அந்நியனும், தி.க வும்


காஞ்சி பிலிம்ஸ் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கே தரப்படுகிறது.இதை ஒரு கட்டுரையாக எழுதி இருக்க வேண்டும்.இருப்பினும் பின்னர் எழுதக் கூடும் என்பதால் இங்கு அதை இடுகிறேன்.

உண்மையில் வெளியான விமர்சனம் அந்நியன் என்ற திரைப்படத்தில் உள்ள பார்ப்பனீயத்தை மட்டும் பேசவில்லை. அந்நியனை முன் வைத்து இங்கு செய்யப்படுவது மலினமான ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான விஷமப் பிரச்சாரம்.

எனக்கு அந்நியன் மீது கடுமையான விமர்சனம் உண்டு. ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்த மாட்டேன். உண்மையில் வெளியான விமர்சனம் அந்நியன் என்ற திரைப்படத்தினை பார்ப்பன எதிர்ப்பு என்ற கண்ணோட்டதில் பார்ப்பதால் மிகவும் வலுவற்று இருக்கிறது. தி.க வின் வழக்கமான பார்ப்பன எதிர்ப்பு பிரச்சாரம் என்று நிராகரித்து விடும் வகையில் இருக்கிறது.

இதையும் தாண்டி விமர்சனம் சென்றிருக்க வேண்டும். இது போல் தனி நபர் சட்டத்திற்கு புறம்பாக தான் குற்றவாளிகள் என்று கருதுகிற நபர்களை தண்டிப்பது இதற்கு முன்னரும் பல படங்களில் வந்துள்ள கருத்துதான். அவற்றையெல்லாம் உண்மை இப்படி விமர்சித்துள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.அந்நியன் மட்டுமே பிரச்சினைக்குரிய படம் என்று கருத முடியாது. மலையாளத்தில் வெளியான 4திபீப்பள் என்ற படத்தின் பாதிப்பினையும் அந்நியனில் காணலாம். அது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது.

இது போன்ற படங்கள் வெகுஜன உளவியலின் சில அம்சங்களை குறி வைத்து எடுக்கப்படுகின்றன, நான் சிவப்பு மனிதன், ரமணா என்று பல படங்களையும், தெலுங்கில் வெளியான பல படங்களையும், 1980 களில் வெளியான சில இந்திப் படங்கள், செல்வமணி இயக்கிய அரசியல் போன்ற படங்கள் என்று ஒரு பட்டியலே தர முடியும். அந்நியன் இவற்றுடன் வேறு படும் புள்ளிகள் முக்கியமானவை, ஆனால் இத்தகைய கதை(கள்) புதிதல்ல. பிளாவாளுமை என்பதும் புதிதல்ல, ஏற்கனவே விடாது கருப்பு என்ற தொடரில் இது இடம் பெற்றுள்ளது.

உண்மை 1950களில் பயன்படுத்தப்பட்ட சட்டகத்தினையே பயன்படுத்துகிறது.
அதன் பலவீனங்கள் இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டன.ஆனால் தி.கவின் பகுத்தறிவு வளர்ச்சி இன்றி இன்று ஒருவிதமான பழைமைவாதமாக உள்ளது. இதனால் விமர்சனத்தில் பரிதாபகரமான சில வாக்கியங்கள் இடம் பெறுவது நமக்குத் தெரிகிறது

"திரைப்பட இயக்குநர் ஒரு பக்கச்சார்பாக (வர்க்க-சாதி) நின்று தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ற காட்சி களை தொகுத்து நம்முன் வைக்கும் போது, திறந்த மனதுடன் அவர்களுடன் விவாதிக்க வாய்ப்பற்றுப் போய் விமர்சகனும் தனது வர்க்க சாதிக் கண்ணோட் டச் சார்புக் கேற்ப தனது நியாயங்களை முன் வைத்து சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது."

உண்மையில் உள்ள விமர்சனத்தில்
"சமீப காலத்தில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கூலி ஏழைவிவசாயிகள் வறுமையின் காரணமாக விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும் நாம் கேள்விப்பட்டதுதான். இதற்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கத் தின்/ அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு உயர்தட்டில் வாழும் ஷங்கரும், சுஜாதா ஐயங்காரும் இல்லையா?"

என்று இருக்கிறது.

மிகவும் நியாயமான கேள்வி எதுவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

யார் அந்த இதற்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கத் தின்/ அதிகார வர்க்கத்தின் என்று கேட்பதை விட யார் இன்று அதிகார ஆளும் வர்க்கம் என்று கேட்பது முக்கியமானது. இங்கு திடீரென்று வர்க்கம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்டோம் என்றால் உண்மையின் தர்க்கம் எவ்வளவு வலுவற்றது என்பது தெளிவாகிவிடும்.

விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------
இட்ட பின்னூட்டம்

லாலுவையும், அன்று வி.ராமசாமி என்ற நீதிபதியையும் ஆதரித்த,ஆதரிக்கும் உண்மை,தி.க வினரும் அன்னியனை விமர்சிக்கட்டும். எத்தனை ஊழ்ல் பேர்வழிகளை பார்ப்பனரல்லோதோர் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்தோம் என்பதைச் சொல்லட்டும், தைரியமிருந்தால். எனக்கு தி.க மீதும், சங்கர்- சுஜாதா மீதும் விமர்சனம் உண்டு.இங்கு ஒன்றைச் சொல்லி இன்னொற்றை நான் ஆதரிக்க மாட்டேன்.

3 மறுமொழிகள்:

Blogger காஞ்சி பிலிம்ஸ் மொழிந்தது...

ஹும்...

4:24 PM  
Blogger vishytheking மொழிந்தது...

கீழ்க் கண்ட என் பதிவுகளிலும் இது போன்ற எண்ணங்களை வெளியிட்டிருக்கிறேன்.

உங்கள் கருத்து மிக தெளிவாகவும் கண்ணியமாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி..

அன்புடன் விச்சு

http://neyvelivichu.blogspot.com/2005/07/blog-post_08.html

http://neyvelivichu.blogspot.com/2005/07/blog-post_12.html

4:40 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

நன்றி விச்சு.

9:52 PM  

Post a Comment

<< முகப்பு