பெண்களும், அறிவியலும்- பகுதி 2


(in three parts)
அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-2

இக்கட்டுரையின் முதல் பகுதி ஏப்ரல் ஒன்றாம் தேதி பதிவில் இடப்பட்டது.அதன் சுட்டி இது.

இரண்டாம் பகுதி உயிர்மை மே 2005 இதழில், இங்கும்.

Part I

மேரி க்யுரி இருமுறை நோபல் பரிசு (1903,11) பெற்றவர், அவரது மகள் 1935ல் நோபல் பரிசு பெற்றார்.ஆனால் இருவருமே பிரெஞ்ச் அறிவியல் அகாதமியில் உறுப்பினராகக் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த அகதமிகளில் உறுப்பினர்களை பிற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள்.1979ல்தான் பிரெஞ்ச் அறிவியல் அகதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது.முதல் தடவை மேரி எதுவர்த் பிரான்லி என்பவரை விட ஒரு வாக்கே குறைவாகப் பெற்றிருந்தார்.பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரான்லியினை தேர்ந்தெடுத்தனர்.அப்போது அவருக்கு வயது 65, மேரிக்கோ 36தான். மார்கரெட் சோமர்வில்லின் கணித ஆய்வுகள் பெரும் மதிப்பினைப் பெற்றன,ஆனால் அவரை இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கவில்லை.கரோலின் ஹெர்ஷ்லின் ஆய்வுகளை அங்கீகரித்து ராயல் சொசைட்டி தங்கப் பதக்கம் வழங்கியது.அவரை ராயல் ஐரிஷ் சொசைட்டி 1838ல் அவரது 88வது வயதில் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது, ராயல் சொசைட்டி தேர்ந்தெடுக்கவில்லை. பிற அகதமிகளில் கிட்டதட்ட இதே போல்தான் இருந்தது.
அதே சமயம் சில ஆண் உறுப்பினர்கள் பெண்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டினர்.முதல் உலகப் போருக்குப் பின் இத்தகைய கோரிக்கைகள் வலுப்பெற்றன.ராயல் சொசைட்டியில் பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என வற்புறுத்தியவர்களில் இடதுசாரி விஞ்ஞானிகளான ஜே.டி.பெர்னாலும், ஜே.பி.எஸ்.ஹால்டேனும் முக்கியமானவர்கள். 1943ல் ராயல் சொசைட்டி இந்தியாவிலிருந்து ஆறு ஆண் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த போது பெண் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்காதது குறித்து ஹால்டேன் கேள்வி எழுப்பினார்.1940 முதல் 1945 வரை ராயல் சொசைட்டியின் தலைவராக இருந்த சர் ஹென்ரி டேலின் பெரு முயற்சியால் இரு பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமெரிக்காவில் 1925ல்தான் தேசிய அறிவியல் அகாதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரி உட்பட பல பெண் அறிவியலாளர்கள் பிற நாட்டு அறிவியல் அகாதமியில் அயல் நாட்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் பணியாற்றிய அல்லது தாய் நாட்டில் அந்த கெளரவம் தரப்படவில்லை.
1970களில்தான் நிலைமை மாறத் துவங்கியது.இதற்கு முக்கிய காரணம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெண் உறுப்பினர்கள் ஒரளவேனும் இருந்ததால் அகாதமிகளில் பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்தன.பெண் உறுப்பினர்களின் தெரிவுகள் கவனம் பெற்றன.இதனால் பெண்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவது அதிகரித்தது.சில நாடுகளில் (உ-ம்: கிரீஸ்,ஸ்பெயின்,இத்தாலி) பெண்கள் முதன்முதலாக 1990களில்தான் உறுப்பினர்களாக அறிவியல் அகாதமிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெண்கள் உயர்கல்வி கற்பது 1870களுக்குப் பின் பல நாடுகளில் சாத்தியமானாலும் அறிவியல் துறைகளில் பெண்களுக்கு உயர்பதவிகள் பெரும்பாலும் எட்டாக்கனிகளாகவே இருந்தன.பல பெண் அறிவியலாளர்கள் உரிய அங்கீகாரம் பெறாமல் பலவேறு சிரமங்கள், பிரச்சினைகளிக்கிடையேதான் அறிவியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சிலர் போதுமான தகுதிகள் இருந்தும் அறிவியல் ஆய்வுகள் சார்ந்த வேலைகள் கிடைக்காததால் அறிவியலுடன் ஒரளவு தொடர்புடைய வேலைகளையே செய்ய வேண்டியதாயிற்று. மெளன வசந்தம் என்ற புத்தகம் எழுதிய ராசேல் கர்சான் இதற்கு ஒரு உதாரணம். பெண் என்றே ஒரே காரணத்தினால் பொருத்தமான வேலை கிடைக்காமல் அல்லாடியவர்கள் பலர். ஆனால் தாங்கள் பெண்கள் என்பதற்காக பாரபட்சம் காட்டப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்களும் உண்டு. நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பார்பரா மக்ளிண்டாக்கின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய எவ்லின் பாக்ஸ் கெல்லர் மக்ளிண்டாக் சந்தித்த இடர்களை விரிவாக விளக்குகிறார்.மிகச் சிறந்த ஆய்வாளாராக இருந்த போதும் நிலையான வேலை கிடைக்க அவர் சிரமப்பட வேண்டியிருந்தது. (குறிப்பு : மக்ளிண்டாக் குறித்து கெல்லர் எழுதியுள்ளவை சர்ச்சிக்கப்பட்டுள்ளன).
1970களில் கார்னிக் நூறு பெண் அறிவியலாளர்களை பேட்டி கண்ட போது பலர் அறிவியல் வாழ்வு குறித்து திருப்தியே தெரிவித்தனர், தாங்கள் நல்ல அறிவியல் செய்தததாகவே கருதுவதாகக் கூறினர். ஆனால் அவர்களில் பலருக்கு தாங்கள் ஒன்றாக குரல் கொடுத்திருந்தால் அல்லது முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் பாரபட்சங்களை குறைத்திருக்க முடியும் என்பது தோன்றவில்லை. அறிவியல் என்று வந்துவிட்டால் பிறவெல்லாம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பதில் தவறில்லை, ஆனால் அறிவியலில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினைகளைக் கூட அவர்களில் பலரால் அங்கீகரிக்க முடியவில்லை. இதனால் பெண் அறிவியலாளர்கள் கூட பெண்களை அறிவியலில் ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதற்கு தடையாக உள்ளவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வின்றி இருந்தனர். சமத்துவம் என்பது நடைமுறையில் எப்படி இருந்தது என்பதைஅவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சர் சி.வி.ராமனின் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தவரும், இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் உயர் பதவி வகித்தவருமான அனா மணி தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது ராமன் தன் ஆய்வுக்கூடத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகுவதையும், விவாதிப்பதையும் எதிர்த்தார் என்று கூறியிருக்கிறார்.தான் பெண் என்பதால் எந்தவிதத்திலும் பாகுபாட்டினை எதிர் நோக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரே ஒரு ஆய்வாளருடன் ஒரு விரிவான உரையாடலுக்குப் பின் தான் பெண்களை தேர்ந்தெடுத்திருந்தால் ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான தேவையை அவர் அப்போது உணர்வில்லை. சமத்துவம் என்பது நடைமுறையில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பெண்கள் அறிவியலில் ஈடுபடவும், ஈடுபட்டுள்ள பெண் அறிவியலாளர்களை ஒன்றுதிரட்டவும் தேவை இருப்பதை அவர் போன்றவர்கள் உணரவில்லை. மாறாக தாங்கள் பெண் என்பதால் எந்த விசேஷ சலுகையும் கோரக்கூடாது, அதற்கு தேவையுமில்லை, ஏனெனில் அறிவியலில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை என்று கருதினர். ஆனால் வரலாறு இந்த சமத்துவம் எத்தனை போலியானது என்பதை நமக்குக் காட்டுகிறது.

