சுஜாதாவைக் கேட்காதீர்கள்

குமுதத்தில் சுஜாதாவைக் கேளுங்கள் பகுதியிலிருந்து ஒரு கேள்வி-பதில்

கலாமுடன் உலக நாடுகள் சுற்றுப் பயணம் சென்றவர்கள் ‘நானோ டெக்னாலஜி’ பற்றித் தெரிந்து கொண்டார்களாம். அது என்ன நானோ டெக்னாலஜி?
_ தி. ராஜி, திருநெல்வேலி.

நானோ என்பதற்கு அதி நுட்பமான என்று பொருள். மைக்ரோ என்பது பத்து லட்சத்தில் ஒரு பகுதி. நானோ அதைவிட ஆயிரம் மடங்கு நுட்பமான சில்லுகளும் அதற்கொத்த உதிரிபாகங்களும் கொண்டு சாதனங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பம். இந்த டெக்னாலஜி மூலம் எறும்பு சைஸில் ரோபாட்டுகள் செய்து நம் உடலுக்குள் அனுப்பி ரிப்பேர் செய்யலாம். பாக்டீரியா சைஸில் ஒரு கெமிஸ்ட்ரி ஆராய்ச்சி சாலையையே அனுப்பி பெட்ரோல் கூட உற்பத்தி செய்யலாம் என்கிறார்கள். அமெரிக்கா எம்.ஐ.டி.யின் ஏஐ (செயற்கை அறிவு) ஆராய்ச்சி சாலையின் டைரக்டர் ராட்னி ப்ரூக்ஸ் எழுதிய கட்டுரையைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும். சிலிக்கான் சிப்களையும் டி.என்.ஏ. ஜீனோம்களையும் கலக்கும் பாக்டீரியல் ரோபாட்டுகள் ஆராய்ச்சி. மரத்தை நட்டு மரமாகி அதை வெட்டி பாளங்களாக்கி மேஜையாக மாற்றுவதற்குப் பதில் மேஜையாகவே வளரக்கூடிய விதைகளைத் தயாரிக்க முயற்சி செய்கிறார்கள்.
அது போல் கண்ணுக்குள் சிலிக்கன் சிப் ஒன்றை வைத்து நேரடியாக மூளைக்கு காட்சி செய்திகள் அனுப்பும் ஆராய்ச்சி நடக்கிறது. இந்த டி.என்.ஏ., சிலிக்கன் திருமணம் நானோ டெக்னாலஜி மூலம்தான் சாத்தியம். ஐம்பது வருஷத்தில் மனிதனும் மெஷினும் இரண்டறக் கலந்து விடுவார்கள்.
---------------------------------------------------------------------------------

சுஜாதா குறிப்பிடும் அந்தக் கட்டுரை 2002ல் எழுதப்பட்டது. ஆனால் அதிநுண் தொழில்நுட்பம் மூலம் இதெல்லாம் சாத்தியமா என்பதையே கேள்விக்குட்படுத்துவோரும் இருக்கிறார்கள். செயற்கை அறிவாற்றலில் கணினி பிரக்ஞையுள்ள மனித மனதின் வளர்ச்சியை அடைந்து விடும், மனித மூளையைப் போன்ற அல்லது அதற்கு ஒப்பான கணினியை உருவாக்கமுடியும், இது மனித மனம்,மூளை போல் சிந்திக்கும்த் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். இது Strong AI
என்று அழைக்க்ப்படுகிறது.

இதே போல் அதி நுண் தொழில்நுட்பத்திலும் ஒரு சாரார் ராட்னி பூருக்ஸ் போல் அதி நுண் தொழில் நுட்பம் மூலம் இவையெல்லாம் சாத்தியம் என்று கருதுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினர் இது குறித்து அவநம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் இன்னும் அறிவியல் புனைகதை என்ற நிலையில் இருக்கின்றன. அதி நுண் தொழில் நுட்பம் மூலம் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரமுடியும், அதற்காக அதீத எதிர்பார்ப்புகளைக் உண்டாக்கத் தேவையில்லை என்று கருதுகிறார்கள்.

