தசாவதாரமும், பரிணாமவாதமும்


தேசிகன் தன் வலைப்பதிவில் மேற்கூறிய தலைப்பில் எழுதியிருக்கிறார். இது குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுருக்கமாக அவை இங்கு

1, பரிணாமவாதத்தினை அவர் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. பரிணாம வாதத்தினை ஏற்போர் கூட பரிணாம மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்பட்டன என்பது குறித்து பல கருதுகோள்களை, கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். எனவே பரிணாமவாதம் அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் விடையளித்துவிடவில்லை. பரிணாமவாதத்தில் இன்று கூறப்படுபவை அல்லது நிரூபிக்கப்பட்டதாக கருதப்படுபவை நாளை மறுக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். பரிணாமவாதத்தினை பிற கருத்துகள் அல்லது தொன்மங்களுடன் ஒப்பிடும் போது அல்லது இணையான அம்சங்கள் இவை என்று கூறும் போது மேற்கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2, அவர் சிங்கை கிருஷ்ணனின் கட்டுரைகளை மேற்கோள் காட்டியுள்ளார். அவை இப்படி முடிச்சுப் போடும் கட்டுரைகள். ஒருவிதமான நகைச்சுவையாக அவற்றைப் படிக்கலாம். அதற்கு மேல் அதில் அறிவியலினைத் தேடுவது வீண்.

3,தமிழில் இது போல் முடிச்சுப் போடும் அல்லது ஒப்புமைக் காணும் முயற்சிகள் நடந்துள்ளன். P.அனந்த கிருஷ்ணன், புலி நகக் கொன்றை நாவல் எழுதியவர் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது உயிர்மையில் வெளியானது என்று ஞாபகம். முன்பொருமுறை நான் ரா.கா.கி யில் இது குறித்து எழுதியிருக்கிறேன். அவற்றை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை.

4, அறிவியல் ரீதியாக இத்தகைய ஒப்புமை இருப்பதாக கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகள் ஒருபுறமிருக்கட்டும். தத்துவரீதியாக அல்லது மதக்கருத்து ரீதியாகப் பார்த்தால் கூட இதை ஏற்க இயலாது. ஏனெனில் அவதாரம் என்பதன் பொருள் இதற்கு பொருந்திவராது. கடவுள் அவதாரம் எடுக்கும் போது மீனாக அல்லது ஆமையாக வடிவெடுத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை நிறைவேற்றுகிறார். அது மீன் இனத்தின் தோற்றத்தினையோ அல்லது ஆமை இனத்தின் தோற்றத்தினையோ நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அவதாரம் என்பது எம் பெருமானின் லீலை , அவதாரம் பல வழிகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம். மற்றப்படி கடவுளுக்கு பரிணாம வளர்ச்சி என்பதெல்லாம் பொருந்தாது. தேசிகன் பாரம்பரிய சிந்தனையையும், அவதாரம் என்ற கருத்தினையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

5,ராமர், பலராமர், கிருஷ்ணர், பரசுராமர் மூவரும் ஒரே ஆளுமையின் தோற்றங்கள்.ராமர் காலத்திலேயே விவசாயம், அரசு, ஆட்சி முறை இருந்திருப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமாவதாரம் என்பது பொருந்தாது

6,இந்த அவதாரங்கள் குறித்தே சர்ச்சை இருக்கிறது. சிலர் புத்தரை அவதாரமாகக் கொள்கிறார்கள். அவதாரங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. தர்மத்தினைக் காப்பது, தீய சக்திகளை அழிப்பது போன்றவை அவை. பரிணாம வாதத்தில் மாற்றங்களுக்கு இப்படி நோக்கங்கள் கற்பிக்கப்படவில்லை. பரிணாம வளர்ச்சி என்பது தர்மத்தினை காப்பது, அரக்கர்களை அழிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதே அல்ல .

