விடுமுறை

வேலைப்பளு, பயணம் காரணமாக ஆகஸ்ட் மாதம் இந்த வலைப்பதிவிற்கு விடுமுறை. மிகவும் அத்தியாவசியம் அல்லது முக்கியமான செய்தி {(எனக்கு லாட்டரியில் மில்லியன் யுரோக்கள் விழுந்தன அல்லது விஜயகாந்த என்னை கொ.ப.செவாக நியமித்திருக்கிறார் :) } என்றால் மட்டும் குறிப்பிடுகிறேன்.
இந்த விடுமுறை காலத்தில் பிற தமிழ் வலைப்பதிவுகளையும் படிக்கப்போவதில்லை என்ற நற்செய்தியையும் தெரிவித்து விடுகிறேன்.. சில பின்னூட்டங்களுக்கு ஒரு பதில் கொடுத்துவிட்டு தற்காலிகமாக கடையை மூடுகிறேன்.

மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திப்போம்.
இந்தியா - அறிவியல் தொழில்நுட்பம் - நேச்சர்

இந்த வார நேச்சர் இதழ் இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. நியு சைன்டிஸ்ட் இது போல் பல கட்டுரைகளை வெளியிட்டது . நேச்சரில் வெளியாகியுள்ள கட்டுரைகளை இணையத்தில் இலவசமாகப் பெற முடியும்.
ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,

வணக்கம்.
இந்த வார ஆனந்த விகடனில் (ஆ.வி) திரு சுஜாதா எக்ஸிஸ்டென்ஷியலிசம், சார்த் குறித்து எழுதியிருக்கிறார். இது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1, தமிழில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்து சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் திரு.எஸ்.வி.ராஜதுரை ஒரு நூல் எழுதியிருக்கிறார். அது க்ரியாவால் வெளியிடப்பட்டது. எக்ஸிஸ்டென்ஷியலிசம் இருத்தலியம் என்பதாக மொழியாக்கம் செய்யப்பட்டு, அச்சொல் சிறுபத்திரிகைகளில் கையாளப்பட்டுகிறது. 1980 களிலும் பின்னரும் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்து சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. திரு.சுஜாதா இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியிருக்கிறார். இருத்தலியம், இருத்தலியல் என்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது அவர் கொடுத்துள்ள சொல் பொருத்தமானதாக இல்லை.

2, திரு.சுஜாதா எக்ஸிஸ்டென்ஷியலிசத்தின் அடிப்படையை விளக்குகிறேன் என்று எழுதியிருப்பவை நகைப்புக்குரியவை. ஏனெனில் அவர் இருப்பு, சாரம்சம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு புது விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கம் அபத்தமாக இருக்கிறது. இருப்பு, இருத்தல் என்றவை தத்துவக் கண்ணோட்டத்தில் பேசப்படும் போது அவற்றை எந்தப் பொருளில் குறிப்பிடுகிறோம் என்ற தெளிவு வேண்டும். அவரிடம் அது இல்லை. மாறாக அவர் மனம் போன போக்கில் பொருள் கொண்டு விளக்க முயல்கிறார்.

3, கீகர்கார்ட் குறித்து அவர் எழுதியுள்ளதும் பொருத்தமற்றதாக உள்ளது. அவர் கீகர்கார்ட், நீட்ஷே முன் வைத்த தத்துவங்களை ஒரிரு வாக்கியங்களில் விளக்குவது கடினம். கீகர்கார்ட் எழுப்பிய கேள்விகள், அவரது வாழ்க்கைப் பிண்ணனி போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் கீகர்கார்ட் சொன்னது இதுதான் என்று ஒரிரு வாக்கியங்களை உதிர்ப்பதாலோ, நீட்ஷேயின் கடவுளின் மரணம் குறித்த புகழ் பெற்ற வாசகத்தினை குறிப்பிடுவதலோ தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. சுஜாதா செய்துள்ளது மகாபாரத்தினை மூன்று வாக்கியங்களில் (பாண்டவர்களும், கெளரவர்களும் பங்காளிகள், பாகப்பிரிவினையில் தகராறு ஏற்பட்டு போரிட்டனர், கெளரவர் தோற்றனர், பாண்டவர் வென்றனர்) கூறி இதுதான் மகாபாரதம் என்று சொல்வதற்கு ஒப்பாகும். பிரச்சினை என்னவென்றால் இருத்தலியல் கோட்பாடுகளை பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் பெற வேண்டுமானால் ஹெய்டெகர், ஹெகல் போன்றோர் சிந்தனைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். தடலாடியாக பத்து வாக்கியங்களில் இவற்றை சுருக்கிவிட முடியாது. சுஜாதாவிற்கு அடிப்படைகளும் தெரியவில்லை, சார்த் குறித்தும் தெரியவில்லை. ஆனால் தெரிந்தது போல் எழுத்தில் நடிக்கத் தெரிந்திருக்கிறது.

4, இருத்தலியம் பொறுப்புகளையும், அறநெறிகளையும் குறித்துப் பேசிய, பேசும் த்ததுவம். இங்கு தனிமனித சுதந்திரம், தெரிவு, இருப்பு, மதிப்பீடுகள் போன்றவை முக்கியமானவை. இருத்தலியவாதிகளை மதசிந்தனைசார் இருத்தலியல்வாதிகளும், கடவுள் நம்பிக்கையற்ற, கடவுளின் இருப்பு குறித்து அவநம்பிக்கை கொண்ட, மானுடநேயமிக்க இருத்தலியல்வாதிகளும் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சார்த் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்தவர். ஆனால் சுஜாதவோ இருத்தலியம் குறித்து முற்றிலும் தவறாக எழுதுகிறார். இருத்தலியவாதிகளைப் பொறுப்பற்றவர்கள் என்று சொல்வது முட்டாள்த்தனம். அது அவ்வாறு கூறுபவரின் பொறுப்பற்றதன்மையினை, அறியாமையினைக் காட்டுகிறது.

5, தனி மனித சுதந்திரம், பொறுப்பு, தெரிவு இவை குறித்தெல்லாம் விரிவாகப் பேசியவர் சார்த்.இன்னும் சொல்லப்போனால் தெரிவுகள், சுதந்திரம் குறித்து தொடர்ந்து அக்கறைக் காட்டியவர் சார்த். ஆனால் சுஜாதாவிற்கோ இதுக் கூடத் தெரியாது போலும். சார்த்தின் சிந்தனைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் ஏன் சார்த் குறித்து இப்படி தப்பும் தவறுமாக எழுத வேண்டும். இந்த லட்சணத்தில் சார்த்தின் முக்கியமான நூல்களில் ஒன்றான Being and Nothingness குறித்து வேறு எழுதுகிறார்.

6, சார்த் காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு தந்தார், அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்ததை எதிர்த்தார், ரஸ்ஸலுடன் சேர்ந்து அமெரிக்காவின் போர் குற்றங்களை விசாரிக்க ஒரு நீதிக்குழு அமைத்தார். 1968 ல் மாணவர் கலகம் மூண்ட போது மாணவர்கள் பக்கம் நின்றார். பல இயக்கங்கள், போராட்டங்களை ஆதரித்தார். அவரது அரசியல் நிலைப்படுகள் சர்ச்சைக்குரியவையாக இருந்தன. ஒரு இடதுசாரி என்றே அவர் அறியப்பட்டார். Fannon எழுதிய 'The Wretched of the Earth' என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை மிகவும் புகழ்பெற்றது. 1964ல் நோபல் பரிசு, இலக்கியத்திற்காக, அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஏற்க மறுத்தார். சார்த் ஒரு தத்துவஞானி மட்டுமல்ல, ஒரு எழுத்தாளரும் கூட. ஆனால் சுஜாதா நமக்குக் காட்டும் சார்த் ஒரு பொறுப்பின்மையைப் போதித்த,கடைப்பிடித்த தத்துவஞானி. இதை விட மோசமாக சார்த் குறித்து யாரும் எழுத முடியாது.

7, சுஜாதா பல பெயர்களை உதிர்க்கிறார் - ஜி.நாகராஜன், காம்யு, ஹெமிங்வே என்று. பொறுப்பின்மையை சார்த் போத்திதார் என்றால் இவர்களின் எழுத்திற்கும், சார்த்தின் கருத்துக்களும் என்ன தொடர்பு என்பதை சுஜாதா விளக்குவாரா.இந்தப் பெயர் உதிர்த்தல்கள் எதற்காக. இலக்கியத்தில் இருத்தலியத்தின் தாக்கம் குறித்து பேசவேண்டுமென்றால் முதலில் இருத்தலியம் என்றால் என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சுஜாதாவிடம் அந்தப் புரிதல் இல்லை என்பது அவர் எழுதியுள்ளதிலிருந்து புலனாகிறது. எந்த நூல்கள், கட்டுரைகளின் அடிப்படையில் இவ்வாறு எழுதினேன் என்று சுஜாதா விளக்குவாரா.

