நேற்று, இன்று , நாளை

நேற்று இரன்டு திரைப்படங்கள் பார்த்தேன். முதலில் பகேலி என்ற திரைப்படம், பின்னர் அன்னியன். பகேலியைத் மீண்டும் பார்க்க விரும்புகிறேன் - இசை, ஒளிப்பதிவு மற்றும் ராணி முகர்ஜி, ஷாரூக்கானின் நடிப்பிற்காக. அன்னியன் குறித்து பல விமர்சனங்களைப் படித்து விட்டிருந்தாலும் படம் நான் எதிர்பார்த்தை விட மோசமாக இருந்தது. திரைக்கதையிலும், வசனத்திலும் உள்ள குறைகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதலாம். நாகா இயக்கி தொலைக்காட்சியில் தொடராக வந்த விடாது கருப்பை நீளத்தைக் குறைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது அன்னியனை விட பல விதங்களில் சிறப்பானது.ஆனால் அன்னியன் குறித்து தற்சமயம் விரிவாக எழுதும் எண்ணம் ஏதும் இல்லை. ஒன்று இதைப் பற்றி பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். எனவே சிறிது காலம் சென்ற பின் எழுதலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவது அதற்காக நேரம் செலவிட முடியாது இப்போது.


இன்று தமிழக அரசின் உத்தரவு குறித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இது எதிர்பார்த்த வகையிலேயே உள்ளது. அரசும் இத்தகைய தீர்ப்பு வரும் என்பதை ஊகித்தே முதலில் முடிவு எடுத்திருக்கும் என்று தோன்றுகிறது. அதன் மூலம் எதிர்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு குறைத்துவிட்டது. இந்த தீர்ப்பினை முன் வைத்து இந்த ஆண்டு பழைய முறையினை அரசு தொடர ஒரு தகுந்த முகாந்திரம் கிடைத்துவிட்டது.. நாங்கள் என்ன செய்ய முடியும் நீதிமன்றத் தீர்ப்பு என்று அரசு கூறிவிட முடியும். இது ஆணையாக இல்லாமல் அவசரச்சட்டமாக வெளியாகியிருந்தாலும் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பினையே தரும். இப்போது அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் சேர்க்கையினை ஒத்தி வைக்க முடியாது. எனவே ராமதாஸ், வீரமணி போன்றவர்கள் உருப்படியாக ஏதாவது ஆலோசனை சொல்ல முடியாத போது குட்டையை குழப்பாமாலாவது இருக்கலாம்.

நண்பர் ஒருவர் புதிய புத்தகம் பேசுது என்ற இதழின் பிரதி ஒன்றினை அனுப்பி இருந்தார். தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன.. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் புத்தகங்கள் குறித்த தகவல்கள், மதிப்புரைகளைக் கொண்ட ஒரு வலைப்பதிவாது இருக்க வேண்டும். மேலும் இப்போது வெளியாகும் நூல்களை மின் நூல்களாகவும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஆராய வேண்டும்.

பாரதி புத்தகாலயம் உலக புத்தகதினத்தினை முன்னிட்டு 100 புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றுள் பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் அல்லது சிறு வெளியீடுகள் என்ற வகையில் இருப்பதாக தோன்றுகிறது. தமிழில் விரிவான குறிப்புகளுடன் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருவது நல்லது. ஆனால் இரண்டு இந்திய பொதுவுடமைக் கட்சிகள் சார்ந்த பதிப்பகங்கள் இடதுசாரிகளிலும் கட்சி சார்புடைய அல்லது கட்சிக்கு நெருக்கமான இடதுசாரி அறிவு ஜீவிகளின்கட்டுரைகள், நூற்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. இப்போக்கு மாற வேண்டும்.

பொருளாதரம் குறித்து பிரபாத் பட்நாயக் உட்பட ஒரு பத்து அறிவு ஜீவிகளையே இவர்கள் முன்னிலைப் படுத்துகிறார்கள்.இது போல்தான் பல துறைகளிலும். ஆனால் இடதுசாரி சிந்தனையில் பல போக்குகள் உள்ளன என்பதைக்க் கூட உணராத பல தோழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகளுடன் அறிவுலகம் முடிந்துவிடுவதில்லை என்பதும், கட்சி முன்னிறுத்தும் அறிவு ஜீவிகள்மட்டுமே முக்கியமானவர்கள் என்று கருதும் போக்கு தவறானது என்பதும் கூட இங்கு பலருக்கு புரிவதில்லை. மன் த்லி ரெவ்யு, எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, செமினார், நியு லெப்ட் ரெவ்யு போன்ற பல வெளியீடுகள் இருப்பதையே உணராமால் கட்சி சார்ந்த அறிவு ஜீவிகள் சொல்வதையே வேதம் என்று கருதும் தோழர்கள் எத்தகைய புரிதலைப் பெறமுடியும். எனவே இந்த நூறு புத்தகங்கள் என்பது கூட ஒரு பிரச்சார உத்தியாகவே தோன்றுகிறது.

