போகாத ஊருக்கு ஆயிரம் வழிகள்: எழுத்தாளர்களின் சில யோசனைகள்


தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஒன்று கூடி முன் வைத்துள்ள யோசனைகள் சிலவற்றை எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைப்பதிவில் இட்டுள்ளார். அவை குறித்து என் கருத்துகள்

"
சாகித்ய அகாதமி பரிசு ஆண்டு தோறும் சர்ச்சைக்கு உட்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆண்டின் துவக்கத்திலே மூன்று எழுத்தாளர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து எல்லா இணையதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் வாக்கு அளிக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மூன்று பேரை எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழு முன்மொழியும் . அவர்களைத் தவிர நான்காவது ஒரு நபரை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் அவர் பெயரை தனியே குறிப்பிட்டு வாக்கு அளிக்கலாம். இப்படி ஐனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் எல்லா இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் இந்த வாக்கெடுப்பு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இப்படி பகிரங்க வாக்கு எடுப்பு நடத்தி யார்யார் எவ்வளவு வாக்கு பெறுகிறார்கள் என்பதை அறிந்து அந்தப் பட்டியலை அப்படியே சாகித்ய அகாதமி ஆலோசனை குழுவிற்கு பரிசீலனைக்கு அனுப்புவோம்.மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது அகாதமிக்கு தெரியவருமில்லையா. பத்தாயிரம் பேர் ஒருவருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று ஆசைபடும் போது அந்த எழுத்தாளரை அகாதமி புறக்கணிக்குமா என்ன? அப்படியே ஒரு வேளை மக்கள் சிபாரிசு செய்த படைப்பாளிக்கு விருது கொடுக்க சாகித்ய அகாதமி தவறினால். அதே நபருக்கு 50001 ஆயிரம் பணமும் விருதும் கொண்ட தமிழ் சாகித்ய அகாதமி என்ற விருதை மக்களிடமிருந்து நிதி திரட்டி தரலாம் என்று நினைக்கிறோம்.
இது தேர்தல் சமயங்களில் நடத்தபடும் கருத்து கணிப்பு போல ஆண்டு தோறும் நடத்தப்படலாம் என்று இந்த சந்திப்பு முடிவு செய்திருக்கிறது

"

சாகித்ய அகாதமி தெரிவில் மூன்று படைப்புகள் பரீசலனைக்காக உள்ளன என்று வைத்துக் கொள்ளுவோம். ஒன்று 2000 பிரதிகள் அச்சிடப்பட்ட நாவல்.இரண்டாவது ஒரு வார இதழில் தொடர்கதையாக வெளியாகி பின் புத்தக வடிவம் பெற்ற நாவல். மூன்றாவது 1000 பிரதிகள் அச்சாகி விமர்சகர்களின் கவனத்தினைப் பெற்ற 800 பிரதிகளே விற்ற நாவல்.
முதல் நாவல் முதல் பதிப்பில் 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்தும் ஒரே ஆண்டில் விற்றுவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதை அதிக பட்சம் 10,000 பேர் படித்திருப்பார்கள்.அதே சமயம் ஒரு தொடர்கதையாக விகடனில் வெளியாகும் நாவலை குறைந்த பட்சம் 4 லட்சம் பேர் படித்திருக்க, தொடராகவும், நூல் வடிவிலும் சேர்த்து வாய்ப்பிருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் 2000 பிரதிகள் விற்ற நாவலைப் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது.இவர்களில் எத்தனை 800 பிரதிகள் விற்ற நாவலை படித்திருப்பார்கள். இம்மூன்றையும் எத்தனை பேர் படித்திருப்பார்கள். மூன்றையும் படித்தவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள். இதையெல்லாம் யோசித்தால் வாக்கெடுப்பு என்பது ஏன் சரியான வழியல்ல என்பது தெளிவாகும். மேலும் வாக்கெடுப்பில் எண்ணிக்கையைக் கூட்ட பல தந்திரங்களை கையாள முடியும்.

