தலித் அதிகாரிகள், தமிழக அரசு

தலித்கள் என்பதற்காக நான்கு இ.ஆ.ப அதிகாரிகளை தமிழக அரசு நியாயமின்றி தண்டிக்கிறதா என்ற சர்ச்சை குறித்து இரண்டு வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது.
http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_111476354988922919.html
http://thoughtsintamil.blogspot.com/2005/04/blog-post_29.html
என் கருத்துக்கள் இங்கேயும், ஒரு பதிவில் உள்ள பின்னூட்டத்திலும்

இந்த அதிகாரிகளின் சில நடவடிக்கைகள், போக்குகள் அரசுக்கு பிடிக்காத காரணத்தினால் இவ்வாறு கட்டாய காத்திருப்பில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.2001 ல் ஜெயலலிதா அரசு முந்தைய ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட இ.ஆ.ப அதிகாரிகளை இவ்வாறு கட்டாய காத்திருப்பில் வைத்தது.சிலருக்கு அதிகாரமற்ற டம்மி பதிவிகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துதாஸ் காந்திக்கும் விநாயகமூர்த்திக்கும் ஏற்பட்ட முரண் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது. இதை அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இ.ஆ.ப அதிகாரிகள் சாதிச் சங்கங்கள், சாதி மாநாடுகளில் பங்கேற்பது சரியல்ல.இது அமைச்சர்களுக்கும் பொருந்தும். காந்தி, இ.ஆ.ப 20 இடங்களையாவது பிடிக்கவேண்டும் என்று எங்கு எப்போது எந்தப் பிண்ணனியில் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டசபையில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது எனவே 20 இடங்கள் என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
மேலும் தலைமைச் செயலாளர் தன்னிச்சையாக விளக்கம் கோரி அவருக்கு கடிதம் அனுப்பியிருக்க மாட்டார்.அதற்கு மேலிடம் அனுமதி இருந்திருக்கும் என்றே கருத வாய்ப்புள்ளது. தலித்களுக்காக தலித் அதிகாரிகள் அக்கறை காட்டுவதென்பது தவறல்ல, ஆனால் அவர்கள் தலித் அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடமுள்ளது என்றே கருதுகிறேன்.ஏனெனில் ஒரு தலித் அரசியல்வாதிக்கு ஆதரவாக ஒரு இ.ஆ.ப அதிகாரி பொதுக்கூட்டங்களில் பேசுவதென்பதை தலித்களுக்காக காட்டும் அக்கறை என்று மட்டும் கருத முடியாது.

மேலும் மத்திய தேர்வாணைக் குழு மூலம் அகில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் இ.ஆ.ப அதிகாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் இல்லை. இவர்கள் மாநில அரசில் செயல்பட்டாலும் விதிகள் அனைத்திந்திய அளவில் உள்ளவை. எனவே தகுந்த காரணமின்றி மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. சில தலித் அதிகாரிகளின் உத்வேகமும், அரசு மீது அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைக்கும் விமர்சனங்கள் தந்த எரிச்சல் காரணமாக மாநில அரசு இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கக் கூடும்.இன்றைய ஹிந்துவில் உள்ள செய்தி காந்தி இ.ஆ.ப மீது மத்திய அரசு நடவடிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறுகிறது. http://www.hindu.com/2005/04/30/stories/2005043005520400.htm

இது பிராமணர் vs தலித் பிரச்சினையல்ல.இன்று பிரதான முரண்பாடு தலித்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருக்கும் ஜாதிகளுக்குமிடையேதான் என்று தலித் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.இங்கு பிரமாண இ.ஆ.ப அதிகாரிகள் தலித் இ.ஆ.ப அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று யாரும் கூறவில்லை. ஆனால் தெஹல்காவில் முக்கிய 50 இ.ஆ.ப அதிகாரிகளில் 45 பேர் பிராமணர்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது. இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்த அதிகாரிகள் எண்ணிக்கை மிகக் கணிசம்.மேலும் இ.ஆ.ப வில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. எனவே குறைந்தபட்சம் 18% இ.ஆ.ப அதிகாரிகள், அனைத்து மட்டத்திலும் தலித்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். மேலும் பதவி உயர்விலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்பதையும் கருத்தில் கொள்க.
கிழேயுள்ள பட்டியலின் படி அதிகாரிகள் மட்டத்தில்,Group A ல் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இருக்கிறார்கள்.தலித்,பழங்குடி இனத்தவர்,பிற்பட்டோர் அல்லாதோர் 27%தான். எனவேதான் சொல்கிறேன் உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் 50 பேரில் 45 பேர் பிராமணர்களாக இருக்க சாத்தியமேயில்லை. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பதவி உயர்விலும் உள்ளது. கீழே உள்ள புள்ளிவிபரத்தில் இ.ஆ.ப அதிகாரிகள் எத்தனை பேர் என்ற விபரம் இல்லை.
State Government Employees as on January 1, 1999Group of Post SCs STs MBCs/DNCs BCs Others Total SCs STs MBCs/DNCs BCs Others TotalA 591 20 665 4744 2228 8248 7.2 0.2 8.1 57.5 27.0 100.0
http://www.epw.org.in/showArticles.php?root=2002&leaf=02&filename=4118&filetype=pdf

