நேற்று, இன்று , நாளை

நேற்று இரன்டு திரைப்படங்கள் பார்த்தேன். முதலில் பகேலி என்ற திரைப்படம், பின்னர் அன்னியன். பகேலியைத் மீண்டும் பார்க்க விரும்புகிறேன் - இசை, ஒளிப்பதிவு மற்றும் ராணி முகர்ஜி, ஷாரூக்கானின் நடிப்பிற்காக. அன்னியன் குறித்து பல விமர்சனங்களைப் படித்து விட்டிருந்தாலும் படம் நான் எதிர்பார்த்தை விட மோசமாக இருந்தது. திரைக்கதையிலும், வசனத்திலும் உள்ள குறைகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதலாம். நாகா இயக்கி தொலைக்காட்சியில் தொடராக வந்த விடாது கருப்பை நீளத்தைக் குறைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது அன்னியனை விட பல விதங்களில் சிறப்பானது.ஆனால் அன்னியன் குறித்து தற்சமயம் விரிவாக எழுதும் எண்ணம் ஏதும் இல்லை. ஒன்று இதைப் பற்றி பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். எனவே சிறிது காலம் சென்ற பின் எழுதலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவது அதற்காக நேரம் செலவிட முடியாது இப்போது.


இன்று தமிழக அரசின் உத்தரவு குறித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இது எதிர்பார்த்த வகையிலேயே உள்ளது. அரசும் இத்தகைய தீர்ப்பு வரும் என்பதை ஊகித்தே முதலில் முடிவு எடுத்திருக்கும் என்று தோன்றுகிறது. அதன் மூலம் எதிர்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு குறைத்துவிட்டது. இந்த தீர்ப்பினை முன் வைத்து இந்த ஆண்டு பழைய முறையினை அரசு தொடர ஒரு தகுந்த முகாந்திரம் கிடைத்துவிட்டது.. நாங்கள் என்ன செய்ய முடியும் நீதிமன்றத் தீர்ப்பு என்று அரசு கூறிவிட முடியும். இது ஆணையாக இல்லாமல் அவசரச்சட்டமாக வெளியாகியிருந்தாலும் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பினையே தரும். இப்போது அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் சேர்க்கையினை ஒத்தி வைக்க முடியாது. எனவே ராமதாஸ், வீரமணி போன்றவர்கள் உருப்படியாக ஏதாவது ஆலோசனை சொல்ல முடியாத போது குட்டையை குழப்பாமாலாவது இருக்கலாம்.

நண்பர் ஒருவர் புதிய புத்தகம் பேசுது என்ற இதழின் பிரதி ஒன்றினை அனுப்பி இருந்தார். தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன.. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் புத்தகங்கள் குறித்த தகவல்கள், மதிப்புரைகளைக் கொண்ட ஒரு வலைப்பதிவாது இருக்க வேண்டும். மேலும் இப்போது வெளியாகும் நூல்களை மின் நூல்களாகவும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஆராய வேண்டும்.

பாரதி புத்தகாலயம் உலக புத்தகதினத்தினை முன்னிட்டு 100 புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றுள் பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் அல்லது சிறு வெளியீடுகள் என்ற வகையில் இருப்பதாக தோன்றுகிறது. தமிழில் விரிவான குறிப்புகளுடன் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருவது நல்லது. ஆனால் இரண்டு இந்திய பொதுவுடமைக் கட்சிகள் சார்ந்த பதிப்பகங்கள் இடதுசாரிகளிலும் கட்சி சார்புடைய அல்லது கட்சிக்கு நெருக்கமான இடதுசாரி அறிவு ஜீவிகளின்கட்டுரைகள், நூற்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. இப்போக்கு மாற வேண்டும்.

பொருளாதரம் குறித்து பிரபாத் பட்நாயக் உட்பட ஒரு பத்து அறிவு ஜீவிகளையே இவர்கள் முன்னிலைப் படுத்துகிறார்கள்.இது போல்தான் பல துறைகளிலும். ஆனால் இடதுசாரி சிந்தனையில் பல போக்குகள் உள்ளன என்பதைக்க் கூட உணராத பல தோழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகளுடன் அறிவுலகம் முடிந்துவிடுவதில்லை என்பதும், கட்சி முன்னிறுத்தும் அறிவு ஜீவிகள்மட்டுமே முக்கியமானவர்கள் என்று கருதும் போக்கு தவறானது என்பதும் கூட இங்கு பலருக்கு புரிவதில்லை. மன் த்லி ரெவ்யு, எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, செமினார், நியு லெப்ட் ரெவ்யு போன்ற பல வெளியீடுகள் இருப்பதையே உணராமால் கட்சி சார்ந்த அறிவு ஜீவிகள் சொல்வதையே வேதம் என்று கருதும் தோழர்கள் எத்தகைய புரிதலைப் பெறமுடியும். எனவே இந்த நூறு புத்தகங்கள் என்பது கூட ஒரு பிரச்சார உத்தியாகவே தோன்றுகிறது.

வினய் லால், ராமசந்தர குகா போன்றவர்கள் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மீது வைத்துள்ள விமர்சனங்கள் தமிழில் வர வேண்டும். துரதிருஷ்டவசமாக இது குறித்த அக்கறை இடதுசாரி கட்சிகளில் உறுப்பினராக இல்லாத ஆனால் இடதுசாரி இயக்கங்கள், கலை-பண்பாட்டு இயக்கங்களின் மேடைகளில், ஊடக வெளியீடுகளில் பங்கேற்ககும் இடதுசாரி அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்று அறியப்படுபவர்களுக்குக் கூட இருப்பதாகத் தெரியவில்லை.