Critics are not so optimistic. Besides the usual doomsday predictions of self-assembling nano-robots running amok, at least one well-placed critic challenges the feasibility of realizing the ultimate vision. Nobel laureate Richard Smalley is no doomsayer, since he co-founded one of the most promising nanotech companies (Carbon Nanotechnologies). Nevertheless, Smalley's poignant criticism is that molecular auto-assembly, as proposed by Feynman and Drexler, is just too ambitious. In particular, Smalley says that the "fat-" and "sticky-finger" problems will prevent the success of the necessary auto-assembly steps. Others claim that such fine-scale materials will be too brittle, lacking the strength for macroscopic projects. Still others charge that the second law of thermodynamics will foil the ultimate vision (nanoscale friction generates too much heat, essentially making it impossible to scale up from nano-sized to macroscopic devices).

அதிநுண் தொழில்நுட்பத்தின் சமூக, சூழல் தாக்கங்கள், அத்தொழில்நுட்பம் யார் கையில் இருக்கிறது, யார் இதன் போக்கினைத் தீர்மானிக்கிறார்கள் என்பது குறித்தும் இன்று பரவலாக விவாதம் நடக்கிறது. ஆனால் சுஜாதாவின் பதில் ஒரு ஜல்லியடிக்கும் பதிலாக இருக்கிறது.

பத்து வாக்கியங்களில் இதைவிடத் தெளிவான பதிலைத் தரமுடியும். அப்துல் கலாம் அதி நுண் தொழில் நுட்பம் குறித்து பேசியிருக்கிறார், அதன் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.சுஜாதா அதையாவது சுட்டிக் காட்டி எழுதியிருக்கலாம்.

காலச்சுவட்டில் வெங்கட் அதிநுண் தொழில் நுட்பம் குறித்து எழுதினார். அது தொடர்ந்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. வெங்கட் காலச்சுவட்டில் தொடர்ந்து அதி நுண் தொழில் நுட்பம் குறித்து எழுத வேண்டும். அல்லது தன் வலைப்பதிவிலாவது எழுத வேண்டும்.

இத்தொழில் நுட்பத்தின் சமூக, சூழலியல் தாக்கங்கள், இன்னும் பிற அம்சங்கள் குறித்து நான் படித்து வருகிறேன். இது குறித்து படிக்க என்று ஒரு பட்டியல் தரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

அண்மையில் நான் படித்த ஒரு சுவாரசியமான, முக்கியமான கட்டுரை* இத்தொழில்நுட்பத்தினை ஆதரிப்போர் அதை எப்படி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறது. ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்க எப்படி முயற்சி செய்தார்கள் என்பதை விவரிக்கிறது. தொழில்நுட்பத்தினை முன்னிலைப்படுத்த அது குறித்து மிகவும் சாதகமாக பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது. இங்கு சமூகத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் உள்ள உறவு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. செலவழிக்க ஒதுக்கப்படும் தொகையில் எத்தகைய ஆய்வுகளுக்கு (உ-ம் ராணுவ பயன்பாடு) எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது, அது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

லட்சக்கணக்கில் விற்கும் வார இதழில் ஒரு முக்கியமான தொழில் நுட்பம் குறித்து உருப்படியாக ஒரு பத்து வாக்கியங்கள் கூடவெளியாவதில்லை, ஒன்றை விளக்கும் போது வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்கள் தரப்படுவதில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.அதி நுண் அளவு என்பதை ஒரு படம் மூலம் விளக்கியிருக்கலாம்.

ஆனால் இங்கு அது குறித்த அக்கறை பதில் தருபவருக்கும், பத்திரிகையின்ஆசிரியர் குழுவினருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. சுஜாதா எழுதியதிலிருந்து பலவற்றை unlearn செய்தால்தான் கொஞ்சமாவது சரியான புரிதல் கிடைக்கும். அதில் இதுவும் ஒன்று.

*Will small be beautiful? Making policies for our nanotech future -P. McCray-History and Technology- June 2005, vol. 21, no. 2, pp. 177-203

17 மறுமொழிகள்:

Blogger பத்மா அர்விந்த் மொழிந்தது...

ரவி
இந்த பதிவிற்கு நன்றி. பெரும்பாலான சமயங்களில் வாரப்பத்திரிக்கைகள் அறிவியல் பற்றி எழுதாமல் இருப்பதே பரவாயில்லை போல இருக்கிறது.
நானும் இதை ஒத்து சிந்தித்து கொண்டிருந்தேன்.

3:18 PM  
Blogger Venkat மொழிந்தது...

ரவி - நன்றி. வழக்கம்போல பிரமிப்பூட்டும் வேலையை சுஜாதா திறம்படச் செய்திருக்கிறார். வாஸ்து மாதிரி, பெங்சூயி மாதிரி நானோவையும் சகலரோக நிவாரணியாகக் காட்டியிருக்கிறார்.