தமிழ் நாட்டில் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிறப்பப்படவில்லை என்ற புகார் சில ஆண்டுகள் முன்பு எழுந்தது.தலித் அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தினர். காந்தி இ.ஆ.ப இது குறித்து சில முன்முயற்சிகள் எடுத்தாரெனவும், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டார் எனவும் அறிகிறேன்.கண்ணகி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் குறித்த கமிஷனில் அதிகாரியாகவும் பதவி வகித்தவர். இவர்கள் குறித்து நானறிந்த வரையில் ஊடகங்களில் ஊழல்,லஞ்சப் புகார் வெளியானதில்லை. காந்தி மிகவும் நேர்மையானவர், தலித்கள் குறித்து மிகவும் அக்கறை கொண்டவர் என்றும் அறிகிறேன். அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த போது காரணமின்றி தலித்களை காவல்துறையினர் கைது செய்வதை தவிர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர். எனவே இந்த நால்வர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமளவிற்கு எத்தகைய புகார்கள் எங்கிருந்து வந்திருக்கும். தலித் அதிகாரிகள் பாலம் என்ற அமைப்பின் மூலம் ஒன்றுபட்டால் அது யாருக்கு உறுத்தலாக இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது.
தலித்களுக்கான சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் சக்தி இன்று பிராமணர்களுக்கு கிடையாது. அரசியல்ரீதியாகவும் அவர்களுக்கு செல்வாக்கில்லை. இப்படியிருக்கும் போது தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற மறுப்பது என்பது ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவாக இருக்க முடியாது.திராவிட கட்சிகள் ஆட்சியில் 1967 முதல் தொடர்ந்து இருக்கும் மாநிலத்தில் தலித்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு.

மாயாவதி முதன்முறையாக முதல்வரான போது வரலாறு காணாத வகையில் இ.ஆ.ப மற்றும் இ.கா.ப அதிகாரிகளை இடமாற்றம்,பணி மாற்றம் செய்தார்.http://www.indianexpress.com/archive_full_story.php?content_id=3310 அவர் பொதுக்கூட்டங்களில் அரசு அதிகாரிகளை வெளிப்படையாகத் திட்டியிருக்கிறார். துறைச் செயலாளர்கள் நியமனத்தில் பார்பனர் அல்லாதோருக்கு முன்னுரிமை தரவேண்டுமென்பதற்காக பெரியார் முயற்சி செய்திருக்கிறார். இவை எந்தவிதத்தில் நியாயமானவை.

நான் இதை ஒரு நான்கு பேர் தொடர்புடைய பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. வேறொன்றின் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன். இந்தப் பிரச்சினை இன்று முளைத்ததல்ல, இத்துடன் தீரப் போவதுமில்லை.

19 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

blogger did not post fully the previous ones.so i tried without giving links thro blogger interface.it worked.ravi srinivas

12:09 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Thanks for your efforts to get to the factual information and presenting the right picture on the issue.

enRenRum anbudan
BALA

2:26 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி,
தெஹல்காவில் குறிப்பிட்டிருந்த தலித் IAS அதிகாரிகளின் நிலைக்கு பிராமணர்கள் காரணமாக இருக்க முடியாது, பிற பிற்பட்ட சாதியினர் தாம் காரணமாக இருக்கவேண்டும் என்பதை நிறுவ மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். எல்லாமே "வாய்ப்புண்டு, வாய்ப்பில்லை" என்ற அடிப்படையில் நீங்கள் சொன்னது "enRenRum or whatever" anbudan BALA வுக்கு "factual information" ஆகவும், "right picture" ஆகவும் தெரிகிறது. ஆனால் உங்கள் விளக்கங்கள் குறித்து எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

1. Group A தேர்வு TNPSC மூலமாக நடத்தப்படுவது. ஆகவே அதில் 50% இடஒதுக்கீடு பெற்ற பிற்பட்டவர்கள் பெருமளவில் தேர்வு பெறுவதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் UPSC நடத்தும் IAS தேர்வில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உண்டா? எத்தனை சதவீதம்? எத்தனை ஆண்டுகளாக? அதில் எத்தனை சதவீதம் பிற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது புள்ளிவிவரங்கள் உண்டா? மாநில அரசின் Group A அதிகாரிகளின் புள்ளிவிவரத்தை வைத்து IAS அதிகாரிகளிலும் அதே சதவீதம் இருப்பார்கள் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