7, மனித உடலமைப்பு,மிருக உடலமைப்பின் கலவையாக எந்த உயிரினமும் தோன்றியதில்லை. நரசிம்ம அவதாரத்தினைப் போன்ற ஒரு உருவத்தினை இயற்கை இது வரை உருவாக்கவில்லை. மேலும் ஏன் எந்த அவதாரமும் பறவை வடிவில் அல்லது டைனோசார் வடிவில் அல்லது நுண்ணுயிரி அல்லது பூச்சி வடிவில் இல்லை. பெளராணிகர்களுக்கு டைனாசோர் இருந்ததும், அழிவுற்றதும் தெரியாமல் இருந்திருக்கலாம். அதுவன்றி வேறு காரணமிருப்பதாக தெரியவில்லை.

நம்மால் ஏன் தசாதவதாரத்தினை ஒரு சுவாரஸ்யமான கற்பனையாக ஏற்க முடியாது. எதற்காக அதற்கு ஒப்புமைகளை, இணைகளை அறிவியலில் தேடவேண்டும். அறிவியல் ரீதியாக என்று எதை நிரூபிக்க விரும்புகிறோம். பல்வேறு பழங்குடி இனங்கள் பூமி, மனித இன உற்பத்தி குறித்து பல நம்பிக்கைகளை, தொன்மங்களை, ஐதீகங்களை கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியானவை என்று நிருபீக்கத்தான் வேண்டுமா. இல்லாவிட்டால் அவை அர்ததமற்றவை ஆகிவிடுமா.

தேவையற்று அறிவியலையும், மதத் தத்துவங்கள், தொன்மங்களையும் போட்டுக் குழப்புவதன் விளைவு இது போன்ற முயற்சிகள். சுஜாதா முன்பு ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்றே நூலில் இதைத்தான் செய்தார். அது விமர்சிக்கப்பட்டது. ஆனால் நூல் பிரபலமானளவிற்கு விமர்சனங்கள் பிரபலமாகவில்லை.

காப்ரா போன்றோர் எழுதிய நூல்களை விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தற்போது காப்ராவின் டாஒ ஓப் பிசிக்ஸ் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே குழப்பங்கள், குழப்பும் முயற்சிகள் தொடரும் என்றே தோன்றுகிறது.

இவை குறித்த ஒரு விரிவார்ந்த, அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கான ஒரு துவக்கப் புள்ளியாக இப்பதிவினைக் கொள்க.

9 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அறிவார்ந்த விவாதம் ha ha

7:21 AM  
Blogger T.N.Neelan மொழிந்தது...

Thanks Ravi

8:05 AM  
Blogger PUTHIYAVAN மொழிந்தது...

அறிவியலை மறுத்த மதங்கள், பின்னர் அறிவியல் உண்மைகளையே திரித்து தன்னை நிலைபடுத்துக்கொள்ள முயற்சிப்பது என்பதை எல்லா மதங்களுமே செய்கின்றன.

உதாரணமாக 'உலகம் தட்டை' என நிருவ மட்டையடியாய் சில அறிவியல் ஆய்வு கட்டுரைகள் வந்துள்ளன.
அதே போல் 'உலகம் உருண்டை' என்பது குரான்-ல்/பைபிள்-ல் ஏற்கன்வே கூறப்பட்டுள்ளதாகவும் பலர் எழுதுகிறார்கள்.

'உலகம் கடவுளால் படைக்கப்பட்டது' எனும் 'ஷ்ருஸ்டி' கருத்தை காலாவதியாக்கும் பரிணாமவாதத்தையே துணைக்கழைத்து மதத்தை நிருவ முயலும் முயற்சிகள், அம்மதங்களின் அடிப்படை ஆட்டத்தையே குறிக்கும்.

மற்றபடி இதற்கு பெரிய அளவில் எதிர்வினையாற்ற தேவை இருப்பதாக தெரியவில்லை.

8:06 AM  
Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

//அது மீன் இனத்தின் தோற்றத்தினையோ அல்லது ஆமை இனத்தின் தோற்றத்தினையோ நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அவதாரம் என்பது எம் பெருமானின் லீலை , அவதாரம் பல வழிகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம்.//
கவனிக்கப்படவேண்டியது. தேசிகனின் பதிவு மட்டையடியாய் கூட இல்லை. பொறுமையோடு எழுதியதற்கு நன்றி.