8, மொத்ததில் சுஜாதா எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் விற்பனையாகும் வார இதழில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.

நான் எழுதியுள்ளது குறித்து உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். தயவு செய்து கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் உள்ளவற்றைப் பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு சரி என்பது உங்களுக்குப் புலப்படும். ராஜதுரையின் நூலினையும் பாருங்கள். அதில் சார்த் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. மேலும் இருத்தல்,சாரம்சம் குறித்தும் ராஜதுரை அதில் எழுதியிருக்கிறார்.கீகர்கார்ட் குறித்தும் அதில் எழுதப்பட்டுள்ளது.

1,http://philosophy.lander.edu/intro/sartre.html
Explain what "existence precedes essence" means.
Existence: the fact of being, the presence of something, the "thisness," "that it is."Essence: the kind of thing it is, the blueprint, plan, or description, the nature of the thing, "what it is."a. Sartre wants to maintain that man intrinsically has no nature. That is, he is thrown into this world, not of his own making, and is condemned to determine what he will be. In other words, our "existence precedes our essence." We exist first and determine our essence by means of choice.b. Contrast this view with mainstream Christianity. Man's nature comes first--man is a sinner. Consequently, here, essence precedes existence, since man is entirely subject to God's plan or blueprint.c. Contrast Sartre's view with the construction of a table. The carpenter has in mind the nature of the table and works from a plan. From sawing, sanding, nailing, and so on, the table comes into existence. Hence, in this case, "essence precedes existence."

2,http://en.wikipedia.org/wiki/Essence

3,http://www.iht.com/articles/2005/06/21/news/edaronson.php
Like no one else, he sought to understand exactly what it means to be responsible. This suggests another reason for Sartre's continued salience - his irritating and annoying claims themselves. Sartre teaches that we are constantly tempted to escape our responsibility for creating ourselves from what we have been made - there is something comforting, after all, in feeling that things are beyond our control. But, as he also teaches, to accept this is to enter into complicity with the powers that would dominate us. Sartre demands that we see ourselves as active agents, even when we might prefer the irresponsibility of seeing ourselves as victims

4,http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre

5,http://www.sartre.org/

6, http://plato.stanford.edu/entries/sartre/

It is now common to distinguish three distinct ethical positions in Sartre's writings. The first and best known, existentialist ethics is one of disalienation and authenticity. It assumes that we live in a society of oppression and exploitation. The former is primary and personal, the latter structural and impersonal. While he enters into extended polemics in various essays and journal articles of the late 1940s and ‘50s concerning the systematic explanation of people in capitalist and colonialist institutions, Sartre always sought a way to bring the responsibility home to individuals who could in principle be named. As Merleau-Ponty observed, Sartre stressed oppression over exploitation, individual moral responsibility over structural causation but without denying the importance of the latter. In fact, as his concept of freedom thickened from the ontological to the social and historical in the mid ‘40s, his appreciation of the influence of factical conditions in the exercise of freedom grew apace.

சுஜாதா எழுதியுள்ளது அச்சாகி வாசகர் கையிலும், இணையத்தில் இருக்கும் நிலையில் அடுத்த இதழில் சுஜாதா எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், அத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் ஆசிரியர் என்ற முறையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இருத்தலியம், சார்த் குறித்து விகடனில் 5-6 பக்க அளவில் ஒரு கட்டுரை வெளியிடலாம். அதை இருத்தலியம் குறித்து அறிந்த, தமிழில் தெளிவாக எழுதக்கூடிய யாரேனும் (உ-ம். ராஜதுரை) எழுதலாம். அல்லது ஆங்கிலத்தில் வெளியான சார்த் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரையை வெளியிடலாம். இவையெல்லாம் வெளியாகவிட்டாலும் பரவாயில்லை சுஜாதவின் குறிப்பில் பிழைகள், தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதையாவது நீங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இக்கடிதம் என் தனிப்பட்ட முறையில் எழுதப்படுகிறது. இதற்கு எந்த ஒரு அமைப்பிற்கும், நிறுவனத்திருக்கும் தொடர்பில்லை.
இதைப் படித்தமைக்கு நன்றி
இவண்
K.ரவி ஸ்ரீநிவாஸ்

இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டது.
------------------------------------------------------------------------------------------
இது போன்று எழுதுவது மகிழ்ச்சியினைத் தரும் காரியமல்ல. தமிழ் வலைப்பதிவுகளில் யாரேனும் இது குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.யாரும் எழுதவில்லை.ஆனந்த விகடன் வெளியாகி மூன்று நாட்கள் கழித்தே இதை எழுதி அனுப்பினேன். நேற்று வலைப்பதிவாளர் ஒருவர் தினமணிக் கதிரில் ராமன் ராஜா என்பவர் எழுதியிருந்தகட்டுரையினை இட்டிருந்தார். அதிலும் இது போல் பல தகவல், கருத்துப் பிழைகள். அக்கட்டுரை ஒபன் சோர்ஸ் குறித்தும், மென்பொருள் குறித்தும் தவறான தகவல்களைத்தருகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் தமிழில் வெளிவருவது வாசகர்கள் மனதில் தவறானஎண்ணங்களை ஏற்படுத்தும். எளிமையாக எழுதுகிறேன், படிக்க சுவாரசியமாக எழுதுகிறேன் என்று எழுதும் போதுபொறுப்புடன் தகவல்,கருத்துப் பிழைகள் இன்றி எழுத வேண்டும். நாம் எழுதுவது சரிதானாஎன்பதை குறைந்தது இரு முறையாவது சரிபார்க்க வேண்டும்.யுனிக்ஸ் இயங்குதளம் இன்றும்புழக்கத்தில் இருக்கிறது.ஆனால் அது குறித்து ராமன்ராஜா என்ன எழுதியிருக்கிறார் என்றுபடித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட கட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதேஒருவிதத்தில் மேல்.தவறான புரிதலை விட அறியாமையே பரவாயில்லை என்று கருதக்கூடியவகையில் கட்டுரைகள், பத்திகள்தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
----------------------------------------------------------------------------------------------
http://www.vikatan.com/av/2005/jul/31072005/av0803.asp

சுஜாதா- கற்றதும் பெற்றதும்

பிரெஞ்சு எழுத்தாளரும், தத்துவஞானியுமான யிமீணீஸீ ஜீணீuறீ sணீக்ஷீtக்ஷீமீ&யின் பிறந்த தினம் ஜூன் 21, 1905. ழான் பால் ஸார்ட்
ழான் பால் ஸார்ட், (பி.பி.சி. இப்படித்தான் உச்சரிக்கிறது) 1980 ஏப்ரல் 13 வரை வாழ்ந்தவர். நவீன இலக்கிய கர்த்தாக்களின் சிந்தனையை மிகவும் பாதித்த, ஏன்... ஆக்கிரமித்த எக்சிஸ்டென்ஷியலிசம் என்னும் தத்துவத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார் ஸார்ட்.

எக்சிஸ்டென்ஷியலிசத்துக்கு Ôஇருத்தல் கொள்கைÕ என்று சொல்வது, ஒரு சோகையான மொழிபெயர்ப்புதான். Ôஉயிர் வாழ்தல்Õ என்பதும் ஏப்பை சாப்பைதான்! இந்தத் தத்துவம் என்ன என்று சரியாக அறிந்துகொண்டால்தான், சரியான வார்த்தை அமையும். ஒரு மனிதனின் இருத்தல் அவனது சாரத்தைவிட முக்கியம். றிக்ஷீவீஷீக்ஷீவீtஹ் tஷீ மீஜ்வீstமீஸீநீமீ ஷீஸ்மீக்ஷீ மீssமீஸீநீமீ. இதுதான் ஆதார சிந்தனை.

கொஞ்சம் விளக்குகிறேன்...
நீங்கள் உயிர் வாழும் பிறவி. உங்களைப் பலவாறு வர்ணிக்கலாம். சமூகத்தில் ஒரு விதமாக, குடும்ப அமைப்பில் ஒரு வகையாக, படிப்பினால், உத்தியோகத்தால், உங்கள் டாக்டரால்... இப்படி ஒவ்வொரு பாகுபாடும் உங்களைப் பற்றிய (மீssமீஸீநீமீ) சாரம்தான். உங்களை ஒரு தகப்பன், நல்லாசிரியன், டயாபடீக், ரத்த அழுத்தக்காரன், பிடிவாதக்காரன், ஆணழகன் என்று வர்ணிப்பதெல்லாமே சாரங்கள். நீங்கள் நீங்கள்தான்! உங்களுடைய இருத்தல்தான், அதாவது உயிர் வாழ்தல்தான் எல்லாவற்றுக்கும் மேம்பட்டது; முக்கியமானது. உங்களை வகை பிரிக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது. உங்களுக்குப் பொறுப்புச் சுமை ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சங்கடத்தை வெளிப்படுத்தும் தத்துவம் இது.

ÔÔயாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க!ÕÕ என்று கண்ணதாசன் பாடினாரே, அதுதான் இந்தத் தத்துவத் தின் ஆதாரக் கேள்வி. ‘என்னை யாரும் கேட்கவில்லை. அதனால், என் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’
இந்தத் தத்துவத்துக்கு மறைமுகமாக வித்திட்டவர் இருவர். கியர்க்ககார்டு (1813&1855) என்னும் டென்மார்க் தத்துவ ஞானி. ‘நான் யார்? எப்படி இவ்வுலகில் வந்தேன்? என்னை ஏன் யாரும் கேட்கவில்லை?Õ என்ற கேள்விதான், புதிய சிந்தனையை ஆரம்பித்தது. ‘கடவுள் இறந்துவிட்டார். நானும், நீயும், நாம் எல்லோரும் அவரைக் கொன்றுவிட்டோம்’ என்றார் நீட்ஷே. இவர்கள் இருவருடைய தத்துவங்களும், இருபதாம் நூற்றாண்டின் எக்சிஸ்டென்ஷியலிசக் கருத்துகளைப் பாதித்தன.

மனிதனுக்கு எந்த விதப் பொறுப்பும் கிடையாது, கூடாது என்பதை வலியுறுத்தினார் ஸார்ட். அவரே வாழ்வில் பொறுப்பில் லாமல்தான் திரிந்தார். ‘ஸிமோன் த போவார்’ என்னும் பெண்மணி யுடன் வாழ்ந்து, பாரீஸின் இடது கரை காபி கிளப்களில் எழுத் தாளர்களும் கலைஞர் களும் சூழ, பொறுப் பின்மையை போதித் தார். ஆல்பெர் காம்யு, ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் இந்தத் தத்துவம் மிளிர்வதைக் காணலாம். ஜி.நாகராஜ னின் ‘நாளை மற்றுமொரு நாளே’ என்பது தமிழின் முதல் எக்சிஸ்டென்ஷிய நாவல் என்று சொல்ல லாம்.
இரு உலக யுத்தங் களுக்கும், கொரியா, வியட்நாம் வெட்டி யுத்தங்களுக்குப் பின்னும் தோன்றிய உலக இலக்கியங்களில், ஸார்ட் எங்காவது தோன்றியே தீருவார். அவரது ‘இருத்தலும் இல்லாமையும்’ (ஙிமீவீஸீரீ ணீஸீபீ ழிஷீtலீவீஸீரீஸீமீss) என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம்.
சிந்தனையும் பிழையும்

நம் சிந்தனை, மறதி, சிந்திக்கும் போது ஏற்படும் சில பிழைகள், இப்பிழைகள் ஏற்படும் பிண்ணனி இவை குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை சமீபத்தில் படித்தேன். காட்சிப் பிழை, சிந்தனைப் பிழைகளை கட்டுரையாசிரியர் சுவாரசியமாக விளக்குகிறார்.

அனைத்தையும் நினைவில் கொள்ளும் மறதியே இல்லாத ஒருவருடன் ஒரு உளவியலாளரின் அனுபவங்கள், போர்கேயின் கதையில் வரும் ஒரு பாத்திரம், மறதி இன்றி அதீத நினைவாற்றல் தேவைதானா - இப்படி பல சுவாரசியமான செய்திகள், கேள்விகளை இக்கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடுகிறார். கண் அளக்காததையா கை அளக்கும் என்று சொல்வதுண்டும். அது குறித்தும் இவர் பேசுகிறார்.

அறிவாற்றல் என்பதில் பிழைகளுக்கு என்ன இடம் என்பதையும் இவர் விளக்குகிறார். நான் சிந்திக்கிறேன், எனவே பிழை இழைக்கிறேன் என்ற தலைபு தெகார்த்தேயின் நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கிறேன் என்பதை பகடி செய்வது போல் தோன்றினலும் அது சரிதான் என்பதை கட்டுரையாசிரியர் நன்றாகவே விளக்கியிருக்கிறார்.

கலைச் சொற்கள் அதிகம் இருந்தாலும் இக்கட்டுரையை சிறிது முயற்சி செய்தால் படித்து விடலாம். முதலில் என்னதான் சொல்கிறார் என்பது புரியாதது போல் தோன்றினாலும் மறு வாசிப்புகளில் கட்டுரையாசிரியரின் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். நம் சிந்தனைக்கு நல்ல விருந்துஇக்கட்டுரை.

என் அலுவலகத்தில் நான் அனைவருக்கும் அவ்வப்போது கட்டுரைகளை, அறிக்கைகளை பரிந்துரைப்பதுண்டு. அப்படி அண்மையில் இதைப் பரிந்துரைத்தேன்.

Gerd Gigerenzer- I Think, Therefore I Err- Social Research Vol 72 No 1 Spring 2005
வெங்கட் சாமிநாதன்,மு.மேத்தா, ஒரு தொகுப்பு - ஒரு குறிப்பு

வெங்கட் சாமிநாதன் (வெ.சா) மு.மேத்தாவின் கவிதைத்தொகுப்பினைப் பற்றி எழுதிய அந்தப் புகழ் பெற்ற வாசகத்தினை அத்தொகுப்பில் பார்த்ததாக நினைவு. எந்தப் பதிப்பு என்பது நினைவில்லை, ஆனால் நூலின் உள்ளே பிறர் கருத்துக்களுடன் இதுவும் இடம் பெற்றிருந்தது என்று நினைக்கிறேன். தமிழ்ப் புதுக்கவிதை மேத்தாவின் கன்ணீர்ப்பூக்களைத் தாண்டி சென்றுவிட்டது, அது போல் இலக்கிய விமர்சனமும் அந்த புகழ் பெற்ற வாசகத்துடன் நின்றுவிட வில்லை.வெ.சாவிற்கு அது ஆயுள் சாதனையாகத் தெரியலாம். கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்குப் பின் அதற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மிகக் குறைவானதுதான், அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பாக குறிப்பிடலாம்.

வறட்டு மார்க்சியவாதிகளை வெ.சா விமர்சித்தார், அதை விட சிறப்பான விமர்ச்னம் மார்க்சியத்திற்குள்ளிருந்தே வந்தது. வானம்பாடிகள் குறித்து கோவை ஞானியும் எழுதியிருக்கிறார். வெ.சா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வானம்பாடிகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ்ப் புதுக்கவிதையில் சில விரும்பத்தக்க மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்பது உண்மை.

வெ.சா விமர்சித்த வறட்டு மார்க்சியவாதிகளின் கருத்துக்களும், அவரது விமர்சனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மு.மேத்தா பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார், வரலாற்றுப் புதினம் எழுதினார், திரைப்படம் தயாரித்தார், கணக்கற்ற மேடைகளில் கவிதைகள் வாசித்தார். இவ்வளவு செய்தவர் கண்ணீர் பூக்களின் 31வது பதிப்பு விழாவில் அம்மேடையில் வெ.சா விற்கும் ஒரு இடம் தந்து அந்த புகழ் பெற்ற வாசகத்தினை வெ.சா கூற கூடியிருந்தோர் கேட்கும் வண்ணம் செய்திருக்கலாம். இப்போதும் கூட காலம் கடந்துவிட வில்லை. இனி அடுத்து கண்ணீர் பூக்களின் பதிப்பு விழாவொன்றில் கூட இதைச் செய்யலாம். அதில் வெ.சா காலம் விருது பெற்றதை பாராட்டி நான்கு வாக்கியங்கள் கூறலாம்.