2. ஒரு புறம் தலித் அதிகாரிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாநில அரசின் வரம்பிற்குட்பட்டதல்ல. மத்திய அரசு சொல்லியே அவ்வாறு செய்திருக்க முடியும் என்கிறீர்கள். இன்னொரு புறம் தலித் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்தபோது செய்த நற்செயல்களுக்காகவும், பாலம் அமைப்பினை உருவாக்கியதற்காகவும் பிற்பட்டசாதியினரே புகார்கள் கொடுத்திருப்பார்கள் என்கிறீர்கள். இங்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது தலைமைச் செயலாளர். அவர் தமிழக அரசைப் பொறுத்தவரை முதல் அமைச்சருக்கு மட்டுமே பதில் சொல்லவேண்டியவர். முதலமைச்சரோ யாருக்குமே பதில் சொல்லக் கூடியவர் அல்ல. மத்திய அரசைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கலாம். பிறகு "மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது. தலித்களுக்கான சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் சக்தி இன்று பிராமணர்களுக்கு கிடையாது" என்ற எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?

3. தெஹல்காவில் குறிப்பிடப்பட்டுள்ளது "50 உயர்பதவிகளில் 45 பேர் பிராமணர்கள்" என்று. இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைப்பதின் அடிப்படை என்ன?

கோட்டையிலிருந்து கீரிப்பட்டி வரை நிலைமை ஒன்று தான். இடத்துக்குத் தகுந்த மாதிரி ஆதிக்கம் செய்பவர்கள் வேறுபடுகிறது. சட்டமும் அந்தந்த இடத்துக்கு தகுந்த மாதிரி வளைந்து கொடுக்கிறது. கோட்டையில் ஆதிக்கம் செய்வது பிராமணர்கள் என்று ஒரு உயர் IAS அதிகாரியை மேற்கோள் காட்டிச் சொல்கிறது தெஹல்கா. இந்த லட்சணத்தில் "நாங்க இல்லப்பா. அவங்கதான்" என்று ராகவன், பாலாஜி போன்றவர்கள் சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நீங்களும் அதை நிறுவ செய்யும் வித்தைகளைத் தான் புரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாக எல்லா விஷயங்களிலும் முற்போக்கான நிலைப்பாட்டை கைக்கொள்ளும் நீங்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் இடறி விழுவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

1:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

sundaramoorthy
i will answer your questions soon.i welcome them.
ravi srinivas

2:52 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அன்பில் சுமு,

// "நாங்க இல்லப்பா. அவங்கதான்" என்று ராகவன், பாலாஜி போன்றவர்கள் சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நீங்களும் அதை நிறுவ செய்யும் வித்தைகளைத் தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
//
எதற்கெடுத்தாலும் பார்ப்பனரை குறை சொல்லும் அல்லது காரணமாக காட்டும் உம்மை போன்றவர்களுக்கு எது சொன்னாலும் பயனில்லை என்பது நிதர்சனம்! ரவி எந்த வித்தையும் செய்வதாகத் தெரியவில்லை. தான் சேகரித்த புள்ளி விவரங்களையும், சில ஐயங்களையும் வெளியிட்டிருக்கிறார். ராகவன், பாலாஜி போன்றவர்கள் தலித் வளர்ச்சியை விரும்பாதவர்கள் என்று நீங்கள் திடமாக நம்பும்போது என்ன தான் செய்ய முடியும் ?

//தெஹல்காவில் குறிப்பிடப்பட்டுள்ளது "50 உயர்பதவிகளில் 45 பேர் பிராமணர்கள்" என்று. இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைப்பதின் அடிப்படை என்ன?
//
தெஹல்கா இக்கூற்றுக்கு ஏதாவது அத்தாட்சி வெளியிட்டார்களா ? ஏனெனில், தெஹல்கா 'sensational journalism" செய்வதை குறிக்கோளாக கொண்டவர்கள். மேலும், தாங்கள் இக்கூற்றை நம்புவதற்கு விசேஷ காரணம் உண்டா?

//மாயாவதி முதன்முறையாக முதல்வரான போது வரலாறு காணாத வகையில் இ.ஆ.ப மற்றும் இ.கா.ப அதிகாரிகளை இடமாற்றம்,பணி மாற்றம் செய்தார்.http://www.indianexpress.com/archive_full_story.php?content_id=3310 அவர் பொதுக்கூட்டங்களில் அரசு அதிகாரிகளை வெளிப்படையாகத் திட்டியிருக்கிறார். துறைச் செயலாளர்கள் நியமனத்தில் பார்பனர் அல்லாதோருக்கு முன்னுரிமை தரவேண்டுமென்பதற்காக பெரியார் முயற்சி செய்திருக்கிறார். இவை எந்தவிதத்தில் நியாயமானவை.
//
இது பற்றியும் உங்கள் கருத்துக்களைக் கூறலாமே!!!

//மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது
//
இது யூகம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முடிவொன்றும் சொல்லவில்லை. உங்கள் தொனி கூட, குறிப்பிட்ட (2/3) சாதிகளுக்கு ஆதரவாக அமைந்திருப்பதாகத் தான் தோன்றுகிறது. சற்று தெளிவுபடுத்தினால் நல்லது.

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

3:10 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

Ravi,
Thanks. I'll look forward to your response.

பாலா,
என் கேள்விகள் ரவியின் பதிவையொட்டி எழுந்தவை. உங்கள் பெயரை இழுத்ததின் காரணம் எனக்கு முன் இட்டிருந்த பின்னூட்டத்தில் சிலாகித்திருந்ததால். அதற்கு மன்னிக்கவும்.

மற்றபடி உங்களின் சினிமாப் பாட்டு பல்லவி-சரணங்களிலோ, இட ஒதுக்கீடு-சாதி ஒடுக்குமுறை தொடர்பான உங்களின் பல்லவி, ராகவனின் சரணம் போன்றவற்றிலோ நான் எந்த கருத்தும் தெரிவித்ததில்லை. அதனால் "எதற்கெடுத்தாலும் பார்ப்பனரை குறை சொல்லும் அல்லது காரணமாக காட்டும் உம்மை போன்றவர்களுக்கு" என்ற குற்றச்சாட்டிற்கும், "ராகவன், பாலாஜி போன்றவர்கள் தலித் வளர்ச்சியை விரும்பாதவர்கள் என்று நீங்கள் திடமாக நம்பும்போது என்ன தான் செய்ய முடியும் ?" என்ற சலிப்பான கேள்விக்கும் "உங்கள் தொனி கூட, குறிப்பிட்ட (2/3) சாதிகளுக்கு ஆதரவாக அமைந்திருப்பதாகத் தான் தோன்றுகிறது" என்ற முடிவுக்கும் எந்த விளக்கங்களும் அளிக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்துக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக்குத் தடைபோட நான் யார்? ஆனால் ஒரே வேண்டுகோள்: தயவு செய்து உங்கள் அன்பு வெள்ளத்தை மட்டும் என்மீது பாய்ச்சி வீணாக்காதீர்கள். ஏனென்றால் நான் உங்களின் அன்பைப் பெறும் தகுதியுடைய ஏழைப் பிராமணனோ, ஏழைத் தலித்தோ இல்லை.

4:10 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

4:34 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது.
தலித்களுக்கான சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் சக்தி இன்று பிராமணர்களுக்கு கிடையாது. அரசியல்ரீதியாகவும் அவர்களுக்கு செல்வாக்கில்லை. இப்படியிருக்கும் போது தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற மறுப்பது என்பது ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவாக இருக்க முடியாது.திராவிட கட்சிகள் ஆட்சியில் 1967 முதல் தொடர்ந்து இருக்கும் மாநிலத்தில் தலித்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு."
நன்றி ரவி அவர்களே. கௌரவர் சபையில் விகர்ணன் எழுந்து பேசியதைப் போல் உண்மை உரைத்திருக்கிறீர்கள். உடனே கர்ணன் எழுந்து அடக்கியதைப் போல சுந்தரமூர்த்தி களத்துக்கு வந்து விட்டார். மகாபாரதத்தில் இந்த இடத்தில் கர்ணனின் செயல் பெருமைக்குரியதல்ல என்பதை இப்போதே தெளிவுபடுத்தி விடுகிறேன்.
"இட ஒதுக்கீடு-சாதி ஒடுக்குமுறை தொடர்பான உங்களின் பல்லவி, ராகவனின் சரணம்"
இந்தச் சரணத்தை நான் பாட்டில் வரும் சரணமாகப் புரிந்து கொள்வதா அல்லது சரணாகதி என்று புரிந்து கொள்வதா?
பாட்டைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மற்றப்படி ராகவன் சரணாகதி கோரியதும் இது வரை இல்லை. நேரடியாக நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று களத்துக்கு வந்தப் போதே, தாக்குதல்கள் நிறைய இருக்கும் என உணர்ந்தே வந்தேன். களத்தை விட்டு விலக மாட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

10:30 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

சுமூ,

நீங்கள் என் பெயரை இழுக்காதவரை, உங்கள் கருத்துகளுக்கு பதிலுரைப்பது அல்லது என் நிலைப்பாட்டை விளக்குவது எனக்கும் தேவையற்ற வேலை தான். நேரவிரயமும் கூட.

//முடிவுக்கும் எந்த விளக்கங்களும் அளிக்கப் போவதில்லை.
//
அது உங்கள் சுதந்திரம், அதில் நான் யார் தலையிட?

