இன்குலாப், காசிஆனந்தன், வைரமுத்து

தன்னுடைய பிறந்தநாளை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடும் வைரமுத்து இந்த ஆண்டு அதையொட்டி இன்குலாப், காசி ஆனந்தனுக்கு பரிசு வழங்கியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் இதுவே தான் பெற்ற முதல் பரிசு, கடைசிப் பரிசாகவும் இதுவே இருக்கக் கூடும் என்று இன்குலாப் பேசியிருக்கிறார். இன்குலாப், காசி ஆனந்தன் குறித்து வைரமுத்து கூறியிருப்பதில் பெரும்பகுதி உண்மை, ஆனால் தன்னை "கொஞ்சம் சமரசம் செய்துகொள்கிறோம்? " என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது. சமரசம் தவிர வேறெதையும் அவர் செய்து கொண்டதில்லை என்று சொல்லலாம்.

ரஜனிக்கு அன்றும்,இன்றும், அஜித்திற்கு என்று நடிகர்களை துதிபாடும் பாடல்களை எழுதுவதில், நோக்கியா, மாபியா,பிப்டி கேஜி தாஜ்மகால், என்று ஆங்கில வார்த்தைகளை பாடல்களில் புகுத்துவதில் என்று திரையுலகிற்காக தமிழை விற்றுப் பிழைக்கும் வைரமுத்து தரும் விருதினைஇன்குலாப், காசி ஆனந்தன் ஏற்றிருக்கக் கூடாது. கலைஞரை விமர்சித்து இன்குலாப் கவிதை எழுதியிருக்கிறார்.

கண்மணி ராஜம் போன்ற கவிதைகளை எழுதிய இன்குலாப், கலைஞரைப் புகழ்ந்து பாடியிருக்கும் வைரமுத்து தரும் பரிசினை வாங்குவதும், தமிழில் ஆங்கில, பிற மொழி கலப்பினை எதிர்க்கும் காசி ஆனந்தன் , ஆங்கில சொற்களை புகுத்தியும், இன்னும் பல வழிகளில் தமிழை வணிகமயமாக்க உதவும் வைரமுத்து தரும் விருதினை பெறுவதும், அவ்வழாவில் வைரமுத்து 'உணர்ச்சிவசப்பட்டு' சில வார்த்தைகள் சொல்வதும் ஒரு அபத்த நாடககாட்சிகளாகத் தோன்றுகின்றன.

இன்குலாப்பின் கவிதைகள் இன்று இணையம் மூலமே தமிழ் இலக்கியம் அறிந்து கொள்பவ்ர்களுக்குபரிச்சயமற்றதாக இருக்கலாம். சிலர் அவர் கவிதைகளை பிரச்சாரம் என்று நிராகரிக்கலாம். ஆனால்அவர் தன் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர், அதற்காக பல இடையூறுகளை எதிர் கொண்டவர்.இடதுசாரிகள், தமிழ் தேசியவாதிகள், ஈழ விடுதலைப் போராளிகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் அவர். அவர் நாடகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் பாணி எழுத்துக்களையே இணையம் மூலம் அறிந்து கொண்டு அவைதான் சிறப்பானவை என்று நினைப்பவர்களுக்கு இன்குலாப்பின் எழுத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும். அரசியலற்ற அரசியல்தன்மை கொண்ட எழுத்துக்களை அதில் உள்ள அரசியல் தெரியாமல் இதுதான் உன்னத இலக்கியம் என்று கருதும் வாசகர்களுக்கு இன்குலாப், காசிஆனந்தன் போன்றவர்கள் வாழ்க்கைக்கும், கவிதைக்கும் உள்ள இடைவெளி மிகக்குறைவு என்பது பிடிபட சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் இதைப் புரிந்து கொண்டால் சாரு நிவேதிதாவின் வார்த்தையில் சொன்னால் 'தயிர்வடை இலக்கியம்' அவர்களுக்கு சீக்கிரமே புளித்துப் போய்விடும். ஒரு விதத்தில் வைரமுத்துவின் இலக்கியமும் தயிர்வடை இலக்கியம் போன்றதுதான். ஆனால் அது சிற்றிதழ் தயிர்வடைகளை விட பரவலாக கிடைப்பது, ஊடகச் சூடு மூலம் சுடச்சுடக் கிடைப்பது போன்றவற்றால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இன்குலாப்பிற்கு கிடைக்காத சாகித்ய அகாதமி விருது தனக்குத் தேவையில்லை என்று வைரமுத்து கூறுவார் என்று எதிர்பார்க்கக்கூடாது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வைரமுத்து காசி ஆனந்தன்,இன்குலாப்பிற்கு விருது வழங்குவதன் மூலம், அதில் தன் தமிழ்பற்றை வெளிப்படுத்தியும், அக்கவிஞர்களை புகழ்ந்து பேசியும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

16 மறுமொழிகள்:

Anonymous Thangamani மொழிந்தது...