நான் என்னுடைய 18 வது வயதில் வெ.சா வின் இரண்டு நூல்களை (பாலையும் வாழையும், ஒர் எதிர்ப்பின் குரல்) முதன் முறையாகப் படித்தேன். இவர் கருத்துக்கள் வித்தியாசமாக உள்ளன என்று முதலில் படித்த போது தோன்றியது.ஆனால் ஒராண்டிற்குள் அவர் எழுத்தில் உள்ள குறைகள், போதாமைகள் தெரிந்திவிட்டதாலும், அடுத்து நான் படித்த அவரது கட்டுரைகளும் தொகுப்பிலிருந்த கட்டுரைகள் போல் இருந்ததாலும் சலிப்புதான் ஏற்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்துப் படிக்கும் போது ஒரு தேர்ந்த பதிப்பாசிரியர் இக்கட்டுரைகளை அவை உள்ள நீளத்தில் மூன்றில் ஒரு பங்காக தந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. அவரது பல கட்டுரைகளில் சப்தம் (noise) அதிகம் சரக்கு குறைவு. ஆனால் அவை வெளியான காலத்தில் அவை வரவேற்பினைப் பெற்றதை நான் புரிந்து கொண்டேன். இரண்டு கிணறுகளில் இருந்த தவளைகளுக்கிடையே நடந்த 'விவாதம்' அது.

இணையத்தில் வெ.சா வின் எழுத்துக்களைப் படித்த போது அவரிடம் புதிதாகச் சொல்வதற்கு அதிகம் இல்லை, இன்னும் பழைய சட்டகங்களையே பயன்படுத்துகிறார் என்பது தெளிவானது. கண்ணீர் பூக்களுக்கு வெ,சா வைத்த அதே விமர்சனத்தினை அதாவது அந்த வாசகத்தினை சற்றே மாற்றி வெ.சாவின் இலக்கிய விமர்சனங்கள் குறித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இன்று வெ.சா அன்று எழுதியதை அப்படியே மறுபிரசுரம் செய்ய என்ன தேவையிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே மறுபிரசுரம் செய்தாலும் வெ.சா வின் மீள்பார்வை என்ன என்பதையாவது அவர் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.அப்படி இல்லாத போது வெ.சாவின் கருத்துக்களை அறிமுகப்படுத்தி, முப்பதாண்டுகளுக்கும் நுன் அவை எழுதப்பட்ட சூழ்நிலையை விளக்கி, இன்று அவற்றின் மீதான ஒரு மதீப்பீட்டினை முன் வைக்கும் கட்டுரை ஒன்று அந்த தொகுப்பில் இடம் பெறுவது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

எதிர்ப்பின் குரல் தொகுப்பிலிருந்த கட்டுரைகள் இன்று வாசகர்கள் படிப்பது அவசியம் என்று வெ.சாவோ அல்லது வெளியீட்டாளரோ கருதினால் அத்தொகுப்பினை வெ.சாவின் பின்னுரையுடன் மறு பிரசுரம் செய்யலாம் அல்லது அதிலிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பினை கொண்டுவந்திருக்கலாம். வெ.சா கடந்த 10-15 ஆண்டுகளில் கவிதை பற்றி எழுதியவற்றை ஒரு தொகுப்ப்பாக கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறின்றி எதிர்ப்பின் குரலில் 'தேங்கிப் போன' கட்டுரைகளையும், கடந்த 10-15 ஆண்டுகளில் எழுதப்பட்டவற்றிலிருந்து கவிதை பற்றி எழுதப்பட்டவற்றையும் ஒரே நூலாக கொண்டுவருவதற்கான தேவை அல்லது நியாயம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
ஒரு பின்னூட்டம்


ப்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டி அந்நியன் பேசும் வசனங்கள் அபத்தம், ஒரு மேடைப்பேச்சு என்ற அளவில் கூடசகிக்க முடியாதவை.50களில்,60களில் திமுக முன் வைத்த வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, அங்கே சிந்திரியில் உரத் தொழிற்சாலை, இங்கே முந்திரி தொழிற்சாலை ரகத்தினி விட அபத்தமானவை.

அதை கேட்டு ஆமோதிக்கிற நீங்கள் முதலில் பொருளாதார வளர்ச்சி குறித்த அடிப்படைகளையும், கிழக்காசிய வளர்ச்சி முன்மாதிரி குறித்த் விவாதங்களையும் அறிய முயற்சி செய்யுங்கள்.ஜ்ப்பான் இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது நவீனமடையத்துவங்கியது போருக்கு வெகு முன்பாகவே.சிங்கப்பூர் பெரும் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது.ஒரு நகரக் குடியரசில் அது சாத்தியம், ஆனால் அங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது.சீனாவில் ஒரு கட்சி ஆட்சி , நீங்கள் நினைத்தபடி திரைப்படம் எடுக்க முடியாது, அரசை விமர்சித்தால் சீர்த்திருத்த மையங்கள், அதாவது சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டியிருக்கும்.மலேசியாவிலோ அல்லது தைவானிலோ அல்லது சீனாவிலோ இது மாதிரி படம் எடுக்க முடியுமா. இந்தியாவில் சாத்தியம். சுஜாதாவிற்கோ சங்கருக்கோ சமூக அக்கறை கிடையாது. எதையாவது வைத்து காசு பார்க்க வேண்டும்,.இவர்கள் சராசரி இந்தியனை விட மோசமானவர்கள்தான். இவர்கள் ஒட்டுண்ணிகள் என்றே கருதுகிறேன்.

பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசும் வசனம் எவ்வளவு அபத்தம் என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதலாம். ஆனால் இங்கு சுஜாதா என்கிற ஒரு மனிதன் எழுதுகின்ற அபத்தங்களுக்கும், அதற்கு கிடைக்கிற மரியாதையும் பார்க்கும் போது உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.
முட்டாள்கள் இருக்கும் வரை சுஜாதாவிற்கும், சங்கருக்கும் கவலையில்லை.

this is my response posted in http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_18.html
ஒரு 'பொன்மொழி'

வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு பொன் மொழி கீழே தரப்பட்டுள்ளது. அதை உதிர்த்தவர் யார்என்பதை ஊகிக்க முடிகிறதா ?

Avoid blogs, they are endless ego trips.

சுஜாதாவைக் கேட்காதீர்கள்

குமுதத்தில் சுஜாதாவைக் கேளுங்கள் பகுதியிலிருந்து ஒரு கேள்வி-பதில்

கலாமுடன் உலக நாடுகள் சுற்றுப் பயணம் சென்றவர்கள் ‘நானோ டெக்னாலஜி’ பற்றித் தெரிந்து கொண்டார்களாம். அது என்ன நானோ டெக்னாலஜி?
_ தி. ராஜி, திருநெல்வேலி.

நானோ என்பதற்கு அதி நுட்பமான என்று பொருள். மைக்ரோ என்பது பத்து லட்சத்தில் ஒரு பகுதி. நானோ அதைவிட ஆயிரம் மடங்கு நுட்பமான சில்லுகளும் அதற்கொத்த உதிரிபாகங்களும் கொண்டு சாதனங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பம். இந்த டெக்னாலஜி மூலம் எறும்பு சைஸில் ரோபாட்டுகள் செய்து நம் உடலுக்குள் அனுப்பி ரிப்பேர் செய்யலாம். பாக்டீரியா சைஸில் ஒரு கெமிஸ்ட்ரி ஆராய்ச்சி சாலையையே அனுப்பி பெட்ரோல் கூட உற்பத்தி செய்யலாம் என்கிறார்கள். அமெரிக்கா எம்.ஐ.டி.யின் ஏஐ (செயற்கை அறிவு) ஆராய்ச்சி சாலையின் டைரக்டர் ராட்னி ப்ரூக்ஸ் எழுதிய கட்டுரையைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும். சிலிக்கான் சிப்களையும் டி.என்.ஏ. ஜீனோம்களையும் கலக்கும் பாக்டீரியல் ரோபாட்டுகள் ஆராய்ச்சி. மரத்தை நட்டு மரமாகி அதை வெட்டி பாளங்களாக்கி மேஜையாக மாற்றுவதற்குப் பதில் மேஜையாகவே வளரக்கூடிய விதைகளைத் தயாரிக்க முயற்சி செய்கிறார்கள்.
அது போல் கண்ணுக்குள் சிலிக்கன் சிப் ஒன்றை வைத்து நேரடியாக மூளைக்கு காட்சி செய்திகள் அனுப்பும் ஆராய்ச்சி நடக்கிறது. இந்த டி.என்.ஏ., சிலிக்கன் திருமணம் நானோ டெக்னாலஜி மூலம்தான் சாத்தியம். ஐம்பது வருஷத்தில் மனிதனும் மெஷினும் இரண்டறக் கலந்து விடுவார்கள்.
---------------------------------------------------------------------------------

சுஜாதா குறிப்பிடும் அந்தக் கட்டுரை 2002ல் எழுதப்பட்டது. ஆனால் அதிநுண் தொழில்நுட்பம் மூலம் இதெல்லாம் சாத்தியமா என்பதையே கேள்விக்குட்படுத்துவோரும் இருக்கிறார்கள். செயற்கை அறிவாற்றலில் கணினி பிரக்ஞையுள்ள மனித மனதின் வளர்ச்சியை அடைந்து விடும், மனித மூளையைப் போன்ற அல்லது அதற்கு ஒப்பான கணினியை உருவாக்கமுடியும், இது மனித மனம்,மூளை போல் சிந்திக்கும்த் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். இது Strong AI
என்று அழைக்க்ப்படுகிறது.