ஆண்கள் முன்னிறுத்தும், சமூகத்தில் நிலவும் விழுமியங்களை பெண்கள் கேள்விக்குட்படுத்தாது ஏற்கும் போது பிற பெண்களின் பிரச்சினைகளை உணரத் தவறுகிறார்கள்.ஏன் நானும் பெண்தானே, அப்புறம் உனக்கு மட்டும் எதற்கு சலுகை அல்லது விதிவிலக்கு என்று ஒரு துறைத்தலைவர், கருத்தரித்துள்ள அல்லது சிறு வயது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படும் பெண்ணின் கோரிக்கைகளை செவிமடுக்கவே தயாராக இல்லாத போது அவர் இப்பிரச்சினைகள் எந்த அளவிற்கு பெண்கள் அறிவியலில் ஈடுபட தடையாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்.எனவே பெண் அறிவியலாளர்கள் பலர் தடைகளை எதிர்கொண்டாலும் ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்தில் அதை அணுகாத போது, தாங்கள் பெண்கள் அறிவியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படாமல், சமத்துவம் முழுமையாக நிலவுகிறது என்று நம்பும் போது தாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பிற பெண்கள் அறிவியலில் ஈடுபட அவர்கள் உதவிகரமாக இருப்பதில்லை. இதற்கு பெண் என்பதற்காக தாங்கள் சலுகைகள் காட்டுகிறோம் என்று விமர்சிக்கப்படுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

where is first part

5:54 PM  

Post a Comment

<< முகப்பு