிறது. இஸ்லாம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைஎடுத்து வரும் சிலர் இங்கும் மதத்தினை நுழைத்து ஒரு சர்ச்சையினை உண்டாக்கியின்றனர்.அவர்களின் போக்கும், செயல்களும் கண்டிக்கப்பட வேண்டியவை. ஆனால் இதைக் காரணம்காட்டி தாங்கள் ஏதோ தாராளவாதிகள் போல் சிலர் வேடம் போடுகின்றனர். இவர்கள் சார்ந்து இருக்கும்அமைப்பும், இந்த்துவ அமைப்புகளும் கருத்து சுதந்திரம், தனி மனித சுதந்திரம் குறித்து பெரிதும்மரியாதை கொண்டவை அல்ல.

மாலி என்பவரை நாடகம் போடாதே என்று மிரட்டிய ஜெயேந்திரரை இவர்கள் கண்டித்ததில்லை.

காஷ்மீர் சென்ற பத்திரிகையாளர் ஞாநி அங்குள்ள சிலரினைப் பேட்டிக் கண்டு எழுதிய போது அவருக்கும், ஆனந்த விகடனுக்கும் கொலை மிரட்டல் உட்பட பலவகையில் இடையூறு ஏற்படுத்தினஇந்த்துவ் அமைப்புகள்.

தீபா மேத்தா படப்பிடிப்பிறகு இந்த்துவ அமைப்புகள் ஏற்படுத்திய இடைஞசல்களை நாடறியும்.

மல்லிகா சாராபாய் உயிருக்கு அஞ்சி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது மோடி ஆட்சிசெய்யும் குஜராத்தில். இது ஏன் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

வாலன்டைஸ் டே என்கிற காதலர் தினத்தினை ஆண்டுதோறும் எதிர்க்கும் அமைப்புகள் எவை,அவை அதை தடுக்க செய்யும் முயற்சிகளும் நாமறிந்தவையே.

பால்ய விவாகத்தினை ஆதரித்தவர் மறைந்த சங்கராச்சாரியார். அவர் விதவை மறுமணம் உட்படபலவற்றை ஏற்க ம்றுத்தவர். பெண்கள் வேலைக்குப் போவது குறித்து வருந்தியவர். அவரைக் கண்டித்து இந்த்துவ அமைப்புகள் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கின்றவா.

பெண்கள், குடும்பம, உடை குறித்து குருமூர்த்தி எழுதியதைக் குறித்த சர்ச்சையை திண்ணையில்காணலாம், இப்போது சானியாவிற்காக பரிந்து பேசும் நபர் அப்போது எங்கே போயிருந்தார்.இவர் குமூர்த்தியின் கருத்துக்களை நிராகரிக்கிறேன் என்று திண்ணையில் வெளிப்படையாக எழுதுவாரா

பா.ஜ.கவின் ஆதரவாளர் சோ பெண்ணுரிமை விஷயத்தில் எத்தகைய பிற்போக்குவாதி என்பதை நான் விளக்கத்தேவையில்லை. பெண்களுக்கு சொத்தில் சம் உரிமை குறித்து சமீபத்தில் துக்ளக்கில் வந்த கட்டுரை அதற்கு உதாரணம். அதை எழுதியது சோ அல்ல. ஆனால் அது போன்ற கட்டுரைகளைப்பிரசுரிப்பதில் அவருக்கு தயக்கம் இராது. இவர் சோவை விமர்சித்து எழுதத்தயாரா

பெண்கள் வேலைக்குச் செல்வது, குடும்பம குறித்து ஆர்.எஸ்.எஸ் ஸிம் முக்கிய தலைவர் கூறியபிற்போக்கான கருத்துக்கள் குறித்து வாயே திறக்காதவர்கள் இன்று சானியா விஷயத்தில் மட்டும் தங்களை தாராளவாதிகளாகக் காட்டிக் கொள்வது நாடகமன்றி வேறென்ன.

சிவாஜி குறித்து அவதூறாக உள்ளது என்று ஒரு நூல் தடை செய்யப்பட்ட போது அதை ஆதரித்தவர் வாஜ்பேயி. ஆர்.எஸ்.எஸ் அப்போது என்ன கருத்துரிமைக்கு ஆதரவாகவா இயக்கம் நடத்தியது.

சமூகசீர்த்திருத்த இயக்கங்கள், பெரியார், நாராயண குரு போன்றவர்களின் இயக்கங்களினால்,வேறு பல காரணங்களால் இந்து சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இது பழமைவாதிகளைமீறி நடந்தது. அவர்கள் கையில் ஆட்சி இல்லை. இந்த இந்துப்பழமைவாதிகள் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்கான நிலைப்பாடுகளை எடுத்தார்கள் என்பதற்கு பால்ய விவாகம்,பெண்களின் உரிமைகள் குறித்து போன நூற்றாண்டில் எழுந்த சர்ச்சைகள், வழக்குகளைப் பற்றிபடித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்து அடிப்ப்டைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இந்து அடிப்படைவாதிகள் சில சமயங்களில் இஸ்லாத்தினை எதிர்க்க தாராளவாதிகள் போல் வேடம் பூணுவர். இது கபட நாடகம் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இந்த போலிக்கண்ணீர்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.
உங்கள் நலனுக்காக என் வாத்துறுதிகள்

உலக நலனை முன்னிட்டும், வலைப்பதிவாளர்கள், வாசகர்கள், வாத்துகள் மற்றும் இதர உயிரினங்கள் நலம் கருதியும் கீழ்க்கண்ட வாத்துறுதிகள் தரப்படுகின்றன.

இவ்வலைப்பதிவில்

1,உள் நாட்டு,வெளி நாட்டு வாத்துகள் படங்கள் இடப்படாது

2 , கத்தரிக்காய்,பூசணி,தர்பூசணி போன்ற காய்கள், கனிகள் படங்கள் இடப்படாது

3, அருங்காட்சியகத்திலுள்ள கலைப் பொருட்களின் படங்களைப் போட்டு அச்சுறுத்த மாட்டேன்

4, விளம்பரங்களை மறு வெளியீடு செய்ய மாட்டேன்

5, என்னுடைய முகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரியும் வண்ணம் இருக்கும்புகைப்படங்கள் இடப்படாது

6, சாப்பாடு குறித்த படங்கள் இடப்படாது

7, இயன்ற வரை இப்பதிவில் எழுதுவதை , பிற பதிவுகளில் பின்னூட்டமிடுவதை தவிர்ப்பேன்.முடிந்தால் நீண்ட விடுப்பில் செல்ல முயல்வேன்

8, தேவை ஏற்பட்டால் மட்டுமே இவ்வாத்துறுதிகள் நீரிலிருந்து துரத்தப்படும் :)
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்....

{ இது போன்ற பிரச்சினைகளில் ஒரே கட்டுரையில் ஒருவர் தன் அனைத்துக் கருத்துக்களையும் விளக்கி எழுதி விட முடியாது. என் நோக்கங்களில் ஒன்று இப்பிரச்சினையில் கவனம் பெறாத ஆனால் முக்கியமான விஷயங்களையும் வாசகர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் அல்ல.ஆனால் அதை ஒரு புனிதப் பசுவாக கருதுவதில், இட ஒதுக்கீடே சமூக நீதி என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.இன்றுள்ள நிலையில் அதை எந்த அளவிற்கு ஒரு தீர்வாகக் கொள்ள முடியும் என்பதை விவாதிக்க வேண்டும். அது குறித்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் காத்திரமான ஆய்வுகள், சமூக அறிவியல் ரீதியாக ஆய்வுகள் தேவை என்று கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள். இக்கட்டுரையை ஒரு இறுகிய நிலைப்பாடு என்று கொள்வதை விட ஒரு புரிதலுக்கான முயற்சி மற்றும் ஒரு விவாததிற்கான துவக்கப் புள்ளி என்று கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் }

திண்ணையில் வெளியான கட்டுரை இங்கு தரப்படுகிறது

அரசு உதவி பெறாத் தனியார் கல்லூரிகள்/உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம், இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கொடுத்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது(1). முந்தைய தீர்ப்புகளில் (T.M.A Pai Foundation V. State of Karnatka (2002) 8 SCC 481, Islamic Academy of Education &Anr.V. State of Karnataka & Ors. 2003 6 SCC 697 ) கூறப்பட்டவைகளுக்கு விளக்கம் தரும் இத்தீர்ப்பு தனியார் கல்வியின் மீதான அரசின் உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. இது ஒரு விரிவான அலசலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தீர்ப்பு. இத்தீர்ப்புடன் உச்சநீதிமன்றத்தின் வேறு சில தீர்ப்புகளையும் , குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் தலித்களில் உட்பிரிவு ரீதியாக இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு, சேர்த்து படித்தால் நீதிபதிகளின் கருத்துக்களைத் தௌ¤வாகப் புரிந்துகொள்ள முடியும். (2)

தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவதை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புபடுத்தியிருக்கும் இத்தீர்ப்பு அரசு மாணவர் சேர்க்கையில் எந்த அளவு தலையிடமுடியும் என்பதை தௌ¤வாக்கியிருக்கிறது. .அரசு நிர்வாகங்களிடம் தான் நிரப்புவதெற்கென்று ஒரு இடத்தைக் கூட இதன் கோரமுடியாது.மாணவர் சேர்க்கை குறித்தும், கல்விக்கட்டணம் குறித்தும் குழுக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தலாம். ஆனால் குழுக்களின் பணி குறித்தும் இத்தீர்ப்பும், பிற தீர்ப்புகளும் வரையரைகளைக் குறிப்பிட்டுள்ளன. இக்குழுக்களின் பரிந்துரைகளை எதிர்த்து நிர்வாகங்கள் முறையீடு செய்ய முடியும். அரசின் உரிமைகளைக் குறுக்கி, நிர்வாகங்களின் உரிமைகளை அங்கீகரித்திருக்கும் இத்தீர்ப்பு கல்வி இன்னும் அதிகமாக வணிகமயமாவதற்கு உதவும்.
இதுநாள் வரை கல்வியில் தனியார் மயம் குறித்து கவலைப்படாமல் இட ஒதுக்கீடு என்பதை வைத்து அரசியல் நடத்தியவர்களுக்கு இத்தீர்ப்பு பல சங்கடங்களைத் தோற்றுவித்துள்ளது. இப்போது கூக்குரல் எழுப்பும் கட்சிகள் இதற்கு முந்தைய தீர்ப்புகள் வெளியான போதே மத்திய அரசு ஒரு சட்டம் மூலம் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரி அதை சாதித்திருக்க வேண்டும். முந்தைய தீர்ப்பு(கள்) வந்த போது ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகள் (பா.ம.க, தி.மு.க, ம.தி.மு.க) அக்கறை காட்டி ஒரு சட்டத்தினை நிறைவேற்றியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது குறைந்தபட்சம் அரசு சட்டத்தின் கீழ் நாடெங்கும் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியுள்ளது என்ற வாதத்தினையாவது முன் வைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இப்போது கூக்குரலிட்டு பயனில்லை. 2002 ல் கூறப்பட்ட தீர்ப்பிலேயே இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தன் கருத்துக்களை கூறியிருக்கிறது . அப்போதெல்லாம் இது குறித்து விவாதிக்காமல், இப்போது சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுவது வேடிக்கை. ஆனால் இது போன்ற ஒன்றை நான் எதிர்பார்த்தேன்.

கடந்த ஆண்டி டிசம்பர் 1ம் தேதி என் வலைப்பதிவில் நான் இட்டது.
----------------------------------------------------------------------------------------------
இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ?

பா.ம.க தலைவர ராமதாஸ் இட ஒதுக்கிட்டிற்கு ஆபத்து என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில்உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புகள் பொறியியல் கல்லூரிகள் உட்பட தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் எந்த அளவு தலையிட முடியும் என்பதை தௌ¤வு படுத்தியுள்ளன. இருப்பினும் இதில் குழப்பம் நிலவுகிறது, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில். இந்த தீர்ப்புகள் வெளிவந்த போது மத்தியில் அரசாண்ட தே.ஜ.கூ வில் உறுப்பினராக இருந்த பா.ம.க இத்தீர்ப்புகளின் விளைவு குறித்து கவலைப்பட்டதாகவோ அல்லது இட ஒதுக்கீட்டிற்கு இடையூறு வரா வண்ணம் அரசுஎன்ன செய்ய வேண்டுமென்பது குறித்து அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. பா.ம.க மட்டுமல்ல பிறகட்சிகள், இடதுசாரிகட்சிகள் நீங்கலாக, கல்வியில் தனியார்மயத்தினை ஒரு பிரச்சினையாகவே கருதியதில்லை. பா.ம.க, தி.க அவ்வப்போது இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று அறிக்கை விடுவார்கள், கூட்டம், மாநாடு நடத்துவார்கள்.இவர்கள் யாரும் உயர்கல்வியில் தனியார்மயத்தின் விளைவுகள் குறித்து அக்கறை காட்டியதில்லை. இடதுசாரிகள் ஒரளவிற்கு இதில் அக்கறை காட்டியதுடன், கேரளாவில் ஆட்சியில் இருக்கும் வரை தனியார்மயத்தினை எதிர்த்தே செயல்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் வழக்கில் கொடுத்த தீர்ப்பினை நிராகரித்து கொடுத்த தீர்ப்பில்தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு தலையீடு குறித்து சிலவற்றை தௌ¤வுபடுத்தியது.
அது போல்சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் பங்கு எது என்பதையும்தௌ¤வுபடுத்தியது. இப்போது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலைப்பாடு உச்ச நீதிமன்றம்கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே உள்ளது. மேலும் அரசு நிதி உதவி அல்லது மான்யம் அல்லது வேறு உதவி தராத போது முழுக்க முழுக்க தனியார் முதலீட்டில் நிறுவப்படும் கல்வி நிலையங்கள் பிற வணிக,தொழிற்சாலைகள் போன்றவைதான். மாணவர் சேர்க்கை, பல்கலைகழக அங்கீகாரம் போன்றவை குறித்து அரசு சில விதிகளை வகுக்ககலாம். ஆனால் இட ஒதுக்கீட்டினை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என்று வலியுறுத்த முடியாது.

எனவே ராமதாஸ் இப்படி கூறியிருப்பது இன்னொரு அரசியல் ஸ்டண்ட் என்றுதான் சொல்வேன்.
-----------------------------------------------------------------------------------------------

இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பு ஏற்கனவே கூறப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து சில தௌ¤வுகளைத் தருகிறது. இதில் உள்ள பல கருத்துக்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளவை. இத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள், குழப்பங்கள் காரணமாக ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பினை இப்போது கொடுத்துள்ளது. நானும் கிட்டதட்ட இத்தகைய தீர்ப்பினைத்தான் எதிர்பார்த்தேன். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றால், அதற்கான அடிப்படை முந்தைய தீர்ப்புகளில் இருக்கிறது. இதுதான் உண்மை. இருப்பினும் இன்னும் விடை காண வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டு துவங்கும் முன் இவற்றில் முக்கியமானவற்றிற்கு தீர்வு காணப்படுமானால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படலாம்.