இதே போல் அதி நுண் தொழில்நுட்பத்திலும் ஒரு சாரார் ராட்னி பூருக்ஸ் போல் அதி நுண் தொழில் நுட்பம் மூலம் இவையெல்லாம் சாத்தியம் என்று கருதுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினர் இது குறித்து அவநம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் இன்னும் அறிவியல் புனைகதை என்ற நிலையில் இருக்கின்றன. அதி நுண் தொழில் நுட்பம் மூலம் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரமுடியும், அதற்காக அதீத எதிர்பார்ப்புகளைக் உண்டாக்கத் தேவையில்லை என்று கருதுகிறார்கள்.

Critics are not so optimistic. Besides the usual doomsday predictions of self-assembling nano-robots running amok, at least one well-placed critic challenges the feasibility of realizing the ultimate vision. Nobel laureate Richard Smalley is no doomsayer, since he co-founded one of the most promising nanotech companies (Carbon Nanotechnologies). Nevertheless, Smalley's poignant criticism is that molecular auto-assembly, as proposed by Feynman and Drexler, is just too ambitious. In particular, Smalley says that the "fat-" and "sticky-finger" problems will prevent the success of the necessary auto-assembly steps. Others claim that such fine-scale materials will be too brittle, lacking the strength for macroscopic projects. Still others charge that the second law of thermodynamics will foil the ultimate vision (nanoscale friction generates too much heat, essentially making it impossible to scale up from nano-sized to macroscopic devices).

அதிநுண் தொழில்நுட்பத்தின் சமூக, சூழல் தாக்கங்கள், அத்தொழில்நுட்பம் யார் கையில் இருக்கிறது, யார் இதன் போக்கினைத் தீர்மானிக்கிறார்கள் என்பது குறித்தும் இன்று பரவலாக விவாதம் நடக்கிறது. ஆனால் சுஜாதாவின் பதில் ஒரு ஜல்லியடிக்கும் பதிலாக இருக்கிறது.

பத்து வாக்கியங்களில் இதைவிடத் தெளிவான பதிலைத் தரமுடியும். அப்துல் கலாம் அதி நுண் தொழில் நுட்பம் குறித்து பேசியிருக்கிறார், அதன் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.சுஜாதா அதையாவது சுட்டிக் காட்டி எழுதியிருக்கலாம்.

காலச்சுவட்டில் வெங்கட் அதிநுண் தொழில் நுட்பம் குறித்து எழுதினார். அது தொடர்ந்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. வெங்கட் காலச்சுவட்டில் தொடர்ந்து அதி நுண் தொழில் நுட்பம் குறித்து எழுத வேண்டும். அல்லது தன் வலைப்பதிவிலாவது எழுத வேண்டும்.

இத்தொழில் நுட்பத்தின் சமூக, சூழலியல் தாக்கங்கள், இன்னும் பிற அம்சங்கள் குறித்து நான் படித்து வருகிறேன். இது குறித்து படிக்க என்று ஒரு பட்டியல் தரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

அண்மையில் நான் படித்த ஒரு சுவாரசியமான, முக்கியமான கட்டுரை* இத்தொழில்நுட்பத்தினை ஆதரிப்போர் அதை எப்படி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறது. ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்க எப்படி முயற்சி செய்தார்கள் என்பதை விவரிக்கிறது. தொழில்நுட்பத்தினை முன்னிலைப்படுத்த அது குறித்து மிகவும் சாதகமாக பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது. இங்கு சமூகத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் உள்ள உறவு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. செலவழிக்க ஒதுக்கப்படும் தொகையில் எத்தகைய ஆய்வுகளுக்கு (உ-ம் ராணுவ பயன்பாடு) எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது, அது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

லட்சக்கணக்கில் விற்கும் வார இதழில் ஒரு முக்கியமான தொழில் நுட்பம் குறித்து உருப்படியாக ஒரு பத்து வாக்கியங்கள் கூடவெளியாவதில்லை, ஒன்றை விளக்கும் போது வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்கள் தரப்படுவதில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.அதி நுண் அளவு என்பதை ஒரு படம் மூலம் விளக்கியிருக்கலாம்.

ஆனால் இங்கு அது குறித்த அக்கறை பதில் தருபவருக்கும், பத்திரிகையின்ஆசிரியர் குழுவினருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. சுஜாதா எழுதியதிலிருந்து பலவற்றை unlearn செய்தால்தான் கொஞ்சமாவது சரியான புரிதல் கிடைக்கும். அதில் இதுவும் ஒன்று.

*Will small be beautiful? Making policies for our nanotech future -P. McCray-History and Technology- June 2005, vol. 21, no. 2, pp. 177-203
இன்குலாப், காசிஆனந்தன், வைரமுத்து

தன்னுடைய பிறந்தநாளை கவிஞர்கள் தினமாகக் கொண்டாடும் வைரமுத்து இந்த ஆண்டு அதையொட்டி இன்குலாப், காசி ஆனந்தனுக்கு பரிசு வழங்கியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் இதுவே தான் பெற்ற முதல் பரிசு, கடைசிப் பரிசாகவும் இதுவே இருக்கக் கூடும் என்று இன்குலாப் பேசியிருக்கிறார். இன்குலாப், காசி ஆனந்தன் குறித்து வைரமுத்து கூறியிருப்பதில் பெரும்பகுதி உண்மை, ஆனால் தன்னை "கொஞ்சம் சமரசம் செய்துகொள்கிறோம்? " என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது. சமரசம் தவிர வேறெதையும் அவர் செய்து கொண்டதில்லை என்று சொல்லலாம்.

ரஜனிக்கு அன்றும்,இன்றும், அஜித்திற்கு என்று நடிகர்களை துதிபாடும் பாடல்களை எழுதுவதில், நோக்கியா, மாபியா,பிப்டி கேஜி தாஜ்மகால், என்று ஆங்கில வார்த்தைகளை பாடல்களில் புகுத்துவதில் என்று திரையுலகிற்காக தமிழை விற்றுப் பிழைக்கும் வைரமுத்து தரும் விருதினைஇன்குலாப், காசி ஆனந்தன் ஏற்றிருக்கக் கூடாது. கலைஞரை விமர்சித்து இன்குலாப் கவிதை எழுதியிருக்கிறார்.

கண்மணி ராஜம் போன்ற கவிதைகளை எழுதிய இன்குலாப், கலைஞரைப் புகழ்ந்து பாடியிருக்கும் வைரமுத்து தரும் பரிசினை வாங்குவதும், தமிழில் ஆங்கில, பிற மொழி கலப்பினை எதிர்க்கும் காசி ஆனந்தன் , ஆங்கில சொற்களை புகுத்தியும், இன்னும் பல வழிகளில் தமிழை வணிகமயமாக்க உதவும் வைரமுத்து தரும் விருதினை பெறுவதும், அவ்வழாவில் வைரமுத்து 'உணர்ச்சிவசப்பட்டு' சில வார்த்தைகள் சொல்வதும் ஒரு அபத்த நாடககாட்சிகளாகத் தோன்றுகின்றன.