//தயவு செய்து உங்கள் அன்பு வெள்ளத்தை மட்டும் என்மீது பாய்ச்சி வீணாக்காதீர்கள். ஏனென்றால் நான் உங்களின் அன்பைப் பெறும் தகுதியுடைய ஏழைப் பிராமணனோ, ஏழைத் தலித்தோ இல்லை.
//
இப்படி எள்ளி நகையாடுவதில் தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் எனக்கும் மகிழ்ச்சியே.

--- பாலா

1:37 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

கலியுக கௌரவர்களின் கவனத்திற்கு,

ரவியின் இப்பதிவின் தலைப்பையொட்டி சில கருத்துக்களைப் பேசியிருக்கிறார். அவை தொடர்பாக எனக்கு சில கேள்விகள் எழ அவைப் பற்றி இன்னும் பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ரவியும் விரைவில் பேசுவதாக சொல்லியிருக்கிறார். அதற்கு நன்றி சொல்லி அவர் பேசுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறேன். நம் வலையுகக் கண்ண பரமாத்மாவின் மாயக் கண்களுக்கோ நான் விகர்ணனை (ரவியை) அடக்குவதுப் போலத் தெரிகிறது.

இந்த கூத்தில் உங்களுக்குண்டான வேஷத்தையும் வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளுங்கள். (அவசரமொன்றுமில்லை. மெதுவாகவே வாருங்கள். ஆதியும் அந்தமுமான ஆபத்பாந்தவன் களத்தை விட்டு விலகப் போவதில்லை.)

இப்படிக்கு

(பெருமைக்குரியதல்லாத பார்ட்) கர்ணன்

9:18 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரி அல்ல.அது நிறைவேற்றப்படும் விதம், அதிலுள்ள குறைகள் குறித்து விவாதிக்கவேண்டும் எனவும், சமூக நீதியின் ஒரு பகுதிதான் இட ஒதுக்கீடு என்றும், வெறும் இட ஒதுக்கீடே சமூக நீதியை நிலை நாட்டும் என்பது சரியல்ல என்றும் கருதுகிறேன்.மேலும் இது வரை இட ஒதுக்கீடு அமுலில் இருந்தத்தின் அடிப்படையில் ஆய்ந்து அதன் நிறை குறைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறேன். தமிழ் நாட்டில் நானறிந்த வரையில் இ.ஆ.ப வில் மூன்று பிரிவினர் உள்ளனர். நேரடியாக மத்திய தேர்வாணைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மாநில தேர்வாணைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு இ.ஆ.ப பிரிவிலுள்ளவர்கள், conferred IAS என்ற பிரிவில் மாநில அரசால் இ.ஆ.ப பிரிவில் சேர்க்கப்படுபவர்கள்.மத்திய தேர்வாணைக்குழு பிற்பட்டவகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை 1990 முதலே அமுல் செய்து வருகிறது.இது 27% என்று அறிகிறேன்.தமிழ் நாட்டில் 50% இட ஒதுக்கீடு பி.ப,மி.பி.ப ஜாதிகளுக்கும், 18% தலித்,1% பழங்குடிகள் ஆக 69% இட ஒதுக்கீடு இருக்கிறது.இது தவிர பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உண்டு. மேலும் வயது உச்சவரம்பில் தலித்,பழங்குடி,பி.ப விண்ணப்பதாரர்களுக்கு சலுகை இருக்கிறது.இ.ஆ.ப தேர்வினைப் பொறுத்த வரை அரசே இவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யவும், நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளவும் பயிற்சி வழங்குகிறது அல்லது பயிற்சி பெற உதவுகிறது. எனவேதான் 50 உயர் இ.ஆ.ப வில் 45 பேர் பிராமணர்களாக இருக்க முடியாது என்பது என் வாதம்.தெஹ்ல்கா ஜாதி ரீதியாக புள்ளி விபரம் தரவில்லை. நான் ஆதாரம் காட்டும் புள்ளிவிபரம், மற்றும் தலித்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில் 90% உயர் அதிகாரிகள் பிராமணர்களாக, ஏன் வேறு எந்த (ஒரு) ஜாதியாகவும் இருக்க வாய்ப்பில்லை. இதை தவறு என்று நீருபித்தால் என் கருத்தினை நான் மாற்றிக் கொள்வேன். பிரதான முரண்பாடு தலித்களுக்கும் பி.ப ஜாதிகளுக்கும் நிலவுகிறது என்ற கருத்தினை தலித் சிந்தனையாளர்கள் முன் வைத்துள்ளனர்.தமிழ் நாட்டில் பிராமண அதிகாரிகள் நினைத்தாலும் தலித்கள் விஷயத்தில் இடையூறு செய்ய முடியாது, ஏனெனில் அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆதரவும் இல்லை, செல்வாக்கும் இல்லை. ஆனால் அனைத்து மட்டங்களிலும் தலித்கள் பலம் பெறுவது பி.ப.ஜாதியினரின் மேலாண்மைக்கே சவால் விடுவதாக அமையும். எனவே இது அப்படி இருக்கலாம் என்பது என் ஊகம்.இது திருப்தி தரும் விளக்கமாக இல்லை என்றும் கருத முடியும். நான் தெஹல்கா
ஜாதி அரசியல் குறித்து முன் வைத்த கருத்திற்கு ஒரு மாற்றாக இதை முன் வைக்கிறேன்.தலித்களுக்கான இட ஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்படுவதில்லை, அது குறித்த புள்ளி விபரங்களை epw கட்டுரை பேசுகிறது. இந்த நான்கு அதிகாரிகள் குறித்த அரசின் நடவடிக்கையினை நான் சில தலித் அதிகாரிகளின் உத்வேகமும், அரசு மீது அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைக்கும் விமர்சனங்கள் தந்த எரிச்சல் காரணமாக மாநில அரசு இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கக் கூடும் என்று யூகிக்கிறேன். இவை எல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.என் கருத்துக்கள் இவைதான் என்பதல்ல என்வாதம். அதை எழுதும் நேரம் எனக்குத் தோன்றியவற்றை சில ஆதாரங்கள், கருதுகோள்களுடன் முன் வைக்கிறேன். நீங்கள் www.ambedkar.org ல் சந்திர பஹன் பட்டின் கட்டுரைகளைப் படியுங்கள். அவருடைய பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையல்ல.ஆனால் அவர் சில விஷயங்களை சுட்டிகாட்டுகிறார். அதை ஆராய வேண்டும்.இன்னொரு தரப்பாக நீங்கள் அந்தே பெய்த்திலியின் கருத்துக்களை படிக்கலாம்.
http://www.ilo.org/public/english/bureau/inst/download/andre.pdf
மற்றப்படி நான் இந்த மகாபாராத விளையாட்டில் இல்லை :). நான் எழுதியுள்ளது குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் கேள்விகளைப் பொறுத்து பதில் தர முயல்வேன்.அது போல்தான் இந்தப் பின்னூட்டமும்.