நானோ-வின் சமூக பாதிப்புகள் குறித்த பிரக்ஞையும் முக்கியம். கட்டாயம் எழுதுங்கள்.

நான் காலச்சுவட்டில் எழுதிக்கொண்டிருக்கிறேன் - இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை. அடுத்த கட்டுரை இன்றிரவுக்குள் முடிக்க வேண்டும். இந்த format மிகவும் சிக்கலாக இருக்கிறது.

ஸ்மாலி - ட்ரெக்ஸ்லர் வாதம் மிகப் பிரபலமானது. ஸ்மாலி மட்டும் இல்லையென்றால் ட்ரெக்ஸ்லர் இதை வைத்து அரசியல் கோபுரம் கட்டியிருப்பார்.

தொடர்பான சில உதிரியான எண்ணங்களை நானும் நாளைக்கு எழுதுகிறேன்.

3:27 PM  
Blogger டிசே தமிழன் மொழிந்தது...

இரவி நல்லதொரு பதிவு. நன்றி.

3:34 PM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

/லட்சக்கணக்கில் விற்கும் வார இதழில் ஒரு முக்கியமான தொழில் நுட்பம் குறித்து உருப்படியாக ஒரு பத்து வாக்கியங்கள் கூடவெளியாவதில்லை, ஒன்றை விளக்கும் போது வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்கள் தரப்படுவதில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்/ :-(
Agree totally

3:37 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

பதிவிற்கு நன்றி! எப்படியோ பக்கங்கள் நிறைந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள பத்திரிக்கைகளை என்னவென்பது!

4:28 PM  
Blogger Balaji-Paari மொழிந்தது...

RK! அதுவும் "பிரபலமான" எழுத்தாளர் என்றால் கேட்கவும் வேண்டுமா??

5:17 PM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

ரவி,
Nano-technology என்பது ஒரு பெரிய சப்ஜெக்ட் ! அதை 10 வாக்கியங்களில் விளக்க முடியும் என்று தோன்றவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் உள்ள தகவல்கள் ஒரு பாமரருக்கு எந்த அளவு போய்ச் சேரும் என்று தெரியவில்லை.

குமுதத்தில் கேள்வி கேட்டவருக்கு இந்த பதில் 'பரவாயில்லை' என்பது என் கருத்து ! படம் போட்டிருக்கலாம். மேலும், சமரசம் செய்து கொண்டு தான் சுஜாதா இப்பகுதியில் எழுத வருகிறார் என்பதும் தெரிந்ததே !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

5:03 AM  
Blogger துளசி கோபால் மொழிந்தது...

அறிவியல்- குமுதம் ஊஹூம்... என்னமோ சரியில்லைபோல இருக்கே!

நடிகை- குமுதம் இது சரியா வருதே!

என்றும் அன்புடன்,
துளசி.

6:11 PM  
Anonymous குங்குமம் மொழிந்தது...

எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் குமுதம் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யும். ஏற்கனவே ஆனந்த விகடனை விட இத்தனை காலம் 1 ரூபாயாவது கம்மியாகத் தான் விலையை வைத்து கொண்டிருந்தது. குமுதத்தின் பக்கங்களும் வழ வழ காகிதங்களில் வந்து கொண்டிருக்கும். இப்போதோ விகடனை விட 30 சதவிகிதம் கம்மியான பக்கங்களில், ஆனால் அதே விலையில் குமுதம். ஏற்கனவே குமுதத்தில் வந்து கொண்டிருந்த 'அனைத்து' அம்சங்களுடன் கூடவே, சாதாரணமாக ஆனந்த விகடனில் இருக்கும் அம்சங்களுடன் வந்து கொண்டிருக்கும் விகடனை மீண்டும் குமுதம் விற்பனையில் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே. வேண்டுமானால் 'அதிகம் பேர் படிக்கும் பத்க்டிரிகை', 'அதிகம் பேர் ஓசியில் வாங்கிப் படிக்கும் பத்திரிகை' என்றெல்லாம் கூறி சமாதானப் பட்டுக் கொள்ள வேன்டியது தான். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், விகடனில் மதன் இருக்கிறாரா, இதற்கும் கூப்பிடு, விகடனில் சுஜாதாவா, இங்கேயும் கூப்பிடுப்பா அவரை, இப்படியே போய்க்கிட்டிருக்கு. கூடிய சீக்கிரம் குமுதத்துடன் 4D படங்களையும் வெளியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சரி, என்ன இருந்தாலும் அறிவியலை எளியவருக்கும் தமிழில் கொண்டு சென்றது சுஜாதா தான் என்பதில் உஙளுக்கு எதுவும் மறுப்பு இருக்கிறதா ரவி? ஏனென்றால் இந்த ஒரேயொரு கேள்விக்கான பதிலில் அவர் (கொஞ்சம்) சொதப்பியிருப்பதால் அவரிடம் கேள்வியே கேட்கக்கூடாது என்று கூறூவது டூ-மச் -ஆகத் தெரியவில்லை?