இந்த தீர்ப்பின்படி மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு குறித்த ஒரு புரிதலுக்கு ஒரு உதாரணம் தரலாம். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 70,000 மாணவர்களைச் சேர்க்க முடியும் என்றால் அரசு கல்லூரிகள், அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்ய இயலும் கல்லூரிகள் போன்றவற்றில் 7,000 இடங்கள் இருக்கின்றன என்று கொண்டால் . இத்தீர்ப்பின்படி 63,000 (அதாவது 70,000 - 7000) இடங்களில் அரசு எந்த இட ஒதுக்கீட்டினையும் செய்ய முடியாது. 7,000 இடங்களில் அரசு இட ஒதுக்கீட்டினை செய்யலாம். இதுவும் உச்சநீதி மன்றம் 69% இட ஒதுக்கீடு குறித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில்தான் செய்ய முடியும். 63,000 இடங்களை நிரப்ப தனியார் கல்லூரி நிர்வாகங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீட்டினையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மாணவர் சேர்க்கையில் தகுதிக்கு முதலிடம் தரத்தக்க வகையில் நுழைவுத்தேர்வு அல்லது வேறுவிதங்களில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

இத்தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் பெரிதாக பயன் இராது. ஏனெனில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பினை தௌ¤வுபடுத்தியிருக்கும் இந்த தீர்ப்பு ஏகமனதாகக் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி உட்பட ஏழு பேர் கொண்ட பெஞ்ச் தந்துள்ள தீர்ப்பு. மேல்முறையீட்டில் இதற்கு நேர்மாறான தீர்ப்பு வர வாய்ப்பே இல்லை என்று கூறலாம். மேல் முறையீட்டில் இன்னும் சில அம்சங்கள் தௌ¤வுபடுத்தப்படலாம், ஆனால் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அப்படியே நீடிக்கும் என்றே கருதுகிறேன்.

மத்திய அரசு இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை குறித்து ஒரு புதிய ஒருங்கிணைந்த சட்டத்தினைக் கொண்டு வரலாம். ஆனால் அதுவும் நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்கின் மூலம் கேள்விக்குட்படுத்தப்படலாம். அப்போது இட ஒதுக்கீட்டினை நீதிமன்றம் ஏற்கும் என்று உத்தரவாதமில்லை.இத்தீர்ப்பு சில வரைநெறிகளை முன் வைத்துள்ளது. அதற்கு முரணாக இருக்கும் சட்டப்பிரிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.. மாறாக இத்தீர்ப்பினை வழிகாட்டியாகக் கொண்டு மாணவர் சேர்க்கை குறித்து அரசு சட்டம் இயற்ற முடியும், ஆனால் அதில் இட ஒதுக்கீட்டிற்கு இடமிருக்க முடியாது. அப்படியே இடம் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தினை அமுல் செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கினை விசாரிக்கலாம். எனவே இட ஒதுக்கீட்டினை சட்டம் மூலம் எந்த அளவு பாதுகாக்க முடியும் என்பது கேள்விக்குறிதான். அது போல் ஒரு சட்டம் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு அப்பாற்பட்டது என்ற பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் அப்படிச் செய்வதையே கேள்விக்குள்ளக்க முடியும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிலவற்றை தௌ¤வுபடுத்தும் போது அரசு அதில் உள்ளவற்றிற்கு முரணாக தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும் சட்டத்தினைக் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு அப்பாற்பட்டது என்று செய்ய முனைந்தால் அதை உச்ச நீதி மன்றத்தின் முன் கேள்விக்குட்படுத்த முடியும்.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து பலவேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசு ஒரு சட்டத்தினை கொண்டு வர முயல்கிறது. இத்தீர்ப்பு, அதில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள், மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எழுதும் எண்ணமுண்டு. (இப்போது எழுத இயலாது.) உதாரணமாக இத்தீர்ப்பு உன்னி கிருஷ்ணன் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை நிராகரித்து, அதில் ஆரம்பக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதை மட்டும் ஏற்கிறது. அதே சமயம் உயர்கல்வியைப் பொறுத்த வரை இத்தீர்ப்பில்
It is well established all over the world that those who seek professional education must pay for it
என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்றால் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களால் கட்டணம் கட்ட இயலாது என்றால் அவர்கள் அத்தகைய கல்வியை பெற 'தகுதி' அற்றவர்கள் என்றால் அவர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இத்தீர்ப்பின் படி ஆரம்பக்கல்வியைத்தான் அடிப்படை உரிமை என்று கோர முடியும். அப்படியானால் அரசிற்கு ஏழைகள் உயர் கல்வி பெறுவதில் என்ன பங்கு அல்லது பொறுப்பருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். அரசு எந்த அளவிற்கு இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு உதவுவதில் கல்வி நிறுவனங்களுக்கு என்ன பங்கிருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை எழுப்பும் போது உயர் கல்வியில் அரசின் பங்கு, மான்யம் போன்றவை குறித்தும் கேள்விகள் எழும். கடந்த காலத்திலும், இப்போதும் அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகைகள் போதுமானவையா? ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்றால் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்றக் குறிக்கோள் எப்போது நிறைவேறும். அரசு ஆரம்பக் கல்வி, பள்ளிக்க்கல்வியில் மட்டும் அதிக கவனம் செலுத்தி உயர்கல்வியில் தொழில் நுட்ப, தொழில்சார்ந்த கல்வியை பெருமளவுக்கு தனியார்,சந்தைச் சக்திகள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா, அப்படி விட்டுவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன-

இப்படி பலவற்றை விவாதிக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. இட ஒதுக்கீடு குறித்து கூச்சல்கள் இருக்கின்றன. எழுப்பபட வேண்டிய கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

உயர்கல்வி அடிப்படை உரிமை இல்லையா, இந்தியா போன்ற சமூகங்களில் அதை ஏழைக்களுக்கு கிடைக்கச் செய்வது அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டாமா என்பதை விவாதிப்பதற்குப் பதிலாக தீர்ப்பில் இட ஒதுக்கீடு குறித்து கூறப்பட்டுள்ளதே முக்கியத்துவம் பெறுகிறது. இடஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியாக குறுக்கப்பட்டதன் விளைவு இது. ஆனால் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு எதிரானதாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அரசுகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை மேலும் இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினால் யார் அதிகம் பலன் பெறுகிறார்கள், உண்மையிலேயே பிற்பட்டவர்கள் இதனால் பெரும் பயனடைகிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை இடதுசாரிகள் கூட முன் வைப்பதில்லை. உண்மையிலேயே இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுதான், ஒட்டு வங்கி அரசியலில் காமதேனுதான்.

உயர் கல்வியில் இன்று அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் குறைவு, தனியார் நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் அதிகம். மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். capitation fee போன்றவை தடுக்கப்பட வேண்டும். ஏழை என்பதாலேயே தகுதி உடைய மாணவர்கள், மாணவிகளுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாக இருக்கக் கூடாது. உயர் கல்வி வணிக நோக்கில் மட்டும் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி, இட ஒதுக்கீடு அல்ல.
இக்கருத்தினை முன் வைத்து கட்சிகள் பேசுவதில்லை, இட ஒதுக்கீட்டினை மட்டுமே பெரிய பிரச்சினையாகச் சித்தரிக்கின்றனர். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இவ்விஷயத்தில் ஒரு முழுமையான கண்ணோட்டம் வேண்டும். இட ஒதுக்கீடு உறுதிச் செய்யப்பட்டாலும் பிற பிரச்சினைகள் நீடிக்கும். அவை ஏற்கனவே இருந்தவைதான். அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் வழி செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. மத்திய மாநில அரசுகளும், கட்சிகளும் உச்ச நீதி மன்றம் தீர்ப்புக் கூறுமுன்னரே 1990களிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாண முயன்றிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்றாலும் இப்போதும் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே பிரதானப்படுத்தப்படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்ப்படப் போவதில்லை. 69% இட ஒதுக்கீடு குறித்த இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

என்னுடைய கருத்து என்னவெனில் இட ஒதுக்கீட்டினை அரசு கோருவதற்குப் பதிலாக தனியார் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி பெற உதவும் திட்டங்களை வகுக்கலாம். கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கலாம். இது போன்ற பலவற்றைச் செய்யல்லாம். உதாரணமாக தகுதி அடிப்படையில் அரசு தனியார் உயர் கல்வி நிலையங்களில் உள்ள பொருளாதார ரீதியாக வறிய நிலையில் கல்விக்கட்டணங்கள் செலுத்த இயலாத நிலையில்,இதர செலவுகளை ஏற்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களில்

20% - 25% த்தினருக்கான செலவினை முழுமையாக ஏற்கலாம்

25% த்தினருக்கு ஆகும் செலவில் 50% முதல் 70% வரை அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மான்யமாகவும் ,மீதியை திருப்பிததர வேண்டிய கடனாகவும் தரலாம்

50% த்தினருக்கு 40% முதல் 50% த்தினை மானியமாகத் தரலாம், மீதி 60% முதல் 50% த்தினை அவர்கள் வங்கிக் கடன் மூலம் பெற உதவலாம் அல்லது அரசே திருப்பித்தர வேண்டிய கடனாகத் தரலாம்.

இங்கு ஜாதி,மதப் பாகுபாடுகள் காட்டப்படக்கூடாது.பொருளாதார நிலையே முக்கியத்துவம் பெற வேண்டும். இது போன்றவற்றை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால் உயர்கல்வியில் அரசு செலவிடும் தொகையில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரவீன் ஜா எழுதுகிறார்

" Compression of public expenditure on higher education has been quite sharp, if we look at the trend in per student expenditure, from the early 1990s onwards, at constant (1993-94) prices the magnitude of decline between 1990-91 and 2001-02 was almost 25% and such a drastic fall has affected almost every aspect of the educational infrastructure." (3)

அரசுகள் பணம் செலவழிக்க விரும்பாமால் இட ஒதுக்கீடு என்பதை முன் வைக்கின்றன. இந்த மோசடியைப் மக்கள் புரிந்து கொள்ளா வண்ணம் அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள சில உண்மைகளை அறிய வேண்டும், அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகை போதுமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். ஜாவின் கட்டுரை சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. உயர்கல்வியில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை விவாதிக்காமல் இட ஒதுக்கீட்டினை மட்டும் முன் வைப்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒருபுறம் தனியார் கல்வி நிலையங்களைத் துவங்க அனுமதித்துவிட்டு அவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும், capitation fee போன்றவற்றைத் தடுக்கவும் போதுமான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாததால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளே முக்கிய வழி காட்டும் நெறிகளாக இருக்கின்ற நிலை, இன்னொரு புறம் உயர்கல்வியில் அரசு போதுமான முதலீட்டினை செய்யாதது. இதன் விளைவாக உயர்கல்வியில் தனியாரே தீர்மானகரமான சக்திகள் என்ற நிலை உருவாவது. இதற்கு யார் பொறுப்பு. அரசுகள் தங்கள் கடமைகளை செய்தனவா. உச்ச நீதிமன்ற பெஞ்ச கூறுகிறது

It is for the Central Government, or for the State Governments, in the absence of a Central legislation, to come out with a detailed well thought out legislation on the subject. Such a legislation is long awaited. States must act towards this direction. Judicial wing of the State is called upon to act when the other two wings, the Legislature and the Executive, do not act. ( emphasis added)

உயர் கல்வியில், குறிப்பாக தொழில் நுட்ப, மருத்துவக் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும், அரசு நிதி உதவி பெறாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது 1980களில் மத்தியில் துவங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பபின்னும் இவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த அகில இந்திய அளவில் ஒரு சட்டம் இல்லை, பல மாநிலங்களில் சட்டங்கள் இல்லை, மாறாக உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படியில் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன, விதிகள் வகுக்கப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ஏன் இருபதாண்டுகளுக்குப் பின்னும் ஒரு தௌ¤வான நடைமுறைப் படுத்தக்தக்க கொள்கையோ அல்லது சட்டங்கள், விதிகள் இல்லை. இத்தகைய நிலைக்கு யார் பொறுப்பு. உண்மை கசப்பானது, இதை மூடி மறைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. கனம் கோர்ட்டார் அவர்களே என்று கேட்கும் முன் கேட்க்கப்பட வேண்டிய கேள்விகள் பல. (4)

இவற்றைக் கேட்காமாலும், பிரச்சினையின் பல பரிமாணங்களைக் புரிந்து கொள்ளாமலும் நீதி மன்றத் தீர்ப்பு ஏதோ சமூக நீதிக்கு எதிரானது என்று பேசுவதும், எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மையை விளக்கி எழுத வேண்டிய அறிவு ஜீவிகளும் கூட இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

அரசின் இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் தனியார் கல்வி நிலையங்களில் மிகப் பெரும்பான்மையானவை சிறுபான்மையோர் மற்றும் பிறபடுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருப்பவர்கள் அல்லது ஜாதி சங்கங்கள் அல்லது மத அமைப்புகள் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள், அறக்கட்டளைகள் நடத்துபவை. இவற்றை எதிர்த்து அரசியல் கட்சிகள் எதுவும் பேசுவதில்லை. ஏன் நீங்கள் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. யார் வழக்குத் தொடந்தது, யார் இட ஒதுக்கீடு கூடாது, மாணவர் சேர்க்கையை நாங்களே தீர்மானிக்கும் முழு உரிமை வேண்டும் என்று வாதிட்டது. ஏன் இந்தக் கல்வி நிலையங்களின் நிர்வாகங்களை அரசியல் கட்சிகள் கண்டிக்காமல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது என்று பேசுகின்றன. உண்மை என்ன - சிறுபான்மையோர், பிற்படுத்தப்படுத்தோர் என்ற ஒட்டு வங்கியைய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவற்றில் கல்வி நிலையங்கள் நடத்துவோரை நேரடியாக விமர்சிக்கக் கூடாது அதே சமயம் சமூக நீதி என்றப் போலிக்கண்ணீரும் வடிக்க வேண்டும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு ஆபத்தானது என்ற பிரச்சாரத்தினை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

அரசு நிதி உதவி 100% இருந்தாலும் சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு தீர்மானிக்க முடியாது. ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் அரசு அங்கு செலுத்தக்கூடிய அதிகாரம் குறைவானது, பலவற்றில் அரசுக்கு அதிகாரமே இல்லை என்றுதான் கூற வேண்டும். நிலைமை இப்படி இருக்க அரசு நிதி உதவி அல்லது வேறு உதவிபெறாத கல்வி நிறுவனங்களில் அரசு எப்படி தனக்கென்று மாணவர் சேர்க்கையில் இத்தனை சதவீதம் வேண்டும், இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவேன், அதைஅவை ஏற்க வேண்டும் என்று ஒரு உரிமையைக் கோர முடியும். சட்ட ரீதியாக இக்கோரிக்கைக்கு அடிப்படை இல்லை. இத்தீர்ப்பு இதை மிகத் தௌ¤வாகக் கூறுகிறது. அப்படி ஒரு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட அரசியல் சட்டத்தில் அதற்கு இடமளிக்கும் விதிகளும் இல்லை. இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது, ஆனால் அந்த அங்கீகாரம் வரையறைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை ஒரு அடிப்படை உரிமையாகக் கோர முடியாது, அவ்வாறு கோர அரசியல் சட்டத்தில் இடமில்லை. எனவே இத்தீர்ப்பு குறித்த பல கருத்துக்கள் போதுமான புரிதல் இன்றி வெறும் உணர்ச்சி பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பது என் கருத்து.

சில உண்மைகள் கசப்பானவை. அவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பதாலேயே அவை இல்லாதவை என்று ஆகி விடாது. இட ஒதுக்கீடு மட்டுமே தகுதியானவர் அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்து விடாது. இட ஒதுக்கீடு ஒரு பரந்த குறிக்கோளினை நிறைவேற்ற பயன்படுததக்கூடிய ஒரு கருவி அல்லது வழி. அதுவே போதும் என்றோ அல்லது அது இருந்தால் அக்குறிக்கோள் நிறைவேறிவிடும் என்றோ கருதிவிட முடியாது. இட ஒதுக்கீட்டினை அனுபவிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிட்டு உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோர் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அது போல் குடும்பச் சூழல், வறுமைக் காரணமாக உயர் நிலைப்பள்ளிக்கு மேல் தொடர முடியாமல் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவதில்லை.