2:33 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி மொழிந்தது...

ரவி
பதிலுக்கு நன்றி. நாலைந்து நாட்களாக இந்த பக்கம் வராததால் பார்க்க முடியவில்லை. நானும் இட ஒதுக்கீடு குறித்த பி. ராதாகிருஷ்ணனின் EPW கட்டுரைகளைப் படித்து, பெரும்பாலானவற்றை சேகரித்தும் வைத்துள்ளேன். அமெரிக்காவில் Affirmative Action குறித்த செய்திகள், விவாதங்களையும் முடிந்த அளவு படிக்க முயல்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து என்னுடைய பார்வையில் இவற்றைப் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சுருக்கமாக, இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதார முன்னேற்றம் என்ற ஒற்றைப் பரிமாணமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை. அதிகாரத்தில் பங்கு, பொதுத் தளத்தில் பன்முகத் தன்மைக்கான தேவைகள், வரலாற்றுரீதியாக கல்வியறிவு பெறாத/பெறவியலாத சமுதாயப் பிரினருக்கு முன்மாதிரிகளை உருவாக்குதல் போன்ற பிற அரசியல்-சமூகக் காரணங்கள் பொருளாதாரக் காரணத்தைவிட முக்கியமானவை.

தெருக்கூத்துப் பார்த்து வளர்ந்த எனக்கு மகாபாரதக் கூத்தில் கர்ணன் வேஷம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே :-)

9:37 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"தெருக்கூத்துப் பார்த்து வளர்ந்த எனக்கு மகாபாரதக் கூத்தில் கர்ணன் வேஷம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே :-)"
உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே. நிற்க. தலித் அதிகாரிகளின் காத்திருப்பு பிரச்சினைக்காக நான் என் தரப்பிலிருந்து ஒரு யோசனையை முன்வைத்துள்ளேன். அதைப் பார்த்து உங்கள் மேலானக் கருத்தைத் தெரிவிக்க முடியுமா கர்ணன் அவர்களே?
பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

12:09 AM  
Blogger SANGAMITHRAN மொழிந்தது...