12:49 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

பின்னூட்டங்களுக்கு நன்றி.வெங்கட் என்ன எழுதப்போகிறார் என்பதை அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.இப்படி ஒவ்வொரு இதழிலும் இரண்டு பக்கம் எழுதுவதை விட ஒரு இதழில் 12 அல்லது 10 பக்க கட்டுரையாக அல்லது தொடர்ச்சியாக இரண்டு இதழ்களில் எழுதுவது எழுதுபவருக்கும், படிப்பவருக்கும் சிரமம் இல்லாத ஒன்று.

சுஜாதா உருப்படியாக 10 வாக்கியங்கள் எழுதியிருந்தல் பிரச்சினை இல்லை.ஆனால் அவர் அறிவியலை அறிமுகப்படுத்துகிறேன் என்று எழுதுகிறவையெல்லாம் பெரும்பாலும் இப்படித்தான்
இருக்கின்றன.வெங்கட் சுஜாதாவின் அறிவியல் எழுத்து நடை பற்றி தன் பதிவொன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழில் அறிவியலை அனைவரும் புரிந்தும் கொள்ளும் வகையில்
தரும் முயற்சிகள் சுஜாதா எழுதத் துவங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றன. இப்போதும் பலர் எழுதுகிறார்கள்.ஆனால் அவர்கள் எழுத்துக்கள் சுஜாதா எழுதியது போல் பிரபலமாகவில்லை, வார இதழ்களும் இடம் ஒதுக்குவதில்லை. திரிகூட சுந்தரம்,ஏ.என்.சிவராமன், பெ.நா.அப்புசாமி,வைத்தியண்ணா,கே.என்.ராமச்சந்திரன், தமையேந்திரன்,மணவை முஸ்தபா,நெல்லை முத்து என்று பலர் தமிழில் அறிவியல்-தொழில் நுட்பம் குறித்து சாதாரண வாசகரை மனதில் கொண்டு எழுதியிருக்கிறார்கள்.தினமணி ஒரு காலகட்டத்தில் அறிவியல் மணி என்ற வார இணைப்பினை வெளியிட்டது.அதில் நானும் எழுதியிருக்கிறேன். கலைக்கதிர் பல ஆண்டுகளாக வெளியாகிறது.

சுஜாதா மட்டும்தான் தமிழில் அறிவியல் குறித்து எளிய தமிழில் எழுதுகிறார் என்று நினைப்பது தவறு. சுஜாதா அறிவியல் உட்பட பலவற்றைப் பற்றி மிக மேம்போக்காக எழுதுகிறார் என்பதுதான் உண்மை

11:11 AM  
Blogger aathirai மொழிந்தது...

குமுதம் நேனோ டெக்னாலஜியை படம் பொட்டு விளக்கிக்கொண்டிருந்தால், அப்புறம்
ரிப்போர்டர், லைட்ஸ் ஆன், சினிமா கிசுகிசு போன்றவைகளுக்கு இடம் வேண்டாமா?
குமுதத்தை பொறுத்தவரையில் நேனோ டெக்னாலஜியை சுஜாதா விளக்கினாலும்
ஒன்றுதான், கவர்ச்சி நடிகை விளக்கினாலும் ஒன்றுதான். முழுநீள விஞ்ஞானக்
கட்டுரைகளை போட்டால் சர்குலேஷன் அம்பேல்தான்.

12:33 PM  
Blogger டி ராஜ்/ DRaj மொழிந்தது...

Nice post Ravi.
I agree that Sujatha's reply overlooked several facts and portrayed nanotechnology as a "sarvaloga nivarani".
Here is my 2 cents worth:
Though nano-automation seems to be too far fetched, I believe the advantages are very obvious.