இவர்களின் பிரச்சினைகளுக்கு இட ஒதுக்கீடு எப்படித் தீர்வாகும். இங்கு தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுபவர்களும் இருக்கிறார்கள், பயன் பெறாதவர்களும்இருக்கிறார்கள். இது தவிர இட ஒதுக்கீட்டின் கீழ் வராத ஏழைகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதி என்பதாக சித்தரிப்பது மோசடியன்றி வேறென்ன. இதில் உச்ச நீதிமன்றம் முன் வைத்த creamy layer என்பதை ஏற்காத அரசியல் கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு கோருகின்றன. பிற்படுத்தப்படுத்தவர்களில் பணக்காரர்கள், முன்னேறியவர்கள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது, அனைவருக்கும் சலுகை வேண்டும் என்றால், பெண்களில் மட்டும் ஏன் பாகுபாடு காட்ட வேண்டும், அனைத்துப் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும். இது போன்ற கேள்விகளை 'பகுத்தறிவாளர்கள்' கேட்பதில்லை,பிறர் கேட்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு என்ற சொல்லாடலை கட்டுடைக்காத வரை, அதற்கு ஜே என்று கோஷம் எழுப்பும் வரை நீங்கள் முற்போக்கானவர், கட்டுடைத்தால் நீங்கள் பிற்போக்காளர் என்று முத்திரைக் குத்தப்படுவீர்கள் என்ற நிலைதான் இங்கு இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்த பல கருத்துக்கள் ஏன் இட ஒதுக்கீட்டினை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்பதற்கான விடையை இப்போது கண்டுபிடிப்பது எளிது.

இத்தீர்ப்பினை அரசுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது இன்னும் தௌ¤வாகவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , இட ஒதுக்கீடு என்பதை மட்டும் உறுதி செய்ய முய்ன்றுவிட்டு பிறவற்றில் அரசுகள் போதுமான அக்கறை காட்டாமல் தங்கள் கடமையைச் செய்து விட்டோம் என்ற நிலையை ஏற்படுத்த முயலும். ஆனால் தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல.

1, http://www.hindu.com/thehindu/nic/scorder.htm

2, Justice for Dalits among Dalits : All the Ghosts Resurface - K.Balagopal - EPW- July 16,2005 www.epw.org.in

3, Withering Committments and Weakening Progress : State and Education in the Ear of Neoliberal Reforms - Praveen Jha-EPW August 13 2005 www.epw.org.in

4, http://www.keetru.com/literature/essays/aadhavan.html
ஒரு குறிப்பு

ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரை குறித்த வலைப்பதிவினை எடுத்துவிட்டேன். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பதிவினை ஒரிரு தினங்களில் இட உள்ளேன். நீக்கப்பட்ட பதிவில்இருந்த கருத்துக்கள் அதில் இடம் பெறுவதாலும், அது ஒரு விரிவான பதிவு என்பதாலும் நீக்கப்பட்டபதிவு தேவையில்லை என்று கருதுகிறேன்
ஜஸ்ட் டூ இட்

எதையோ தேடும் போது இணையத்தில் கிடைத்தது இது . புகைப்படம் எடுத்தவர் ஷரத் ஹக்ஸர்
.தினம் தினம்

இன்று வலைப்பதிவுகளில் பாரதி பற்றியும், 2001ல் நியு யார்க்கில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது குறித்தும் எழுதிழிருக்கிறார்கள். 1973ல் சிலியில் ராணுவப் புரட்சி ஏற்படு அலெண்டே அரசு கவிழ்க்கப்பட்டதும் செப்டம்பர் 11ம் தேதிதான். இந்த தேதிகளை ஒட்டிஎழுதுவது எனக்கு அலுப்புட்டுகிறது. அமெரிக்காவில் இப்படி ஏராளமான தினங்கள் இருக்கின்றன. இதில் பல வணிக நோக்கத்திற்காக உள்வாங்கப்பட்டுவிட்டன என்று தோன்றுகிறது. இன்று என்ன தினம் இன்று விடுமுறையா இல்லையா என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.

செப்டம்பர் 11 பாரதியுடன் தொடர்புடையது என்று தெரியும் ஆனால் அதைக் மறக்காது எழுதுமளவிற்கு நான் பாரதி பக்தன் இல்லை. பாரதி மீது மதிப்பும், மரியாதையும் உண்டு.அதற்காக பீடங்கள் கட்டுகிற ஆசாமி நானில்லை. பாரதி குறித்த எனது மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாரதி குறித்து நடைபெறும் விவதாங்களுடன்எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. பாரதியிடமிருந்து கற்க வேண்டியவை பல.அவரின் ஆளுமை வியப்பளிப்பது அதற்காக அவரை ஒரு பீடத்தில் ஏற்றி வழிபாடு செய்யமுடியாது. அது பாரதிக்கே பிடிக்காத ஒன்றாக இருக்கும். இன்று பாரதிக்குச் செய்யக்கூடிய மரியாதை தமிழில் புதிய விஷயங்களைப் பற்றி எழுதுவதாக இருக்கலாம். பாரதியை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் தமிழில் புதிய கருத்துக்களை, துறைகளை அறிமுகம் செய்யும் நூல்கள், மொழிபெயர்ப்புகள் கொண்டுவருவதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரதி காலத்தில் அவன் எதிர்கொண்ட சவால்கள் வேறு, இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு. பாரதியிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு தமிழை வள்ப்படுத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

உலகில் எத்தனையோ தினங்கள் இருக்கின்றன இப்படியும் ஒரு தினம் இருக்கட்டும் என்று நினைத்து என் பிறந்த தினத்தினை உலகச் சோம்பேறிகள் தினமாக அறிவிக்கக் கோரி ஐ.நா சபைக்கு வேண்டுகோள் விடுத்தேன். பதில் இல்லை. எனவே இணையம் மூலம் ஆதரவு திரட்டி ஒரு கோடி பேரின் ஆதரவினைப் பெற்று அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த உள்ளேன். இதற்கான கடிதம் தயாரிக்கிக் கொண்டிருக்கிறது.. விரைவில் அறிவிப்பு வரும். இதில் உங்கள் மேலான ஆதரவினைக் கோருகிறேன்.

இந்த வாரம் சில சிறுகதைகள், கவிதைகள், புத்தக அறிமுகம் செய்யலாம் என்று நினைத்தேன். நேரமின்மையால் செய்ய முடியவில்லை. வலைப்பதிவில் ஒரு நல்ல கட்டுரை அல்லது குறிப்பினை விட ஒரு சர்ச்சை அல்லது சர்ச்சையுடன் கூடிய பதிவே அதிக கவனம் பெறுகிறது. இதில் சர்ச்சை ஏதாவது ஒரு பிரபலம் குறித்தது என்றால் அதற்கு இன்னும் அதிக கவனம் கிடைக்கிறது. எனவே வலைப்பதிவினை எந்த அளவிற்கு கட்டுரைக்கான இடமாக பயன்படுத்த முடியும் என்ற கேள்விஎழுகிறது.

தமிழ் வலைப்பதிவுகளை ஒரளவேணும் கவனித்து வருபவன் என்ற முறையில் குறிப்பிட்ட பொருள் அல்லது துறைசார்ந்த வலைப்பதிவுகளின் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக பெண்ணியம் குறித்து ஒரு வலைப்பதிவு இருந்தால் அதில் தொடர்ந்து கட்டுரைகள், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், செவ்விகள் இடம் பெற்றால் இன்றைய சூழலில் பெண்ணியம் குறித்த புரிதல் வளப்படும் என்று நினைக்கிறேன் அப்படி ஒன்றை ஆரம்பிக்க நினைத்தேன். ஆனால் என்னால தொடர்ந்து எழுத முடியாது என்பதால் அதைக் கைவிட்டு விட்டேன். இது போல் விளையாட்டு, இசை, உட்பட பலவற்றைக் குறித்த பிரத்தியேக வலைப்பதிவுகள் இருக்க வேண்டும்.

பார்க்க கூடாத படங்கள் என்று ஒரு கூட வலைப்பதிவு இருக்கலாம். துளசியைத் தவிர வேறுசிலரும் அதில் எழுதலாம். அது போல் பயணம், பயணக்குறிப்புகளுக்காக ஒரு வலைப்பதிவு இருக்கலாம்.இப்படி பலவற்றை யோசிக்க முடியும்.

அப்புறம் வலைப்பதிவு வம்புகள், கிசுகிசுக்கள், வலைப்பதிவாளர்களுடன் செவ்விகளுக்காக ஒரு வலைப்பதிவு இருக்கலாம். புதிதாக வலைப்பதியும் ஆறெழுத்து வலைப்பதிவாளர் ஏற்கனவே நாலெழுத்து புனைபெயரில் வலைப்பதிந்து வருபவர்தானாம் போன்ற மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடிய பதிவுகள் அதில் இடம் பெறலாம். சிந்தனை என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு இருக்கிறது. அதை தூசி தட்டி வாரம் இரு முறையாவது பதியத் திட்டமிட்டுள்ளேன்.

இப்பதிவில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான குறிப்பான்களை இட்டுக்கொள்ளவும்.
கேட்டது - கேட்பது

இப்போது மூன்று குறுந்தகடுகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒன்றுஎஸ்.பி.பாலசுப்பிரமண்யன், கே.ஜே.யேசுதாஸ் பாடிய சோகப்பாடல்கள். இரண்டாவது வாணி ஜெயராம் பாடிய ஜோடிப்பாடல்கள், மூன்றாவது சிவாஜியின் தத்துவப் பாடல்கள்.எம்பி3 வடிவில் பாடல்கள் இருக்கின்றன. ஒரு குறுந்தகடில் 84 பாடல்கள். வாணி ஜெயராமபாடிய எனக்குப் பிடித்தமான பாடல்கள் இதில் இல்லை. பாடல் எந்தப் படத்தில் இடம் பெற்றது, உடன் பாடுபவர் யார் போன்ற விபரங்கள் இக்குறுந்தகடுகளில் இல்லை. வாணி ஜெயராம் 74 முதல்84 வரை மிக பிரபலமாக தமிழ்த்திரையுலகில் இருந்தார். பின்னர் அதிக எண்ணிக்கையில் அவர்பாடவில்லை. அவர் பாடியவற்றை ஏனோ லெஜென்ட்ஸ் வரிசையில் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள். அந்தப் பத்தாண்டுகளில் அவர் நல்ல பாடல்கள் என்று சொன்னால் நூறாவது பாடியிருப்பார். அவற்றை கால வரிசையாகவோ அல்லது வேறு விதமாகவோ வரிசைப்படுத்தி வெளியிடலாம்.

வேதா இசையமைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடிய பாடல்களிலிருந்து பிரபலமானவற்றை ஒரு குறுந்தகட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அதே போல் டி.எம்.எஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களின் ஒரு தெரிவும்குறுந்தகட்டில் கிடைக்கிறது. இரண்டையும் இந்தியா சென்றிருந்த போது வாங்கினேன். ஒரிரு முறைகேட்டும் விட்டேன். சமீபத்தில் வெங்கட்டின் வலைப்பதிவில் அவர் பாடிய மூன்று பாடல்களைக் கேட்டேன்.ஈஸ்வரியின் குரல் ஈஸ்வரியின் குரல்தான், அதற்கு தமிழ்த் திரையுலகில் ஈடு இல்லை. அவர் குரலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி, விஸ்வநாதன் போல் தமிழில் யாரும் பயன்படுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக தூள்.காமில் உள்ள இன்றைய பாடல்களை கேட்டு வருகிறேன். பல பாடல்களை பல ஆண்டுகள் கழித்துக் கேட்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. பாடல் வரிகள், இசை மனதில் இன்னும் இருப்பதுடன் சில பாடல்களை முன்பே கேட்டிருந்தாலும் இப்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அதில் சரவணன் என்ற நிபுணர் எழுதியிருக்கும் குறிப்புகள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் குறித்த விரிவான தகவல்கள், அலசல்களைப் படிக்கும் போது ஆகா இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்னும் விரிவாகநூல் வடிவில் இவற்றைத் தொகுக்க வேண்டும்.

பசிபிக் கடல் வாழ் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியுடன் வாத்திய இசையும் சேர்ந்த ஒரு குறுந்தகட்டினைக் கேட்டேன்.அவற்றின் ஒலிகளை மட்டும் தனியேக் கேட்கவேண்டும் என்றுதோன்றியது.இது போன்ற ஒலிகளுக்கு என் காதுகளை பழக்கப்படுத்தப் போகிறேன்.

வாங்கி, கிடைத்து இன்னும் கேட்காதவை என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் இளையராஜாவின் திருவாசகம், கண்டசாலாவின் பாட்ல்கள் அடங்கிய ஒலி நாடாவும் அடங்கும்.
தமிழ் சினிமா, சாரு நிவேதிதா, தியோடர் பாஸ்கரன்

தியோடர் பாஸ்கரன் பல காலமாகச் சொல்லி வருவதை சாரு நிவேதிதா தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலந்து இரண்டு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். பாஸ்கரனின் கருத்துக்கள் சிலவற்றை குறிப்பாக சினிமாவில் பாடல்களின் பங்கு குறித்தவற்றை 1991ல் அவர் ஆங்கிலத்தில் இதை மும் வைத்த போது சர்சித்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய வெகுஜன சினிமா குறித்த புரிதலும், விவாதமும் வேறு பல திசைகளில் நகர்ந்துள்ளன. பாஸ்கரனுக்குத்தான் இதில் சொல்ல ஒன்றுமில்லையென்றால் சாருவின் நிலை அதை விட பரிதாபகரமாக இருக்கிறது. வழக்கம் போல் பெயர் உதிர்ப்புகளை செய்யும் சாரு தன் கட்டுரையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியதிலிருந்து ஒரு பகுதியை தன் தரப்பிற்கு வலுக்கூட்ட முன் வைக்கிறார். ஆனால் சாருவுக்குரோஜா திரைப்படம் குறித்து நடந்த முழு விவாதமோ அல்லது காதலன் , பம்பாய் குறித்து நடந்த விவாதமோ குறித்து எந்தப் புரிதலும் இல்லை. அப்படி விவாதங்கள் நடந்ததே சாருவுக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் இந்திய வெகுஜன சினிமா என்றாலா அது குப்பை, எந்தவிதமான அலசலுக்கும் லாயக்கற்றது, அது வெறும் கேளிக்கை என்ற கருத்து அறிவுஜீவிகளிடம் இருந்தது. பிலிம் சொசைட்டி இயக்கம் வலுவாக இருந்த காலத்தில் வெளி நாட்டுப்படங்கள், உள்நாட்டுக் 'கலை'ப் படங்கள் -இவற்றைப் பார்ப்பதும், இவை குறித்து விவாதிப்பதுமே சினிமா குறித்த அறிவுஜீவி செயல்பாடுகளில் முக்கியனமானதாக் கருதப்பட்டது. ரே, அடூர், மிருணாள் சென், ரித்விக் கடக் என்று ஒரு பத்து நபர்கள் எடுப்பவையே திரைப்படம் என்றுக் கருதத்தக்கவை என்ற கருத்தும் நிலவியது. சிறுபத்திரிகை உலகிலும் வெகுகாலம் பிரபலமாக இருந்த கருத்தும் இதுதான். பின்னர் மூன்றாம் சினிமா, இணை(parallel) சினிமா குறித்து பேசப்பட்டது. என்றாலும் வெகுஜன சினிமா குறித்த கருத்தில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. அது தமிழாக இருந்தாலும் சரி ஹிந்தியாக இருந்தாலும் சரி வெகுஜன சினிமா வெறும் கேளிக்கைதான் என்ற கருத்துடன், தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கம் திரைப்படத்தினை பயன்படுத்தியதால் அதன் மீதான வெறுப்பு அறிவுஜீவிகள் பலரிடம் மிக அதிகமாகவே இருந்தது.