//இப்படிக்கு
(பெருமைக்குரியதல்லாத பார்ட்) கர்ணன்

தெருக்கூத்துப் பார்த்து வளர்ந்த எனக்கு மகாபாரதக் கூத்தில் கர்ணன் வேஷம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே :-)
//
முதலில் "பெருமைக்குரியதல்லாத" என்று சங்கடப்பட்ட சுந்தரமூர்த்தி பின் மனம் மாறி அந்த வேடம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறார். என்ன மாயமோ ? இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்ததோ ;-)

ராகவன் சாரே,
//தலித் அதிகாரிகளின் காத்திருப்பு பிரச்சினைக்காக நான் என் தரப்பிலிருந்து ஒரு யோசனையை முன்வைத்துள்ளேன். அதைப் பார்த்து உங்கள் மேலானக் கருத்தைத் தெரிவிக்க முடியுமா கர்ணன் அவர்களே?
//
தங்கள் எந்தவொரு பதிவு குறித்தும் யாரிடமும் கருத்து கேட்காதீர்கள். கருத்து இருந்தால், அதைப் படிப்பவர்கள் அவர்களாகவே பின்னூட்டம் இடுவார்கள். ஒரு பதிவில் 147 பின்னூட்டம் கண்ட தங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை :))

நிற்க! ஒரு விடயத்திற்கு மேலான, உருப்படியான கருத்து கூறுபவர்கள் வலைப்பதிவுலகில் பலர் இல்லை. எனவே எல்லோரிடமும் "மேலான" கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள் :((

5:07 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

நன்றி சுந்தரமூர்த்தி, ஒரு தொடரும் விவாதமாகவே இதைப் பார்க்கிறேன். முற்றும் முடிவான கருத்து என்று நான் எதையும் இங்கு வைக்கவில்லை.

சுருக்கமாக, இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதார முன்னேற்றம் என்ற ஒற்றைப் பரிமாணமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை. அதிகாரத்தில் பங்கு, பொதுத் தளத்தில் பன்முகத் தன்மைக்கான தேவைகள், வரலாற்றுரீதியாக கல்வியறிவு பெறாத/பெறவியலாத சமுதாயப் பிரினருக்கு முன்மாதிரிகளை உருவாக்குதல் போன்ற பிற அரசியல்-சமூகக் காரணங்கள் பொருளாதாரக் காரணத்தைவிட முக்கியமானவை

நிச்சயாமாக. இதை எந்த அளவு இட ஒதுக்கீட்டால் சாதிக்க முடியும்.இட ஒதுக்கீடு குறித்து மட்டும் பேசி, அரசு கல்வித்துறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது, சந்தைச் சக்திகள் கல்வியை தீர்மானிக்க விடுவது, நில உச்சவரம்பு, குறைந்த பட்ச் கூலி, அனைவருக்கும் இலவசக் கல்வி போன்றவை குறித்து பேசாமலிருப்பது சரியல்ல. இங்க் சமூக நீதி என்பது இட ஒதுக்கீடாக குறுக்கப்பட்டுள்ளது அதை நான் எதிர்க்கிறேன். மேலும் இட ஒதுக்கீட்டினை மறுபரீசலனை என்று கூறும் போது அதை இன்னும் பொருத்தமாக ஆக்க வேண்டும், மாறியுள்ள சமூக பொருளாதார சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
அதை நான் நிராகரிக்கவில்லை. .
ravi srinivas

6:05 AM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

சங்கமித்திரன் அவர்களே, நான் சாதாரணமாக் யாரையும் பின்னூட்டமிடுமாறு கேட்பதில்லை. ஆனால் சில பதிவுகள் பொது நலன் சம்பத்தப்பட்டவையாகப் போகும்போது அதன் மேல் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது எப்போதாவது செய்வதுண்டு. இதுவும் அப்படிப்பட்ட விஷயமே. நான் குறிப்பிட்டப் பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்தீர்களானால் ஒன்று புரியும், அதாவது அவற்றில் பல நுனிப்புல் மேய்வதாகவே அமைந்துள்ளன. குழலி மட்டுமே நேரடியாக விஷ்யத்துக்கு வந்தார். இன்னும் பலர் வர வேண்டும் என்பதே விருப்பம். பதிவின் விஷயம் அப்படிப்பட்டது.
மற்றப்படி 147 பின்னூட்டங்களை விட அதிகப் பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு இதற்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டும். இருப்பினும் ஒரு அல்ப சந்தோஷம் அடைவதை மறுக்க மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8:19 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

உங்களுடைய பதிவின் உள்நோக்கம் எனக்குத் தெரியும்.அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதைப் பாராட்டுவதில் வியப்பில்லை.இங்கு அரசியல்வாதியை குறை சொல்லும் நீங்கள், ம்தன் போன்றோர் அதை வைத்து செய்யும் அரசியலும் எனக்குத் தெரியும். நீங்கள் பின்னூட்டங்களில் எழுப்பபட்ட எல்லா கேள்விகளுக்குமா பதில் சொன்னீர்கள். இல்லையே.தலைவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவதை விமர்சிக்கும் நீங்கள் ஜீயர்களின் அவதார தினங்களை கொண்டாடுவதினைக் குறித்து, கனகாபிஷகங்கள் குறித்து ஒன்றும் சொல்ல மாட்டீர்கள். அல்லது இது வரை சொன்னதில்லை.வைணவ மரபில் சமாசரணம் என்று ஒன்றிருக்கிறதே.அது மட்டும் சரியானதா. பகுத்தறிவினை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் இன்றைய அரசியல்வாதிகளை எதிர்க்குமளவிற்கு மதத் தலைவர்களையும், அம்மரபுகளையும் எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும். அன்புமணி தன் மகன்களை ஒரு பள்ளியில் சேர்த்தது ஒரு வாசகர் தந்த தகவல். அது எந்த அளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது. அவர் தமிழ் மொழியினைப் பயிற்று மொழியாக கொண்டிருக்கும் பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆனால் அதற்காக தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற இயக்கத்தினையே ஒதுக்க முடியாது.நீங்கள் அவர் செய்தது புத்திச்சாலித்தனம் என்று கூறுகிறீர்கள், அதே சமயம் தமிழ் வழிக்கல்விக்கும் ஆதரவுண்டு என்கிறீர்கள். நீங்கள் செய்யும் அரசியல் புத்திசாலித்தனமானது என்று நீங்கள் கருதலாம், ஆனால் அது சரியல்ல.

9:36 AM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

பின்னூட்டத்திற்கு நன்றி ரவி சிறீனிவாஸ் அவர்களே. என்னுடைய இந்தப் பதிவு பல தளங்களைத் தொடுகிறது. தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் தரும் என நினைத்து அன்புமணி எடுக்கும் முடிவுகள் ஒரு தந்தை என்ற முறையில் சரியே. அதே மாதிரி உணர்ச்சி வசப்படாமல் அவரவர் முடிவு எடுக்க வேண்டும் என்று பொது மக்களுக்காக நான் கூறியதிலும் தவறில்லை. ப்ராக்டிகலாக முடிவெடுப்பதில் மட்டும் தலைவர்களைப் பின்பற்ற வேண்டும், மற்றப்படி அவர்கள் காதில் சுற்றும் பூக்களை ஏற்று கொள்ளாதீர்கள் என்பதுதான் என் அப்பதிவின் நோக்கம். அதனால்தான் மும்பை இன்ஸ்பெக்டரைப் பாராட்டினேன். ஆங்கிலம் பேசினால் அபராதம் என்றெல்லாம் காட்டப்படும் பந்தாவுக்கெல்லாம் மயங்காதீர் என்று கேட்டு கொண்டதில் என்னத் தவறு?
மடாதிபதியாகவிருந்தாலும் அதே அணுகுமுறைதான் இருக்க வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதலே என்பதையும் இத்தருணத்தில் கூறிவிடுகிறேன். நிற்க.
உங்கள் பதிவில் நான் முதலில் இட்டப் பின்னூட்டத்திலிருந்து: "நன்றி ரவி அவர்களே. கௌரவர் சபையில் விகர்ணன் எழுந்து பேசியதைப் போல் உண்மை உரைத்திருக்கிறீர்கள்." இது நான் மனப்பூர்வமாகச் சொன்னது. சாதாரணமக எதற்கும் பார்ப்பனர்களைப் பொறுப்பாக்கும் தருணத்தில் நிதானமாக வெளிவந்த உங்கள் கருத்து மனதுக்கு இதமாகவே இருந்தது.

இதே பதிவில் சங்கமித்திரன் அவர்களுக்கு நான் அளித்த பதிலிலிருந்து: "நான் சாதாரணமாக் யாரையும் பின்னூட்டமிடுமாறு கேட்பதில்லை. ஆனால் சில பதிவுகள் பொது நலன் சம்பத்தப்பட்டவையாகப் போகும்போது அதன் மேல் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது எப்போதாவது செய்வதுண்டு. இதுவும் அப்படிப்பட்ட விஷயமே. நான் குறிப்பிட்டப் பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்தீர்களானால் ஒன்று புரியும், அதாவது அவற்றில் பல நுனிப்புல் மேய்வதாகவே அமைந்துள்ளன. குழலி மட்டுமே நேரடியாக விஷ்யத்துக்கு வந்தார். இன்னும் பலர் வர வேண்டும் என்பதே விருப்பம். பதிவின் விஷயம் அப்படிப்பட்டது."

காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் அதிகாரிகளைப் பற்றி நான் முன்வைத்த யோசனையைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையறியவும் ஆவல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10:28 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

Ravi,

சுமூ எனது "பல்லவியும் சரணமும்" குறித்த பதிவுளை இங்கே ஒரு பின்னூட்டத்தில் சுட்டியதால்,
கேட்கிறேன்! அப்பதிவுகளில் தாங்கள் இரண்டு மூன்று முறை (சரியான பதில்களாகவே) பின்னூட்டமிட்டீர்கள். இப்போது அப்பதிவுகளுக்கு வருகை தருவதில்லையே ?

என்றென்றும் அன்புடன்
பாலா

4:31 AM  

Post a Comment

<< முகப்பு