கலைஞன், வாசகர்கள், காலமுரண் -ஜெயகாந்தனை முன் வைத்து ஒரு குறிப்பு

ஜெயகாந்தன் ஆனந்த விகடனுக்களித்த பேட்டியில் கூறியிருப்பவை வியப்பளிக்கவில்லை. அவரிடமிருந்து வேறெப்படிப்பட்ட பதில்களை நாம் எதிர்பார்க்கமுடியும்.

காங்கிரஸ் தொடர்ந்துபல ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலங்கள் பல எந்த அளவு பின் தங்கியுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். வட இந்தியாவில் 1947க்குப் பின் காங்கிரஸ் அதிக ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம்,பீகார் , இப்போதைய ஜார்க்கண்டையும் சேர்த்து, ராஜஸ்தான், ஒரிஸ்ஸாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு பலவற்றில் மிகவும் முன்னேறியிருக்கிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணிதான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது.அம்மாநில நிதி நிலைமை படு மோசம், ஊழலுக்கும் பஞ்சமில்லை. இதற்கு யார் பொறுப்பு.

1967க்குப் பின் தமிழ் நாட்டில் ஊழல் செழித்தது உண்மை தான், ஆனால் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் இன்னும் மோசம். ஏன், நேரு காலத்திலேயே ஊழல்கள் இல்லையா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏன் பதவி விலகினார். இந்திரா காலத்திலும் எத்தனையோ ஊழல் புகார் எழவில்லையா, ராஜிவ் காலத்தில் போபார்ஸ். நரசிம்ம ராவ் ஆடசியில் ஊழல்கள் இல்லையா.இன்னும் சொல்லப் போனால் 'சோசலிச' அரசில் இருந்த லைசென்ஸ், பெர்மிட் விதிமுறைகளும், அதிகாரக் குவிப்பும் ஊழலுக்கு உதவின.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் அதிகம் இல்லை என்றாலும் அது அப்படியே தொடர்ந்திருக்கும், ஊழல் அதிகரித்திருக்காது என்று கூற முடியாது. ஏனெனில் அரசின் வரவும், செலவும் அதிகரிக்க அதிகரிக்க ஊழல் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடுகின்றன, இது அனைத்து மட்டத்திற்கும் பொருந்தும் என்பதுதானே இந்தியர்களின் அனுபவம்.

கழகங்களின் ஆட்சியில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழ் நாட்டில் நிர்வாகம் மோசமில்லை. 1967க்குப்பின் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லை என்பதும், அது தனியாக நின்று ஆட்சியினைப் பிடிப்பது இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமே இல்லை என்ற யதார்த்தம் அவருக்கு எரிச்சல் தருகிறது. அந்த எரிச்சலே இப்படி வெளிவருகிறது. அவரது பிற பதில்களையும் அலசி ஆராய்ந்தால் இது போன்ற முடிவுகளுக்கே வர வேண்டியிருக்கும். ஜெயலலிதா பெண்மணி என்றால் பெரியார் மறைவிற்குப் பின் தி.க வினை வழி நடத்திய மணி அம்மையார் பெண்மணி இல்லையா. தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத அளவிற்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

1967ல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் தோற்றது, பதவியிழந்தது. காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் பதவி ஏற்ற போதெல்லாம் அவை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆளவிடாமல் காங்கிரஸ் சதி செய்யவில்லையா. காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு வலுவான கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இன்று காங்கிரஸ் தனித்து நின்று மத்தியில் ஆட்சியினைப் பிடிக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. காமராஜ் கால காங்கிரஸ் நினைவிலிருக்கும் ஜெயகாந்தன் நிகழ்காலத்தினை புரிந்து கொள்வாரா.

ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள். அவர் இப்படிப் பேசுவது புதிதல்ல.காலம் நிர்தாட்சண்யமாக அவரது பல கருத்துக்களை நிராகரித்துவிட்டது, சமூகமும்தான். அதனடிப்படையில் தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். இன்று அவரை எந்தவித விமர்சனமுமின்றி புகழ்வோரும், அவரும் என்றேனும் ஒரு நாள் இவற்றை உணரக்கூடும்.

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ha ha

5:37 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். //

இவ்வளவு குருட்டுத்தனத்தை அவர் சுமக்க என்ன காரணம் ரவி?

6:18 PM  
Blogger Narain மொழிந்தது...

:)

1:56 AM  
Blogger Moorthi மொழிந்தது...

விருது ஜெயகாந்தன் என்ற படைப்பாளியின் படைப்பிற்காக தரப்பட்டது. அக்காலங்களில் புலவர்கள் வறுமையில் வாடினார்கள். அவர்காள் அரசர்களை அண்டி பாடல்களைப்பாடி பரிசில் பெற்று வாழ்ந்தனர்.

தற்காலத்தில் புலவர்கள் அரசியல்வாதிகளை அண்டி அவர்களை வாழ்த்திப்பாடி பரிசில் பெற முயல்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

இன்னுமொன்றைச் சொல்லவேண்டும். மேலே போகப் போக தலைக்கணம் சற்று அதிகமாகிறது. அதற்காக ஞானபீட விருது கொடுத்தது தவறென்று சொல்லமுடியாது. விருது அவரின் படைப்புக்காக் தரப்பட்டது!

9:52 PM  
Blogger சங்கரய்யா மொழிந்தது...

//ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள்.//

முயற்சிக்கிறேன்

11:41 AM  

Post a Comment

<< முகப்பு