நாளை முதல் சிறிது காலம் வலைப்பதிவுகளிலிருந்து ஒதுங்கி இருப்பேன்.வேறு சில முக்கிய வேலைகள் இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் வர இயலாது.இப்போதுதான் நான் எழுதுவது போல் பின்னுட்டமிடும் நிபுணர்கள் இருக்கிறார்கள். எனவே நான் இல்லாத குறையை அவர்கள் பின்னூட்டங்களில் பூர்த்தி செய்வார்கள் :).
என் பெயரில் இடப்படும் பின்னுட்டங்கள் - ஒரு அறிவிப்பு

இகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் நான் பின்னூட்டமிட்டாத போது யாரோ என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். என் பெயர் நான் பயன்படுத்தும் உலாவியில் தெரியவில்லை.

ஆனால் நான் பின்னூட்டமிட்டதாக கருதி அங்கு ஒருவர் ஒரு முட்டாள்த்தனமான அபிப்பிராயத்தை உதிர்த்திருக்கிறார்.தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க இனிமேல் நான் இடும் பின்னூட்டங்கள் என் வலைப்பதிவிலும் இடம் பெறும். இதன் மூலம் பின்னூட்டம் இட்டது உண்மையிலேயே நான் தானா என்பதை சக வலைப்பதிவாளர்களும், வாசகர்களும் உறுதி செய்து கொள்ள முடியும்.

சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்


காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் ப்திவு செய்து விசாரிக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.திருக்குறுங்குடி என்ற ஊரில் உள்ள வைணவக்கோயிலில் இருந்த மகேந்திர கிரிநாதர் சன்னிதி இடிக்கப்பட்டு அங்கிருந்த லிங்கம் அகற்றப்பட்டது. அரசு அனுமதி இன்றியே இதை செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக கேள்வி எழுப்பினார் என்பதற்காக திருக்கோட்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும், அவர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

வைணவக் கோயில் விவகாரங்களில் தலையிட ஜெயேந்திரருக்கோ அல்லது காஞ்சி சங்கர மடத்திற்கோ எந்த உரிமையும் கிடையாது. இருப்பினும் தன் செல்வாக்கினைப் பயன்படுத்தி தலையிட்டு சன்னிதியை இடிக்க அவர் உதவியுள்ளார் என்பது நீருபிக்கப்படுமானால அவருக்குகடும் தண்டனை தர சட்டத்தில் இடமிருக்கிறது. இது பற்றிய விபரத்தினை இப்போது நான் எழுத மாட்டேன். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை போகும் போக்கினைப் பொருத்தே எதுவும்சொல்ல முடியும். பொதுவாக கோயில்கள் விவகாரத்தில் ஆலோசனை சொல்வது கூட சம்பந்தப்பட்ட மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் செய்வதுதான் பொருத்தமும், சரியும் கூட.

ஆகம விதிப்படி உள்ள கோயில்களில் சைவ, வைணவ சம்பிரதாயங்களில் வேறுபாடுகளும், சம்பிரதாயங்களுக்குள்ளேயும் வித்தியாசங்கள் உள்ளன. இங்கு போப் என்று கருதப்படக் கூடியவர் யாரும் கிடையாது. தென்கலை மட,சன்னிதி விவகாரங்களில் தலையிடும் உரிமை வடகலை மடாதிபதிகளுக்கு கிடையாது. தமிழ் சைவ மடங்களில் தலையிடும் உரிமை சங்கராச்சாரியார்களுக்கு கிடையாது. தத்துவ ரீதியாகவும், வழிபாட்டுக் கொள்கைகள், நெறிமுறைகள் ரீதியாகவும் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து பிறர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான் முறையும், பண்பும் ஆகும்.

ஆனால் ஜெயேந்திரர் தன்னை இந்து மதத்தின் தனிப் பெரும் தலைவராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்துப் பேசி , அதை வைணவ ஜீயர்கள் கண்டித்த உடன் அப்படிச் சொல்லவில்லை என்று ம்றுத்தவர்தான் இவர். ஒரு நாடகத்தினை நடத்தக் கூடாதுஎன்று முயற்சி செய்தவர்தான் ஜெயேந்திரர்.

ஒரு வேளை சங்கர்ராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு போன்றவற்றில் தண்டனை கிடைக்காவிட்டலும், இவ்வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யுமானால் அவர் த்ண்டிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன,
உலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக

உலக வலைப்பதிவுகளில்
உலக் மொழிகளில்
முதன் முறையாக
அதிரடி - நேரடி வலைப்பதிவு
புகைப்படங்கள், ஒலியுடன் கூடிய
வீடியோ காட்சிகளுடன்
உங்களுக்காக
சிற்ப்புத் செய்திகள்
வேறு எந்த ஊடகத்திலும் வராத,
வரவே முடியாத தகவல்கள்,
அரிய காட்சிகள்
மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்

BE READY FOR
EXCLUSIVE
ENCHATING
EXPERIENCES

ஜூன் 20 முதல் தினமும் அமெரிக்க
கிழக்குக் பகுதி நேரம்
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
வலையேற்றம் செய்யப்படும்

அண்டார்டிக்காவிலிருந்து
பாபாவின் குகையிலிருந்து
உங்களை சந்திக்கவிருக்கிறேன்
வலைப்பதிவு மூலமாக

All Rights Reserved
Reproduction in any form in any media anywhere
anytime is prohibited even if permitted.
Please ensure that you have access to adequate
bandwith to view the mind bloggling
scenes and stunning visuals and exhilrating sounds

SPONSORED BY LALA INTERNATIONAL-
WORLDS LARGEST MANUFACTURER OF MASKS
THE FACE BEHIND THE MASKS THE WORLD LOVES
WE MASK THE WORLD
தட்டையான உலகம் ?

தாமஸ் பிரெட்மென் நியுயார்க் டைம்ஸில் பத்தி எழுதுபவர். உலகமயமாதல் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய நூல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நான் அதைப் படிக்கவில்லையென்றாலும் அவரது பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். புத்தகத்தினை படிக்க முயல்கிறேன், இந்த பரபரப்பு ஒய்ந்த பின் அதைப் பற்றி எழுத முயல்கிறேன். கவுன்டர் பஞ்சில் வெளியான இந்தக் கட்டுரை அவரது கருத்துக்கள் மீது ஒரு சிறப்பான விமர்சனம் வைக்கிறது.

உலகமயமாதல் குறித்து கடந்த 15 ஆண்டுகளில் பலர் எழுதியுள்ளனர். பல்வேறு துறைகளிலிருந்து இது குறித்து விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன, நான் கடந்த ஆண்டு உலகமயமாதலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய நூல்கள் எத்தனை வெளியாகியிருக்கும் என்பதை ஒரு பல்கலைகழக நூலகத்தில் உள்ள அந்த் ஆண்டு வெளியான நூல்களை மட்டும் கருத்தில் கொண்டு தேடியதில் சுமார் 400 நூல்கள் தேறின.

பிரெட்மென் போன்றோர் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தினை தருகின்றனர். ஊடகங்களுக்கு இது மிகவும் வசதியானது. தொலைக்காட்சி பேட்டிகளில் ஒரு சில வார்த்தைகளை கொண்டு ஏதோ உலக மகா உண்மையினைக் கூறுவது போன்ற தோற்றத்தினை தருவது எளிது. ஆனால் யதார்த்த உலகம் இந்த மிகவும் எளிய விளக்கங்களுக்கு அபாற்பட்டு இருக்கிறது.

உலக வர்த்தகம், அரசியல், ஐ.நாவின் செயல்பாடுகள், அது எதிர்நோக்கும் சவால்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குறிப்பாக தட்பவெப்ப நிலை மாற்றத்தின் தாக்கங்கள் இவை எல்லாம் மேலும் மேலும் சிக்கலாகி வருகின்றன. கணினி மற்றும் மிண்னௌ சாதனங்களும் உற்பத்தியும்,நுகர்வும் இகழிவுகள் என்னும் மின்னணு கழிவுகளின் பெருக்கத்தின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்க்ன்றன. இவை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மறு சுழற்சிக்கும் அனுப்படுகின்றன. இவையெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை. டெல் எங்கு உற்பத்தியாகிறது, அதில் உள்ள பாகங்கள் எங்கெங்கு தயாரிகின்றன என்பதை மட்டும் பேசினால் போதாது.

என்னைக் கேட்டால் ப்ரெட்மேன் போன்றவர்கள் செய்யும் வேலையை இந்தியாவிற்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ அவுட் சோர்ஸ் செய்து விடலாம. நிச்சயம் நம்மால் அவரை விட நன்றாகவும், நுட்பமாகவும் எழுத முடியும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு

தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்து.கடந்த சில ஆண்டுகளாக தலித் அறிவு ஜீவிகளும், இயக்கங்களும் தீவிரமாக பேசி வருகிறார்கள். ராமதாஸ் போன்ற சிலர் இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால் தலித் அறிவு ஜீவிகள் சிலர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் ஆதிக்கம் இப்போது நிலவுகிறது என்றும், இந்த ஜாதிகளுக்கும் தலித்களுக்கும் முரண்பாடு உள்ளது என்றும் கருதுகிறார்கள்.சந்த்ர பகன் பிரசாதின் எழுத்துக்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மே மாத செமினார் இதழில் தனியார் துறையில் ஒதுக்கீடு குறித்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இது தவிர கட்டுரை, நூற்ப் பட்டியல், புத்தக மதிப்புரைகளும் உண்டு. இதழ் வெளியான அடுத்த மாதம்தான் இணையத்தில் முழு இதழும் கிடைக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர் கூட செமினார் சந்தாதாரர் ஆக இல்லையா.எனக்குத் தெரிந்து யாரும் இந்த இதழினை வலைப்பதிவுகளில் குறிப்பிடவில்லை.

இக்கட்டுரைகள் தவிர எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, மற்றும் அம்பேத்கார் இணையதளத்திலும் இட ஒதுக்கீடு குறித்து கட்டுரைகள் உள்ளன இவற்றினைப் படித்தால் ஒரு புரிதல் கிடைக்கும். இந்த கட்டுரைகளையும், கருத்துக்களையும் தமிழில் தொகுத்துக் கொடுத்தால் கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கோயில்களில் மிருகபலித்தடை சட்டமும்,மதச்சார்பின்மையும்

2003ல் தமிழக அரசு கோயில்களில் மிருகங்களை பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்ற பெயரில் பலி கொடுப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது, பின்னர் அது கை விடப்பட்டது. இந்த சட்டத்திற்கு எத்தகைய எதிர்வினைகள் இருந்தன, 1950களில் இது போன்ற சட்டம் கொண்டுவரும் போது எழுந்த விவாதங்கள்- இவற்றை உதாரணமாகக் கொண்டு எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மதச்சார்புன்மை,மதரீதியான வன்முறை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை மீது எனக்கு விமர்சனம் உண்டு.

பாண்டியன் முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தமிழில் இப்பிரச்சினை குறித்து விரிவான கட்டுரைகள் நானறிந்த வகையில் ஒரு சிலவே உள்ளன,திண்ணையில் ஒரு விவாதம் நடந்தது.தமிழில் இக்கட்டுரை வெளியானால் ஒரு விவாதம் நடக்கலாம்.
புத்தகம் - வாசிப்பு

முன் குறிப்பு 1: இதைப் படிக்கும் முன் சூடாக காபி அல்லது டீ யுடன் தலைவலி போக்கும் மாத்திரை ஒன்றினையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தங்கமணிக்கு நன்றி. அவர் போல் நான் எழுதப்போவதில்லை. நான் புத்தகங்களை வாசகன்,மதிப்புரையாளன், ஆய்வாளன் என பல கோணங்களிலிருந்து படிப்பவன். தேர்ந்தெடுத்து படிப்பதையே பல வருடங்களாக செய்து வருகிறேன்.அதாவது என் ஆர்வத்தினை அல்லது நான் அக்கறை காட்டும் விஷயங்கள் தொடர்புடைய நூல்களை தெரிவு செய்து படிக்கிறேன். இதற்காக இந்த வரையரையில் வராத பிற புத்தகங்களைப் படிக்க மாட்டேன் என்பதில்லை. ஒரு காலத்தில் புனைவு இலக்கியம் என்று சொல்லப்படுவதில் பெரும் ஆர்வம் இருந்தது.இப்போது இல்லை, அது குறைந்து விட்டது.

புனைவு இலக்கியத்தினைப் படித்துக்கொண்டிருந்த போதும் நான் புனைவு அற்றவை என்று சொல்லப்படுபவற்றையும் அதிகமாகவே படித்துக் கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன், பிரமீள், வண்ண நிலவன் என்று படித்துக் கொண்டிருக்கும் போதே ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ரமணர், உபநிடதங்கள், பிராம், ஷுமாக்கர்,இலிச், லெய்ங் என்று படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் படிப்பவை அறிவியல், சமூக அறிவியல், ஊடகம், திரைப்படம்,ஒவியம், நாடகம் என்றாகி இலக்கியம் படிப்பது மிகவும் குறைந்துவிட்டது.

பின்னர் புத்தகங்களுடன், ஜர்னல் கட்டுரைகள், அறிக்கைகள், ஆய்வு அறிக்கைகளையும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன், அது இன்று வரை தொடர்கிறது. என் வாசிப்பில் புத்தகங்களுக்கு நிகரான முக்கியத்துவம் புத்தக வடிவில் இல்லாத இவற்றிற்கும் உண்டு. இதில் முனைவர் பட்டய ஆய்வேடுகள்,தீர்ப்புகள், ஆய்வு அறிக்கைகளின் முதல் வடிவ நகல்களும் அடங்கும்.

ஜர்னல்களில்வெளியாகும் கட்டுரைகள், சட்ட ஜர்னல்கள், ரிவ்யுகளில் வெளியாகும் கட்டுரைகள் போன்றவற்றை தேடி தெரிவு செய்து படிக்கிறேன். பல சம்யங்களில் பின்னர் படிக்கலாம் என்று கணினியில் சேமித்து வைத்து விடுவேன், அல்லது அச்சு பிரதி எடுத்து வைத்துவிடுவேன். இது போல் புத்தகங்கள், மாநாட்டு அல்லது கருத்தர்ங்கு கட்டுரைகளையும் சேமித்து வைத்துவிடுவேன். எனவே என்னைப் பொருத்த வரை புத்தகம் என்ற வடிவத்தினை விட உள்ளடக்கமே முக்கியம்.

பல முக்கியமான கட்டுரைகள் நூல் வடிவம் பெறும் முன் ஜர்னல்களில் வெளியாகும். மேலும் ஆய்வறிக்கைகள் பின்னர் புத்தக வடிவில் வெளியாகும் தொகுப்புகளில் இடம் பெறும். எனக்கு அவற்றை சுடச் சுடப் படிப்பதில் அல்லது அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். எனவே நேச்சர், சயன்ஸ் என்று ஆரம்பித்து பல ஜரன்ல்களில் வெளியாகிற கட்டுரைகளை அவ்வப்போது பார்த்து விடுவேன்.இப்ப்டி எத்தனையோ கட்டுரைகள் சேர்ந்து விட்டன. பலவற்றை நண்பர்களுக்கும் பரிந்துரைப்பேன், பகிர்ந்து கொள்வேன். இப்போது பணியாற்றும் இடத்தில் சக ஊழியர்களிடம் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் இந்தியாவில் இருந்த போது பல பேராசிரியர்கள், அமைப்புகளிடம் தொடர்பில் இருந்த்ததால் புத்தகங்கள், அறிக்கைகள் சுடச் சுட எனக்கு வந்துவிடும். பல தபாலில் தவறியிருக்கின்றன. இந்தியாவில் புத்தக கடைகள், நூலகங்களுக்கு அவை கிடைக்கும் முன் எனக்கு வந்து விடும். இப்படி பல நூல்கள், அறிக்கைகள் சேர்ந்துவிட்டன. இதுதவிர ஆய்வறிக்கைகள், ஜர்னல் கட்டுரைகள்,வெளியிடப்படாத முனைவர் பட்டய ஆய்வேடுகள் என்று எண்ணிக்கை பெருகி விட்டது.

ஒரு கட்டத்தில் இடப்பிரச்சினை காரணமாக பல நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தோ அல்லது வேறு வழிகளில் கழித்துக்கட்டியோ தற்காலிக தீர்வு கண்டேன். இதனால் எளிதில் கிடைக்ககூடிய அல்லது நூலகங்களில் உள்ள பல புத்தகங்களை குறிப்பாக தமிழ் நூல்களை நான் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக பல்கலை நூலகங்களில் கூட இல்லாத நூல்கள், ஜர்னல் கட்டுரைகள், ஆய்வறிக்கைகளை மட்டும் எனக்குத்தேவை என்பதால் வைத்துக் கொண்டேன்.

என்னுடை நூல் தொகுப்பில் உள்ள எல்லா நூற்களும் இப்போது என்னுடன் இல்லை. என் தொகுப்பில் 90% ஆங்கில நூல்கள்தான், அதே சமயம் ஜர்னல் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் ஏராளம்.

ஜர்னல்களுக்கு புத்தக மதிப்புரை, மதிப்புரை கட்டுரைகள் எழுதுவதால் ஏராளமான நூல்கள் கிடைத்தன, இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எனக்குத் தேவையான பல நூல்கள் இப்படித்தான் கிடைத்தன.மதிப்புரைகள், மதிப்புரைக் கட்டுரைகள் எழுதுவதை இப்போது குறைத்துக் கொண்டுவிட்டேன்.இருந்தாலும் இப்ப்டியும் புத்தகங்கள் படித்து எழுதுவது எனக்கு உவப்பான ஒன்று.

நான் எழுதிய மதிப்புரை கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு பேராசிரியர் ஒரு சர்வதேச கலைகளஞ்சியத்தில் அவர் தொகுத்த பிரிவில் ஒரு கட்டுரை எழுத வாய்ப்பளித்தார்.. நான் யார் என்று தெரியாத போதும் என்னால் எழுத முடியும் என்று அவர் நம்பினார். அக்கட்டுரையும் வெளியானது.

புத்தகங்களை மதிப்புரைக்காக படித்து மதிப்புரை எழுதும் போது 600 வார்த்தைகளில் அல்லது 1000- 1200 வார்த்தைகளில் புத்தகத்தினை மதிப்பிட்டு அதன் நிறை, குறைகளையும் எழுத வேண்டும். நூலை எழுதியவர் மதிப்புரை சரியில்லை என்று புகார் செய்ய முடியாத வகையில் எழுத வேண்டும்.

மதிப்புரை கட்டுரைகள் சில் ஆயிரம் வார்த்தைகளில் எழுதப்படுபவை, அடிக்குறிப்புகள் தர முடியும், ஒரு பொருளைக் குறித்து விவாதிக்கவும் முடியும். மதிப்புரைக்காக நூற்களைப் படிப்பதுடன், அந்த நூல் விவாதிக்கும் பொருள் குறித்தும் ஒரளவேனும் படித்து விடுவேன் என்பதால் மதிப்புரை எழுதுவது எனக்கு மேலும் படிக்க கிடைக்கும் ஒரு வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

நூலில் சுட்டப்படும் கட்டுரைகள், நூற்கள் குறித்தும் கவனம் கொள்வேன். பல நல்ல நூற்களையும், கட்டுரைகளையும் நான் பிற நூற்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். மேலும் நூலாசிரியரின் பிற படைப்புகளையும் அறிய இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

நான் இந்த் நூலினை மதிப்புரை செய்து தருகிறேன்,மதிப்புரைக்காக பிரதி கோரி எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டு மதிப்புரை செய்வதுமுண்டு. அப்படி கோரிய ஒரு நூலின் பிரதி விரைவில் எனக்கு கிடைக்கும். அந்த நூல் கடந்த மாதம்தான் வெளியானது.

ஒரு ஆய்வாளன் என்ற முறையிலும் நான் ஆய்வு தொடர்புடைய நூல்களை அதிகம் படிக்கிறேன். மேலும் வெளியாகும், வெளியாகயுள்ள நூல்கள் குறித்தும் அறிய முயற்சிகள் எடுத்துக் கொள்கிறேன். நூற்கள், கட்டுரைகள், அறிக்கைகள் இலவசமாக கிடைப்பதுமுண்டு. எனவே படிக்க வேண்டியவை ஏராளம்.

ஒரு நாளைக்கு சில நூறு பக்கங்கள் படித்தால் ஒரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் அது வாசிக்கப்படும் நூற்கள், கட்டுரைகள் எதைப்பற்றி என்பதை பொருத்தும் இருக்கிறது. நான் வாசிக்கும் பல நூல்கள், கட்டுரைகளை பொறுமையாகப் படிக்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள வேறு பலவற்றையும் வாசிக்க வேண்டும். உதாரணமாக ஒரு சட்டத்துறை ஜர்னலில் வெளியாகும் கட்டுரையில் சட்டப்பிரிவுகள், வழக்குகள் குறித்து அடிக்குறிப்புகள் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள அடிக்குறிப்புகளில் உள்ளவற்றையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே என்னைப் பொறுத்த வரை புத்தகங்கள் வாசிப்பின் ஒரு பகுதிதான். புத்தகங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அது தரும் வாசிப்பனுபவமும் முக்கியமானது என்று கருதுகிறேன். உதாரணமாக இதை எழுதும் இன்று மட்டும் கிட்டதட்ட 700 பக்க அளவிற்கு ஒருஜர்னலின் இதழ், ஒரு மாநாட்டுக் கட்டுரைகளை சேமித்திருக்கிறேன். இதில் தெரிவு செய்துதான் படிக்க முடியும். என்று படிப்பேன் என்பது தெரியாது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறது நான் எழுதியது, யார் இதையெல்லாம் கேட்டது எங்கே புத்தகப் பட்டியல் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே.

கடந்த ஆறு மாதங்களில் வாங்கியவை . இதில் சிலவற்றைப் படித்துவிட்டேன், சிலவற்றைப் படித்துகொண்டிருக்கிறேன்.

Weaving the Web: The Original Design and Ultimate Destiny of the World Wide Web
Networks of Innovation: Change and Meaning in the Age of the Internet...
The Anarchist in the Library
Free Culture: How Big Media Uses Technology and the Law to Lock Down Culture
Human Cloning and Human Dignity
Shamans Through Time: 500 Years On The Path Of Knowledge
Enough: Staying Human in an Engineered Age
The Abu Ghraib Investigations
Earthly Politics : Local and Global in Environmental Governance
Torture and Truth : America, Abu Ghraib, and the War on Terror
Interpreter of Maladies
Regarding the Pain of Others
Guantanamo: What the World Should Know
Masterpieces: The Best Science Fiction of the Century
Nebula Awards Showcase 2004
Human-Built World : How to Think about Technology and Culture
The Haraway Reader
The Best American Essays 2004
Collapse: How Societies Choose to Fail or Succeed
Living with the Genie

இந்த நூல்கள் மதிப்புரைக்காக வந்தவை அல்லது இலவசமாக அல்லது அன்பளிப்பாக கிடைத்தவை

Trading the Genome
A Patent system for 21st Century
Patents and Knowledge Economy
Principles of International Environmental Law
Just Sustainabilities
Year Book of International Co-operation on Environment and Development 2003-04
The Commons in the New Millennium
Cultural Logics and Global Economies:Maya Identity in Thought & Practice

அண்மையில் மதிப்புரை செய்த சில நூற்கள் அல்லது மதிப்புரை வெளியான நூற்கள்

New Media Reader
Hacking the Cyberspace
Transboundary Risk Management

மேற்கூறிய பட்டியல் முழுமையானதல்ல.

தமிழில் அண்மையில் படித்த நூல் :
பூமித்தின்னிகள்- காஞ்சனா தாமோதரன் - உயிர்மை பதிப்பகம்
கடைசியாக படித்த நாவல் புலிநகக் கொன்றை

பின் குறிப்பு :நான் எழுதியது பிடித்திருந்தால் வாழ்த்துக்களை இங்கு பின்னூட்டமிடவும், பிடிக்கவில்லை யெனில்வசவுகளை தங்கமணியின் பதிவில் பின்னூட்டமிடவும், ஏனெனில் என்னை எழுதச் சொன்ன பாவம் அவரையே சேர்வதாக, படித்த பாவம் உங்களுக்கே :)
அசோகமித்திரன் கடிதமும், சில கேள்விகளும்

ஒரு வழியாக அசோகமித்திரன் தன் மெளனத்தினைக் கலைத்து தன் தரப்பு நியாயத்தினை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.31 மே 2005 தேதியிட்ட கடிதம் பதிவுகளில் வெளியாகியுள்ளது. அதில் அசோகமித்திரன் கூறுகிறார்:
I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine.

அவுட்லுக்கில் அவருடன் ஒரு செவ்வி அச்சிலும், இணையத்திலும் வெளியாகியது. இது குறித்து பத்ரி கூறுகிறார்

"அவுட்லுக் செவ்வி அச்சில் ஒன்றும், <http://www.outlookindia.com/full.asp?fodname=20050411&fname=Brahmins+%28F%29&sid=2> வெளியானது. இணையத்தில்தான் முக்கியமாக இந்த ஒரு விஷயம் இருந்தது. If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day.ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். "

அசோகமித்திரனின் கடிதத்தில் மேற்கூறியது குறித்து ஒரு விளக்கம் இருக்கிறது. பேட்டியில் அவர் கூறியதாக வெளிவந்த பிற கருத்துக்கள் குறித்து அவர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

பத்ரியின் பதிவில் அசோகமித்திரனுக்கு செவ்வி இணயத்தில் வந்திருப்பது அவருக்கு தெரிய வந்ததாக பொருள் கொள்ளும் வகையில் வாக்கியங்கள் உள்ளன.

"இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். செவ்வி வெளியான சில நாள்களில், அசோகமித்திரனின் நெருங்கிய உறவினர் (பார்ப்பனரல்லாதவர்) அவரிடம் வந்து "என் அலுவலகத்தில் வேலை செய்யும் பல பார்ப்பனர்களும் குடிக்கிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் இதைச் செய்வதில் முதலில் நிற்கிறார்கள்" என்றாராம். அசோகமித்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "ஏன் இவர் இதையெல்லாம் வந்து என்னிடம் சொல்கிறார்" என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார். "

அச்சில் வெளியானது கூடவா அசோகமித்திரனுக்குத் தெரியாது. அவர் அவுட்லுக்கிற்கிற்கு அச்சு இதழில் வெளியான செவ்வி குறித்து கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை செவ்வி இணயத்தில் இருப்பது தெரியாவிட்டாலும் அச்சில் வெளியானதில் தன் கருத்துக்கள் திரிக்கப்பட்டிருப்பதாக அவர் அவுட்லுக்கிற்கு எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. 31 மே கடிதத்திலும் அவர் அவுட்லுக்கிற்கு கடிதம் ஏதும் எழுதியிருப்பதாகக் குறிப்பிடவில்லை. நானறிந்த வரையில் அவர் கடிதம் ஏதும் அவுட் லுக்கில் இச்செவ்வி குறித்து இதுவரையில் வெளியாகவில்லை. ஒருவேளை கடிதம் அனுப்பி அதை அவுட் லுக் வெளியிடவில்லை என்றால் அதாவது அவர் கடிதத்தில் பதிவாயிருக்கும் என்பதால் அவர் கடிதம் எழுதவில்லை என்ற முடிவிற்கு நாம் வரமுடியும், அதற்கு முரணான சான்றுகள் தற்போது முன் வைக்கப்படாததால்.

ராயர் காப்பி கிளப்பில் வெங்கடேஷ் எழுதுகிறார்
அப்பாடா..
கடைசியாக அசோகமித்திரன் பதில் எழுதிவிட்டார்.
அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.ஒரு வகையில், இந்த அமைதி, என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சல் தந்தாலும், அவரது அமைதிக்கு ஒரு பொருள் இருக்கும் என்றே நான் நினைத்தேன்.அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர்அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?இருக்கலாம். நமக்குத்தான் எதைப் பார்த்தாலும் முட்டி மோதி, வீரத்தைத் நிரூபித்துவிடும் அவசரம்உண்டாயிற்றே. அவையெல்லாம் ஒரு துளி பயனும் தரப்போவதில்லை என்ற ஞானம் அவருக்கு இருக்கவேண்டும்.அனுபவம் தரும் பாடம், நமது அவசரங்களை விட மேலானது.
நல்லவேளையாக இப்போதாவது தன் கருத்தைத் தெரிவித்தாரே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.
சி·பிராயன்

வெங்கடேஷ் அச்சு வடிவில் வந்த பேட்டியினைப் பற்றி மட்டும் சொன்னாரா இல்லை இணையத்தில் வெளியானதையும் சேர்த்துச் சொன்னாரா.அ.மி தன் கடிதத்தில் தான் I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. என்கிறார். அ.மி யிடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த வெங்கடேஷ் இணையத்தில் வெளியானதைப் பற்றி குறிப்பிட்டிருக்க அனைத்து வாய்ய்புகளும் உண்டு. அவருக்கு இணையத்தில் வெளியான பேட்டி குறித்து தெரியாமலிருக்க முடியாது.மேலும் பத்ரி குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்"ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். " ".

தன்னை computer illiterate என்று அ.மி சொல்லிக் கொண்டாலும் நிச்சயம் அவருக்கு இணையத்தில் வெளியானதை குறைந்தது ஒருவராவது சொல்லியிருக்கிறார்கள்.அப்படியிருக்கும் போது அ.மி எதற்காக I have no way of knowing what appeared in the internet magazine என்று மே 31 தேதியிட்ட கடிதத்தில் கூற வேண்டும்.

மேலும் பத்ரி இது குறித்து அவரிடன் பேசியது குறித்தோ அல்லது வெங்கடேஷ் தன்னுடன் இது குறித்து தொடர்ந்து பேசியது குறித்தோ, பதில் தர வேண்டும் என அவர் கூறியது குறித்தோ அ.மி கடிதத்தில் ஒரு வாக்கியம் கூட இல்லை. ஆனால் வெங்கடேஷ் எழுதுகிறார்

"அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்." தான் கணினி அறிவிலி, இணையத்தில் வெளியானதை தான் அறிய வாய்ப்பில்லை என்று கூறும் அ.மி யின் மகனுடன் இது குறித்து பேசியிருப்பதாகவும், அ.மி அமைதி காத்ததாகவும் வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

மூன்று பேர், அ.மி, அ.மி யின் மகன் ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் இது குறித்து தங்களுக்கிடையே பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அ.மி யின் பதிலில் இது ஏன் குறிப்பிடபடவில்லை.வெங்கடேஷ், பத்ரி மூலம் இதை அறிந்து கொண்டேன் என்பது கூட ஏன் பதிவு செய்யப்படவில்லை. அ.மி.
தன் கடிதத்தில் செவ்வியில் தான் கூறியது இது, தான் கூறாதது இது என்று ஏன் தெளிவாக தன் கருத்துக்கள் இவைதான் என்று சொல்லவில்லை. மாறாக கடித்ததில் This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published. என்ற உபதேசம்தான் இருக்கிறது.