இன்குலாப் மிக எளிமையான மனிதர், க்விஞர். வைரமுத்துவின் அழைப்பை மறுக்க வேண்டிய அளவுக்குக் கூட அவர் தம் ஈகோவுக்கோ, ஆளுமை என்ற கருத்துக்கோ இடம் கொடுக்காது நேரடியான அழைப்பாக ஏற்று வந்திருக்க வேண்டும்.

8:43 PM  
Blogger ச.சங்கர் மொழிந்தது...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
வைரமுத்து போன்றவர்கள் இவர்களை பெருமைப்படுத்துவதாய் நாடகமாடி தங்களைத் தாங்களே பெறுமைப் படுத்தி சுய விளம்பரம் செய்து கொள்கிறார்கள்.

9:51 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

இன்குலாப் பற்றித் தங்கமணி சொல்வதும் சாத்தியமானதே.

வைரமுத்து எதையும் எழுதிவிட்டுப்போகட்டும். அது நல்லதா கெட்டதா, பிடித்ததா பிடிக்காததா என்பதெல்லாம் தனியாள் சம்பந்தப்பட்ட சங்கதி. ஆனால், அவருடைய தமிழ் குறித்த அலட்டல்களும் தன்னை முன்னிலைப்படுத்துதலும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை (வலைப்பதிலே பதியும் எங்கள் அலட்டல்களே பரவாயில்லை என்ற அளவுக்கு).

அதேநேரத்திலே, இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது.

9:52 PM  
Anonymous Thangamani மொழிந்தது...

//அதேநேரத்திலே, இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது.//

இது!

9:59 PM  
Blogger சுதர்சன் மொழிந்தது...

//தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வல்லவர்//
அன்னாருக்கு நோபல் பரிசு கனவு வேறு இருக்கிறது போல. எங்கே போய் முட்டிக் கொள்ள..

2:29 AM  
Blogger Narain மொழிந்தது...

/இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது.//

இதை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. இன்குலாபும், காசி ஆனந்தனும் இன்றைக்குத்தான் வைரமுத்து கண்ணில் பட்டார்களா ? அவர்கள் வெகு காலமாக எழுதி வருகிறார்கள். இன்று வைரமுத்து அவர்களுக்கு பரிசு கொடுத்ததின் காரணம், இன்றைக்கு இந்தியாவில் ஈழம் பற்றிப் பேசினாலோ, எழுதினோலோ வை.கோ போல கடுஞ்சிறைவாசங்கள் கிடையாது. சமரச பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், காசி ஆனந்தனுக்கும், இன்குலாபிற்கும் விருதுகளை தருவதன் மூலம், தான் என்றென்றும் ஈழ விடுதலையையும் தமிழ் மக்களையும் பற்றி தொடர்ச்சியாக கவலைப்படுவதுப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம், திரைப்பாடலாசிரியர்களின் தான் ஒரு ரோஷ, மானமுள்ளவன் என்பதான ஒரு மாயையினை உண்டாக்கும் அரசியல் இது.

பெயரிலி சொன்னதுப் போல, திரையிசையில் என்னவேண்டுமானாலும் எழுதிக் கொண்டு போகட்டும். அது வேறு வெளி. ஆனால், தன்மானமிக்க இரண்டு கவிஞர்களை பாராட்டுவதுப் போல, தன் பிம்பத்தினை முன்னெடுத்துச் சென்று, தமிழ் கவிஞர்களில் தன்னை திருமேனியாக [நன்றி: இராம.கி] காட்டிக் கொள்ளும் பச்சை அரசியலை இனங்கண்டு அதனை ஒதுக்க வேண்டும்.

3:50 AM  
Blogger குமரேஸ் மொழிந்தது...

"அரசியலற்ற அரசியல்தன்மை கொண்ட எழுத்துக்களை அதில் உள்ள அரசியல் தெரியாமல் இதுதான் உன்னத இலக்கியம் என்று கருதும் வாசகர்களுக்கு இன்குலாப், காசிஆனந்தன் போன்றவர்கள் வாழ்க்கைக்கும், கவிதைக்கும் உள்ள இடைவெளி மிகக்குறைவு என்பது பிடிபட சிறிது காலம் பிடிக்கலாம்"

முற்றிலும் சரியாக கூறியுள்ளீர்கள்

பெயரிலியின் "வலைப்பதிலே பதியும் எங்கள் அலட்டல்களே பரவாயில்லை என்ற அளவுக்கு" என்ற கருத்தும் சரிதான்

இதோ என்னுடைய அலட்டல்
எனது இந்த பதிவையும் அதன் பின்னூடங்களையும் ஒருமுறை பார்க்கவும்.
http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_08.html

3:57 AM  
Blogger இ.இசாக் மொழிந்தது...

சரி.. சரி
இதுவும்
நடிகர் கமலகாசன் தியாகுவை அழைத்து தமிழ்ப்பள்ளிக்கு நிதியளித்தது போலதான்

4:30 AM  
Blogger goinchami-8A மொழிந்தது...

-/பெயரிலி. said...
இன்குலாப் பற்றித் தங்கமணி சொல்வதும் சாத்தியமானதே
...
....
....

இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது


இன்னாங்கோயா இது? கவிஞ்ச்சர் வெய்யிர முத்து, காசி ஆனந்தனையும், இன்குலாபையும் பார்-ஆட்டி விருது கொடுத்தால், அதுக்குப் பேரு தைரியமா? நிலைமை மாறிட்டுது குரு...புஸ்பராஜன் புஸ்தகத்துக்கு, தந்திலே விமர்சனம் வரது, பத்து வருசத்துக்கு முந்தி வந்த 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' ஐயே விகடன்ல இப்ப எழுதினா, இன்னும் போல்டா எழுத முடியும். ஈழ இலக்கிய/வாதிகள் பரிச்சயம் வெச்சுக்கறதுக்குத்தான் இன்னிக்கு மெட்ராஸ்லே மவுசு சாஸ்தி. சொல்ல வரது என்னனா, ஆதாயம் இல்லாம எந்த அன்னமாவும் ஆத்தோட போமாட்டா.. வெய்யிரத்த்துக்கு .·ப்ரான்ஸ், கனடா, அவுஸ்திஏரேலியான்னு , ஏதாச்சும் ட்ரிப் இருக்கும்.. பெட்டு வேணா கட்டறேன்....

12:10 PM  
Blogger வன்னியன் மொழிந்தது...

//வெய்யிரத்த்துக்கு .·ப்ரான்ஸ், கனடா, அவுஸ்திஏரேலியான்னு , ஏதாச்சும் ட்ரிப் இருக்கும்.. பெட்டு வேணா கட்டறேன்....//

சரியாச் சொன்னியள் கோயிஞ்சாமி,
நானும் அதையேதான் எதிர்பாக்கிறன். எங்கையும் போகட்டும். ஆனா போற இடங்களில ஈழத்தின் "தேசிய கீதத்தை" நான் தான் எழுதுவேன் எண்டு அடம்பிடிக்காம இருந்தாச் சரி.

12:37 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

நரேன் சொல்லும் பார்வையிலே பார்க்கவும் முடிகிறது. கோயிஞ்சாமி-8 இன் கருத்திலே முழுக்க ஒன்ற முடியவில்லை; காரணம், சி. புஷ்பராஜனைத் தூக்கிப்பிடிக்கும் காரணம் வேறு, இன்குலாப் இனையும் காசி ஆனந்தனையும் தூக்கிப்பிடித்தாற் காரணம் வேறு.

ஆனால், வைரமுத்து விளம்பரப்பிரியர் என்பதை மறுக்கமாட்டேன்.

4:42 PM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

காசி ஆனந்தனின் பாடல்களைத் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஒலிப்பேழைகளாக வெளியிட்டிருக்கிறது. முத்தான பாடல்கள். அந்தக் கவிஞனுக்கு வைரமுத்துவை அழைத்துப் பரிசு கொடுக்கும் யோக்கியதை இருப்பதாகவே நினைக்கிறேன். இது கொஞ்சம் தலைகீழாய்ப் போய்விட்டது. சினிமாப்பாட்டுக் "கவிஞர்"களின் பெயர்களைக் கேட்ட மக்களுக்குக் காசி ஆனந்தன் போன்றவர்களின் பெயரும் காதில் விழ இது ஒரு வாய்ப்பு என்று ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

2:50 PM  
Blogger கொழுவி மொழிந்தது...

இன்குலாப் எழுதி மனோ பாடிய பாடலொன்றைக் கேட்டுப்பாருங்கள். இன்றைக்கும் எவ்வளவுக்குப் பொருந்துகிறது.
இசை எல்.வைத்தியநாதன் என்று நினைக்கிறேன்.

9:46 PM  
Blogger குமரேஸ் மொழிந்தது...

வைரமுத்துவின் "இது ஒரு பொன் மாலைப்பொழுது..." இற்கு முன்னர் இருந்தே காசி ஆனந்தன் உணர்ச்சிக் கவிஞர்தான், இதற்கு உதாரணமாக 1976, 1977 களில் ரேவடி கடற்கரையில் அவரது உணர்ச்சி மிக்க பேச்சைக் கேட்டு மேடையிலேயே பல இளைஞர்கள் தங்கள் கைகளை கத்தியால் கீறி, இரத்தத்தால் திலகமிட்டார்கள். இன்றும் அதே இளைஞர்கள் நாட்டிற்காக போராடுபவர்களாகவும், ஏன் இலங்கை பாராளுமன்ற அங்கத்தினர்களாகவும் உள்ளார்கள். காசி ஆனந்தனும் இன்னமும் உணர்ச்சிக் கவிஞர்தான்.

வைரமுத்து, தனது விளம்பரப்பிரியத்தால் இப்ப சில வருடங்களாக "கவிப்பேரரசு", அடுத்தது என்னவோ?

4:43 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மிக மிக சரி
சுய விளம்பரம்

12:01 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

விளம்பரபேரரசு

12:04 PM  

Post a Comment

<< முகப்பு