இன்குலாப்பின் கவிதைகள் இன்று இணையம் மூலமே தமிழ் இலக்கியம் அறிந்து கொள்பவ்ர்களுக்குபரிச்சயமற்றதாக இருக்கலாம். சிலர் அவர் கவிதைகளை பிரச்சாரம் என்று நிராகரிக்கலாம். ஆனால்அவர் தன் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர், அதற்காக பல இடையூறுகளை எதிர் கொண்டவர்.இடதுசாரிகள், தமிழ் தேசியவாதிகள், ஈழ விடுதலைப் போராளிகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் அவர். அவர் நாடகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் பாணி எழுத்துக்களையே இணையம் மூலம் அறிந்து கொண்டு அவைதான் சிறப்பானவை என்று நினைப்பவர்களுக்கு இன்குலாப்பின் எழுத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும். அரசியலற்ற அரசியல்தன்மை கொண்ட எழுத்துக்களை அதில் உள்ள அரசியல் தெரியாமல் இதுதான் உன்னத இலக்கியம் என்று கருதும் வாசகர்களுக்கு இன்குலாப், காசிஆனந்தன் போன்றவர்கள் வாழ்க்கைக்கும், கவிதைக்கும் உள்ள இடைவெளி மிகக்குறைவு என்பது பிடிபட சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் இதைப் புரிந்து கொண்டால் சாரு நிவேதிதாவின் வார்த்தையில் சொன்னால் 'தயிர்வடை இலக்கியம்' அவர்களுக்கு சீக்கிரமே புளித்துப் போய்விடும். ஒரு விதத்தில் வைரமுத்துவின் இலக்கியமும் தயிர்வடை இலக்கியம் போன்றதுதான். ஆனால் அது சிற்றிதழ் தயிர்வடைகளை விட பரவலாக கிடைப்பது, ஊடகச் சூடு மூலம் சுடச்சுடக் கிடைப்பது போன்றவற்றால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இன்குலாப்பிற்கு கிடைக்காத சாகித்ய அகாதமி விருது தனக்குத் தேவையில்லை என்று வைரமுத்து கூறுவார் என்று எதிர்பார்க்கக்கூடாது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வைரமுத்து காசி ஆனந்தன்,இன்குலாப்பிற்கு விருது வழங்குவதன் மூலம், அதில் தன் தமிழ்பற்றை வெளிப்படுத்தியும், அக்கவிஞர்களை புகழ்ந்து பேசியும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கீழிருந்து உலகமயமாதல்

ஜுலை மாத காலச்சுவட்டில் வெளிவர இருக்கும் ஒரு நூலிலிருந்து ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. அந்தப் பகுதிஇங்கே. அதன் மூலம் இங்கே.சிங்கராயர் நன்றாக மொழிபெயர்க்கத் தெரிந்தவர்.நன்கு படித்து, புரிந்து கொண்டு மொழியாக்கம் செய்பவர். நிகழில் சில புத்தகங்களை சுருக்கி கட்டுரைகளாகத் தந்துள்ளார். அவரது மொழிபெயர்க்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. இருப்பினும் இந்த மொழிபெயர்ப்பு பகுதி எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

கீழிருந்து உலகமயமாதல் குறித்து நான் படித்தவற்றுள் முக்கியமான ஒன்றாக ஒரு செவ்வியினைக் கருதுகிறேன்.அது குறித்த விபரங்கள் கீழேInterview with Boaventura de Sousa Santos by Roger Dalea; Susan RobertsonGlobalisation, Societies and Education, July 2004, vol. 2, no. 2, pp. 147-160(14)

மொழிபெயர்க்கப்படும் நூல் 2000த்தில் வெளியாகி 2002ல் புதிய ன்னுரையுடன் வெளியானது. கீழிருந்து உலகமயமாதல் குறித்து இன்று பேசும் போது உலக சமூக மன்றம் போன்றவற்றையும், சில மாற்று முயற்சிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். 1999ல் இருந்த நிலை இன்று இல்லை. நிலைமை இன்னும் சிக்கலாக மாறியுள்ளது.


மேலும் கீழிருந்து உலகமயம் அல்லது உலகமயமாதல் என்ற சொற்றொடர் பல் வேறு அர்த்தங்களில் புழக்கத்தில் உள்ளது.உலகமயம் அல்லது உலகமயமாதல் என்பதும் பல்வேறு விதமாக பொருள் கொள்ளப்படும் போது உலகமயம் என்பதை எந்த இடத்தில் எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் அல்லது எவற்றைச் சுட்டக் பயன்படுத்துகிறோம் என்பதை தெளிவுபடுத்துவது வாசகர்களுக்கு உதவும்.இந்த நூலில் உலகமயம் குறித்து ஒரு அறிமுகக் கட்டுரையும் இடம் பெற்றால் நல்லது.

தமிழில் நானறிந்த வரையில் உலகமயம் குறித்து ஒரு சிலரே எழுதியுள்ளனர். அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, ஞானி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பும், தலித்களும் உலகமயமும் என்ற தலைப்பில் ராஜதுரை எழுதிய ஒரு சிறு நூல்- இவற்றையே நான் படித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை இவை திருப்தி தரவில்லை, இவை மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. தமிழில் உலகமயமாதல் குறித்த பல்வேறு கண்ணோட்டங்களை அறிமுகப்படுத்தும் ஒரு கட்டுரை தொகுப்பிற்கு தேவை இருக்கிறது.

உலகமயமாதலும் பண்பாடும்/கலாச்சாரமும் குறித்தும் தமிழில் நூற்களுக்கும், கட்டுரைத் தொகுப்புகளுக்கும் தேவை இருக்கிறது .இப்படி பல்வேறு கண்ணோட்டங்களும், விவாதங்களும் அறிமுகம் ஆகாத போது உலகமயமாதல் குறித்து ஒரு நூல் அல்லது நான் குறிப்பிட்ட நூல்களின் அடிப்படையில் பெறப்படும் புரிதல் மிகவும் குறைபாடு உடையதாகவே இருக்கும்.
அந்நியனும், தி.க வும்


காஞ்சி பிலிம்ஸ் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கே தரப்படுகிறது.இதை ஒரு கட்டுரையாக எழுதி இருக்க வேண்டும்.இருப்பினும் பின்னர் எழுதக் கூடும் என்பதால் இங்கு அதை இடுகிறேன்.

உண்மையில் வெளியான விமர்சனம் அந்நியன் என்ற திரைப்படத்தில் உள்ள பார்ப்பனீயத்தை மட்டும் பேசவில்லை. அந்நியனை முன் வைத்து இங்கு செய்யப்படுவது மலினமான ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான விஷமப் பிரச்சாரம்.

எனக்கு அந்நியன் மீது கடுமையான விமர்சனம் உண்டு. ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்த மாட்டேன். உண்மையில் வெளியான விமர்சனம் அந்நியன் என்ற திரைப்படத்தினை பார்ப்பன எதிர்ப்பு என்ற கண்ணோட்டதில் பார்ப்பதால் மிகவும் வலுவற்று இருக்கிறது. தி.க வின் வழக்கமான பார்ப்பன எதிர்ப்பு பிரச்சாரம் என்று நிராகரித்து விடும் வகையில் இருக்கிறது.

இதையும் தாண்டி விமர்சனம் சென்றிருக்க வேண்டும். இது போல் தனி நபர் சட்டத்திற்கு புறம்பாக தான் குற்றவாளிகள் என்று கருதுகிற நபர்களை தண்டிப்பது இதற்கு முன்னரும் பல படங்களில் வந்துள்ள கருத்துதான். அவற்றையெல்லாம் உண்மை இப்படி விமர்சித்துள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.அந்நியன் மட்டுமே பிரச்சினைக்குரிய படம் என்று கருத முடியாது. மலையாளத்தில் வெளியான 4திபீப்பள் என்ற படத்தின் பாதிப்பினையும் அந்நியனில் காணலாம். அது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது.

இது போன்ற படங்கள் வெகுஜன உளவியலின் சில அம்சங்களை குறி வைத்து எடுக்கப்படுகின்றன, நான் சிவப்பு மனிதன், ரமணா என்று பல படங்களையும், தெலுங்கில் வெளியான பல படங்களையும், 1980 களில் வெளியான சில இந்திப் படங்கள், செல்வமணி இயக்கிய அரசியல் போன்ற படங்கள் என்று ஒரு பட்டியலே தர முடியும். அந்நியன் இவற்றுடன் வேறு படும் புள்ளிகள் முக்கியமானவை, ஆனால் இத்தகைய கதை(கள்) புதிதல்ல. பிளாவாளுமை என்பதும் புதிதல்ல, ஏற்கனவே விடாது கருப்பு என்ற தொடரில் இது இடம் பெற்றுள்ளது.

உண்மை 1950களில் பயன்படுத்தப்பட்ட சட்டகத்தினையே பயன்படுத்துகிறது.
அதன் பலவீனங்கள் இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டன.ஆனால் தி.கவின் பகுத்தறிவு வளர்ச்சி இன்றி இன்று ஒருவிதமான பழைமைவாதமாக உள்ளது. இதனால் விமர்சனத்தில் பரிதாபகரமான சில வாக்கியங்கள் இடம் பெறுவது நமக்குத் தெரிகிறது

"திரைப்பட இயக்குநர் ஒரு பக்கச்சார்பாக (வர்க்க-சாதி) நின்று தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ற காட்சி களை தொகுத்து நம்முன் வைக்கும் போது, திறந்த மனதுடன் அவர்களுடன் விவாதிக்க வாய்ப்பற்றுப் போய் விமர்சகனும் தனது வர்க்க சாதிக் கண்ணோட் டச் சார்புக் கேற்ப தனது நியாயங்களை முன் வைத்து சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது."