இங்கு ஒரு நாவலுக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே கேள்விக் குறி. மூன்று நாவல்களையும் படிக்காமல் தெரிவு செய்வது என்பது அபத்தம்.அப்படி இருக்கும் போது பத்தாயிரம் பேர் தெரிவு செய்வர் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்பது அதீத எதிர்பார்ப்பு. 800 பிரதிகள் விற்ற நாவலை அதிகபட்சம் 4000 பேர் படித்திருக்கக் கூடும். மூன்று நாவல்களையும் படித்திருப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் என்ற நிலையில் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலை அல்லது கணிப்பினை நடத்த முடியும்.

வாலி, எஸ்.ராமகிருஷ்ணன், குட்டி ரேவதி ஆகிய மூவரின் நூல்கள் பரிசுக்கு பரீசலனை செய்யப்பட்டால் வெகு ஜெனத் தெரிவு வாலிக்கு இருந்தால் அதை சிறு பத்திரிகைகள் சார்ந்த எழுத்தாளர்கள் ஏற்பார்களா. ஒரு வேளை பரிசு குட்டி ரேவதிக்கு தரப்பட்டால் மக்களின் சிபாரிசின் அடிப்படையில் வாலிக்கு பரிசும்,பணமும் தருவீர்களா. வெகுஜனத் தெரிவும், அகாதமியின் தெரிவும் ஒன்றாக இருந்தால் அதை ஏற்பார்களா. இவர்கள் சொல்வதை அமுல் செய்திருந்தால் வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தினையே பெரும்பாலோர் தெரிவு செய்திருப்பார்கள். சுந்தர ராமசாமிக்கு இரண்டாம் இடமும், யூமா வாசுகிக்கு மூன்றாம் இடமும் கிடைத்திருக்கும். இது போன்ற தீர்ப்பினை ஏற்று சர்ச்சையினைக் கிளப்பமாட்டோம் என்று சொல்லும் தைரியம் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு உண்டு. எதையுமே யோசிக்காமல் அபத்தமான யோசனையினை சொல்லும் அற்புதத் திறன் நம் எழுத்தாளர்களுக்கு இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.

"இதுவரை எழுத்தாளர்களை பற்றிய சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களோ, யார் எந்த இதழில் என்ன எழுதினார் என்ற வகைப்படுத்துதலோ தமிழில் நடைபெறவேயில்லை. ஆகவே இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவரது வெளியான படைப்புகள் குறித்த முழுமையான தகவல்களும் தொடர்பு முகவரி. அத்தோடு சில மாதிரி படைப்புகள் கொண்ட ஒரு ஆவணகாப்பகம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும்."

உங்கள் பட்டியலில் ராஜேஷ் குமார்,தேவி பாலா, இந்திரா செளந்தர்ராஜன், விமலா ரமணி, குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் போன்றவர்களுக்கு இடம் உண்டா.

"எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி பயணம் செய்வதற்காக பெல்லோஷிப் 6000 ரூபாய் வழங்குகிறது. இது ஆண்டுக்கு ஒருவருக்கு வழங்கபடுகிறது. அதிலும் எண்ணிக்கையற்ற அரசியல் தலையீடு உள்ளது. அதற்கு மாற்றாக தமிழ் எழுத்தாளர்களில் நான்கு பெயருக்கு இது போன்று பயணஉதவி தொகை வழங்குவற்கு ஏற்பாடு செய்வது."

இதை தீர்மானிப்பது யார். எந்த அடிப்படையில்.

"தமிழின் முக்கிய படைப்பளார்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இணையதளத்தில் யாவரும் பயன்படுத்திக் கொள்வது போன்று பதிப்பு செய்வது."