இதே போன்று ஓரிரு வருடங்களுக்கு முன் வெங்கட் எழுதியிருந்தார், தேசிகனின் கருத்து போன்றே எழுதியிருந்தாலும், சந்தேகத்திற்குரிய கோ-இன்ஸிடன்ஸ் என்ற அளவில்தான் எழுதியிருந்தார்.
"இணைப்பு-முயற்சியில் " அவர் இறங்கியதாக எனக்கு நினைவில்லை[தவறாய் இருக்கலாம்.]. 'அவதாரம்' என்று அவர் ப்ளக்கில் தேடினால் கிடைக்கலாம்.

இவர்களைப்பற்றி[[வெஙட்டைக் குறிக்கவில்லை] "என்னத்த சொல்ல ", என்றுதான் அலுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.
பதிவுக்கு நன்றி. உயிர்மையில் எழுதியது இணையத்தில் இருந்தால் வாசித்து என் கருத்தை சொல்வேன். மெனெக்கெட வேண்டியதில்லை.

1:06 PM  
Anonymous பாலாஜி-பாரி மொழிந்தது...

ரவி.
இந்த பதிவில் இருக்கும் கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்.
இது மிகவும் தேவையான ஒரு எதிர்வினை. மதசார்புள்ளவர்கள், ஒற்றை வரியில் இதுதான் அறிவியல் சொல்கின்றது எனக் கூறுவதற்கு இது மாற்று கருத்தை முன்னிறுத்தும்.

2:27 PM  
Blogger Thangamani மொழிந்தது...

முகமது நபிதான் கல்கி அவதாரம் என்று ஒரு வலைப்பதிவில் சில சம்ஸ்கிருத அறிஞர்கள் சொல்லியதாக வந்த பதிவைப்படித்தேன். :)

நன்றி!

5:34 PM  
Blogger veenaapponavan மொழிந்தது...

Long back I read Capra's 'The Tao of Physics'. I thought it was junk. 'Dancing Wu-Li Masters' was even worse. I threw it out of the train window.

I still keep reading QED by Feynman or 'What is life' by Schrodinger or 'ABC of relativity' by Russel. Masters are Masters :)

- vp

12:55 AM  
Blogger Narain மொழிந்தது...

ரவி, நான் எதிர்ப்பார்க்கும் சில நபர்கள் இன்னும் கருத்து சொல்லவில்லை. போகட்டும் ;-) இது ஒரு மதரீதியான மம்போ-ஜம்போ. எப்படி அடிப்படைவாத கிறிஸ்துவர்கள், புது போப்பையும் சேர்த்து, டார்வினின் கோட்பாட்டினை அமெரிக்கப் பள்ளிகளில் போதிக்க தடை விதிக்கிறார்களோ அதேப் போலதான் இதுவும். அது ஒரு சுவாரசியமான கற்பனை. நல்ல கதை. அவ்வளவுதான். ஆனால் இந்த நரசிம்ம அவதாரம் விஷயம் பற்றி ஏற்கனவே என் பதிவிலும், தேசிகனின் பதிவிலும் எழுதியிருக்கிறேன். சோதனை முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. அது கூட நரசிம்ம அவதாரம் ரேன்ஞ்சுக்கு இல்லை. சின்னதாய் எலியின் மூளையை மாற்றுவது போன்ற அளவில் தான். சற்றே கொஞ்சம் உலகினை கழுகு பார்வைப் பார்த்தால், எனக்கென்னமோ நாம் மீண்டும் 16 ஆம் நூற்றாண்டுக்கு சென்று கொண்டிருக்கிறோமா என்றுக் கூட எண்ணத்தோன்றுகிறது (மதரீதியிலான கருத்துகளில் மட்டுமே) சிலுவைப் போர்கள் வேறுவகையில் ஆரம்பித்திருக்கின்றன.