உண்மையில் உள்ள விமர்சனத்தில்
"சமீப காலத்தில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கூலி ஏழைவிவசாயிகள் வறுமையின் காரணமாக விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும் நாம் கேள்விப்பட்டதுதான். இதற்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கத் தின்/ அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு உயர்தட்டில் வாழும் ஷங்கரும், சுஜாதா ஐயங்காரும் இல்லையா?"

என்று இருக்கிறது.

மிகவும் நியாயமான கேள்வி எதுவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

யார் அந்த இதற்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கத் தின்/ அதிகார வர்க்கத்தின் என்று கேட்பதை விட யார் இன்று அதிகார ஆளும் வர்க்கம் என்று கேட்பது முக்கியமானது. இங்கு திடீரென்று வர்க்கம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்டோம் என்றால் உண்மையின் தர்க்கம் எவ்வளவு வலுவற்றது என்பது தெளிவாகிவிடும்.

விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------
இட்ட பின்னூட்டம்

லாலுவையும், அன்று வி.ராமசாமி என்ற நீதிபதியையும் ஆதரித்த,ஆதரிக்கும் உண்மை,தி.க வினரும் அன்னியனை விமர்சிக்கட்டும். எத்தனை ஊழ்ல் பேர்வழிகளை பார்ப்பனரல்லோதோர் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்தோம் என்பதைச் சொல்லட்டும், தைரியமிருந்தால். எனக்கு தி.க மீதும், சங்கர்- சுஜாதா மீதும் விமர்சனம் உண்டு.இங்கு ஒன்றைச் சொல்லி இன்னொற்றை நான் ஆதரிக்க மாட்டேன்.
ஒரு அவசரப் பதிவு- உங்கள் மேலான கவனத்திற்கு

சக வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் வணக்கங்கள். நவம்பர் 2003 முதல் நான் தமிழில் வலைப்பதிந்து வருகிறேன். தொடர்ந்து இடைவெளி இல்லாமல் என்று கூற முடியாது. உங்கள் ஆதரவிற்கும்,கருத்துக்களுக்கும் நன்றி. அவற்றை நான் மதிப்பதாலும், உங்களிடம் சிலவற்றை தெளிவுபடுத்த, விவாதிக்க விரும்புவதாலும் இந்தக் குறிப்பினை இட்டுள்ளேன். இது ஒரு தன்னிலை விளக்கம்.

தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் கருத்தினைக் கூறும் சுதந்திரம் முக்கியமானது.இணையத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்ப்டும் சுதந்திரம் இது. இது முக்கியமான உரிமை என்று நான் கருதுகிறேன். எனவேதான் என்னுடைய வலைப்பதிவில் தன் பெயரினை அல்லது தன்னைப் பற்றி வேறு தகவல்கள் தர வேண்டிய கட்டாயமின்றி கருத்துக்களை பதிய வழி இருப்பதை சிலர் நீக்கிவிடுமாறு ஆலோசனை கூறியும் நான் நீக்கவில்லை.

அதே சமயம் என்னுடைய வலைப்பதிவில் யார் எந்த இணைய முகவரியிலிருந்து படிக்கிறார்கள், பின்னூட்டம் இடுகிறார்கள் என்பதை சேகரிக்கும், பதிவு செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில் அவ்வாறு சேகரிப்பதும் ஒருவர் தன் அடையாளத்தினை வெளிக்காட்டாமல் படிக்க,பின்னூட்டமிட இடைஞ்சலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இணைய வர்த்தக தளங்களில் கடனட்டைகள் போன்றவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுவதாலும், பிற காரணங்களுக்காவும் இவ்வாறு சேகரிப்பதும், பதிவு செய்யவும் தேவை இருப்பதை நான் அறிவேன். வலைப்பதிவு என்பது வணிக தளம் அல்ல. இங்கு சுதந்திரமாக கருத்துக்களை விவாதிக்க உரிமை உண்டு, உங்கள் சுதந்திரத்தினை மதிக்கும் நான் அதற்கு இடமளிக்கும் வகையில்தான் வலைப்பதிவினை வைத்திருக்க வேண்டும்.

புனை பெயர்களில் எழுதுவது, தன் சொந்தப் பெயரிலும், புனைபெயர்(களில்) வலைப்பதிவு(கள்) வைத்திருப்பதும், எழுதுவதும் என்னைப் பொருத்தவரையில் தனிப்பட்ட நபர்களின் தெரிவுகள். அதில் நான் தலையிட மாட்டேன். ஏனெனில் சமயங்களில் புனை பெயரில் எழுதுவது குறிப்பிட்ட ஆளுமை, பெயர் என்பதற்கு அப்பால் சிந்திக்க உதவுகிறது.

காங்கிரஸின் தலைவராக இரண்டாவது முறை (3வது முறை?) தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நேரு அது குறித்து ஒரு கட்டுரையினை சாணக்யா என்ற பெயரில் எழுதினார். அதில் அவர் மீது, காங்கிரஸ்மீதும் விமர்சனக் குறிப்புகள் இருந்தன. அக்கட்டுரையை அவர்தான் எழுதியது என்று தெரியாமல் படிக்கும் எவரும் அதில் உள்ள கருத்துக்களை ஒரு நடுநிலையான விமர்சகரின் கருத்துக்கள் என்றேகொள்வர்.

எனவே ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது தான் விரும்பிய வகையில் பிற பெயர்களிலும் , பெயர் தெரிவிக்காமலும் கருத்தினை தெரிவிக்கும் சுதந்திரத்தினையும் உள்ளடக்கியதுதான். இது பலருக்குப் புரிவதில்லை. எந்த சுதந்திரமும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதை நிராகரிக்கும் போக்கினையா நாம் கடைப்பிடிக்க முடியும். என் கருத்துக்களை படிக்கலாம், சர்சிக்கலாம், இங்கு ஆளுமை முக்கியமல்ல, கூறும் கருத்துக்களே முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஆகவேதான் ஒருவர் தன் பெயரில் கூறினாலும், புனை பெயரில் கூறினாலும், அல்லது பெயரினை தெரிவிக்காமல் எழுதினாலும் அதை நான் வலைப்பதிவில் படிக்கத் தயாராக இருக்கிறேன்.

அது போல் யார் வேண்டுமானலும் கருத்துச் சொல்ல இடமளிப்பதும் இன்றியமையாயது என்று நான் கருதுகிறேன். ஆகையினால் யாகூ 360 வலைப்பதிவு சில வசதிகளை அளித்தாலும் அதை நான் வலைப்பதிய பயன்படுத்துவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.

ஒருவர் பெயரில் இன்னொருவர் பின்னுட்டமிடுவது ஒரு பெரிய பிரச்சினையாகவில்லை என்னைப் பொறுத்த வரையில்.அப்படியே இன்னொருவர் எழுதினாலும் என் எழுத்து,கருத்துக்களுடன் பரிச்சயமுடையவர்களால்என் எழுத்தினை, கருத்தினை அடையாளம் காண்பது சிரமம் அல்ல. நான் கருத்துக்களை கார சாரமாக விவாத்திருக்கலாம், ஆனால் தரக்குறைவாக எழுதுவதில்லை, தனி நபர் மீது அவதூறு பரப்புவதில்லை,ஜாதி,மதம்,இனம், பாலினம் ஆகியவற்றில் பெயரில் வசை பாடுவதில்லை என்பது தெரிந்த ஒன்று. ரோசா வசந்துடன் சர்ச்சை எழுந்த போது அவர் பதிவில் பின்னூட்டமிடுவதில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவன் நான். அவர் பதிவினைப் படிக்கிறேன் அங்கு பின்னூட்டமிடுவதில்லை அவ்வளவுதான். எனவே நான் என்ன எழுதுவேன் என்பதை ஊகிப்பது ஒரள்விற்கேனும் சாத்தியம்.

இப்போது சில வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவில் இந்த இணைய முகவரியிலிருந்து இந்த நேரத்தில் பின்னூட்டமிடபட்டது என்ற தகவல்களைத் தருகிறார்கள். இத்தகவல்களை சேகரிக்கிறோம் என்று இவர்கள் வெளிப்படையாக தங்கள் வலைப்பதிவுகளில் கூறி இருக்கிறார்களா.அப்படி தகவல் சேகரித்தால், தகவல் சேகரிக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் கூறி, அதற்கான காரணங்களை முன் வைப்பதுதானே முறையும், நியாயமும் கூட. பல தளங்களில் இது குறித்து வெளிப்படையான அறிவிப்பும், பிரைவஸி பாலிசி குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.

