ஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கில் ஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்று யாரும் கோர முடியாது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மட்டுமே உண்டு என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒப்புதலின்றி இந்த நிலைப்பாட்டினை நிர்வாகம் தெரிவித்திருக்க முடியாது. இவ்வழக்கு குறித்த முழு விபரங்கள் எனக்குத் தெரியாது. மண்டல் கமிஷன் பரின்/துரையின் பேரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்வதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு என்பது எல்லா இடங்களுக்கும், துறைகளிலும் பொருந்தாது என்று கூறியுள்ளது என்பதே என் புரிதல்.இது பிழை என்றால் சுட்டிக்காட்டுங்கள்.

தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தில் மாணவர்களைச் சேர்க்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். களில் இட ஒதுக்கீடு தேவைதானா என்ற கேள்வி எழுவது நியாயம். ஏனெனில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநிலங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும் போது அதை தேசிய அளவிலும் நீட்டிக்கத் தேவையில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என்று இரு வகைப் பிரிவுகளை மாநிலங்கள் பின்பற்றும் போது தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றால் அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை எழும். இந்த சாதிரீதியான பட்டியல் தயாரிக்கப்படும் விதம் எந்த அளவு அறிவியல் பூர்வமானது, எந்த புள்ளி விபரங்கள், ஆய்வுகள் அடிப்படையில் சாதிகள் இப்படி பிரிக்கப்படுகின்றன என்பதையும் விவாதிக்க வேண்டும்.
சில சாதிகள் தாங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோருவது, சுதந்திரம் அடைந்த பின் இவர்கள் எந்த பலனையும் பெறவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. எந்த அடிப்படையில் இதை நிர்யணம் செய்வது, இது குறித்து சரியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் உள்ளனவா என்றால் , நானறிந்த வரையில் இல்லை. மேலும் உச்ச நீதி மன்றம் கூறிய பிற்படுத்தப்பட்டோரில் முன்னேரியோர் அதாவது creamy layer என்பதை தமிழ் நாடு உட்பட பல மாநிலங்கள் ஏற்கவில்லை. ஏற்கும் மத்திய அரசுக் கூட அதை நகைப்புக்குமிடமளிக்கும் வகையில் அதை அமுல் செய்கிறது. இட ஒதுக்கீடின் அதிக பட்ச அளவு 50% என்று உச்ச நீதி மன்றம் தீர்பளித்துள்ள போதிலும் அதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கவில்லை. இது குறித்த வழக்கு உச்ச நீதி மன்ற விசாரணையில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 'முற்பட்ட', 'பிற்பட்ட' வகுப்பு மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் சமமாகவே உள்ளன என்றே கொள்ள முடியும். அப்படியிருக்கும் போது இனியும் இட ஒதுக்கீட்டின் தேவை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்துள்ளது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு தரப்பட்டால் அதையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அது அமையும்.

இட ஒதுக்கீடினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று கோருவோரும், அதை தனியார் துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோருவோரும் உளர். இதில் என் நிலைப்பாடு இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை, அதனால் ஏற்பட்ட விளைவுகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகளின் பொருளாதார, கல்வி நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள முறையின் குறைபாடுகள், நிறைகள் ஆராயப்பட வேண்டும். இத்தகைய ஆய்வுகள், விவாதங்களுக்குப் பின் ஒரு கொள்கை முன்வரவினை அரசு முன் வைத்து அது குறித்த கருத்துக்களை அறிய வேண்டும். பின் ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு பின் அது மறுபரீசிலனைக்கு உட்படுததப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான சாதிகளின் பட்டியல் 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இட ஒதுக்கீட்டினை தனியார் துறைகளுக்கு நீட்டிப்பது சரியல்ல. தனியார் துறையில் தாழ்ததப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை மிகவும் பிரபடுத்தப்பட்டோருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதும் விவாதிக்கப்பட வேண்டும். தலித் சிந்தனையாளர்கள் சிலர் தலித்களுக்கு மட்டும் இது தேவை என்று கருதுகின்றனர்.

இன்று இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுவாக மாற்றப்பட்டுள்ளது.அனைத்துக் கட்சிகளும் அதை ஒட்டு வங்கி அரசியலின் ஒரு பகுதியாக பார்ப்பதால் அதை குறித்து விமர்சனம் அவர்களிடமிருந்து எழாது. முதலில் இட ஒதுக்கீட்டினை விமர்சித்த பா.ஜ.க பின் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீட்டினை ஆதரித்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைந்த வேறு பல பரிந்துரைகள், குறிப்பாக நில உச்சவரம்பினை கறாராக அமுல் செய்தல் குறித்து கட்சிகள், சாதிச் சங்கள் அக்கறை காட்டவில்லை. இதன் காரணம் வெளிப்படை. ஆனால் இட ஒதுக்கீடு கேள்விக்குட்படுத்த்க கூடாத அல்லது முடியாத அடிப்படை உரிமை என்ற் தோற்றத்தினை இவை உருவாக்கியுள்ளன. அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை நிரந்தரமானது என்று கூறவில்லை. இட ஒதுக்கீடு ஒரு வழி முறை, அது அடிப்படை உரிமையல்ல. அனைவருக்கும் சம வாய்ப்பு, பாரபட்சமின்மை அடிப்படை உரிமைகள். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரின் வாய்ப்புகளை பறிக்க கூடாது என்பதற்காகவும், இட ஒதுக்கீடு என்பதுசம உரிமைகளுக்கு முரணாக மாறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும்தான் உச்ச நீதி மன்றம் 50% இட ஒதுக்கீட்டினை உச்சவரம்பு என்று தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீடு சாதிய முறையினை 'நவீனமய' மாக்கியுள்ளது. இட ஒதுக்கீடு புதிய பாகுபாடுகளை சாதிகளிடையேயும், சமூகத்தில் உருவாக்கியுள்ளது. சாதி ஒழிப்பினை முன் வைத்த பெரியார் முன்னிறுத்த இட ஒதுக்கீடு இதைச் செய்திருப்பது ஒரு வகையில் முரண்தான். இதன் மூலம் சாதியம் என்பது வேறொரு பரிமாணம் பெற்றிருக்கிறது.

இட ஒதுக்கீடு குறித்த ஒரு அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கு இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள்,விவாதங்களில் எழுந்த கருத்துக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு ,மற்றும் பல்வேறும் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளி விபரங்கள் - இவற்றை தொகுத்துக் கொள்வது அவசியம். இட ஒதுக்கீடு ஒரு கொள்கை என்றால் அதன் மூலம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த விரும்புகிறோம், அதற்கான வழி முறைகள் என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும்.

இங்கு இட ஒதுக்கீட்டினை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இதற்கெல்லாம் தயாராக இல்லை. பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. இதுதான் அவர்களது பகுத்தறிவின் எல்லை.

2 மறுமொழிகள்:

Blogger Voice on Wings மொழிந்தது...

இட ஒதுக்கீடு அமெரிக்காவிலும் ஏனைய பல நாடுகளிலும் கூட அமலில் உள்ள ஒன்று. Affirmative action என இதனை அழைக்கின்றனர். வாய்ப்புகளே இல்லாத நிலையிலிருந்து உயர்வதற்கு நீட்டப்படும் உதவிக்கரம் என்ற அளவில் இதனை நான் ஆதரிக்கிறேன். Creamy layerஐ விட, இத்தகைய சலுகைகள் சிறிதும் தேவைப்படாத சமூகத்தினர் / தனிநபர்கள் (undeserving sections) அரசியல் செல்வாக்குகளால் இத்திட்டத்துக்குள் புகுந்து கொண்டு, உண்மையிலேயே தாழ்வு நிலையிலிருப்பவர்களின் வாய்ப்பைத் தட்டிச் செல்லும் அவலம் தான் கண்டிக்கப் படவேண்டியதாகும்.

8:55 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

The news is interesting. The IIT council is right in saying that the Center has not formulated a national policy on reservation in IITs. What is more interesting is the council goes further to say that nobody can compel the Government to frame a policy or to make reservation for the backward communities. Is it IIT Council's business to tell what one can demand from the Government? With this kind of attitude one wonders even if there is a policy in place will IITs implement it honestly? I seriously doubt the court will rule in favor of the plaintiff given the past history of court rulings on reservation matters. The change, if any, will happen through politics, not through the likes of IIT Councils and the Judiciary, which are made up of elite.

I'll write my views in detail on several issues you have raised after a couple of weeks.

9:49 AM  

Post a Comment

<< முகப்பு