ஆனால் சமூக அறிவியலில் வெகுஜனக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள், பின் நவீனத்துவ சிந்தனைகள் போன்றவை காரணமாக வெகுஜன சினிமாவையும் கலாச்சாரத்தையும் மொத்தமாக கேளிக்கை அல்லது குப்பை என்று ஒதுக்கும் போக்கிற்குப் பதிலாகஅவற்றைப் பொருட்படுத்தி ஆராயும் போக்கு வலுப்பெற்றது. வெகுஜனக்கலாச்சாரம் என்பதை ஒற்றைப்பரிமாணமாகப் பார்க்காமல் வெகுஜனக் கலச்சாரத்தில் நுகர்வோர் பங்கு, popular culture, mass culture, பிரதிகளின் வாசிப்பு, நுகர்வு போன்றவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வெகுஜன சினிமாவை பார்வையாளர்கள் எப்படி அர்த்தப்படுக்கிறார்கள், ரசிகர் மனோபாவம், fandom குறித்தெல்லாம் கோட்பாடு ரீதியாகவும், கள ஆய்வுகள் துணைக் கொண்டும் பல ஆய்வுகள் செய்யப்பட்டன. பின் நவீனத்துவம் உயர் கலாச்சாரம் - தாழ்ந்த கலாச்சரம் என்ற பிரிவினையைக் கேள்விக்குட்படுத்தியது. இந்த ஆய்வுகள் விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறிப்பாகதொலைக்காட்சித் தொடர்கள் குறித்தும் செய்யப்பட்டன. இதன் விளைவாக பல்கலைகழகங்களில் கலாச்சாரம் குறித்த ஆய்வுகளில் மடோனா குறித்து ஆராயவதோ அல்லது இந்தியாவில் தொலைக்காட்சித் தொடர்களான மகாபாரதம், ராமாயணம் குறித்து ஆராய்வதோ சாத்தியமாயிற்று. ஒரு பிரதியினை வெறும் கருத்தியல் ரீதியில் மட்டுமே ஆராய்ந்து முற்போக்கானது அல்லது நல்லது, பிற்போக்கானது அல்லது கெட்டது என்று முத்திரைக் குத்தும் பாணி கேள்விக்குட்படுத்தப்பட்டது. இதன் பொருள் வெகுஜனக் கலாச்சாரத்தினை விமர்சனமின்றி கொண்டாடுவது அல்லது தூக்கிப்பிடிப்பதல்ல. மாறாக ஆய்விக்குட்படுத்தி அது குறித்த புதிய கருத்துக்களை, கண்ணோட்டங்களை முன் வைப்பது. ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் பார்க்கபட்டாலும் பல்வேறு கலாச்சாரங்களில் பல்வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்படுவது, ஒரே திரைப்படம் எப்படி பல்வேறு விதமாக ரசிக்கப்படுகிறது அல்லது பொருள்கொள்ளப்படுகிறது, சோப் ஒபராக்கள் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் - இப்படி பல்வேறுவிதமான கோணங்களிலிருந்து செய்யப்பட்ட ஆய்வுகள் காரணமாக வெகுஜன கலாச்சாரம் குறித்த அறிவுஜீவிகளின் சொல்லாடல்கள் மாறுதலடையத் துவங்கின. இந்தியாவில் 1980 களில் ஏற்பட்ட தொலைக்காட்சியின் விரிவாக்கம் முதன்முறையாக திரைப்படம் அல்லாத ஒரு சக்திவாய்ந்த வெகுஜன ஊடகத்தினை உருவாக்கியது. பின்னர் 1990 களில் ஏற்ப்பட்ட தாரளமயமாக்கம், ஹிந்த்துவத்தின் வளர்ச்சி, அதி வேகம் பெற்ற உலகமயமாகும் போக்கு - கலாச்சாரத்தில் இவற்றின் தாக்கம் என்று கலாச்சாரம் குறித்த ஆய்வுகளின் பரப்பு விரிவடைந்தது.

1970களின் இறுதியில்,1980களில் வெகுஜன சினிமா குறித்த இந்திய அறிவுஜீவிகளின் புரிதலி ல் மாற்றங்கள் ஏற்படத்துவங்கின. இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம. யேசு சபையைச் சேர்ந்த காஸ்டன் ரோபர்ஜ (Gaston Roberge) கல்காத்தாவில் 1970களில் சித்ரபாணி என்ற அமைப்பினை நிறுவினார். காஸ்டன் உலகத்திரைப்படங்களின் ரசிகர் என்றாலும் வெகுஜன சினிமாவைக் கருத்தில் கொள்வது குறித்தும் எழுதினார். தன்னுடைய நூல்களில் சினிமா என்னும் தொழில்நுட்பம், கலைவடிவம் குறித்து விரிவாக எழுதிய காஸ்டன் வெகுஜன சினிமாவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் காண வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். அதாவது திரைப்படம் வெறும் கேளிக்கை என்று நிராகரிப்பதற்குப் பதிலாக திரைப்படத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு ஆராயப்பட வேண்டும். வெகுஜன சினிமா முன்வைக்கும் சித்தரிப்புகள்,அது முன் வைக்கும் யதார்த்தம், சமூக யதார்த்தம் இவை ஆராயப்பட வேண்டும். வெறுமனே வெகுஜன சினிமாவை ஒரு மாயை அல்லது மோசமான பொழுதுப்போக்கு ஊடகம் அல்லதுமக்களை சீரழிக்கும் ஊடகம் என்று நிராகரிக்கக் கூடாது, நிராகரிக்க முடியாது. இன்று இந்தக் கருத்து மிகச்சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் சாரு போன்றவர்கள் இதைக் கூடஇன்னும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. காஸ்டன் இந்திய சினிமாவை ரே, சென், அரவிந்தன் என்று குறுக்கவில்லை. 1974ல் சத்யஜித் ரேயின் முன்னுரையுடன் திரைப்படத்தினைபுரிந்துகொள்ள உதவும் பொருட்டு Chitra Bani: A Book on Film Appreciation என்ற நூலை அவர் எழுதினார்.

இன்னொரு முக்கியமான நபர் புது தில்லியில் உள்ள CSDS (Centre For Stduy of Developing Societies) ன் இயக்குனராக இருந்த சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியமான சமூக அறிவியல் அறிஞர்களின் ஒருவராக கருதப்படும் அஷிஸ் நந்தி. நந்தி வெகுஜன சினிமா குறித்து எழுதிய ஒரு கட்டுரை "An Intelligent Critic's Guide to Indian Cinema." மிகவும் முக்கியமானது. 1987ல் இது வெளியானது. 1980ல் ஹிந்தித் திரைப்படம் குறித்து நந்தி எழுதியிருக்கிறார். சமூக உளவியலளாரான நந்தி சத்யஜித் ரேயின் ஷத்ரன்கே கிலாரி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்தியப் திரைப்படங்களில்காணப்படும் இரட்டை வேட பாத்திரங்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்தும் முக்கியமானது. நந்தி வெகுஜன சினிமா குறித்து எழுதும் போது அது எப்படி சமூகத்தின் ஆழ்கவலைகளை,பிரச்சினைகளை சித்தரிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

1980களில் வெகுஜன சினிமா -கலைப்படங்கள் இரண்டிலிருந்தும் வேறுபடும் பல படங்கள் வெகுஜன பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டன. அர்த் சத்யா போன்ற படங்களை எடுத்த கோவிந்த் நிகாலனி, கேட்டன் மேத்தா, சாய் பராஞ்ச்பே போன்ற இயக்குனரின் முயற்சிகள் முக்கியமானவை.அது போல் தமிழில் பாரதிராஜா, மகேந்திரன் இயக்கிய படங்கள் புதிய போக்குகள் இருப்பதைக் காட்டின. 1980களில் இக்பால் மசூட், மைதிலி ராவ் உட்பட பலர் வெகுஜனப் பத்திரிகைகளில் ஹிந்தித் திரைப்படங்கள் குறித்து எழுதினர். தமிழில் எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து சிறிது காலம் வெளிவந்த இனியில் பாரதிராஜா குறித்து ஒரு விவாதம் நடந்தது. எம்.டி.முத்துகுமாரசுவாமி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அதில் எழுதினர். இவற்றின் காரணமாக வெகுஜன சினிமா குறித்த ஆய்வுகளில் 1990களில் ஒருப் புதுப்பாய்ச்சல் ஏற்பட்டது.

1991ல் EPW ல் பராசக்தி குறித்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஒரு கட்டுரை எழுதினார். அது காலச்சுவட்டில் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அக்கட்டுரையில் அவர் பராசக்திபடம் வெளியான போது எழுந்த சர்ச்சைகள், திராவிட இயக்கத்தின் சினிமா குறித்து எழுதினார். 1990 களில் இந்திய வெகுஜன சினிமா குறித்து பல முக்கியமான ஆய்வுகளும், நூல்களும் வெளியாயின. 1980களில் துவங்கப்பட்ட DEEP FOCUS சினிமா குறித்து பல முக்கியமான கட்டுரைகளை வெளியிட்டது. EPW, Seminarல் வெகுஜனத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும், விவாதங்களும் இடம் பெற்றன, பெறுகின்றன. பெங்களுரில் உள்ள Centre For Study of Culture and Society வெகுஜனத் திரைப்படம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. திரைப்படங்கள் குறித்து கலைக்களஞ்சியங்கள் வெளியாயின. ஹேராம், லகான் போன்ற படங்கள், மணி ரத்தினத்தின் படங்கள், தமிழில் 1970களில் துவங்கிய கிராமியச்சூழல் அடிப்படையிலான neo-nativity genre படங்கள் உட்பட பல்வேறு பொருட்களில் ஆய்வுகள் நடைபெற்றன. தேஜஸ்வினி நிரன்ஜனா, ரவி வாசுதேவன், சுந்தர் காளி, எஸ்.வி.ஸ்ரீநிவாஸ், வெங்கடேஷ் சக்ரவர்த்த்தி, ஜே.கீதா, அஷிஸ் ராஜ்யதக்ஷா, மாதவ் பிரசாத், லலிதா கோபாலன் என்று ஒரு ஒரு புதிய தலை முறை ஆய்வாளர்கள் இன்று திரைப்படம் குறித்த காத்திரமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் சிறுப்பத்திரிகை உலகத்திற்கு இதெல்லாம் தெரியாது என்றே தோன்றுகிறது, நிழல் ஒரு விதிவிலக்கு.

இவற்றின் விளைவாக இன்று வெகுஜன சினிமா குறித்து எழுதும் யாரும் அதை நாடகத்தின் நீட்சி, அது திரைப்பட வடிவமில்லை, அதில் பேச்சு அதிகம், பாடல்கள், இசை காரணமாகஅது பின் தங்கியுள்ளது அல்லது அவை திரைப்படத்திற்குத் தேவையற்றவை என்றெல்லாம் எழுதுவதில்லை. இன்று காத்திரமான ஆய்வுகள் செய்யும் யாரும் வெகுஜன சினிமா சினிமாவே அல்ல என்று எழுதுவதில்லை. இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்கள் போல் இல்லை என்பதை குறையாகச் சொல்வதில்லை. மாறாக இன்று ஹாலிவுட்டின் வெகுஜன சினிமாவிற்கு சவால் விடக்கூடிய அளவில் உலகில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியத் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களிலிருந்து வேறுப்பட்டு இருப்பதே அவற்றின் பலம். மேலும் பாட்டும், இசையும், காமெடியும் அவற்றின் தனித்துவத்தினை உறுதி செய்கின்றன.

ஆனால் சாரு நிவேதிதா தியோடர் பாஸ்கரன் சொன்னதை வைத்துக் கொண்டு கொஞ்சமும் யோசிக்காமல் அதே பழைய பல்லவியைப் பாடுகிறார். ஒரு கட்டுரை எழுத ஒரு லாரி புத்தகங்கள் தேவைப்படுகிறது என்று எழுதும் இவர் இந்திய வெகுஜன சினிமா குறித்து அறிவு ஜீவிகள் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் இடம் பெறாததைக் குறித்து எழுதுவது ஒரு நகை முரண். சாருவின் கட்டுரை ஏதாவது ஒரு சிறு பத்திரிகையில் வெளியாகி அதைப் பாராட்டி சில வாசகர் கடிதங்கள் வந்தால் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனெனில் சிறு பத்திரிகைக் சூழலில் காணப்படும் அறிவு வறட்சி அத்தகையது.

ஒரு புறம் ஆனந்த விகடன்,குமுதம் போன்ற அபத்தங்கள், இன்னொரு புறம் சாரு, ஜெயமோகன், அ.ராமசாமி போன்றவர்களின் அபத்த எழுத்துக்கள். தமிழில் எதையும் படிக்காமல் இருப்பதே நல்லது என்றே பல சமயங்களில் தோன்றுகிறது.

(இக்கட்டுரையில் கூறப்படும் கருத்துக்கள்,தகவல்களை என் ஞாபகசக்தியை அடிப்படையாக் கொண்டு எழுதுகிறேன். இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை அல்ல. தியோடர்பாஸ்கரன் கட்டுரைக்கு நான் எழுதிய பதிலை நாளை இட முயல்கிறேன்)
ஒரு பயணத்தின் கதை - 2

அங்கு நான் கண்ட காசி இந்தியாவில் பல முறை பேருந்துகள் வழியாக பயணித்தப் போதுகண்ட காட்சிகளை நினைவுபடுத்தியது. விமானத்தின் முன் சக்கரத்தினை இருவர் பழுதுபார்த்திருக்க்கொண்டிருக்க, பிற பகுதிகளை வேறு சிலர் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.ஒருவேளை பயணிகளே இறங்குங்கள், விமானத்தினை பழுதுபார்க்க, துப்புரவு செய்ய உதவுங்கள்என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தேன். விமானம் பழுதுபார்க்கப்படுவதால் கிளம்பதாமதமாகும் என்று அறிவித்தார்கள், அது கிளம்ப தயார் நிலையை எட்டும் வரை அனைவரும்பேருந்தில் இருந்தோம். என் மனதில் வேறொரு சிந்தனை ஒடிக்கொண்டிருந்தது.

