சந்திரமுகியும், பதிப்புரிமையும்


சந்திரமுகி படத்தினை விட அது குறித்த பதிப்புரிமை குறித்த சர்ச்சை சுவாரசியமாகவுள்ளது. சந்திரமுகி கதை குறித்து பி.வாசு குமுதத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:குமுதம் 28 மார்ச் 2005

‘சந்திரமுகி’ படத்தின் கதை பற்றி இன்னும் சர்ச்சை இருந்து கொண்டேயிருக்கிறது. மீண்டும் நான் சொல்கிறேன். இது ‘மணி சித்ர தாழ்’ கதையில்லை. ரஜினிக்காக இந்தக் கதையை எழுதும்போது ஒரு சந்தோஷமான, ஜாலியான ஆடிப்பாடும் ஒரு கூட்டுக் குடும்பம் எனக்குத் தேவைப்பட்டது. ‘மணி சித்ரதாழி’ல் ஏற்கெனவே இப்படி ஒரு காட்சி வந்திருந்தது. அந்தக் காட்சியின் சூழ்நிலை அதில் நன்றாக அமைந்திருந்ததால் டைரக்டர் பாசிலிடமும், அப்பச்சனிடமும் முறைப்படி பேசி, பணம் கொடுத்து உரிமை வாங்கினோம். மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினிக்காக நான் எழுதி டைரக்ட் செய்த கதை. நிலைமை இப்படியிருக்க... மீண்டும் இந்தப் படத்தை முடக்க, பாசில் வழக்குப் போடப் போவதாகக் கேள்விப்பட்டு நான், ரஜினி, பிரபு உள்பட எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போனோம்.‘பாசிலா இப்படிச் செய்வது?’ ஒரு நல்ல இயக்குநர் என்று தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவரா ‘சந்திரமுகி’யை முடக்க நினைக்கிறார்? ஒரு சில காட்சிக்காக பணம் கொடுத்து உரிமை வாங்கிய பிறகு ஏன் இப்படிச் செய்கிறார்? எதுவும் புரியாமல் பாசிலை நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘நீங்கள் ரஜினியை வைத்து தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி தெலுங்கில் எடுக்கலாம்? எனவே தெலுங்கு ரைட்ஸை எனக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் என்னால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இருக்காது’ என்றார்.அவர் இப்படிக் கேட்பார் என்று கனவிலும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பலவித பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மிகப்பெரிய்ய்ய்ய ஒரு தொகையைக் கொடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு எடுத்த ஒரு படத்தின் கதையை தூசி தட்டி பணம் சம்பாதிக்க முடியும் என்பது நாங்கள் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்! சந்திரமுகியில் இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாடம்.’’ _ படபடவெனப் பொரிந்து முடித்தார் வாசு.

இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் நான் பொறுப்பில்லை.இப்போது நாகவல்லி என்ற தெலுங்குப் படத்தினை வெளியிடத் தடை அமுலில் உள்ளது. தமிழில் எடுக்கப்பட்ட சந்திரமுகி ,தெலுங்கில் டப் செய்யப்பட்டப் பின் மூலக்கதையின் அடிப்படையில் தெலுங்கில் தெலுங்குப் படமாகவே வேறு எடுக்க ஒரு திட்டம் இருப்பது இவ்வழக்கு குறித்த விபரங்களிலிருந்து தெரிகிறது.

இப்படி ஒரே கதையை சிறு மாறுதல்களுடன் எத்தனை மொழிகளில் எத்தனை பேர் எடுப்பார்கள் ?தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இப்படி ஒரே கதையை மூலமாகக் கொண்டு திரைப்படங்கள் இத்தனை சர்ச்சைகளுடன் தயாரிக்கப்பட்டு வெளியாவது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இந்தியப் பதிப்புரிமை குறித்த நூல்களில் இப்படம் குறித்த வழக்கு(கள்) குறிப்பிடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு