நுழைவுத்தேர்வு பட்டியலும், கல்வி அரசியலும்

நுழைவுத்தேர்வு வரிசைப் பட்டியலை வெளியிட ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நுழைவுத்தேர்வு தேவையில்லை. 12ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நுழைவுத்தேர்வு என்பது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை.இன்னும் பல மாநிலங்களில் உள்ளது. 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கும் போது யார் யார் எதை விரும்புவர் என்பதை எப்படி அறிய முடியும்.12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஐ.ஐ.டி, பிர்லா இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி உட்பட வேறுபல கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க முயலும் போது பல தேர்வுகளை சந்திக்க வேண்டியுள்ளது.

பொறியியலில் முதுகலை மட்டும் மேற்படிப்பிற்கு உள்ள ஒரு தேர்வினை எழுதினால் போதும், அகில இந்திய அளவில் அது அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்கள் நிலை அப்படியில்லை. அரசு அல்லது ஒரு பல்கலைகழகம் நடத்தும் நுழைவுத்தேர்வினைத் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் தேர்வினையும் எழுத வேண்டியுள்ளது.

முன்பு தமிழ் நாட்டில் ஒரே நுழைவுத் தேர்வு எழுதினால் போதும் என்றிருந்தது.உச்ச நீதிமன்றம்இரண்டு வழக்குகளில் கொடுத்த தீர்ப்புகளின் விளைவாக இப்போது ஒன்றிற்கு மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டியுள்ள நிலை தற்போது. தனியார் துறையிலுள்ள பொறியியல், மருத்துவம் மற்றும் தொழிற்துறைப் படிப்புகளில் அரசு எந்த அளவு ஒதுக்கீடு கோரலாம் என்பது குறித்த ஒரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. அது வெளியானால் இந்தக் குழப்பங்கள் ஒரளவு தீரலாம். இது அகில இந்திய அளவில் கையாளப்பட வேண்டிய விஷயம். இது குறித்த கொள்கை முடிவினை மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்து எடுக்க வேண்டும்.

உயர்கல்வியில் தனியார் முதலீடும், பங்கேற்ப்பும் அதிகரித்து வரும் போது ஏழை மாணவர்கள் எப்படி கல்வி பெறமுடியும், அரசு எந்த அளவு இட ஒதுக்கீட்டினைக் கோரலாம் என்பதை விவாதிக்காமல் வெறும் நுழைவுத் தேர்வினை மட்டும் எதிர்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் 1998லிருந்து மத்தியில் உள்ள அரசுகளில் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும் பா.ம.க இப்பிரச்சினையினை முழுமையாக ஆய்ந்து எந்தத் தீர்வினையும் வைத்ததாகத் தெரியவில்லை.

உச்ச நீதி மன்றம் உன்னிக்கிருஷ்ணன் வழக்கில் அரசுகு இட ஒதுக்கீடு 50%, இதற்கான கட்டணைத்தினை அரசு நிர்ண்யிக்கும், பிற 50% நிர்வாகத்திற்கு ஆனால் நிர்வாகம் இஷ்டப்படி கட்டணம் நிர்யண்யிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இது அமுலில் இருந்த போது பல ஏழை மாணவர்கள், ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் பொறியியல்,மருத்துவ கல்வி பெற முடிந்தது. இதை இன்னொரு தீர்ப்பில் உச்ச நீதி மன்றம் ரத்து செய்துவிட்டு கல்விக்கட்டணம் எவ்வளவு என்பதை நிர்ணயிக்க ஒரு குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது.

இடதுசாரிக்கட்சிகள்தான் தனியார் கல்வியில் ஈடுபடும் போது அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பேசியவர்கள், மேலும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தனியார் கல்விநிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகுவதை கட்டுப்படுத்த முயன்றன.தமிழ் நாட்டில் 1980களில் மத்தியிலிருந்து தனியார் முதலீட்டில் பொறியியல் கல்லூரிகள் உட்பட கல்வித்துறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு காரணம் தனியார் துறையின் முதலீட்டினை அரசு தேவை என்று கருதியதுமாகும்.

பா,ம.க் உட்பட பல கட்சிகள், இடது சாரிகளைத் தவிர இது குறித்து அக்கறை காட்டவில்லை. பா.ம.க, தி.கக்கள் அவ்வப்போது இட ஒதுக்கீடு குறித்து அறிக்கை விடுவார்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.அவ்வளவுதான். இப்போது பா.ம.க நடத்தவுள்ள ஆர்ப்பாட்டமும் அது போல்தான்.

தமிழ் நாட்டில் ஊடகங்களும் இதில் அக்கறை காட்டவில்லை. ஒரு பிரபல நாளிதழின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் குடும்பம் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிலையங்களை நடத்துகிறது. நேரடியாக பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அறக்கட்டளை மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட பலவற்றை நடத்தி வருகிறார்கள். இதில் சிறுபான்மை சமூகங்கள் பெயரில் நடத்தப்படும் கல்லூரிகளும் அடங்கும்.

திருவள்ளூரில் அல்லது திருத்தணியில் தெலுங்கு பேசும் மொழிச் சிறுபான்மையினர் நலனுக்காக என்று கல்லூரி ஆரம்பிக்க முடியும். சென்னையில் ஒரு மார்வாரி சிந்தி பேசும் மொழிச் சிறுபான்மையினர் என்ற பெயரில் ஒரு க்ல்லூரி ஆரம்பிக்க முடியும். அது போல் பெங்களூரில் தமிழ் பேசும் மொழிச் சிறுபானமையினர் நலனுக்காக என்று கல்லூரி ஆரம்பிக்க முடியும். இத்தகைய கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடின் சதவீதம் அதிகம். இது எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஒரு மிகவும் குழப்பமான நிலைமைதான் இருக்கிறது. இது ஏன் ஏற்ப்பட்டது, இதற்கு என்னென்ன தீர்வுகள் என்பது குறித்து எந்த அக்கறையும் இங்கு அரசியல் கட்சிகளுக்கும் இல்லை, அவர்களை விமர்சிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள ஊடகங்களுக்கும், பிறருக்கும் இல்லை.இது குறித்து செய்தி வெளியிடுவது, அவ்வப்போது நிபுணர்கள் கருத்து என்று சிலவற்றை வெளியிடுவது தவிர பெருவாரியான ஊடகங்கள், குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் வேறதையும் செய்யவில்லை. ஒரு விவாதம் ஏற்படுவதற்கான புரிதலை மக்கள் பெறக் கூட இவை உதவவில்லை. சிறுபத்திரிகைகளைப் பற்றி கேடக்வே வேண்டாம்.

இதுதான் கசப்பான உண்மை.

7 மறுமொழிகள்:

Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

முக்கியமான பதிவு. +2 மாணவர்களைப் போல சித்திரவதை செய்யப்படுபவர்கள் யாரும் இல்லை எனலாம். என் கருத்துக்கள் விரிவாக பிறகு எழுதுகிறேன்.

2:12 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

2:19 PM  
Blogger ரவிசங்கர் மொழிந்தது...

பொத்தாம் பொதுவாக நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று சொல்ல முடியாது. +2 தேர்வு முறையும் மதிப்பெண் முறையும் ஆக இல்லை. அதை மட்டும் கொண்டு திறமையான மாணவர்களை இனம் காண முடியாது. வெறும் மனப்பாட சக்தியைக் கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோர் கூட நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வில்லையெனில், பள்ளியில் இன்னும் அதிக கவனமெடுத்து சொல்லித் தர வேண்டும். அதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். அதை விடுத்து நுழைவு தேர்வே வெண்டாமென்று சொல்வது பொறியியல் கல்வியின் தரத்தை பாதிக்கும்

2:37 PM  
Blogger ரவிசங்கர் மொழிந்தது...

பொத்தாம் பொதுவாக நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று சொல்ல முடியாது. +2 தேர்வு முறையும் மதிப்பெண் முறையும் reliable, objectiveஆக இல்லை. அதை மட்டும் கொண்டு திறமையான மாணவர்களை இனம் காண முடியாது. வெறும் மனப்பாட சக்தியைக் கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோர் கூட நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வில்லையெனில், பள்ளியில் இன்னும் அதிக கவனமெடுத்து சொல்லித் தர வேண்டும். அதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். அதை விடுத்து நுழைவு தேர்வே வெண்டாமென்று சொல்வது பொறியியல் கல்வியின் தரத்தை பாதிக்கும்

2:38 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

ஏழை எளிய மாணவர்கள் நுழைவுத்தேர்வு முறைப்படி வடிகட்டப்பட்டுவிடுகிறார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளது கடைந்தெடுத்த முட்டாள்தனம். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டுமென்றால் சேலம், ராசிபுரம் பக்கங்களில் வருஷாவருஷம் தொடர்கதை போலெ கேள்வித்தாள்கள் வெளியாகும் அவலத்தை என்ன சொல்ல? பணம் உள்ளவர்கள் அனைவரும் கேள்வித்தாளை விலைக்குவாங்கிப் பரீட்சை எழுதிப் பிறர் வயிற்றில் மண்ணள்ளிப் போடவா? இதற்குமுன்பு நேர்முதத் தேர்வு என்று இருந்த அபத்தத்தை ஒழித்து நுழைவுத்தேர்வு முறையைக் கொண்டுவந்ததால்தான் மத்தியவர்க்க மாணவர்களால் தொழிற்கல்லூரிகள் குறித்து நினைத்துப்பார்க்கவாவது முடிகிறது தற்போதைய நிலைமையில். மற்றபடி, தொழிற்கல்லூரிகளில் சேரத் தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் ப்ரில்லியண்ட்டிலோ வேறு எந்த ட்யூட்டோரியலிலோ ஆயிரக்கணக்கில் கொட்டிக்கொடுத்துப் படித்து வருவதில்லை. மேலும், 0.1, 0.2 மதிப்பெண்களிலெல்லாம் மருத்துவ, பொறியியல், வேளாண்மைப் படிப்புக்களைத் தவறவிட வாய்ப்புள்ளது என்னும் தற்போதைய நிலவரம் ராமதாஸூக்குத் தெரியுமோ என்னவோ - இந்தமாதிரிக் கத்திமுனைப் போட்டியுள்ள காலகட்டங்களில் இந்தமாதிரி அவ்வப்போது கவைக்குதவாத கூச்சல் எழுப்புவதற்குப்பதிலாக, தொலைநோக்குப் பார்வையுடன் தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைப்பது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நுழைவுத்தேர்வுகளே saturation limitல் தள்ளாடிக்கொண்டிருக்கும்போது, சேர்க்கைமுறையை மேம்படுத்த இன்னும் என்ன செய்யவேண்டுமென்று யோசிக்கவேண்டுமே தவிர, இருப்பதையும் வெட்டிக் குறைக்க முயல்வது மேலும் சிக்கலுக்கே வழிவகுக்கும். அதுவும், ராமதாஸ் கடைசிநேரத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பேன் என்கிறார். இது அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பொழுதுபோக்காகப் போயிற்று. கடைசிநேரத்தில் குட்டையைக் குழப்புவதால் எவ்வளவு குழப்படிகள் வந்துதொலையும் என்பதற்கு, 1993ல் +2 கேள்வித்தாள்கள் வெளியானதால், வெறுமனே நுழைவுத்தேர்வு முடிவுகளைவைத்துத் தொழிற்கல்லூரிச் சேர்க்கை நடைபெற்றதால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், 1994ல் sports quota என்று தலைவிரித்தாடிய லஞ்சலாவண்யக் குழப்படிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனையோ பேர். வருஷத்துக்கு ஒரு சட்டம் என்று மாற்றிக்கொண்டிருந்தால் மாணவர்கள் எதில் கவனம் செலுத்துவது? படிப்பதிலா அல்லது அரசாணைகளில் டவுசர் தைத்துப் போட்டுக்கொள்வதிலா? மேலும், நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்களென்றால், பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களுக்கும் அதே கதைதானே? ட்யூஷன் போய் இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்களைத் தலைகீழாக உருப்போட்டு நூறு, நூற்றைம்பது மாதிரிப் பரீட்சைகள் எழுதுவதற்கும், கணக்கைப் பார்த்தாலே வழிமுறைகளைக்கூடப் போடாமல் பதிலை எழுதிவிடுமளவு கணக்கையும் 'நெட்டுரு'ப் போட்டு வைக்குமளவு +2 மாணவர்களுக்கு வசதிகள் இருப்பது பெரும்பாலும் நகரங்களில்தானே? நகரங்களில் உள்ள அந்நிலவரத்தை கிராமங்களுக்குக் கொண்டுவர ராமதாஸ் முயற்சிப்பாராயின்/அதற்காகப் பேசுவாராயின் ஏதாவது உபயோகமிருக்குமே தவிர, இருப்பதை அட்ஜஸ்ட் செய்வதற்காகச் செய்யும் reductionistic approachஆல் பைசா பிரயோஜனம் கிடையாது. ஒன்று நகரங்களின் கல்வித்தரத்தை/வசதிகளை கிராமத்துக்குக் கொண்டுசெல்லவேண்டும் - இந்தமாதிரி ஆட்களால் அது நடக்கப்போவதில்லை என்பது நிதர்சனம். இல்லையெனில் கிராமத்திலுள்ளவர்கள் படிப்புக்காக நகரத்துக்குச் செல்லவேண்டும் - மரத்திலிருக்கும் பலாக்காயைவிட கையிலிருக்கும் களாக்காய் மேல் என்ற ரீதியில் அதைத்தான் தற்போதைய நிலைமையில் செய்யமுடியும் - அது பெரும் குற்றமும் அல்ல. இதில் நுழைவுத்தேர்வையும் நீக்குவது என்பது, பெரும்பாலான மாணவர்களின் தலையில் மேலும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடுவது போலத்தான். தொழிற்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிறு நகரங்களில், கிராமங்களிலிருந்து வருபவர்களே என்ற அடிப்படை உண்மைகூட யாராவது சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? அதுவும், வடமாநிலங்களில் உள்ளதைவிட, கிராமப்புறங்களிலிருந்து வருபவர்களுக்குத் தமிழ்நாட்டில் படித்து முன்னேற வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் அதிகம்தான் என்பதும் என் அபிப்ராயம் - இதை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாமென்று பார்ப்பது இந்தமாதிரி விஷயங்களைவிட எவ்வளவோ உபயோகமாயிருக்கும். நுழைவுத்தேர்வை ரத்துசெய்வது எவ்வளவு அபத்தமென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை என்பதே உண்மை!!

அவசியமான பதிவு. நன்றி!

2:54 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

thanks for comments.the ground reality is very different from what is projected by ramadoss.he has no ideas to solve the problem.
if others are indifferent he is trying to create an impression as if he is really concerned.this is another farce.
ravi srinivas

3:22 PM  
Blogger rajkumar மொழிந்தது...

எல்லாம் சரி. தீர்வு என்று நீங்கள் எதை முன் வைக்கப் போகிறீர்கள்? நேர்முகத் தேர்விற்கு மாற்று முறையாக நுழைவுத் தேர்வு அமுல் படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றது உண்மைதான்.

ஆனால் திடீரென தேர்வை கடினமானதாக மாற்றியிருப்பதும், நுழைவுத்தேர்விற்காக மாணவர்கள் தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் செலவழித்து பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதையும், அதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாண்ட்ரீஸர் மற்றும் ரவிசங்கரும் கவனிக்க வேண்டிஅ அம்சம் இது.

இதைக் குறித்த எனது பதிவு என்னுடைய வலையில் இருக்கிறது.

அன்புடன்

ராஜ்குமார்

1:51 AM  

Post a Comment

<< முகப்பு