For example:

a) catalysis: The nano catalysts are very efficient than their micro-, semi-micro or macro analogues.

b) Biomolecular (DNA and protein) diagnostics: Please refer to pages of Chad Mirkin. It has been almost 8 years since they came up with a DNA diagnostics that almost revolutionalized the research in Chemistry and biochemistry.

c) Molecular electronics: Despite the fardulent reports by some scientists from Bell labs, the progress is still made in leaps and bounds.


Cheers
Draj

8:58 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Sujatha in 'Sirappu Ambalam' dated July 30, 2005.

31.07.2005

குமுதம் பத்திரிகையில், 'சுஜாதாவைக் கேளுங்கள்' என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி ஒன்று துவங்கியிருப்பதை உங்களில் பலர் கவனித்திருக்கலாம். 'அரசு பதில்கள்' என்பது, அந்தப் பத்திரிகையின் தொன்றுதொட்ட பகுதி. அதனுடன் முரண்படும் என்பதால், முதலில் தயங்கினேன்.

''அறிவியல் சார்ந்த கேள்விகள் என்றால், பதிலளிக்கலாம்'' என்றேன்.

''அறிவியல் மட்டுமே இருந்தால், அது ரொம்ப கனமாகிவிடும். உங்கள் எழுத்து, சினிமா அனுபவம் சம்பந்தமான கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்தால் நன்றாக இருக்கும்'' என்றார்கள். ''தேவையெனில், 'அரசு பதிலை' தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்'' என்றார்கள்.

''வேண்டாம்! அதுவும் இருக்கட்டும். அதற்கு வெளிப்பட்ட அடையாளம், 'இந்த பதில்'களில் கிடைக்கிறதா பார்க்கிறேன்'' என்றேன்.

முதல்வாரக் கேள்விகளை குமுதம் ஆசிரியர் குழுவினரே கேட்டு, அதற்கான ஒரு வழிகாட்டுதலைக் கொண்டுவந்தார்கள். கம்ப்யூட்டரில் bootstrapping போல இது. முதல் வாரக் கேள்வி பதில் வந்ததும் வெள்ளம் புரண்டது. முதல் நூறு, முதல் ஆயிரம், முதல் ஐயாயிரம்.... பத்தாயிரம் என்று ஆசிரியர் குழுவினர் வீட்டுக்கு வந்து அந்த கார்டு மலையை என் முன் கொட்டியபோது மிரண்டு போனேன். ஒருவழியாக வெள்ளம் வடிந்து, இன்றும் வாரத்துக்கு சராசரியாக ஆயிரம் கேள்விகள் வருகின்றன.

எல்லாவற்றையும் படித்துப் பார்க்க எனக்கு அவகாசமில்லாததால், குமுதம் ஆசிரியர் - உதவி ஆசிரியர் குழுவின் உதவியுடன் வருகிற எல்லா கார்டுகளையும் படித்து விடுகிறார்கள். படித்து, அவைகளில் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். நன்றாக லேஅவுட் செய்து, அவ்வப்போது ஐஸ்வர்யா ராய் கலந்து கொடுத்தால் தமிழ் மக்கள் க்ளோனிங், நானோ டெக்னாலஜி, விண்வெளி, மழை மேகங்கள் என்ற தீவிரமான விஷயங்களை நிச்சயம் படிக்கிறார்கள். தமிழனின் ஆர்வப் பெருக்கைக் கண்டு வியப்பாகவே இருக்கிறது. முதல் தடுப்பைத் தாண்டி, கேள்வி என்னை அடைவதற்கான சாகசங்களையும் வாசகர்கள் மெல்லக் கற்று வருகிறார்கள். உதாரணமாக, 'காலையும், மாலையும் பார்த்தால் சூரியன் குஷ்பு, நமிதா. மத்யானம் மட்டும் ஏன் த்ரிஷாவாகத் தெரிகிறது?' என்று ஒருவர் கேட்கும்போது, அவரது புத்திசாலித்தனத்தை வியக்க வைக்கிறது. இதற்கு காற்று மண்டலத்தின் லென்ஸ் குவி ஆடி விளைவு காரணம் என்பதைத் தமாஷாகச் சொல்ல முடிகிறது. கேள்வி கேட்கும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு மரியாதை தரும் விதத்தில் புத்தகப்பரிசுகள் தருகிறேன். பக்கக் குறைவால் இடம்பெறாமல் போன சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டவர்கள் பெயர்களையும் பதிப்பிக்கச் சொன்னேன்.