இது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால் முக்கிய படைப்பாளர்கள் யார் யார் என்று யார் முடிவு செய்வது. சில தமிழ் எழுத்தாளர்கள் தமிழில் எழுதுவது புரிவதில்லை என்ற புகார் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் இல்லாமல் போகும் என்று நம்புவோமாக.ஆங்கில மொழிபெயர்ப்பும் புரியவில்லை என்றால் படிப்பவருக்கு ஆங்கில அறிவு போதாது அல்லது ஆங்கிலம் தெரியவில்லை என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

"தமிழில் நல்லதொரு ஆங்கில தமிழ் அகராதியை உருவாக்குவது. சென்னைபல்கலைகழகம் வெளியிட்ட ஆங்கில தமிழ் அகராதி புதிய சொற்களுடன் நவீனப்படுத்தபடாமலே உள்ளதால் புதிய அகராதிக்கான தேவையிருக்கிறது."

தமிழ் அகாரதியினை குறித்து சென்னைப் பல்கலைகழகம் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் எந்த அளவு எழுத்தாளர்கள் உதவ முடியும்.தமிழில் இலக்கியம், இலக்கணம் உட்பட பல துறைகளில் புதிய சொற்கள், கலைச்சொற்கள் உருவாக்கத்திற்கு தேவை இருக்கிறது. இதில் அத்துறை நிபுணர்கள்,ஆர்வமுடைய பிறர் உதவலாம். பிரச்சினை என்னவெனில் தமிழில் விமர்சனக் கோட்பாடு, அழகியல், திறனாய்வு போன்றவற்றில் உலகில் உள்ள புதிய போக்குகள், சிந்தனைகள் குறித்து விவாதம், அறிமுகம் மிகக் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இதில் எழுத்தாளர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. வாசகர்கள்தான் இதில் பெருமளவு உதவ முடியும். உலகமயமாக்கலும் இலக்கியமும் என்பது குறித்துக் கூட இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு புரிதலும், அக்கறையும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவுஒன்று உலகமயம் குறித்துப் பேசுகிறது.இது ஒன்றே போதும் நம் எழுத்தாளர்களின் புரிதல் எந்த அளவில் இருக்கிறது என்று காட்ட. எனவே எழுத்தாளர்களின் பங்களிப்பு இது போன்ற முயற்சிகள் குறைவாகவே இருக்க முடியும். மாறாக பல் துறை நிபுணர்கள்,வாசகர்கள் அவர்களை விட அதிகமாக இதில் பங்களிக்க முடியும்.


"முற்றிலும் இன்று அழிந்து போட்ட விட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெரிய எழுத்து கதைகள், மற்றும் கொலை சிந்து, போன்ற ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய மக்கள் இலக்கியங்களை பாதுகாக்கவும், அதை முறையாக வகைப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வது."

இவை இலக்கிய பிரதிகள் மட்டுமல்ல, சமூக வரலாறு, தொன்மங்கள், வெகுஜனப் புரிதல் அல்லது கண்ணோட்டம் குறித்த ஆவணங்களும் கூட. எனவே இதில் பிறருக்கும் பங்கிருக்கிறது என்பதை எழுத்தாளர்கள் உணர வேண்டும்.

"எழுத்தாளர்களின் நேர்முகங்கள் இதுவரை பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியாகி வருவதை தவிர்த்து அதை ஒலி ஒளியை பயன்படுத்தி காட்சி ஊடகங்களில் பதிவு செய்து பாதுகாப்பது. தேவைப்படுகின்றவர்களுக்கு அனுப்பி உதவி செய்வது."

இப்படி எத்தனை எழுத்தாளர்களுக்கு செய்வதாக உத்தேசம். இந்த நேர்முகங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. யார் இதன் நுகர்வோர் அல்லது பயனாளிகள். ஒருவேளை காலைக் கதிர் அல்லது காலை வணக்கம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவை பயன்படலாம் :).

"பொதுவாக தமிழில் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படும் பழக்கமேயில்லை. அதை மாற்றி மெளனி, தி. ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜி. நாகராஜன், ஆதவன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதப்பட முயற்சிகள் எடுப்பது".