ரொம்ப சுலபமான விஷயம், நம்மாட்கள் எது புதிதாக கண்டறிந்தாலும், அதற்கு உடனே இதிகாசத்திலோ, புறநானூறிலோ ரெப்ரென்ஸ் கண்டுபிடிக்க போய்விடுவார்கள். பின் நாம் தான் உலகின் மூத்த குடி, ஏற்கனவே தொல்காப்பியத்திலேயே சொல்லியாகிவிட்டது, ராமாயணத்திலேயே கண்டறியப்பட்டது என புருடா விட்டு அதை நம்ப வைக்கும் வேலையில் முழுவதுமாக இறங்கிவிடுவார்கள். விட்டு தள்ளுங்கள். இதைப் போல்தான் ஏதோ ஒரு ஸயன்ஸ் பிக்ஷன் படித்துவிட்டு, கணியில் சமஸ்கிருதம் தான் மிகச்சுலபமான, நீண்ட நாள் வரக்கூடிய மொழி என்று கதைவிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் லேட்டஸ்ட் புருடா, இந்திரம் போன்றவர்கள் புளூட்டோவுக்கு அப்பாலிருப்பவர்கள், அவர்களின் ஒரு நாள், பூமியில் ஒரு வருடம் என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.

//முகமது நபிதான் கல்கி அவதாரம் என்று ஒரு வலைப்பதிவில் சில சம்ஸ்கிருத அறிஞர்கள் சொல்லியதாக வந்த பதிவைப்படித்தேன். :)//

அப்ப இயேசு கிறிஸ்து, சாயி பாபா, ராகவேந்திரா சுவாமிகள், "பாபா" படத்தில் வந்த 2000 வயது சாமியார் இவங்கெல்லாம் எந்த பிரிவுல வருவாங்க. ஒரு வேளை கல்கி அவதாரம் திறமூலமா இருக்குமோ, அவங்கவங்க தேவையான வெர்ஷனை உபயோகிக்கிறமாதிரி.

எனக்கு தெரிந்த லேட்டஸ்ட் கல்கி அவதாரம் பில் கேட்ஸும், ஸ்டீவ் ஜாப்ஸும் தான். அவர்கள் தான் உலகினை மாற்றியமைத்திருக்கிறார்கள். என்ன நான் சொல்றது ;-)

12:48 AM  
Blogger T.N.Neelan மொழிந்தது...

அதே நேரத்தில் ஒரு விஞ்ஞான முடிவு மதத்துக்கு எதிரானதாக வராதபோது அத்தகைய கண்டுபிடிப்புகள் "தமது மதத்துக்கு எதிரானது அல்ல" என்று சொல்லுவதின் போக்கு அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. அவர்களுக்கு எதிரான கருத்து நம்மிடம் இருந்தால் அதனை வைக்கலாம். இதுவே நல்ல கருத்தோட்டங்கள் பரவ வாய்ப்பாக இருக்கும்.

மற்றபடி மதங்கள் அறிவியலை போதிக்க வந்தது என்று மதத்தை நேசிப்பவர்களோ அல்லது மதத்துக்கு எதிரானவர்களோ ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

டார்வினின் தியரி என்பது விஞ்ஞானத்தின் முடிவு அல்ல என்பதை வைத்து எனது புரிதல்கள்:
1) எது கடவுள் கொள்கையை மறுக்கிறதோ அதை வைத்து இந்து மதத்தை விஞ்ஞான பூர்வமான மதமாக நிரூபிக்க முயல்வது முட்டால்தனம். மொத்தத்தில் "தசாவதாரம் தி சொதப்பல் லிங்க்".
2) டார்வினின் கொள்கையை (மட்டுமே) மூலகாரணமாக வைத்து மதத்தை வசைபாடுபவர்களுக்கும் இக்கட்டுரை மட்டையடி கொடுக்கிறது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

எதிர் எதிரான கருத்துக்கள் உடையவர்கள் ஒவ்வொருவரும் தனக்கெதிராக!?

4:28 AM  

Post a Comment

<< முகப்பு