தமிழர்களிடம் ஆர்வத்தில் குறைவில்லை. சுஜாதா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவர் எங்கேயாவது தேடிப் படித்திருப்பார். சும்மா, ரீல் விடமாட்டார் என்கிற உத்திரவாதம்தான் இந்தக் கேள்வி பதில் பகுதியின் மகத்தான வெற்றிக்குக் காரணம்.

எனக்கும், இதனால் பொறுப்பு அதிகமாகிறது.

6:55 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//எனக்கும், இதனால் பொறுப்பு அதிகமாகிறது. //

பொறுப்பு இருக்கிறது என்று சொல்லும் சுஜாதா, அப்படி நடந்துகொள்ளவில்லை என்பதைக்காட்டவே சிறப்பு அம்பலத்தில் அவர் எழுதியதை இங்கிட்டேன். எ.அ.பாலா போன்ற 'விசிறிகள்' மட்டையடிக்க அல்ல!

6:57 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"பொறுப்பு இருக்கிறது என்று சொல்லும் சுஜாதா, அப்படி நடந்துகொள்ளவில்லை என்பதைக்காட்டவே சிறப்பு அம்பலத்தில் அவர் எழுதியதை இங்கிட்டேன்."

முதலில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். தன்னுடைய சொந்தப் பெயரைக் கூட வெளியிட முடியாத உங்களுக்கு மற்றவர் பொறுப்பை சுட்டிக் காட்ட என்ன உரிமை இருக்கிறது?

பல்லாயிரக் கணக்கான கடிதங்களிலிருந்து வருபவை வடிக்கட்டப்பட்டு அவர் பார்வைக்கு வரும்போது டெட்லைன் என்று இருக்கிறது அல்லவா? ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் "தவறான" பதில்களின் சதவிகிதம் எவ்வளவு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9:46 PM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

10:02 PM  
Blogger காசி (Kasi) மொழிந்தது...

//உதாரணமாக, 'காலையும், மாலையும் பார்த்தால் சூரியன் குஷ்பு, நமிதா. மத்யானம் மட்டும் ஏன் த்ரிஷாவாகத் தெரிகிறது?' என்று ஒருவர் கேட்கும்போது, அவரது புத்திசாலித்தனத்தை வியக்க வைக்கிறது. இதற்கு காற்று மண்டலத்தின் லென்ஸ் குவி ஆடி விளைவு காரணம் என்பதைத் தமாஷாகச் சொல்ல முடிகிறது.//

இதையே சுஜாதாவின் அறிவியல் கேள்வி பதில்களின் மேம்போக்குத்தனத்துக்கு உதாரணமாகச் சொல்லமுடியும். 'இதற்கு காற்று மண்டலத்தின் லென்ஸ் குவி ஆடி விளைவு காரணம்' இல்லை என்பதே உண்மை. இப்படித் தவறாக சொல்லுவதற்கு அவரின் வேலைப்பளு, முதுமை தரும் சோர்வும் காரணமாக இருக்கலாம். தொடுவானத்துக்கு அருகே சூரியன்/சந்திரன் பெரிதாகத் தெரிய உண்மையான காரணம், அது ஒரு மாயத்தோற்றம் என்பதே. பார்க்க:

http://www.space.com/scienceastronomy/top5_myths_020903-2.html

(disclaimers:
1. இதில் பிழை கண்டுபிடித்ததால் நான் அறிவியலில் பெரிய புலி என்று ஆகிவிடாது. அவரளவுக்கு வீச்சு என்னிடம் இல்லை. சுஜாதா சொல்வதில் பிழை இருக்கமுடியும் என்பத்ற்கு இது ஒரு உதாரணம் அவ்வளவே.
2. நான் சிறப்பு அம்பலம் வாசிப்பதில்லை. இது அதில் வந்தது என்பதை நம்பி எழுதப்பட்டது என் மறுமொழி.
3. குமுதம் ஆசிரியருக்கு/சிறப்பு அம்பலம் ஆசிரியருக்கு எழுதும் எண்ணம் இல்லை.
4. இது ஒரு விவாதமாக இழுக்கப்பட்டால் நான் தொடர்ந்து பங்கெடுப்பேன் என்பது உறுதியில்லை. இது என் கருத்து அத்தோடு சரி. இதுவே இரண்டு நாட்களுக்கு முன் எழுத நினைத்து இன்றுதான் முடிந்தது.)

10:04 PM  

Post a Comment

<< முகப்பு