பாரீஸ் விமானநிலையத்தில் பாரீஸ் ஜூரிச், ஜூரிச் ஜெனிவா பயணச்சீட்டுக் கொடுத்தவர்நான் ஜூரிச் விமானநிலையத்தில் ஏர்பிரான்ஸில் டிரான்ஸிட் பயணிகளுக்கான கவுண்டரைஅணுகி பயணச்சீட்டில் அவர்கள் ஒப்புதல் பெற வேண்டும், அவர்கள் ஜூரிச் ஜெனிவா விமானத்தில்இடமில்லையெனில் அடுத்து ஜெனிவா செல்லும் விமானத்தில் இடம் தருவார்கள் என்று வேறு கூறியிருந்தார். இந்த விமானம் ஜூரிச் போய் சேருவதற்கும் ஜெனிவாவிற்கு செல்ல வேண்டியவிமானம் கிளம்புவதற்கும் இடையயே 90 நிமிட இடைவெளி இருந்தது. ஆனால் இந்த விமானமேகிளம்ப தாமதாகிறதே, இது கிளம்பி அங்கு சென்று, பின் நான் ஏர் பிரான்ஸ் கவுண்டரில் சென்றுஒப்புதல் பெற்று அடுத்த விமானத்தினைப் பிடிக்க நேரம் சரியாக இருக்கும் அல்லது நான் ஒரே நாளில் இரண்டு விமானங்களைத் தவற விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றியது. சரி நடப்பது நடக்கட்டும் என்று பேருந்தில் காத்திருந்தேன். ஒரு வழியாக 35 நிமிடங்களுக்குப் பிறது அந்த விமானம் கிளம்பியது. அது ஒரு சிறிய விமானம். விமானம் தாமதமாக கிளம்பியதற்கு மன்னிப்புக் கேட்டார்கள், பயண நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவாக ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.

ஜூரிச்சில் விமானம் தரையிறங்கியது. முதலில் பாஸ்போர்ட் சோதனை. பின்னர் பயணிகளை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள். ஜூரிச் சர்வதேச விமான நிலையம் பெரியது. கொஞ்சம் கவனப்பிசகாக நடந்து கொண்டால் வெளிப்பகுதிக்கு வந்து விடுவோமோ, பின்னர் பாதுகாப்பு சோதனைகளை முடித்தப் பின் தான் உள்ளே செல்ல முடியுமோ என்ற சந்தேகம் இருந்ததால் என்பதால் மிக கவனமாக இருந்தேன். வேகமாக நடந்தேன், ஒடினேன். ஒரு வழியாக ஏர் பிரான்ஸின்டிரான்ஸிட் பயணிகளுக்கான கவுண்டரை கண்டுபிடித்து ஒப்புதலும் பெற்றேன். அவர்கள் விமானம் எங்கிருந்து கிளம்பும் என்பதை தெரிவித்தார்கள். மீண்டும் ஒட்டமும் நடையுமாய் அந்த கேட்டிற்கு வந்தேன். அங்கு யாருமில்லை. விமானம் கிளம்ப இன்னும் 45 நிமிடங்கள் இருந்தன. விசாரித்ததில் விமானம் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் முன்புதான் அங்கு பயணச்சீட்டினை சரிபார்ப்பவர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். அருகில் பல கடைகள் இருந்தன, பொதுத்தொலை பேசிகள் இருந்தன.

ஒரு கடையில் 10 டாலருக்கு காலிங் கார்ட் வாங்கினேன். ஜெனிவாவில் என்னை அழைத்திருந்த அமைப்பிற்கு தொலைபேசினேன். எனக்கு விடுதியில் தங்க ஏற்பாடு செய்தவர் அப்போது அங்கில்லை, இருந்தாலும் என்னிடம் பேசியவர் அவர் விடுதிக்கு தகவல் கொடுத்துவிட்டார் என்றும், ஏர் பிரான்ஸிலிருந்து என் வருகை தாமதமாகிறது என்று தகவல் வந்தது என்றார். பின் அவ்வமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர், நான் சேரவிருக்கும் ஆய்வுதிட்டத்தின் இயக்குனர் இருவரிடத்தும் நிலைமையை விளக்கி நாளைதான் வர முடியும் என்று கூறினேன். மனைவிக்கு தகவல் சொல்ல முயற்சித்தேன். அவர் ஆய்வுக்கூடத்தில் இருந்ததால் இன்னொரு ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்குமாறு கூறினேன். அந்த கேட்டில் பயணச்சீட்டு பரிசோதிப்பவர்கள் வந்து சேர்ந்தவுடன் என் பயண்ச்சீட்டுகளைக் காண்பித்தேன். விமானத்தில் ஒரு காலி இடம் இருக்கிறது, கடைசி வரிசையில் கடைசி இருக்கை என்றார்கள். அதைக் கொடுங்கள்என்றேன். இப்படியாக ஜெனிவா செல்லும் விமானத்தில் இடம் கிடைத்து ஏறினேன்.

ஜூரிச் எனக்கு முக்கியமான ஊர். ஒரு காலத்தில் என் காதலி இங்கு ETH எனப்படும் Federal Institute of Technology ல் ஆராய்ச்சியாளாராக இருந்தார். சுவிஸ் அரசின் செல்லப்பிள்ளை ETH. இந்தியாவில் ஐ.ஐ.டிகள் எப்படியோ அது போல் சுவிஸ்ஸில் ETH. அப்போது நான் உலகின் இன்னொரு பகுதியிலிருந்து தினசரி காலை 7.30 முதல் இரவு 10.30 வரை அவருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பவது, இணையம் மூலம் வாழ்த்தட்டைகள் அனுப்பவது, காதல் கவிதைகள் எழுதி அனுப்புவது, இவற்றை செய்ய இயலாத போது அலுவலக வேலைகளைச் செய்வது, மற்றும் என் அன்றாட வேலைகளைச் செய்வது என்றபடி வாழ்ந்திருந்தேன் :). அது நீண்ட நாள் நீடிக்கவில்லை, ஹ¥ம் , அது ஒரு கனாக் காலம் :). ஆக அவள் பாதங்கள் பட்ட ஜூரிச் 'மண்ணை' நானும் மிதித்தபின் தான் நான் ஜெனிவா சென்றேன்.

ஆகக் கடைசியில் வெற்றிகரமாக ஜெனிவா வந்து சேர்ந்தேன். பாரீஸ் ஜெனிவா பயண நேரம் ஒரு மணி நேரம்தான். ஆனால் நான் ஜூரிச் வழியாக வந்து சேர்ந்த போது கிட்டதட்ட ஏழு மணி நேரம் தாமதம். மாலை ஆறு மணிக்கு ஜெனிவா வந்து சேர்ந்தேன். சோதனைகள் இத்துடன் முடிந்தன, சுபம் என்று கூறலாம் என்றால் அப்படி நடக்கவில்லை.

இண்டியானாபோலிஸில் நான் இரண்டு பெரிய பெட்டிகளை (checked in baggage) ஜெனிவாவிற்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பியிருந்தேன். எனவே அவை இங்கு வந்திருக்க வேண்டும், நான் தாமதமாக வந்ததால் பெட்டிகள் முன்னரே வந்திருக்கும் என்று தேடினேன். அவை வந்திருக்கவில்லை. நானும் சலிக்காமல் 40 நிமிடங்கள் தேடினேன். வந்த பெட்டிகளை ஒரு புறம் வைத்திருந்தார்கள், அதிலும் அவை இல்லை. நான் வந்த விமானத்திலும் வரவில்லை. எனவே இது குறித்து ஒரு புகார் கொடுப்பதற்காக அதற்குரிய அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு எனக்கு முன்பு இருவர் புகார் கொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்தவரிடம் என் நிலையைச் சொன்னேன், ஜூரிச் வழியே வந்தேன் என்றேன். இது சகஜம் என்று கூறியவர் தினமும் இப்படித்தான் நடக்கிறது. பலர் உங்களைப் போல் மாற்றிவிடப்படுகிறார்கள் என்றார். உங்கள் பெட்டிகள் பாரீஸில் இருக்கக்கூடும் அல்லது வந்துக்கொண்டிருக்கும் விமானத்தில் இருக்கலாம் என்றார். ஒரு படிவத்தைக் கொடுத்தார். அதைப் பூர்த்தி செய்து, தங்கியிருந்த விடுதி அறை, அலுவலக தொடர்புஎண்கள் ஆகியவற்றைக் கொடுத்தேன்.

நாங்களே பெட்டிகள் வந்த உடன் அனுப்பிவிடுவோம், இணையத்திலும் அவை எங்கிருக்கின்றன, இங்கு வந்துவிட்டனவா என்பதை அறியலாம் என்று கூறி அது குறித்த விபரங்களைக் கொடுத்தார். இது போன்று நடக்கக்கூடும் என்று ஊகித்து 3 அல்லது 4 நாட்களுக்குத் தேவையான உடைகள், உள்ளாடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்போன்றவற்றை இழுவைப்பெட்டியில் வைத்திருந்தேன். எனவே அவை தாமதமாக வந்தாலும் பெரிய பாதிப்பில்லை.
அடுத்து மனைவியிடம் தொலைபேசினேன், விபரங்களைக் கூறி கவலைப்பட வேண்டாம், விடுதிக்குச் செல்கிறேன், அங்கே தொடர்பு கொள்ளலாம் என்று கூறினேன். பின்னர் மின்னஞ்சல் அனுப்ப அங்கிருந்த கணினிகளை பயன்படுத்த முயன்றேன். அவற்றில் இருந்த விசைப்பலைகளுடனான அனுபவத்தினை குறித்து ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.

[ புதன், ஜூலை 14, 2004 QWERTY QWERTZ
வழக்கமாக பயன்படுத்தும் விசைப்பலகையில் QWERTY என்று தான் இருக்கும். நான் இருப்பது ஜெனிவாவில். இங்கு அலுவலகத்திலும், வீட்டிலும் உள்ள கணினியில் விசைப்பலகை வேறு மாதிரி உள்ளது. இப்படி இருக்கும் என்று முன்பே தெரியும். ஒய் Y யும், Z இசட் டும் இடம் மாறியிருக்கும். அது தவிர வேறு பல மாற்றங்களும் உண்டு.ஆல்ட்ஜிர் (Alt Gr) என்று ஒரு கூடுதல் விசையும் உண்டு. கடந்த பத்து நாட்களாக இதனுடன் நான் புழ்ங்குவதால் ஒரளவிற்கு பரிச்சமாகி விட்டது.

ஜெனிவாவில் வந்து இறங்கிய உடன் விமான நிலையத்தில் ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்ப 15 நிமிடமாகிவிட்டது இந்த விசைப்பலகை எனக்கு புதிதென்பதால். @ என்பதை ஷிப்ட் கீயைப் பயன்படுத்தி இட முடியாது. ஆல்ட்ஜிர் என்ற கீயைப் பயன்படுத்தினால்தான் அதை இட முடியும்.இது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அருகில் இன்னொரு கணினியைப் பயன்படுத்தி கொண்டிருப்பவருக்கும் தெரியவில்லை. பின் இன்னொருவர் அவர் வேறொரு கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் உதவிக்கு வந்து விளக்கினார். ஒரு வ்ழியாக ஒரு மின்ஞ்சலை தட்டுத்தடுமாறி அனுப்பினேன்.

சில நாட்களுக்கும் முன் சட்டப் புலத்தின் டீன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தான் ஒரு பிரெஞ்ச் விசைபலகையை பயன்படுத்தி அனுப்பியதால் ஏற்பட்ட பிரச்சினையை குறிப்பிட்டிருந்தார்.நான் ஜெனிவாவில் இருப்பதையும், புதிய முகவரியையும் ஒரு அமெரிக்க பேரசாரியருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அவர் ஸ்வீடனிலிருந்து பதில் அனுப்பினார். தான் மாக் கணினியை பயன்படுத்தி பழக்கமில்லாத விசைப்பலகை கொண்டு பதில் அனுப்புவதாகவும் எனவே பிழைகள் இருந்தால் பொருட்படுத்த வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். நான் வீட்டில் பயன்படுத்தும் விசைப்பலகையில் Yம் Zம் வழக்கமான இடங்களில் இருக்கும். ஆனால் வேறு மாற்றங்கள் உண்டு.

அலுவலக்த்தில் பயன்படுத்தும் விசைப்பலகையுடன் அது வேறு படுவதால் உள்ளீடு செய்யும் போது சிறிது சிரமம் ஏற்படுகிறது. விசைப்பலகையை வேறு விதமாக இயங்க வைக்கலாம். ஆனால் அப்போது விசைப்பலகையில் உள்ள எழுத்திற்கும், உள்ளீடு செய்யும் போது தோன்றும் எழுத்திற்கும் வேறுபாடு இருக்கும். அது இன்னும் குழப்பம்தரும் என்பதால் இருப்பதை வைத்து சமாளிக்கிறேன்.

QWERTY விசைப்பலகைக்கு ஒரு வரலாறு உண்டு. இதை பாத் டிபென்டஸிக்கு (path dependency) உதாரணமாக குறிப்பிடுவார்கள். ஒன்றிற்கு பழக்கப்பட்டுவிட்டால் புதிதாக வேறொன்றை பயன்படுத்த கற்பது எளிதல்ல.

இது போல் பழையது தொழில் நுட்ப ரீதியாக பின் தங்கி இருந்தாலும் உடனே வழக்கிலிருந்து போவதில்லை என்பதற்கு பாத் டிபென்டஸியும் ஒரு காரணம். விண்டோஸை விட லினக்ஸ் மேம்பட்டிருந்தாலும் அது பலரை ஈர்க்காததை இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம் ]


விமான நிலையத்தில் உணவு உட்கொண்டு ஒரு டாக்சியைப் பிடித்து விடுதிக்குச் சென்றேன். நான் தாமதமாகத்தான் வருவேன் என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்திருந்ததால் அறையை வேறு யாருக்கும் ஒதுக்கவில்லை. விடுதியில் இருந்த வரவேற்பாளரிடம் எனக்கு இரண்டு பெட்டிகள் வரக்கூடும் வந்தால் என்னை எழுப்பித்தகவல் தாருங்கள் என்று தெரிவித்திருந்தேன். பின்னர் சாப்பிட்டுவிட்டு அலுப்பில் உறங்கிப் போனேன்.

இரவு மணி 11 இருக்கும், விடுதி வரவேற்பாளர் அறைக் கதவைத் தட்டினார், இரண்டு பெட்டிகளைக் காண்பித்து இவை உங்களுடையதா என்றார். நான் நன்றாகப் பார்த்துவிட்டு இல்லை, திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறி விட்டேன். ஆகஅன்று இரவு வரை பாரீஸிலிருந்து என் பெட்டிகள் ஜெனிவாவிற்கு வரவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

இவ்வளவு குழப்பங்களுக்கிடையே ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இணையம் மூலம் ஜிடி சுவடி என்ற இணையதளத்தினை ஜெனிவா வாழ் தமிழர்களுக்காவும், ஜெனிவாவிற்கு வரும் தமிழர்களுக்கு உதவவும் நடத்தி வந்த சுபாஸ் என்ற ஈழத்தமிழரிடம் தொடர்பு கொண்டு என் வருகையைப் பற்றிக் கூறியிருந்தேன். ஊருக்குப் புதுசு என்பதால் அவரும் உதவுவேன் என்று கூறிஅவர் நண்பர் ஒருவரை என்னை விமான நிலையத்தில் வரவேற்று விடுதியில் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். நான் நீலச்சட்டை அணிந்திருப்பேன், இந்த விமானத்தில் இத்தனை மணிக்கு வந்து சேர்வேன் என்பதையும் அவருடைய நண்பருக்கு தெரிவித்திருந்தார். சுபாஸிஸ்ற்கு அன்று மதியம் வேலை இருந்ததால் அவர் வீட்டில் இல்லை. நான் பாரீஸில் இப்படி மாட்டிக்கொண்டது அவருக்குத் தெரியாது. சொன்னபடி அவர் நண்பர் வந்து காத்திருந்து, நீலச்சட்டைப் போட்ட, பார்க்க இந்தியர் போல் தோன்றும் பயணிகளிடம் நீங்கள் ரவி ஸ்ரீநிவாஸா என்று கேட்டு நான் வரவில்லை என்று தெரிந்து கொண்டு சென்றுவிட்டார், சுபாஸிடமும் தகவல் தெரிவித்து விட்டார். பின்னர் சுபாஸ் விடுதியை தொடர்பு கொண்டார். என்னைச் சந்தித்தார். நடந்ததைச் சொன்னேன் அவரும் நண்பர் காத்திருந்த கதையைச் சொன்னார்.

தூங்கி எழுந்து காலையில் அலுவலகம் சென்றேன். வாசலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பிரபு ராம், நான் ரவி ஸ்ரீநிவாஸ் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தான் முன் பின் பார்த்திராத ஒருவர் எப்படி தன்னை சரியாக அடையாளம் கண்டு கொண்டு அறிமுகம் செய்து கொள்கிறார் என்பது அவருக்கு புதிராக இருந்தது. நான் அங்கு வரவிருப்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு வலைப்பதிவாளர். தன் பதிவில் புகைப்படத்தினைப் போட்டிருந்தார். அதை வைத்து அவரை அடையாளம் கண்டு கொண்டேன் என்று விளக்கினேன். பின்னர் அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவரை சந்தித்தேன். ஆய்வுத்திட்டதில் எனக்கு முன்னர் சேர்ந்திருந்தஆய்வாளர்கள் மற்றும் பிறருடன் பரஸ்பர அறிமுகம் நடந்தது. எனக்கான இடமும், கணினியும் தயார் நிலையில் இருந்தன. மாலை கிளம்பும் போது இணையத்தில் பெட்டிகளின் கதி என்ன என்று பார்த்தேன். அவை மாலை வந்து விடுதியில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இப்படியாக நான் ஜெனிவாவிற்கு மிக பத்திரமாக வந்து சேர்ந்தேன். இந்தப் பயணத்தில் சோதனைகள் ஏற்பட்டாலும் எனக்கு கலக்கம் ஏற்படவில்லை. இவற்றை சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, பல பயணங்களின் அனுபவங்கள் இருந்ததால் கவலை ஏற்படவில்லை.

அது சரி ஏன் ஷென்சென் விசா கேட்கிறார்கள். நானும் இதைக் கேட்ட போது கிடைத்த பதில் ஜெனிவா விமான நிலையத்தில் ஒரு பகுதி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஏர் பிரான்ஸ் மூலம் பாரீஸிலிருந்து வரும் போது விசா தேவையாகிறது. இப்போதும் இந்தவிதி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் கவலையில்லை, என்னிடம் ஷென்சென் விசா இருக்கிறது :).

ஆனால் இப்போதெல்லாம் டிரான்ஸிட் விசா என்ற பெயரில் தொந்தரவு செய்கிறார்கள். நீங்கள் விமானத்தை விட்டு கீழே இறங்காவிட்டால் கூட சில விமான நிலையங்கள்வழியே சென்றால் டிரான்ஸிட் விசா தேவை என்று அதற்கென்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ஒரு பயணத்தின் கதை - 1

கடந்த ஆண்டு ஜுன் இறுதியில் ஒரு சுபயோக சுபதினத்தில் விமானப்பயணத்திற்கு உகந்த நாள் என்று தினத்தந்தி முதல் குமுதம் ஜோதிடம் வரை அனைவரும் பரிந்துரைத்த நாளில் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் யான் ஜெனிவா நோக்கி பயணித்தேன். பயணச்சீட்டு உட்பட சான்றுகளை சோதித்த பின் விமான நுழைவுச்சீட்டுகள் தரப்பட்டன. இண்டியானாபோலிஸிலிருந்து சின்சினாட்டி, சின்சினாடிலிருந்து பாரீஸ், பாரீஸ்லிருந்து ஜெனிவா என்பது திட்டம். முந்தைய தினம் மதியம் கிளம்பி அடுத்த நாள் காலையில் ஜெனிவாவில் இருந்திருக்க வேண்டும்.

சக அதர்மிணி இண்டியானாபோலிஸ் விமான நிலையத்தில் வந்து வழி அனுப்ப, ஸ்டார்பக்ஸில் காபி சாப்பிட்ட படி கண்ணே கலங்காதே என்று வார்த்தைகள் கூறிய படி, இன்னும் பல ஆறுதல் வார்த்தைகள் கூறிய படி பாதுகாப்பு பரிசோதனைக்கான இடத்திற்கு வந்து அங்கு இருவரும் சேர்ந்திருப்பதை ஒருவரை புகைப்படமெடுக்கும்படி கேட்டுக்கொள்ள அவரும் அவ்வாறே செய்ய பின் யான் பாதுகாப்பு பரிசோதனைப் பகுதியில் நுழைந்தேன். கூட்டம் அதிகம் இருந்தாலும் அதிக நேரம் ஆகவில்லை. விமானமும் குறித்த நேரத்தில் கிளம்பி சின்சினாட்டி வந்தது. சின்சினாட்டியில் மீண்டும் பாதுகாப்பு பரிசோதனை இல்லை, நிறைய நேரம் இருந்தது. விமான நிலையத்தில் நான் செல்ல வேண்டிய விமானம் கிளம்பும் பகுதிக்கு வேகமாக நடந்தே வந்துவிட்டேன். அங்கு காபி குடித்து விட்டு, மப்பின் சாப்பிட்டு விட்டு மனைவியிடம் 20 நிமிடங்கள் நேரம் பேசிய பின்னும் விமானம் கிளம்ப 45 நிமிடங்கள் இருந்தது.

டெல்டா - ஏர் பிரான்ஸ் விமானங்களில் பயணம். ஏர் பிரான்ஸ் விமானத்தில் நல்ல கவனிப்பு. சைவச் சாப்பாடு என்று குறிப்பிட்டிருந்ததால் சாப்பாட்டில் பிரச்சினை இல்லை. நான் சிடி வாக்மேனில் பாட்டுக்களை கேட்டுக் கொண்டு, கொண்டு வந்த கட்டுரைகள் சிலவற்றை படித்து விட்டு, சிறு தூக்கமும் போட்டு விட்டு பாரீஸில் இறங்கி ஜெனிவாவிற்கான விமானத்தைப் பிடிக்க தயாரகியிருந்தேன். பாரீஸ¤க்கு விமானம் பத்து நிமிடம் முன்னரே வந்துவிட்டது. அப்புறம்தான் ஆரம்பித்தது சோதனை. விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கே 35 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணத்திட்டப்படி இந்த விமானம் வந்து சேர்வதற்கும், அடுத்த விமானம் ஜெனிவாவிற்கு கிளம்பவும் 1 மணி நேரம் 10 நிமிடம் இடைவெளி இருந்தது. பொதுவாக இது போதும். டிகால் விமான நிலையத்தில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள்.விமானத்திலிருந்து இறங்கி நீங்கள் போக வேண்டிய பகுதிக்கு நடந்து செல்வது சாத்தியமில்லை, நான் அறிந்த வரையில்.விமானம் டெர்மினல் 2 Eல் போய் சேரும் என்று போட்டிருப்பார்கள். அதனால் அங்கிருந்து இன்னொரு பகுதிக்கு நாமாக சென்றுவிடலாம் என்று நினைத்துவிட முடியாது. விமானத்திலிருந்து இறங்கிய உடன் பேருந்துகள் மூலம் பல் வேறு பகுதிகளுக்கு (டெர்மினல் 2 B,D போன்றவை) அனுப்புகிறார்கள். சில சமயங்களில் ஜீப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் செல்ல வேண்டிய பிரிவிற்கே அப்பேருந்து செல்லும் அல்லது பொதுவான இடத்தில் விட்டுவிடுவார்கள். அங்கு பாஸ்போர்ட்டி¨னைப்,பயணச்சீட்டினை பரிசோதிப்பார்கள். பின்னரே எந்த டெர்மினலோ அதற்கு செல்ல வேண்டும். (டிகால் விமான நிலையம் பரப்பளவில் விரிந்த விமான நிலையம். கான்கீரிட் வனம் என்ற பெயருக்கு ஏற்றது, அதன் சில பகுதிகளில் இன்னும் புதர்கள் இருக்கின்றன. முதன்முதலாக விமானப்பயணம் செய்பவர்களை பயமுறுத்த வேண்டுமெனில் டிகாலில் ஒரு டெர்மினலில் இறங்கி இன்னொரு டெர்மினலிற்கு சென்று விமானத்தில் ஏறும் வண்ணம் பயணத்தினைத் திட்டமிட்டால் போதும் ). கொஞ்சம் கவனமாக இல்லாவிடில் வேறொரு டெர்மினலிற்கு சென்றுவிடுவீர்கள். டிகால் விமான நிலையத்தில் என் அனுபவங்கள் குறித்து தனிப்பதிவே போடலாம்.

நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப இன்னும் 40 நிமிடங்களே இருக்கும் நிலையில் நான் போகவேண்டிய பகுதிக்கு செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை. கேட்டதற்கு அடுத்து வரும் பேருந்து அங்கு செல்லும் என்றார்கள். ஒரு வழியாக அது வந்தது. அது நேராக நான் போக வேண்டிய பகுதிக்குப் போகவில்லை, பிற பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட்டபின் நான் போக வேண்டிய பகுதிக்கு கடைசியாகச் சென்றது. அது அங்கு சென்ற போது விமானம் கிளம்ப 12 நிமிடமே இருந்தது. நான் அவசரமாக ஒடினேன், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் இன்னும் 10 நிமிடங்கள் இருக்கிறது. பாதுகாப்பு சோதனையை முடித்த உடன் நான் விமானத்தில் ஏற முடியும், என்னை அனுமதியுங்கள், விமானத்தில் நான் ஏற நேரம் சரியாக இருக்கும் என்றேன். அவர் யாருடனே உடனே கையில் இருந்த வாக்கி டாக்கி மூலம் பேசினார், பின் நீங்கள் பத்து நிமிடம் முன்னதாக வந்திருந்தால் அனுமதித்திருப்பேன், இப்போது விமானத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்ட்டன என்றார்.

உடனே ஏர் பிரான்ஸ் கவுண்டருக்கு சென்று என் நிலையை விளக்கினேன்.அங்கிருந்தவர் உடனே அடுத்த விமானம் 30 நிமிடங்களில் கிளம்புகிறது, உங்களுக்கான நுழைவுச் சீட்டு என்று விமான இருக்கை எண்ணைக் கொண்ட சீட்டினை கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு சோதனைக்கு விரைந்தேன்.

அங்கு என் பாஸ்போர்ட்டினை முதலில் பரிசோதித்தவர் ஷென்சென் விசா இல்லை, எனவே நீங்கள் ஜெனிவாவிற்கு நேரடியாக செல்ல முடியாது என்றார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை. அவரே சொன்னார் ஏர் பிரான்ஸில் மாற்று ஏற்பாடு செய்வார்கள் என்று . மீண்டும் ஏர் பிரான்ஸ் கவுண்டருக்கு வந்தேன், எனக்கு நுழைவுச்சீட்டுக் கொடுத்தவரிடம் என்னை அனுமதிக்கவில்லை என்றும் விசா இல்லை என்கிறார்கள் என்பதையும் கூறினேன். அவர் என்னை இன்னொருவரிடம் கூட்டிச் சென்றார். அவர் என் பாஸ்போர்ட், பயணச்சீட்டுகளை பரிசோதித்தார். பின்னர் ஷென்சென் விசா இல்லை, உங்களுக்கு பயணச்சீட்டு கொடுத்த டெல்டா தவறு செய்துவிட்டார்கள் என்றார்.

எனக்குக் கோபம் வந்தது. என் வசம் சுவிஸ் விசா உள்ளது, முறையான பயணச்சீட்டும் இருக்கிறது, சின்சினாட்டியில் ஏர் பிரான்சை சேர்ந்தவர்கள் என் பாஸ்போர்ட், பயணச்சீட்டு உட்பட அனைத்தையும் பரிசோதித்த பின்னரே பாரிஸ் செல்லும் விமானத்தில் அனுமதித்தனர், இப்போது ஷென்சென் விசா கேட்பது என்ன நியாயம் என்று கேட்டேன்.

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது, பிழை என்னுடையதல்ல, ஏர் பிரான்ஸ், டெல்டா செய்யும் பிழைகளை சரிசெய்ய வேண்டியது என்னுடைய வேலை அல்ல. விசா தேவைஎன்று ஏர் பிரான்சோ, டெல்டாவோ சொல்லியிருந்தால் முறைப்படி பெற்றிருப்பேன் என்று வாதிட்டேன். வாக்குவாதத்திற்குப் பின் ஜுரிச் வழியாக உங்களை ஜெனிவாவிற்கு அனுப்புகிறோம், ஆனால் இதை டெல்டா அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

நீங்கள் காத்திருங்கள், டெல்டாவின் ஒப்புதல் கிடைத்த உடன் பாரீஸ் ஜூரிச் பயணச்சீட்டு, ஜூரிச் ஜெனிவா பயணச்சீட்டு தருகிறேன், ஜூரிச்சில் ஏர்பிரான்ஸின் டிரான்ஸிட் கவுண்டரில் அதைக் காட்டி ஜெனிவா செல்ல விமான நுழைவுச்சட்£டு பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்து, நான் காலிங் கார்ட் வாங்க வேண்டும், ஜெனிவாவில் என்னை அழைத்திருந்த அமைப்பு, தங்கவிருந்த விடுதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், நான் கடைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல அனுமதி வேண்டும் என்றேன். அவரோ உங்கள் வசம் பயணச்சீட்டு இல்லாத போது நீங்கள் பாதுகாப்பு சோதனையைத் தாண்டிச் செல்ல முடியாது, எனவே கடைகளுக்குச் நீங்கள் செல்ல முடியாது என்றார். உடனே அப்படியானால் ஜெனிவா ஏர் பிரான்ஸ் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு என்னை அழைத்திருந்த அமைப்பிற்கு என் பயணம் தாமதமாகிறது, இதை விடுதிக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும், இது சாத்தியமா என்றேன். இதைச் செய்ய முடியும் என்று என்னிடமிருந்து தகவல்களைப் பெற்று உடனே ஜெனிவா விமான நிலையத்தில் உள்ள ஏர்பிரான்ஸ் அலுவலகத்திற்கு தெரிவித்தார். பின்னர் நீங்கள் காத்திருங்கள், டெல்டாவிடமிருந்து ஒப்புதல் வந்தவுடன் நுழைவுச்சீட்டு தருகிறேன் என்றார். நான் காத்திருந்தேன் கிட்டதட்ட 90 நிமிடங்கள்.

பின்னர் டெல்ட்டா ஒப்புதல் தந்துவிட்டது, அடுத்து ஜூரிச் கிளம்பும் விமானம் இன்னும் 40 நிமிடத்தில் கிளம்புகிறது, உடனே பாதுகாப்பு சோதனைக்கு விரையுங்கள் என்றார். அவருக்கு மிக்க நன்றி தெரிவித்துவிட்டு பாதுகாப்பு சோதனைக்கு விரைந்தேன். சோதனையை முடித்த பின் விமானம் கிளம்பும் கேட் எங்கே என்று தேடினேன். அது கீழ்த்தளத்தில் இருந்தது, விமானம் இங்கிருந்து கிளம்பாது, பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் இருக்கும் இடத்தில் விடுவார்கள் என்று ஊகித்தேன். அது சரியாக இருந்தது. அங்கு ஒரு இந்தியர், பெண், பொது தொலைபேசியை பயன்படுத்த முயன்று கொண்டிருந்தார். அவரிடம் காலிங் கார்ட் எங்கே வாங்கினீர்கள் என்றேன். அவரோ மேலே உள்ளகடை ஒன்றில் வாங்கினேன், அது வேலை செய்யவில்லை என்றார். பேருந்து இப்போதே வந்துவிடுமா, காலிங் கார்ட் வாங்கிவர நேரமிருக்குமா என்று அங்கு கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன், அவரோ பேருந்து இப்போது வந்து உடனே கிளம்பிவிடும் எங்கும் செல்லாதீர்கள் என்றார். ஐந்து நிமிடத்தில் பேருந்து வந்தது.

எங்களை ஏற்றி அது விமான நிலையத்தின் ஒரு பகுதிக்குச் சென்றது, அங்கு நான் கண்ட காட்சி....

தொடரும்
வலைப்பதிவுகள் - புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் - 2

ஹிந்துவில் உதவி ஆசிரியராக இருக்கும் சித்தார்த் வரதராஜன் தன்னுடைய கட்டுரைகள், செவ்விகளை தன் வலைப்பதிவில் இடுகிறார். ராம்வாச்சர் நமக்கு பரிச்சயமான ஒன்றுதான், ஆனால் இது போன்ற ஒன்று ? . இண்டியன் எக்ஸ்பிரஸ் குறித்து ஒரு விமர்சன வலைப்பதிவு ஒன்றிருந்தது.இப்போதும் இருக்கிறதா என்பது தெரியாது. இப்படி ஊடகங்கள் குறித்த வலைப்பதிவுகளுக்குத் தேவையிருக்கிறது. ஏனெனில் ஊடகங்களில் மாற்று விமர்சனக் கருத்துக்களுக்கு இடம் அளிப்பது குறைவாக இருக்கிறது அல்லது இல்லவே இல்லை. ஹிந்துவின் ஈழப்பிரச்சினைகள் குறித்து விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் ஆசிரியருக்கு கடிதங்கள் எத்தனையை ஹிந்துவில் படித்திருக்கிறீர்கள். காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட பின் அவருக்கு ஆதரவாக சில வலைப்பதிவுகள் துவங்கப்பட்டன. அதில் ஒன்றில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு பல கட்டுரைகளும், செய்திக்குறிப்புகளும் வெளியாயின.

பல பேராசிரியர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தாங்கள் படிக்கும் கட்டுரைகள், நூல்கள் குறித்து எழுதுவதுடன் வழக்குகள், பாடத்திட்டங்கள் குறித்தும் எழுதுகிறார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக பாடத்திட்டம் இணையத்தில் அனைவருக்கும் கிடைக்கும் போது அக்கல்லூரி அல்லது பல்கலைகழக மாணவர்கள் மட்டுமின்றி பிறரும் பயனடைய முடிகிறது. ஒரு பேராசிரியர் தன்னுடைய வலைப்பதிவு, இணையதளம் ஆகியவற்றை ஒருங்கே அமைக்கும் போது அவரது எழுத்துக்களையும் பிறர் இறக்கிக் கொள்ள அனுமதிப்பார் என்றால் அதன் மூலம் அவரது எழுத்துக்கள் இன்னும் பலரைச் சென்றடையும். இப்போது இப்படி ஒரே இணையதளத்தில் தங்களது வலைப்பதிவையும், இணையப்பக்கத்தினையும் அளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு இரண்டு உதாரணங்கள்.

லெசிக் இன்று அறிவுசார் சொத்துரிமைத் துறையில் உலக அளவில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிபுணர்களில் ஒருவர். ஆனால் அவரது வலைப்பதிவில் அவர் தன்னுடைய கருத்துக்களை மட்டும் இடுவதில்லை. பிறர் விருந்தினர்களாக கருத்துக்களை பதிவு செய்யவும், அவற்றை விவாதிக்கவும் இடமளிக்கிறார். இன்னும் சிலர் கூட்டு வலைப்பதிவில் தத்தம் கருத்துக்களை இடுகின்றனர். இதன் மூலம் ஒரே வலைப்பதிவில் பலருடைய கருத்துக்களை நாம் அறிய முடிகிறது. இதற்கு ஒரு உதாரணம். சிலர் தங்கள் வலைப்பதிவில் பிறருடைய கட்டுரைகளையும் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், அது வெளியாகியிருக்கிறதுஎன்பதை பலருக்கும் தெரிவிக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால் தினசரி சில நூறு பேர், நான் கட்டுரை எழுதிய துறை சார்ந்தவர்கள், படிக்கும் வலைப்பதிவில் அது பற்றி குறிப்பும், சுட்டியும் இருக்குமானால் அந்த சில நூறு பேரின் கவனம் என் கட்டுரைக்கு கிடைக்கும். இதில் ஒரு சிலராவது கட்டுரையை கோரிப் பெறவோ அல்லது இறக்கிப் படிக்கவோ வாய்ப்பிருக்கிறது. இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன் தரும் ஒன்று.

இதை கொஞ்சம் வேறு விதமாக யோசித்தால் தமிழில் இணையத்தில் மட்டும் எழுதும் படைப்பாளிகளின் படைப்புகளைக் கவனப்படுத்த ஒரு வலைப்பதிவினை உருவாக்கலாம.அதற்கான தேவை இருக்கிறது. உதாரணமாக புதிதாக எழுதப்பட்ட சிறுகதைகளைக் கவனப்படுத்த ஒரு வலைப்பதிவு துவங்கலாம். இதில் சிறுகதை குறித்த தகவல்கள், ஆசிரியர் மின்னஞ்சல் முகவரி போன்றவைத் தரப்படலாம். இதன் மூலம் வெளியாகும், வெளியாகயுள்ள கதைகள் இன்னும் பலரின் கவனத்திற்கு வரும்.

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் தெரிவு செய்து படிக்கத்தான் முடியும். நமக்கு எதில் ஆர்வம் அதிகமோ அல்லது எதுமுக்கியம் என்று தோன்றுகிறதோ அதில் கவனம் அதிகம் செலுத்துவதில் போல்தான் வலைப்பதிவுகளையும் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு பிரச்சினைதான்.ஏனெனில் பல வலைப்பதிவாளர்கள் பல பதிவுகளுக்கு சுட்டிகள் கொடுத்தாலும் அவை அவர்களுடைய தெரிவினை பிரதிபலிக்கிறது. என்னுடைய ஈடுபாடுகளும் அவர்களதுஈடுபாடும் ஒன்றாக இருக்கத்தேவையில்லை. மேலும் ஈடுபாடு ஒன்றாக இருந்தாலும் இன்றுள்ள நிலையில் ஒருவருக்குத் பல வலைப்பதிவுகள் இருப்பதே தெரியாமல்போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

வேறு வார்த்தைகளில் சொன்னால் வலைப்பதிவுகளுக்கான தகவல் தொகுப்புகள் அல்லது தரவுதளங்கள் நானறிந்த வரையில் திருப்தியாக இல்லை. இங்கு ஒவ்வொருவரும் தத்தம் அறிவினையும், ஊகத்தினைக் கொண்டே தேட வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிரச்சினை என்னவெனில் பல வலைப்பதிவுகள் சுவாரசியாமாக இருந்தாலும் நமக்கு அவற்றால் பெரும் பயன் இராது. உதாரணமாக அமெரிக்காவில் உள்ள முற்போக்கு , பசுமைசிந்தனை கொண்ட வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவினைப் படித்தால் பல செய்திகள், அலசல்கள் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் புலிகளின் பாதுக்காப்பும், காட்டில் வாழும் சமூகங்களின் உரிமைகள் குறித்த சர்ச்சைக் குறித்து அவற்றிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியது மிக சொற்பமே. அதற்கு நான் இந்தியாவில் இது குறித்து யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால்தான் முடியும். இதற்கு செமினார், டவுண்ட் டு எர்த் போன்றவைதான் உதவும். வெறுமனே அறிந்து கொள்வதற்காக பலவற்றைப் படிக்கலாம், ஆனால் குறிப்பிட்ட விஷயம் அல்லது சர்ச்சை குறித்து படிக்கும் போது நாம் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. இல்லையெனில் தகவல் வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடவே முடியாது.

என்னைப் பொறுத்தவரை 50 அல்லது 60 வலைப்பதிவுகளை (ஆங்கில வலைப்பதிவுகளை) முக்கியமானவை என்று கருதி படிக்கிறேன். என் தெரிவு நான் ஆராய்ச்சி செய்யும் துறைகள் அல்லது விஷயங்கள் சார்ந்தது. இன்னும் பல அவ்வப்போது கவனத்திற்கு வந்தாலும் அவற்றை எப்போதாவதுதான் பார்க்கமுடிகிறது. எனக்குத் தேவையான செய்திகளுக்கு வலைப்பதிவுகளை ஒரு முதன்மையான ஆதாரமாகப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை, அலசல்களுக்கே பயன்படுத்துகிறேன். அதிலும் தொடர்ந்து படித்து வருவதால் எத்தகைய கருத்துக்கள் இடம் பெறும் என்பதை ஒரளவுக்கு ஊகிக்க முடியும், எத்தகைய நிலைப்படுகள் எடுக்கப்படும் என்பதையும் ஒரளவிற்கு ஊகிக்க முடியும். இவற்றை ஒரு முதல்கட்டமாக வேகமாக படித்துவிட்டு தேவை என்றால்தான் பின்னர் மீண்டும் படிப்பேன். மின்னஞ்சல் மூலமும், இணையதளங்கள் மூலமும் கிடைக்கும் செய்திகள், அலசல்கள் இருப்பதாலும், தேவையானால் இன்னும் தகவல்கள் பெற முடியுமென்பதாலும் வலைப்பதிகளில் தரப்படுவதில் எது முக்கியமோ அதை மட்டும் கருத்தில் கொள்வேன்.

உதாரணமாக ஒரு வழக்கினைப் பற்றிய அலசல்களுக்கு வலைப்பதிவுகளை நான் பயன்படுத்தினாலும், பிற தளங்களில் உள்ள அலசல்களையும் கருத்தில் கொள்வேன். பலவற்றை அச்சுப்பிரதியெடுத்துவிட்டு பின்னர் படித்து விடுவேன் அல்லது தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வேன்.

வலைப்பதிவுகள் தனி நபர் பதிவுகள் என்பதைத் தாண்டி இன்று ஒரு கூட்டுசெயல்பாட்டின் ஒரு பகுதி என்ற நிலையை எட்டி விட்டன. இங்கு குழுமம் அல்லது சமூகம் (community) என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்று community of progressive bloggers , community of green bloggers என்று வகைப்படுத்தி வலைப்பதிவுகளைச் சுட்ட முடியும். இது தவிர தனிப்பட்ட வலைப்பதிவுகள் மூலம் கூட்டுச் செயல்பாடுகளுக்கு உதவுவதும், வலைப்பதிவுகளையே கூட்டுச்செயல்பாட்டிற்க்கான ஒரு களமாக பயன்படுத்திக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இது 2004ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மிகத் தெளிவாகத் தெரிந்தது. எனவேவலைப்பதிவுகளைப் பயன்படுத்தி ஒரு இயக்கம் அல்லது ஒரு பொதுக்காரியத்திற்க்காக ஆதரவு திரட்டுவது இனி ஒரு வாடிக்கையான ஒன்றாக மாறிவிடும்.

இதைப் படிக்கும் உங்களில் என்னை விட அதிக தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களுக்கு வலைப்பதிவுகளின் வேறு பல பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் தெரிந்திருக்கும்.அவற்றைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வலைப்பதிவுகளில் புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் பற்றி விரிவாக எழுத திட்டமிட்டு தகவல்கள், கட்டுரைகள் திரட்டத் துவங்கினேன். சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை. இருப்பினும் இந்த இரு குறிப்புகளையும் ஒரு அறிமுகமாக எழுதியிருக்கிறேன். இன்னும் விரிவான அலசல்களுக்கும், ஆய்விற்க்கும் இடமிருக்கிறது.
வலைப்பதிவுகள்-புதிய பரிமாணங்களும், சாத்தியக்கூறுகளும் - 1

தினசரி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் மின்னஞ்சல்களில் சில வலைப்பதிவுகளிலிருந்துசெய்திகள் தருபவை. அவற்றிலிருந்து அந்த வலைப்பதிவுகளில் புதிதாக இடப்பட்டுள்ளவற்றைஅறிந்து கொள்கிறேன். இதுதவிர அவ்வவ்போது நண்பர்கள், விவாதக்குழுக்களிலிருந்து வரும்மின்னஞ்சல்களிலும் வலைப்பதிவுகளின் சுட்டிகள், தகவல்கள் இடம் பெறுவதுண்டு. இன்று வலைப்பதிவுகளை வெறும் தனிப்பட்ட நபர்களின் பதிவுகளாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவை ஒரு மாற்று செய்தி அமைப்புகளாக உருவெடுத்துள்ளன. இன்னொருபுறம் வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வலைப்பதிவுகளுக்கு இடம் தருகின்றன. உலக வங்கியின் இணைய தளத்தில் ஒரு வலைப்பதிவிற்கு சுட்டி இருக்கிறது. அதில் எழுதுபவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதினாலும், அவர்களின் பதிவுகளுக்கான தேவையை அந்த நிறுவனம் அங்கீகரித்திருக்கிறது.


கட்ரீனாவின் பாதிப்புகளா, சுனாமியின் பாதிப்புகளா, ஈராக்கின் மீதான படையெடுப்பா, இல்லைநேபாளத்தில் ஜனநாயக உரிமைகள் பறிப்பா - இது போல் எந்த ஒரு முக்கியமான நிகழ்வைப்பற்றியும் இன்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி அமைப்புகள் வெளிக்கொணராதவிஷயங்களை விவாதிக்க, உலகிற்கு எடுத்துச்சொல்ல வலைப்பதிவுகள் பயன்படுகின்றன. ஈராக்கின்மீது போர் தொடுக்கப்பட்டபோது பாக்தாத்திலிருந்து எத்தனையோ இடையூறுகளைத் தாண்டிஉண்மைகளை எடுத்துரைத்த அந்த வலைப்பதிவாளரை நாம் மறக்க முடியுமா. அண்மையில் கட்ரீனாவின் விளைவுகளையும், அமெரிக்க அரசின் மீதான விமர்சனங்களையும் அறிய எனக்குவலைப்பதிவுகள் உதவின. ஐரோப்பாவில் இருந்து கொண்டு என்னால் பல அமெரிக்க தொலைகாட்சிநிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது. ஆனால் உலகெங்கும் இணைய வசதி இருந்தால் வலைப்பதிவுகள்மூலம் ஊடகங்கள் சொல்லாதவற்றை அறிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான வலைப்பதிவுகளில் வெறும் செய்தி மட்டும் இருப்பதில்லை, அலசல்கள் இருக்கின்றன.பிற செய்திகளுக்கு சுட்டிகள், தகவல்களுக்கு சுட்டிகள் அல்லது சான்றுகள், இவை தவிர வலைப்பதிவாளர்களின் கருத்துக்கள், பின்னூட்டங்கள் இருக்கின்றன. இதன் மூலம் நான் National Public Radioல் ஒலிபரப்பான செவ்விகள் முதல், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரை பலவற்றை அறிய முடிகிறது. படிக்க அதிக நேரம் இல்லாத போது அலசலகளிலிருந்து ஒரு பூர்வாங்க புரிதலைப் பெற முடிகிறது. பின்னர் இடப்படும் பதிவுகளிலிருந்து நிகழ்வுகளின் தொடர்ச்சியை, அவற்றிற்கான எதிர்வினைகளை அறிய முடிகிறது. எனவே என் புரிதல் வளப்படுவதுடன், நான் ஒரு சில ஊடகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதில்லை என்பதும் தெளிவாகிறது.