வணிக நோக்கற்ற வலைப்பதிவுகளில் ஏன் இந்த குறைந்தபட்ச நாகரிகம் கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்த நாகரிகம் தேவை என்று கருதுகிறேன். போலிப் பின்னூட்டங்கள்,ஆபாசப் பின்னூட்டங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும் இத்தகவல்கள் இப்பிரச்சினைகள் எழும் முன்னரே சேகரிக்க்ப்படுகின்றன, இப்பிரச்சினை தங்களுக்கு இருப்பதாக கூறாத வலைப்பதிவாளர்களும் தகவல் திரட்டுவதாகவே தோன்றுகிறது. ஆனால் இவர்கள் யாரும் ஏன் தங்கள் வலைப்பதிவினில் வெளிப்படையாக இது குறித்து ஒரு குறிப்பினை அல்லது வலைப்பதிவில்ஒரிடத்தில் என்னென்ன தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதை எழுதவில்லை. இப்படி சேகரிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது அதில் ஒப்புதல் இல்லை என்றால் அதை தெரியப்படுத்துங்கள் என்று கூறும் எண்ணம் கூட ஏன் இல்லை. தாங்கள் பெரிய தொழில் நுட்பவல்லுனர்கள், நாம் யாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கா.

தமிழ்மணத்தில் இப்படி தகவல் திரட்டும் வலைப்பதிவுகளை அடையாளம் காட்ட வசதி இருக்க வேண்டும். வலைப்பதிவிம் பெயருடன் இது குறித்த தகவல்களைக் குறிக்கும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அப்படி தகவல் ஏதும் திரட்டப்படவில்லை என்றால் அதுவும் அடையாளம்காட்டப்பட வேண்டும். இப்போது யார் எந்தெந்த தகவல்களை திரட்டுகிறார்கள், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இப்படி திரப்பட்டும் தகவல்கள் எந்தளவு நம்பகமானவை என்ற கேள்விக்குள் இப்போது நான் போகவில்லை.

இக்கேள்விகளுக்கு நாம் விடை கண்டாக வேண்டும். வலைப்பதிவுகளில் திரட்டப்படும் தகவல்கள் அவைபயன்படுத்தப்படும் விதம் இதில் உள்ள தார்மிக, அறநெறிப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

முதற்கட்டமாக் அப்படி தகவல் திரட்டாத வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுகளை அதை தெளிவுபடுத்த வேண்டும். நான் அதைச் செய்யப்ப் போகிறேன். என்னுடய வலைப்பதிவுகளில் அவற்றை படிக்கும், பின்னுட்டமிடும் நபர்கள் குறித்த தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் உலாவி, இணைய முகவரி உட்பட எந்த தகவலும் திரட்டப்படுவதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். முன்னரும் இப்படி தகவல் திரட்ட்டியதில்லை. இனியும் அதற்கான தேவை இருக்கும் என்று நான் கருதவில்லை. அதாவது நீங்களாக விரும்பித் தரும் தகவல்களே இடம் பெறுகின்றன, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தகவலும் திரட்டப்படுவதில்லை.

அறிவிப்பின்றி தகவல் திரட்டுவதாக நான் அறிய வந்துள்ள வலைப்பதிவுகளை இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும் வரை, தாங்கள் என்னென்ன தகவல்கள் திரட்டுகிறோம் போன்றவற்றை சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்கள் தெளிவுபடுத்தும் வரை நான் படிக்கப்ப் போவதில்லை, பின்னூட்டமும் இடப் போவதில்லை.

உங்கள் எதிர்வினையினை அறிய விரும்புகிறேன். நான் எழுப்பியவுள்ள சில கேள்விகளை நாம் விவாதித்து விடை காண முடியும். அது பரஸ்பர நம்பிக்கையினையும், புரிதலையும் அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்.
இசைப் பாம்பு

இந்த 'இசைப்பாம்பு' ஜப்பானில் உருவாக்கப்பட்டது. இதில் எழும் இசை
என்ன என்பதை கேட்கும் வசதி இல்லாததால் அது குறித்து ஏதும் எழுத வில்லை.


இடம் இசைக்கருவிகளுக்கான அருங்காட்சியகம், பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

நாள் 9 ஜீலை 2005

நான்கு வலைப்பதிவாளர்களின் படம் :)

இங்கு சிலையாக சுவற்றில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் யார் யார் என்பதை உங்கள் ஊகத்திர்கு விட்டு விடுகிறேன்.

இடம்- ஜெனிவா பல்கலைகழகம் பழைய வளாகம் ஜீலை 2004

கதை சொல்லாமல் படம் பார்க்கவும்

அன்புடையீர்

பிளாக்கரில் உள்ள ஒரு வசதியினை கீழ்க்கண்ட புகைப்படத்தினை இட்டு நான் உங்களைசோதிக்கிறேன். படம் நன்றாகத் தெரிகிறதா.

படத்தில் உள்ள வண்ணங்கள் சரியாகத் தெரியவில்லை என்றால் , உங்கள் கண்களை தேவையானால் மருத்துவரை அணுகி சோதிக்கச் சொல்லவும் அல்லது கணினியின் திரையில் கோளாறு இருக்கிறதா என்று பார்க்கவும்.
இவண்
ரவி ச்ரினிவாஸ்

பி.கு : அழகான பூக்கள், காய்கள்,கனிகள், பெண்கள் புகைப்படங்களுக்கு தங்கமணி, பாலாஜி-பாரி, பெயரிலி, கார்த்திக்ராமாஸை அணுகவும்.

நியுயார்க் மாநிலம் இலையுதிர் காலம் 2003. படம் எடுக்கப்பட்ட இடத்தின் பெயர் நினைவில்லை.

ஒன்று இரண்டு மூன்று நான்கு

1,இன்று ஹெர்மன் ஹெஸ்ஸின் பிறந்த தினம்.ஜுலை 2, 1961ல் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டார். ஜூலை 3 காப்காவின் பிறந்த தினம்.

தற்கொலைக்கு உகந்த தினம் எவை எவை என்று என்னிடம் கேட்காதீர்கள். இருப்பினும் தற்கொலை குறித்து எழுதி விட்டு தற்போது விடுமுறையில் போயிருக்கும் வலைப்பதிவாளர்-எழுத்தாளர்-குறும்பட இயக்குனரை கேட்டால் பதில் கிடைக்கலாம். மற்றப்படி இப்படி அடுத்தடுத்த நாட்களில் ஒரு எழுத்தாளரின் தற்கொலை, இரண்டு எழுத்தாளர்களின் பிறந்த தினம் வருகிறதா என்று கூகுளிலிட்டுப் பார்த்து யாராவது சொல்லலாம்.

2,இன்று இந்தியாவிலிருந்து என் நண்பர் கொடுத்தனுப்பிய இரண்டு நூல்கள் கிடைத்தன.

The History of History : Politics and Scholarship in Modern India- Vinay Lal-Oxford India
Paperbacks-2005 First published in 2003

India's Political Economy 1947-2004 - Francine R.Frankel-Oxford University Press-2005-Hardcover

இவற்றை உடனே படிக்கப் போவதில்லை. சக வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் படித்துவிட்டுஅறிமுகம் செய்து எழுதலாம்.இரண்டும் முக்கியமான நூல்கள். அதுவும் இரண்டாவது நூல் 2005ல்வெளியானது.இதன் முதல் பதிப்பினை பல ஆண்டுகள் முன்பு முழுமையாக வாசித்திருக்கிறேன்.

3,இம்ரானா என்ற பெயர் இப்போது ஊடகங்களில் பரவலாக அடிபடுகிறது. இது போல் ராஜீவ் காந்திபிரதமராக இருந்த போது ஷா பானு என்ற பெயர் அடிப்பட்டது. இம்ரானா குறித்து இந்தக் கட்டுரையில் எதுவும் இல்லை என்றாலும் அந்த சர்ச்சையினைப் புரிந்து கொள்ள இது உதவும். இதை எழுதிய நளினி ராஜன் சென்னை ஆசிய பத்திரிகையியல் கல்லூரியில் கற்பிக்கிறார்.

4,ஜுன் 30துடன் எம்.ஐ.டி பிரஸின் தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை முடிந்தது. நான் நான்கே நான்கு நூல்களைத்தான் இதில் இணையம் மூலம் வாங்கினேன்.

Democracy's Dilemma

Writing on Water

Inventing Modern America

Modernity and Technology

இன்னும் சிலவற்றை வாங்கியிருக்கலாம். இடம்,படிக்க நேரமின்மை, அமேசானில் கிட்டதட்ட எல்லா நூல்களும், அதாவது எனக்குத் தேவையான நூல்கள்,கிடைப்பது போன்ற பல காரணங்களால் நான்கு போதும் என்று பு.க செய்துவிட்டேன்.