வினய் லால், ராமசந்தர குகா போன்றவர்கள் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மீது வைத்துள்ள விமர்சனங்கள் தமிழில் வர வேண்டும். துரதிருஷ்டவசமாக இது குறித்த அக்கறை இடதுசாரி கட்சிகளில் உறுப்பினராக இல்லாத ஆனால் இடதுசாரி இயக்கங்கள், கலை-பண்பாட்டு இயக்கங்களின் மேடைகளில், ஊடக வெளியீடுகளில் பங்கேற்ககும் இடதுசாரி அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்று அறியப்படுபவர்களுக்குக் கூட இருப்பதாகத் தெரியவில்லை.


நாளை முதல் சிறிது காலம் வலைப்பதிவுகளிலிருந்து ஒதுங்கி இருப்பேன்.வேறு சில முக்கிய வேலைகள் இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் வர இயலாது.இப்போதுதான் நான் எழுதுவது போல் பின்னுட்டமிடும் நிபுணர்கள் இருக்கிறார்கள். எனவே நான் இல்லாத குறையை அவர்கள் பின்னூட்டங்களில் பூர்த்தி செய்வார்கள் :).

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அவர்கள் பின்னூட்டங்களில் பூர்த்தி செய்வார்கள் :).

அது என்னது பூர்த்தி, பூரியையும், சப்பாத்தியையும் சேர்த்து சுட்ட பலகாரமா -:)

2:59 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

//இப்போதுதான் நான் எழுதுவது போல் பின்னுட்டமிடும் நிபுணர்கள் இருக்கிறார்கள். எனவே நான் இல்லாத குறையை அவர்கள் பின்னூட்டங்களில் பூர்த்தி செய்வார்கள் :). //

ததாஸ்து!

post script :
நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த விளையாட்டை என் பதிவில் துவக்குவதற்கு முன்பு, யார் இதை sportive ஆக எடுத்துக் கொள்வார்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரித்து, அவர்கள் பெயர்களை மட்டும் உபயோகித்தேன். அந்தப் பட்டியலில்,உங்கள் பெயர் தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. அடுத்த முறை இப்படி நடக்காது

3:08 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன.. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது //

ஆமாம், இது தமிழில் வரும் நூட்களைப் பற்றிய எல்லாம் விவரங்களையும் தரும் வண்ணம் இருக்கவேண்டும். பிறகு கிழக்கு பதிப்பகம் போன்ற இணைய அறிவு நிரம்பியர்கள் பணியாற்றும் பதிப்பகம் அல்லது பதிப்பகங்கள் முன்னின்று இணையத்தில் புத்தகங்களை, அவற்றின் விவரங்களை, விமர்சனங்களைத் கிடைக்கச்செய்வதன் பலன்கள், அதற்கான வழிமுறைகள், பதிப்பக உலகமும், படிப்போரும் இணையத்தில் இணையும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் மற்ற தமிழ் பத்திப்பகத்தார்களுக்கு ஒரு சிறு பயிற்சிப்பட்டறையை அளித்து ஒன்றுதிரட்டினால் அதனால் மிக்க பயன் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இவ்விவரங்களை பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் அறியமாட்டார்கள். அல்ல்து ஒவ்வொருவரும் அறியவரும் போது ஒவ்வொரு வழியப்பின்பற்றுவார்கள். அது இணையத்தமிழ் மாதிரி ஒவ்வொரு முறையில் இருக்கும். அதை இப்போதே ஒருங்கிணைத்தால் தவிர்க்கலாம்.

3:35 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

அடுத்த முறை இப்படி நடக்காது

அய்யா பிரகாஷ் அவர்கள் புதிய ஆட்டத்திற்கு த்யாராகிறார்.குமுதம், விகடன்,இந்தியா டுடேக்கெல்லாம் சொல்லிட்டிங்களா சார்

1:48 AM  
Blogger Venkat மொழிந்தது...

ரவி - புத்தகங்கள் குறித்த தகவல் மையத்தைப் பற்றி (சோதனை வடிவம்) என்னுடைய இன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

http://www.domesticatedonion.net/blog/?item=539

9:42 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) மொழிந்தது...

கொஞ்சம் சம்பந்தப்பட்ட என் முயற்சி இங்கே

2:44 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Anniyaan is not that bad. Still we can watch for cinemotography and vikram's performance.

8:15 AM  

Post a Comment

<< முகப்பு