சில மாதங்கள் முன்பு அமெரிக்க உச்சநீதிமன்றம் சகபரிமாற்றம் குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் வலைப்பதிவுகளில் அது குறித்து பதிவுகளும், விவாதங்களும் இருந்தன. அது மட்டுமின்றி தீர்ப்பிற்கு சுட்டிகள், வழக்கு குறித்த பின்ணனித் தகவல்கள் அல்லது அதற்கான சுட்டிகள் இருந்தன. ஒரு ஆய்வாளன் என்ற முறையில் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் ஒரு முக்கியமான தீர்ப்பினை விவாதிக்க பிற ஊடகங்களைப் பயன்படுத்துவதை நான் அறிவேன், அதே சமயம் அவர்கள் தத்தம் அல்லது பிறரது வலைப்பதிவுகளில் எழுதும்போது நமக்கு பல்வேறு கருத்துக்களை உடனே அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஒரு வசதி என்னவெனில் பின்னர் அவர்கள் இது குறித்து எழுதும் போது ஏற்கனவே எழுதியதற்கு சுட்டிகள், இப்பதிவு(கள்) வேறு எந்தெந்தப் பதிவுகளால்சுட்டப்படுகின்றன என்பதையும் தருவதால் படிப்பவர் தனியே இவற்றை குறித்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இத்தீர்ப்பு குறித்து ஒரு பேராசிரியர் தான் ஸ்லேட்டில் (slate) எழுதியதை வலைப்பதிவிலும் இட்டிருந்தார். இத்தீர்ப்பு நிச்சயமாக சட்டத்துறை ஜர்லன்களில், லா ரிவ்யுக்களில் விவாதிக்கப்படும். வலைப்பதிவுகளில் நடைபெறும் விவாதங்கள், இடம் பெறும் கருத்துக்கள் இவற்றிலும் எடுத்துக்காட்டப்படும் அல்லது சுட்டப்படும் என்று ஒருவர் எதிர்பார்த்தால் அதில் தவறில்லை. ஏனெனில் இன்று பேராசிரியர்கள், நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் பலர்வலைப்பதிவுகளை தங்கள் கருத்துக்களைப் பதிய ஒரு முக்கியமான வெளியீடாகப் பயன்படுத்துகிறார்கள்.

தொடரும்
பிபாஷா பாசு பிள்ளைத் தமிழ்


இணைய மடலாடற்குழு ஒன்றில் நடந்த இந்த விவாதம் பிபாஷா பாசுவும், தமிழ் வெகுஜனக் கலாச்சாரமும் என்ற ஆய்வறிக்கையிலிருந்து எடுத்து இங்கு தரப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த, அவ்வறிக்கையை எழுதிய ராஷ்மி ஜெயராமனுக்கு என் நன்றிகள்.தேவையற்ற மின்னஞ்சல்களைத் தவிர்க்கும் பொருட்டு மின்னஞ்சல் முகவரிகள் இங்கு தரப்படவில்லை.


ஆகஸ்ட் 8 2004
ரமேஷ் வைத்தியநாதன்
அன்புள்ள சக நாயர்களேவணக்கம். நீங்கள் என் பின் நவீனத்துவ சங்கக் கவிதைகளுக்கு தந்த ஆதரவு காரணமாக பிபாஷா பாசு பிள்ளைத் தமிழ் எழுத உத்தேசித்திருக்கிறேன். வேணும் உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும்
இவண்
ரமேஷ் வைத்தியநாதன்
(ர.வை)

ஆகஸ்ட் 9 2004
வேதாந்தி வெங்கட் ராமன்
வாருமைய்யா வாரும், எழுதுமையா எழுதும். பிபாஷா தேசிய யோகப்பியாச போட்டிகளில் தங்க மெடல் வென்றவர். அவர் முகத்தில் தெரியும் அந்த தேஜ்ஸ் பல ஆண்டுகள் யோகாப்பியாசம் செய்ததனால் வந்தது.நீர் அதைப் பற்றியும் எழுத வேண்டும்
வே.வெ

அருணாச்சலம் சேஷாச்சலம்
எனக்கு பிள்ளைத்தமிழ் என்று ஒன்று இருப்பதே மிச்சிகனில் பொறியியல் படிக்கும் போதுதான் தெரியும்.இரண்டு மூன்று பிள்ளைத்தமிழ் படித்தேன். ஒன்றும் புரியவில்லை. இப்போது நம் அழகன் பிபாஷாவின் வாழ்க்கை வரலாற்றை பிரமிக்க வைக்கும் பிபாஷா என்று ஆனந்த விகடனில் எழுதவிருக்கிறார். ர.வைக்கு அது உதவும்.
அ.சே

ரவி ஸ்ரீநிவாஸ்
ர.வை, நான் பிள்ளைத்தமிழ் படித்து வெகுகாலமாகிவிட்டது. வெகுஜனக் கலாச்சாரத்தின் ஆர்வலன, ஆய்வாளன் என்ற முறையில் உங்கள் பிள்ளைத் தமிழை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

ர.ஸ்ரீ

ஆகஸ்ட் 10 2004
ர.வை
ஐயா வேதாந்தி, உம் தகவலுக்கு நன்றி. பிபாஷாவின் அழகுக்கும் அதுதான் காரணமோ. நானும் 10 வயது முதல் யோகாப்பியாசம் செய்கிறேன், முகத்தில் அசடுதான் வழிகிறது. எது எப்படியோ அவர் யோகாப்பியாசம் செய்யும் புகைப்படங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

ஜெயகிருஷ்ணன்
ர.வை, உமக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றும். :). சரி பிள்ளைத்தமிழ் இலக்கணம் தெரியுமா.சீராக சீர் தட்டாமல், தளை தட்டாமல் எழுத உம்மைப் போன்றவர்களுக்கு உதவும் என்றுதான்பிள்ளைத்தமிழும், யாப்பும் என்று 15 கட்டுரைகளை அரசமரத்தில் போட்டிருக்கிறேன். பிரயோசனப்படுகிறதா என்று படித்துவிட்டு எழுதவும்

ஜெகி

ஆகஸ்ட் 14 2004

மல்லிகை சீனிவாசன் (ம.சீ)

ர.வை, ஏற்கனவே எம்.ஜி.ஆர் பிள்ளைத்தமிழ், கலைஞர் பிள்ளைத்தமிழ், பெரியார் பிள்ளைத்தமிழ் இருக்கிறது. அடுத்த வாரம் ராமதாஸ் பிள்ளைத்தமிழ், வை.கோ பிள்ளைத்தமிழ் நூல்கள் வெளியாக உள்ளன. எனவே சீக்கிரம் எழுதி முடியும். இப்போதுதான் தேகம் பார்த்தேன். வலைப்பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ்
ர.வை கீழ்க்கண்ட கட்டுரைகளை சமீபத்தில் படித்தேன். உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பவாஇரண்டிலும் பிள்ளைத்தமிழ் பற்றி குறிப்புகள் இருக்கின்றன

Duraisamy Damodaran, Ranjani Ramakrishnan : PillaiThamizh and Politics in Tamil Culture:From 1100 A.D to 2000 A.D - Review of Culture, History and Society Vol 12 No 4, Pp450-472

Ramasamy Narayanan, Yeshiko Kow: Sweet Lullabies in Two Cultures: A ComparativeStudy - Journal of Asian Cultural Studies Vol 8 No 2 67-92

ஜெயஸ்ரீ ராமநாதன்
ர.வை, எங்கு இருக்கிறீர்கள். டி.சியிலா இல்லை டெக்ஸாஸிலா. பாஸ்டன் பக்கம் வந்தால் வீட்டிற்குவரவும்.

ஆகஸ்ட் 18 2004

ர.வை
ம.சீ - தகவலுக்கு நன்றி
ர.ஸ்ரீ - அனுப்பாமலிருந்தால் நன்றியுடையவனாக இருப்பேன் :).அனுப்பினால் :(
ஜெயஸ்ரீ - நான் இப்போது இருப்பது சன்னி வேலில், கலிபோர்னியாவில். பாஸ்டன் எந்த நாட்டில்இருக்கிறது :)


ஆகஸ்ட் 22 2004
ர.வை
பிபாஷா பாசு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், விடியோ பார்த்தேன். பிரமிக்க வைக்கும் வளைவுகள், வில்லாக வளைக்கிறார் உடலை. டைம்ஸ் வீடியோ வெளியீடு. என்ன உடல் என்ன அசைவுகள்.

ர.ஸ்ரீ
ர.வைஏமாந்து விட்டீர்கள். அந்த பிபாஷா வேறு, நடிகை பிபாஷா வேறு. இந்த பிபாஷவை எனக்குத் தெரியும். என்னுடன் விபாஸனா தியானப் பயிற்சி படித்தார்.


ஆகஸ்ட் 24 2004
ஜெயஸ்ரீ ராமநாதன்

ர.வை, ஏமாந்தது என் வீட்டுக்காரரும்தான். மநுஷன் காசு கொடுத்து வீடியோவை வாங்கியிருக்கிறார். அப்புறம் வீட்டில் வந்து சொன்ன சால்ஜாப்புகளைக் கேட்டால் சிரிப்பும், கோபமும் வந்தது.
ர.ஸ்ரீ, நீங்கள் கொடுத்துவைத்தவர் :)

ஆகஸ்ட் 27 2004
ர.வை
ஒரு வழியாக பிள்ளைத்தமிழ் எழுத பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஒரு மூடில் நாற்பது வரிகள் எழுதியாச்சு. ஜெகி அண்ணாவிற்கு அனுப்பி கேட்கவிருக்கிறேன். நான் பிள்ளைத்தமிழ் எழுதுவது குறித்து எழுத்தாளர் ராஜ்மோகன் ஏதோ சொல்லியிருக்கிறாரமே. என்னதான் சொல்லியிருக்கிறார்

ஆகஸ்ட் 30 2004
ஜெயஸ்ரீ ராமநாதன்
ர.வை , ராஜ்மோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கேட்காதீங்க: நீங்க பாட்டு(க்கு) எழுதுங்க, படிக்க நாங்க இருக்கிறோம் :)

மல்லிகை சீனிவாசன் (ம.சீ)
ராஜ்மோகன் பிள்ளைத்தமிழ் என்கிற வடிவத்தை அண்ணாவிற்கும்,கலைஞருக்கும், பெரியாருக்கும்பயன்படுத்தி திராவிட இயக்கத்தினர் தமிழுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று முற்றத்தில் புல்ம்பித்தள்ளியிருக்கிறார். பிள்ளைத்தமிழ் என்பது தெய்வத்திற்கும், உயர்ந்தோருக்கும் உடையதாம்.மேட்டுகுடி வன்முறைதான் அவர் கருத்துக்களில் வெளிப்படுகிறது. இதை எதிர்ப்பதற்காவது ர.வைபிள்ளைத்தமிழ் முயற்சியை தொடர வேண்டும். என் அபிமான நடிகை ஐஸ்வர்யா ராய் என்றாலும்இந்தக் கலாச்சார வன்முறையை எதிர்க்கும் முயற்சியான பிபாஷா பாசு பிள்ளைத்தமிழுக்கு என்ஆதரவு உண்டு

செப்டம்பர் 2 2004
ரவி ஸ்ரீநிவாஸ் (ர.ஸ்ரீ)

முற்றத்தில் நான் அதற்கு பதில் கொடுத்திருக்கிறேன். இது போன்ற ஒரு கருத்தை டேவிட் பாஸ்கரன் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய போது அதை மறுத்துஎழுதினேன். இப்போது முற்றத்தில் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது போன்ற கருத்துக்களைஎதிர்ப்பதற்காக ஜூலியா ராபர்ட்ஸ் பிள்ளைத்தமிழ் எழுதலாமா என்று யோசித்து வருகிறேன்.

ஜெயகிருஷ்ணன்
ர.வை உங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இலக்கணம் பிடிபடவில்லை, குழந்தையைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், நானிருக்க பயமேன்

நவம்பர் 14, 2004

ஜெயக்குமார் ராஜசேகரன்
ரமேஷ் வைத்தியநாதன் எழுதிக் கொண்டிருக்கும் பிபாஷா பிள்ளைத்தமிழை இணையத்தில் போட்டால்என் போன்ற ரசிகர்களுக்கு உதவும். பிளாஷைப் பயன்படுத்தி பிபாஷாவைப் பற்றிய அனைத்து தகவல்கள் கொண்ட ஒரு இணையத்தளம் உருவாக்கிவருகிறோம். உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். எழுத்தாளர் சாரு நிவேதிதா பிபாஷா பற்றி உயிர்மையில் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அது எங்கு கிடைக்கும்


டிசம்பர் 2, 2004
சக நாயர்களே
பிபாஷா பிள்ளைதமிழ் 200 வரிகள் எழுதிவிட்டேன். இன்னும் 800 வரிகள் எழுதவேண்டும். மார்ச் 2005ல் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஜெகி அண்ணாவிற்கு மிக்க நன்றி.
ர.வை

ஏப்ரல் 5 2005
ஜெயஸ்ரீ ராமநாதன்
ர.வை
என்ன ஆச்சு உங்களுக்கு, மின்னஞ்சல் அனுப்பினேன். பதிலில்¢லை. பிபாஷாவில் ரொம்ப பிஸியோ :)எது எப்படியோ சீக்கிரம் பதில் போடுங்க, நல்ல செய்தி சொல்லுங்க

ஏப்ரல் 10, 2005
ஜெயஸ்ரீ, சக நாயர்களே
சில அவசர வேலைகள் காரணமாக உடனே எழுத முடியவில்லை. அடுத்த வாரம் விளக்குகிறேன்.


ஏப்ரல் 15, 2005
சக நாயர்களே
ஏப்ரல் 5ம் தேதி எனக்கும் லிண்டா கோல்ட்ஸ்மித்திற்கும் திருமணம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்தது. மிக அவசரமாக திருமணம் நடைபெற்றதால் உங்களில் யாரையும் அழைக்க முடியவில்லை. இந்தியா சென்று முறைப்படி திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தோம். லிண்டாவின் உடல் நிலை சரியில்லை. இது காதல் திருமணம்.
ர.வை

ஏப்ரல் 18 2005
வாழ்த்துச் சொன்ன அன்பர்களுக்கு நன்றிகள். பிபாஷா பிள்ளைத்தமிழ் பாதியில் நிற்கிறது. குட்டி பிபாஷா விரைவில் வந்துவிடுவாள். அப்புறம் நிஜமாகவே பிள்ளைத்தமிழ் எழுதினால் போச்சு :)
ர.வை

ஏப்ரல் 20, 2005

ஜெயஸ்ரீ ராமநாதன்
ர.வைஅப்படியா சங்கதி, அதுதான் அவசரமாகத் திருமணமா. பிள்ளைத்தமிழ் எழுதப் போக பிள்ளைப் பிறந்த கதையாச்சு என்று புது மொழி இப்போ உண்டாச்சு :)

-----------------------------------------------------------------------------------------------
ர.வை கைவிட்ட பிள்ளைத்தமிழை எடுத்து ஒரு குழு திறவூற்று மூல அடிப்படையில் புதிய பிள்ளைத்தமிழ் எழுத முயன்றது. அதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இப்போது மூன்று பிள்ளைத்தமிழ்கள் உருவாகி வருகின்றன. திறவூற்று மூல அடிப்படையில் எழுதப்பட்ட முதல் பிள்ளைத்தமிழ் ஆகஸ்ட் 25,2005ல் பாஸ்டனில் வெளியிடப்பட்டது.