.தமிழில் வாழ்க்கை வரலாறு எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த பிரக்ஞை மிகக்குறைவு. எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதும் முன் எதற்காக இத்தகைய முயற்சிகள் என்பது குறித்த தெளிவான கண்ணோட்டம், அதற்கான ஆய்வு முறை குறித்த புரிதல் இருக்க வேண்டும். இவை இல்லாமல் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்படுமானால் அவற்றால் அதிகப் பயனில்லை. இருக்கின்ற வாழ்க்கை வரலாற்று நூல்களின் போதாமைகள், விடுதல்கள் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எழுத்தாளர்கள் தங்கள் நலனில் மிக அதீத அக்கறைக் காட்டுவது புலனாகிறது. அதையாவது செவ்வன நிறைவேற்றும் முனைப்பும், திறனும் அவர்களிடம் உண்டா என்பதே என் கேள்வி. போகாத ஊருக்கு சொல்லப்படும் ஆயிரம் வழிகள் போல்தான் இந்த யோசனைகள் உள்ளன.

2 மறுமொழிகள்:

Blogger சன்னாசி மொழிந்தது...

ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

//"இதுவரை எழுத்தாளர்களை பற்றிய சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களோ, யார் எந்த இதழில் என்ன எழுதினார் என்ற வகைப்படுத்துதலோ தமிழில் நடைபெறவேயில்லை. ஆகவே இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவரது வெளியான படைப்புகள் குறித்த முழுமையான தகவல்களும் தொடர்பு முகவரி. அத்தோடு சில மாதிரி படைப்புகள் கொண்ட ஒரு ஆவணகாப்பகம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும்."//

உங்கள் பதில்: உங்கள் பட்டியலில் ராஜேஷ் குமார்,தேவி பாலா, இந்திரா செளந்தர்ராஜன், விமலா ரமணி, குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் போன்றவர்களுக்கு இடம் உண்டா.

என் அபிப்ராயம்: இருக்கட்டுமே; Mills & Boon போன்ற புத்தகங்களின் விபரங்கள்கூட இணையத்தில் தேடினால் கிடைக்கிறதே. விஷயம் கேள்விப்பட்டுத் தேடி வரும் வாசகர்களுக்குச் சுலபத்தில் தகவல் கிட்டுவது நல்லதுதானே? இணையத்தில் தொகுக்கப்படவேண்டுமென்றால் முடிந்தளவு அனைத்தும் தொகுக்கப்படவேண்டும் - குப்பை உட்பட; அங்கேயே தணிக்கைக் கத்திரி வைப்பது சரியில்லை என்றே நினைக்கிறேன் - அனைத்தும் கிடைக்கட்டும், வாசகன் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்பதே சரியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

9:28 PM  
Blogger மானஸாஜென் மொழிந்தது...

அறிவு பூர்வமான அலசல்கள்- நல்ல விஷயம்தான். பொதுவாக இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு
பயிற்சி தேவைப்படும் அனுகுமுறை இது.

>ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எழுத்தாளர்கள் தங்கள் நலனில் மிக அதீத அக்கறைக் காட்டுவது புலனாகிறது.<
ஏன் காட்டுவதில், என்ன தவறென நினைக்கிறீர்கள், நடராஜரின் சிலைவடிமைத்த கலைஞனின் காலத்திலிருந்து, ஈகோவைக் கொல்ல
கலைஞன் தன்னை பின்னிருத்திக் கொள்வதே நம் வழக்கமாகிப் போய் விட்டது... இதன் விளைவு தரமற்றவைகள், தரமற்றவர்கள், எல்லா துறைகளிலும்
முன்னிடத்தில்....தப்பான Role Modelகளும், Iconகளும், நம் சமூகத்திலிருந்து ஒழிய வேண்டுமானால், சரியான ஆட்களை நமக்குப் பின்வ்ரும் சமூகத்திற்கு விட்டுச் செல்ல வேண்டியது அவசியம்தானே?

-மானஸாஜென்.

10:41 PM  

Post a Comment

<< முகப்பு