நான் சொன்னது இது, நான் சொல்லத இவை நான் சொன்னதாக வெளியாகியுள்ளன என்று அ.மி ஏன் தெள்ளத் தெளிவாக குறிப்பிடவில்லை. பேச்சின் தொனி எழுத்தில் வராது என்று மட்டும் கூறும் அ.மி தான் என்னதான் சொன்னேன் என்பதையாவது குறிப்பிடலாமே.நான் இந்தத் தொனியில் இதை கிண்டலாகக் குறிப்பிட்டேன், அது அச்சில் அந்த தொனி இல்லாதததால் இப்படி பொருள் கூறும் வகையில் உள்ளது என்று ஒருவர் குறிப்பிட்டால் அதை நாம் புரிந்து கொள்வோம்.ஆனால் அ.மி பொத்தாம் பொதுவாக தன் கடிதத்தில் கூறுகிறார்.

அ.மி கூறாததை அவுட் லுக் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அவுட் லுக் மீது வழக்குத் தொடரலாம். மேலும் தொலைபேசி மூலம் செவ்வி என்னும் போது அதை செவ்வி கண்டவர் பதிவு செய்திருக்கவும், அந்தப் பதிவின் அடிப்படையில் அதை எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.அ.மி கூறுவது போல் 'prone to distortion and errors' என்பது உண்மையானால் அதை அவர்தானே தெளிவுபடுத்தி நான் கூறியது இதுதான், இதல்ல, ஆகவே அச்சில், இணையத்தில் வெளியானது தவறான புரிதலைத் தருகிறது என்று வாசகர் அறியத்தர வேண்டும். இது வரை அதை அவர் ஏன் செய்யவில்லை. மாறாக பொத்தாம் பொதுவாகப் பேசுவது ஏன். கடிதத்தில் அவுட் லுக் சார்பாக செவ்வி கண்டவர் தவறு செய்துவிட்டார், அவரின் செய்கையை நான் கண்டிக்கிறேன் என்று ஏன் அ.மி எழுதவில்லை.

கூர்ந்து கவனித்தால் வெங்கடேஷ் கடிதம் சொல்லும் செய்தியும், பத்ரி தன் வலைப்பதிவில் கூறியதன் அடிப்படையில் நமக்கு கிடைக்கும் புரிதலும்,அ.மியின் கடிதம் தரும் செய்தியும் முரண்படுவதை அறிய முடியும்.

வெங்கடேஷ் "தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்" என்கிறார். அ.மி யின் கடிதம் இப்படிக் கூறவில்லை. அது ஒரே ஒரு கருத்தினைப் பற்றி மட்டும் தன்னிலை விளக்கத்தினை தெளிவாக வைக்கிறது.அருளின் பதிவு ஏப்ரல் 3ம் தேதி இடப்படுகிறது. பத்ரி அசோகமித்திரனுடன் தான் மே 20ல் நடந்த எழுத்துப்பயிற்சி முகாமில் இது குறித்து பேசியதாகக் கூறுகிறார்."அடுத்து, நாங்கள் நடத்திய எழுத்துப் பயிற்சி முகாமில் அவரைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினேன். .... இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார்."

இதையும் வெங்கடேஷ் எழுதியுள்ளதையும் ஒப்பிடுங்கள்
"அவருடனும், அவரது மகனுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். தான் சொன்ன ஒரு வார்த்தையும் பேட்டியில் வரவில்லை என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன என்று சொல்லும்போதெல்லாம், வழக்கம்போல் அமைதியே காத்தார்.அவரது மகன் ராமகிருஷ்ணன் என் நண்பர். அவரிடம் பேசும்போதும், இதைப் பற்றி வலியுறுத்தினேன். அவர்அப்பாவுக்கு மேல் அமைதியானவர். ஆமாம்... செய்யணும்... என்று சொல்லிக்கொண்டிருந்தார்.பரபரப்பான காலகட்டத்தில் எது சொன்னாலும் புத்திக்குப் போகாது என்பதால் அமைதி காத்தாரோ என்னவோ?"
இதிலிருந்து மே 20க்கு முன்னரே அமியிடம் வெங்கடேஷ் கண்டனங்கள் வருகின்றன என்று குறிப்பிட்டிருப்பார் என்று ஊகிக்கலாம், ஏனெனில் "உடனே பதில் எழுதுங்கள், உங்களைச் சுற்றி இப்படிப் பல கண்டனங்கள் வருகின்றன" ,"பரபரப்பான காலகட்டத்தில்" போன்றவை இப்படிப் புரிந்து கொள்ள இடமளிக்கின்றன.

மே மாத தீராநதியில் சாருவின் கட்டுரை வெளியானது. அருளின் வலைப்பதிவு ஏப்ரல் துவக்கத்தில் ஏப்ரல் மூன்றாம் தேதி இடப்பட்டது.
ஆனால் இணையத்தில் பேட்டி வெளியாகி கிட்டதட்ட 7 வாரங்கள் கழித்துத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அ.மி. ஆனால் வெங்கடேஷ் அ.மியுடனும், அ.மி யின் மகனுடனும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன் என்று எழுதுகிறார். அ.மிக் கு வேண்டுமானால் இணையத்தில் பேட்டி குறித்து தெரியாமலிருக்கலாம். ஆனால் வெங்கடேஷ¤க்கும், அ.மி யின் மகனுக்குமா தெரியாது, இல்லை தெரிந்தும் அவர்கள் கூறவில்லையா.

அ.மி யின் கடிதம் நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கவில்லை. இன்னும் சில கேள்விகளைத்தான் எழுப்புகிறது.பத்ரிக்கு அவர் என்ன விளக்கத்தினை எழுதித் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.